Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

37. துளசி - காட்டுப்பாதையில் ஒற்றை பூ

காட்டுப்பாதையில் ஒற்றை பூ – 17

வீங்கிய இமை பீலிகளும் கலங்கிச் சிவந்த விழிகளுமாக அமர்ந்திருந்த மகளைத் தோளோடு அணைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார் மகேந்திரன் இன்று காலை மகளின் அழைப்பு வந்தபோது  “சொல்லுடா பாப்பா”  என்றவருக்கு.

 

“பா…”  என்ற மகளின் கலங்கிய குரல் ஒரு நொடி ஸ்தம்பிக்க வைத்தது “பிரியாமா என்னடா எங்க இருக்க நீ” என்றார் உடனே.



Advertisement

 

அன்று தந்தை மகள் முத்துவோடு அமர்ந்திருந்த அந்தச் சாலை வளைவு… மகள் தனியாக அமர்ந்திருந்தாள். பூரணியிடம் கூடச் சொல்லவில்லை வெளியில் வேலை இருப்பதாகச் சொல்லியவர் உடனே கிளம்பிச் சென்றார்.

 

Advertisement

ஒன்றுமே பேசவில்லை அமைதியாகவே அமர்ந்திருந்தாள்  “அவர் ஷர்மியை பொண்ணு கேக்கச் சொல்லி அவங்க வீட்டில தரமாட்டோம்னு சொல்லியிருக்காங்க. அவருக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருந்திருக்குப்பா”  என்றபோது மீண்டும் விழிகள் நிறையச் சிறு பிள்ளையெனத் தேம்பும் மகளைப் பார்க்கையில் அந்தத் தந்தைக்கு மனம் வலித்தது.

Advertisement

 

தன்னை அவன் விரும்பவில்லை என்றபோது கூடப் பெரிதாக வருத்தம் கொள்ளவில்லை அவள், சக்தியை எப்படி பிடிக்காம போகும் போகப் போக அவருக்கு என்னைப் பிடிக்கும் என்று திடமாகக் கூறியவள் தனக்கு முன் அவன் மனதில் வேறு பெண் இடம் பிடித்திருக்கிறாள் என்பதைத் தாங்கமுடியாமல் தவிக்கிறாள்.

Advertisement

 

இதனால்தான் அதை மகளிடம் சொல்லாமல் தவிர்த்தார் இதை இப்பொழுது யார் இவளிடம் கூறியிருப்பார்கள் நிச்சயம் மாப்பிள்ளை கூறியிருக்க மாட்டார் வேறு யார் என்ற யோசனை ஒருபக்கம் ஓடியது.

 

இதற்கே இப்படி அழுபவள் மற்ற விஷயங்களும் தெரிந்தால்? இதையெல்லாம் சரியாகப் புரிந்துகொள்வாளா என்று தடுமாறினார். அன்று சிவபாலன் அழைத்துப் பேசியபோதே இந்த விஷயங்களைக் கூறியிருந்தான்.

 

“பிரியாமா அழுறதை நிறுத்து முதல்ல இது என்ன பழக்கம் இப்போல்லாம் என் பொண்ணு ரொம்ப அழுமூஞ்சி ஆயிட்டா இப்படியா வளர்த்தேன் என் மகளை”  என்றார் கண்டிப்பாக.

 

மெல்ல மெல்ல அழுகை குறைந்தது தண்ணீர் எடுத்துக்கொடுக்க முகத்தைக் கழுவினாள்  “மாப்பிள்ளை அந்தப் பொண்ணை விரும்பிப் பெண் கேட்டாரா”  என்றார்.

 

அவள் தந்தையைக் குழப்பமாகப் பார்க்க  “உன்னைப் பேசி நிச்சயம் செஞ்ச அப்புறம் அந்தப் பெண்ணைக் கட்டிக்க கேட்டாரா”  என்க.

 

“இல்லை”  என்றாள்.

