Skip to content
Post Views: 2,483
அத்தியாயம் 6
“இந்த காதல் வேண்டாம் ம்ருதவ். நாம பிரேக்கப் பண்ணிக்கலாம்.”
மித்யுகா இரக்கமின்றி மொழிந்த வார்த்தைகள்.
ம்ருதவ்வை விட்டுச் சென்ற நாட்கள் முதல், இந்த நிமிடம் வரை அவனது நினைவின்றி அவளின் நாட்கள் நகர்ந்தது இல்லை.
Advertisement
அவனை நினைவில்கூட தள்ளி வைக்க முயன்று, நித்தம் நினைத்திருக்கிறாள். திருமணமான செண்பகம் பேச்செடுக்கும் வரை தனது மனம் தெரியாமலே நினைப்புகளில் அவனுடன் அவளாக ஓர் வாழ்வு. நித்தம் ஒரு காட்சி, நித்தம் ஒரு மகிழ்வென வாழ்ந்து கொண்டிருப்பவளுக்கு, அவனது வாழ்வு குறித்து அவளுக்கா ஓர் தீர்மானம்.
அவன் வாழ்க்கை இப்படி மாறியிருக்கும்.
அவன் வாழ்க்கையில் புதிய உறவுகள் வந்திருப்பார்கள்.
Advertisement
அவன் வாழ்க்கையில் அவனை விட்டுக்கொடுக்காது அவனை மட்டுமே நேசிக்கும் சொந்தம் கிடைத்திருக்கும்.
Advertisement
அவன் வாழ்க்கையில் அவனுக்கென ஒரு குடும்பம் உருவாகியிருக்கும்.
இப்படி பல அவனுக்கென அவளுக்குள் பல வாழ்வுகள் கொடுத்து மகிழ்ந்திருந்தவளுக்கு, இதெல்லாம் நிஜம் கொண்டிருக்குமா அல்லது உருவம் கொண்டிடாது நிழலாய் கடந்திருக்குமா… அவன் மறந்திருப்பானா? என்ற கேள்வியே இன்றுதான் மித்யுகாவின் மனதில் உதிக்கிறது.
இதுநாள் வரை தன்னுடைய எண்ணங்களில் கூட ம்ருதவ்வை வருத்தங்கள் நிறைந்தவனாகக் காண அவளுக்கு மனம் வரவில்லை.
Advertisement
அவளின் வாழ்வு அடுத்தக்கட்டம் நகர்கிறது எனும்போதுதான்,
“அவனுக்கு நான் வொர்த் இல்லை” என்று சொல்லிக்கொண்டே அவனோடு காதலில் கசிந்திருக்கிறோம் என்பது புரிய,
தன்னுடைய காதலுக்கு இறுதி வாய்ப்பாக நினைத்து அவனது வாழ்வை அறிந்துகொள்ள முயன்று கமலேஷுக்கு அழைத்துவிட்டாள்.
அழைத்தப் பின்னர் தான்… தனது இருவேறு மனநிலை புரிய,
“நீ முதல்ல தெளிவா முடிவெடு மித்யு” என தன்னைத்தானேக் கொட்டிக் கொண்டவளாக, “ராங் நெம்பர்” என சொல்லி வைத்திட்டாள்.
அவளுக்கே அவளை புரியவில்லை.
முந்தைய நாள், “இப்போ நான் ரெண்டு குழந்தைங்களுக்கு அம்மா. நான் வந்து நீ ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்கலாம். ஆனால் எனக்கும் மனசாட்சி இருக்கே! உன் வாழ்க்கையை தெரிஞ்சே நான் எப்படி வீணாக்குவேன்? உனக்குன்னு ஒரு வாழ்க்கையை நீ ஏற்படுத்தியிருந்தா?” என்று அவனுடன் சேர வேண்டுமெனத் தோன்றிய எண்ணத்தை ஒதுக்கியவள், இன்று அவன் வேண்டுமென நினைக்கிறாள்.
காதலின் பித்துநிலையில் தவித்து நின்றாள்.
காதல் அதிகம் கொண்டாலும் அங்கு நிரப்பப்படுவது வலிகள் தானோ? தெரிந்தே வலி சுமக்க முடிவு செய்து வேண்டாமென விட்டு வந்தவளுக்கு, இந்த வலி தரும் காதலும் சுகமாய்.
இரவு முழுக்க அவனது காதல் தந்த இதத்தோடு வலியிலும் புன்னகைத்திருந்தாள்.
