Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

26. கல்பனா சரவணன் - யுகத்தின் தலைவன்

யுகத்தின் தலைவன் அத்தியாயம் 14

யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 14
கங்காவின் சீரும், கோடை விடுமுறையும் முடிந்து முதல்நாள் பள்ளி திறந்தது. அது மிகவும் ஸ்ட்ரிக்ட்டான கிருஸ்தவ பள்ளி. பெண் கல்விக்காக உருவாக்கப்பட்ட பள்ளி.
எத்தனையோ பெண் ஆசிரியைகளையும்,பெண் மருத்துவர்களையும்,பெண் செவிலியர்களையும்,பெண் காவலர்களையும்,பெண் ஆடிட்டர்களையும், குடும்பத்தை பொறுமையுடனும், அன்புடனும் நடத்திச் செல்ல தங்கள் கனவுகளையும் லட்சியங்களையும் தொலைத்த குடும்ப தலைவிகளையும் உருவாக்கிய பள்ளி.
அங்குள்ள கட்டிடம், அதில் உள்ள கரும்பலகைகள்,நாற்காலிகள், மரங்கள் கூட கொஞ்சம் கர்வமாகத் தான் நின்று கொண்டிருக்கின்றனர். அந்த பள்ளியின் சாதனைகளையும்,வாங்கிய மெடல்களையும், கைதட்டல்களையும் தங்களுள் உள்வாங்கிக் கொண்டு..


Advertisement

ஒன்றரை மாத கோடை விடுமுறைக்குப்பின் பள்ளி திறந்ததால், வேப்பமர சருகுகளும், பாதானிக்காய் மர இலைகளும்,ரோஜா நிற பூகன்வில்லா பூக்களும் காற்றில் சிதறிக் கிடந்தன.
பிஇடி டீச்சர் விசில் அடித்து குப்பைகளை அப்புறப்படுத்த துரிதப்படுத்தினார்.
வெள்ளை நிற புளூமேரியா மரத்தின் அடியில் கங்காவின் கைகளை பிடித்தபடி, சுமதி ஒரே அழுகை,” நாம் பிரிஞ்சுருவோம் கங்கா” என,
கங்காவின் உயிர்த் தோழி சுமதி. அவர்கள் இருவரும் உறவினர் என்பதையும் தாண்டி நகமும் சதையும் போல பிரியாமல் இருந்தனர்.

Advertisement

அடுத்த வகுப்பிற்கு செல்ல இன்று மதியம் வகுப்பு பிரிக்கிறார்கள்.
இந்த வருடம் எந்த செக்சனில் பிரித்து விடுகிறார்களோ,அதே வகுப்பில் தான் மீதமுள்ள நான்கு வருடங்களும் படிக்க வேண்டும்.

Advertisement

அழுத கண்களோடு நின்று கொண்டிருந்தவளை ஆசிரியை ரோஸி பார்த்து விட்டார்.
ஏம்மா அழுகிறே?
இவ என் ப்ரெண்ட் கங்கா.இவ செக்சன்லேயே என்னை சேர்த்து விடுங்கனு தேம்பிக் கொண்டே கூறினாள்.

