Skip to content
Post Views: 5,847
உணவை முடித்து இருவருமே சென்றுவிட அனைத்தையும் எடுத்துவைத்தவள் தந்தைக்கு அழைத்தாள் “அப்பா எல்லாம் வாங்கிட்டீங்களா” என்க.
“முக்காவாசி முடிஞ்சுது பாப்பா உனக்கு எதுவும் யோசனை இருந்தா சொல்லுடா அதையும் பாக்கலாம்” என்றார்.
Advertisement
“அதுக்குதான் கால் பண்ணேன் ஒரு நாலு பேர் உக்காருற மாதிரி அடக்கமா டைனிங் டேபிள் ஒன்னு வேணும் அப்புறம் சாமான் எல்லாம் வைக்க ஒரு ஷெல்ப் வேணும்ப்பா” என்றாள்.
Advertisement
Advertisement
“சரிடா வாங்கிடலாம் டைனிங் டேபிள் நான் போட்டோ அனுப்புறேன் நீ பாத்துட்டு சொல்லு எந்த மாடல் வேணும்னு வாங்கிடலாம்” என்றார் மகேந்திரன்.
Advertisement
மாலை வந்து மாவரைத்துவிட்டு இரவுணவை பார்க்கலாம் என்று எண்ணியவள் மேலே சென்று பெட்டிகளை அடுக்கத் தொடங்கினாள் பாதிதான் முடிந்தது மீதியை ஓரமாக வைத்துவிட்டு பார்லருக்கு வீடியோ கால் அழைப்பு விடுத்து என்ன நடக்கிறது என்று கேட்டுக்கொண்டாள்.
மாலைபோலக் கீழே வந்து மாவை அரைத்துவிட்டு இரவுக்கு எளிமையாகவே செய்ய நினைத்தால் இடியப்பம் பிழிந்து தேங்காய் பால் எடுத்துவைத்தவளுக்கு இது அவர்களுக்குப் போதுமாக இருக்குமா என்ற சந்தேகம் வர மீண்டும் மாவை குழைத்து இன்னும் கொஞ்சம் பிழிந்து வைத்தாள்.
“அவன் எப்போ வருவான் தெரியாது டா நீ சாப்பிடு” என்றார் அன்புக்கரசி.
“பரவாயில்ல அத்த நானும் பார்லர் போக ஆரம்பிச்சிட்டா இப்படிலாம் என்னாலயும் நேரம் ஒதுக்க முடியாது இருக்கும்போது அவர்கூட சாப்பிடுறேன்” என்க அவருக்கு மனதிற்கு அத்தனை நிறைவுதான்.
பொதுவாக இரவு நேரம் கடந்துவிட்டால் முத்துவோடு மில்லில் படுத்துவிடுவான் வீட்டில் உறங்குவதே அபூர்வம்தாம் அதிலும் வெளிப்பக்கம் வாசல் வைத்துக்கொண்டபிறகு அவன் வருவதும் போவதும்கூட அன்புக்கரசிக்கு தெரியாது.
இன்று மருமகள் அமர்ந்திருக்க எப்படி வாசல் கதவை அடைக்க என்று அவர் தயங்கி நின்றார், அவள் அதைப் பற்றி யோசனை செய்திருக்கவில்லை.
“என்ன அத்த” என்றாள் அவரிடம்.
“ஒண்ணுமில்ல” என்றவர் அவளுடனே அமர.
“நேரமாச்சே நீங்கப் போய்ப் படுங்க நான் பாத்துக்குறேன்” என்றாள் அவர் அப்படியே இருக்க பிறகுதான் அவளுக்குப் புரிந்தது.
“ஓஹ் சாரி அத்த நான் யோசிக்கல இருங்க” என்றவள் உள்ளே சென்று தட்டு தண்ணீர் உணவு அனைத்தையும் எடுத்துவந்து முன்னில் இருந்த வேப்பமரத்தின் கீழே விரிக்கப்பட்டிருந்த பாயில் அடுக்கினாள்.
“கதவைச் சாத்திடுங்க” என்றவள் வாசல் படியில் அமர்ந்துகொள்ள அவள் தலை வருடிவிட்டவர் உறங்கச் சென்றார் மெல்ல பின்னில் வாயில் அடைபடும் ஓசை கேட்டது சிரித்துக்கொண்டாள்.
இவள் வாசல் படியில் அமர்ந்து காத்திருந்தாள் நேரம் பத்தரையை கடக்க இருவரும் வந்து சேர்ந்தனர் அவளையே பார்த்துக்கொண்டு வந்த சிவபாலன் அடைபட்டிருந்த வாசல் கதவையும் பார்த்துக்கொண்டே அறைநோக்கி நகர்ந்தான்.
