Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ரீங்காரம் – 2.2

“ஆமா, என் தங்கச்சி எங்கே?”

“அவங்க சொந்த அண்ணனே இவ்வளவு பாசமா கூப்பிடலை, நீங்க எதுக்கு இவ்வளவு உருகுறீங்க?”

“அந்தப் பொண்ணுக்குத்தான் அம்மா டிரஸ் எடுத்துட்டு வந்தாங்க, அதைக் கொடுக்கணும்” எனக் கையிலிருந்த பையைக் காட்டினான். அவர்கள் பேச்சிற்குச் சொந்தக்காரியான அன்பரசி சமையலறையிலிருந்து வெளிப்பட, அவளின் தோற்றத்தைப் பார்த்த சஞ்சீவ் நவிரனை முறைத்தான்.

“என்னை எதுக்கு முறைக்கிறீங்க? அம்மா அவங்களுக்கு டிரஸ் எல்லாம் நேத்தே அண்ணன் கையில கொடுத்துட்டாங்க!” என நவிரன் கூற, சஞ்சீவ் கோபமாக எழப் பார்த்தான். அதற்குள் வீரா தன் மனைவியை நெருங்கியிருந்தான். வீரா அங்கே செல்லவும், சஞ்சீவ் அடுத்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத நிலை. பெரியவர்கள் நிர்மலாவோடு பேசிக்கொண்டிருக்க, இந்த இளைய ஜோடியை எவரும் கவனிக்கவில்லை.



Advertisement

சஞ்சீவின் கோபத்திற்குக் காரணம், வீராவின் மனைவி அன்பரசி மிகவும் எளிமையான ஒரு குர்தாவில் இருந்ததுதான். வீட்டில் பெண்கள் அனைவரும் வைரங்களில் மின்ன, இவளோ தாலிக்கொடியைத் தவிர வேறு எந்த நகையும் இன்றி நின்றாள். வீட்டிற்கு வந்த பெண்ணைக் கவனிக்க மாட்டார்களா என்கிற ஆதங்கத்தில் சஞ்சீவ் சிவந்த கண்களோடு நவிரனை முறைத்தான். இப்போது வீராவின் அகன்ற தோற்றம் அன்பரசியின் மெல்லிய உருவத்தை மொத்தமாய் மறைத்துவிட, இருவரின் முகமும் தெரியாமல் போனது. ஒரு நிமிடம் அப்படியே நின்றவர்கள், பின் மாடிப்படி நோக்கி நகரத் தொடங்கினர். அன்பரசி முன்னே செல்ல, அவளைத் தொடர்ந்து வீராவும் மேலேறினான்.

“ரொமான்ஸ் பண்ணக் கிளம்பிட்டான் என் அண்ணன்!” என நவிரன் கிண்டலடிக்க, “பண்ணிட்டுப் போகட்டும்!” என நொடித்துக்கொண்ட சஞ்சீவ், தான் கொண்டு வந்த பையை அன்னையிடம் ஒப்படைத்தான்.

“அத்தான்… என் டிரஸ் எப்படி இருக்கு?” எனப் பாவாடையை மயிலிறகு போல் விரித்துச் சக்தி காட்டினாள். அவளை மேலிருந்து கீழ் வரை உற்றுப் பார்த்த சஞ்சீவ், “உனக்கென்ன… நீ எப்பவும் அழகாத்தான் இருக்க சக்தி. இந்த மூக்கும் கண்ணும் மட்டும் என் அம்மா மாதிரி கொஞ்சம் இருந்திருக்கலாம்!” என்றான்.

Advertisement

“பார்த்தியா கோதை… இந்தப் பையன் எவ்வளவு தெளிவா ரெண்டு பக்கமும் ஸ்கோர் பண்றான்னு!” என மரகதவள்ளி பூங்கோதையிடம் கேட்க, சஞ்சீவ் அவரைப் பார்த்துச் சிரிப்போடு கண்ணடித்தான்.

