Skip to content
Post Views: 5,761
திருமண நாள் அத்தனை பரபரப்போடு விடிந்தது ஆளுக்கொரு மனநிலையில் இருந்தனர்.
“ஏதாவது செய்யணுமா” என்று கேட்டுச் சென்ற கதிரை நாசுக்காக வேண்டாம் என்று மறுத்துவிட்டார்கள் வேலை செய்துகொண்டிருந்தவர்கள்.
Advertisement
“இங்க இருந்தா கல்யாண வேலையைச் செய்ய்யணுமோன்னு பொண்டாட்டியை தூக்கி தோள்ல போட்டுக்கிட்டு ஊர் சுத்த போய்ட்டான் இப்போ முகூர்த்த நேரம் வந்து முத்தெடுக்குறானாம்” என்று முன்னே விட்டுப் பின்னே பேசினார்கள்.
Advertisement
Advertisement
“அண்ணே கல்யாணத்தை இவ்ளோ கிட்டக்க வெச்சுகிட்டு இப்படி வெளியூர் போயிட்டு வந்திருக்கியேப்பா நல்லாவா இருக்கு இதெல்லாம்” என்று பார்ப்பவர்கள் எல்லாம் கேட்க மணமகன் அறைக்குள் சென்று ஒளிந்துகொண்டான் கதிர்.
Advertisement
பவுனுத்தாயி கவிதாவுடனே நின்றுகொண்டாள் ஷர்மிளா முகத்தில் பூரிப்பை போலியாகவேனும் ஒட்டவைத்துக்கொண்டனர் மூவரும், சித்ராவும் சௌமியாவும் நிர்மலாவுடன் கூட்டணி வைத்துக்கொண்டனர்.
சித்ராவுடன் பேசவே அத்தனை கண்டிப்பு போட்டிருந்த செல்வராஜ் இபோழுது ஒன்றுமே சொல்ல முடியாமல் கடுகடுவென்று நின்றார்.
மகேந்திரனிடம் முன்பே சிவபாலன் சொல்லியிருக்க அவன் பக்கம் எந்தச் சடங்கும் அவன் செய்யவில்லை யாரையும் முன் நிறுத்தவும் இல்லை சக்திப்ரியா அனைத்தையும் செய்தாள் செய்யச் சொன்னான் சிவபாலன்.
“எனக்குச் செய்யப் பிடிக்கல நான் செய்யல ஆனா உன் அப்பா அம்மாக்கு நீ செய்யணும் செய்” என்றுவிட்டான்.
அடர் நீல நிறத்தில் அளவான வேலைப்பாடு செய்த முழங்கை வரையிலான பிளவுஸ் புடவையில் எந்த மாற்றத்தையும் அவள் செய்யவில்லை அவன் கொடுத்த புடவையை அதே போலக் கட்டியிருந்தாள் அவள் கட்டியிருந்த விதமே அத்தனை அழகாக இருந்தது.மிதமான ஒப்பனை அளவான நகைகள் பூரிப்பான முகம் என்று விழிகளை அவனாலே அகற்றமுடியவில்லை அவளிடமிருந்து காட்டிக்கொள்ளாமல் விறைப்பாகவே அமர்ந்திருந்தான்.
சக்திப்ரியாவிற்கு அதெல்லாம் எதுவுமில்லை கண்கொட்டாமல் அவனைப் பார்த்தாள் ரசித்தாள் உள்ளத்தின் ஆர்ப்பரிப்பை எல்லாம் அப்பட்டமாக முகத்தில் காட்டினாள், இனி தன்னுடையவன் தனக்கு மட்டுமே சொந்தமானவன் அவன் கைகளுக்குள் தான்… நினைவே சில்லென்று இதயத்தை நனைத்தது.
“என் டிரஸ் பத்தி எதுவும் கேக்கலையே இதே கறுப்பிலே நான் வந்தா ஏத்துப்பியா” என்றவனிடம்.
“உங்களை இப்படியேதான் விரும்புறேன் ஒரு நாளுக்காக நீங்க உங்களை மாத்திக்கவேண்டிய அவசியம் இல்ல நீங்க இப்படியே இருங்க உங்க வாழ்க்கைல எல்லா வண்ணத்தையும் நானே நிறச்சிடுறேன்” என்றிருந்தாள்.
