நன்னிலவு நீ…தண்நிழல் நான்…-12
அத்தியாயம் -12
“தீவட்டிக்கு உயிர்த்தெழும் குகைச்சித்திரத்தின் கண்களில் இருக்கக்கூடும், அதைத் தீட்டியவனின் உயிர்க்காதல்!”
அதிகாலை ஐந்து மணி. மண்டபத்தின் கடற்கரை காற்று ஈரப்பதத்துடன் ஜன்னல் திரைகளை மென்மையாக வருடிக்கொண்டிருந்தது. இரவெல்லாம் தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையிலான ஒரு மாய வெளியில் சஞ்சரித்த ஆதிரை, வழக்கத்தை விட முன்னதாகவே கண் விழித்தாள். மித்ரன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். அவள் மெல்லத் தன் தன்னையறியாமல் நீட்டிய விரல்களால், அவன் நெற்றியில் கலைந்து கிடந்த தலைமுடியை ஒதுக்கினாள். அலை அலையாகக் கிடந்த அந்தத் தலைமுடி ஆதிரையின் மிகப்பெரிய வீக்னஸ். மித்ரன் மெல்லக் கண் விழித்தபோது, எதிரே தெரிந்த அந்த ‘நன்னிலவின்’ முகம் அவனை அப்படியே உறைய வைத்தது. அதிகாலை வெளிச்சம் அவளது முகத்தில் அப்படி ஒரு பாந்தமான பொலிவைத் தந்திருந்தது.
Advertisement
“மித்ரன்… டீ,” என்று ஆதிரை மெல்லிய குரலில் அழைக்க, அவன் எழுந்து அமர்ந்தான்.
அவள் நீட்டிய தேநீர் கோப்பையிலிருந்து வந்த புகையும் அதன் வாசனையும் அவன் மனதை லேசாக்கியது. அந்தத் தேநீரைப் பார்த்தபோதுதான் மித்ரனுக்கு கடந்த கால நினைவுகள் முட்டி மோதின. ஜெர்மனியின் உறையும் குளிரில், இயந்திரத்தனமான தேநீர் பைகளில் (Tea bags) வரும் சுவையற்ற தேநீரைப் பருகும்போதெல்லாம், அவன் ஆதிரை தரும் இந்த இஞ்சி மணக்கும் தேநீரை நினைத்துத்தான் ஏங்கியிருக்கிறான்.
தேநீரைப் பருகியபடியே அவளைப் பார்த்தவன், “தேங்க்ஸ் ஆதி” என்றான். அவளது முகத்தில் ஒரு சிறு புன்னகை அரும்பி மறைந்தது.
Advertisement
“ஆதி… நான் பிரேக்பாஸ்ட் வெளியில சாப்பிட்டுக்கிறேன். லேட் ஆகிடும். விறுவிறுவெனக் கிளம்பிய பின்பு “ஓடி வந்துடுறேன், வெயிட் பண்ணு” என்று சொன்னவன், சட்டென்று குனிந்து அவளது கன்னத்தில் ஒரு மென்முத்தத்தைத் தந்தான். பின்பு அருகே உறங்கிக் கொண்டிருந்த கண்மணியின் நெற்றியிலும் ஒரு முத்தத்தைப் பதித்துவிட்டு, வேகம் வேகமாகப் புறப்பட்டான். அவனது கண்கள் ஏதோ ஒரு பெரிய விடுதலையை எதிர்நோக்கிப் பிரகாசித்தன.
Advertisement
மதுரை நோக்கிச் செல்லும் அந்த நெடுஞ்சாலையில் கார் சீறிப்பாய்ந்தது. நேராக ரிவியூ மீட்டிங் நடக்கும் ஹாலுக்குச் சென்றான். அங்கே மாலினி அவனுக்காகக் காத்திருந்தாள். “மித்ரன்! ஆதிரை பார்த்தீங்களா? எல்லாம் ஓகே-வா (All OK)?, போன் கூட சுவிட்ச் ஆஃப்,”என்று ஆவலுடன் கேட்டாள் மாலினி.