Advertisement

சரி பர்ஸ்ட்.அழுகையை நிறுத்திட்டு உன் பேர் என்னனு சொல்லு.
“என் பேர் சுமதி.இவ என் ப்ரெண்ட் கங்கா. இந்த டைம் க்ளாஸ் பிரிச்சா நாலு வருஷமும் அதே க்ளாஸ்லதான் படிக்கனும்.நாங்க ஒரு வேளை வேற வேற க்ளாஸ் போயிட்டோம்னா நாலு வருஷம் பிரிஞ்சுதான் படிக்கனும்.
எங்களை ஒரே க்ளாஸ்லே சேர்த்து விடுங்க” என கண்ணீரை துடைத்தவாறே கூறினாள்.
மதியம் செக்சன் பிரிக்கும் போது என்னை வந்து கூப்பிடுங்க,ரெண்டு பேரையும் ஒரே க்ளாஸ்லே சேர்த்து விடறேன்.நீ உன் ப்ரெண்ட் கூடவே படிப்பையா என உறுதியளித்தார் அதன்பின்பே சுமதி அமைதியானாள்.
குப்பைகளை அப்புறப்படுத்திய பிறகு வழிபாட்டுக் கூட்டம்.சுட்டெரிக்கும் வெயிலில் மாணவிகள் தங்கள் முன்பும், பின்பும்,பக்கவாட்டிலும் கைகளை நீட்டி இடைவெளி எடுத்து வரிசையாக நின்றனர்.
சாரண இயக்க மாணவிகள் கையில் தண்ணீர் பாட்டிலுடன் ஆங்காங்கே ரெடியாக நின்றனர்.வெயிலின் தாக்கத்தால் யாரேனும் மயங்கினால் அவர்களுக்கு புகட்ட பிஇடி ஆசிரியரின் ஏற்பாடு.
ஒன்பதாம் வகுப்பு மாணவி ஜெப அட்டையை எடுத்து படிக்க,மாணவிகள் பின் தொடர்ந்தனர்.
“அற்புத குழந்தை இயேசுவே! அமைதியற்ற எங்கள் உள்ளங்களின் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து, பணிந்து, வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த வரத்தை அளித்தருளுமாறு பணிவாக உம்மை கேட்கிறோம்.
எங்களை வாட்டி வதைக்கும் துன்பத் துயரங்களையும் வேதனை சோதனைகளையும் நீக்கி உமது திருபெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்.அதனால் உமது ஆறுதலையும் ஆதரவையும் பெற்று, தந்தையோடும், தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப் போற்றுவோமாக – ஆமென்.”
இதனைத் தொடர்ந்து அன்றைய செய்தி தமிழிலும் ஆங்கிலத்திலும்,பொது அறிவு, திருக்குறள், தலைமை ஆசிரியையின் முதல் நாள் வரவேற்புரை, நாட்டுப்பண் என இனிதே முடிவடைந்தது அந்த வழிபாட்டு கூட்டம்.
மதியம் வகுப்பு பிரிக்கும் நிகழ்வு. மரத்தடியில் எல்லா ஆசிரியர்களும் கூடி இருக்க ரோஸி டீச்சர் மட்டும் மிஸ்ஸிங்.
இருவரும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தபடி நின்றனர். மாணவிகள் ஆல்பபெட்ஸ் ஆர்டர் படி வரிசையாக நிற்க வைக்கப்பட்டனர்.
கங்கா, கே லெட்டர் முன்னாடியே வந்துரும் நீ போய் லைன்லே நில்லு நான் ‘ரெஸ்ட்ரூம்’னு பொய் சொல்லிட்டு, ஸ்டாப் ரூம் போய் ரோஸி டீச்சரே கூட்டிட்டு வரேன் என சுமதி கிளம்பி விட்டாள்.
மூச்சு வாங்க வேகமாக ஸ்டாப் ரூமினுள் சென்று ரோஸி டீச்சரை தேட, அவர் மத்திய உணவிற்காக வீடு சென்றுவிட்டதாக தகவல் சொல்லப்பட்டது. முகத்தை தொங்க போட்ட படியே க்ரவுண்டிற்கு வந்தாள்.
ஏய்! இங்க வா,எல்லா புள்ளைகளும் லைன்லே நிக்கறாங்க நீ மட்டும் எங்கடீ போய்ட்டு வரே என பிஇடி கடுகடுத்த முகத்தோடு கேட்க ஒரு நிமிடம் பயந்தே விட்டாள்.
ரெஸ்ட்ரூம் டீச்சர் என்றாள்.
உங்களுக்கு உடனே வந்துருமே. இப்போதானடி லஞ்ச் முடிஞ்சு போ..போய் ஒழுங்கா லைன்ல நில்லு.
ஏய் இங்க வாங்கடீ என வாலண்டியர் பிள்ளைகளை அழைத்து,இவளோட லெட்டர் என்னனு கேட்டு நிக்க வைங்க என கட்டளை இட்டார்.
எஸ் வரிசையில் ஒரு கூட்டமே நின்றது. அதற்குள் கங்கா ‘ஏ’ வகுப்பில் நிற்க வைக்கப்பட்டாள்.
சுமதிக்கு ஒரே அழுகை. கொஞ்சம் விட்டிருந்தால் கத்தி அழுதிருப்பாள்.
அவளுக்கு முன்னாள் நின்றவர்கள் ஏ- பி – சி என ஒவ்வொரு வகுப்பிலும் நின்று கொண்டு வந்தனர். தோழிகள் இருவருக்கும் ‘பக் பக்’ என இதயம் படபடத்தது.
சுமதி தன் முன்னாள் நிற்பவர்கள் ஒவ்வொருவரையும் ‘ ஏ பி சி’ என மனதிற்குள் கணக்கெடுத்துக் கொண்டே வர,அவள் ‘பி’ செக்ஷன் செல்ல வேண்டி வந்தது.
இப்போது அழுவது முட்டாள் தனம் என புத்திசாலித்தனமாக ஒரு முடிவெடுத்தாள்.
ஆசிரியர்களும்,வாலண்டியர் மாணவிகளும் தன்னை பார்க்கிறார்களா? என ஒரு முறை உறுதி படுத்திக் கொண்டு, தனக்கு முன்னாள் நின்ற மாணவியை பின்னால் வரச் சொல்லி நின்று கொண்டாள்.