“அடடே நிலா சோறா” என்றான் முத்து.
“இல்ல நிலா இடியாப்பம்” என்றாள் அவள்.
“அதுசரி” என்றவன் ஒருபக்கம் அமர்ந்துகொள்ள “ஏண்ணா ஏன் இப்படி மில்லுல தூங்குறீங்க ஒரு வீடு பார்த்து இருக்கலாம்ல நாளைக்கே கல்யாணம் ஆச்சுன்னா ஒரு வீடு வேண்டாமா” என்றாள்.
“கல்யாணம் ஆனாதான” என்றான் அவன் எங்கோ பார்த்துக்கொண்டு.
“ஏன் கல்யாணம் ஆகாது” என்றாள் வேகமாக.
“பிரியாமா நான் ஒரு அனாதை” என்றவனின் கையிலே கரண்டியால் ஓங்கி ஒன்று போட்டாள் அவள்.
“ஆத்தீ” என்று துள்ளியவன் “சரி சரி அப்பன் ஆத்தா யாருன்னு தெரியாதவன் என்ன ஜாதி எதுவும் தெரியாது வீடு வாசல் கிடையாது எனக்கு யாரு பொண்ணுகுடுப்பா” என்றான்.
“பொண்ணெல்லாம் மஹி பாத்து கொடுப்பார் நீங்க வீட்டைப் பத்தி பேசுங்க” என்றாள்.
“அண்ணே என் பேர்ல ஒரு இடம் வாங்கி போட்டிருக்கு அங்க ஒரத்தநாட்டுல வீடு இருக்குல்ல அதுக்கு பின்னாடி கொஞ்சம் தள்ளி, என்கிட்டே சொன்னுச்சு சின்னதா ஒரு ரூம் வெச்சு ஒரு வீடு கட்டிக்கோ அங்கேயே தங்கிக்கோன்னு எனக்குதான் பிடிக்கல அங்க போய் ஒத்தையில கிடக்குறதுக்கு இங்கேயே பழகிடுச்சு” என்றான்.
அவள் ஒன்றும் சொல்லவில்லை யோசனை மட்டும் ஓடியது சிவபாலனும் குளித்து வந்திருக்க சாப்பிட அமர்ந்தனர் வைக்க வைக்கக் கணக்கு இல்லாமல் இடியாப்பம் சென்றுகொண்டே இருந்தது, முத்து கிளம்பிவிட இவள் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு பின்பக்கம் சென்று கழுகி வைத்துவிட்டு திரும்பி வரக் கணவன் அங்கே நடை பயின்றுகொண்டிருந்தான்.
இவள் அவனைப் பார்த்து நிற்க “இப்போதான் சாப்பிட்டேன் அதும் நிறைய கொஞ்ச நேரம் கழிச்சு வரேன் நீ போய்த் தூங்கு” என்றான் அவளும் படியேறி மேலே சென்றவள் கட்டிலில் உள்ளே சென்று படுத்துவிட்டாள்.
நேற்று இரவும் உறக்கம் இல்லையே சிறிது நேரத்திலே நன்றாக உறங்கிவிட்டாள், அரைமணி நேரம் சென்று வந்தவன் பார்க்க ஒய்யாரமாகக் கட்டிலில் படுத்திருந்தாள் அவன் மனைவி.
கீழே படுப்பாள் இல்லை எங்கே படுக்க என்று கேட்கத் தனக்காகக் காத்திருப்பாள் என்றெல்லாம் எண்ணிக்கொண்டு இவன் வர அதெல்லாம் உன்பாடு என்பதாக ஒருகாலை நீட்டி ஒருகாலை எல் போல வளைத்துவைத்து ஒரு கையைக் கன்னத்திற்கும் தலைக்கும் சேர்த்து கொடுத்து மற்றய கையால் தலையணையை இருக்க பிடித்துக் குப்புற படுத்திருந்தாள்.
‘என்ன போஸ் இது’ என்று பார்த்தவன் ‘எப்படி இப்படி தூங்குறா’ என்று யோச்சித்தான் ஆனால் அவளுக்கு அதுதான் மிகவும் வசதியான போஸ்.
ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் படுத்திருக்குற விதமே சரியில்லையே எட்டி உதைப்பாளோ என்று யோசித்து நின்றான் கீழே படுக்கலாம் என்று யோசித்தவனுக்கு அதைச் செய்ய விருப்பமில்லை, அமைதியாகவே அவளைப் பார்த்தபோலப் படுத்திருந்தவன் மெல்ல உறங்கத் தொடங்கினான்.