Advertisement

“உங்க பையன் புழைச்சுக்குவார் அத்தை!” எனச் சக்தியும் கூற, “இல்லைன்னா உன்ன மாதிரி ஆளை என் பிள்ளை எப்படித்தான் சமாளிக்கிறதோ?” என நிர்மலாவும் தன் மகனை விட்டுக்கொடுக்காமல் பேசினார். ஆனாலும் அவர் பார்வை, தன் சாயலிலேயே பிறந்திருக்கும் அந்தப் பருவ மங்கை சக்தி மீதுதான் சுவாரஸ்யமாகப் படிந்தது. இன்று அவள் இன்னும் அழகாய் மின்னினாள். அதற்கு வைர அணிகலன்களோ, பட்டு ஆடையோ காரணமல்ல; காரணமே இல்லாமல் அவள் இதழ்களில் ஜொலிக்கும் அந்தச் சிரிப்புதான்!

“வீரா!” வேலு பேரனை அழைக்க, அப்போதுதான் அனைவரின் பார்வையும் மூத்தவனைத் தேடியது. நவிரன் வாயை மூடிக்கொண்டான்; சகோதரனிடம் எதற்கு முறைப்பு வாங்க வேண்டும்?

“மாடிக்குப் போயிருக்கான் தாத்தா, கால் பண்றேன்” எனச் சஞ்சீவ் வீராந்தகனுக்கு அழைத்துப்பேசினான். 

Advertisement

“வர்றான் தாத்தா… சட்டைல ஏதோ கரை பட்டிடுச்சு போல” எனச் சஞ்சீவ் தகவல் சொல்ல, நவிரன் அவனை நக்கலாகப் பார்த்தான். பத்து நிமிடத்தில் வீராந்தகன் கீழே வர, அன்பரசி அழகிய இளமஞ்சள் மென்பட்டுப் புடவையில் அவனைத் தொடர்ந்து வந்தாள். பெண்கள் அனைவரும் அன்பரசியின் ஆடை மாற்றத்தைக் கவனித்துவிட்டனர்.

“ஒரு சட்டை மாத்த இவ்வளவு நேரமாடா? எல்லாரையும் விரட்டிட்டு நீ கடைசியில வந்து நில்லு!” சேந்தன் கூற, “வாங்க கிளம்பலாம்” என வீரா மேற்கொண்டு பேச்சு வளர்க்காமல் வாயிலை நோக்கி நடந்தான்.

மூன்று வாகனங்களில் குடும்பத்தினர் அனைவரும் அந்தக் கோவிலில் இறங்கினர். பூஜை சிறப்பாக முடிந்து, வேலுவுக்குக் கோவில் மரியாதைகள் செய்யப்பட்டன. “மதியம் அன்னதானம் எப்படி நடந்துச்சு ஐயரே?” என வேலு கேட்க, “சிறப்பா முடிந்ததுங்க ஐயா. உங்க வீட்டுப் புது மருமகளும் பேரனும் கூடவே இருந்து முடிச்சுட்டுதான் போனாங்க. இன்னும் ரெண்டு நாளைக்கு அன்னதானம் ஏற்பாடு பண்ணச் சொல்லியிருக்கார் தம்பி” என்றார் ஐயர்.

இதைக் கேட்ட சக்தி, நவிரன் காதில், “எப்படிடா இவரு மட்டும் சைலென்ட்டா ஸ்கோர் பண்றார்?” என்றாள். வேலுவின் பார்வை பேரன் வீரா மீது மெச்சுதலாய் படிவதைக் கண்டு சக்திக்கும் நவிரனுக்கும் சிறு பொறாமை.

“அதான் அப்போவே படிங்கன்னு சொன்னான், நான் கேட்கல!” எனப் போலி வருத்தத்தோடு நவிரன் கூற, சக்தி அவன் பிடரியில் ஒரு அடி கொடுத்தாள். 

“நீ அரியர் கிளியர் பண்ணவே இல்லைனாலும், உன்னை அடுத்த மாசத்துல இருந்து மில்லுக்கு வரவழைக்க பிளான் போட்டுட்டாங்க.”

“இது எப்போ?”

“போன வாரம் நீ நடுராத்திரி வீட்டுக்கு வந்தியே… அன்னைக்கு முடிவாச்சு. இனிமே நைட் வீடியோ கேம்ஸ் கிடையாது, காலையில பத்து மணி வரை கனவுல டூயட் கிடையாது. முக்கியமா பாக்கெட் மணி கிடையாது. நீ பார்க்குற வேலைக்கு மட்டும் அளவா சம்பளம் வரும்!”