மித்ரன் புன்னகைத்தான். ” ஆமா மாலினி, ஆதி கிட்ட போயிருந்தேன். ஆல் ஓகே என அழகாக ஒரு தம்ப்ஸ் அப் காட்டினான்.
மீட்டிங் முடிந்து, மதிய உணவிற்காகத் தன் தாயின் வீட்டிற்குச் சென்றான் மித்ரன். அவனது தாய் சாரதா, மகனின் முகத்தில் இருந்த அந்தப் புதுத் தெளிவைக் கண்டே நிம்மதி அடைந்தாள்.
Advertisement
“பேசிட்டியாப்பா?”
“பேசிட்டேன்மா. கவின் பத்தி இன்னைக்கு அவகிட்ட சொல்லப் போறேன்,” என்ற மித்ரனை வாஞ்சையோடு தடவிக் கொடுத்தார் சாரதா. “ஆதி தங்கமான பொண்ணுடா. அவளுக்கு உன் மேல கோபம் இருக்கலாம், ஆனா ஒரு தாயா அவ கவினை ஏத்துக்க ஒரு நிமிஷம் கூட யோசிக்க மாட்டா. போயிட்டு வா,” என்று ஆசிர்வதித்தாள்.
அப்போது “அப்பா!” என்று கத்திக் கொண்டு ஓடி வந்தான் கவின். அவனைத் தூக்கி அணைத்துக் கொண்ட மித்ரன், “கண்ணா… COME ON GET READY…LETS GO … அப்பா உன்னை நம்ம குடும்பத்துக்கிட்ட கூட்டிட்டுப் போகப் போறேன். நாம இத்தனை நாள் யாருக்காக ஏங்கினோமோ, அந்த அம்மாகிட்ட போகப் போறோம்,” என்றான்.
“அப்படியாப்பா!” என கவின் துள்ளலுடன் கிளம்பி வர, கார் பயணத்தைத் தொடங்கினான். செல்லும் வழியில் மதுரையின் புகழ்பெற்ற ஸ்வீட் ஸ்டாலில் இறங்கிய மித்ரன், தன் மகள் கண்மணிக்கும்,கவினுக்கும் பிடிக்கும் எனப் பார்த்துப் பார்த்து விதவிதமான சாக்லேட்டுகளை நிறைய வாங்கினான். அத்தோடு ஆதிரைக்கு மிகவும் பிடித்த ‘குல்கந்து பர்பி’ மற்றும் ‘புதினா மிக்சர்’ ஆகியவற்றை வாங்கிக் கொண்டான். மதுரை – ராமேஸ்வரம் சாலை பிரியும் இடத்தில் பெட்ரோல் போட இறங்கியபோது, பக்கத்தில் இருந்த பூக்காரி, “பூ வாங்கிட்டுப் போங்க சார்!” என அழைக்க, மித்ரன் ஒரு பந்து மல்லிகைச் சரத்தை வாங்கி காரில் ஏறினான். கையில் இருந்த அந்த மல்லிகையின் மணத்தை ஆழமாக நாசிக்குள் இழுத்து வாசம் பார்த்துக் கொண்டான்.
அவர்களுக்குத் திருமணமாகி இரண்டாவது வருடம். ஆதிரை கண்மணியைக் கருத்தரித்திருந்த நேரம். அன்று ஆதிரை ஆசையாக மல்லிகைப் பூ கேட்டிருந்தாள். மித்ரன் பெங்களூரு முழுக்க அலைந்து ஒரு சரத்தை வாங்கி வந்து பெருமையாகக் கொடுக்க, அதை வாங்கிய அவளது முகத்தில் மகிழ்ச்சியே இல்லை.
