Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

யாரோ!யாரோடி!! -2

 

அத்தியாயம்-2

கார்த்திக் முகம் முழுவதும் புன்னகையும் மனம் முழுவதும் பரவசமுமாய் தன் காரை நோக்கி நடந்தான்.

அவனுக்கு கால் தரையில் பாவவில்லை.. அப்படியே வானத்தில் பறப்பதுபோல் இருந்தது. மீண்டும் விடலைப் பருவத்திற்கே போனது போல் உணர்ந்தான்..



Advertisement

ஒரு கையை மேலே உயர்த்தி காற்றில் எம்பி குதித்து “ஐ லவ் ஹெர்..” என்று அந்த மலைகளில் எதிரொலிக்க கூவினான்.

அதேசமயம் தன் அசட்டுத்தனத்தை நினைத்து வாய்விட்டு சிரித்துக்கொண்டான்.

எப்படி ஒரே நாளில் என்னை இப்படி தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது இந்த காதல்..!!

Advertisement

அவன் இப்படி பைத்தியக்காரன் போல நடுரோட்டில் நின்று கத்துவான் என்று காலையில் யாரேனும் சொல்லி இருந்தால் கூட அவர்களை கேலி பேசி சிரித்திருப்பான்..

Advertisement

ஆனால் அப்படி ஒரு ‘லவ்சிக் பப்பி’யாக அரை நாளில் அவனை மாற்றியிருந்தாள் அவள்… மித்ரா..

காலையில் வீட்டில் நடந்தது இப்போது கூட அவன் மனதில் படமாக ஓடியது.

“டேய் கார்த்திக்.. பொண்ணு ஃபோட்டோ அனுப்பியிருக்கேன்.. ஒரு தடவையாவது பாருடா..” என்று கெஞ்சிக்கொண்டிருந்தார் அவன் அப்பா சந்தானம்..

Advertisement

ஆனால் அவர் பேசுவது எதையும் கண்டுகொள்ளாமல், நாட்டு நடப்பை அறிவதுதான் தன் மிக முக்கிய கடமை என்பது போல் அன்றைய பேப்பரை ஒரு வரிவிடாமல் படித்துக்கொண்டிருந்தான் அவன்.

“சும்மா விடுங்க.. அவன் பார்க்காட்டி போறான்.. அவ என்னமோ ஊர்ல இல்லாத பேரழகி மாதிரி ஒரு மாசமா இப்ப அப்பன்னு இழுத்தடிச்சிட்டு இருக்காங்க..” என்று தனது எதிர்ப்பை காட்டியபடி வந்து அவன் எதிரில் அமர்ந்தார் அவன் அம்மா திலகவதி.

அவன் அம்மாவின் விட்டேத்தியான குரலே அவனுக்கு கொஞ்சம் ஆர்வத்தைத் தூண்டியது.

எப்படியாவது அவனுக்கு ஒரு கல்யாணத்தை நடத்தி பார்த்துவிட்ட வேண்டும் என்று தவமாய் தவமிருக்கும் தன் அம்மாவே ஒரு பெண்ணை வேண்டாம் என்று சொல்லுவதென்றால் ‘எதோ தப்பா இருக்கே..’ என்று அவனது செவன்த் சென்ஸ் அவனை எச்சரித்தது..

“அப்பா.. அம்மாவுக்கு எதோ ஆயிடுச்சுன்னு நெனைக்கறேன்.. சீக்கிரம் டாக்டரைப் பாருங்க..” என்று குரலில் தீவிரம் காட்டியவன் அவன் அன்னை அறியாமல் தன் தந்தையைப்பார்த்து கண்ணடிக்க.. இருவரும் பக்கென்று சிரித்துவிட்டனர்..

அவர்கள் இருவரையும் முறைத்து பார்த்துவிட்டு..

“டேய்.. நான் நிஜமாதாண்டா சொல்றேன்.உன்னோட ஃபோட்டோ அனுப்பி ஒரு மாசம் ஆகுது.. எப்பக்கேட்டாலும் இன்னும் ஒரு வாரம் போகட்டும்னு நாள் கடத்திட்டே இருந்தாங்க.. இப்பதான் ஒருவழியா மனசு வந்து ஃபோட்டோ அனுப்பி இருக்காங்க.. பொண்ணு  பாக்க பரவாயில்லாமதான் இருக்கா ஆனா அதுக்காக ஒரு ஃபோட்டோ அனுப்புறதுக்கே இவ்ளோ பந்தா ஆகாதுப்பா..?” என்று உதட்டை சுளித்தார்.

