Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கானலானாயோ காதலே-27

    வழக்கத்திற்கு மாறாக ஆழியனின் முகம் ஒரு மந்தகாச புன்னகையை சூடியபடியே இருந்தது. இறுக்கமும் யோசனையுமாய் இருந்தவனா இவன் என்று நீரதியே குழம்பும் வகையில் இருந்தான் தற்போது.

    திருமணத்திற்கு முன்பு பார்த்தது இப்படி ஒரு ரசனை சுமந்த வதனத்தை.



Advertisement

    இருவருக்குமான தனி உலகம். காலையில் எழுந்தது முதல் வேலைக்கு கிளம்பும் வரை அவள் பின்னோடே சுற்றினான். இல்லை என்றால் பார்வையிலாவது அவளைப் பின் தொடர்ந்தான்.

    சமையலறையில் உதவி செய்தான். மகளுக்கு தேவையானதை செய்து பள்ளியில் விட்டு வந்தான்.

Advertisement

Advertisement

    “ப்பா டெய்லி டெய்லி நீங்களே ஸ்கூல்ல விடுறிங்களா?”ஆசையாய் கேட்ட ஸ்வர்ணிகாவிற்காக பள்ளி பேருந்திற்கு பணம் கட்டுவதை நிறுத்தி விட்டு தானே பள்ளியில் விட்டு விட்டு மில்லிற்கு செல்கிறான்.‌

Advertisement

    “இவ மட்டும் ஓகே அப்புறம் ரெண்டு பேரும் போகணுமே என்ன செய்வீங்க?”என்று கேட்ட மனைவியிடம் “கார்ல கூட்டிட்டு போவேன். ஏன் வாங்க மாட்டேனா?”என்று பதில் கேள்வி கேட்டவனுக்கு சிரிப்புடன் ஒரு தலையாட்டு அவனின் நீரதி.

    “வீடு பார்த்துட்டேன் ரதி”என்று அடுத்த தகவலை கொடுக்க

    “இப்போ ஏன் அண்ணன் எதுவும்”எனும் போதே தடுத்தவன் “என்ன இருந்தாலும் இது விநோ வீடு ரதி. அன்னைக்கு கடை திறப்பு விழாக்கு சொல்லும் போதே வீடு பார்த்த விஷயத்தையும் சேர்த்தே சொல்லிட்டேன். இந்த வீடு விநோ வந்தா தங்க வசதியா இருக்கும் நாம இருக்கிறது ம்ஹூம் சரியா வராது ரதி.”என்றான் அழுத்தமாக.

    புகுந்த வீட்டில் இருந்து கோபித்துக் கொண்டு வந்து விட்டவளை எதுவும் கூறவில்லை அவன். என்ன நடந்தது என்று தெரியும் முன்பே தன்னிடம் வந்து சேர்ந்தவனை கோபித்துக் கொள்ளவும் முடியாதே….

    “சரி போகலாம்”என்றாள் மறுக்காமல்.

    “வீட்டை வந்து பாரு. உனக்கு பிடிச்சா லீஸுக்கு பணம் தந்து வாங்கிடுறேன்”என்றான்.

    “அவ்வளவு பணம் இப்போ தான் கடை திறந்தோம்”மென்று விழுங்கிய வார்த்தைகளை அவள் கோர்க்க

   “இருக்கு வச்சிருக்கேன்”என்றான் மொட்டையாக

    “எப்படி இருக்கும் அக்கவுண்ட் ல இருந்த பணம் எல்லாம் கடையில் போட்டாச்சு அப்புறம் எப்படி இருக்கும்”முதல் முறையாக அவனை அதட்டிப் பேசியிருந்தாள்.

    ‘பார்றா’என்று மனதில் சிரித்தவன் “உனக்கு அதட்ட எல்லாம் தெரியுமா”என்றான் கிண்டலாக ‌

    “ப்ப்ச் கிண்டல் செய்ய கூடாது. பணத்துக்கு என்ன செஞ்சீங்க அதைச் சொல்லுங்க”என்றாள் மீண்டும்.

