Skip to content
Post Views: 3,368
*3*
“அந்த பேமெண்ட் இஸ்யூ என்னனு பாக்க சொன்னேனே. பாத்தீங்களா குழலி?” என்ற கேள்வியோடு தன் பின் வந்து நின்றவனை நிமிர்ந்து பார்த்தவள், “மார்னிங்கே செக் பண்ணி க்ளோஸ் பண்ணிட்டேனே பாக்கலையா நீங்க?” எதிர்கேள்வி எழுப்பினாள் குழலி.
“ஓ! நான் ஹெட்டோட மீட்டிங்ல இருந்து நேரா இங்கதான் வரேன். குழலி கண்ணுலபட்ட அப்புறம் முடியாத விஷயம்னு எதுவும் இருக்கா என்ன?” என்று அவளின் மேலாளர் கணேஷ் கேலி போல் இழுக்க,
“அதான் செக் பண்ண என் பிலேஸ்கே வந்துட்டிங்களா கணேஷ்?” அவளும் கேலி போல வாரினாள்.
Advertisement
“அந்த மெயில் உங்க கண்ணுலபடாம கூட போயிருக்கலாம் இல்லையா, அதான் வந்தேன். பிரேக் போறேன் வரீங்களா? காபி? ஹாட் சாக்லேட்?” எதிர்பார்ப்பாய் கணேஷ் அவள் முகம் பார்த்து நின்றான்.
“இல்லை கணேஷ். இப்போ தான் ராஷ்மியோட போய்ட்டு வந்தேன்.”
“அவனுங்க தப்பான டீடெயில்ஸ் கொடுத்திட்டு பிக்ஸ் பண்ண டைம் பிரேம்ல நாம முடிக்கலைனு ப்ளேமை நம்ம தலையில தூக்கிப்போட்டு மீட்டிங்ல காய்ச்சி எடுத்துட்டாங்க. ஒரே மண்டைக்குடைச்சலா போச்சு. ஒரு காபி குடிச்சா ரெப்ரஷ் ஆகும்னு பாத்தேன். தனியா போக கடுப்பா இருந்துச்சி, இட்ஸ் ஓகே. யூ கேரி ஆன்.” நெற்றியை லேசாக தேய்த்துவிட்டபடி பேசியவனை கவனித்தவள் என்ன நினைத்தாளோ கணினியை உறக்கத்திற்கு அனுப்பிவிட்டு எழுந்தாள்.
Advertisement
“ஹே எனக்காக உங்க வேலையை விட்டுட்டு வரவேண்டாம்.”
Advertisement
“ராஷ்மியோட காபி குடிச்சி ஒருமணி நேரமாச்சு. இப்போ இன்னொரு காபி குடிக்கலாம் தப்பில்லை.” கண்களை லேசாக சிமிட்டியபடி அவள் கேன்டீன் நோக்கி நடக்க, புன்சிரிப்புடன் தொடர்ந்தான் கணேஷ்.
“ஒரு காபி உங்களை கவுக்கும்னு தெரிஞ்சிருந்தா இந்த ஆபீஸ்ல இருக்கிற அம்புட்டு பேரும் காபி மெஷின் பக்கத்துல ரோஸோட உங்க முன்னாடி முட்டி போட்டிருப்பாங்க.” இருவருக்குமாய் காபி வாங்கிக்கொண்டு அமரவும் கணேஷ் விளையாட்டாய் சொல்ல, மறுப்பாய் தலையசைத்தவள்,
“காபிக்கும் ரோஸுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு பாஸ். வேற வழியில்லாம புடிக்காதவங்க கூட சகிச்சிக்கிட்டு காபி டைம் ஷேர் பண்ணிடலாம். ஆனா ரோஸ்… வாய்ப்பில்லை பாஸ் வாய்ப்பில்லை.” தொண்டை நனைக்கும் காபியின் கசப்பை ஆழ்ந்து அனுபவித்தபடி அடுத்த மிடறு குடித்தவள் கவனம் முழுதும் அந்த பானத்திற்கு சென்றுவிட, காபி உங்களுக்கு அத்தனை பிடிக்குமா என்று கேட்டு காபி வகைகளை பற்றி பேச ஆரம்பித்துவிட்டான் கணேஷ்.
