Skip to content
Post Views: 3,082
அத்தியாயம் 3
அலைபேசியில் பேசிவிட்டு செண்பகம் திரும்பிட, அவருக்கு வெகு அருகில் நின்றிருந்தாள் மித்யுகா.
‘எதெல்லாம் கேட்டான்னு தெரியலையே!’ என உள்ளுக்குள் நினைத்தவராக நெஞ்சுக்கு நேராக அலைபேசியை இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்தார்.
“என்னம்மா! யாரு போன்ல?” மித்யுகா என்னவோ இயல்பாகத்தான் கேட்டிருந்தாள். ஆனால் அவருக்குத்தான் அந்நேரம் படபடப்பாக வந்தது.
Advertisement
“நீ… நீயென்ன இந்த நேரமே வந்துட்ட?”
“ஒரு மாதிரி இருந்துச்சு. அதான் லீவ் போட்டுட்டு வந்துட்டேன்” என்றவள், “யார்கிட்ட பேசிட்டு இருந்த?” என மீண்டும் கேட்டாள்.
“நீ கோபப்படக்கூடாது” என்ற செண்பகம், “உன்னை பார்க்க வர பையன்கிட்டதான் நீ சரின்னுட்டன்னு சொல்லிட்டு இருந்தேன்” என்றார்.
Advertisement
சட்டென்று மித்யுகாவின் பார்வையில் தணல்.
Advertisement
“என்னடி முறைக்கிற?” என்றவர், “நீதான் நேத்தி சரின்னுட்டியே!” என்றார்.
“ம்ம்…” என்று தணிந்தவள், “சரி சொல்லிட்டா அதுக்குள்ள பேசணுமா?” என்றாள். என்ன முயன்றும் குரலின் எரிச்சலை மறைக்க முடியவில்லை.
“என்னை ஏமாத்தலாம் பாக்குறியா மித்யு” என்று செண்பகம் கேட்க,
Advertisement
“என்னவோ பண்ணு” என்று நகர்ந்திட்டாள்.
“நில்லு மித்யு” என அவளின் கரம் பிடித்து நிறுத்தியவர், “என்னைக்கு வர சொல்லட்டும்?” எனக் கேட்டார்.
“எதுக்கும்மா இவ்வளவுக்கு அவசரம்” என்ற மித்யுகா, “எனக்கு நீ அழுத்தம் கொடுக்குறம்மா” என்றாள்.
“நான் பெத்த பொண்ணுடி நீ! இப்படி வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்கிறியேன்னு தினம் தினம் என் மனசு படுறப்பாடு உனக்குத் தெரியுதா? எங்க சுயநலத்துக்காக உன் வாழ்க்கையை பாழாக்கிட்டோமே!” என்றார். மெல்லிய தழுதழுப்பு அவரின் வார்த்தைகளில்.
“அவங்களோட உன்னையும் நீ ஏன்ம்மா சேர்த்துக்கிற” என்ற மித்யுகா, “எனக்கு மனசு ஒப்ப மாட்டேங்குதும்மா” என்றாள்.
“அதெல்லாம் கல்யாணமாகிட்டா சரியாகிடும் டா” என்று வாஞ்சையாக மகளின் கன்னத்தில் உள்ளங்கை வைத்து அழுத்தம் கொடுத்த செண்பகம், “நாளைக்கு வர சொல்லட்டுமா?” எனக் கேட்டார்.
“எல்லாம் சொல்லிட்டியாம்மா?” என்றாள்.
“சொல்லலன்னா நீ விடுவியா? பையன் பார்க்க வந்த அப்புறம், வேணும்னு நீ எதையும் சொன்னாக்கா தப்பாகிடுமே!” என்ற செண்பகம், “சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். மத்ததுலாம் ஓகே ஆனப்பப்புறம் நீயே சொல்லிக்க” என்றார்.
அப்பவும் அவர் சொல்வதை நம்பாதவளாக,
“நிஜமாவே எனக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க, ரெண்டாவது கல்யாணம் தான் இதுன்னு சொல்லிட்டியாம்மா?” என நெற்றி சுருங்க வினவினாள்.