அவன் உடையில் இன்றும் மாற்றமில்லை அதே கருப்பு நிற சட்டை சாம்பல் நிற வேஷ்டி.
“இந்தப் பய இன்னைக்கு கூட ஒரு வெள்ளை வேட்டி சட்டை போடக்கூடாதா” என்று அங்கலாய்த்தர் ராசாத்தி பாவம் அவருக்கு அந்தக் கொடுப்பினை இல்லாமலே போய்விட்டது.
கடு கடுவென்று அவளிடம் பாய்ந்துகொண்டிருந்தவன் மூன்றாம் முடிச்சைக் கூடத் தங்கைக்கு விட்டுக்கொடுக்காமல் அவனே போட்டுமுடித்தான், பெற்றவர்களுக்கான பாத பூஜை கூடச் செய்யமாட்டேன் என்றவன் அவள் பாதங்களைக் கைகளில் ஏந்தி மெட்டி அணிவித்தான்.
தாலி கட்டும்போது அவன் கையில் சூட்டை உணர்ந்தாள் சக்திப்ரியா மிக அருகில் அவன் முகம் வந்தபோது கண்களின் சிவப்பையும் மூச்சுக்காற்றில் வெம்மையும் உணர்ந்தாள்.
மெட்டியை அணிவித்துவிட்டு அழுத்தமாகத் தலையைப் பிடித்துக்கொண்டு அவன் எழுந்துநிற்க இவள் விழிகள் முத்துபாண்டியை துளைத்தது “ஜுரம்” என்றான் அங்கிருந்து சைகையில்.
“அருகில் வா” என்று இவள் சைகை செய்ய மெல்ல அவள் பக்கம் வந்து நின்றான்.
“ரெண்டு நாளா கொஞ்சம் முடியல டாக்டர்கிட்ட எப்போவும் போகமாட்டார் இப்போவும் போகல நேத்து ராத்திரி பாத்தா கிணத்துல நீச்சல் அடிக்குறாரு சொன்னா கேட்டாத்தானே” என்றான்.
உடல் கொதிப்பதை அவளால் உணர முடிந்தது விழிகளில் நீர் கோர்த்துக்கொண்டது சக்திப்ரியாவிற்கு, மகனுக்கு மறுநாள் திருமணம் அவர் நெருங்க விடவில்லையென்றாலும் இவர் ஒருமுறை மகனைப் பற்றி விசாரிக்க வேண்டாமா பார்த்திருக்க வேண்டாமா என்று ஆத்திரம் வந்தது அன்புக்கரசிமேல்.
இவளோடு அவன் பேசுவதில்லையே அவனாகவும் அழைக்கமாட்டான் இவள் அழைத்தாலும் முத்துதான் எடுப்பான் அவன் பேசமாட்டான் என்றாலும் தினமும் அழைப்பாள் “எங்க போனீங்க சாப்டாச்சா என்ன சாப்பிட்டார் தூங்கினாரா” என்று அவனிடம் விசாரிப்பாள்.
கேட்டுக்கொண்டுதான் இருப்பான் அவள் அழைப்பு வந்தாலே இலகுவாக அந்த நாற்காலியில் சாய்ந்து விழிமூடி கொள்வான் அவள் குரல் அவனுக்கு அப்படியொரு இதத்தை தரும் அவள் தன்னை விசாரிப்பதை அவ்வளவு ரசிப்பான் காண்பிக்க மாட்டான்.
ஒரு நாள் அழைப்பு வரக் கால தாமதம் ஆனாலும் அலைபேசியை முறைத்து முறைத்து பார்த்திருப்பான் ஆனால் அழைக்கமாட்டான் இவர் என்ன டிஸைன்னே தெரியலையே என்று புலம்புவது முத்துப்பாண்டி தான்.
நேற்றெல்லாம் அவளுக்கு நேரமே இல்லை உறவுகள் கூடிவிட்டனர் அது எங்கே இது எங்கே இந்தச் சடங்கு அந்தச் சடங்கு என்று படுத்தி எடுத்தனர் அப்படியும் இரவு பத்துமணிக்கு அழைத்துவிட்டாள் மண்டபத்தில் சிவபாலனை காணாமல்.
எப்பொழுதும் போல முத்துதான் எடுத்தான் “இங்க தோட்டத்துல இருக்கோம் பிரியாமா” என்றுமட்டும் கூறி வைத்துவிட்டான் உடல் நிலை சரியில்லை என்று இவளிடம் சொல்லவும் இல்லை.
