Skip to content
Post Views: 2,665
“என்ன என் மூஞ்சுல என்ன ஒட்டியிருக்குனு இப்படி வெறிச்சிட்டு இருக்கீங்க. என்னடா அமுதா நீதான் மாசத்துல பாதி நாள் இங்கேயே இருக்க, ஒரு நாலு மாசத்துக்கு நீ பாத்துக்க மாட்டியா உன் மாமியாரை? அதே கூட குறைச்சி இன்னும் ரெண்டு மாசம்னாலும் முடியாதா என்ன? எல்லாரும் வேலைக்கு போறோம் அப்புறம் என்ன?” என்று கேட்கவும் அமுதன் தலை தன்னால் ஆடியது.
அழுத்தமாய் குழலியை பார்த்த ரிஷி, “போதுமா? உங்க அளவுக்கு அக்கறை இல்லைனாலும் எங்களுக்கும் வயசானவங்கள தனியா விடுற அளவுக்கு கொடூர மனசில்லை. நாங்க பாத்துக்குறோம் எங்க மாமியாரை. நீங்க கல்யாணத்துக்கு தயாரானா மட்டும் போதும். மாப்பிளையை நான் கொண்டு வந்து நிறுத்துறேன்.” என்றவனை மறுத்துப்பேச குழலி வாய் திறக்கவும் மீண்டும் பிடிபிடியென பிடித்துவிட்டான் ரிஷி.
‘உன் தேர்வு பொய்த்துவிட்டது. இனி இதில் தலையிடாதே. நல்ல குணமானவனாய் தற்போது வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே ஒருவனை கொண்டுவருவது என் பொறுப்பு.’ என்று அவள் வாய் அடைக்க செய்துவிட்டுத்தான் அங்கிருந்து கிளம்பினான்.
“இந்த ஒரு வருஷத்துல ரிஷி அண்ணன் உரிமை எடுத்து பேசி இன்னைக்குத்தான் பாக்குறேன்.” அவன் கிளம்பவும் இலகுவாக அமர்ந்த அமுதன் மனைவியைப் பார்த்து பேச,
Advertisement
“இத்தனை வருஷத்துல நாங்களே இப்போதான் பாக்குறோம்.” என்றாள் அவளும்.
“உங்களை ஒருத்தன் ஏமாத்திட்டான்னு அண்ணனுக்கு பயங்கர கோவம். அக்கறையெல்லாம் இருக்கு காட்டிக்க மாட்டேங்குறாரு. என்ன அத்தை அமைதியாவே இருக்கீங்க?” குழலியிடம் துவங்கி பிரபாவிடம் கேள்வியாய் நிறுத்த,
“இத்தனை நாள் இவதான் எல்லாத்தையும் முன்ன நின்னு பார்ப்பா. அவளுக்கு ஒன்னுங்கவும் ரிஷி மாப்பிள்ளை முன்ன நிக்குறாரு. இப்படி ஆகிடுச்சேன்னு கவலையா இருந்தாலும் இனியாவது இவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சா அதுவே போதும். என்னை பாத்துக்கணும்னு எல்லாம் நான் எதிர்பாக்கல. அவர்கிட்டேயே சொல்லி இருப்பேன் இப்போ சொன்னா இன்னும் குதிப்பாரு அதான் அமைதியா இருந்துட்டேன். அவர் முன்னெடுக்குறாரு நல்லது நடக்குதா பாப்போம்.” சோர்வாய் ஒலித்தது அவர் குரல்.
Advertisement
எப்போதும் ஒலிக்கும் குழலியின் குரல் கூட ஏமாற்றத்தின் அதிர்விலிருந்து மீளாமல் அமைதியாய் அனைத்தையும் கவனித்தபடி இருந்தது. சிறிது நேரம் இருந்துவிட்டு அமுதன் கிளம்பும் திட்டத்தோடு வந்திருந்தான் ஆனால் வீட்டு சூழ்நிலை அவனை அப்படியே கிளம்பிவிடவில்லை. அன்று இரவு அங்கேயே தங்கிவிட்டு அங்கிருந்தபடியே மறுநாள் அவரவர் வேலைக்கு புறப்பட்டனர்.
