Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

78. கார்த்திகா சக்கரவர்த்தி - உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம்

உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம்

அத்தியாயம் 2

     கனரக வாகனங்கள் வந்து போகும் பரபரப்பான சாலையோரத்தில் இருந்து சற்று உள்ளே தள்ளி, அமைதியான இடத்தில் வீற்றிருந்த கோதண்டராமர் கோவில் வளாகத்தில், கால்களை மடித்து தியான நிலையில் அமர்ந்திருந்தாள் அமிர்தாவர்ஷினி. அவளுக்கு அருகே தரையில் விரிக்கப்பட்ட பருத்தி வேஷ்டியில் கை, கால்களை அசைத்தபடி படுத்திருந்தனர் குழந்தைகள்.

     ஆண் ஒன்று, பெண் ஒன்று என அழகான இரட்டைக் குழந்தைகள். பெற்றோர், உற்றார் உறவினர்கள், உயிரை விட மேலாக நினைத்த காதல், இலட்சியம் என அனைத்தையும் இழந்துவிட்டு, மாதச் சம்பளத்திற்காக விருப்பமே இல்லாத வேலையைச் செய்துகொண்டு உடலும், உள்ளமும் சோர்ந்து இல்லம் திரும்பும் அவளுக்கான ஒற்றை ஆறுதல் இந்தப் பிஞ்சுகளின் முகம் தான். இருவரையும் அள்ளி அணைத்து குண்டு கன்னத்தில் ஒற்றை முத்தம் கொடுத்துவிட்டால், அவள் வேதனை எல்லாம் பஞ்சாய் பறந்து போய்விடும்.

     தங்கள் குடும்பத்தை ஓட ஓட விரட்டி மொத்தமாக கலைத்துப்போட்ட இந்த சமுதாயம் என்னும் புயலில், தான் சிக்குண்டு சின்னபின்னமாகிப் போனது போதும், எப்படியாவது இந்தக் குழந்தைகளை நல்ல நிலைக்கு உயர்த்திவிட வேண்டும் என்று அணையா விளக்கைப்போல் அவளுள் பற்றி எரிந்து கொண்டிருந்த வைராக்கியத் தீ, நேற்று அவனைப் பார்த்த நேரத்தில் இருந்து புயல் காற்றிற்கு நடுவே வைக்கப்பட்ட தீபம் போல் அல்லாடிக்கொண்டிருந்தது. இன்னமும் அவன் நினைவுகளுக்கு தன்னைப் பாதிக்கும் அளவு சக்தி இருக்கிறது என்பது அவளுக்கு ஒரு வித அவமான உணர்வைத் தோற்றுவிக்க, அதைக் குறைத்துக்கொள்வதற்காக தான் இங்கே வந்திருந்தாள் அமிர்தா.



Advertisement

     கண் மூடி அமர்ந்திருந்தாலும் தனக்கு முன்னே ஏதோ நிழல் படர்வதையும், அந்த நிழலுக்குச் சொந்தக்காரர் தன் முன்னால் இருந்த குழந்தைகளில் ஒன்றைத் தூக்க முயற்சிப்பதும் தெரிய, தன் கரத்தை நீட்டி அந்தக் கரங்களைத் தடுத்திருந்தாள்.

     “ப்பா, செம ஷார்ப் நீங்க.” என்றபடி புன்னகை முகமாக அவளின் முன்னால் நின்றிருந்தாள் கீரவாணி. சற்று தொலைவில் நின்றபடி இரண்டு பெண்களையும் பார்த்துக்கொண்டிருந்தார் ஆனந்த பைரவி.

     சாருகேசியின் குடும்பத்துப் பெண்களைப் பார்த்ததும் கோபம் மேலோங்க, குழந்தைகளோடு அவ்விடம் விட்டு அகலப்பார்த்தாள் அமிர்தா. “அட என்ன சிஸ் நீங்க, சாமி கும்பிட வந்த இடத்தில் இத்தனை கோபம் ஆகாது. அதோட நாங்க குழந்தைங்களை பார்க்கக்கூடாதுன்னு சொல்றதுக்கு உங்களுக்கு கூட உரிமை கிடையாது தெரியும் தானே.” நக்கலாகக் கேட்டாளோ இல்லை கோபமாகக் கேட்டாளோ அதை கீரவாணி மட்டுமே அறிவாள்.