அவள் என்ன அவ்வளவு  அழகா..? இவ்வளவு பில்டப் கொடுக்குற அந்தப்பெண் எப்படி இருப்பாள் என்று அறியும் ஆவல் அவனுக்கும் லேசாக எட்டிப்பார்த்தது.

“என்னங்க அந்த பொண்ணு வேண்டாம்ன்னு சொல்லிடுங்க..நாம வேற பொண்ணு பாக்கலாம். அப்படி இல்லையா இருக்கவே இருக்கா என் அண்ணன் பொண்ணு லீலாவதி.. அவளை நிச்சயம் பண்ணிடலாம்.. என்னடா சொல்ற கார்த்திக்.?” என்று அவனைப் பொறியில் சிக்கவைக்கப் பார்த்தார்.

‘ஒரு திலகவதிய கட்டிகிட்டு நான் படுறபாடு போதாதா.. இதுல லீலாவதிய கட்டிகிட்டு என் பையனும் படனுமா..?’ என்று மனதில் நினைத்ததை வெளியே சொல்லமுடியாமல்..

“ஏய் சும்மா இருடி.. உன் பையன் மட்டும் என்ன சளைச்சவனா.. எத்தனை பொண்ணுங்களை பார்க்காமலே ரிஜெக்ட் பண்ணியிருப்பான்..? எனக்கு என்னமோ இந்த இடம் சரியா வரும்னு தோணுது.” என்று மனைவிடம் கூறியவர் மகனிடம் திரும்பி..

“இங்க பாரு கார்த்திக்.. பொண்ணோட அப்பா இப்பதான் ஃபோன்ல பேசினாரு.. பொண்ணு எதோ கொடைக்கானல் போறாலாம் திரும்பி வந்ததும் பொண்ணு பாக்குற ஃபங்ஷன் வைச்சிக்கலாம்னு சொன்னாரு..” எனவும்..

“ஹலோ.. இங்க யாருக்கு கல்யாணம்..? நீங்களா பேசி முடிவு பண்ணிட்டு இருக்கீங்க..! உங்க இஷ்டத்துக்கு முடிவு பண்ண இது ஒன்னும் என் காதுகுத்து இல்ல.. கல்யாணம்.. இத நான்தான் முடிவு பண்ணுவேன்..” என்று உரிமைக்குரல் எழுப்பியவன்..

“அதெல்லாம் முடியாதுப்பா.. நான் ஊருக்குப்போயிட்டு வந்தா ரொம்ப பிஸி ஆகிடுவேன்.. அதனால பொண்ணு பார்க்க வர முடியாதுன்னு சொல்லிடுங்க..” உறுதியாக மறுத்துவிட்டான் மகன்.

“அப்படி சொல்லுடா என் செல்லக்குட்டி.. பாருங்க என் பையன் என் கட்சிதான்..” என்று அவன் அம்மா பெருமையடிக்க.

‘ஐயோ இவனுக்கு லீலாவதிதான்னு தலையில எழுதி இருக்கா..?’ என்று கவலையுடன் அவசரமாக யோசித்தவர்..

“சரிடா..நீயும் கொடைக்கானல்தான் போற அந்தப்பொண்ணும் அங்கதான் போறான்னு அவங்க அப்பா சொன்னாரு.. நீங்க அங்கயே மீட் பண்ணிக்க நான் ஏற்பாடு பண்றேன்.. என்ன சொல்ற..?” என்று விடாப்பிடியாகக் கேட்டார்..

அப்போதும் அவன் யோசிக்கவும்..

“இதுக்காவது ஒத்துக்கடா.. இல்லாட்டி உங்கம்மா லீலாவதி பத்மாவதின்னு யாரையாவது உன் தலையில கட்டிடுவா..” என்று அவன் காதில் கிசுகிசுத்தார்.

ஒரு கணம் மனக்கண்ணில் தோன்றிய காட்சியில் பதறினாலும்..

“சரி முயற்சி பண்றேன்.. ஆனா என்னால கேரண்டியா சொல்லமுடியாது..” என்று கெத்தைவிடாமலே தான் பதிலளித்தான்.