“சொல்லியாச்சு… சொல்லியாச்சு…” என்று நகர்ந்த செண்பகம், “சாப்பிடுறியா… எடுத்து வைக்கவா?” எனக் கேட்டார்.
“ரெண்டாவது கல்யாணம் தெரிஞ்சும் பொண்ணு பார்க்க வர்றாங்களா?” இதனை கொண்டுதானே அவர்கள் வர மறுப்பார்கள் என நினைத்து சரியென்றிருந்தாள். தற்போது அவளின் எண்ணம் தகர்ந்திருக்க மனதால் சோர்ந்துபோனாள்.
“எப்படிம்மா?” என்று அதிர்வை மறக்காது கேட்ட மித்யுகா, “ரெண்டு குழந்தைங்க இருக்குன்னு சொல்லியும்மா சரின்னு சொன்னாங்க. பொதுவா ரெண்டாவது கல்யாணமா இருந்தாலும் பொண்ணுக்கு குழந்தை இருக்கக்கூடாது, இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம் எங்க வீட்டுக்கு வரக்கூடாதுன்னு தான சொல்லுவாங்க” என்றாள்.
“அந்த தம்பிக்கும் இது ரெண்டாவது கல்யாணமாம் மித்யு” என்ற செண்பகம், “அதுவுமில்லாம அவருக்கு குடும்பம்ன்னு யாருமில்லை. தனியாளு. குழ்ந்தைங்களோட வந்தா எனக்குன்னு ஒரு குடும்பமா சந்தோஷம் தான் அப்படின்னுட்டார்” என்று, அவள் மேலும் எதுவும் திருகிக் கேட்பாளோ என வேகமாக தனது அறைக்குள் புகுந்துகொண்டார்.
செண்பகம் இறுதியாக சொல்லிச் சென்ற வரிகளில் மித்யுகாவின் மனம் வெகுவாகக் காயம்பட்டது.
“நீ, நான்… அப்புறம் நம்ம குழந்தைங்க. நமக்கு கல்யாணம் ஆனாதான் எனக்குன்னு, நாமன்னு ஒரு குடும்பம் உருவாகும். அதுவும் நீ என் வாழ்க்கைக்குள்ள வரதால.”
அவளவனின் வார்த்தைகள். அன்று காதலாய் அவன் கூறியிருந்தாலும், உயிரில் உறைந்த ஜீவனின் உயிர்ப்பை அவனது கண்கள் பிரதிபலித்திருந்தன.
அவனை மொத்தமாக கொன்றுவிட்டு, தன்னுடைய வாழ்வை சீர்ப்படுத்த மறுமணத்திற்கும் தயாராகிவிட்டாள்.
பெரும் கேவல் ஒன்று தொண்டைக்குள் கவ்வி பிடிக்க… வேகமாக அறைக்குள் சென்று கதவடைத்து அதன்மீதே சாய்ந்து தரை சரிந்து அமர்ந்தவள்,
“ம்ருதவ்” என்று கதறினாள்.
அடுத்த கணம்,
“தப்பு… தப்பு… இது தப்பு. உன்னை நான் நினைக்கக்கூடாது. அன்னைக்கு நான் உன்னை பேசின பேச்சுக்கு, நீ உனக்குன்னு ஒரு குடும்பத்தை உருவாக்க, வீம்புக்குன்னாவது என்னை மறந்து இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணியிருப்ப?” என்று வாய்விட்டு புலம்பியவள், “என்னை நீ மறந்திருப்பியா ம்ருத்து” என்று கண்கள் மூடி அவனது பிம்பத்தை கண்டிட துடித்திட்டாள்.
அவன் முகம் மின்னி மறைந்த வேளை, அவள் ஈன்ற பிள்ளைகளின் முகமும் தோன்றிட, சட்டென்று இமை திறந்தவளாக…
“இல்லை… இல்லை… நான் யாரையும் நினைக்கல” என தன்னுடைய கன்னத்தில் மாற்றி மாற்றி அறைந்து கொண்டாள்.
