Skip to content
Post Views: 1,069
“நாம ஒரு குழந்தையை கண்டிப்பா தத்தெடுக்கணும் வாத்சா..!”
லஷ்மி இப்படி சொல்லவும் வாத்சல்யன் பெரிதாய் திகைக்கவில்லை.. ஒருவேளை அவனுக்கும் இந்த யோசனை இருந்திருக்கலாம்.
“ஆர் யூ ஷ்யூர்..! எனக்கு தெரியல.. ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க மனசளவுல நாம தயாரா இருக்கோமா..?” என்று மட்டும் கேட்டான்.
“இவ்வளவு நடந்த பிறகும் ஒரு குழந்தையை தத்தெடுத்து அது மேல பாசம் காட்டி வளர்க்க முடியாதுன்னு நினைக்கறீங்களா..?”
Advertisement
“லஷ்மி நான் சொல்றத நல்லா புரிஞ்சுக்கோ.. நம்ம தேவைக்காக.. சுயநலத்துக்காக ஒரு குழந்தையை தத்தெடுத்து வளத்து அதோட வாழ்க்கையை ஸ்பாயில் பண்ணக்கூடாது.. அந்த குழந்தையோட எதிர்காலத்துக்காக.. அவ நன்மைக்காக மட்டும்தான் நாம இதை செய்யணும். இதுல நிறைய சிக்கல் இருக்கு.. அதையெல்லாம் உன்னால ஃபேஸ் பண்ண முடியுமா..?”
“என்ன ஆனாலும் பரவாயில்லை நான் சமாளிச்சுக்கறேன். எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கணும் வாத்சா..! நமக்கே நமக்குன்னு ஒரு குழந்தை வேணும்.” அவள் குரல் கமறியது.
“ஒருவேளை தத்தெடுக்கற நேரத்துக்கு நமக்கு குழந்தை பிறந்துட்டா..?”
Advertisement
“பிறக்கட்டுமே..! குழந்தை பிறந்துட்டா ஸ்வீகாரம் எடுத்த பிள்ளையை தெருவில போட்ருவோமா..? பிள்ளையோட அருமை தெரிஞ்சவங்க.. பெத்த குழந்தை தத்தெடுத்த குழந்தையின்னு வித்தியாசம் பார்ப்பாங்களா என்ன..?”
Advertisement
“இதெல்லாம் பேச நல்லா இருக்கும்.. ஆனா பிராக்டிகலா வொர்க்கவுட் ஆகும்னு தோணுதா..?”
“எல்லாம் சரியா வரும் வாத்சா..! எத்தனை நாளைக்கு கடவுள் வரம் தருவார்ன்னு இப்படியே நம்பிட்டு உட்கார்ந்திருக்க முடியும். வந்த கனவை உண்மையாக்கி பார்க்கவும் வழியில்லை..”
“இந்த குழந்தையை கொல்லனும்னு சொல்ல வர்றியா..?” வாத்சல்யன் ஆத்திரத்தோடு குரலை உயர்த்தினான்.
Advertisement
“நான் அப்படி நினைச்சிருந்தா ஒரு குழந்தையை தத்தெடுத்துக்கணும்னு உங்ககிட்ட வந்து ஏன் கேட்க போறேன். ப்ளீஸ் ஹெல்ப் மீ.!” அவள் கண்கலங்கி நிற்க அடுத்து ஆக வேண்டிய காரியத்தை பற்றி யோசித்தான் வாத்சல்யன்.
அதிரடியாக ஒரு குழந்தையை தத்தெடுத்துக்கொண்டு தனதாக்கிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம்.. அன்று அலுவலகத்தில் நடந்த சம்பவத்தால் தோன்றியிருக்கலாம்.
லஷ்மியின் சக ஊழியரான மீனா இப்போது ஏழு மாத கருவை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறாள்.
இருவரும் வேலை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்.. லஷ்மிக்கு கணினியில் பதிய வைத்திருந்த தனது டாக்குமெண்டில் ஏதோ ஒரு சந்தேகம் ஏற்பட்டுவிட.. அதை சரி செய்வதற்காக பக்கத்தில் வந்த மீனா.. நின்றபடியே குனிந்த மேனிக்கு கணினியில் மவுசை தட்டி வேலை பார்த்துக் கொண்டிருக்க..