“ஓகே டா.. நானும் அவங்ககிட்ட பேசிட்டு சொல்றேன்.. நீ எதுக்கும் ஒருவாட்டி பொண்ணு ஃபோட்டோவ பார்த்துடு..” என்று விட்டு அவர் சென்றுவிட..

மொபைலை எடுத்துப் பார்க்கலாமா வேண்டாமா என்று அவன் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தபோது..

அவன் அருகில் வந்த திலகவதி..

“டே கண்ணா நீ பொண்ணு ஃபோட்டோவ பார்த்துட்டு பிடிக்கலைன்னு சொல்லிடு..” என்று ரகசியமாக அவன் காதில் சொல்லிவிட்டுபோனார்.

அவன் அம்மாவின் பாவனையில் சிரித்தவன்..

மொபைலை எடுத்து வேண்டுமென்றே அப்பா அனுப்பிய ஃபோட்டோவை மட்டும் பார்க்காமல் வேறு யார் யாரோ அனுப்பிய செய்திகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்திற்கு மேல் ஆர்வம் தாளாமல் எப்படித்தான் இருக்கிறாள் என்று பார்த்துவிடலாம் என்று அந்த போட்டோவை கிளிக் செய்தான்.

நீல வண்ணப் பட்டுப்புடவையில் அளவான ஒப்பனையில் பெண் பார்க்க நல்ல அழகாகத்தான் இருந்தாள்,எதோ கல்யாணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் போல இருந்தது.

திருத்தமான முகமும் கியூட்டான சிரிப்பும் அழகாக இருந்தது.. ஆனால் அதைவிட சிரிப்பில் பளபளத்த அவள் கண்கள்தான் அவனை வெகுவாக ஈர்த்தது..

அப்படியே கீழே அப்பா அனுப்பியிருந்த அவளது விவரங்களையும் பார்த்தான்

“மித்ரா..பி டெக்.. பேரு நல்லா தான் இருக்கு..” என்று இவன் நினைத்துக்கொண்டிருக்கும் போதே வெளியே கார் ஹாரன் சத்தம் கேட்டது.. கூடவே..

“கார்த்திக்.. வாடா..” என்று அவனது நண்பர்கள் கூச்சலும் சேர்ந்து ஒலிக்க..

“இருங்கடா வரேன்..” என்றபடியே தயாராக இருந்த தன் பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

கார்த்திக்..29 வயது இளைஞன்,வீட்டுக்கு ஒரே பையன், ராஜாவீட்டுக் கன்னுக்குட்டியாக இருந்தாலும் பொறுப்பில்லாமல் திரிபவன் இல்லை, சொந்தபந்தத்தில் சந்தானம் பையன் மாதிரி பொறுப்பா இருக்கனும் என்று இவனை உதாரணமாக காட்டி கூறுமளவுக்கு நல்லபிள்ளை.

நன்றாக படித்து, நல்ல வேலையில் நிறைய சம்பாதிக்கும் டிமாண்ட் அதிகமுள்ள மாப்பிள்ளை. ஆனால் என்ன காரணத்தினாலோ பார்க்கும் பெண்களை எல்லாம் தட்டிக்கழித்துக்கொண்டே இருந்தான்.

இன்று அவனது பள்ளி நண்பர்கள் எல்லாம் சொந்த ஊருக்கு வந்திருக்க எல்லோரும் சேர்ந்து கொடைக்கானல் டிரிப் சென்று கொண்டிருந்தனர்.

பாட்டுக்கச்சேரியுடன் அரட்டை கச்சேரியும் சேர்ந்து கொள்ள கிளம்பியதுமே களைகட்டியது பயணம்,

பேச்சுவாக்கில் கல்யாணப்பேச்சு அடிபட, அவர்கள் செட்டில் கல்யாணம் ஆகாதவர்களை பிடித்து கலாய்த்துக் கொண்டிருந்தனர். அதிலும் கார்த்திக்குக்கு சிறப்பு கவனிப்பாக இருந்தது.

“டேய் எப்படிபட்ட பொண்ணுதான்டா உனக்கு வேணும்..? சொல்லுடா ஊருக்குள்ள வாண்டட் போஸ்டர் ஒட்டியாவது கண்டுபுடிச்சி தரோம்..” என்று அவன் நண்பர்கள்  விளையாட்டாக கேட்க..