Advertisement
எப்போதும் போல் வேலை நேரம் முடிந்து அலுவலகத்திலிருந்து கிளம்பியவள் சென்னையின் வாகன நெரிசலில் சிக்கிச் சிதறி சோர்ந்து தான் வீடு வந்து சேர்ந்தாள். பெருமூச்சோடு வீட்டின் வெளிக்கதவைத் திறந்து வண்டியை உள்ளே விடும் நேரம் வீட்டினுள் இருந்து ஒலித்த குரல்கள் பனிமழையாய் இறங்கி அவள் சோர்வினை விரட்டி அடித்தது. விழிகளை எட்டிய புன்னகையுடன் துள்ளிக்கொண்டு ஓடியவள்,
“ஆத்யா குட்டி!” என்ற கூவலோடு உள்நுழைய, குதூகலிப்புடன் பாய்ந்து வந்து அவள் கால்களை கட்டிக்கொண்டது சிட்டு.
தனக்குள் அடங்கிய குழந்தையை தூக்கி ஒரு சுற்று சுற்றியவள் குழந்தையின் பூசிய கன்னங்களில் அழுத்தமாய் முத்தமொன்று பதிக்க, குழந்தையும் எச்சில் படர அவள் கன்னத்தை ஈரம் செய்தது.
“என் செல்லத்துக்கு லீவ் விட்டாச்சா?”
விரிந்திருந்த வல கரத்தை மடக்கி அதிலிருந்து ஒவ்வொரு விரலாய் பிரித்து நிமிர்த்திக்காட்டி பாவனையுடன் பதில் சொன்னாள் ஆத்யா, “ஒன், டூ, த்ரீ டேஸ் லீவு.”
“த்ரீ டேஸ் லீவா?” ஆச்சர்யம் போல் கண்களை விரித்து குழலி கேட்க, பெரிதாய் மண்டையை ஆட்டிய சிட்டு, “வந்து சித்திக்கு லீவாம். உனக்கும் லீவ் தான? ஜாலியா இருக்கலாம்.” மழலையுடன் பேசும் பிள்ளைத்தமிழை ரசித்தபடி குழலி மீண்டுமொரு முத்தம் வைக்க, மறுபுறம் பிள்ளையின் அம்மாவிற்கு நன்கு விழுந்தது அடிகள்.
“சொல்லிக்குடுத்திருக்கா பாரு புள்ளைக்கு வந்து சித்தி போ சித்தின்னு. உன்னை சொல்லணும்டி. ஒழுங்கா சித்தின்னு மட்டும் சொல்ல சொல்லு.” வந்தனா முறைத்து நிற்க,
“நீயே சொல்ல வேண்டியதுதானே. என்னை எதுக்கு அடிக்குற?” காட்டமாக கேட்ட சந்தியாவின் முகத்தினில் எரிச்சலின் சாயல்.
“நான் சொன்னா உன் பொண்ணு அப்படியே கேட்டுருவா பாரு. அவளுக்கு இருக்குற ஒரே ஒரு சித்தி நாந்தான். அதை சித்தின்னு சொல்லிக்கொடுத்தா ஆகாதாமாம். வந்து போயினுட்டு…” சிணுங்கிக்கொண்டே வந்தனா தன் அக்கா சந்தியாவை மீண்டும் மொத்தினாள்.
“அம்மாவை அடிக்காத வந்து சித்தீ…” ஆத்யாவின் குரல் ஓங்கி ஒலிக்க, அக்காவிடமிருந்து இறங்கி ஓடி வரும் பிள்ளையை பார்த்தவள்,
“அப்போ ஒழுங்கா சித்தின்னு மட்டும் சொல்லுடி.” என்று மிரட்டவே செய்தாள் வந்தனா.
“வா சித்தி… போ சித்தி…” என்று சிரித்துக்கொண்டே அங்குமிங்கும் ஓடி பழிப்பு காட்டியது குழந்தை.