“என்ன மித்ரன் இது? இது மல்லி இல்லை, காக்கரட்டான்! இதுக்கு மணமே இருக்காது பாருங்க. ஐஐஎஸ்சி-ல பெரிய சயின்டிஸ்ட்டா இருக்கீங்க… ஒரு பூக்காரி கிட்ட இப்படி ஏமாந்துட்டு வந்து நிக்கிறீங்களே!” என்று அவள் கிண்டலாகச் சிரிக்க, மித்ரன் அசடு வழிந்தான்.
“மல்லியோட வாசம் தான் அதோட உயிர் மித்ரன்” என்று அவள் அன்று சொன்னது இன்று அவன் காதுகளில் எதிரொலித்தது.
உள்ளம் உவகையில் துள்ள, “என் உயிர் நீதானே.. உன் உயிர் நான் தானே..” என்ற பாடலை உற்சாகமாக விசில் அடித்தபடியே காரின் இக்னிஷனைத் திருப்பி ஸ்டார்ட் செய்தான்.
“கவின்… சீட் பெல்ட் போட்டுக்கோ… போலாமா?” என்று அவன் கேட்க, கவின் உற்சாகமாகத் தலையசைக்க கார் மண்டபம் நோக்கிப் பறந்தது.
“அப்பா… ஆதிரை அம்மா எப்படி இருப்பாங்கப்பா? எனக்கு ஒரு சிஸ்சி (Sissy) வேற இருக்கான்னு சொன்னீங்கள்ல… அவ எப்படி இருப்பா?” – கவினின் கேள்வி மித்ரனின் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகையை அரும்பச் செய்தது.
மித்ரன் தன் அகக்கண்ணில் விரியும் அந்த உருவங்களை வார்த்தைகளில் வடிக்கத் தொடங்கினான். “கண்ணா… ஆதிரை அம்மா அன்புக்கு இன்னொரு பேரு. ஆனா, அதே சமயம் அவங்க ரொம்ப ‘ஸ்ட்ரிக்ட்’ தெரியுமா? வீட்டுல எந்தப் பொருள் எந்த இடத்துல இருக்கணும்னு ஒரு கணக்கு இருக்கு அவகிட்ட. எல்லாம் அவ்வளவு நேர்த்தியா, ஒழுங்கா இருக்கணும்னு நினைப்பாங்க. உன்னையெல்லாம் பார்த்தா அவ்வளவுதான்… உன்னையும் ரொம்ப டிசிப்ளின்டா (Disciplined) மாத்திடுவாங்க.
மித்ரன் ஒரு நிமிடம் சிரித்துக்கொண்டே தொடர்ந்தான், “இனிமே நீ எதையும் அங்க இங்க தூக்கிப் போட முடியாது. ஆனா, உனக்கு ஒரு சூப்பர் கம்பேனியன் காத்துட்டு இருக்கா. உன் சிஸ்சி கண்மணி… அவ உனக்கு ஒரு பெஸ்ட் ஃப்ரெண்டா இருப்பா. அவ உன்னையும் அவ கூடவே கூட்டிட்டுப் போய் எல்லா விளையாட்டும் விளையாடுவா”.. மித்ரன் ஆதிரையின் நேர்த்தியைப் பற்றியும், கண்மணியின் சுட்டித்தனத்தைப் பற்றியும் சொல்லச் சொல்ல, கவினுக்கும் தோன்றியது… “அப்பா சொல்ற அந்த அம்மா, நிஜமாவே ஒரு தேவதை மாதிரி இருப்பாங்களோ? அவங்ககிட்ட போனா எனக்குக் கதைகள் சொல்லுவாங்களா? கண்மணி சிஸ்சி கூட சேர்ந்து கார்ட்டூன் பார்க்கும்போது எவ்வளவு ஜாலியா இருக்கும்!”. மித்ரனின் குரலில் இருந்த அந்த நெகிழ்ச்சியும், ஆதிரை-கண்மணி மீதான அவனது பெருமிதமும் கவினுக்கும் ஒரு அழகான சித்திரமாக அவன் மனதிற்குள் பதிந்தது.