“குழந்தைங்களை வச்சிக்கிட்டு தனியா நின்னப்போ உண்மையெல்லாம் சொல்லி உன்கிட்ட வரணும் தான் தோணுச்சு. ஆனா நான்… நீ விரும்பின, உன்னை காதலிச்ச அதே மித்யுகா இல்லையே! ரெண்டு குழந்தைங்களுக்கு அம்மா. நான் வந்து நீ ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்கலாம். ஆனால் எனக்கும் மனசாட்சி இருக்கே! உன் வாழ்க்கையை தெரிஞ்சே நான் எப்படி வீணாக்குவேன்? உனக்குன்னு ஒரு வாழ்க்கையை நீ ஏற்படுத்தியிருந்தா” என்று மீண்டும் மீண்டும் பழைய காதல் கொடுத்த வலியில் தன்னைப்போல் பிதற்றினாள்.
“என்னை நீ வெறுத்திருப்பல?” என்றவள், “நான் உனக்கு வொர்த் இல்லடா!” என்று முகம் மூடி வெடித்து அழுதாள்.
அதுநாள் வரை அடக்கி வைத்த காதலின் ரணத்தை எல்லாம் அக்கணம் மொத்தமாக வெளியேற்றும் அளவிற்கு கதறி அழுதாள்.
அவளின் முதல் அழுகை ஓசையிலே தன்னுடைய அறை வாயிலில் வந்து நின்று மகளின் அறையை பார்த்த செண்பகம் கண்களை மூடி சுவற்றில் சாய்ந்துகொண்டார்.
வெளியில் சொல்லாது, ஆறுதல் கொள்ளாது புதைத்து வைத்த அவளின் வலியெல்லாம் இன்றோடு அந்த கண்ணீரில் கரைந்து போகட்டும் என அமைதியாக நின்றிருந்தார்.
அவனை மறந்துவிட்டோம். எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும். தன்னுடைய குடும்பத்திற்காக உயிர்வதை கொடுத்து, அவனை விட்டுக்கொடுத்து வந்த தான் அவனுக்கு எப்போதுமே பொருத்தமானவள் இல்லை. தானில்லாது அவன் நன்றாக இருக்கட்டுமென அவனின் நினைவுகளை நினைப்பதையும் தவிர்த்து வந்தவளுக்கு, திருமணப் பேச்சு துவங்கியது முதல் அவனின் நினைவு தான்.
இதெப்படியென்று அவளுள்ளே பெரும் வினா?
இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியப் பின்பும், அவளுள் அந்த காதல் ஜீவித்திருக்கின்றதே!
ஜீவன் ஒளிர்ந்திட, அவன் வாசத்தை அறிந்திட சில வார்த்தைகளே போதுமானதாக இருக்கிறதே!
காதலை மறந்துவிட்டோம் என்ற அவளின் நினைப்பை, உறுதியை அந்த நிமிடங்கள் பொய்யாக்கியிருந்தன.
அழுது கொண்டே தரை சுருண்டவள் மனதின் சோர்வால் தன்னையறியாது கண்ணயர்ந்திருந்தாள்.
அவளின் சத்தமின்றி அமைதியாகிட, உறங்கியிருப்பாள் என யூகித்த செண்பகம்,
“இன்னும் என்னென்னலாம் அவள் தாங்கணும்னு இருக்கோ” என்று மேல் நோக்கி புலம்பினார்.
என்ன தகிடுதத்தோம் செய்தாவது, மகளுக்கு திருமணம் செய்து வைத்திட வேண்டுமென்று தீவிரம் கொண்டார்.
மாலை பள்ளிவிட்டு பிள்ளைகள் வந்த பின்னரே, அவர்களின் சத்தம் கேட்டு எழுந்திருந்தாள்.
தானிருக்கும் நிலையில் பிள்ளைகள் தன்னை பார்க்க வேண்டாமென நினைத்து, குளியலறை புகுந்து, உடலின் சோர்வும், முகத்தின் அழுத தடமும் நீங்க வேகமாக குளித்து வருவதற்குள், பிள்ளைகளுக்கு ஆடை மாற்றி சிற்றுண்டி வழங்கியிருந்தார் செண்பகம்.