“டேய்..சும்மா எதோ ஒரு பொண்ணு இல்லடா .. வாழ்க்கை முழுக்க நம்ம கூட வரப்போறவ.. பார்த்ததும் இவதான் இவளேதான்னு அப்படி ஒரு ஃபீலிங் வரனும்டா.. அந்த மாதிரி ஒருத்திக்குதான் நான் வெயிட் பண்றேன்..”

ஃபீலிங்ஸா.. டேய் மச்சான் அதெல்லாம் அரேஞ்ச் மேரேஜ்ல கஷ்டம்டா.. லவ் தான் உனக்கு செட் ஆகும்..” என்றான் காரை ஓட்டிக்கொண்டிருந்த அவன் உயிர் நண்பன் முகிலன்.

“போடா.. நா போய் இனிமே ஒரு பொண்ண பார்த்து.. பேசி.. டேட் பண்ணி.. ப்ரபோஸ் பண்ணி.. வீட்ல சம்மதம் வாங்கி..யப்பா.. சொல்லும்போதே தலை சுத்துது.. இதெல்லாம் எனக்கு செட் ஆகாது..” என்று தோளை குலுக்கினான்.

“லவ் பண்றதுக்குக்கூட சோம்பேறித்தனப்படுற ஒருத்தன இப்பதான் டா பாக்குறேன்..”

“டே இப்ப நாம ஒரு பொண்ண லவ் பண்ணி அது நம்ம அப்பாம்மாவுக்கு புடிக்கலைன்னா? நாம அந்த பொண்ண மாத்தமுடியாது..

இதுவே நம்ம அப்பாம்மா   நமக்கு பொண்ணு பார்த்து அந்த பொண்ணு நமக்கு புடிக்கலைன்னா.. அவங்க கவலையே படாம வேற பொண்ண பார்ப்பாங்க..

நமக்கு புடிச்ச பொண்ணு வர வரைக்கும் பார்த்துட்டே இருப்பாங்க..

அரேஞ்ச் மேரேஜோட அட்வாண்டேஜ் என்னன்னா.. வீட்ல அப்பாம்மாவ மதிச்ச மாதிரியும் ஆச்சி, நமக்கு புடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணமாதிரியும் ஆச்சி.. எப்டி..?” என்று காலரை தூக்கிவிட்டு பெருமையடிக்க..

“த்தூ.. இப்படி ஒரு கேவலமான ஸ்ட்ராட்டஜிய உன்னைத்தவிர எவனாலயும் யோசிக்க முடியாதுடா..” என்று துப்பினான் முகிலன்..

“ஆமா வீட்ல இவ்ளோ பொண்ணு பாக்குறாங்களே.. எதோ ஒரு பொண்ணு மேல கூடவா உனக்கு அந்த ஃபீலிங்ஸ் வரல..” என்று ஆச்சரியமாக கேட்டான் பிரவீன்..

ஏனென்றே தெரியாமல் காலையில் பார்த்த பெண்ணின் முகம் அவனுக்கு நினைவு வந்தது.. அந்த அழகிய கண்கள் மனதில் தோன்றிய கணம் அவனையறியாமல் முகம் சிவக்க சிறு வெட்கப்புன்னகைப் பூத்தான்.

வண்டியை ஒட்டிக்கொண்டிருந்த முகிலன் இவன் பதில் சொல்ல நேரம் எடுத்துக்கொள்வதை பார்த்து என்னவாயிற்று என்று பக்கத்தில் இவனைப் திரும்பி பார்த்தான்..

“என்னடா மாப்ள வெக்கம்லாம் படுற.. அப்ப என்னமோ இருக்கு..” என்று  ஆர்வமாகிவிட.. பின்னாலிருந்த மற்றவர்களும் கேலியில் சேர்ந்து கொள்ள..

இவனைக் கலாய்ப்பதில் குறியாக இருந்த முகிலன் சாலையில் கொஞ்சம் கவனம் தவற.. முன்பு சென்று கொண்டிருந்த கார் சடன் ப்ரேக் போட்டதை கவனித்த போது காலதாமதம் ஆகிவிட்டிருந்தது..

“டேய் முகில் பார்த்துடா..” என்று கார்த்திக் கத்தும் போதே.. முன்னர் இருந்த காரை மோதியிருந்தான் அவன்.

“என்னடா பார்த்து ஓட்டக்கூடாதா..” என்று கடிந்தான்.