தன் குடும்பத்தை முழுமையாக்கச் செல்லும் அந்தப் பயணத்தில், மித்ரன் ஒரு காதலனாகவும் தந்தையாகவும் பெரும் நம்பிக்கையுடன் கார் ஓட்டிக்கொண்டிருந்தான். மெல்ல மெல்ல கவின் உறக்கத்திற்குச் சென்றான்.
அவனது தலை மித்ரனின் தோளுக்கு அருகில் சாய்ந்திருக்க, மித்ரன் இடது கையால் மகனின் தலையை மென்மையாக வருடிவிட்டு, ஏசி குளிரைத் தணித்தான்.
வெளியே மாலை நேரத்துச் சூரியன் கடலில் மறையத் தயாராகிக் கொண்டிருக்க, காரின் உள்ளே மல்லிகையின் வாசம் ஒரு மயக்கத்தைத் தந்தது. மித்ரன் தனக்குப் பிடித்த ‘இளையராஜா கலெக்ஷன்’ பென்டிரைவைச் சொருகி மியூசிக் சிஸ்டத்தின் வால்யூமை மெல்ல உயர்த்தினான். கார் ஸ்பீக்கர்களில் இசையும் ஒலிக்கத் தொடங்கியது.
“….தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு நெஞ்சில் ஆடும் சுவாசச் சூட்டில் காதல் குற்றாலம்…”
எஸ்.பி.பி மற்றும் சித்ராம்மாவின் குரல்களில் தேனாகப் பாய்ந்தன.
“தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான் சேலை நதி ஓரமாய் நீந்தி விளையாடவா…”
அந்தப் பாடல் வரிகள் அப்படியே அவன் மனதின் தற்போதைய நிலையைப் பிரதிபலிப்பதாக அவனுக்குத் தோன்றியது.
“ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி”……
கட்டிலும் கால்வலி கொள்ளாதோ?
கைவளை கைகளைக் கீறியதோ?”
அந்த வரிகளின் ஆழத்தில் மூழ்கிய மித்ரன், தன்னை அறியாமல் வியந்து முணுமுணுத்தான். “ப்பா… என்ன மாதிரி லிரிக்ஸ்! இந்த அறிவுமதி நிஜமாவே ஒரு லெஜண்ட். அவர் தமிழைப் பயன்படுத்தும் விதம் …’ஆசைக் கேணி’, ‘சேலை நதி’ எப்படி இப்படி யோசிச்சிருக்காரு!” என்று ரசித்தவனின் கரங்கள் பாடலின் தாளத்திற்கு ஏற்ப மித்ர ஸ்டீயரிங்கில் தாளம் போட, பாடலின் ஒவ்வொரு வரியும் ஒரு ஓவியம் போல மித்ரனின் மனதில் ஆதிரையின் பிம்பத்தைத் தீட்டிக் கொண்டே வந்தது.
கிழக்கு கடற்கரைச் சாலையில் ரம்மியமான அந்த மனநிலையுடன்… வெகு விரைவில் தன் வீட்டை எட்டினான் மித்ரன். (அது என்ன தன் வீடு? ஆதிரையின் வீடு என கேட்கலாம்… ஆதிரையும் மித்ரனும் இருவர் அல்லவே! 😉)
தூரத்தில் ஆதிரை தன் வீட்டின் வாசலில் ஒரு சிலையைப் போல நின்று கொண்டிருப்பது தெரிந்தது. மித்ரன் காரை மெல்ல மெதுவாக நகர்த்தி வாசலில் நிறுத்தினான்.
அவன் கவினுடன் கீழே இறங்கினான். ஆதிரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது கண்களில் ஆச்சரியமும், எதிர்பார்ப்பும் ஒருசேரத் தெரிந்தன.