சிவபாலன் கண்டனமாகப் பார்க்க இவள் முறைத்து வைத்தாள், முத்துவிடம் சொல்லிப் பால் கொண்டுவரவைத்து குடிக்க வைத்தவள் மாத்திரையும் கொடுத்தாள்.
தந்தையிடம் விஷயத்தை இவள் பகிர அவர் உடனே மருத்துவமனை செல்லலாம் என்றார் வேண்டாம் கொஞ்சநேரம் நின்னுட்டு இறங்கிடுறேன் என்றுவிட்டான்.
“வெறும் ஜுரம்தான்” என்றான் அவளிடம் சீற்றமாக.
கொஞ்சநேரம் என்று நினைத்திருக்க நேரம் சென்றுகொண்டே இருந்தது சிறிது நேரம் அமர்ந்து நின்று என்று கடத்தினான் எரிச்சலாக வந்தது என்னடா இது என்று.
அவன் யார் காலிலும் விழவும் இல்லை பொதுவாகச் சபைக்கு வணக்கத்தைத் தெரிவித்துவிட்டான், சக்திப்ரியா சளைக்காமல் சிரித்த முகமாக அனைவரிடமும் ஆசி வாங்கினாள்.
“நீ மட்டும் வாங்குற கல்யாணமான அன்னைக்கே உன் புருஷன் உன்னை எல்லார் கால்லயும் தனியா விழ வெச்சிட்டார்” என்றார் சித்தி வனஜா.
“சிவா சக்தியைப் பிரிச்சு பாக்காதீங்க சித்தி சேர்த்து பாருங்க ரெண்டும் எப்போவும் ஒண்ணுதான்” என்றுவிட்டாள்.
மாத்திரை போட்டதில் ஜுரம் குறைந்திருந்தது, இவர்கள் சாப்பிட அமர முத்துப்பாண்டி ஓடி வந்துவிட்டான் யாரையுமே பக்கத்தில் விடவில்லை சிவபாலன் தன்னுடைய வாழ்விலே முதல்முறையாகப் பந்தியில் அமர்ந்திருந்தான்.
அவன் விழிகள் மனைவியைத் தழுகியது “அவர் என்னைக்கு பந்தியிலே உக்காந்து சாப்பிடுறாரோ அன்னைக்கு நானும் சாப்பிடுறேன்” என்று அன்று முத்துவிடம் சொன்னாளாம்.
அவனுக்கு இப்பொழுதும் அதே கேள்விதான் என்ன செய்தேன் இவளுக்கு நான் என்று.
அவனைப் பார்த்துப் புன்னகைத்தவள் “சாப்பிடுங்க முடியலைன்னா கொஞ்சமா சாப்பிடுங்க” என்றாள் அவன் ஒருவாய் உணவை எடுத்துக்கொண்டபிறகே அவள் உண்ண தொடங்கினாள் கொஞ்சமாகச் சாப்பிட்டான் அவளுக்காகப் பாயசமும் கொஞ்சம் சாப்பிட்டான்.
“ஏன் அம்மாச்சி இவன் முகம் ஏன் ஒருமாதிரி இருக்கு” என்றாள் கவிதா பவுனுதாயிடம்.
“பிடிக்காம கட்டிக்கிறது பின்ன ஈன்னு பல்லைகாமிச்சிட்டா இருப்பான் இல்லனாலும் அவன் முகம் எப்போ சிரிச்சிருக்கு” என்று நொடித்தார் அவர்.
மாப்பிளை வீட்டாரின் ஒட்டாத் தன்மை மாப்பிள்ளையின் ஒதுக்கம் என்று பூரணிக்கு சிறு சிறு குறைகள் இருந்தாலும் மகளின் சந்தோஷ முகம் அனைத்தையும் பின் தள்ளியது.
இங்கும் அங்குமாய் அலைச்சல் வேண்டாம் என்று நேரே மாப்பிள்ளையின் வீட்டிற்கு செல்ல முடிவு செய்து அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க “நீங்க எல்லாரும் வீட்டுக்குப் போங்க என் வீட்லதானே விளக்கேத்தனும் நாங்க ஒரத்தநாடு போறோம்” என்றான் சிவபாலன்.