Advertisement

     “குழந்தைங்க மேல இருக்கிற உரிமையைப் பத்தி பேசுறீங்களா? ஏன் பேச மாட்டீங்க. ஒரே ஆதரவா இருந்த என் அப்பா, அம்மாவைப் பறிகொடுத்துட்டு, இரண்டு பச்சைக் குழந்தைங்களை கையில் வைச்சுக்கிட்டு, அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம, தெருநாய் மாதிரி என்னை துரத்தி விட்ட உங்க வீட்டுக்கு, என்னோட மான ரோஷத்தை அடகு வைச்சுட்டு திரும்ப வந்தேனே, அந்த நாள் நினைவு இருக்கா?

Advertisement

     விவாகரத்துக்கு சம்மதம் பணம், நகை, சொத்துன்னு எதுவும் வேண்டாம். குழந்தைங்களை மட்டும் ஏத்துக்கோங்கன்னு காலில் விழாத குறையா கெஞ்சினேன். குழந்தைங்களுக்கு அதுங்களோட அப்பா நிழலில் வாழும் மரியாதையைக் கொடுங்கன்னு மண்றாடினேன்.” என்றவளுக்கு, அன்று பட்ட அவமானங்கள் சற்று முன்னர் நடந்ததைப் போல் அருவருப்பு உணர்வு மேல் எழும்ப உடல் எல்லாம் சிலிர்த்தது.

     “அன்னைக்கு என்னோட கதறலுக்கு இரங்காம கல்லு மனசா நின்னுட்டு இப்ப என்ன உரிமையைப் பத்தி பேசுறீங்க. வாய்ப்பு எல்லாருக்கும் ஒரு முறை தான் கிடைக்கும். அந்த வாய்ப்பை நீங்க வீணடிச்சிட்டீங்க. இனிமேல் இந்தக் குழந்தைங்களுக்கும் அந்த வீட்டைச் சேர்ந்த யாருக்கும் எந்தச் சம்பந்தமும் இருப்பதை நான் விரும்பல.” அழுத்தமாகச் சொல்லிவிட்டு சற்று தொலைவில் நின்றிருந்த பைரவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு வேகமாக கோவிலை விட்டு வெளியே வந்தாள் அமிர்தா.

     தாய் அழைத்ததற்காக வேண்டாவெறுப்பாக மனைவியை அழைத்துச் செல்ல வந்திருந்த மோகனன், அமிர்தாவை குழந்தைகளுடன் பார்த்ததும் உடல் வெடவெடக்க பயந்து போய் சுவற்றுக்குப் பின்னால் தன்னை மறைத்துக்கொண்டான்.

Advertisement

     அதைக் கவனித்து, “இந்தக் குற்றவுணர்ச்சிக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.” என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டு அவ்விடம் விட்டு கிளம்பினாள் அமிர்தா.

     இவள் வருகைக்காகவே வீட்டில் காத்திருந்த வேலையாள், அவளுக்கு குடிக்க கொண்டு வந்து கொடுத்துவிட்டு, உறங்கி இருந்த குழந்தைகளை வாங்கி தொட்டிலில் போட்டுவிட்டு, சின்ன தயக்கத்துடன், “நான் சொன்னதைப் பத்தி யோசிச்சீங்களா அமிர்தாமா.” என்க, பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள் அவள்.

     “உங்களுக்கே தெரியும். ஹோம் நர்சிங் பண்ண ஒவ்வொருத்தரும் எவ்வளவு சம்பளம் கேட்கிறாங்கன்னு. நான் வாங்குறது ரொம்பக் கம்மி. தெரிஞ்ச பொண்ணு, கஷ்டப்படுற பொண்ணுன்னு தான் கொடுக்கிறதைக் கொடுங்கன்னு சொன்னேன். ஆனா இப்ப எனக்கும் சில தேவைகள் இருக்கு. கண்டிப்பா கொடுத்தே ஆகனும் னு சொல்ல மாட்டேன். கொடுக்க முடிஞ்சா கொடுங்க. இல்லாமப் போனா வேற ஆள் பார்த்துக்கோங்க. நான் வெளியில் பார்த்துக்கிறேன்.” என்க, நெற்றியில் கை வைத்தாள் பெண்.