 

“உனக்கு அவரைப் பிடிக்கும்ன்ற விஷயம் தெரியறதுக்கு முன்னாடி இன்னும் சொல்லனும்னா உன்னையே தெரியறதுக்கு முன்னாடி கல்யாணத்துக்கு ஒரு பொண்ணை காமிச்சிருக்கார் இதுல அவர் மேல எங்க தப்பிருக்கு”  என்க.

 

“எனக்கே புரியுது ஆனா கேட்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு”  என்றாள்.

 

“பிடித்தம் அது யாருக்கு எப்போவேனா யார்மேல வேணா வரலாம் குட்டிமா, அதிலும் இது எப்போவோ முடிஞ்சு போய்டுச்சு அந்தப் பொண்ணு இப்போ அவரோட தம்பி பொண்டாட்டி இன்னொருத்தன் மனைவியை மனசுல நினைக்குறவரா மாப்பிள்ளை”  என்க.

 

“நோ ப்பா”  என்றாள் உடனே.

 

“அப்புறம், ஒருவேளை அந்தப் பொண்ணை அவருக்கு அவ்ளோபிடிச்சிருந்தா அவர் குணத்துக்குச் சம்மதமா கேட்டிட்டு இருந்திருப்பார் தட்டி தூக்கிட்டுப் போய்க் கட்டியிருக்கமாட்டாரா”  என்ற தந்தையை முறைத்தாள்.

 

“என்னடா”  என்றார் சிரிப்போடு.

 

“இந்த வீர சாகசம் எல்லாம் இப்போ கேட்டேனா நான்”  என்றாள் உர் என்று.

 

“இல்ல தான் ஆனா உனக்குப் புரியனுமே இப்போ சொல்லு மாப்ள மேல தப்பிருக்கா அவர் மேலே நீ கோபப்படலாமா”  என்க.

 

“கோபப்படுவேன் என்னய பாத்த உடனே பிடிச்சுதா அந்த அர்னால்டுக்கு”  என்றவள் மெல்லிய குரலில்  “அவளை மட்டும் கண்டதும் காதலா”  என்றாள் கடுகடுவென்று.

 

இது அப்பட்டமான உரிமை உணர்வின் வெளிப்பாடு இப்பொழுது ஏதேனும் பேசினால் தனக்கெதிரே கூட வெடிக்கும் என்று எண்ணியவர்  “எதா இருந்தாலும் கொஞ்சம் பார்த்துடா பாவம் அவர்”  என்றார்.

 

“என்கிட்டே உண்மையா சொல்லுங்க எதுக்கு இந்தக் கல்யாணம் அன்னைக்கு உங்ககிட்ட என்ன பேசினார்”  என்றாள் மீண்டும்.

 

“இந்த விஷயத்தை அன்னைக்கே சொல்லிட்டார் பாப்பா அது முடிஞ்சு போனது அதையேன் உன்கிட்ட சொல்லணும்னு நான் தான் விட்டுட்டேன் மத்தபடி அவரோட சின்ன வயசு விஷயங்கள், வேலை, அவருக்குன்னு என்ன இருக்கு இதைப்பாத்திதான் பேசினார்”  என்றார்.

 

தந்தையைத் திரும்பி அழுத்தமாகப் பார்த்தாள் அவர் அமைதியாகவே இருந்தார், எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருந்த அந்த முணுமுணுப்பு இப்பொழுது மீண்டும் அவள் உள்ளத்தில் பேரிரைச்சலாகச் சத்தமிடத் தொடங்கியது.

 

ஏன் இந்தத் திருமணம் பிடித்துத்தான் கேட்டார் என்றுதானே அப்பா இப்பொழுதும் சொல்கிறார் அப்புறம் ஏன் என்கிட்டயிருந்து விலகி இருக்கார். அன்னைக்கு உரிமையா ஆறு பிள்ளை வேணுமான்னு கேட்டார் ஆனா அப்புறம் கண்டுக்கவேயில்லை.