Advertisement
“ஆபீஸ்ல எதுவும் அவன் தொந்தரவு கொடுத்தா ஸ்ட்ரெஸ் ஆகிக்காதீங்க. பாத்துக்கலாம். பத்தாததுக்கு நம்ம வீட்டு அய்யனாரு அருவாளை தூக்காத கணக்கா குதிச்சிட்டு இருக்காரு. லைட்டா பத்த வச்சா போதும் பக்குனு புடிச்சிப்பாரு.” திங்கள் காலை குழலி அலுவலகம் கிளம்பும் நேரம் அமுதன் நம்பிக்கை கொடுத்து ரிஷியை கேலி போல் உள்ளிழுத்து அவளுக்கு தாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் சொல்லிச் சென்றான்.
சோர்வாகவே அலுவலகம் சென்றவள் அங்கிருந்த யாரையும் நிமிர்ந்து பார்க்க சக்தியின்றி வேலையில் கவனம் செலுத்த முயன்றாள். முடியவில்லை, கணேஷ் எந்நேரமும் வரக்கூடும் என்ற நினைப்பும் அவனது ஏமாற்றமும் சோர்வை அதிகப்படுத்தியது. காலை இடைவெளி நேரம் வரை பொறுத்துவிட்ட ராஷ்மியும் ஏன் வருத்தமாக இருக்கிறாய் என்று கேட்டாள். முதலில் மறைக்க முயன்றாலும் தொண்டை அடைக்கும் உண்மை வெளிவந்துவிட்டது.
தகாத வார்த்தையை பற்களுக்குள் கடித்து கணேஷை திட்டிய ராஷ்மி அவள் வீட்டு நிலைமையை கேட்டறிந்து கொண்டாள்.
Advertisement
“இனியாச்சும் உருப்படியா யோசிடி. அம்மா சின்ன அளவுல இருந்தாலும் சுயதொழில் பண்றாங்க. ஒருத்தி பிரைவேட்னாலும் பெரிய ஸ்கூல்ல டீச்சரா இருக்கா அவ வீட்டுக்காரரும் அதே ஸ்கூல்ல நல்ல வேலையில இருக்காரு, இன்னொருத்தி கவர்மெண்ட் உத்தியோகம் அவ வீட்டுக்காரர் நம்மள மாதிரி பெரிய கம்பெனில வேலை. அத்தியாவசிய தேவையெல்லாம் பாத்துக்குற அளவுக்கு எல்லாரும் வளந்துட்டீங்க. அம்மாவை பாக்கவும் உன் தங்கச்சி வீட்ல கைகொடுக்குறேனு சொல்லிட்டாங்களே இனி உனக்காகவும் பாருடி. குடும்பத்துக்கு பார்த்து பார்த்து செய்யுறதால் உனக்கு யாரும் சிலை வைக்கப்போறதில்லை. அவங்க அவங்க வாழ்க்கையை வாழ எல்லாருக்கும் உரிமையிருக்கு. இட்ஸ் டைம் போர் யூ. ஸ்டே பேக் அண்ட் லெட் தெம் டேக் கேர்.” அவளுக்கு தெரிந்த வகையில் குழலிக்கு எடுத்து சொன்னாள்.
மதியம் போல் கணேஷ் தேடிக்கொண்டு வர, பெண்களிடம் தொந்தரவு கொடுக்கிறாய் என்று மேலிடத்தில் புகார் கொடுத்துவிடுவேன் என்று ராஷ்மியே மிரட்டி அனுப்பினாள். குழலியை முறைத்துக்கொண்டு சென்றவன் அவள் தனியாக சிக்கும் நேரம் பாத்திருந்தான்.