“இல்லடா அவங்க திடீர்ன்னு ப்ரேக் போட்டுட்டாங்க..அதான்..” என்று சமாதானம் கூற முயன்றான் முகில்.

“சரி வா அந்த காருக்கு என்ன ஆச்சுன்னு பார்க்கலாம்..” என்று காரிலிருந்து இறங்கினர்.

நல்லவேளையாக பின்புற சீட்டில் யாரும் இல்லாததால் யாருக்கும் அடிபட்டிருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தான் கார்த்திக். டிரைவர் சீட்டில் ஒரு பெண் இருப்பது தெரிந்தது, அவள் முதுகுப்புறம் மட்டுமே தெரிந்ததால் முகத்தைப்பார்க்க முடியவில்லை..

ஸ்டியரிங் வீலில் தலைவைத்து இருந்ததைப்பார்த்து எதாவது அடிபட்டிருக்குமோ என்று பதறினான்.

ஆனால் அந்தப்பெண் சில கணங்களில் நிமிர்ந்தாள், கதவைத் திறந்து வெளியே வந்தவளின் வதனத்தைப் பார்த்தவன் ஆச்சரியத்தில் வாய்பிளந்தான். சட்டென்று பக்கத்தில் இருந்த முகிலனின் கையில் கிள்ளினான்..

“ஸ்ஸ்.. ஆ..” ஏன்டா கிள்ற என்று அவன் எரிந்து விழுவதைப்பார்த்து இது கனவில்லை நிஜம்தான் என்று விளங்கிக்கொண்டான்.

தங்கள் நண்பர் குழாமைப்பார்த்து அவள் கண்களில் கணநேரத்தில்  தோன்றிமறைந்த திகிலை அவன் கவனித்திருந்தான். ஆனால் உடனே அதை மறைத்துக்கொண்டு..

நேரே இவர்களை நோக்கி வந்தவள் லெஃப்ட் ரைட் வாங்கினாள்.

“எந்த ஊர்காரியா இருப்பா இந்த கிழி கிழிக்கற..” என்று முகிலன் இவனிடம் கிசுகிசுக்க..

அவனை பார்வையிலேயே அடக்கிவிட்டு..

கடைசியாக அவளின்

“இங்க யாருயா வண்டிய ஓட்டினது?” என்ற கேள்விக்கு பதிலாக

இவன் முன் சென்று தான் தான் வண்டியை ஓட்டியதாக கூறினான்.

அதன் பின் அவள் அவனை அடைமழையென வெளுத்து வாங்க.. இடையில் குறுக்கிட முயன்ற முகிலைனைப் பார்வையால் தடுத்து.. இடத்தை காலி செய்யுமாறு சைகை செய்தான்.

அவனின் இன்னொரு நிழல் போன்றவன் முகிலன் உடனே அதைப் புரிந்துகொண்டு.. மற்றவர்களைக் கிளப்பிக்கொண்டு போனான்.

அவள் செய்வதறியாது திகைத்தது ஒருகணம் தான் ஆனால் உடனே தன்னை சமன்படுத்திக்கொண்டு அவள் வேகமாக அடுத்து என்ன செய்வதென்று யோசித்து செயல்படத்தொடங்க..

அவளின் தைரியத்தையும் எந்த சூழ்நிலையையும் கையாளும் திறனையும் மனதிற்குள் மெச்சிக்கொண்டான்.

பிறகு போகும் வழியெங்கும் அவள் வாய் மூடியபாடில்லை.. அவனுக்கு தொடர்ந்து அர்ச்சனை மழை பொழிந்துகொண்டே வந்தாள்.

முதலில் சற்று கடுப்பானாலும் போகப்போக அவனுக்கு பழகிவிட்டது அவளது வசவை “கியூட்” என்று ரசிக்கவே தொடங்கியிருந்தான்.

அவள் தோழி சொன்ன சர்வீஸ் ஸ்டேஷன் மூடியிருப்பதைப் பார்த்ததும் அவள் முகத்தில் தோன்றிய கடுப்பைப் பார்க்க வேண்டுமே.. அவன் அந்தப்பக்கமாக முகத்தைத் திருப்பிக்கொண்டு சிரித்தான்.

அவள் அவளது தோழியிடம் ஃபோனில் பிஸியாக இருக்க.. இவனுக்கும் அப்போதுதான் சிக்னல் கிடைத்ததாலோ என்னவோ அவனது நண்பர்கள் குரூப் காலில் வந்து கலாய்க்கத் தொடங்கிவிட்டனர்..