அப்போது, வீட்டிற்குள்ளிருந்து “அப்பா!” என கத்திக்கொண்டே ஓடி வந்தாள் கண்மணி. ஆனால், காரின் அருகில் நின்றிருந்த கவினைக் கண்டதும் அவளது வேகம் சட்டென்று குறைந்தது. இருவரும் சில நொடிகள் ஒருவரை ஒருவர் இமைக்காமல் பார்த்துக் கொண்டனர்.
அந்த மெல்லிய மௌனத்தைக் கலைக்கும் விதமாக, “ஹே நீயா!?” என்று கவின் கேட்க, அதே கணத்தில் “ஹே நீயா!?” என கண்மணியும் ஆச்சரியத்தில் துள்ளினாள். இருவரும் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொண்டனர்.
பள்ளியில் ஒருவரை ஒருவர் தெரியாமல் பார்த்துக்கொண்டவர்கள், இன்று ஒரே முற்றத்தில் சந்திப்பார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அந்தத் துள்ளலும், சிரிப்பும் அந்த வீட்டின் வாசலில் ஒரு புதிய உயிர்ச்சக்தியைப் பாய்ச்சியது.
ஆதிரை திகைத்து நின்றாள். தன் மகள் கண்மணியும், மித்ரன் கையைப் பிடித்துக்கொண்டு வந்த அந்தச் சிறுவனும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பது அவளுக்குப் பெரும் வியப்பைத் தந்தது.
அப்போது கண்மணி ஆதிரையின் கையைப் பிடித்து உலுக்கிக்கொண்டே, “ம்மா… நான் சொன்னேன்ல! அந்தப் போயட்ரி காம்பிடிஷன்ல (Poetry Competition) ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கினது இவன்தான்மா! கவின்…” என உற்சாகமாக ஆதிரையிடம் கூறினாள்.
கண்மணியின் பேச்சைக் கேட்டு ஆதிரை ஆச்சரியத்தில் கவினைப் பார்க்க, கவின் மித்ரனின் கையைப் பிடித்துக் கொண்டு, “ஆமாப்பா… நாங்க திருச்சி KV-ல (Kendriya Vidyalaya) மீட் பண்ணினோம்ப்பா!” என்றான்.
அந்த நொடி… “அப்பா” என்ற அந்த ஒற்றைச் சொல் ஆதிரையின் காதுகளில் இடி முழக்கமாய் வந்து விழுந்தது. கவின் மித்ரனை ‘அப்பா’ என்று அழைப்பதைக் கேட்டதும், ஆதிரையின் முகம் அப்படியே மாறியது. இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் தைத்த அந்த வலி அவளது முகத்தில் பிரதிபலித்தது.
மித்ரனை ஒரு அந்நியனைப் போலப் பார்த்தாள். “அப்பாவா? இவன் மித்ரனை அப்பா என்று அழைக்கிறானா? அப்படியென்றால் இத்தனை வருடங்களாகத் தன்னைத் தேடி வராமல் இருந்த மித்ரனுக்கு வேறொரு வாழ்க்கையும், ஒரு மகனும் இருக்கிறார்களா?”
அவளது கண்கள் சிவக்க, உடல் நடுங்கியது. மித்ரன் ஏதோ சொல்ல வாயெடுத்தான், ஆனால் ஆதிரையின் பார்வை அவனைப் பேச விடாமல் தடுத்தது.
அப்போதுதான் அந்தத் திருப்பம் நிகழ்ந்தது!
கவின் ஓடிச் சென்று ஆதிரையின் கையைப் பிடித்துக் கொண்டு, “நீங்கதான் அம்மாவா? அப்பா உங்களைப் பத்தி எப்பவும் சொல்லுவாங்க. ஆனா, போட்டோவுல இருந்ததை விட நேர்ல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கம்மா!” என்றான்.