இனிதாக ‘ஏ’ பிரிவு வகுப்பிலேயே சுமதியும் சேர்ந்து விட்டாள்.

கங்கா, ‘சுமதி ‘ஏ’ பிரிவில் நின்றதை பார்க்காமல்,மற்ற இரண்டு பிரிவுகளிலும் மாறி மாறி அவளை தேடிக் கொண்டிருந்தாள்’.
பெயர்களை குறித்துக் கொண்டு மாணவிகளை அவரவர் வகுப்பிற்கு கலைந்து செல்ல சொல்ல,சுமதி வந்து கங்காவின் கண்களை பொத்திக் கொண்டாள்.
கங்கா தன் கைகளை காற்றில் அசைத்து தன்னை நிலைப்படுத்தி நின்றாள்.
கங்கா இனி நாலு வருஷம் நம்ம ரெண்டு பேரும் ஒன்னாதான் படிக்க போறோம் என்றாள்.
கங்காவிற்கும் ஒரே துள்ளல்.இருவரும் கைகளை பிடித்தபடி சுற்றி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
மாலையில் வீடு திரும்புவதற்கு முன்பு ரோஸி ஆசிரியை அவர்களை தேடி வந்து பார்த்து சென்றார்.மதிய உணவிற்கு சென்றது கொஞ்சம் தாமதமாகி விட்டது என வருத்தம் தெரிவித்தார்.
பின் “இருவரும் ஒரே வகுப்பில் சேர்ந்து விட்டீர்கள் தற்போது சந்தோசமா என கேட்க, இருவரும் ரகசியமாக கள்ளப் புன்னகையுடன் தலையை ஆட்டினர்.
படிப்பை விட ஒழுக்கத்தையும் வழிபாட்டையும் முதன்மையாக கற்பித்தது அந்த பள்ளி. எந்த பாடம் நடத்தப்பட்டாலும் மாணவிகளின் மனதில் பதியும்படி எடுத்துக்காட்டுகளுடன் கற்பிக்கப் பட்டது.
எப்படியும் ஒரு இறைவழிபாடும் ஒரு ஒழுக்கத்தை பற்றிய கதையும் ஒவ்வொரு ஆசிரியரும் கற்றுக் கொடுத்தனர்.
தாங்கள் இந்த மதம்,இந்த சமூகம், இன்னார் மகள் என்ற அடையாளமெல்லாம் அந்த பள்ளியில் இல்லை.
கற்றது அனைத்துமே வேதம் என்று எண்ணும் அளவிற்கு ஆசிரியைகள் நூலகம் சென்று நிறைய புத்தகங்களை அலசி கற்றுக் கொடுத்தனர்.
எனவேதான் சிவராமன் தன் பிள்ளைகள் பிறந்ததும் இந்த பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என தீர்மானித்து விட்டார்.
பள்ளியில் நடக்கும் நிகழ்வுகளையும், நடத்தும் பாடங்களையும் தினமும் லட்சுமியிடம் கங்கா பகிர்ந்து கொள்வாள்.
அம்மா இன்னைக்கு எங்க டீச்சர் ஒரு கதை சொன்னாங்கம்மா
என்ன கதை என லட்சுமியும் தோசை ஊற்றிக் கொண்டே சுவாரசியமாக கேட்டார்.
அம்மா கடவுள் முதல்லே பூமி, வானம், தண்ணி எல்லாம் படைச்சாராமா.
சரி மக்களை படைக்கலாம்னு கண், காது, மூக்கு,கை,கால் னு ஒவ்வொரு உருவமா இதோ இந்த மாதிரி ஒரு தோசை கல்லுல ஊத்திருக்காரு.