நவிரன் நெஞ்சில் கை வைத்து மயங்கி விழாத குறைதான். இரண்டு வருடங்களுக்கு மேலாக மேல் படிப்பு படிக்க வேண்டும் எனச் சொல்லி, இளங்கலைப் படிப்பிலேயே அரியர் வைத்து நாட்களை இழுத்திருந்தான். சேந்தனும் அவனுக்குச் சுதந்திரம் கொடுத்திருந்தார். ஏனெனில் நவிரனுக்குத் தொழிலில் விருப்பமில்லை, அவனது ஆசை எல்லாம் அனிமேஷன் படித்து அதில் வளர வேண்டும் என்பதுதான். ஆனால் வீட்டில் விருப்பமில்லாமல் அவனைப் பொறியியல் படிக்க வைத்ததால் ஏற்பட்ட நெருடலில், அவனைக் கட்டாயப்படுத்தாமல் இருந்தனர்.

இப்போது அவன் அந்தச் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதால், இனி அவனுக்கு இடம் கொடுக்கும் எண்ணம் யாருக்கும் இல்லை. 

“நான் வந்தப்போ வீட்ல எங்கேயும் லைட் ஆன் ஆகி இல்லையே!” என நவிரன் யோசிக்க, “வீரா அண்ணா என்னைக்குடா லைட் ஆன் பண்ணிட்டு வேலை பார்த்திருக்கான்?” எனச் சக்தி நினைவுபடுத்தினாள்.

தன் சுதந்திரம் மொத்தமாய் போனதில் நவிரன் முகம் வாடிப் போக, அதைப்பார்த்துச் சக்தி விழுந்து விழுந்து சிரித்தாள். 

“ரொம்பச் சிரிக்காதீங்க உடன்பிறப்பே! இந்த வீட்டுல ஆப்பு என்னைக்குமே எனக்கு மட்டும் வர்றது இல்ல… ஆஃபர்ல வர்ற ஃப்ரீ கிஃப்ட் மாதிரி உனக்கும் கூடவேதான் வரும். அது நம்ம பிறப்போட தொடர்பு!”

“அட போடா… நான் நாளைக்கே கிளம்பிடுவேன்ல!” எனச் சக்தி கண்ணை உருட்டி வெறுப்பேற்றிக் கொண்டிருந்தவள் முன்பு, “அண்ணி…” என அழைத்தபடி வந்து நின்றாள் அன்பரசி. 

சக்தி இருபத்தைந்து வயதைத் தொட்டிருக்க, அன்பரசியோ இருபத்திரண்டு வயதுடைய இளையவள். வீரா வீட்டில் பெரியவனாக இருப்பதால், அன்பரசியைச் சக்தியின் பெயரைச் சொல்லியே அழைக்கலாம் எனக் குடும்பத்தினர் கூறியிருந்தனர். இருந்தும், அண்ணன் முறைக்குத் தரும் மரியாதையினால் அண்ணி என்றே அழைத்து அவளுக்குப் பழகிப்போயிருந்தது.

“சொல்லுங்க அண்ணி! அண்ணாகிட்ட இருந்து காப்பாத்தணுமா, இல்ல இவனைப் போட்டுத் தள்ளணுமா?” எனச் சகோதரன் நவிரன் நெற்றியில் விளையாட்டாக ஒரு அடி வைக்க, மீண்டும் அவன் இவளை அடிக்க என இவர்களது கொண்டாட்டத்தில் அன்பரசிக்குத் திண்டாட்டமாகிப் போனது.

“அண்ணி… அண்ணி!” என அவள் அழைத்துப்பார்க்க, ஆரம்பித்த விளையாட்டை முடித்து மூச்சு வாங்கச் சக்தியை என்னவெனப் பார்த்தாள் அன்பரசி. “உங்களைச் சஞ்சீவ் அண்ணாவோட இப்போ வெற்றிலை பாக்கு மாற்றிப் பேசி முடிக்கப் போறாங்க போல. அதான் உங்களை அழைச்சுட்டு வரச் சொன்னார் அவர்.”