“என்னடா மச்சான் எங்கள எல்லாம் கழட்டி விட்டுட்டு நீ தனியா டேட்டிங் போயிட்ட போல..”என்றான் ஒருவன்.

“டேய் சும்மா இருடா..”

“ஆனா எப்படி டா எங்களுக்கெல்லாம் அமைய மாட்டேங்குது உனக்கு மட்டும் அமையுது..” என்றான் இன்னொருவன்.

“இல்லடா பையன்.. கொடைக்கானலுக்கு நம்மல மாதிரி மொட்ட பசங்களோட எவன் போவான்னு.. வழிலயே ஆள உஷார் பண்ணிட்டாண்டா..” என்றான் இன்னொருவன்.

“டேய் அசிங்கமா பேசாதீங்கடா.. டே முகில் நீயுமாடா..?” என்றான் அலுப்புடன்..

அதன் பின் அவள் அவனிடம் காரை சரி செய்வதற்காக பணம் கேட்கும் போது அவனுக்கு தன்னைப்பற்றி சொல்லிவிடலாமா என்று தோன்றியது.

ஆனால் உடனே மனதின் மறுபுறம் அவனைத் தடுத்தது.. இன்னும் கொஞ்சம் அவளைப்பற்றி அறிய ஆவல் கொண்டது..

அதனால் பணம் ஏற்பாடு பண்ண அவகாசம் வேண்டும் என்று சொல்லி இன்னும் கொஞ்சதூரம் அவளுடன் பயணிக்க வகை செய்தான்.

பின்னர் ஹோட்டலில் ஐஸ்கிரீமை அவள் ரசித்து சாப்பிடும்போது அவளது  சிவந்த ஈர உதடுகளை அவனையறியாமல் அவன் வெறித்துப்பார்க்க..

அவளோ அவன் ஐஸ்கிரீமை வெறிப்பதாக நினைத்து அவனுக்கும் வாங்கித்தர..

அவளது வெகுளித்தனதை பார்த்து மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.

இவள் வெளியில் காட்டிக்கொள்ளுமளவிற்கு ஸ்டிரிக்ட் ஆஃபீசர் இல்லை.. இளகிய மனம் படைத்த இனியவள் என்று உணர்ந்தான்.

ஆனால் இவன் வாஷ் ரூம் போய்விட்டு வருவதற்குள், அவன் தப்பித்து ஓடிவிட்டதாக நினைத்துவிட்டாள் போல, இவனைபார்த்ததும் அவள் அதிர்ந்து விழித்தபோதே அவனுக்குப் புரிந்துவிட்டது..

அவள் அவனைத் தவறாக நினைத்ததை நினைத்து குற்ற உணர்ச்சி கொண்டது தெரிய அவனுக்கு முதல் முறையாக அவளை ஏமாற்றுகிறோமோ என்று உறுத்தத்தொடங்கியது..

சொல்லிவிடலாமா என்று அவளை யோசனையாகப் பார்க்க அவள் காலில் இடித்துக்கொண்டு விழப்போக அவன் நொடியில் செயல்பட்டு அவளைத் தாங்கிப்பிடித்தான்.

அவன் ஜிம் சென்று எடை தூக்கி பயிற்சி செய்து உடலை வலுவாக வைத்திருப்பவன். அவன் கைகளுக்கு அவள் எதோ பூக்குவியல் போல் எடையே இல்லாமல் லேசாக இருந்தாள்.

அவள் காலில் ரத்ததைப்பாத்ததும் தன்னிலை மறந்து அவளைத் திட்டியவன்.. அவள் கலங்கிய முகத்தைப்பார்த்ததும் அப்படியே அவளை அள்ளி அணைத்து ஆறுதல்படுத்த வேண்டும் என்று மனதில் எழுந்த உந்துதலின் வேகத்தைக் கண்டு அவனே பயந்துவிட்டான்.

அவளது வலியை உடனடியாகப் போக்கயே தீரவேண்டும் என்று அவளை மருத்துவமனைக்கு அழைத்துசென்றான்.