காலையிலே தன் கோபத்தை கொட்ட தொடங்கியிருந்தார் பவுனுத்தாயி “இத்தனை வருஷத்துல இந்த வீட்டில இப்படி ஒன்னு நடந்ததே இல்ல வந்த ரெண்டாம் நாளே தனியா சமையல் செய்ய ஆரம்பிச்சிட்டா என் வீட்டிலேயே ரெண்டு சமையல்”.
“ஏன் கதிர் பொண்டாட்டிகூடத்தான் வந்திருக்கா அவ ஒழுங்கா இல்ல உன் மறுமவவளுக்கு மட்டும் என்ன” என்று அன்புக்கரசியிடம் காலைலே சண்டைக்கு நின்றார்.
கதிருக்கு மனைவியாக வந்தவள் இந்த வீட்டில் துரும்பை கூடக் கிள்ளி போடுவதில்லை இந்த வீட்டின் மகராசி கவிதா மட்டும் என்ன செய்கிறாள் அதையெல்லாம் கேட்கவா முடியும்.
“பாலன் இங்க சாப்பிடுறது இல்லையே பெரியம்மா வெளிலதானே சாப்பாடு வந்த பிள்ளையும் அப்படி சாப்பிட முடியுமா அதான் இங்க சமைக்கிறா” என்றார் அன்பு.
“நல்லா இருக்குடியம்மா உன் கதை அதுக்கு என் வீட்டு சாமானை எடுத்து என் வீட்டிலேயே ரெண்டு அடுப்பு பத்த வைப்பாளா” என்றார் பவுனுத்தாயி.
“நீங்கச் சொன்ன ரெண்டுமே தப்பு பாட்டி ரெண்டு அடுப்பு இல்ல ஒரே அடுப்புல எனக்கு நேரம் இருக்கும்போது நான் சமைக்கிறேன், அப்புறம் உங்க வீட்டு பொருள் இல்ல எங்க பொருள் நேத்து வெச்ச காரட் பாயசம் முதல் இப்போ நான் குடிக்கிற டீ வரைக்கும் என் அப்பா காசுல வாங்குன பொருள்தான்”.
“முதல்ல என் அப்பா அம்மா வாங்கி தராங்க அடுத்த மாசத்துல இருந்து என் புருஷன் வாங்கி தருவார், ஆனா பாருங்க அவர் தனியா வாங்கி தரவே வேண்டாம் ஏன்னா மாசம் மாசம் இந்த வீட்டுக்கு காசையும் குடுக்குறாரே”.
“வீட்டில சாப்பிடுறதும் இல்ல ஆனா இதெல்லாம் பேசினா உடனே மூக்கு மேல கோவம் வந்திருது, என் வீட்டுக்கு நான் செய்றேன் நீ என்ன கேள்வி கேக்குறன்னு பாயுறாரு, யாரை சொல்ல நீங்க ஒழுங்கா பிள்ளையை வளர்க்கல அத்த… கட்டிட்டு வந்த அன்னைக்கே எவ்ளோ பேச்சு” என்று காதைக் குடைந்து கொண்டே அடுப்படிக்கு நடந்தாள் சக்திப்ரியா.
“இவ இப்போ நம்மள குறை சொல்றாளா அவனைக் குறை சொல்றாளா இல்ல இவ அத்தையை குறை சொல்றாளா” என்று விழித்தனர் மூவரும்.
இவள் அதிகாலையே எழுந்து சாம்பார் வைத்துவிட்டு பூண்டு குழம்புக்கு அனைத்தையும் தயார் செய்துவைத்து விட்டுக் குளிக்கச் சென்றிருந்தாள், அவளைப் பார்த்தவர்கள் அவள் இப்பொழுதுதான் எழுந்து குளித்து வருவதாக நினைத்துக்கொண்டனர்.
காலையிலே பால் காய்ச்ச அடுப்படி சென்ற அன்புக்கரசி அறிந்துகொண்டார் மருமகள் எழுந்துவிட்டாள் என்று முதல் நாள் மருத்துவமனையில் போயிற்று நேற்றும் அவர்களுக்குள் இணக்கம் வந்ததாகத் தெரியவில்லையே என்ற சிந்தனைதான் அவருக்கு.
மகனுக்குக் குற்றவுணர்ச்சியோ இந்தப் பெண்ணை இவர்களுக்காகத் தான் கட்டினானா அப்படி கட்டியிருந்தால் ஏன் ஒரத்தநாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும், இன்றுவரை அன்புக்கரசியை கூட அவன் அழைத்துச் சென்றதில்லை.
