Skip to content
Post Views: 2,650
“இந்த கணேஷ் அடிக்கடி இந்த பக்கம் வரமாதிரி தெரியுது. என்னவோ இடிக்குதே.” என்ற தோழி ராஷ்மியின் கூற்றினை ஏற்கும்படியாக இருந்தது குழலிக்கு.
சில நாட்களாகவே அடிக்கடி ஏதோவொரு வேலையை காரணம் காட்டி கணேஷ் தன்னிடம் பேச முனைவது போல் அவளுக்கும் தோன்றுகிறது. அதே சமயம் இயல்பாய் நடப்பதை தான் அதிகம் யோசிக்கிறோமோ என்ற எண்ணமும் வியாபித்தது. தொந்தரவு நேராத வரை அமைதியாக செல்வோம் தங்களின் கணிப்பு தவறாகவும் இருக்கலாம் என்று அவள் பொறுமை காக்க, அவளுக்கு தொல்லை கொடுக்கும் விதமாய் எதுவும் செய்யவில்லை அவன். அவள் இருக்குமிடம் வருவது, அலுவலக சம்மந்தமாய் பேசுவது, மேலிடத்திற்கு அனுப்ப வேண்டிய தரவுகள் குறித்த விவாதங்கள் என்றே நாட்கள் ஓடினாலும் உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது தோழிகளுக்கிடையில்.
அன்று வேலை நேரம் முடிந்து கிளம்பும் சமயம் அவளிடம் வந்தவன் அவள் வசிக்கும் பகுதியை கேட்டு தெரிந்துகொண்டு அவள் தெருவில் இருக்கும் யாரையோ பற்றி விசாரித்தான். சற்று யோசித்தவள் தெரியவில்லை என்று பதில் கூற, அவர்கள் அங்குதான் இருக்கிறார்கள் விசாரித்து மட்டும் கூற முடியுமா என்று கேட்டுக்கொள்ள, சம்மதித்தவள் சிரத்தை எடுத்து விவரம் சேகரித்து வந்து சொன்னாள்.
“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் குழலி. நீ விசாரிச்சு சொன்ன ஆளும் என்னோட எக்ஸ்-வொய்ப்பும் ரிலேஷன்ஷிப்ல இருக்காங்க. கோர்ட்டுல டிவோர்ஸ் கேஸ் போய்ட்டு இருக்கு அதுக்கு யூஸ் ஆகும்னுதான் உன்கிட்ட ஹெல்ப் கேட்டேன்.” என்று கணேஷ் சொல்ல அதிர்ந்தே போனாள் குழலி.
Advertisement
அவனுக்கு மணமான விஷயமே புதிது இதில் விவாகரத்து வேறா என்று பார்க்க,
“அவங்க வீட்ல சீக்கிரம் பண்ணனும்னு பிரெஷர் சோ லோ கீயா பங்ஷன்ஸ் நடந்துச்சு. ஆறு மாசம் கூட தாண்ட முடியல எங்களால. பல்லை கடிச்சி ஒரு வருஷம் பாத்தோம் செட் ஆகல பிரிஞ்சாச்சு. அதான் பெருசா இங்கேயும் யார்கிட்டேயும் சொல்லிக்கல.” மேலோட்டமாக தன் கதையை சொன்னவன் மீண்டுமொருமுறை நன்றி உரைத்துவிட்டு செல்ல, இதற்குத்தான் தன்னிடம் பேச முயற்சித்திருப்பான் நாம் தான் தவறாக எண்ணிக்கொண்டோம் என்று நினைத்துக்கொண்டாள்.
நீதிமன்றத்தில் நடக்கும் தன் வழக்கு பற்றியும் தன் முன்னாள் மனைவியின் காதல் பற்றியும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பகிர ஆரம்பித்தான்.
Advertisement
“முன்னாடியே அவனைத்தான் புடிச்சிருக்குன்னா என்னை கல்யாணம் பண்ணாம இருந்திருக்கலாம். சரி வீட்ல போர்ஸ் பண்ணாங்கன்னு வச்சிக்கிட்டாலும் என்கிட்டயாவது சொல்லியிருக்கலாம். அதெல்லாம் விட்டுட்டு என்னோட இருந்தப்போவே அவனோடையும் ரிலேஷன்ஷிப்பை தொடர்ந்திருக்கா.” என்று நொந்து போய் அவன் பேசும் சமயங்களில் பரிதாபம் எழுந்தது.