“பார்த்து பார்த்து..! இப்படி வந்து உட்காரு.. ஏன் கஷ்டப்படற..!” என இருக்கையை இழுத்து போட்டு அவளை உட்காரச் சொன்னாள் லஷ்மி.
“இல்ல பரவாயில்ல இருக்கட்டும்.. இதோ இப்ப வேலை முடிஞ்சிடும்..” என்றபடியே கணினியின் மீது கவனத்தைப் பதித்திருந்தவள்.. ஒரு கணம் தேக அதிர்வோடு கண்களை விரித்தாள்.
“என்னாச்சு..?”லஷ்மி அவள் உடல் மொழியின் திடீர் மாற்றத்தில் புரியாமல் விழிக்க.. சிரித்தபடி அவள் கரத்தை எடுத்து தன் வயிற்றில் வைத்தாள் மீனா.
குழந்தையின் அதிர்வு..! நிலை கொள்ளாமல் கால்களை வயிற்றுக்குள் எட்டி எட்டி உதைத்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது சின்னஞ்சிறு சிசு. லஷ்மிக்குள் இன்ப பூகம்பம்.. தானே பிள்ளையை சுமப்பதாய் பரவசப் பட்டாள்.
“”என்னப்பா இது? குழந்தை இப்படி உதைக்குது..!” லஷ்மிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை..
“இப்படித்தான்.. கொஞ்ச நேரம் கூட சும்மாவே இருக்கறதில்லை.. எப்பவும் ஒரே ஆட்டம்.” சிரித்தபடி சொன்ன மீனா வேலையை முடித்துவிட்டு தனது இருக்கையில் போய் அமர்ந்து கொள்ள.. குழந்தையை தொட்டு பார்த்த கரம் இப்போதும் அதே உற்சாகத்துடன் குறுகுறுத்துக் கொண்டிருக்க.. மீண்டும் அவள் வயிற்றை தொட்டுப் பார்த்து குழந்தையின் அசைவை உணரத் துடித்தாள் லஷ்மி.
இந்த மகிழ்ச்சியான தருணம் ஓரிரு கணமே நீடித்திருக்க.. அடுத்த சில நிமிடங்களில் தாங்க முடியாத துயரம் அவள் நெஞ்சை.. படு பயங்கரமாக பீடித்துக் கொண்டது.
சிகிச்சையின் மூலம் கரு நிற்காமல் போன சோகம்.. இப்போது குழந்தையை தொட்டு உணர்ந்ததால் நெஞ்சில் நிறைந்திருக்கும் ஏக்கம் இரண்டும் சேர்ந்து அவள் மனதை அழுத்த.. எங்கிருந்து வந்ததோ அத்தனை கண்ணீர்.. கட்டுப்படுத்தவே முடியவில்லை..!
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவசரமாக கழிவறை நோக்கி ஓடினாள் லஷ்மி. இதை பார்த்துக் கொண்டிருந்த மீனாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
“லஷ்மி.. அழறாளா..? முகமெல்லாம் சிடுசிடுன்னு மாறிப்போச்சு! என்ன ஆச்சு..” என்று சிந்தித்தவளால் அவள் மனநிலையிலிருந்து சிந்தித்துப் பார்த்து புரிந்து கொள்ள முடியவில்லை.
மீனா சாதாரண மனப்போக்குடன் தனது வயிற்று குழந்தையின் அசைவைச் சொல்ல.. அதை விகற்பமில்லாமல் லஷ்மி தொட்டுப் பார்க்க.. அதுவரை அங்கு எதுவும் தவறாக நிகழ்ந்திருக்கவில்லை..
லஷ்மிக்குள் ஏற்கனவே அதிக அளவில் வைத்து பூட்டப்பட்டு கொண்டிருக்கும் மன அழுத்தம்.. ஒரு மாதிரியாக உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது.. இதை சாதாரணமாக அப்படியே விட்டிருக்கலாம்.. சுற்றி இருப்பவர்கள் சும்மா இருப்பதில்லையே..!
கழிவறைக்குள் அழுது தீர்த்து விட்டு.. முகத்தை கழுவிக் கொண்டு வெளியே வந்த லஷ்மியின் காதில் கேட்கும்படியாக இந்த மாதிரியான பேச்சுக்கள்.