மித்யுகாவிற்கு தெரியும், தான் அழுத சத்தம் அன்னைக்கு கேட்டிருக்குமென்று. ஆதலால் தயங்கித் தயங்கி அவரின் முகம் பார்த்திட, அவரோ அப்படியொன்றை நான் கவனிக்கவே இல்லை எனும் விதமாக நடந்துகொண்டார்.
“நைட்டுக்கு என்ன சமைக்கட்டும் மித்யு?”
“ஹான்… ம்ம்மா!”
“நீ பசங்களை பாடம் படிக்க வை. நைட்டுக்கு நான் சமைக்கிறேன்” என்றார்.
“உனக்கே உடம்பு முடியல. நீ ஏன்ம்மா கஷ்டப்படுற” என்ற மித்யுகாவிற்கு அப்போதுதான் இன்னொரு யோசனையும் உதித்தது.
எப்படியாவது இதை காரணம் காட்டி பெண் பார்க்க வரையிருப்பவனை தடுத்திட வேண்டுமென நினைத்தாள்.
அதைப்பற்றி பேசுவதற்காக சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்தாள்.
அந்த நேரம் வாயில் மணியடிக்க, பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாலும், ஏதோ யோசனையோடு சமயலறையில் சமைத்துக் கொண்டிருக்கும் அன்னை மீது கவனமாக இருந்தவள், நிகழ் மீண்டு யாரென கதவை திறந்தாள்.
அறுபது வயது மிக்க நபர் நின்றிருக்க…
முகத்தில் எவ்வித உணர்வும், சலனமுமின்றி,
“யார் வேணும்?” என்று கேட்டிருந்தாள். மூன்றாம் மனிதரை முதல் முறை பார்க்கும் பாவனை. யாரென்றே தெரியாத ஒருவர் வழி கேட்டிடும் போது கூட முகம் புன்னகையை உதிர்க்கும். அத்தோற்றத்தைக் கூட அவரிடம் காட்டிட அவள் விரும்பவில்லை.
“அம்மாடி” என்று அவர் முடிக்கும் முன்பு, அவரின் முகத்திற்கு நேரே கைக்காட்டி தடுத்தவள்,
“நீங்க யாருன்னு தெரியல. போகலாம்” என கதவினை அறைந்து சாற்றினாள்.
சமையல் வேலை முடிய, புடவை தலைப்பில் கைகளைத் துடைத்துக்கொண்டு வந்த செண்பகம்,
“சாப்பாடு ரெடி… சாப்பிடலாமா?” என சிறியவர்களிடம் கேட்டவராக, “யாரு மித்யு?” என அவளிடம் வினவினார்.
“யாரோ மேல் வீட்டிலிருக்கும் பேமிலியை விசாரிக்க வந்திருந்தாங்க. அவங்கதான் வெளியூர் போயிருக்காங்களே. ஆளில்லைன்னு சொல்லிட்டேன்” என்றவள், “புக்ஸ்லாம் எடுத்து வைங்க” என பிள்ளைகளிடம் கவனத்தை திருப்பிக் கொண்டாள்.
நால்வரும் ஒன்றாக தரையமர்ந்து உணவு உட்கொள்ள, முதலில் பிள்ளைகளுக்கு ஊட்டிவிட்டு அறைக்குள் அனுப்பி வைத்தாள்.
மித்யுகா உண்ணத் துவங்க,
“என்னைக்கு வர சொல்லட்டும் கேட்டனே மித்யு” என செண்பகமே பேச்சினை ஆரம்பித்திருந்தார்.
‘அப்படியே பேசிடு மித்யு’ என தனக்குள் சொல்லிக்கொண்டவள்,
“சண்டே வர சொல்லும்மா” என்றாள்.
“அதுக்கு இன்னும் மூணு நாள் இருக்கே மித்யு.”
“மூணு நாள் தாம்மா இருக்கு.”