Advertisement
“இதை என்னால வெளில சொல்லக்கூட முடியல. ஒருமாதிரி எம்பேரசிங்கா இருக்கு. என் வீட்ல கூட ஒத்துப்போகலைனு தான் சொல்லி வச்சிருக்கேன். நான் கொஞ்சம் இறங்கிப்போனா எல்லாம் சரியாகிடும் ஆனா நான் விட்டுக்கொடுத்துப் போகலைனு அவங்களுக்கு வருத்தம். என்னனு நான் இதுல இறங்கி போகமுடியும்னு நீயே சொல்லு குழலி.” அவன் மனக்காயங்களை பகிர்கையில் உண்டான சிநேகம் ஒருமைக்கு தாவ வைத்திருந்தது.
“டிவோர்ஸ் பைனல் ஆகிடுச்சி. செட்டில்மென்ட் பண்ணி முடிச்சிக்கிட்டோம். பேப்பர்ஸ் இந்த வாரம் கைக்கு வந்துடும்.” நிம்மதியாக ஒருநாள் வந்து பகிர்ந்துகொண்டான்.
அதன் பின் பார்க்க நேரும் சமயங்களில் இருவரும் பரஸ்பரம் விசாரித்தலோடு துவங்கிய நட்புறவு நாள் பொழுதில் வலுப்பட்டு இயல்பானதொரு உரையாடல்களின் ஒரு பகுதியில் அதை கேட்டிருந்தான் கணேஷ்.
Advertisement
“இதுவரைக்கும் யார்கிட்டேயும் எதையும் சொல்ல முடியாம ஏதோ ஒன்னு உள்ளுக்குள்ள அழுத்திட்டே இருந்துச்சு. இப்போதான் கொஞ்ச நாளா ரிலீஃபா இருக்கு. ஷால் வீ டேக் இட் பார்வேர்ட்?”
அவன் பேச்சிற்கு செவி சாய்த்தவண்ணம் காபியில் ஒரு கண் வைத்திருந்தவள் புரியாமல் நிமிர்ந்தாள், “வாட்? கம் அகெயின்.”
பெருமூச்செடுத்தவன், “என்னை பத்தி எல்லாம் சொல்லிட்டேன். டிவோர்ஸ் கிடைச்சிருச்சு. உனக்கு ஓகேன்னா நாம சேர்ந்திருக்குறதை பத்தி யோசிச்சு பாரேன். நமக்குள்ள நல்ல வேவ்லென்த் இருக்கு, செட் ஆகும்னு தோணுது.” என்று உடைத்துப் பேசினான்.
“இல்லை செட் ஆகாது.” அதிர்ந்தாலும் பட்டென்று வந்தது பதில்.
“உடனே சொல்ல வேண்டாம். யோசிக்கலாமே. இல்லை நான் டிவோர்ஸீனு யோசிக்குறியா?” என்று அவன் தயங்கி பார்க்க, அதிர்விலிருந்து வெளிவந்தவளோ தன் நிபந்தனைகளை முன்வைத்து தன்மையாய் மறுத்தாள்.
“இதுதான் உனக்கு பிரச்சனைனா இனிமே அந்த கவலை உனக்கு வேண்டாம் குழலி. ஐ ஹேவ் நோ பிராப்லம் வித் இட். என் அண்ணன் இருக்கான் அம்மா அப்பா அவன்கூட இருந்துப்பாங்க.” உடனடி தீர்வு சொன்னவனை அயர்ந்து பார்த்தாள் குழலி.
நண்பனாய் பார்த்து பழகியவன் திடுமென இப்படி சொல்லவும் எதுவும் தோணவில்லை குழலிக்கு. பிடித்தமோ, படபடப்போ, இனிய அவஸ்தையோ எதுவுமின்றி அலுவல் மொழி பேசுவது போல் சென்று கொண்டிருக்கும் உரையாடல் அவளை ஈர்க்கவில்லை. மாறாக யோசிக்க வைத்தது.
“எனக்கு டைம் வேணும்.”
“அஃப்கோர்ஸ் டேக் யுவர் டைம். ஐ வில் வெயிட். பட் அதுக்காக நம்ம பிரெண்ட்ஷிப்ல பிரேக் வர விடவேணாம். லெட் அஸ் பீ நார்மல்.” என்றவன் அதன்பின் அந்த பேச்சை எடுக்கவில்லை.
அலுவல் ரீதியான பேச்சுக்கள் தவிர்த்து வரவேற்பாய் ஒரு புன்னகை, இடைவெளியில் காபியின் நறுமணத்துடனான பொழுதுகள், உணவு பரிமாற்றங்கள் என்று அவர்களின் பழக்கம் தொடர்ந்தது.