அன்புக்கரசி அதிர்வோடு மகனைப் பார்த்தார் ரங்கசாமி அவனை நெருங்கி “இதுவும் உன்…” என்றவரை இடைமறித்தவன் “இது என் வீடு இல்ல அய்யா” என்றதோடு மகேந்திரனை பார்த்து “நீங்க ரெண்டு பேரும் வாங்க” என்றவன் அவனே வண்டியை எடுத்தான்.
சக்திப்ரியா பெற்றறோரை திரும்பிப் பார்க்க “பின்னாடியே வரோம் போடா” என்றார் பூரணி, அவளும் அவனுடன் சென்று வண்டியில் ஏறிக்கொள்ள முத்து மண்டபத்தில் நின்றுகொண்டான் காலிசெய்ய வேண்டுமே வேலைகள் இருந்தது.
பவுனுத்தாயி கவிதாவை பார்த்து “என்னடி இது காலத்துக்கும் அவளோட வாழப்போற மாதிரி அவன் வீட்டில போய் விளக்கு வைக்கச் சொல்லுறான்” என்று ஆராய்ச்சியாகப் பார்த்தார்.
“தெரியலையே அம்மாச்சி ஊரை ஏமாத்த இப்படி செய்றானா இல்ல அவ வீட்டு ஆளுங்களயா” என்றாள் அவளும் யோசனையாக.
மகேந்திரன் பூர்ணிமா, செல்வராஜ் குடும்பத்தோடு பின்னே சென்றனர் தென்னந்தோப்பின் அருகிலே இருந்தது வீடு தோப்பை விற்றுவிட்டதால் கம்பி வேலி போட்டிருந்தனர்.
அடக்கமான தோப்பு வீடு இரண்டு படுக்கை அறைகளோடு முன்னிலும் பின்னிலும் நிறைய இடம் இருக்க மரங்களுக்கும் செடிகளுக்கும் பஞ்சமில்லை வீட்டைத் திறந்து வைத்துக்கொண்டு ஆரத்தியோடு காத்திருந்தார் ஒரு நடுத்தர வயது பெண்மணி.
“இவங்க தான் வீட்டைப் பாத்துக்கறது” என்றான் சக்திரியாவிடம்.
“ஹ்ம்ம்” என்று கேட்டுக்கொண்டாள்.
ஹாலின் ஒருபக்கம் மிகசிரிய அளவில் இருந்தது அந்தச் சாமி அறை படங்களுக்குப் பூக்கள் போடப்பட்டிருக்க விளக்கும் தயாராக இருந்தது விளக்கேற்றி விழுந்து கும்பிட்டாள் சக்திப்ரியா, ஹாலில் பெரிதாக மாட்டப்பட்டிருந்தது அவனின் பாட்டி செங்கமலத்தின் புகைப்படம் அதன் முன் அவன் நின்றிருக்க அங்கும் விழுந்து தொழுதுகொண்டாள் அவள்.
அந்தப் பெண்மணியே பால் பழம் கொண்டுவர அவன் எடுத்துக்கொண்டு மீதியை அவளுக்குக் கொடுத்து முடித்துக்கொண்டன் யாருக்கும் ஊட்டிவிடும் வாய்ப்பையெல்லாம் தரவில்லை.
அடுத்து என்ன என்பதாக ஒருவரை ஒருவர் பார்த்தனர் இரவுச் சடங்கு இருக்கிறது என்ன செய்வது யாரை கேட்பது இங்குதானா இல்லை பெரிய வீட்டிற்கு செல்வானா ஒன்றும் புரியாமல் நின்றனர்.
“கொஞ்ச நேரத்துல வீட்டுக்குக் கிளம்பிடுவோம்” என்றான் அவர்கள் தயக்கம் புரிந்து.
பூரணி மகளின் அருகில் வர “நான் பாத்துகுறேன்மா நீங்கக் கிளம்புங்க” என்றுவிட்டாள், என்னவோ தனியாகப் போய்த் தாலிகட்டி வந்தவர்களைப் போல யாரும் இல்லாமல் விட்டுச் செல்வது அவருக்கு மனதுக்கு ஒப்பவில்லை.
“எனக்கு இங்க ஒரு பிரச்சனையும் இல்ல நான் பாத்துக்குறேன்” என்றாள் மீண்டும் மனதே இல்லாமல் கிளம்பி சென்றனர் அவர்கள்.
