நன்னிலவு நீ… தண்நிழல் நான்…-9
அத்தியாயம் – 9
“நூர்ந்து போகிற திரிக்கு துளி நெய் விடுகிற நீர்மம் மட்டும் போதும், பிழைத்திருப்பேன் எனத் துடிக்கும் இந்த காதல்.”
மதுரை கலெக்டர் அலுவலகத்தின் பெரிய மாநாட்டு அரங்கில் அந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, வெளியே வழக்கமான நகர ஓசை. உள்ளே கட்டுப்பட்ட அமைதி. திரையில் திட்ட விளக்கங்கள் மாறிக்கொண்டிருந்தன. அதிகாரிகள், நிபுணர்கள், ஆய்வாளர்கள், அனைவரும் கவனமாக அமர்ந்திருந்தனர்.
Advertisement
முன் வரிசையில் ஆய்வுக்குழு உறுப்பினராக அமர்ந்திருந்தான் மித்ரன். அவன் முன் கோப்புகள் இருந்தன. முதல் வழங்குநர் தனது ஆய்வை முடித்தார். அடுத்து இரண்டாவது… பின்னர் மூன்றாவது… ஒவ்வொருவரும் தங்களது தரவுகளையும், கணிப்புகளையும் தெளிவாக விளக்கி சென்றனர். அரங்கம் முழுவதும் ஒரு ஒழுங்கான ஓட்டம். கேள்விகள், பதில்கள், குறிப்புகள், அனைத்தும் வழக்கமானபடியே நடந்துகொண்டிருந்தது. மித்ரன் அருகில் மாலினியும் அமர்ந்திருந்தாள். இருவரும் தங்கள் துறையில் தேர்ச்சி பெற்றவர்களாய், துல்லியமான கேள்விகளை முன்வைத்து, ஆய்வை மேலும் சிறப்பாக முன்னேற்றினர்.
அந்த நேரத்தில் அடுத்த பெயர் அறிவிக்கப்பட்டது. “டாக்டர் ஆதிரை.. கடற்கரை தரவு மற்றும் நிலப்பரப்பு ஆய்வு” . “டாக்டர் ஆதிரை…”
அந்தப் பெயர் அரங்கத்தின் ஒலிபெருக்கியில் எதிரொலித்தபோது மித்ரனின் உலகமே ஒரு கணம் ஸ்தம்பித்தது. விரல்கள் தன்னிச்சையாக இறுகின. தலையை உயர்த்தினான்.
Advertisement
மேடையின் பக்கம் நடந்துவந்தாள் அவள். அவளைப் பார்த்த அந்த நொடி…மித்ரனின் உள்ளத்தில் ஏதோ மெதுவாக உடைந்தது. அவன் இதயத்தின் ஓரத்தில் உறைந்து கிடந்த பனிப்பாறை மீது, திடீரென ஒரு பனிப்பொழிவு நிகழ்ந்தது போன்ற ஒரு மெல்லிய நெகிழ்ச்சி அவனுள் பரவியது. மாலினியும் விக்கித்துப் போய் மித்ரனைத் திரும்பிப் பார்த்தாள்.
Advertisement
இரண்டு ஆண்டுகள் கடந்திருந்தாலும் அவள் மாறவில்லை.
அவள் அணிந்திருந்த அந்த சந்தன நிற காட்டன் புடவை அவளின் தற்போதைய முதிர்ச்சியைச் சொல்லியது. காதுகளில் ஊசலாடும் சிறிய ஜிமிக்கி கூட இன்று அசைவற்று இருந்தது. கலைந்துவிடக்கூடாதென்று இறுக்கமாகக் கட்டப்பட்ட கூந்தல், அந்தப் பெரிய கண்களின் ஓரத்தில் லேசாகத் தெரிந்த கருவளையங்கள், அவள் கடந்த இரண்டு வருடங்களாகத் தூக்கத்தைத் தொலைத்திருப்பாள் என்பதைச் சொல்லாமல் சொன்னது. ஒரு காலத்தில் மலர்ந்த தாமரை போல் இருந்தவள், இப்போது பனி படர்ந்த செடியைப் போலச் சற்றே வாடி, ஆனால் கம்பீரமாக நின்றிருந்தாள். அந்த அமைதி, அந்த நிதானம் அதேபடி.