“இப்போல்லாம் என்னைவிட அந்த கணேஷ் கூட அதிகம் டைம் ஸ்பென்ட் பண்ற மாதிரி இருக்கே. என்ன மேட்டர்?” என்று ராஷ்மி கேட்க, அதற்காகவே காத்திருந்தது போல் அனைத்தையும் ஒப்புவித்தாள் குழலி.
“அடிப்பாவி… இவ்ளோ நடந்திருக்கு, இப்போதான் வாய் திறக்குற நீ? கணேஷ் டிவோர்சியா?” உரிமையாய் கோபித்துக்கொண்டவளை பார்த்து மெலிதாக சிரித்தவள்,
“நீயே கேப்பேனு பாத்தேன்.”
“க்கும்… நோ சொல்லாம எதுக்கு இன்னும் பழகிட்டு இருக்க?”
“எதுக்கு நோ சொல்லணும்னு தான் யோசிச்சிட்டு இருக்கேன்.” என்ற குழலியை வெட்டவா குத்தவா என்று பார்த்து வைத்தாள் ராஷ்மி.
“உனக்கு என்ன குறைன்னு டிவோர்சியை சாய்ஸ்ல வச்சிருக்க? இத்தனை நாள் யோசிக்க இதுல ஒண்ணுமே இல்லை.”
“டிவோர்ஸ்ஸை குறையா பாத்தா என்கிட்டேயும் குறை இருக்கே. இங்க இருக்குற சமூக கட்டமைப்புக்கு எதிரான ஒரு விஷயத்தை நான் எதிர்பாக்குறேன்.” என்றவளை ராஷ்மி முறைக்க,
“என் வீட்லையே அப்படிதான் சொல்றாங்கபா.” என்றாள் பாவமாய்.
மேல சொல்லு என்று ராஷ்மி அவளையே குறுகுறுவென பார்க்க,
“குழப்பமா இருக்குனு எல்லாம் சொல்ல மாட்டேன். யார்கிட்டேயும் ஷேர் பண்ணிக்கிட்டா நல்லா இருக்குனு தோணிட்டே இருந்துச்சு. இன்னைக்குத்தான் நீ கேட்டிருக்க.”
“சொல்லுங்க மகாராணி நீங்களா சொல்லுவீங்களானு தான் இவ்ளோ நாளா பாத்துட்டு இருந்தேன்.” அனைத்து பற்களையும் காட்டி அவள் கேலியாய் சிரித்துவைக்க, தன் எண்ணங்களை பகிர்ந்தாள் குழலி.
விவாகரத்தானவன் என்பதை தாண்டி அவனின் அணுகுமுறையும் அவள் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட விதத்தையும் பகிர்ந்தவள் தனக்கு பார்த்த தொண்ணூத்தி ஒன்பது வரனும் அமையாமல் போனதை சுட்டிக்காட்டினாள். தன்னிடமிருந்து அவர்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்ள தன் தோளை எதிர்பார்த்தவர்கள் தனக்கு தோள் கொடுக்க முன்வரவில்லை, கணேஷ் தான் முதல் ஆளாக ஒத்துக்கொண்டிருக்கிறான். பார்ப்பதற்கும் நன்றாக இருக்கிறான், என்னை விட வயது ஒன்றிரண்டு தான் அதிகமிருக்கும் தன்மையாக பேசுகிறான், நம்பும்படியாக இருக்கிறது அவன் நடவடிக்கைகள் என்று அடுக்கினாள் குழலி.
“ஒத்துவராத தொண்ணூத்தி ஒன்பதை விட்டுரு அந்த ஒரு வரன் இருக்கே அதுக்கு ஓகே சொல்ல வேண்டியது தான. கணேஷை ஏன் கன்சிடர் பண்ற?”
“அந்த ஒருத்தரே இவர் தான்.”
தலையில் கைவைத்தவளோ, “ஏய் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத எனக்கு என்னமோ நீ ராங் ரூட்ல யோசிக்குறேனு தோணுது. அவர் பக்க கதை மட்டும் சொல்லி உன்கிட்ட அனுதாபம் வாங்கி ஓகே சொல்ல வைக்கலாம்னு நினைக்கிறார் போல. நீ ஸ்டடியா நில்லு. இவ்ளோ நாள் வெய்ட் பண்ணிட்ட, இன்னும் கொஞ்சம் வெய்ட் பண்ணேன். உனக்கு ஏத்தவர் கண்டிப்பா உன் லைப்ல வருவார்.” ராஷ்மி நம்பிக்கையாய் பேச, குழலியிடம் அது பற்றாக்குறையாகியதோ…
“வெய்ட் பண்ண நான் ரெடி தான். ஆனா வீட்ல எல்லாரும் ரொம்ப கவலைப்படுறாங்க. இதால தங்கச்சிங்க வீட்ல பிரச்சனை வருமோனு தோணுது. ஏற்கனவே சந்தியா வீட்டுக்காரர் பாத்த ரெண்டு பேரை வேண்டாம்னு சொல்லிட்டேனு அம்மாகிட்டேயே ஜாடையா பேசுனவரு சந்தியாகிட்ட என்ன சொன்னாரோ லாஸ்ட் டைம் அவ வீட்டுக்கு வந்தப்போ என்னை புடிச்சி நெருக்கிட்டா.”