“ரெஸ்ட் எடுத்துக்கோ” என்றவன் பக்கத்துக்கு அறைக்குள் சென்று படுத்துவிட்டான் உடல் ஓய்வுக்கு கெஞ்சியது இரண்டு நாட்களாக உணவே இல்லை அதோடு இந்த ஜுரம் வேறு எப்படி நடமாடுகின்றன என்று அவனுக்கே தெரியவில்லை.
பந்தியில் மட்டுமில்லை அந்த வீட்டிலும் அவன் உணவருந்துவதில்லை இன்றுவரைக்கும் கூட அவனுக்கும் முத்துவிற்கும் வெளியிலிருந்து வாங்கும் உணவு தான் ஒரு காப்பி டீக்கூட அந்த வீட்டில் குடிக்கமாட்டான்.
மாலை கடந்து இரவும் நெருங்க முத்து வந்திருந்தான் உணவோடு அதுவரையிலும் சிவபாலன் நல்ல உறக்கம் சக்திப்ரியாவும் அப்படியே ஹாலில் ஒரு ஓரமாகப் படுத்துவிட்டாள் இடையில் அவனைச் சென்று பார்த்துவந்தாள் ஜுரம் மீண்டும் வந்திருந்தது.
“ஹாஸ்ப்பிட்டல் போக வேண்டும்” என்று அவள் அழைத்தபோது “முத்து வந்ததும் சொல்லு” என்று அவளை அனுப்பிவிட்டான்.
அவன் கோபத்தையும் எரிச்சலையும் பொருட்படுத்தாமல் அவனை எழுப்பி இட்லியை அவனுக்குக் கொடுத்தாள் தலையில் நன்றாக நீர் கோர்த்திருக்க மண்டை வெடிப்பதை போல இருந்தது அவனுக்கு.
“வாங்க ஹாஸ்ப்பிட்டல் போகலாம்” என்றவளிடம் “எனக்குத் தெரியும் நானே போய்ப்பேன்” என்றவன் “நீ கிளம்பு உன்னை வீட்டில விட்டுட்டு போறேன்” என்றான்.
அவனை முறைத்துக்கொண்டு நின்றிருந்தாள் அவள் ‘இவ்ளோ ஜுரத்திலயும் வீம்பு குறையுதா பாரு’ என்று ஆயாசமாக வந்தது, சட்டென்று அவன் எழப் பார்க்கச் சாப்பிட்ட அனைத்தும் வெளியில் வந்திருந்தது.
“ஐயோ அண்ணே” என்று முத்து பதறி வந்து அவனைப் பிடிக்க அதற்குள் அவளும் மறுபக்கம் பிடித்தாள்.
“பச் போ” என்று அவளைத் தள்ளிவிட்டான்.
“அண்ணா நீங்க அவரைக் கூட்டிட்டு போய் வாஷ் பண்ண ஹெல்ப் பண்ணுங்க இங்க நான் பாத்துக்குறேன்” என்றவள் தண்ணீர் பிடித்துகொண்டுவர.
“நீ இரு பிரியாம்மா நான் செய்றேன்” என்றான் முத்து அவசரமாக.
“அச்சோ நீங்கப் போங்க ப்ளீஸ்” என்றவள் சுத்தம் செய்யத் தொடங்கினாள், வேறு மாற்றுடையை கொண்டுவந்து அவனுக்குக் கொடுத்து அவனைப் பாத்ரூமில் விட்டான் முத்து.
வீட்டிற்குள் குளியலறை இல்லை பின்னால் தோட்டத்தில் இருந்தது முத்து அங்கேயே காத்திருந்தான் அவனுக்காக, இவனானால் குளித்தே வந்துவிட்டான் முத்து தலையில் அடித்துக்கொண்டான் “ஏன்னா இப்படி செய்றீங்க” என்றான்.
இருவரும் உள்ளே வரக் காலையில் கட்டிய கல்யாணபுடவையை இடுப்பில் இழுத்து சொருகிக்கொண்டு வேர்க்க விறுவிறுக்க அந்த அறையைத் துடைத்து முடித்திருந்தாள் சக்திப்ரியா.