ஆதிரையின் கண்கள் கனல் தெறிக்க மித்ரனைப் பார்த்தன. விதியின் வினோத ஆட்டம் அந்தப் பொழுதில் விஸ்வரூபம் எடுத்தது.
கவினுடைய விரல்களை வெடுக்கென விளக்கிய ஆதிரை, சட்டென்று இரண்டடி பின்வாங்கினாள். அவளது அந்தச் செய்கையில் இருந்த வேகம், கவினை நிலைகுலையச் செய்தது. கவினைத் பார்த்த ஆதிரை, அமர்த்தலான அமைதியுடன் சொன்னாள், “இல்ல… நான் உன் அம்மா இல்ல. நான் ஆதிரை! உன் அம்மா பேரு சந்தியாவா இருக்கும்… ‘சந்தியா’ அப்படித்தானே மித்ரன்?” என்று அவனை வெறித்தபடி கேட்டாள்.
மித்ரனுக்கும் ஆதிரைக்கும் இடையில் ஒரு மௌனப் போர் வெடித்துக் கொண்டிருந்த அந்த விநாடியில், விதி தனது அடுத்த ஆட்டத்தை ஆடியது.
யாரும் எதிர்பார்க்காத விதமாக, கலகலவெனப் பேசிக்கொண்டிருந்த கவின், திடீரென்று “அப்பா…” என முணுமுணுத்தபடி நிலைகுலைந்து தடாலாலென்று தரையில் விழுந்தான்.
“முகிலா!” என்று மித்ரன் அலறிக் கொண்டு அவன் அருகே ஓடினான். கண்மணி பயந்து போய் ஆதிரையைக் கட்டிக்கொண்டாள்.
ஆதிரை தன் கோபத்தை அப்படியே மறந்துவிட்டு, ஒரு தாயுள்ளத்துடன் கவினின் அருகே ஓடி வந்தாள். அவள் மித்ரனைப் பார்த்த பார்வையில் இப்போது கோபத்தை விட, “இவனுக்கு என்ன ஆனது?” என்ற தவிப்பே அதிகமாக இருந்தது.
அந்தக் கணம் மித்ரனுக்குத் தலை வெடித்துவிடும் போலிருந்தது. ஆதிரை சொன்ன ‘சந்தியா’ என்ற பெயரும், அவள் காட்டிய அந்தத் துவேஷமும் ஒருபுறம் அவனைத் தாக்க, மறுபுறம் கவின் மயங்கி விழுந்தது அவனைக் கதறச் செய்தது.
“முகிலா… முகிலா!” என்று அலறியபடியே, தரையில் கிடந்த கவினை வாறி அணைத்துத் தன் மார்போடு சேர்த்துக் கொண்டான் மித்ரன்.
அவன் கவினை (முகிலனை)த் தூக்கிக் கொண்டு நிமிர்ந்தபோது, ஆதிரையைப் பார்த்த அந்தப் பார்வையில் அத்தனை மாற்றங்கள்!
அவனது கண்களில் இதுவரை இருந்த தவிப்பும், சொல்ல முடியாத வலியும் ஒரு நொடியில் மறைந்து, அங்கே கடும் கோபம் குடியேறியது. அவன் ஆதிரையைப் பார்த்த அந்தப் பார்வையிலேயே, அவள் இத்தனை நேரமாகத் தன் மனதில் கட்டி வைத்திருந்த கோபக் கோட்டை சரிந்தது.
“ஆதிரை… இப்போ இதைப் பேச நேரமில்லை! முகிலுக்கு ஏதோ ஆகுது… ப்ளீஸ்… வண்டிய எடு!” என்று அவன் பதட்டமாகக் கத்த, ஆதிரை சட்டென்று சுயநினைவுக்கு வந்தாள்.
விதி இப்போது ஒரு மருத்துவமனையின் அவசரப் சிகிச்சைப் பிரிவை (ICU) நோக்கி அவர்களை அழைத்துச் சென்றது.