நேற்று மதியம் அவர்கள் ஒன்றாக உணவருந்தியபோதும் பிடிக்காமல் செய்துகொண்டதாகத் தெரியவில்லை மருமகளுக்கு மகனை மிகவும் பிடிக்கும் அது அவருக்கும் நன்றாகவே தெரிந்தது மகன் முடிவு என்ன என்ற பெரும் குழப்பம் அவருள்.
இவர்களோடு வெட்டிக்கதை பேச அவளுக்கு நேரமில்லை இட்லியை ஊற்றி வைத்தவள் சாதத்திற்கு வைத்துக் குழம்பும் கோஸ் பொரியலும் அப்பலமும் பொரித்து வைத்தாள்.
நின்று நிதானமாகச் சமைக்க நேரமில்லை பத்துமணி போல மகேந்திரன் பொருட்களைக் கொண்டு வருவதாகச் சொல்லியிருந்தார் முத்துவிடம் காலையே அழைத்துச் சொல்லியிருந்தாள் கொஞ்சம் வேலை இருக்கு முத்தண்ணா வீட்டில இன்னைக்கு உங்க அண்ணா கிட்ட சொல்லி லீவ் போடுங்க என்றிருந்தாள்.
ஆகையால் காலை வந்தவன் உண்டு முடித்து இங்கேயே நின்றுகொண்டான் நல்ல விசாலமான அடுப்படி அதன் ஒரு மூலையில் மர ஷெல்ப்பை வைத்து இவளுக்கென்று வாங்கிய பொருட்களை அடுக்கினாள் அந்தப் பக்க இடத்தையும் அன்புக்கரசி ஒழித்துக் கொடுக்க இவள் தாராளமாக அடுக்கிக்கொண்டாள்.
அடுப்படியை ஒட்டிக் கிடந்த வெளி வராண்டாவில் அந்தச் சின்ன உணவு மேசையைப் போட்டுவிட்டாள் யாருக்காவும் யாரும் காத்திருக்க வேண்டாம் இன்று காலையே இவர்கள் அனைவரும் சாப்பிட்டு செல்லும்வரைக்கும் சிவபாலன் அறையிலே காத்திருந்தான் சாப்பிட வராமல், அது அவனுக்கு ஒருவித எரிச்சலையும் ஏற்படுத்தியது அவன் கிளம்பி அவன் பாட்டிற்கு சென்றுவிடுவான் இன்று இவள்தான் பிடித்துவைத்திருந்தாள்.
“ஏன் அண்ணி அவங்களுக்குள்ள முன்னாடியே பழக்கம் இருக்குமோ” என்றாள் ஷர்மி கவிதாவிடம்.
“எப்படி சொல்ற” என்றாள் அவள்.
“இல்ல இந்த ப்ரியா நடந்துக்குறதை பார்த்தா உங்க பெரிய தம்பிகிட்ட புதுசா பேசுற மாதிரியே இல்ல ரொம்ப உரிமையா பேசுறா நடத்துக்குறா அவரும் கொஞ்சம் விட்டுக் குடுக்குற மாதிரி…” என்று இவள் இழுக்க.
கவிதாவும் பவுனுத்தாயும் அர்த்தமாகப் பார்த்துக்கொண்டனர் ஒருவேளை அவளை நம்ப வைக்க அவள் இஷ்டத்துக்கு துள்ளுறானோ என்று இருவரும் ஒரேபோலவே யோசித்தனர்.
“தெரியல” என்றாள் கவிதா.
“அதில்ல அண்ணி இவ்ளோ வருஷமா அவர் இந்த வீட்டில சாப்பிட்டதே இல்லன்னு நீங்கச் சொன்னீங்க ஆனா வந்த ரெண்டாவது நாளே அவ சமைச்சதை சாப்பிட வெச்சுட்டாளே அது எப்படி முடியும்” என்றாள் இவள்.
இங்கே மாநாடு நடந்துகொண்டிருக்க அங்கே உதவிக்கு நின்றிருக்கும் பெண்ணோடு சேர்ந்து மதிய சமையல் செய்துகொண்டிருந்தார் அன்புக்கரசி இந்த வீட்டில் யார் வந்தால் என்ன போனால் என்ன அவர் வேலை நடந்துகொண்டுதான் இருக்கும்.
மதியம் இவர்கள் அனைவருமே நேரம் கடந்தே சாப்பிட அமர்ந்திருக்க சிவபாலன் உணவருந்த வந்தான், இவர்களைப் பார்த்ததும் அவன் திரும்ப எத்தனிக்க.