தான் கேட்டது சரியா தவறா என கிரகிக்க சக்திக்குச் சில நொடிகள் தேவைப்பட, இப்போது இவளைச் சுற்றி வந்து சிரிக்கும் முறை நவிரனுடையதானது. “ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன? பேச்சாடா பேசின… கொஞ்ச நஞ்ச பேச்சா பேசின!” எனக் கையைத் தட்டிச் சிரித்த சகோதரனின் கையைப் பிடித்து முறுக்கிவிட்டாள் அந்த அடாவடிக்காரி.

சில நொடிகள் பெண் உள்ளம் தடுமாறத்தான் செய்தது. இருந்தும் சஞ்சீவின் நினைவும், அவனது குணாதிசயமும் நினைவிற்கு வர, உடனே மீண்டு வந்தாள். “ரொம்பத் துள்ளாதே! நான் என் சஞ்சீவ் அத்தானைத் தானே கல்யாணம் பண்ணிக்கப் போறேன். இங்க இருக்கிறதை விட அங்க ரொம்ப ‘ஃப்ரீ’யா இருக்கலாம்டா மங்கூஸ்!” என்றவள், 

அன்பரசியிடம் திரும்பி, “அண்ணி… தாவணி அட்ஜஸ்ட் பண்ணனுமா? தலை எல்லாம் நல்லாத்தானே இருக்கு? அப்படியே இந்தக் கண்மையைப் பாருங்க” எனத் தன்னைத் தயார் செய்தாள். நிச்சயம் செய்யும் நிகழ்வை வீட்டினர் படம்பிடிப்பார்கள் என அறிந்தவள், அதற்கான முயற்சியில் இறங்கினாள்.

சிறு பதற்றமோ, கூச்சமோ, நாணமோ இல்லாத பெண்ணைப் பார்த்த அன்பரசிக்கு ஆச்சரியம்தான். ‘ஒருவேளை சிறு வயதிலிருந்தே ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசி வளர்ந்த காரணமோ’ என அவள் யோசித்துக்கொண்டிருக்க, அன்பரசியை இழுத்துக்கொண்டு சக்திதான் வீட்டினரோடு ஐக்கியமாக வேண்டியிருந்தது.

“கொஞ்சமாச்சும் பொண்ணு மாதிரி நட சக்தி!” எனப் பின்னாலே வந்த நவிரன் அறிவுரை கூற, அதை அவள் சட்டையே செய்யவில்லை. 

“சக்திம்மா… பொறுமையா வா” எனச் சேந்தன் கண்ணாலேயே முறைக்கவும் தான், அவள் நிதானம் பெற்றாள்.

“சொல்லுங்க பெரியப்பா… வரச் சொன்னீங்களாமே?” என எதுவுமே தெரியாதது போல் அவள் கேட்டதில், “இது உலக மகா நடிப்புடா சாமி!” என வாய்விட்டே கூறிவிட்டான் நவிரன். 

அன்பரசி மெல்லிய சத்தத்தோடு சிரிக்க, வீராவின் பார்வை தன் மேல் படுவதைக் கண்டதும் சட்டென வாயை மூடிக்கொண்டாள்.

“சக்திம்மா… சஞ்சீவ் கூடச் சின்ன வயசுல இருந்து ஓடி ஆடி விளையாடி வளர்ந்த பிள்ளைதான் நீ. நிர்மலா, மாப்பிள்ளைன்னு எல்லாருமே உனக்குத் தெரிஞ்சவங்கதான்…”

“இப்ப எதுக்கு வேலு மகன் இப்படி இழுக்குறாரு? அத்தான்… உங்க கல்யாண மேட்டர் அவளுக்கு ஏற்கனவே தெரியும். இந்தப் பக்கி சந்தோஷமா சிரிச்சுட்டேதான் வந்துச்சு” என வீட்டினருக்குத் தெரிய வேண்டிய உண்மையைச் சத்தமாக வாசித்தான் நவிரன். கைகட்டி நின்ற சஞ்சீவ் இளையவனைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைக்க, அந்தச் சிரிப்பே ‘இதை நான் எதிர்பார்த்ததுதான்’ எனச் சாதாரணமாகச் சொன்னது.