     மாதம் வாங்கும் இருபத்தைந்தாயிரம் சம்பளத்தில் அவளுக்கென்று அவள் ஒதுக்கும் பணம் மூவாயிரம் மட்டும் தான். ஒவ்வொரு ரூபாயையும் பார்த்து பார்த்து செலவு செய்ய வேண்டிய இடத்தில் இருப்பவளால் ஹோம் நர்ஸ் கேட்ட பணத்தைக் கொடுக்கவும் முடியவில்லை. அதே சமயத்தில் அவரை விட்டுவிட்டால் வீட்டில் இருந்து குழந்தையைப் பார்த்துக்கொள்ள நம்பிக்கையான ஆள் கிடைப்பதும் சிரமம் என்று புரிய, என்ன செய்வது என்று தவிப்போடு நின்றவளின் கண்களில், அவள் கைகளில் இருந்த தங்க வளையல் பட்டது.

     அதை ஆசையாய் தன் கரத்தில் போட்டுவிட்ட சாருகேசியின் நினைவும் உடன் சேர்ந்து வர, இதை அவனிடம் எதற்காகக் கொடுக்காமல் விட்டோம் என்கிற கோபத்தோடு அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்தவள், ஒருகணம் நின்றாள்.

     இப்போது அவளுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை பணம். அதற்காக இந்த வளையல்களைப் பயன்படுத்திக்கொண்டால் என்ன என்று தோன்ற, அவன் பணத்தைப் பயன்படுத்த வேண்டுமா என்று ரோஷம் கொண்ட மனது சண்டையிட்டது. ஆனால் அடுத்த கணமே அவன் உனக்கும் குழந்தைகளுக்கும் உண்டாக்கின காயத்துக்கு இது பயன்படுறதில் தப்பில்லை. என்ன தான் சொன்னாலும் குழந்தைங்களுக்கு செலவு பண்ண அவனுக்கும் கடமை இருக்கு. குழந்தைங்களுக்காக மட்டும் அவன் பணத்தை பயன்படுத்திக்கலாம். நமக்கு வேண்டாம் என தன்னைத்தானே தேற்றிக்கொண்டு, நகையை விற்பதற்காக நகைக்கடைக்குச் சென்றாள்.

     முதலில் அடகு வைக்கத் தான் நினைத்தாள். ஆனால் அடகை மீட்க அவளால் பணத்தைச் சேர்க்க முடியாது. கூடவே அதை மீட்டு மீண்டும் கரத்தில் போட்டுக்கொள்ளவும் விருப்பம் இல்லை என்பதால் விற்கும் முடிவுக்கு வந்திருந்தாள்.

     அன்றைய தங்க விலையில் வளையல்களுக்கான மதிப்பீடு போடப்பட்டு அதை விற்பதற்காக அவள் முன்னேறிய சமயம் அவள் கரத்தைப் பிடித்து தடுத்தது வலுவான ஆண்கரம் ஒன்று.

     தொடுகையை வைத்தே கேசியின் வரவை உணர்ந்தவள், தன் கரத்தை விடுவித்துக்கொள்ளப் போராட, “இதுக்கு என்னடி அர்த்தம்?” என அவள் கையில் இருந்த வளையல்களைக் காட்டி கேட்டான்.

     “நான் இங்க வந்திருப்பது எப்படித் தெரியும்? என்ன ஆள் வைச்சு வேவு பார்க்கிறீங்களா?” கோபமாக அவள் கேட்க, “ஆமா இவளை வேவு பார்க்க ஆள் வைக்கிறாங்க. இது என் அண்ணியோட குடும்பத்து கடை. அவங்க இங்க தான் வேலை பார்க்கிறாங்க. அவங்க உன்னைப் பார்த்து சொல்லவும் என்னவோன்னு நினைச்சு வந்தேன். ஆனா நம்ம காதலோட அடையாளமா நான் போட்டு விட்ட எங்க பரம்பரை வளையலை விற்க வந்திருக்க இல்ல.” கோபமாகக் கேட்டவனுக்கு, பதில் சொல்ல இயலாமல் அவமான உணர்வும், அதை விட அதிகமாக இனம்புரியாத வலியும் சேர்ந்துகொள்ள உடல் கூனிக்குறுகியது அமிர்தாவுக்கு.