“போயும் போயும் அவகிட்டயா குழந்தையோட மூவ்மென்ட்டை கூப்பிட்டு காட்டுவ.. அதுவே ஒரு மலட்டு முண்டம். இந்த மாதிரியான சந்தோஷமான ஃபீலிங்கை அவளால என்ஜாய் பண்ண முடியுமா.. பொறாமை படத்தான் முடியும். அவளோட வயித்தெரிச்சல் குழந்தைக்கு ஏதாவது பிரச்சனையாகிருச்சுன்னா என்ன பண்றது.. முதல்ல அவகிட்ட பேச்சை குறை..! குழந்தையை பத்தி அடிக்கடி அப்டேட் பண்றதை நிறுத்து.” அங்கே வேலை செய்யும் அனுபவம் மிகுந்த வயதான பெண்மணி.. லஷ்மி வருவது கூட தெரியாமல் மீனாவிடம் இப்படி சொல்லிக் கொண்டிருந்ததில்.. மீண்டும் ஒட்ட வைக்க முடியாதபடிக்கு சுக்கல் சுக்கலாக உடைந்து போனாள் அவள்.
எனக்குன்னு ஒரு குழந்தை இருந்திருந்தா இந்த மாதிரி எமோஷன்ஸ்னால தேவையில்லாம கஷ்டப்பட வேண்டிய அவசியம் வந்திருக்காதே..! என்ற ஆதங்கம். தனக்கென ஒரு குழந்தை கண்டிப்பாக வேண்டும் என்ற வெறி பிடிக்க வைக்கும் பிடிவாதம்.. வாத்சல்யனிடம் குழந்தை தத்தெடுப்பு பற்றி பேச வைத்தது.
ஆனால் குழந்தை தத்தெடுப்பது அத்தனை ஈஸியான காரியமல்லவே..! அடாப்ஷன் சென்டரில் பதிவு செய்துவிட்டு கிட்டத்தட்ட இரண்டு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டுமாம்.. ஏகப்பட்ட விதிமுறைகள்..! மலைத்துப் போன தம்பதிகளுக்கு தலை சுற்றி கொண்டு வந்தது.
எத்தனையோ ஆதரவற்ற குழந்தைகள் ஒருவேளை சோற்றுக்கு.. இல்லங்களில் கஷ்டப்படும் போது.. அரசாங்கம் ஏன் பக்கம் பக்கமாய் விதிமுறைகளை வகுத்து வைத்து ஸ்வீகாரம் எடுத்துக் கொள்வதை இத்தனை கடினமாக்குகிறது என புரியவில்லை இருவருக்கும்.
“குழந்தைகள் விஷயம் லஷ்மி..! அவ்வளவு ஈசியா தூக்கி குடுத்துர மாட்டாங்க.. வீட்ல பிறந்து பெத்தவங்க கண்காணிப்பில் வளர்ற குழந்தைகளுக்கே இங்க பாதுகாப்பு இல்லை.. தத்தெடுக்கறேன்னு கூட்டிட்டு போய் கண்ணுக்கு மறைவா அந்த குழந்தைக்கு ஏதேனும் தொல்லைகளோ துன்புறுத்தலோ கொடுத்துடக் கூடாதுன்னுதான் இத்தனை ரூல்ஸ். சட்டப்படி குழந்தையை ஸ்வீகாரம் எடுத்துக்கறதுதான் நமக்கு நல்லது.. கொஞ்சம் வெயிட் பண்ணித்தான் ஆகணும்.” என்று மனைவிக்கு ஆறுதல் சொன்னான் வாத்சல்யன்.
“அவ்வளவு வருஷம் என்னால வெயிட் பண்ண முடியாது வாத்சா..! உங்களுக்கு என்னோட உணர்வுகள் புரியுதா இல்லையா.. எனக்கு இப்பவே ஒரு குழந்தை வேணும்.” என பிடிவாதத்தில் நின்றாள் லஷ்மி.
“உடனே வேணும்னு கேட்டா.. காத்துல காகிதம் மாதிரி குழந்தை பறந்து வந்து உன் கையில விழுமா..! எல்லாத்துக்கும் ஒரு டைம் இருக்கு.. வெயிட் பண்ணித்தான் ஆகணும்.” என அவளை அதட்டினான்.
குடும்பத்தில் தாங்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளப் போவதாக விஷயத்தை சொல்ல.. வீடே ரெண்டு பட்டது.