சில நாட்கள் கழித்து அப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்க,
“நீ என்னை தப்பா புரிஞ்சிகிட்ட குழலி. அன்னைக்கு ஏதோ கோபத்துல.” என்று தன் பக்கத்தை நியாயப்படுத்த முயன்றவனை கை நீட்டி தடுத்தவள்,
“உங்க வொய்ப் பத்தி ஒரு கதை சொன்னீங்களே அது உண்மையான்னு இப்போ எனக்கு சந்தேகமா இருக்கு. அது அப்படியே உண்மையா இருந்தாலும் ஐ டோன்ட் கேர். இதுமாதிரி திரும்ப திரும்ப தொந்தரவு கொடுத்தா ஹாரஸ் பண்றீங்கன்னு கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்.” அவன் பக்கமிருக்கும் தவறுக்கு ஒரு முறை கூட மன்னிப்பு கேட்காதவனை காண காண வெறுத்துப்போனது. அதனை முன்னிட்டு அவள் அழுத்தமாய் பேச,
“இட்ஸ் யுவர் லாஸ்.” என்று கிளம்பினான் அவன்.
ஏளனமாய் அவனை பார்த்து நின்றவளுள் வேதனை இருக்கவே செய்தது. இதுவரை எவரையும் தனக்கான துணை என்ற இடத்தில் வைத்து பார்த்தது இல்லை. இவனுக்கு தான் அந்த இடம் கொடுத்திருந்தாள் அது பொய்த்துப்போன வலி ஒரு ஓரத்தில் குத்திக்கொண்டே இருந்தது.
மாதங்கள் ஓட வேறு டீமிற்கு சென்றுவிட்டான் அவன். பார்க்கும் சந்தர்ப்பங்கள் குறைந்து அவன் கொடுத்த வலியை கடந்துவந்தாள் குழலி. அவர்களின் வாழ்க்கையும் இயல்புக்கு திரும்பியது.
“அப்போவே எவ்ளோ நல்ல வரனெல்லாம் கொண்டு வந்தேன். அதெல்லாம் வேண்டாம்னு ஈஸியா தள்ளியாச்சு உன் அக்கா. இப்போ பாரு அவன் அவன் ஆயிரம் கேள்வி கேக்குறான். ஏன் முப்பது தாண்டியும் கல்யாணம் ஆகாம இருக்கு, அப்பா இல்லையே யார் முன்ன நின்னு செய்வா, நல்ல சம்பாரிக்குதே ஆனா இன்னும் கல்யாணம் ஆகலைனா பொண்ணுக்கு உடம்புல எதுவும் குறையான்னு எல்லாம் கேக்குறாங்க. இதுல சென்னைக்குள்ளேயே பாக்கணும்னா எவனும் சிக்க மாட்டேங்குறான். இல்லையா அந்த கணேஷை விட ஒருபடி மேல போய் குழந்தை இருக்குறவனுக்கு எல்லாம் கேக்குறாங்க.” என்று ரிஷி அவ்வப்போது சந்தியாவிடம் காய்ந்து கொண்டிருந்தான்.
முப்பதின் முற்பாதியின் துவக்கத்தை கடந்துவிட்டாள் இந்த காலத்தினுள். இனியும் சரிசமமான வரனெல்லாம் அமையாது என்று ரிஷி குதிக்க, அவன் அம்மா ஏதோ சொந்தத்தில் வரன் இருக்கிறது. குழலி அளவுக்கு வருமானம் இல்லையென்றாலும் படிப்பு இருக்கிறது. பார்க்கும்படியாக இருப்பான். வீட்டிற்கு ஒரே பிள்ளை. ஒரே வயதாக இருக்கும். வசிப்பிடம் சென்னை இல்லை என்கவும் எதற்கும் இருக்கட்டும் என்று அவர்களின் தகவலை திரட்டி மாப்பிள்ளையின் அப்பாவிடம் அம்மாவை விட்டே பேச வைத்து போட்டோ வாங்கிக்கொண்டு மாமியார் வீட்டிற்கு வந்தான். வரும் முன்னரே அமுதனுக்கும் அழைத்து சொல்லிவிட்டு வர, அவர்களும் வந்துவிட்டனர்.
“இது சரியா வரும்னு தோணுது.” என்று அலைபேசியில் இருக்கும் மாப்பிள்ளை புகைப்படத்தை காட்டி ரிஷி பேச உடனே மறுப்பு குழலியிடத்தில்.