“வாங்க ஏன் இவ்ளோ நேரம்” என்று அவன் அருகில் வந்தவள் சிவபாலன் கையைப் பிடித்துக்கொண்டு அழைத்துபோனாள் உணவு மேசையைக் கடந்து அவள் அழைத்துச்செல்ல புருவங்கள் இடுங்க அவளைப் பார்த்தான் அவன்.
பின்னால் அழைத்துச்சென்று காண்பிக்க வரான்டாவின் ஒரு பக்கம் டைனிங் டேபிள் போட்டு மூங்கில் தடுப்பு போடப்பட்டிருந்தது மழை வந்தால் காப்பதற்காக இப்பொழுது மேலேற்றி கட்டி வைத்திருந்தனர்.
அவன் கேள்வியாகப் பார்க்க “யாரும் யாருக்கும் பாத்துட்டு நிக்க வேண்டாம் நாம ஓடி ஓடி உழைக்கிறதே இந்தச் சாப்பாட்டுக்குத்தான் அதை நிம்மதியா ரசிச்சு ருசிச்சு சாப்பிடணும் எங்க சாப்பிட்டா என்ன” என்று நியாயம் பேசினாள்.
அவன் ஒன்றும் சொல்லவில்லை “சமையல் பொருள்னுதானே சொன்னார் உங்க அப்பா இதெல்லாம் என்ன ஏன், நான் வாங்கி போட மாட்டேன்னா அவர்கிட்ட ஏன் கேட்ட” என்று முறைத்தான்.
“இங்க பாருங்க மஹி எனக்குச் செய்றார் நீங்க உங்க பிள்ளைகளுக்குச் செய்ங்க, ஆறுல நாலு பொம்பள பிள்ளை ரெண்டு ஆம்பள பிள்ளை நாலு பேருக்குச் சீர் நகை நட்டுன்னு எவ்ளோ செய்யணும் அதையெல்லாம் நீங்கப் பாத்துக்கோங்க” என்றதும் சாப்பிட்டுக்கொண்டிருந்தவனுக்கு புரை ஏறியது.
சிரித்தால் அடிவிழுமோ என்ற பயத்தில் அந்தப் பக்கம் திரும்பி அமர்ந்து வாயில் சோற்றை அடைத்தான் முத்து, சிவபாலன் அவளை உக்கிரமாக முறைத்து முத்துவை கண் காண்பிக்க.
“உனக்கு என்னண்ணா சிரிப்பு வேண்டிக்கிடக்கு ஆறு பிள்ளைகளுக்குத் தாய் மாமன் சீர் நீதான் செய்யணும் உன் தலையை அடகு வைப்பியோ இல்ல உன்னையே அடகு வைப்பியோ அது உன் பாடு” என்க இப்பொழுது விக்குவது அவன் முறையானது, அவசரமாக உணவை விழுங்கியவன் வேகமாக அங்கிருந்து ஓடினான்.
சிவபாலன் உண்டு முடித்து எழ அவனோடே எழுந்தவள் இடையோடு கையிட்டு தன்னை நோக்கி இழுத்தவன் அவள் விழிகளை ஆழ்ந்து பார்த்து “ஆறு புள்ள தாங்குவியாடி நீ… முதல்ல என்னைத் தாங்குவியா” என்றான்.
அவனைச் சளைக்காமல் பார்த்தவள் “அதை நீங்கதானே சோதிச்சு பாக்கணும்” என்றாள்.
“எனக்கு உன்மேல காதல் இல்ல” என்றான்.
“பரவாயில்ல எனக்கு உங்கமேல நிறைய இருக்கு” என்றாள்.
“காமம் மட்டும் இருந்தா போதுமா உனக்கு” என்றவனை பார்த்தவள் “காமம் மட்டும் இருக்குற ஆம்பிள நேத்து கிடைச்ச தனிமையை வீணாக்கியிருக்க மாட்டான்” என்றவள்.
அவன் விழிகளை ஊடுருவி “உங்களுக்கு என்னைப் பிடிக்கும் ஆனா சொல்ல மனசு வரல அதைச் சொல்லாம என்னை நீங்கத் தொட மாட்டீங்க அதுவும் எனக்குத் தெரியும்” என்றவளை உண்மையிலே கொஞ்சம் ஆச்சர்யமாகப் பார்த்தன் சிவபாலன்.
“சொல்லுங்க… அன்னைக்கு உங்களைப் பிச்சி பிச்சி மிச்சம் வெக்காம முழுங்கிடுறேன்” என்றவளை அதற்குமேல் அருகில் நிறுத்தமுடியாமல் வெட்கம் அவனிடம் ஒட்டிக்கொள்ள அதை அவளுக்கு மறைத்துக்கொண்டு விலகி நடந்தான்.
error: Content is protected !!