“அதுக்காக எல்லாம் இப்படி ஒரு முடிவெடுக்கணும்னு அவசியம் இல்லடி. சொல்றவங்க சொல்லிட்டுதான் இருப்பாங்க. ஏன் இத்தனை வருஷத்துல உன்னை விட்டுட்டு உன் தங்கச்சிங்களுக்கு கல்யாணம் பண்ணும் போது நீ கேட்காத பேச்சையா இப்போ கேட்டுற போற? பொண்ணுக்கு ஏதோ குறை அதான் மூத்தவளுக்கு கல்யாணம் பண்ணாம இளையவளுக்கு கல்யாணம் பண்றாங்கனு எல்லாம் பேசின நாக்கு நிறைய இருக்கு. அதையெல்லாம் கடந்து வந்தது இந்த கணேஷ்காகவா? யக்… ஐ காண்ட் டைஜஸ்ட்.” என்ற ராஷ்மியின் முகம் போன போக்கில் குழலியின் முகமும் சுருங்கியது.
“ஓகே என் ஒபீனியன் கூட விடு. கணேஷை பார்த்தா ஒரு ஸ்பார்க்? அச்சம், மடம், நாணம் இதுல ஒண்ணாவது வருதா?” என்று கேட்க, வேடிக்கையாக சிரித்தாள் குழலி.
“அடியே எனக்கென்ன பத்தொம்பது முடிஞ்சி இருபதா ஆரம்பிக்குது இந்த பட்டாம்பூச்சி பறக்குறது, கை கால் எல்லாம் சிலிர்த்து போறது, கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடுறதுனு. அந்த வயசெல்லாம் கடந்து வந்துட்டேன்.”
“இருபது, முப்பது என்ன அம்பது வயசுல கூட நம்ம துணை நம்மள பார்க்கும் போது காரணமே இல்லாம சிரிப்போ சிலிர்ப்போ வரணும். அவங்களோட ஒத்தை பார்வை நம்மளை சாந்தப்படுத்தனும், அதே ஒத்தை பார்வை நம்மளை கோவப்படுத்தவும் செய்யும். அதையெல்லாம் பேசி சரிபண்ணி கடந்து வரணும். அப்போதான் லைப் நல்லாயிருக்கும். நூத்து கிழவி மாதிரி யோசிச்சு வைக்காம, கணேஷுக்கு நோ சொல்லு. நான் பாக்குறேன் உனக்கு மாப்பிள்ளை. முப்பது வயசெல்லாம் ஒரு வயசா?” தனக்காக என்று ராஷ்மி பேசியது இதமளித்தாலும் தன் குடும்பத்தின் நிலை தனக்குத்தானே தெரியும், தன் முடிவுதான் இனி என்பதில் திண்ணமாய் நின்று கணேஷுக்கு சரி சொல்லிவிட்டாள்.
ராஷ்மியே எதிர்க்கும் போது வீட்டினில் எதிர்ப்பு வராமல் இருக்குமா?
“நான் கொண்டு வந்த மாப்பிள்ளை எல்லாம் எப்படிபட்டவங்க அவங்களை விட்டுட்டு போயும் போயும் ரெண்டாந்தாரமா போகணும்னு என்ன வந்துச்சு. இங்க பாரு குழலி குடும்பத்துக்கு மூத்தவளா இருந்து எல்லாம் சரியா பண்றதால நீ எடுக்குற முடிவெல்லாம் சரியா இருக்கணும்னு இல்லை.” என்று ரிஷி குழலியிடம் நேரடியாக பேசிவிட்டான்.
“அவர் சொல்றதுல என்ன தப்பிருக்கு?” என்று தங்கைகளும் ரிஷிக்கு துணையாய் நிற்க, பிரபாவுக்கு நெஞ்சு முட்டியது. தன் கையாலாகாத்தனம் தானோ மகளை இப்படியொரு முடிவெடுக்க தூண்டியது? என் மகள் இரண்டாம்தாரமாகவா? முடியாது முடியவே முடியாது என்றார்.