“சும்மா எல்லாத்துக்கும் நோ சொல்லிட்டு இருந்தா அறுபதாம் கல்யாணம் தான் பண்ணனும். ஒருதடவை பட்டது போதாதா? என்ன குறை கண்டுட்டீங்க?” என்று நேரடியாக அவளிடம் கேட்டான் ரிஷி.
“சென்னைல பாக்குறேனு சொல்லிட்டு இப்படி தெரியாத ஊருல மாப்பிள்ளை புடிச்சிட்டு வந்தா எப்படி?”
“நீங்க எதிர்பாக்குற அட்ரஸுல நீங்க எதிர்பாக்குற குணாதசியத்தோட வேணும்னா ஆடர் தான் பண்ணனும். பண்ணவா?” ரிஷியின் நக்கலில்,
“என் வேலைலாம் இங்க இருக்கு.” அவனை முறைக்க முடியாமல் பல்லைக் கடித்தாள் குழலி.
“கல்யாணம் தான் பண்ணி வைக்க முடியும். மத்தது எல்லாம் நீங்க பேசி முடிவு பண்ணிக்கோங்க.” பெரிய மனித தோரணையில் பேசி வைக்க, கடுப்பானது குழலிக்கு.
“உங்களை எல்லாம் இங்க விட்டுட்டு எங்கேயோ ஒரு கிராமத்துல போய் என்னால எப்படி இருக்க முடியும்? இது வேண்டாமே.” ரிஷியை விட்டு தங்கைகளிடம் திரும்பினாள் குழலி.
“நானும் அப்படிதான் நினைச்சி வேண்டாம்னேன். ஆனா மாப்பிள்ளைக்கு சென்னைக்கு மாறுதல் கிடைக்குற மாதிரி இருக்காம். கல்யாணத்துக்குள்ள இங்க வந்துடுவாருனு சொல்றாங்க.” என்றாள் சந்தியா.
குழலி தலை மறுப்பாக அசைய, தன் மாமியாரின் சொந்தம் என்று உறவுமுறைகளை விளக்கினாள் சந்தியா. திருப்தியடைந்த பிரபா, “பாக்கலாம். வர சொல்லுங்க.” என்றுவிட, மகளிடம் மறுப்பு.
“ஒரு தடவை சறுக்குனா எல்லா முறையுமா அப்படியே ஆகும்? உடனே எனக்கு சாய்ஸ் கொடுக்காம நீங்களே எல்லாம் பண்ணாதீங்க.”
“சந்தியா மாமியார் மெனக்கெட்டு இவ்ளோ விசாரிச்சு எல்லாம் சொல்லியிருக்காங்க. நல்ல இடமா தான் இருக்கும்.” சம்பந்தியம்மா பேச்சிற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற பொருள் அவர் பேசினில் இருக்க, குழலி பேச்சிற்கு அங்கு மதிப்பில்லாமல் போனது.
அமுதன் கூட நேரில் பார்த்து பேசுங்கள், உங்கள் விருப்பத்தை மீறி எதுவும் நடக்காது என்று தைரியம் கொடுக்க, குழலிக்கு வேறு வழி இருக்கவில்லை. ரிஷி இதற்கு மேல் முடியாதடா என்று விரைவிலேயே பெண் பார்க்கும் படலத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டான்.
இதோ மணமகனாக அமர்ந்திருப்பவன் முகம் யோசனையில் இருந்தாலும் பார்க்க நேர்த்தியாக இருந்தான். அவன் அம்மா முக வடிவே அப்படியா இல்லை எதுவும் கோபத்தில் அமர்ந்திருக்கிறாரா என்று கண்டுபிடிக்க முடியாதபடி இறுக்கத்துடன் இருந்தார். ரிஷி அம்மாதான் மாப்பிள்ளையின் அப்பாவிடம் வளவளத்துக் கொண்டிருந்தார்.