“அது சரி” என்றவர், “இந்த மூணு நாள்ல மனசு மாறிட மாட்டியே” என்றார்.
அவரை மேலும் கீழும் பார்த்தவள்,
“என்னோட எல்லாத்துக்கும் ஒத்து வந்தா ஓகே தாம்மா” என்றாள்.
“என்னது?” அவள் ஏதோ உள்ளர்த்தமாகக் கூறுவதைப்போன்றிருக்க செண்பகம் புரியாது வினவினார்.
“அதான் சொன்னனேம்மா, எனக்கு இது செகண்ட் மேரேஜ். ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. ஓகே ஆகி கல்யாணம் நடந்தா நீயும், பசங்களும் என்னோடதான் இருப்பாங்க” என்றவள் கடைசி வாய் உணவினை எடுத்து வாயில் வைத்தவளாக எழுந்து கை கழுவச் சென்றாள்.
“நானா?” என்றவர், “இதெல்லாம் நீ சொல்லலையே” என்றார்.
“எதும்மா?”
“நான் உன்னோட வரணுங்கிறது…”
“பின்ன வயசான காலத்துல, அதுவும் உடம்பு முடியாத உன்னை தனியா விட்டுட்டு நான் மட்டும் கல்யாணம் பண்ணிக்கிட்டு போறதா” என்ற மித்யுகா, செண்பகத்தை பேசவே விடாது படபடவென பேசினாள்.
“கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னையும் கூட்டிட்டுத்தான் போவேன். நீயும் என்னோட வரனும் சொல்லல. வந்தே ஆகணும் சொல்றேன். இதுக்கு சரின்னா அவங்களை வரச்சொல்லு. இல்லைன்னா யாருக்கு சரியோ அவங்களை பாரு” என்றாள்.
“அநியாயம் பண்ற மித்யு.”
“பெத்த அம்மாவை கூடவே வச்சிக்கணும் நினைக்கிறது தப்பாம்மா?” அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு அவள் கேட்க, செண்பகத்திற்கு அவள் தலையிலே நன்கு கொட்ட வேண்டும் போலிருந்தது.
“பசங்களையே என்னோட வச்சுக்கலாம் பாக்குறேன். நீயென்னன்ன என்னையும் கூட்டிட்டு போவன்னு சொல்ற” என்றவர் அவள் பார்த்தப் பார்வையில், “இதுக்கு மேலவாவது உன் வாழ்க்கையை பாரேன் மித்யு” என்றிருந்தார்.
எப்போதும் செண்பகம் சொல்வது தான். ஆனால் இன்று வார்த்தையில் கெஞ்சல், ஒருவித மன்றாடல்.
“நீங்களாம் இல்லாம வாழ்க்கையா?” என்றவள், “ஏற்கனவே… வாழ்க்கையா, எல்லாமாவும் இருந்தவனை விட்டு வந்து பெரிய பாவத்தை செய்திருக்கேன். அதுக்கே என்ன பிராயச்சித்தம் செய்றதுன்னு தெரியாம தவிச்சு நிக்கிறேன். இதுல என்னை நம்பி இந்த உலகத்துக்கு வந்த ரெண்டு குழந்தைங்களையும், எனக்காக புருஷனே வேண்டாம்னு வந்த உன்னையும் கல்யாணம்னு விட்டுப்போயி திரும்ப ஒரு பாவத்தை நான் செய்யணுமா?” என்றாள்.
“மித்யு பிடிவாதம் பிடிக்கிற விஷயமில்ல இது. புரிஞ்சிதான் பேசுறியா. இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியப்படாது.”
“அப்போ இந்த கல்யாணப்பேச்சே வேண்டாம். நிறுத்திடுங்க” என்றாள்.
“இல்லை… இல்லை… நான் அந்த தம்பிக்கிட்ட பேசறேன்” என்றார். வேகமாக.
‘எப்படியும் ஒத்துக்கொள்ள போவதில்லை’ என உள்ளுக்குள் மகிழ்ந்தவள், “பேசிட்டு சொல்லு” என்று உறங்கச் சென்றாள்.