“யாரோ ஒரு ஊர் பெயர் தெரியாத அனாதை குழந்தையை கொண்டு வந்து இந்த குடும்பத்தோட வாரிசுன்னு வளர்க்க நான் அனுமதிக்க மாட்டேன். எவளோ பெத்து போட்டுட்டு போய்டுவா.. அதை தூக்கிட்டு வந்து சொகுசா வளர்த்து ஆளாக்கத்தான் இங்க வீடு வாசல் சொத்து சுகம்ன்னு சேர்த்து வைத்திருக்கோமாக்கும்..”
“பேர் சொல்ல பிள்ளை வேணும்னா அது உன் பிள்ளையா இருக்கணும். ஊர் பெயர் தெரியாத எவளுக்கோ எவனுக்கோ பிறந்த பிள்ளைக்கு பெத்தவங்களோட கேடுகெட்ட குணந்தான வரும். நாய குளிப்பாட்டி நடு வீட்ல வச்சாலும்..”
“அம்மா போதும் நிறுத்துங்க..! இதுக்கு மேல ஒரு வார்த்தை பேச வேண்டாம்.” வாத்சல்யனின் மனம் கனன்றது.
“என்ன பேசக்கூடாது.. அவ சொல்றதுல என்ன தப்பு. நீங்க பெரியவங்க பேச்சைக் கேட்காம உங்க இஷ்டத்துக்கு நடப்பிங்க.. நாங்க வாயவே வைத்திருக்கக் கூடாதா.. தத்தெடுக்கனும் வளக்கணும்னு ஆசைப்பட்டா நம்ம வீட்டு குழந்தைகளை தத்தெடுத்து வளங்க.. இதோ முரளி கூட இரண்டு பிள்ளைகளை பெத்து வச்சிருக்கானே..! மித்ரா கூட பேசறதையே நிறுத்திட்ட.. அரவிந்தை முன்ன மாதிரி தூக்கறதில்ல கொஞ்சறதில்ல..” பொங்கி வந்தார் அப்பா செல்வவிநாயகம்.
“கூட பிறந்த தம்பி அக்கா குழந்தைகள் மேல கொஞ்சங்கூட பற்றில்லை..! இதுல ஏதோ அனாதை ஒரு குழந்தையை தூக்கிட்டு வந்து வளர்க்க போறாங்களாம். நல்லா இருக்கு நியாயம்..! ஊர் பெயர் தெரியாத ஒரு அந்நிய குழந்தை இந்த வீட்டு உடைமைகளை நம்ம பிள்ளைகளோட சேர்ந்து பங்கு போட்டுக்கணுமா..! இதை நாங்க அனுமதிக்கணும்.?” புவனா வேறு தன் பங்குக்கு நியாயம் பேச.. கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டான் வாத்சல்யன்.
இவர்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது.. புவனாவின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. முரளி வாய் திறந்து எதுவும் கேட்பதில்லை. தாயும் தந்தையும் அவர்களுக்கே பின்பாட்டு பாட.. தான் தனித்து விடப்பட்டதாக உணர்கிறான் வாத்சல்யன்.
லஷ்மி இவர்களிடம் வாய் திறப்பதே இல்லை.. மிச்சமிருக்கும் நிம்மதியை காப்பாற்றிக் கொள்வதற்காக அறையிலேயே முடங்கி விட்டாள்.
“என்ன வாத்சா.. இவங்க இவ்வளவு பிரச்சனை பண்றாங்களே..! அப்ப நாம குழந்தையை தத்தெடுக்க போறதில்லையா..” என ஒருவித மிரட்சியுடன் வாத்சல்யனிடம் கேட்டு வைக்க..
“யார் என்ன சொன்னாலும் சரி..! கண்டிப்பா நாம ஒரு குழந்தையை தத்தெடுக்கத்தான் போறோம்” உறுதியான குரலில் சொன்னான் வாத்சல்யன்.
அவர்கள் வேலையை எளிதாக்குவது போல்.. தெரிந்தவர் மூலம் ஒரு குழந்தை தத்தெடுப்பதற்கு தயாராக இருக்கிறது என தெரியவர தம்பதிகள் இருவரும் அந்த இல்லத்துக்கு விரைந்து போய் குழந்தையை பார்த்தனர்.
இரண்டு வயது பெண் குழந்தை.. தேவதை போல் அழகு..! எல்லாமே லீகல்தான். நீங்க கவலையே பட வேண்டாம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள்.