“என் உடம்பு நல்லா இருந்துச்சுன்னா மூத்தவளுக்கு முடியுறதுக்கு முன்னாடி என் மருமவளை எடுத்திருக்க மாட்டேன். எமன் வாசலை மிதிச்சதும் பயம் வந்து உடனேயே எல்லாம் முடிவாகிடுச்சு. ஆனாலும் குழலி ஒரு குறையும் இல்லாம தகப்பன் சாமியா இருந்து சந்தியாவுக்கு எல்லாம் பண்ணா. ரொம்ப நல்ல பொண்ணு. ஏதோ தள்ளி போயிட்டே இருந்தது உங்க குடும்பத்துக்கு வர்றதுக்கு தான் போல.” என்று சந்தியா மாமியார் கவிதா குழலிக்கு பாராட்டு பத்திரம் வாசித்ததில் குழலி குடும்பத்தினருக்கு அதிர்ச்சிதான்.
“கணேஷ் விஷயத்துக்கு அப்புறம் உன் நடுஅக்கா வீட்டுல குடும்பமா சேர்ந்து தேடி போய் மரத்தடில உக்காந்துட்டு வந்திருக்காங்களோ?” அமைதியாய் அமுதன் கூட மனைவியிடம் கிண்டலடித்தான்.
அறையில் பதட்டத்துடன் அமர்ந்திருந்த குழலியை வெளியே அழைத்தனர். வரவேற்பாய் அனைவருக்கும் வணக்கம் வைத்து மாப்பிள்ளையை இரண்டொரு நொடி அதிகம் பார்த்தாள். அவனும் இவளைப் பார்த்தான். முகத்தில் இருந்த யோசனை ரேகைகள் மறைந்து இலகுத்தன்மை ஒட்டியதோ என்று எண்ண வைப்பது போல் ஒரு மாற்றம் அவனிடம்.
ரிஷி அவர்கள் பேசிக்கொள்ளட்டும் என்று சொல்ல, இருவரும் வாசலுக்கு வந்தார்கள். அங்குதான் திறந்தவெளியாய் சிறிய இடத்தினில் பூச்செடிகளும் அதிகமிருந்தது. யார் முதலில் பேசுவது என்ற தயக்கம் எல்லாம் குழலிக்கு இல்லை.
“என்னோட வேலைலாம் இங்கதான் இருக்கு.” என்றாள் எடுத்தவுடன் தவிப்பாய். சந்தியா மாமியார் பேசுவதை பார்த்தால் இந்த சம்மந்தத்தை முடித்துவிட்டு தான் ஓய்வார் என்பது போலிருக்க, எங்கு இறுதியில் வேலைக்கே வேட்டு வந்துவிடுமோ என்ற ஐயம் வந்துவிட்டது அவளுக்கு.
“என்னை நியாபகமில்லையா?” என்று அவன் கேட்டதும் உற்றுப் பார்த்தாள்.
“எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.”
லேசாக சிரித்துக்கொண்டான்.
“நம்ம மீட் பண்ணி இருக்கோமா?” அவனை நினைவுக்குள் ஏற்றி அவ்வடுக்குகளில் அவனை தேட ஆரம்பித்தாள் குழலி.
“வித்தியாசமான பொண்ணா இருக்கீங்கன்னு அன்னைக்கு நினைச்சேன். இன்னைக்கு பாத்தா உங்க பேரும் வித்தியாசமா இருக்கு.”
“சாரி எனக்கு நியாபகம் இல்லை. எப்போ மீட் பண்ணோம்?”
“ஒரு வருஷம் இருக்கும்னு நினைக்குறேன்.” என்றான் அவனும் தோராயமாய்.
“ஓ…” என்று சாதாரணமாய் கேட்டுக்கொண்டாளே ஒழிய அதற்குள் மேல் எங்கு என்று கூட கேட்கவில்லை. அவள் கவலை வேறாக இருந்தது.
அவளை ஒரு நொடி கூர்ந்து பார்த்தவன், “நிறைய வித்தியாசம் இருக்குனு நினைக்குறேன்.”
“எதுல?” அவள் புருவம் சுருக்க,
அவன் சுண்டு விரல் கொண்டு இருவரையும் கை காண்பித்தான், “ஒத்து வருமான்னு தெரியல.”