பார்த்தவனுக்கு என்னவோ போலானது அவனுக்காக யாரையுமே அவன் வேலை செய்ய விட்டதில்லை தன்னுடன் வந்த முதல் நாளே அவளை என்ன செய்ய வைத்திருக்கிறோம் என்று சங்கடமானது அது கோபமாகவும் எரிச்சலாகவும் மாறியது.
“உன்னை யாரு செய்யச் சொன்னா இதெல்லாம்” என்று எரிந்துவிழுந்தான்.
“நான் என் புருஷனுக்காகச் செய்தேன் உங்களுக்கு என்ன” என்றாள் அவள்.
அவன் மீண்டும் சோபாவில் சென்று அமர்ந்துகொள்ள அவள் விழிகள் சுற்றிலும் ஆராய்ந்தது பூரணி அவளிடம் சொல்லியிருந்தார் “நைட் இங்கேயே தாங்குறீங்களா என்னனு தெரியல எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு பேக் கொண்டு வந்தேன் உன்னோட டிரஸ் இருக்கு” என்று வைத்துவிட்டு சென்றிருந்தார்.
அதிலிருந்து உடையை எடுத்தவள் வேகமாகக் குளித்துவிட்டு வந்து அவனோடு மல்லுக்கட்டி அவனை ஹாஸ்ப்பிட்டல் கிளப்பினாள் இவள் சென்று ஓட்டுநர் இருக்கையில் அமர அவளை விழி விரித்துப் பார்த்த முத்து “பிரியாமா உனக்கு இதை ஓட்டத் தெரியுமா” என்றான்.
சிவபாலனும் கேள்வியாக அவளைப் பார்க்க “ஓட்டத் தெரியுமாவா டிரக்கே ஓட்டுவேன் லைசென்ஸ் இருக்கு” என்றாள்.
முத்து அவளை மெச்சுதலாகப் பார்த்துவிட்டுப் பின்னில் ஏறிக்கொண்டான் சிவபாலனும் ஒன்றும் சொல்லாமல் ஏறி அமர்ந்துகொண்டான், மருத்துவமனையில் முத்துவையும் அவளையும் நிற்க வைத்துக் காய்ச்சி எடுத்தார் மருத்துவர் அடக்கமாக நின்று கேட்டுக்கொண்டனர்.
“இன்னைக்கு நைட் இங்கயே இருக்கட்டும் காலைல பாத்துட்டு போகலாம்” என்றார் அதற்கும் அமைதியாகத் தலையை ஆட்டிக்கொண்டனர் இருவரும்.
தனி அறையில் படுத்திருந்தான் சிவபாலன் நல்ல உறக்கம் மருந்து கொடுத்து இன்ஜெக்க்ஷன் போட்டிருந்தனர் இப்பொழுது குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது முத்து வெளியில் அமர்ந்துகொண்டான்.
அவன் அருகில் இருக்கையை இழுத்து போட்டவள் அவன் விரல்களைக் கோர்த்துக்கொண்டு அப்படியே தன் கன்னத்தில் பதித்துக்கொண்டாள், அவனை இத்தனை அருகில் பார்க்கப் பார்க்க உள்ளம் நெகிழ்ந்தது விழிகள் கலங்கியது.
அவன் மார்பில் முகம் புதைத்துக் கட்டிக்கொண்டு உறங்க ஏங்கியது மனம் மெல்ல அவன் புருவத்தை நீவிவிட்டாள் அவன் அதைச் செய்யும்போதெல்லாம் ஆசையாக இருக்கும் ஒருமுறை அவன் கையைச் சிறைப்படுத்திவிட்டு தானே அதைச் செய்ய வேண்டும் என்று, இன்று ஆசைதீர செய்தாள்.
மெல்ல எழுந்தவள் நெற்றியில் புரண்ட முடிக்கற்றைகளை ஒதுக்கி அவன் நெற்றியில் அழுத்தமான முத்தம் பதித்தாள் அவன் கன்னத்தில் மீசையில் அந்தத் தாடியில் என்று தன் முத்திரையைப் பதித்தவள் “லவ் யூ” என்றாள் அவன் செவியில்.
அவள் கரங்களில் சிறைப்பட்டிருந்த அவன் விரல்கள் அழுத்தம் கூட்டியது அமைதியாக அவனுடைய கட்டிலிலே தலை சாய்த்துக்கொண்டாள் சக்திப்ரியா.
error: Content is protected !!