அது வேக கொஞ்சம் டைம் எடுக்க தூங்க போய்டாராமா
ஆமா தோசை ஊத்திட்டு தூங்க போனா அப்பறோம் தோசையும் அவ்ளோதா கல்லும் அவ்ளோதா என்றார் பழைய நினைவுகளுடன் லட்சுமி.
அம்மா நீ கொஞ்ச நேரம் அமைதியா கதை கேளுமா கங்கா அப்றோம் என்ன ஆச்சு? என்றாள் கெளசி
தோசை கருகி போச்சு அதே எடுத்து ஆப்ரிக்காலே போட்டுடாரு
சீ என்ன இப்படி ஆச்சுன்னு அடுத்த தோசைக்கு மாவு ஊத்தி அது வேகறதுக்குள்ள எடுத்துட்டாரு
வேகறதுக்குள்ள எடுத்தா தோசை ஒரே மாவு மாவு எல்லா இருக்கும்-லட்சுமி
ஆமாம்மா அதுதான் அதை அமெரிக்காலே போட்டுடாரு
இந்த வாட்டி கடவுள் தூங்காம பார்த்து பதனமா எண்ணெய் கொஞ்சம் விட்டு பொன்னிறமா எடுத்தார்.
இதுதா கரெக்டான பக்குவம்- லட்சுமி
அதுனாலதான் அந்த தோசையே இந்தியாவுல போட்டுருக்காங்கனு சொன்னாங்கமா என்றாள்.
உங்கப்பன் ஊரு உலகத்துல இதுதான் நல்ல பள்ளிக்கூடம்னு உங்கள சேத்தி விட்டுருக்காரு.
நீ தோசை ஊத்தறே கதையே பாடம் படிச்சுட்டு இருக்கறே – லட்சுமி
அம்மா எங்கூட கீதான்னு ஒருத்தி படிக்கறா இல்ல அவளுக்கு அவ கொஞ்சம் கருப்பா இருக்கானு கவலை.
நா அமெரிக்காவுல பொறந்து இருந்தா வெள்ளையா இருப்பேனு சொன்னா
அதுக்குதுதா இந்த கதையே எங்க டீச்சர் சொன்னாங்க..
சரி இப்போ கீதா என்ன சொன்னா?-லட்சுமி
நான் கருப்பு இல்லை. கடவுள் என்னை பொன்னிறமா படைச்சு இருக்காருனு ஹாப்பியா இருக்கா என்றாள்.
நாட்கள் அதன் போக்கில் கழிய ஆரம்பித்தனர்.லட்சுமியின் பெரியப்பா மகனின், மகளுக்கு திருமணம். சிவராமனுடன் லட்சுமி வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறார்.
இந்தமுறை எந்த வம்புதும்பிற்கும் சிவராமன் செல்லவில்லை.மகள்களை திருமணத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டாம்.லீவு போட்டால் படிப்பு கெட்டுவிடும் என்றார் அவ்வளவுதான்.
ஆமா எல்லாரும் அவங்க அவங்க புள்ளை பசங்களோட நிப்பாங்க நான் மட்டும் தனியா நிக்கனுமா என இந்த முறை வம்பை ஆரம்பித்தது லட்சுமிதான்.
நிறைய வாக்குவாதத்திற்கு பிறகு சிவராமன் பச்சை கொடி காட்டினார். சகோதரிகள் இருவரும் மகிழ்ச்சியாக திருமணத்திற்கு சென்றனர்.
ஞாயிறு சம்பந்தி விருந்து கலாவின் கணவர் சிவராமனுக்கு போன் செய்தார்.இவரும் எடுத்து என்னவென்று கேட்க நங்கைகிட்ட போன் கொடுங்க என்றார்.