செண்பகத்தின் மூலமாக இப்பேச்சு வார்த்தையை அறிந்தவனுக்கு,
“ஆக மொத்தம் கல்யாணம் கூடாதுங்கிறதுல முடிவா இருக்கா” என்று புன்னகைத்துக் கொண்டவன்,
“பையன் நான்தான்… உன் ம்ருதவ் தான் தெரிஞ்சாலும் வேணாம் சொல்லுவியா யுகா?” என வழக்கம்போல் தன்னுடைய கையில் சுழன்று கொண்டிருந்த ஜிமிக்கியிடம் கேட்டிருந்தான்.
அந்த ஜிமிக்கி அவனிடம் சேர்ந்த கதை சுவாரஸ்யமானது. அதுதான் அவர்களின் முதல் சந்திப்பும்.
‘எப்படியோ திருமணப் பேச்சை நிறுத்த வழி செய்துவிட்டோம்’ என்ற மகிழ்வோடு அறைக்குள் வந்த மித்யுகா, விளையாடிக் கொண்டிருந்த சிவன்யா, சிவேஷ்ஷை உறங்க வைக்க ஆயத்தமாகினாள்.
இரு குழந்தைகளையும் படுக்க வைத்தவள், இருவருக்கும் நடுவில் படுத்துக்கொண்டாள்.
“இன்னைக்கு என்ன கதை சொல்லலாம்?” என்று மித்யுகா கேட்டிட, இருவரும் ஆளுக்கொரு கதையைக் கேட்டு சண்டையிட்டுக் கொண்டனர்.
“இப்படிலாம் சண்டைபோட்டா நான் கதையே சொல்லமாட்டேன்” என்று மித்யுகா கூற,
“இதுக்குத்தான் அப்பா இருந்திருக்கலாம்மா” என்றிருந்தான் சிவேஷ்.
“சிவேஷ்” என்று மித்யுகா அதட்டிட, “ஆமாம்மா, அப்பா நம்மளோட இருந்திருக்கலாம். எனக்கு நீயும், சிவன்யாவுக்கு அப்பாவும் நாங்க கேட்கிற கதையை சொல்லியிருக்கலாம். நாங்களும் சண்டைப்போடாம இருந்திருப்போம்” என்றான்.
அவனின் பேச்சில் மித்யுகா உறைந்திருந்தாள்.
“எனக்கு ஏம்மா அப்பா இல்லை. அவங்க நேம் என்ன? எப்படி இருப்பாங்க?” சிவன்யா ஒவ்வொன்றாகக் கேட்க, அவளுள் அவளது ம்ருதவ்வின் உருவமே வடிவம் கொண்டது. அவனைத்தான் தந்தையாகக் காட்டிட அவளின் மனம் உந்தியது.
ஆனால் பிள்ளைகளுக்கு அவன் தந்தையில்லையே! எங்கனம் கூறுவது.
அவர்களின் தந்தையைப்பற்றி கூறிட அவளிடமும் பதிலில்லையே! மௌனித்திருந்தாள். பெற்ற வயிறு பிசைந்திட, கதியற்று தவித்தாள்.
அவளையும் அறியாது கண்கள் கலங்கி, கண்ணீர் கன்னம் இறங்கியது.
தங்களால் தான் அன்னை அழுகிறாளோ என நினைத்த பிள்ளைகள், வேகமாக அவளின் மீது கை கால்களை போட்டு அணைத்துக் கொண்டவர்களாக…
“அப்பா வேணாம்… அப்பா வேணாம். அம்மா அழக்கூடாது” என்றனர். அழும் குரலில்.
அவர்களைத் தேற்றி உறங்க வைப்பதற்குள் பெரும் தவிப்பை உள்வாங்கியிருந்தாள்.