     அவளின் நிலை உணர்ந்த கேசிக்கு அவளை விட அதிகமாக மனம் வலித்தது உண்மை. “மன்னிச்சிடுங்க, நீங்க சொன்னது தான் சரி. உங்களோட சரிக்கு சரியா வாய் பேச மட்டும் தான் எனக்குத் தகுதி இருக்கு போல. என்னால் தனியா குழந்தைங்களைப் பார்த்துக்க முடியல. அவங்களுக்குத் தேவையான அளவு சம்பாதிக்க முடியல.” என்றவள் வலித்த இதயத்தைக் கண்டுகொள்ளாமல் தன் கையில் இருந்த வளையல்களைக் காட்டி,

     “இது உங்களுக்குச் சொந்தமானதுன்னு எனக்குத் தெரியும். அதை உங்ககிட்ட கேட்காம விற்கப் பார்க்கிறது திருட்டுன்னும் தெரியும். ஆனா பிச்சை எடுக்கிறதுக்கு திருட்டு எவ்வளவோ பரவாயில்லைன்னு தோணுச்சு. தப்பு தான் மன்னிச்சிடுங்க.” அழுகையோடு சொல்லிவிட்டு நகரப்பார்த்தவள் கரம் பற்றி இழுத்து அணைத்தான் சாருகேசி. அவன் அணைப்பிற்குள் அடங்கி தன் சோகம், இயலாமை, பயம் என அனைத்தும் தீரும் வரை கத்தி கதற வேண்டும் போல மனம் சொல்ல, மூளையோ அவளை நிதானப்படுத்த முயன்றது.

     மூளையின் தூண்டுதலில் சுயநினைவு வந்தவள், பலர் பார்க்க காக்கிச் சட்டையில் இருந்துகொண்டு என்ன காரியம் செய்கிறான் எனப் பதறி, அவனை தன்னை விட்டு விலக்கப் பார்க்க, அதற்கு அவன் விடவில்லை.

     “என்ன பண்றீங்க? எல்லாரும் பார்க்கிறாங்க. ஏற்கனவே போதுமான அளவு எங்க குடும்பத்தை அவமானப்படுத்திட்டீங்க. இதுக்கு மேலும் ஏதாச்சும் நடந்தா அதைத் தாங்கிக்க என்னால் முடியாது. என்னத்தையாவது குடிச்சிட்டு.” என்றவளின் அடுத்த வார்த்தைகள் வெளியே வராமல் தன் கரம் கொண்டு அவள் வாயை மூடினான் சாருகேசி.

     “கொழுந்தனாரே, இன்னும் எவ்வளவு நேரம் தான் எங்க எல்லோருக்கும் ப்ஃரீ ஷோ காட்டப்போறீங்க.” என்றபடி அருகே வந்தாள் கீரவாணி. அந்த நகைக்கடையின் ஊழியர் உடையில் இருந்தவளை ஒரு முறை பார்த்த அமிர்தா அங்கிருந்து செல்லப் பார்க்க, “கடைசியா ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே லைட்ஹவுஸ். நடந்த எல்லாத்தையும் மறந்து நம்ம வீட்டில் வந்து என்னோட வாழ பெரிய மனசு வையேன். உன்னோட எல்லாக் கடமைகளையும் என்னோடதா நான் பார்த்துக்கிறேன்.” என்றவனை வெறித்த பார்வை பார்த்தவள், தலையை இடவலமாக ஆட்டி,

     “என்னால் அது முடியாது கேசி. எனக்கு அந்த வீடும், சுடுகாடும் ஒன்னு தான். அதோட இத்தனைக்குப் பிறகும் உங்களோட மனமொத்து வாழ முடியும் னு எனக்குத் தோணல. இதுதான் எல்லோருக்கும் நல்லது.” என்றுவிட்டு நகரப்பார்த்தவளை, ஒரு நிமிஷம் என்று தடுத்து நிறுத்தினாள் கீரவாணி.