லட்சுமியிடம் போனை தர,ஏன் நீங்களும் கலாவும் கறிவிருந்துக்கு வரலே ?
நீங்க செவ்வாய்கிழமை வீட்டுக்கு வாங்க நான் எல்லாத்தையும் சொல்றே என்று போனை வைத்துவிட்டார்.
போனை வைத்தவுடன் சிவராமனிடம் விவரம் கூறினார்.செவ்வாய் கிழமை வர சொல்றாரு.உங்கிட்ட எதாச்சு சொன்னாரா?
உங்கிட்ட போனை கொடுக்க சொன்னாரு அவ்வளவுதான்
அவரே பேசறாரு உனக்கு என்ன?நீயும் பேச வேண்டியதுதானே என்றார் லட்சுமி
சரி செவ்வாய்கிழமை போய் பேசிட்டு வரலாம் என சிவராமனும இறங்கி வந்தார்.
கங்கா இந்தா என ஒரு ரோஜாப்பூ போட்ட நோட்டை நீட்டினாள் சுமதி.
என்னடி இது- கங்கா
நான் கடைக்கு போனே அங்க இந்த நோட்டை பாத்தே அழகா இருந்துச்சு அதுதான் உனக்கும் ஒன்னு வாங்கிட்டு வந்தேன்.நாளைக்கு டென்த் போசன்ஸ் ஸ்டார்ட் பண்றாங்க இல்ல.அதுதா புது நோட்.எப்படியும் நாம்ம விருந்து முடிச்சிட்டு போக நைட் ஆகும்.
நோட் இல்லாம போனா பனிஷ்மெண்ட் தருவாங்க என அடுத்தநாள் வகுப்பிற்கு தோழிகள் ஆயத்தமாகினர் விருந்து கொண்டாட்டங்களுக்கு நடுவிலும்..
அடுத்தநாள் கங்கா பள்ளிக்கு தயாராகி கொண்டிருந்தாள்.இரண்டை ஜடை ரிப்பன் வைத்து பின்னவில்லை என்றால் ஃபன் கட்ட வேண்டும்.
அம்மாவும் அப்பாவும் எங்கடி போனாங்க டைம் வேற ஆச்சு என்றாள் தலையை பின்னிக் கொண்டே
தெரிலே கங்கா லன்ச்சுகூட போட்டு வைக்கல
இருவரும் அம்மாவை திட்டிக் கொண்டே, துப்பட்டாவை மடித்து ஒருவருக்கொருவர் மாற்றி பின் குத்திக் கொண்டிருக்க,லட்சுமி அழுதபடியே வந்து கட்டிலில் படுத்தார்.
கங்கா ஒரு வெள்ளை வேட்டி எடு என சிவராமன் பின்னாடியே வந்தார்.
அப்பா,அம்மா ஏன் அழுவுது? நீ அம்மாவை அடிச்சையா? என கெளசி கேட்க,இல்ல கலா சித்தப்பா இறந்துருச்சு என்றார் லட்சுமி.
அவர் கூறிய செய்தியை உள்வாங்கவே சில மணித்துளிகள் தேவைப்பட்டது கங்காவிற்கு.உடம்பு நடுக்கமெடுக்க வெள்ளை வேட்டியை இருக பிடித்துக் கொண்டாள்.
அதெல்லா ஒன்னு இல்ல.உங்க சித்தப்பாக்கு உடம்பு சரியில்லை நானும் அம்மாவும் போய் பார்த்துட்டு வரோம். நீங்க ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு கிளம்புங்க என மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.
-தலைவன் வருவான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!