“நமக்கு ஏத்த மாதிரி ஒருத்தர் தன்னை மாத்திக்க தயாரா இருக்காருன்னா நாமளும் சிலதை அட்ஜஸ்ட் பண்ணிக்கத்தான் வேணும்.” என்று வாதிட்டாள் குழலி.
“இப்படி ஒருத்தரை கல்யாணம் பண்றதுக்கு நீ பண்ணிக்கவே வேண்டாம். கடைசி வரை இப்படியே என்கூட இருந்துடு.” என்று பிரபாவே சொல்லிவிட்டார்.
“ம்மா ஏம்மா நீ வேற…” என்று மகள்கள் பிடித்துக்கொள்ள,
“எல்லாத்தையும் சரியா செய்யுற நீங்க இப்படியொரு முடிவுக்கு வருவீங்கன்னு எதிர்ப்பாக்கல. ஒருவேளை உங்க மனசை புரிஞ்சு நடந்ததுக்குறவர் இவர்தான்னா நாங்க என்ன சொன்னாலும் அது மாறப்போறதில்லை.” வந்தனா கணவன் அமுதன் மட்டும் முழுதாக மறுப்பு கூறாமல் குழலி புறம் நின்றான்.
சில மாதங்கள் போராட்டத்திற்கு பிறகு குழலியின் முடிவே வென்றுவிட, கணேஷ் குடும்பத்தினர் பெண் பார்க்கவென வந்தனர். வீட்டினர் ஒருவர் முகத்திலும் களிப்பு இல்லை. கடனே என்று அவர்களை வரவேற்று உபசரித்தனர். ரிஷி வராமல் இருந்து தன் எதிர்ப்பை காண்பித்தான். அமுதன் முன்னின்று பேச, திருமணத் தேதி முடிவாகியது.
“கல்யாணம் முடிஞ்சி இங்கதான் கணேஷ் இருக்கப்போறன்னதும் கொஞ்சம் அதிர்வா தான் இருந்துச்சி. என் நாத்தனார் கூட இதெல்லாம் இல்லாத வழமையால இருக்கு. ஏன் இப்படினு சொல்லிட்டு இருந்தாங்க. நானுமே கொஞ்சம் யோசனையா தான் இங்க வந்தேன். குழலியை பாத்ததுக்கு அப்புறம் இப்படி ஒரு பொண்ணுக்கு துணையா இருக்குறதுல தப்பே இல்லைனு தான் தோணுது. மாசத்துக்கு ஒரு தடவை இல்லையா விஷேஷ நாள்ல இங்க கொண்டாடிட்டு அங்க நம்ம வீட்டுக்கு வந்துட்டு போகட்டும்.” என்று கணேஷின் அன்னை குழலி கைப்பிடித்து பேச, குழலி வீட்டினரின் புருவங்கள் உயர்ந்தது. மனம் இளகினாலும் முழுமனதாக ஏற்க முடியாமல் நின்றனர்.
குழலி மற்றும் கணேஷின் விருப்பப்படி எளிதாக கோவிலில் வைத்து திருமணம் பின் சிறிய பார்ட்டி வேண்டுமென்றால் வைத்துக்கொள்ளலாம் என்று பேசி முடித்து அவர்கள் கிளம்பிய நொடி தங்கைகளும் கோபித்துக்கொண்டு அவர்கள் வீடு சென்றுவிட்டனர்.
“இன்னும் நேரம் இருக்கு. யோசிடி.” என்ற பிரபாவை சரிகட்டிவிட்டாள்.
“உங்க வீட்ல யாருக்கும் நம்ம கல்யாணத்துல விருப்பம் இல்லையோ?” மறுநாள் குழலியை பிடித்து நிறுத்தி கணேஷ் கேட்க, மறைக்காமல் அவள் ஆம் என்கவும் அவன் முகம் சுருங்கியது.
“ஆரம்பத்துல அப்படி தான் இருக்கும். போகப் போக ஏத்துப்பாங்க.” என்ற பதிலில் லேசாக முகம் மலர்ந்தவன் அவள் கையை பிடிக்க, அனிச்சையாக அதனை உறுவிக்கொண்டாள் குழலி.
“என்னாச்சு?” புரியாமல் அவன் பார்க்க,
“இல்லை கொஞ்சம் அன்ஈஸியா இருக்கு. பழகிடும்.” அவனுக்கு மட்டுமல்ல அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டாள்.
error: Content is protected !!