மேடை ஏறும் போது அவள் காலடிகள் சற்றும் தடுமாறவில்லை. ஆனால், அவள் கையில் இருந்த கோப்புகளை அவள் பிடித்துக்கொண்டிருந்த விதம்… ஏதோ ஒரு பிடிமானத்திற்காகத் தேடுபவள் போல் தன் விரல்களை அந்தக் காகிதங்களுக்குள் புதைத்திருந்தாள். மேடையில் நின்று பேசத் தொடங்கியவள், முதலில் திரையை நோக்கினாள். ஒரு நொடி அவள் கண்கள் ஆய்வு குழு அமர்ந்திருந்த பக்கம் திரும்பின. நிமிர்ந்து பார்த்தபோது… அங்கே அவன்!
Advertisement
மித்ரனை பார்த்த அந்த ஒரு நொடி அவனைப் பார்த்த அந்த ஒரு நொடியில், அவளது மொத்த உலகமும் அந்த ஒரு பிம்பத்திற்குள் சுருங்கிப் போனது. அவள் கண்ட அதே முகம் தான், ஆனால் நேரில் அவனது பிம்பம் அவள் கண்களுக்குள் புகுந்த வேகம் அவளது ஆன்மாவையே அதிரச் செய்தது.
அங்கே, கரும்நீல கோட் சூட்டில் ஆளுமையோடு ஒரு சிலையைப் போல அமர்ந்திருந்தான் மித்ரன். அவனது அகன்ற தோள்களும், நேராக நிமிர்ந்து அமர்ந்திருந்த அந்த விதமும் ஒரு கம்பீரமான சித்திரத்தைத் தீட்டியிருந்தன. எல்லாவற்றையும் விட அவனது அந்தப் பார்வை, அந்த அதிகாரத் தோரணைக்கு பின்னால், ஒரு சின்னஞ்சிறு சிறுவன் தன் தொலைந்த பொம்மையைக் கண்டெடுத்த தவிப்போடு அவன் அமர்ந்திருந்தான். அந்த அரங்கத்தின் குளிர்ச்சியையும் மீறி, அவனது பார்வை ஆதிரையைத் தகித்தது.
மித்ரனும் அவளும் கண்டுகொண்ட அந்த ஒரு நொடி… கால் கீழ் தரை நழுவியது போல் அவனும், கண் முன்னே இடிவிழுந்ததுபோல் அவளும்! காலமும் நேரமும் அப்படியே நின்றது போல இருந்தது.
அந்த பார்வை பரிமாற்றத்துக்குப் பின் எங்கிருந்தோ ஒரு தைரியம் பெற்றதாய் அடுத்த நொடியே திரும்பி நின்று தன்னுடைய பிரசென்டேஷன் தொடங்கினாள்.
மித்ரன் அவளை கவனமாக பார்த்துக்கொண்டிருந்தான். அவள் சொல்வதைக் கேட்காமல், அவள் பேசும் விதத்தை தான் கவனித்தான். அந்த இடைவெளிகள், அந்த தடைபட்ட மூச்சுகள்… அவனுக்கு தெரிந்தவை.
பிரசென்டேஷன் முடிந்தது. அரங்கம் அமைதியானது. கேள்விகளுக்கான நேரம். இரு வேறு ஆய்வுக்குழு உறுப்பினர்கள் தங்களது கேள்விகளை முன்வைத்து முடித்த பின்…
சிறிது நேரம் அரங்கில் அமைதி நிலவியது. அந்த அமைதிக்குள்
மித்ரன் மெதுவாக மைக்கைப் பிடித்தான்….
“டாக்டர் ஆதிரை…” என்றான். அந்த ஒரு அழைப்பு, பல இரவுகள், கனவுகள் கடந்து கேட்ட அதே குரல். ஆதிரையின் விழிகள் லேசாகப் பளபளத்தன. ஆனாலும், அவளின் கண்களில் எங்கோ ஒரு ஆழமான மௌனம் இருந்தது.
அவன் கேட்ட முதல் கேள்வி தொழில்நுட்பம் பற்றியது. பருவ மாற்றங்களை கருத்தில் கொண்டு அலைத் தரவுகளை எப்படி கணக்கிட்டிருக்கிறீர்கள் என்று கேட்டான். “கடந்த பத்தாண்டுகளின் வரலாற்றுத் தரவுகளுடன் நிகழ்நேரக் கடல்மட்ட மாறுபாடுகளையும் ஒருங்கிணைத்து ஒரு ‘டைனமிக் மாடல்’ உருவாக்கியிருக்கிறோம்,” என்று ஆதிரை உடனே பதிலளித்தாள். அவள் குரலில் தயக்கம் இல்லை.
“எதிர்பாராத மாற்றங்கள் வந்தால்… data loss (தரவு இழப்பை) எப்படி தவிர்ப்பீர்கள்…?”