    “இன்னும் கொஞ்சம் நல்லா டேய் ஆழி பணத்துக்கு என்ன செஞ்ச அப்படி னு கேட்டு அதட்டேன் பார்ப்போம்”என்று இலகுவாய் சரிந்து அமர்ந்து புன்னகைக்க நீரதிக்கு தான் படபடத்தது.

    “என்னடி ரதி”என்று அடிக் கண்ணால் பார்க்க

    ‘இத்தனை நாளும் இதை கவனிக்கலையே நாம. கேட்கும் போது மிரட்டலா என்னடி ரதியாம் ஆனா பார்வையைப் பாரு. ஆளை உள்ள இழுக்கற மாதிரி’முறைத்தாள் அவனை.

    “ஹோய் என்ன…ஃப்ரீஸ் மோட்ல நிக்குற புதுசாவா பார்க்கிறேன்”என்றான் அதற்கும்.

    “கேடிப்பையன்”என்று முணுமுணுத்தவள் “வீட்டுக்கு அட்வான்ஸ் பணத்தை நகை வச்சு வாங்கலாம் அப்புறம் திருப்பி தாங்க”என்றாள்.

    “வேண்டாம்”என்றான் வேகமாக.

    “என்ன வேண்டாம். கடன் வாங்கி இருந்தாலும் கட்டி தானே ஆகணும்”என்று கோபமாய் கேட்க

    “வர வர ரொம்ப கோபம் வருதுடி ரதி உனக்கு.”

    “ப்ப்ச் கேட்டதுக்கு பதில்”என்றாள்.

    “மர மில்லுல மட்டும் வேலை செஞ்சா நான் எப்போ முன்னேறுறது. எனக்கு தனியா ஆன்லைன் பிஸ்னஸ் இருக்கு தெரியும் தானே… அதோட ஆர்ட் அன்ட் க்ராஃப்ட் கிளாஸ் எடுக்கிறேன். கண்காட்சி நடந்தா அதில் கலந்துக்கறேன் நிறைய இல்லாட்டியும் வருஷத்தில் ரெண்டு தடவையாவது என் பொருள் எல்லாம் பரிசு வாங்கிடும்.எனக்கு நார்த் சைட் க்ளைண்ட் இருக்காங்க. இது தனிப்பட்ட என் பிஸ்னஸ் இதுல வர்ற சம்பாத்தியம் நம்மளை மட்டும் சார்ந்தது. அப்போ ஒரு அஞ்சு லட்சம் குடுத்து லீஸுக்கு வீடு வாங்க மாட்டேனா நான்.”என்று அவளிடமே கேட்டான்.

    அவன் கூறுவதும் சரி தான் பணத்தை அநாவசியமாக செலவு செய்யும் ரகம் இல்லை ஆழியன் . மளிகை பொருட்கள் வாங்குவதில் தன் பங்கு பணம் என்று எடுத்துக் கொள்ள சொல்வானே தவிர முழுவதும் தந்ததில்லை. வெளியே சென்றால் மட்டும் அவன் காசில் பெட்ரோல் போடுவான். மற்றபடி மில் வேலையாக சென்றால் அங்கிருந்து தான் பணம் வாங்குவான். இதுவரைக்கும் அதிகம் வெளியே செல்லாததால் அவர்களுக்கு என்று அநாவசியமாக செலவு இருந்ததில்லை. மாத சம்பளத்தை தருவான் வாங்கும் பணத்திற்கு செலவுக் கணக்கும் சொல்லி விடுவான். அதில் எல்லாம் இருவரும் தேர்ந்தவர்கள் தான்.

    “இப்போதைக்கு பணம் இருக்கு ரதி. ஸ்வருக்கு இனிமேல் சேர்த்துக்கலாம். அதான் தங்கமகள் சேமிப்பு திட்டத்தில் பணம் போடுறோமே அப்புறம் என்ன. “என்றவனிடம் மறுத்து பேசவில்லை நீரதி.

    முன்பு இலகுவாக உழைத்ததை தற்போது இரு மடங்காக உழைக்க வேண்டும் அவ்வளவே… உழைக்க தயாராக இருக்கும் போது எதைப் பற்றி கவலை கொள்ள வேண்டும்.

    தேசிகன், ஆழியன் எப்படியும் திரும்பி இங்கே வந்துவிடுவான் என்று எதிர்பார்க்க அதற்கான அறிகுறியே இல்லை அவனிடம்.