 

நாலு நாள் நான் இல்லாதப்போவும் ஒரு கால் இல்லை விசாரிப்பு இல்லை நேற்று என் கேள்விகளுக்கு விளக்கம் கூட இல்லை, இப்பொழுது மீண்டும் அழுகை வந்தது தலையைப் பிடித்துக்கொண்டாள்.

 

“பிரியா”  என்று கண்டிப்பாக அழைத்த மகேந்திரன்  “அவர்தான் வேணும் என்ன ஆனாலும் சரின்னு நின்னதானே அப்போ அவரோட கல்யாணம் நடந்தா போதும்னு நினைச்ச சக்திப்பிரியாவுக்கு இப்போ இவ்ளோ சந்தேகங்களும் எதிர்பார்ப்பும் ஏன்”  என்றார்.

 

“அவரை அப்படியேதான் ஏத்துக்கிட்டேன் உண்மைதான் அதுக்காக எனக்கு அவர்கிட்ட எந்த எதிர்பார்ப்பும் இருக்க கூடாதாப்பா, அவர் என் மேல அக்கறை காட்டணும் காதலிக்கனும்னு நினைக்கக் கூடாதா”  என்றாள்.

 

“எல்லாமே இருக்கலாம் தப்பில்லை மனுஷ மனசே அப்படித்தான் முதல்ல ஒண்ணுமேல ஆசைப்படுவோம் அப்போ அது மட்டும் எனக்குக் கிடைச்சா போதும் வேற எதுவுமே வேண்டாம்னு நினைப்போம். அது நம்ம கைக்கு வந்துட்டா அடுத்த எதிர்பார்ப்பு நமக்குள்ள முளைக்க ஆரம்பிச்சுடும்”.

 

“அது தப்புனு நான் சொல்லல நீ ஆசைப்படுறது எல்லாமே நடக்கும் அவருக்குக் கொஞ்சம் கால அவகாசம் குடுடா அப்பாவை நம்பு”  என்றார்.

 

அவளுக்கு அதற்குமேல் பேசவோ கேட்கவோ தெம்பில்லை விழிகளை மூடி ஒருமுறை ஆழ மூச்செடுத்தாள் பிறகு தந்தையின் புறம் திரும்பி  “தேங்க்ஸ்ப்பா நான் கிளம்புறேன்”  என்று அவர் பதிலுக்குக் காத்திராமல் கிளம்பியும் விட்டாள்.

 

அடுத்த நொடி சிவபாலனை அழைத்த மகேந்திரன்  “ரொம்ப டவுனா இருக்கா மாப்ள, சரியாயிடுவா ஆனா கொஞ்சம் சீக்கிரமா முடிச்சுடுங்க என் பொண்ணை நான் இப்படி பாத்ததேயில்லை”  என்றவரின் குரல் கூடக் கொஞ்சம் இடறியது.

 

“நானே சரி பண்ணிடுறேன் மாமா, என்னால எப்போவும் அவளைக் காயப்படுத்த முடியாது என் வார்த்தையை நீங்க நம்ப வேண்டாம் என்கூட அவ வாழப்போற வாழ்க்கை நிச்சயம் உங்களை நம்ப வைக்கும்”  என்றான் திடமான குரலில்.

 

“ஹ்ம்ம்”  என்றவர் அழைப்பைத் துண்டித்தார்.

 

அவன் அன்றிரவு வந்தபோது அவனுக்கும் முத்துவிற்கும் எப்பொழுதும் போலச் சிரித்த முகமாகவே உணவை எடுத்துவைத்தாள் முத்து அவளை உற்று உற்றுப் பார்க்க.

 

“என்ன”  என்றாள் முறைப்பாக.