அவன் கேட்டது வெறும் தரவுகளைப் பற்றி அல்ல என்பது அவளுக்கு மட்டுமே புரிந்தது. அவன் கண்கள் அவளை ஊடுருவின. ‘நம் உறவில் ஏற்பட்ட அந்த எதிர்பாராத விரிசலை நீ எப்படி கையாண்டாய்?’’ என்ற கேள்வியே அந்த அறை முழுவதும் எதிரொலிப்பது போல் அவளுக்குத் தோன்றியது.
அவள் நின்றாள். ஒரு நொடி.
அந்தப் பிரம்மாண்டமான அரங்கத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் அமர்ந்திருந்தாலும், ஆதிரைக்கு அவர்கள் யாரும் தெரியவில்லை. மித்ரனின் அந்த ஒற்றைப் பார்வை மட்டும் அவளது ஆன்மாவை நிர்வாணமாக்கி கேள்வி கேட்டது. அவன் முன்னால் இருந்த கோப்புகளை அவன் விரல்கள் அழுத்திப் பிடித்திருந்த விதம், அவன் அங்கே ஒரு அதிகாரியாக அல்ல, காயப்பட்ட ஒரு கணவனாக அமர்ந்திருப்பதை அவளுக்குச் சொல்லாமல் சொன்னது.
அவன் அவளை பார்த்தான். அந்த கேள்வி அவர்களுக்குள் இருந்த மௌனத்தைத் தொட்டது. “Loss avoid பண்ண…
ஒரு பேரலல் சப்போர்ட் சிஸ்டம் (parallel support system) தேவை…” அரங்கத்தில் இருந்தவர்கள் அதை டெக்னிக்கல் ஆன்சர் ஆக எடுத்துக்கொண்டனர். ஆனால் மித்ரனின் காதுகளில் அது வேறு விதமாக விழுந்தது. அவன் மைக்கை மெதுவாக மேசை மீது வைத்தான். உள்ளுக்குள் எழுந்த ஆத்திரமும், ஆதங்கமும், காதலும் கலந்து அவனுக்கே தெரியாமல் அவன் உதடுகள் முணுமுணுத்தன.. “எனக்கெங்கடீ… ஒரு பேரலல் சப்போர்ட் சிஸ்டம் (parallel support system) வச்சிருந்த..? மித்ரன் தலையசைத்தான், அவள் வெளியேறினாள்.
அரங்கில் கூட்டம் தொடர்ந்தது. ஆனால் அந்த நாளின் உண்மையான நிகழ்வு, ஒரு ப்ராஜெக்ட் ரிவ்யூ (project review) அல்ல. ஒரு உறவு…மீண்டும் பேச ஆரம்பித்திருந்தது!
அரங்கத்தை விட்டு வெளியேறிய ஆதிரைக்குப் பூமி சுற்றுவது போலிருந்தது. மித்ரனின் அந்த ஒற்றைப் பார்வை, அவன் முணுமுணுத்தது அப்பொழுதே அவளுக்குப் புரிந்துவிட்டது. “எனக்கெங்கடீ…” ‘அவன் கேட்டது ஒரு கேள்வியாக அன்றி, சிதறிய ஒரு கண்ணீர்த்துளியாக அவளுள் விழுந்தது. அந்த ஒற்றைக் கேள்வி அவளது அத்தனை நிதானத்தையும் சுக்குநூறாக உடைத்திருந்தது. எந்திரத்தனமாக நடந்தவள், ரிசப்ஷன் பகுதியில் தனக்காகக் காத்திருந்த கண்மணியைக் கண்டதும் ஓடிச் சென்று அவளது கைகளைப் பற்றிக்கொண்டாள்.
“வா… போலாம்..” ஆதிரையின் குரலில் ஒருவித நடுக்கம்.
“அம்மா… என்னாச்சுமா? முடிஞ்சிருச்சா?” கண்மணி ஒன்றும் புரியாமல் கேட்டாள். ஆதிரை பதில் சொல்லவில்லை. மகளின் கையை இறுக்கமாகப் பிடித்தபடி கார் நிறுத்துமிடம் நோக்கி விறுவிறுவென நடந்தாள்.
காருக்குள் ஏறி அமர்ந்த பிறகும் அவளது சுவாசம் சீராகவில்லை. ஏசியின் குளிர்ச்சியையும் மீறி நெற்றியில் வியர்வை அரும்பியது. இரண்டு வருடங்களாகத் தான் தேடி அலைந்த அந்த அமைதி, இன்று ஒரே நொடியில் காணாமல் போயிருந்தது.