அடுத்த ஒரு வாரத்திலேயே பார்மாலிட்டிஸ் முடிந்து அந்த குழந்தை அவர்கள் கரங்களுக்குள் தவழ்ந்தது.
செப்புவாய் திறந்து சிரித்த பிள்ளைக்கு இதழிகா என்று பெயர் வைத்தார்கள்.
குழந்தை வந்த பிறகு அவர்கள் உலகமே வேறு மாதிரியாக மாறிப்போனது.
தனக்குள் புதைந்து கிடந்த சோகங்களை மறந்து குழந்தையோடு நேரம் செலவழிக்க ஆரம்பித்தாள் லஷ்மி. ஒரு பக்கம் சந்தோஷமாய் வலம் வரும் மனைவி.. இன்னொரு பக்கம் மகள் என வாத்சா அளவு கடந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தான்.
எதிர்வீட்டு குழந்தையை கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தனர் இருவரும்.
இந்தப் பெண் குழந்தையை ஸ்வீகாரம் எடுத்ததில்.. வீட்டில் யாருக்கும் இஷ்டமில்லை.. யாரும் அவர்களோடு பேசுவதில்லை. லஷ்மியின் சகோதரிகள் கூட ஃபோனில் அழைத்து “என்னடி இதெல்லாம்..! பெரியவங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு செய்யறதில்லையா.. உன் புகுந்த வீட்டு ஆளுங்க ரொம்ப குறைப்பட்டுக்கறாங்க! என்னவோ நீ பண்றது எதுவும் எங்களுக்கு பிடிக்கல. இப்ப என்ன வயசாயிடுச்சு உங்களுக்கு.. இன்னும் கொஞ்சநாள் பொறுமையா இருக்க தெரியலையா..!” என ஆளாளுக்கு அறிவுரை.
இவர்களிடம் விளக்கம் சொல்லி மீள முடியாது.! அத்தனை பேரையும் தவிர்த்துவிட்டு.. தங்களுக்கான வாழ்க்கையில் கவனத்தை திசை திருப்பிக் கொண்டனர் இருவரும்.
எல்லாம் சரியாகத்தானே போய்க்கொண்டிருந்தது.. அந்த குறிப்பிட்ட இல்லத்திலிருந்து தத்து கொடுக்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் பெற்றோர்களிடமிருந்து திருடிவரப்பட்ட குழந்தைகள் என்று தெரியப்படும் வரை..
லஷ்மி கதற கதற.. போலீஸ் அவர்களிடமிருந்து குழந்தையை பறிமுதல் செய்து கொண்டு போகும்போது.. சுற்றியிருந்தவர்கள் சத்தமில்லாமல் சிரித்தனர்.
தொடரும்.
error: Content is protected !!
🙏🙏🙏🙏🙏🙏 romba romba kastam ah irukku
Santha and vatsa ah vera vazhiyae illama pannanum ah andha kural sonnadhu dhan nadakanum
Andha kuzhandhai izhappu irukka kudathunu dhan ah avanga yosikaranga 😟😟😟😟😟😟
😭😭😭romba kashtama irukku aandava oru kulanthai ah thanthu eduthu ipdi sikkal la vanthu mudinju poche kadavule 😭😭
Pengalukku pengalea ethiri tha epavu me pola lakshmi ah veetalu kayapadutharanngae office la um manasa nogadikkarirangae na
Ava vera enna tha seiva 🥺🥺
ஏம்மா ஏம்மா நீங்க ஏம்மா இப்படி எங்கள கதறி கதறி அழ விடுறீங்க முடியல 😭😭😭
சாந்தா பாவம் இன்னும் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் 🤧🤧🤧
அடேய் ஏன்டா இதுக்கு மேல அவரால தாங்க முடியாது டா பாவம் டா அவங்க குழந்தையே இல்லமா இருந்தப்ப கூட பரவாயில்ல இப்ப வளர்த்த புள்ளய தூக்கிட்டு போறிங்களேடா 😭😭😭
இது ரொம்ப கொடுமை…
பார்வை இல்லாதவங்களுக்கு பார்வை கொடுத்துட்டு, மறுபடியும் பறிச்சுக்கிட்ட மாதிரி…💔
லக்ஷ்மி இதிலிருந்து எப்படி மீண்டு வருவாளோ…
அவளைச் சுத்தி இருக்கிறவர்கள நினைச்சா ரொம்ப பயமா இருக்கு..