 

“இல்ல ரெண்டு நாளா என் தங்கச்சியை காணல அதான் தேடுறேன் இன்னைக்கு பாதி திரும்பி வந்திருக்கு நாளைக்கு மீதியும் வந்திடுமோ”  என்றான்.

 

அவனை நன்றாக முறைத்தவள்  “சீக்கிரம் சாப்பிடுங்க எனக்குத் தூக்கம் வருது உங்களை மாதிரி வேலை இல்லாம இருக்கேனா நாளைக்கு வேற கழுத்து வரைக்கும் வேலை இருக்கு”  என்றாள்.

 

“அதுசரி”  என்றவன் அமைதியாகச் சாப்பிட்டு முடித்தான் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தாலும் சிவபாலனிடம் எந்த எதிர்வினையும் இல்லை அவளும் எதிர்பார்க்கவில்லை அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு அறைக்குச் சென்று படுத்துவிட்டாள்.

 

அவனுக்கு அறைக்குள் செல்லவே மனம் வரவில்லை ஏதேனும் கேட்டுவிட்டால் என்ன செய்ய இப்பொழுது அவளிடம் பேசாமல் இருப்பதுதான் நல்லது என்ற எண்ணத்தினாலே வெகுநேரம் சென்றே அறைக்குத் திரும்பினான்.

 

எப்பொழுதும் உறங்கும் அதே போஸ். என்ன இரண்டு நாட்களாக முகத்தைச் சுவர் பக்கம் திருப்பி வைத்திருக்கிறாள் அவனுக்கும் உடல் அசதி உறங்கிவிட்டான்.

 

ஷர்மியின் குடும்பத்தினர் அன்று காலையே வீட்டில் கூடியிருந்தனர். மகிழ்ச்சியான செய்தி கேட்டு வந்திருந்தனர் ஷர்மி தாய்மை அடைந்திருக்கிறாள் ஆளுக்கு ஒரு விஷயம் அறிவுரை என்று சொல்லிக் கூடமே கலகலப்பாக இருந்தது.

 

விஷயம் அறிந்த சக்திப்பிரியாவும் ஷர்மியின் அருகில் சென்று அணைத்து அவளுக்கு வாழ்த்து சொன்னாள்  “எதுவும் தேவைன்னா தயங்காம கேளுங்க ஷர்மி”  என்றாள் அன்பாகவே.

 

ஷர்மியும் நிறைவான புன்னகையோடு  “தேங்க்ஸ்”  என்றாள்.

 

அதன் பிறகு அந்தக் கூட்டத்தின் இடையில் நிற்கவில்லை சக்திப்பிரியா தன் வேலைகளைப் பார்க்கச் சென்றுவிட்டாள், பவுனுதாயிக்கு மனதிற்குள் ஏதோ இனம் புரியா ஒரு பயம் சூழத் தொடங்கியது.

 

கவிதாவை திரும்பிப் பார்த்தார் கதிரையும் பார்த்தார் இந்த முறையும் ஒரு உயிர்ப் பலி நிகழுமா அது யாராக இருக்கும் பேரனா அவன் மனைவியா தடுக்க என்ன வழி என்று ஆயிரம் யோசனைகள்.

 

வேகமாகக் காலை உணவைச் செய்தவள் மேலே அறைக்கே கொண்டுவந்தாள். அப்பொழுதுதான் தயாராகி கீழே இறங்கப் பார்த்தவன் அவளைக் கேள்வியாகப் பார்க்கவும் உணவை டேபிளில் வைத்தவள் முத்துவுக்கு அலைபேசியில் அழைத்து.

 

“முத்துண்ணா நீங்க இன்னைக்கு வர வேண்டாம் நானே காலைச் சாப்பாடும் கொண்டு வரேன் கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுங்க”  என்றாள்.

 

அவன் என்ன கேட்டானோ  “அதுவா இங்க ஷர்மி வீட்டு ஆளுங்க எல்லாம் வந்திருக்காங்க, கீழே ஒரே திருவிழா கூட்டமா இருக்கு உங்களுக்குச் செட் ஆகாது”  என்றாள் கணவனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே.