    வீட்டிற்கு வந்தவன் நீரதிக்கு தந்த சீர்வரிசை சாமான்கள் தங்கள் அறையில் இருந்த உடைமைகளை வேனில் ஏற்றினான்.

    வளர்மதி பொங்கி எழ “தனியா இருக்கோம் எங்க பொருளை நாங்க ஏத்தறோம் உங்களுது ஏதாவது எடுத்தா கேள்வி கேளும்மா”என்று அவரை வாயடைக்க செய்ய

    “அப்போ தனியா போறதுனு முடிவே பண்ணிட்டீங்களா”என்று முந்திக்கொண்டு வந்தாள் தரங்கினி.

    “அதைத் தானே சொன்னேன் அண்ணி. தனியா தான் இருக்கப் போறோம்.”என்றான் அதற்கும்.

    “பெத்தவங்களோட பொறுப்பை உதறிட்டு போறீயேடா செல்வம் இதெல்லாம் நல்லாவா இருக்கு. “பொன்னி ஆதங்கமாய் கேட்க

    “பொறுப்பை நான் உதறினேனா. ஹ்ம்ம்”என்றவன் “ஒண்ணும் பிரச்சினை இல்லை ஒரு ஃபோன் பண்ணா வந்து நிற்கிறேன். அவங்களுக்கு விருப்பம் னா ம்ஹூம் அவங்க வீட்டை விட்டு வர மாட்டாங்க பாட்டி எனக்கு தெரியும்.நான் வெளிநாட்டில் இருக்கிறதா நினைச்சுக்கங்க”என்று சொன்னானே தவிர கூடவே வந்து விடுங்கள் என்று கூறவில்லை ஆழியன். சூடு கண்ட பூனை கொதிக்கும் பாலை தீண்டுமா என்ன

    மில்லிற்கு வருவான் யார் யார் என்ன பொருள் செய்ய வேண்டும் என்பதை சொல்லி விட்டு கிளம்பி விடுவான்.

    “இப்படி சும்மா வந்து வேலை சொல்லிட்டு போறதுக்கு வராமலேயே இருக்கலாம் நீ. என்னடா நினைச்சுட்டு இருக்க. அந்த கடையில் ஏவாரம் போன மாதிரியும் தெரியலை. ஆனா நீ அங்கேயே பழியா கெடக்க”என்று மில்லுக்கு வந்தவனிடம் சத்தமிட

    “இனிமே அதையும் நீங்களே பாருங்க ப்பா. சும்மா வேலை ஏவற வேலை தானே அதை நீங்களே செய்ங்க யார் வேணாம்னா”என்று பதிலுக்கு பதில் பேசிய மகனை அதிர்வாய் பார்த்தார் தேசிகன்.

    “நீ இப்படி எல்லாம் பேசுற ஆளே இல்லடா. என்னவோ புதுசு புதுசா பண்ற”என்று சொல்லியே விட்டார் அவர்.

    “பேச வச்சதே நீங்க எல்லாரும் தானேப்பா”என்றவன், “நடந்ததுல உங்க தப்பு பாதினா என் தப்பு மீதி இருக்கு. உங்களை மாறச் சொல்லி நான் சொல்ல முடியாது ஆனா நான் மாறிக்கலாம் தானே?!”என்றான் தீர்க்கமாக.

    “நாங்க என்னடா தப்பு செஞ்சோம். இல்லை தெரியாம தான் கேட்கிறேன் வீட்டு வேலை செஞ்சது அவ்வளவு பெரிய குத்தமாடா இதுக்கா நீ உன் பொண்டாட்டிய கூட்டிட்டு தனியா போன”மீண்டும் முதலில் இருந்து அவர் ஆரம்பிக்க