“உனக்கு புருஷன் தேவையில்லாம இருக்கலாம். ஆனா குழந்தைங்களுக்கு அப்பா நிச்சயம் தேவை மித்யு” என்று என்றோ செண்பகம் சொல்லியதை, இன்று குழந்தைகளும் தங்களுக்கு தந்தை என்பவனின் ஏக்கமுள்ளது என்பதை நிரூபித்துக் காட்டியிருக்க, உறக்கம் வராது, நெஞ்சம் அழுத்திட எழுந்தமர்ந்தாள்.
அவளின் கால்கள் தானாக கண்ணாடி முன்னிருக்கும் இருக்கைக்குச் சென்றது. உட்கார்ந்தவள், இழுவையை இழுத்து ஒற்றை ஜிமிக்கியை கையிலெடுத்து உள்ளங்கையில் வைத்து ஆழப் பார்த்தாள்.
இமையில் உறைந்து தொக்கி நின்ற துளி நீர் ஜிமிக்கியில் பட்டுத் தெறித்தது.
வேகமாக அலைபேசியை எடுத்தவள், ம்ருதவ்வின் எண்ணை திறந்துவிட்டாள்.
இறுதி நொடியில் அழைக்கலாமா? வேண்டாமா? என பெரும் பிரளயம் பிரவாகம் கொள்ள, கையில் வைத்திருந்த ஜிமிக்கியை விரல்கள் மூடி இறுகப்பற்றினாள்.
“இந்த ஆறு வருஷத்துல நெம்பர் மாறியிருந்தா?” என யோசித்தவள், “வேணான்னு சொல்லிட்டு வந்த நான் திரும்ப தொடர்புகொள்ள முயற்சிப்பேன்னு இத்தனை வருஷத்தில் மாத்தியிருந்தாலும் மாத்தியிருப்பார்” என்று எண்ணினாள்.
‘அவ்ளோதானா நீ அவனை புரிஞ்சு வச்சிருக்கிறது?’ என்ற அவளின் மனம், ‘அவனோட வாழ்வில் நீயா ஒரு தீர்மானத்திற்கு வருவது சரியில்லை’ என்று கொட்டு வைத்தது.
ஆம் இதுநாள் வரை, அவன் தான் விட்டு வந்த அதேயிடத்தில் தேங்கி நின்றுகொண்டிருக்கமாட்டான், அவனுக்கென்று குடும்பம் உருவாகியிருக்கும், திருமணம் செய்திருப்பான், இப்படி பல… அவன் வாழ்வில் நடந்திருக்குமென அவளாக நினைத்து முடிவுக்கு வந்திருப்பது தான்.
தனது எண்ணமெல்லாம் சரிதானா என ஒருமுறை கூட தெரிந்துகொள்ள முயலவில்லையே அவள்.
அறிந்துக்கொள்ள முயன்றிருக்க வேண்டுமோ? அக்கணம் நினைத்தவள், ம்ருதவ்வின் எண்ணை தவிர்த்தவளாக கமலேஷுக்கு அழைத்துவிட்டாள்.
அங்கு ம்ருதவ்வுடன் பேசிக்கொண்டிருந்த கமலேஷ் யாரென அலைபேசி திரையை பார்க்க, புது எண்ணாக இருந்தது.
“ரிங் போயிட்டே இருக்கு. அட்டென்ட் பண்ணுடா” என்ற ம்ருதவ், “ரதியா? அதான் ஜெர்க் ஆகறியா?” என்றான்.
“புது நெம்பர் டா. இந்த நேரத்தில் யாருன்னு தெரியலையே!” என்ற கமலேஷ் திரை ஒளிர்ந்த எண்ணை ம்ருதவ்விற்கு காட்டியவனாக, “சண்டை போட்ட என் மச்சான்ல எவனாவது என்னை திட்ட புது நெம்பர்ல இருந்து கூப்பிடுறானோ? பயந்து வருதுடா” என்றான்.
“அட்டென்ட் பண்ணு… உன் தங்கச்சி தான்” என்று சாதாரணமாக சொல்லியிருந்தான் சிவ ம்ருதவ்.
‘விட்டுப்போன நேசம் வேராகி நிற்க, விழித்த கனவெல்லாம் உன்னால் துளிர்க்கிறது.’
error: Content is protected !!