     இன்னும் என்ன என்கிற எரிச்சலோடு அவள் பார்க்க, “நகையை விக்கிறதுக்கு தானே வந்தீங்க. அதைச் செய்யாம போறீங்க.” என்க, “நகையோட உரிமையாளர் வந்துட்டதால் திருட நினைச்சவங்க விலக நினைக்கிறது தான் சரி.” என்றாள்.

     “என்ன பைத்தியக்காரத்தனமான பேச்சு இது. இதை நான் எப்ப உன் கையில் போட்டுவிட்டேனோ அப்ப இருந்து இது உன்னோடது. உனக்குச் சொந்தமானது. அதனால இது மேலான உரிமை உனக்கு மட்டும் தான். இன்னொரு முறை திருட்டு, திருடின்னு பேசாத. வலிக்குது டி.” வேகமாகச் சொன்னான் சாருகேசி.

     அவன் சொன்ன கடைசி வார்த்தையில் அமிர்தா அமைதியாக நின்றிருக்க, “நீங்க சொன்னது சரிதானா கொழுந்தனாரே. இது நம்ம குடும்பத்தோட பரம்பரை வளையல். அது, குடும்பத்தில் மருமகளா வாழுறவங்க கிட்ட இருக்கிறது தானே சரியா இருக்கும். அமிர்தவர்ஷினி தான் உங்களோட வாழலையே. அதனால் அந்த வளையலுக்கான உரிமை எனக்கு தான் வரும். அதுக்கு என்ன விலையோ அதைக் கொடுத்து நானே வாங்கிக்கிறேன்.” என்றவள் கேசியின் கரத்தில் இருந்து வளையல்களை சட்டென பிடுங்கிக்கொண்டாள்.

     அதிர்ச்சியில் பேச்சே வரமாட்டேன் என்றது அமிர்தாவுக்கு. “என்ன அமிர்தவர்ஷினி, எனக்கு இதை விற்பீங்க தானே.” புருவத்தை உயர்த்தி கீரவாணி கேட்கையில், பற்றிக்கொண்டு வந்தது அமிர்தாவுக்கு.

     “எனக்கு பணம் வேண்டாம்.” என்றுவிட்டு நகரப்பார்த்தவளை தடுத்த கேசி, தன்னுடைய வாலட்டில் இருந்து தன் வங்கி அட்டையை அவளிடம் நீட்டினான்.

     அமிர்தா அவனை கேள்வியாய் பார்க்க, “இதை யூஸ் பண்ணிக்கோ. என் சேலரி அக்கவுண்ட் தான். என்னோட எல்லாத் தேவைக்கும் அண்ணன் பணம் போட்டு விடுறதால் இந்தப் பணம் அப்படியே தான் இருக்கும். உனக்கு எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோ.” என்றான்.

     அவன் கையில் இருந்ததைப் பார்த்து தலையை ஆட்டியவள், “நான் தான் சொன்னேனே, பிச்சை எடுக்கிற அளவுக்கு இன்னும் தன்மானம் இடம் கொடுக்கல. அதனால் தான் திருட முடிவு செஞ்சேன்னு. இது எனக்கு வேண்டாம். இது மட்டும் இல்ல, உங்ககிட்ட இருந்து கிடைக்கிற எதுவும் வேண்டாம்.” என்பதில் உன் காதலும், கருணையும் கூட எனக்குத் தேவையில்லை என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறினாள் அமிர்தா.

     சாருகேசி செல்லும் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, “கரெக்ட் பண்றது ரொம்பக் கஷ்டம் தான் போல.” சிரிப்போடு கேட்டாள் கீரவாணி.

     “அண்ணி ப்ளீஸ், அவளை நாங்க எல்லோரும் சேர்ந்து ஹர்ட் பண்ணது போதும். நீங்களும் அந்த வரிசையில் சேர நினைக்காதீங்க.” என்க, கைகள் இரண்டையும் தூக்கி கும்பிடு போட்டவள், “ஐ ஹேட் லவ் அண்ட் லவ்வர்ஸ்.” என்றுவிட்டு வளையலை தன் கையில் அணிந்து அழகு பார்த்தபடி கிளம்பினாள் கீரவாணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!