    “வீட்டு வேலை செஞ்சதை அவ ஒரு பொருட்டாவே நினைக்கலைப்பா. நானுமே அதை பெருசா நினைக்கலை ஏன்னா அது நம்ம வீடு நாம தான் செஞ்சாகணும்ன்ற எண்ணம் எங்களுக்கு. அது மத்தவங்களுக்கு இருந்ததாப்பா… ரதி தண்ணி கொண்டு வா, நீரா இதை சமைச்சுடு, நீரா இதை செய்துடுனு அவளை மட்டுமே செய்ய சொன்னது தான் தப்புப்பா . ஒண்ணுக்கு ரெண்டு மருமகள் இருந்தாங்க ஏன் செய்யலை. இப்போ தீபன் பொண்டாட்டி ரதி கூட சேர்ந்து வேலை பார்க்கலையா…?அதை ஏன் அண்ணி கிட்ட அம்மா செய்ய சொல்லலை. சில விஷயங்களை உங்க கிட்ட பகிர்ந்துக்க கூட முடியாது ப்பா. ஆனாலும் சொல்றேன் அம்மாவோட குத்தல் பேச்சு தாங்காம நாங்க ஒழுங்கா சேர்ந்து கூட இல்லைப்பா இதுக்கு மேல உங்க கிட்ட இந்த விஷயத்தை நான் விளக்க முடியாதுப்பா”என்றான் குரல் உடைந்து போய்.

    “செல்வம்”என்று அதிர்ந்த தேசிகனிடம் “ஆம்பளைன்னா சம்பாதிக்க மட்டும் தான் நினைச்சு வீட்டை கவனிக்காம விட்டது என் தப்புப்பா. அடிச்சு கொடுமை படுத்தறது ஒரு ரகம்னா உணர்வை கொடுமை படுத்தறது ஒரு ரகம் ப்பா அந்த உணர்வு கொடுமை தான் எங்களுக்கு நடந்தது. என்னை இப்படியே விட்டுடுங்க. நான் நிச்சயமா அமுதனுக்கும் தீபனுக்கும் உதவியா நிற்பேன் ஆனா பழையபடி வீட்டில் வந்து இருப்பேனா தெரியாதுப்பா‌. என் அண்ணன் தம்பிக்கு இவ்வளவு தான் என்னால செய்ய முடியும். நாங்க எங்களுக்குள்ள பார்த்துப்போம் ப்பா. வாரிசு அது இதுன்னு நீங்க குறுக்க வராமல் இருந்தா அதுவே போதும்.”என்றவன் “இன்னைய வேலையை சொல்லிட்டேன் ப்பா. நான் கிளம்பறேன்”என்று அங்கிருந்து சென்று விட்டான்.

    தேசிகனுக்கு இப்போதும் குழப்பம் தான் அப்படி என்ன தான் வீட்டில் நடந்து இருக்கும் என்று மேலும் மேலும் குழம்பினார். வீட்டு வேலை செய்வதில் மட்டும் தான் வளர்மதி பாரபட்சம் பார்த்து இருக்கிறார் என்று எண்ணி இருக்க, மகனோ உணர்வு கொடுமை என்கிறான். என்று யோசித்தவருக்கு தலை எல்லாம் வலித்தது. வீட்டிற்கு கிளம்பி விட்டார்.

    அங்கே பவ்யா சத்தமாய் பேசிக் கொண்டிருந்தாள்.

    “இதோப் பாருங்க த்தை. சமையல் செய்யணும் னா சேர்ந்து செய்றேன். மத்தபடி நான் கிச்சனிலேயே குத்த வச்சு உட்கார முடியாது. ஆளாளுக்கு ஒரு டிஷ் கேட்கறதுக்கு இது ஒண்ணும் ஹோட்டல் கிடையாது.‌ காஃபி ஒரு தடவை தான் போட முடியும்.அதுக்கு மேல வேணும்னா அவங்க அவங்க போட்டுக்க வேண்டியது தான். ஒரு வயசு பையனை அவங்களால பார்த்துக்க முடியாது. ஆனா நான் மட்டும் ஆறு மாச பிள்ளையை பார்த்துட்டே சமையலும் செய்யணுமா… எந்த ஊர் நியாயம் இது. உங்களால முடிஞ்சா‌ வச்சுக்கங்க இல்லாட்டி தனியா விடுங்க.”என்றாள் அழுத்தந்திருத்தமாக.

    “பவ்யா”என்று தேசிகன் அதட்டியபடி உள்ளே வர அவள் அலட்சியமாக நின்றிருந்தாள்.

    …. தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!