 

அவனுக்குப் புரிந்துவிட்டது, இவள் ஏன் தனக்காகவே அனைத்தையும் பார்க்கிறாள் தனக்காகவே அனைத்தையும் யோசிக்கிறாள் என்று ஆயாசமாக இருந்தது.

 

உண்மையில் அவனாலும் அங்கே சாதாரணமாக இருக்க முடியாது அவனுக்கு உறவுகளின் கூட்டத்தைப் பார்த்தாலே அலர்ஜி.

 

“ஷர்மி மாசமா இருக்கா அதான் அவங்க வீட்டில பாக்க வந்திருக்காங்க”  என்றாள் முத்துவிடம் அலைபேசியில்.

 

சாதாரணமாகவே இவன் அந்த வீட்டிற்குள் அதிகம் போவதில்லை தன்னுடைய அறைக்குச் செல்வதற்காக ஹால் வரை செல்வான் இப்பொழுது அந்தத் தேவையும் இருக்கவில்லை. அதோடு, இதுபோல் உறவுகள் வந்துவிட்டால் அவனைச் சல்லடை போட்டுத் தேடினால் கூடக் கிடைக்கமாட்டான்.

 

இன்று அவன் மனைவி அவனின் மனம் புரிந்து அவன் கைகளுக்கே அனைத்தையும் கொண்டுவந்து தந்திருந்தாள், அவனிடம் பேசமாட்டாளாம் நேற்றைக்கு இருந்ததை விட இன்று கொஞ்சம் தெளிந்திருந்தாள் நேற்று இரவு அழவில்லை ஆகையால் முகத்தில் வீக்கம் குறைந்திருந்தது.

 

மூக்கின் நுனி மட்டும் கொஞ்சம் சிகப்போடு மிளிர்ந்தது மூக்குத்திக்குப் போட்டியாக… கொஞ்சம் கடித்துப் பார்க்க ஆசை துளிர்த்தது அவனுக்கு, அன்று வீட்டில் விருந்து களைகட்டியது சாப்பிட்டு முடித்து ஆண்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க மகளின் அறையில் அமர்ந்திருந்த ஷர்மியின் தாய்.

 

“என்னடி அவ உன்கிட்ட எப்படி”  என்றார்.

 

“யாரும்மா”  என்றாள் அவள்.

 

“அதாண்டி அவன் பொண்டாட்டி”  என்க.

 

“பிரியாவா? என்கிட்டே ஒன்னும் பெருசா பேசுறதில்ல அவங்க உண்டு அவங்க வேலை உண்டுன்னு போய்டுவாங்க புருஷனை மாதிரியேதான் வீட்டோட பெருசா ஓட்டுதல் இல்ல சமைக்க மட்டும் கீழே வருவாங்க அவ்ளோதான்”  என்றாள்.

 

“ஹ்ம்ம் என்னமோ கொஞ்சம் பாத்து இருந்துக்கோ”.

 

“அம்மா அவங்களுக்கு அவங்க வேலையே நேரம் சரியா இருக்கு புரளி பேசுறது வம்பு பண்றது எதுவும் கிடையாது பாட்டியும் அண்ணியும் சில நேரம் ஏதாவது பேசினா மட்டும் திரும்பிப் பேசிடுவாங்க அவங்களா யார் கிட்டயும் சண்டை போட்டு நான் பாக்கல”  என்றாள்.

 

“ரொம்ப தூக்கி தலைல வைக்காத”  என்றவர் சாற்றியிருந்த கதவை ஒருமுறை பார்த்துவிட்டு  “ஏண்டி இந்தச் சொத்தெல்லாம் அந்தப் பெரிய மனுஷியோடது தானே”  என்க.

 

“ஆமா” என்றாள் அவள்.