“ஓ…” என்றவள் முகத்தில் என்ன உணர்வு என்று கண்டுபிடிக்க முடியவில்லை அவனால்.
“வேண்டாம்னு சொல்லப் போறீங்களா?” அவளாகவே கேட்டாள்.
உதட்டை பிதுக்கியவன், “நீங்க என்ன சொல்லப் போறீங்க?”
அவளும் அவனைப் போலவே உதட்டை பிதுக்க,
“இதுல மட்டும் ஒத்துப்போகுது.” மெலிதாக சிரித்துக்கொண்டான்.
“…”
“பாக்கலாம்.” என்றான்.
என்ன பாக்கலாம் என்று அவள் குழம்ப, அதற்குள் அவர்களை அழைக்க வந்துவிட்டாள் வந்தனா.
“உள்ளே கூப்பிடுறாங்க அக்கா.” என்று இழுத்துச் செல்ல, அவனை திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே சென்றாள் குழலி. என்ன சொல்லப்போகிறான், எதை பாக்கலாம் என்கிறான், என் திட்டங்கள் என்னாவது என்ற குழப்பங்கள் அணிவகுத்து நின்றது.
“இன்னும் முக்கியமானது எல்லாம் பேசவே இல்லைடி.” என்று தங்கையிடமும் முணுமுணுத்தாள்.
“கல்யாணத்துக்கு அப்புறம் பேசிக்கலாம்.” என்று அவள் சொல்வதிலேயே கிட்டத்தட்ட உறுதியானது போல் தெரிந்தது.
ஆனால் வீட்டினுள் அவன் வந்தபின் சூழ்நிலை மாறிப்போனது.
‘இப்போவே முடிவு சொல்லனுமா? அப்புறம் சொல்லலாம்ல?’ என்று தன் தந்தையிடம் அவன் மெல்லிய குரலில் கேட்க, சமாளிப்பாய் சிரித்து வைத்த மனிதர், வீட்டுக்கு சென்று தகவல் கொடுக்கிறோம் என்று விடைபெற்றுக்கொண்டார்.
மணமகனாக காட்டப்பட்டவனும் இன்முகமாக விடைபெற, குழலி வீட்டினர் மண்டையை பிய்க்காத குறைதான்.
“உன் அக்கா தனியா என்ன பேசுனாங்கனு கேளு. ஏதாவது ஏடாகூடமா பேசி வேணாம்னு போயிட்டாங்களோ? இங்க வர்றதுக்கு முன்னாடி கூட நம்பிக்கையா பேசுனாங்களே…” என்று ரிஷி மனைவியிடம் கடுகடுக்க,
“விடுடா… இன்னாருக்கு இன்னாருன்னு இருக்கும். அவங்க தான் சேருவாங்க.” என்றார் ரிஷி அம்மா.
“மாப்பிள்ளையோட அம்மா தான் ஒரு மார்க்கமா இருக்காங்க. மத்தபடி எல்லாம் ஓகே ஆகிடும்னு நினைச்சேன். பொசுக்குன்னு வீட்டுக்கு போயி கலந்துட்டு சொல்றேன்னு சொல்லிட்டாங்க.” அமுதனும் வருந்தினான்.
“அக்கா நேம் மாதிரி அவங்க நேமும் வித்தியாசமா இருக்கு செட் ஆகிடும்னு நினைச்சேன். ஆனா இப்படி கிளம்பிட்டாங்க.” என்று வந்தனாவும் சேர்ந்துகொள்ள, இவர்கள் பேச்சை அறையில் அமர்ந்து கேட்டபடி இருந்த குழலி அவள் தங்கை அலைபேசியில் இருந்த அவன் தகவல்கள் அடங்கிய புகைப்படத்தை மீண்டுமொருமுறை படித்துக்கொண்டிருந்தாள்.
துவக்கத்திலேயே கொட்டை எழுத்தில் க. அகமுகிலன் என்று இருந்தது. வந்தனா சொல்ற மாதிரி பேர் கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கு என்று எண்ணிக்கொண்டாள்.
error: Content is protected !!