“அம்மா… என்னாச்சுமா? ஏன் இப்படி மூச்சு வாங்குது? பிரசன்டேஷன் எப்படி இருந்துச்சு? எல்லாரும் பாராட்டினாங்களா?” கண்மணி கவலையுடன் ஆதிரையின் தோளைத் தொட்டாள்.
மகளைப் பார்த்ததும் ஆதிரைக்குள் ஏதோ ஒன்று உடைந்தது. கண்மணியின் கண்களில் மித்ரனின் அதே சாயல்… அதே தேடல். சட்டென்று மகளைக் கட்டிக்கொண்டாள்.
“நல்லா இருந்ததுடா… ரொம்ப நல்லா இருந்தது…” என்று சொல்லும்போதே, ஆதிரையின் விழிகளிலிருந்து கண்ணீர் தடையின்றி வழிந்தது. அது கண்மணியின் சட்டையை நனைத்தது.
“அம்மா… அப்புறம் ஏன் அழறீங்க? யாராவது திட்டுனாங்களா?
ஆதிரை சட்டென்று சுதாரித்தாள். தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, மகளின் முகத்தை வருடினாள். “ஒன்னுமில்லடா… ஒன்னுமில்ல… அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம், அதான். வேற ஒன்னுமில்லை கண்ணா.”
டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த அண்ணாச்சி, “அம்மா, கிளம்பலாமா? எங்க போகணும்?” என்று கேட்டார்.
மதுரை நகருக்குள் நுழையும் போதே ஆதிரை அதைத் தீர்மானித்திருந்தாள். ஆய்வுக்கூட்டம் தரும் மன அழுத்தத்தை மீனாட்சியின் சந்நிதியில் இறக்கி வைத்துவிட்டுத்தான் செல்ல வேண்டும் என. “அண்ணா… மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போலாம்,” ஆதிரையின் குரல் அந்தச் சிறிய காருக்குள் ஒரு பிரார்த்தனை போல ஒலித்தது.
கார் கோபுர வாசலில் நிற்க, கண்மணியின் கையைப் பிடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள். கோவில் கோபுரத்தின் நிழல் அவள் மேல் விழுந்தபோது, மதுரைக்கே உரித்தான அந்த மல்லிகை வாசம் அவள் மனதின் காயங்களுக்கு ஒரு மெல்லிய ஒத்தடமிட்டது. நடை திறந்திருந்தது அவளுக்குக் கிடைத்த முதல் ஆசுவாசம். கருங்கற்களின் குளிர்ச்சி பாதங்களில் ஏறியபோதே, ஆதிரையின் பதற்றம் பாதியாகக் குறைந்தது. பொற்றாமரைக் குளத்தின் ஓரம் வீசிய அந்த ஈரக்காற்று, மித்ரனின் நினைவுகளால் தகித்துக் கொண்டிருந்த அவளது முகத்தை மென்மையாக வருடியது. சந்நிதியில் நின்றபோது, அந்தத் தீபாராதனை வெளிச்சத்தில் அம்மனின் திருமுகம் அத்தனை கருணையோடு காட்சியளித்தது. “தாயே… நான் எதிலிருந்து ஓடுகிறேன்? எதைத் தேடுகிறேன்?” என்று அவள் மனம் தேம்பியது. அன்னை மீனாட்சியின் அந்த அமைதியான, அதே சமயம் கம்பீரமான பார்வை சற்று முன் அவள் கண்ட மித்ரனின் அதே தோரணையை நினைவுபடுத்தியது. ஆனால், இங்கே அந்தப் பார்வையில் ஒரு அரவணைப்பு இருந்தது. அன்னையின் தீபாராதனை ஒளியில், அவளது கடந்த கால ரணங்கள் மெல்ல உருகி, ஒரு புதிய தெளிவின் ஒளியாக அவள் விழிகளில் நிலைபெற்றது. பிரசாதக் குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்டபோது அவளுக்குள் ஒரு புதிய தைரியம் பிறந்தது. அம்மா… எனக்குப் பசிக்குதுமா,” கண்மணி அவளது சுண்டி இழுக்க, ஆதிரை மெல்லப் புன்னகைத்தாள்.
கோவிலை விட்டு வெளியே வரும்போது, ஆதிரையின் நடையில் ஒரு தெளிவு இருந்தது. அவளைத் தவிக்க விட்ட அந்த மதுரை மாநகரம், இப்போது அவளை வாழ்த்தி வழி அனுப்புவது போல் இருந்தது. மித்ரனை மீண்டும் சந்திக்கும் அந்தத் தருணத்திற்காக அவள் இப்போது தயார் ஆகிக்கொண்டிருந்தாள்.