 

“இப்போ உன் மூத்த மாமியாருக்குத் தான் சொத்து அவங்க உயிரோடு இல்லாததால அவங்க பசங்களான அதாவது உன் நாத்தனாருக்கும் உன் புருஷனுக்கும் மட்டும்தான் வரணும், உன் மாமனாருக்கும் இந்தச் சொத்துக்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல அப்போ இது எல்லாம் ரெண்டு பங்கா மட்டும்தானே பிரிக்கணும்”  என்றவரை அவள் யோசனையாகப் பார்க்க.

 

“அதாண்டி அந்தச் சிவபாலன் இந்த வீட்டுப் பையன் கிடையாது அதால அவனுக்குப் பங்கு இல்ல. இந்தச் சித்ரா பொண்ணு உன் மாமனாருக்கும் அவரோட ரெண்டாவது பொண்டாட்டிக்கும் பொறந்தவ அவளுக்குமே இதுல பங்கு கிடையாது அப்போ பங்கு ரெண்டாதான் பிரியும்”.

 

“உன் நாத்தனார் பொம்பளை பிள்ளையைப் பெத்து வெச்சிருக்கா புருஷனும் இல்ல நல்லது கெட்டதை உன் புருஷன் தானே பாக்கணும், ஏதாவது நகை நட்டுப் போட்டு நல்லபடியா கட்டிக்குடுத்து அனுப்பிடுங்க. மத்தபடி சொத்தையெல்லாம் உன் புருஷன் கட்டுப்பாட்டுல இருக்குற மாதிரி பாத்துக்க வை”.

 

“வீட்டு பொம்பளைங்க தான் சூதானமா இருந்து பொழச்சிக்கணும் எல்லாம் உன் நல்லதுக்குதான் சொல்றேன் அதுவும் இப்போ நீ மாசமா இருக்க, வயித்துல புள்ளயோட இருக்கப்போ ஆம்பளைங்க கொஞ்சம் அனுசரணையா நடந்துப்பாங்க மெல்ல மெல்ல நம்ம பக்கம் இழுத்துடனும்” என்றார். கேட்டுக்கொண்டாள் யோசிக்கத் தொடங்கினாள்.

 

அப்படியே பத்து நாட்கள் கடந்திருந்தது கிச்சனில் கவிதா பவுனுதாயிடம் பேசிக்கொண்டிருந்தாள்  “இவளுக்குப் பிள்ளைத் தங்கிட்டா வீட்டுக்கு அனுப்பிடலாம்னு நாம நினைக்கிறோம் ஆனா இவன் அதைச் செய்வானா அம்மாச்சி அவன் பேச்சும் நடந்துக்குறதும் ஒண்ணுமே எனக்குச் சரியாப்படல நம்மள ஏமாத்திடுவானோன்னு தோணுது”  என்றாள்.

 

அப்பொழுதுதான் வீட்டிற்கு வந்திருந்தாள் சக்திப்பிரியா. காபி போட்டு எடுத்துக்கொண்டு அறைக்குச் செல்லலாம் என்று எண்ணியவள் அடுப்படி பக்கம் செல்ல அவர்கள் பேச்சின் பிற்பாதி மட்டும் அவளுக்குக் கேட்டது.

 

“இவளோட அவன் வாழ ஆரம்பிச்சுட்டானா என்னனு தெரியலையே பாத்தா ரெண்டு பேரும் சாதாரணமாத்தான் இருக்காங்க ஏதாவது தெரிஞ்சாலாவது மேற்கொண்டு என்னனு பாக்கலாம்”  என்றாள்.

 

அதைக் கேட்டுக்கொண்டு உள்ளே நுழைந்தவள்  “என்ன பிரச்சனை உங்களுக்கு என்ன தெரியணும், முதல்ல அவரை ஏன் உங்களுக்குப் பிடிக்கல என்ன செஞ்சார் உங்களை? அவரால உங்களுக்கு இதுவரைக்கும் ஏதாவது பிரச்சனை வந்திருக்கா இன்னமும் என்னதான் வேணும் உங்களுக்கு”.