அங்கே அவள் மருந்துக்கு பணம் தர எத்தனித்த போதுதான் தான் எவ்வளவு பெரிய சிக்கலை உருவாக்கிவைத்திருக்கிறோம் என்பது உறைத்தது.. அவளை ஏமாற்றுவதன் முழு வீரியமும் புரியத் தொடங்கியது.. எப்படியும் அவளிடம் சொல்லிவிட வேண்டும்.. ஆனால் இங்கில்லை திரும்ப காரில் போகும் போது சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்தான்.

அவள் கட்டுப்போட்டுக்கொண்டு வருவதற்காக வெளியே காத்துக் கொண்டிருந்தவனுக்கு அவன் அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது..

இந்த உளறுவாய் முகிலன் அவனது அன்னையிடம் எதையோ உளறி வைக்க அவர் அவனிடம் என்ன ஏதென்று நச்சரிக்கத்தொடங்கினார்.

“என்னடா நீ எதோ பொண்ணுகூட போய்ட்டன்னு முகில் சொன்னான்..? என்னடா இதெல்லாம்..? நாங்க உன்னை நம்பி இங்க பொண்ணு பார்த்துட்டு இருக்கோம்..நீ என்னடா காரியம் பண்ணிட்டு இருக்க..?” என்றார் அவனைக் கண்டிக்கும் குரலில்

“அம்மா இந்த முகில் சொல்றதையெல்லாம் நம்புற பாரு.. அவன் வேணும்ன்னே என்னை கோர்த்துவிடவே எதாவது சொல்லுவான் மா..”

“அப்போ ஏன்டா அவங்க கூட இல்லாம நீ தனியா போன..” என்று அவர் நம்பாமல் விசாரிக்க..

“அம்மா தெரிஞ்ச பொண்ணுமா.. பாவம் ஆக்சிடெண்ட் ஆகிடுச்சி, தனியா எப்படி அனுப்பறது..? அதான் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்தேன் அவ்ளோதான். நீ உடனே கற்பனைப் பண்ணாத..” என்று பாதி உண்மை பாதி கதை சொல்லி அம்மாவை சமாதானப் படுத்திக்கொண்டிருக்கும் போது அவள் விந்திக்கொண்டே வருவதைப் பார்த்து அவசரமாக “ஓகே அப்புறம் பேசுறேன் பை.. லவ் யூ” என்று இணைப்பைத் துண்டித்துவிட்டு அவன் அவளிடம் விரைய.. அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்ததைப் பார்த்து அவன் குழம்பிப்போனான்.

அவன் யாருடன் பேசினான் என்று அறிய அவள் அசட்டையாக கேட்பது போல் ஆர்வமாக கேட்டதைப் பார்த்த பிறகுதான் அவனுக்கு புரிந்தது

“கேர்ள் ஃப்ரண்டா..” என்று கேட்கும் போது அவள் குரலில் ஒலித்த பொறாமையில் அவன் மனம்  மகிழ்ச்சியில் துள்ளியது.

இப்போதாவது அவளிடம் உண்மையை சொல்லி விடலாம் என்று அவன் திரும்பி பார்த்த போது அவள் சிறுபிள்ளைபோல அயர்ந்து உறங்கியிருந்தாள்.

“என்னை எவ்வளவு நம்பியிருந்தால் இப்படி தன்னை மறந்து தூங்கியிருப்பாள். ஆனா நான் என்னப்பண்ணிட்டு இருக்கேன்? இப்படி என்னை நம்புறவள ஏமாத்திக்கிட்டு இருக்கேன்..” என்பது முன்னிலும் அதிகமாகத் தாக்க.. குற்ற உணர்ச்சி தொண்டையில் சிக்கிய முள்ளாக குத்த அவன் தவித்துப்போனான்.

முன்பு சரி என்று தோன்றிய  அடையாளத்தை மறைத்துக்கொண்டு பழகலாம் என்ற லாஜிக் இப்போது படு அபத்தமாக தெரிந்தது.

எப்படி அவளிடம் உண்மையை சொல்லுவது..? ஒருவேளை அவள் பொய் சொல்லி ஏமாற்றியதாக அவனை வெறுத்துவிட்டால் நினைக்கும் போதே உள்ளுக்குள் குளிர் பரவியது..

போகும் வழியெங்கும் சொல்லலாமா வேண்டாமா  என்று உள்ளுக்குள் ஒரே போராட்டமாக இருந்தது. அந்த பயணம் முடிவதற்குள் அவன் மனதிற்குள் அவள் வந்துவிட்டாள் என்று அவனுக்குத் தீர்மானமாகத் தெரிந்துவிட்டது..