ஆத்யாவை துரத்திப்பிடித்து கூச்சமூட்டியபடி, “ஏய் சித்தி சொல்லுடி… இன்னைக்கு உன்னை சொல்ல வைக்காம விடமாட்டேன்.”
“வந்தூ…” என்று கத்தியது குழந்தை.
குழந்தையோடு குழந்தையாக விளையாடியவளோ ஒரு கட்டத்தில், “எங்க உன் பெரியம்மா பேர் சொல்லுடி பாக்கலாம்.” என்று சவாலாக பார்க்க,
“மை குளிலி…” என்றது சிட்டு.
வந்தனா சிரித்துவிட, “என் பட்டுடி நீ.” என்று பதிலுக்கு ஓடி வந்து கொஞ்சினாள் குழலி.
“காபி போட்டுட்டேன் முகம் கழுவிட்டு வாடி.” பிரபாவின் குரலை பொருட்படுத்தாது குழலி குழந்தையை பக்கவாட்டில் தூக்கி இப்படியும் அப்படியும் ஆட்ட, கைதட்டி கிளுக்கிச் சிரித்தாள் ஆத்யா.
“வந்ததும் பொண்ணை மட்டும் தூக்கி கொஞ்சியாச்சு, தங்கச்சிங்களை டீல்ல விட்டாச்சு.” பொய் கோபத்துடன் தங்கைகள் இருவரும் அக்காள் புறம் திரும்ப,
“அடியே தூக்குற மாதிரியாடி இருக்கீங்க ரெண்டு பேரும். பெருச்சாளி குட்டிகளா…” பேச்சுவாக்கில் குழலி சொல்லிவிட,
பிற்பகுதியை மட்டும் காதில் வாங்கிய ஆத்யாவோ, “பெரு எலி குட்டி… வந்து குட்டி எலி குட்டி…” வாயை பொத்திக்கொண்டு சித்தியைப் பார்த்து கேலி பேசி சிரித்தாள்.
“உன் அம்மாவையும் சேத்து தான் சொல்றா பெரியம்மா. எங்க சந்து குட்டி பொந்து குட்டினு சொல்லுடி.” நாக்கை மடித்து மிரட்டுவது போல் வந்தனா செய்ய,
“மாட்டேன்… மாட்டேன்.” என்று உதட்டை உள்ளிழுத்து கண்களை சுருக்கி சிரித்துக்கொண்டே வம்பிழுத்தது சிட்டு.
“உன் அம்மாவை சந்து பொந்துனு சொல்லமாட்ட, உன் பெரியம்மாவை சொல்லமாட்ட… நாந்தான் இளிச்சவாயாடி உனக்கு.” வந்தனா அவளை பொய்யாய் அடிக்க, குழலி குழந்தைக்கு ஆதரவு கொடுக்க, ஆத்யா சிரிக்க என்று கலாட்டாவாக இருந்தது.
பேத்தியின் களிப்பில் மகள்கள் மூவரும் பங்குகொள்ள, நிறைவான புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்த பிரபாவின் மனம் சஞ்சலமின்றி இருந்தது என்னவோ சில நிமிடங்கள்தான். தெளிந்திருக்கும் வானத்தை காரிருள் சூழ்வது போல் துரத்திக்கொண்டிருக்கும் கவலைகள் ஆக்கிரமிக்கத் துவங்கியது. அவரின் எண்ணம் செல்லும் திசை புரிந்ததோ என்னவோ அவரை திரும்பிப் பார்த்த குழலி ஆத்யாவை கீழே இறக்கிவிட்டு பிரபா கையிலிருந்த காபியை வாங்கிக்கொண்டாள்.
“என்ன டிபன்மா? ரெண்டு பேரும் வந்திருக்காங்க ஸ்பெஷலா செய்யேன்மா.”
“வந்ததும் முகம் கைகால் கழுவாம இதென்ன பழக்கம்?” மகள் பேச்சுக்கொடுக்கவும் இயல்பு திரும்பியது பிரபாவிடம்.