முரளி தொடர்ந்தார், “உன் அத்தை அந்த வீட்டுக்கு மருமகளாப் போனப்போ கூட, ஒரு பயம் இருந்தது. நம்ம பிள்ளை அங்க எப்படி இருக்குமோ, எந்த வேலையும் செஞ்சு பழக்கமில்லாதவ கஷ்டப்படுவாளோன்னு நினைச்சோம். ஆனா நாங்க எதிர்பார்த்ததை விட அவங்க ரொம்ப நல்லவங்கம்மா. மாப்பிள்ளை கூட உன் அத்தையையும் ஆபீஸ் பார்க்க அனுப்பி வச்சுட்டாங்க. நாங்களே அசந்து போயிட்டோம்.”

சக்தி அதற்கு, “ஆமாப்பா… சஞ்சீவ் அத்தான் தாத்தா, பாட்டி எல்லாரும் ரொம்ப நல்லவங்க. எங்ககிட்டயும் ரொம்ப நல்லா பேசுவாங்க… என்ன நவி?” என்றாள். 

‘போடு… போடு… நடிப்பைப் போடு’ என நவிரன் கையை அசைத்து அமைதியாக நிற்க, அவள் அடக்கப்பட்ட சிரிப்போடு தந்தையிடம் பார்வையைத் திருப்பினாள்.

“எங்களுக்கு என்னன்னா உன்னை…” இப்பொழுது வேலு துவங்க, “தாத்தா…” என அவரை அதட்டிய வீராந்தகன், தன் தங்கையிடம் நேரடியாகப் பேசினான். 

“உன்னைச் சஞ்சீவ்க்கு பேசலாம்னு இருக்கோம் சக்தி. உன்னோட விருப்பம் என்னன்னு சொல்லு” என ஒரே போடாகப் போட்டு உடைத்தான்.

“அண்ணா…” என வெட்கத்தோடு பெண்ணவள் தலை கவிழ, “அத்தான்… அத்தான்… என் தங்கச்சி வெட்கப்படுறா!” எனத் தன்னுடைய தோளைச் சுரண்டிய நவிரன் கையைத் தட்டிவிட்டான் சஞ்சீவ். 

“அவ நடிக்கிறாடா!” என்றான் ரகசியமாக.

“என்னது… இதுவும் நடிப்பாவா?” எனச் சகோதரி போட்ட ஆட்டத்தில் அந்தக் கோவில் கருவறையே அதிர்ந்தது போன்ற பிரம்மை நவிரனுக்கு. 

“பதில் வந்துடுச்சுல்ல… இனி வாயைத் திறந்து சொல்லணும்னு எதிர்பார்க்காதீங்க தம்பி” எனச் சம்பூரணம் பிள்ளைகளுக்குப் பொதுவாகக் கூற, அனைவர் மனதிலும் மகிழ்ச்சி பொங்கியது.

“அப்புறம் என்ன நிர்மலா… உன் விருப்பப்படியே எல்லாம் பண்ணு” என வேலு அனுமதி கொடுத்தார். நிர்மலா முகம் மலர இறைவனை வணங்கிவிட்டு, அர்ச்சகரிடமிருந்து பூவை வாங்கித் தன் மருமகளின் சிகையில் சூட்டினார். அந்தப் பூவைச் சூடியதும் அவள் முகம் இன்னும் பூரிப்போடு பூத்துத் குலுங்கியது.

“அண்ணா… அண்ணி… வாங்க!” என அழைத்த நிர்மலா, தன் கணவனிடம் திரும்பி, “ஏங்க…” என்றார். 

ஜெயபாலனும் மனைவியின் சிரிப்பை ரசித்தபடியே அவர் அருகே வந்து நிற்க, முரளி சேந்தனை முன்னிறுத்தினார். “டேய்… நீயே போடா” எனச் சேந்தன் கூற, “மாமா… அவ உங்க பொண்ணுதான்” எனப் பூங்கோதை கூறவும், மறுப்புப் பேசாமல் சேந்தன் முன்வந்தார்.

சஞ்சீவையும் சக்தியையும் அருகருகே நிறுத்தி, சடங்கிற்காக வெற்றிலை பாக்கு மாற்றிக்கொண்டு, இருவருக்கும் ஆசி வழங்கும் விதமாகச் சந்தனம், குங்குமம் இட்டனர். அந்த அழகான தருணம் நவிரனின் கைபேசியில் புகைப்படமாகப் பதிவானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!