அதனால் உண்மையை சொல்வது இன்னும் இமாலய பணியாக மாறியது.பிடிவாதக்காரியாக வேறு தெரிகிறாள்,எதுவும் சொதப்பிவிட்டால் இழப்பு பெரியதாக இருக்குமே..

அவன் அவளது தோழி வெண்பாவின் வீட்டு பின்புற தோட்டத்தில் அமர்ந்திருந்தான்.

கண்ணுக்கு முன் விரிந்திருந்த இயற்கையன்னையின் அழகோவியம்  அவன் மனதில் பதியவில்லை..

அவளது உணர்வைக் காயப்படுத்தாமல் எப்படி  உண்மையை சொல்வது என்ற எண்ணம் மட்டுமே அவன் சிந்தனை முழுவதையும்   ஆக்கிரமித்திருந்தது.

சற்று பொறுத்து அவளது இருப்பை உணர்ந்து சுயவுணர்வு பெற்று திரும்பிப்பார்த்தவன்.. அவளின் அசரடிக்கும் பக்கவாட்டுத் தோற்றத்தில் பேச்சிழந்து போனான்.. அந்த கணம் அப்படியே உறைந்துவிடாதா என்று மனம் ஏங்கியது..

மறுபக்கம் “எப்படியாவது பேசிவிடு கார்த்திக்..”  என்று மூளை அறிவுறித்த என்ன பேச வேண்டும் என்று மனதில் வாக்கியத்தை உருவாக்கிக்கொண்டு அவன் பேச எத்தனித்த போது.. அவளே பேசினாள்

“நீங்க என்னபடிச்சிருக்கீங்க..?” என்று..

எதற்காக கேட்கிறாள் என்பதை தாண்டி இதுவரை அழைத்த நீ என்ற ஒருமையை விட்டு மரியாதை பன்மையைப் பயன்படுத்தியதை அவன் கவனித்தான்..

அதுவே அவளுக்கு அவனிடம் கொஞ்சம் நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டிருப்பதற்கான குறியீடாகத் தெரிந்தது..

இப்போது அவன் தயக்கம் இன்னும் கூடியது, நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள பேச்சே. வரவில்லை..

அவனுக்கு வேலை வாங்கித்தருவதாக அவள் அக்கறையுடன் சொல்லவும்.. அந்த அன்பில் அவன்  மனம் விம்மி வெடித்துவிடும் போல துள்ளியது..

அவளைக் கண்ணோடு கண்  பார்த்த அந்த கணம் மூளை உறைந்து போனது.. உலகமே சிறு குமிழியாய் சுருங்கிவிட அதில் தாங்கள் இருவர் மட்டுமே இருப்பதாகத் தோன்றிய மாயையை அவன்  செல்போனின் ஒலி கலைத்தது..

முகிலன் தான்.. அவனை அழைத்துப்போக வந்துவிட்டான். இப்போது அவன் விடை பெற்றே ஆகவேண்டிய நிர்பந்தம்.

அவளது தவிப்பையும் ஏக்கத்தையும் பார்த்தவன் அந்த நொடியில் முடிவெடுத்தான். எந்த காரணம் கொண்டும்.. இந்த தருணத்தின் இனிமையை இழந்துவிடக்கூடாது.. மற்றதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம், இக்கணம் போதும் அவள் மனதில் தான் நுழைந்து விட்ட சேதியை கண்ணாலே கடத்திவிட்ட நிறைவுபோதும்..

அவன் மனம் முழுவதும் காதலும் கண்களில் கனவுடன் அந்த உன்னத உணர்வை  ரசித்து அனுபவித்தபடி அசட்டு சிரிப்புடன் திரும்பி நடக்கலானான்..

அவன் பெயரை அவள் கேட்டபோது “கார்த்திக்..” என்று முகம்  முழுவதும் பல்லாக சொல்லிவிட்டு

“மித்ரா” என்று ஒருமுறை வாய்விட்டு சொல்லிப் பார்க்கும்போதே முகம் அனிச்சையாக வெட்கத்தில் சிவந்தது..

இந்த காதல் கடைசியில் தன்னையும் விட்டுவைக்கவில்லையே என்று தலையசைத்து சிரித்தபடி நடந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!