“வந்ததும் கேட்டோம் அக்கா. பேத்திக்கு மட்டும் ஸ்பெஷல் கீ தோசையும் கேரட் சட்னியுமாம். நமக்கெல்லாம் காலையில வச்ச மீந்த சோறும் குழம்புமாம். என்னனு கேளு நீயே.” என்று வந்தாள் வந்தனா.
“நாந்தான் போதுன்னு சொல்லிட்டு போனேன்டி. நேத்தி புல்லா ஷிப்பிங் பண்ண வேண்டிய ஆடர் எல்லாம் முடிச்சிட்டு தூங்கவே லேட் ஆகிடுச்சு. நீங்க வர்றது தெரியாதா அதான் காலையிலேயே சேர்த்து பண்ணிட்டோம்.”
“அதான நீ அம்மாக்கு தான் சப்போர்ட். இதோ இவ பவுர்ணமி, அமாவாசை, அஷ்டமி, நவமியை தவிர்த்து எல்லா நாளும் வந்துட்டு போவா. நா அப்படியா? ஆடிக்கும் ஆவணிக்கும் வரேன். அதுவும் என் வீட்டுக்காரரோட வந்தா ஏக போக வரவேற்பும் கவனிப்பும்…” எனும் போதே,
“அப்புறம் என்ன குறை உனக்கு?” என குறுக்கே விழுந்த தங்கையை முறைத்த சந்தியா,
“கவனிப்பு எனக்கில்லை அவருக்கு.” பல்லைக் கடித்துக்கொண்டு கூறவும் வந்தனா நமட்டு சிரிப்பு சிரிக்க, கையில் கிடைத்ததை எடுத்தடித்தாள் சந்தியா.
“இதென்ன அடிக்குற பழக்கம்? உன்னை பாத்துதான் குழந்தை வளரும்.” பிரபா நடுமகளை கண்டிக்க,
“அதான்மா இந்த டீச்சரம்மா இங்கேயும் டீச்சர்னு நினைச்சிட்டாங்க… ஆனா இப்போல்லாம் ஸ்கூல்ல கூட கையோங்க முடியாது புடிச்சு ஜெயில்ல போட்டுருவாங்க.” வேறு யார் துடுக்காய் வந்தனா தான்.
“வாடி வா… அங்க இருக்குற ஒரு மாமியார் பத்தாதுன்னு இங்கேயும் ஒரு மாமியார் எனக்கு. புகுந்த வீட்லையும் புள்ளைன்னு அவருக்கு தான் கவனிப்பு பொறந்த வீட்லையும் மாப்பிள்ளைன்னு அவருக்கு தான் கவனிப்பு. என்னை கவனிக்க யாரு இருக்கா… பொறந்தா ஆம்பளையா பொறக்கணும்.” சந்தியா பெருமூச்சு விட, உடை மாற்றி வந்த குழலி தங்கையை இடித்துக்கொண்டு அமர்ந்து, “ஏய் சும்மா விளையாடுறாடி அவ. என்ன வேணும்னு சொல்லு ஆடர் பண்ணி சாப்பிடலாம் இன்னைக்கு.” என்று அலைபேசியில் செயலியை திறந்து அவளிடம் நீட்டினாள்.
சந்தியாவும் ஆர்வமுடன் அதனை பார்வையிட, அவளின் வருத்தம் பிரபாவினுடையதாய் மாறியது. மூன்றையும் பெண்ணாய் பெற்றுவிட்டாய் என்று கணவன் சாடாத நாளில்லை. பல்லைக்கடித்து வாழ்ந்து முன்னேறிய வாழ்க்கை சில நேரம் அர்த்தமற்றதாய் தோன்றும், இதோ இப்படி நடுமகள் பேசுகையில். பிறப்பில் பெண்ணாய் இன்றி ஆண்மகனாய் பிறந்திருந்தால் அவள் இழந்த மகிழ்வான வளர்பருவத்தையும் தந்தையன்பையும் பெற்று, எதிர்கொண்ட சவால்களையும் தவிர்த்திக்கலாமே என்ற எண்ணம் உண்டு.