 

“அதோட என் மேல என்ன வெறுப்பு உங்களுக்கு… சிவபாலன் பொண்டாட்டின்னு இந்த வெறுப்பா இல்ல வேறு எதுவுமா எங்களை வெச்சு என்ன செய்ய நினைக்கிறீங்க”  என்று கத்தினாள்.

 

வேகமாக அங்கு வந்த சிவபாலன் அவளின் கைப்பற்றி இழுத்துச் சென்றான் அவர்கள் முன் அவனிடம் எந்தத் தர்க்கமும் செய்யவில்லை அவள். அறைக்குள் வந்ததும்  “விடுங்க விடுங்க என்னை”  என்றாள் கையை அவனிடமிருந்து உருவிக்கொண்டு.

 

அவளை இழுத்து தன்னோடு சேர்த்து நிறுத்தியவன்  “என்னடி பிரச்சனை உனக்கு”  என்றான்.

 

“என்னவோ பிரச்சனை உங்களுக்கு என்ன”  என்றவள் மெல்லிய குரலில்  “பிடிக்காதவகிட்ட என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு”  என்றாள்.

 

அவள் கன்னம்பற்றித் தன் முகம் நோக்கி உயர்த்தியவன்  “அவங்க ஏதோ பேசிட்டு போறாங்க எதுக்கு அவங்ககிட்ட வாய் குடுக்குற”  என்றவன் அவள் விழிகளை ஆழ்ந்து பார்த்து  “பிடிக்காதுன்னு யாருடி சொன்னா உன்கிட்ட ….பிடிக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்”  என்க.

 

விழிகளை விரித்தாள் சக்திப்பிரியா  “ஆமா அந்தப் பிள்ளையைப் பொண்ணு கேட்கச் சொன்னேன் அப்போ என் மனசுல யாரும் இல்ல. கல்யாணம் செஞ்சுக்கோன்னு அம்மா கெஞ்சிகிட்டே இருக்கவும் ஒரு குடும்பத்தை நமக்குன்னு அமைச்சுக்கிட்டா என்னன்னு தோணுச்சு அந்தப் பிள்ளை சரியா வரும்னு தோணவும் சொன்னேன்”  என்க.

 

அவன் சொல்லுவது நன்றாகவே புரிந்தாலும் வலித்தது விழிகள் கலங்கியது கண்ணீர் கன்னம் தொடும் முன் அதை விரல் கொண்டு துடைத்தவன்  “அப்போ என் மனசுல காதல் இல்ல ஆனா உன்னைய கட்ட உங்க அப்பாகிட்ட பேசினப்போ முழு மனசோட உன்னை உசிரா பிடிச்சுதான்டி கேட்டேன்”  என்றான்.

 

இப்பொழுது அழுகை இன்னும் கூடியது  “எல்லாம் சரியாகும் கொஞ்ச நாள் எனக்காகப் பொறுத்துக்கோ”  என்றவன் அவள் உச்சியில் அழுத்தமாக இதழ் பதித்து அவளை அணைத்துக்கொண்டான்.

 

தேடல் வரும்
பொழுது என் உணர்வுகளும்
கலங்குதடி காணலாய்
கிடந்தேன் நான் உன்
வரவால் விழி திறந்தேன்
இணை பிரியாத
நிலை பெறவே நெஞ்சில்
யாகமே தவித்திடும் போது
ஆறுதலாய் உன் மடி
சாய்கிறேன்
காலம் தோறும்
நெஞ்சில் வாழும் உந்தன்
காதல் ஞாபகங்கள் தினம்
தினம்
கனவெல்லாம்
நீ தானே விழியே உனக்கே
உயிரானேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!