“அம்மா உனக்கு என்ன வேணும்?” அதிக நேரம் அவரை யோசிக்கவிடாமல் மகள்கள் பிடித்துக்கொண்டனர்.
“வீட்ல சாதம் இருக்குடி. எனக்கு அதுவே போதும், உங்களுக்கு போட்டுக்கோங்க.” என்றதை மகள்கள் கேட்கவில்லை. சாதத்தில் தண்ணீர் ஊற்றி பழைய சோறும் மீதமிருக்கும் சாம்பாரை சுண்டவைத்தும் மறுநாள் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று சமாதானப்படுத்திவிட்டனர்.
“ஒருநாள் தானமா…” என்ற பேச்சில் மகள்களுடன் இணைந்துகொண்டார். உணவு நேரம் கலகலப்பாய் செல்ல, ஆத்யாவை தூங்க வைத்துவிட்டு இலகுவாக ஒருவர் மீது ஒருவர் கால் போட்டபடி இப்படியும் அப்படியுமாய் படுத்துக்கொண்டு ஆளுக்கொரு அலைபேசியில் மூழ்க, நினைவு வந்தவளாய், “உங்க வீட்டுக்காரங்க வரலையாடி?” என்று கேட்டாள் குழலி.
“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட க்காவ்…” கேலி சிரிப்புடன் பரிகாசம் செய்தாள் சந்தியா.
“ஏய் மறக்கலாம் இல்லை. என் பட்டுக்குட்டியை பாத்ததும் லைட்டா மறந்துட்டேன்டி.” குழலி நாக்கைக் கடித்து கண்களை லேசாக சுருக்க,
“இப்போதான வருத்தப்பட்ட என் வீட்டுக்காரருக்கு தான் எல்லா இடத்திலையும் கவனிப்புனு இப்போ பாத்தியா அக்காவோட கவனிப்பை… முதல்ல உன் ஆளுக்குதான் சொல்லணும் இதை.” வந்தனாவும் சேர்ந்துகொண்டாள் கிண்டலில்.
“எதுக்கு அந்த மனுஷன் முறுக்கு கம்பி மாதிரி முறுக்கிக்கிட்டு கிடக்கவா. சும்மான்னு இருடி.”
“ஹேய் சந்து வந்ததும் கேக்கணும்னு நினைச்சேன் பாப்பாகிட்ட விளையாடிட்டு ஏதோ நியாபகத்துல மறந்துட்டேன். தப்பா எடுக்காத…” தங்கையின் மனதில் சஞ்சலம் வந்துவிடக்கூடாது என்று குழலி பேச, அதையெல்லாம் கருத்தில் கொள்ளவே இல்லை சந்தியா, “ஏய் உன் ஆளையும் தான் அக்கா மறந்துடுச்சு…” என்று வந்தனாவிடம் வம்புக்கு நின்றாள்.
“அக்கா மறந்தாலும் இதோ உள்ளேன் அம்மானு அட்டென்டன்ஸ் போட காலையில தானா வந்துடுவாரு என் ஆளு.” என கண்ணடித்தாள் வந்தனா.
“அதான உன்னை இங்க அனுப்பிட்டு அவருக்கு தூக்கம் அண்டுமா.” என்றவள், “அவர் கிளாசுக்கு நாளைக்கு ஸ்பெஷல் க்ளாஸ் வச்சிருக்காரு அக்கா. அதான் நாங்க மட்டும் வந்துட்டோம்.” சந்தியா சமாதானம் சொல்ல, வந்தனா வாய் நிற்க வேண்டுமே.
“இல்லைனா மட்டும் வந்துட்டுதான் மறுவேலை.”
“சும்மான்னு இருடி. பொம்பளைங்களா இருக்குற வீட்ல ஒத்தையா இருக்க சங்கடப்படுறாரு. தெரிஞ்ச விஷயம்தானே.” மகளின் வாயை அடக்கிய பிரபா சந்தியாவுக்கு கண்காட்டினார். அவளும் கண்சிமிட்டி லேசாக தலைசாய்த்து அக்காவிடம் திரும்பினாள்.
error: Content is protected !!