அவளின் உள்ளம் அவன் கை சேர்ந்த ஜிமிக்கியின் பாதை அறிய பயணித்திருந்தது.
அவ்வளவு தூரம் தேடியும் ஜிமிக்கி கிடைக்காத சோகத்தில் தனது விடுதி அறை தோழிகளிடம் அவர்கள் போதும் போதுமென்று சொல்லுவரை புலம்பி தீர்த்திட்டாள்.
“இதுக்குமேல அந்த ஜிமிக்கியைப்பற்றி பேசின, இங்கிருந்து கீழ குதிச்சிடுவேன்” என ஒருத்தி சொல்லிய பின்பே தன்னுடைய வாயினை மூடியிருந்தாள் மித்யுகா.
“ஆசை ஆசையா அந்த டிசைன்ல ரொம்ப தேடி வாங்கினேன்.” சிறிது நேரத்தில் மீண்டும் ஆரம்பிக்க,
படுக்கையில் படுத்திருந்த மற்றொரு பெண் எழுந்து வந்து மித்யுகாவின் காலிலே விழுந்துவிட்டாள்.
“இந்த வீக்கென்ட் அவுட்டிங் போகும்போது நூறு கடை ஏறி இறங்கியாவது அதே டிசைன் ஜிமிக்கி வாங்கித்தர்றோம். இப்போ உன் புலம்பலை நிறுத்தி, எங்களை தூங்க விடு” என்றிருந்தாள்.
“எனக்கு அதேதான் வேணும். புதுசு வாங்கினாலும் அதுவாகிட முடியாதே” என்ற மித்யுகாவின் கழுத்தை நெறிப்பதைப்போன்று அப்பெண் கைகளைக் கொண்டுச்செல்ல,
“ஆத்தி… கொன்னாலும் கொன்னுடுவா போலிருக்கே” என்று வேகமாக போர்வையை தலை வரை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள். இருந்தாலும் தூக்கமென்பது வரவில்லை.
சரிவர உறங்கவும் செய்யாது மறுநாள் கல்லூரி வந்ததும் மித்யுகா சென்று நின்றது ரதியின் முன்புதான்.
“ஹாய் சீனியர்!”
“நீயா?” தன் முன்னால் திடீரெனக் குதித்து நின்ற மித்யுகாவைப் பார்த்து அதிர்வாய் வினவிய ரதி, “என்ன இன்னைக்கும் தேட விடலான்னு கூப்பிட வந்தியா?” எனக் கேட்டாள்.
“அதெல்லாம் இல்லை” என்ற மித்யுகா, “உங்க ஃப்ரெண்ட்கிட்ட கேட்டீங்களாக்கா?” என்றாள். எதிர்பார்ப்போடு.
“கேட்டேன். இல்லைன்னு சொல்லிட்டான்.”
“நிஜமாவா?” என்ற மித்யுகா, “விழுந்த இடத்தில் இல்லை. அப்படின்னா கண்டிப்பா அவங்ககிட்ட தான் அக்கா இருக்கும். எனக்காக இன்னொருவாட்டி கேட்டுப்பாருங்க. நல்ல ஷார்ப் ஹூக் சோ சட்டையில் எங்கேயும் மாட்டியிருக்கலாம், இல்லைன்னா பாக்கெட்டில் விழுந்திருக்கலாம்” என்றாள்.
“அவன் நேத்தே ஸ்ட்ராங்கா சொல்லிட்டான் மித்யு… வேணும்னா இவனையும் கேட்டுப்பாரு. நான் அவன்கிட்ட கேட்கும்போது இவனுந்தான் கூட இருந்தான்” என கமலேஷை தங்களின் பேச்சில் இழுத்துவிட்டிருந்தாள் ரதி.
“எஸ்… அவள் உண்மையைத்தான் சொல்றாள்” என்ற கமலேஷ், “அவனே வர்றான். நீயே கேட்டுக்கோ” என்று அப்போதுதான் வகுப்பிற்குள் நுழையும் ம்ருதவ்வை காட்டியிருந்தான்.
“இவங்களா?” என்று திரும்பிப் பார்த்தவளுக்கு, நேற்று அவனைப் பார்த்த நினைவே இல்லை. அவள் தான் ஜிமிக்கி காதிலிருந்து இழுபட்ட வலியில் கண்கள் சுருக்கி நின்றிருந்தாளே! அவன் மன்னிப்புக் கேட்டுச் சென்ற பின்புதான் இமைகள் திறந்து அவன் செல்லும் திசையில் பார்த்திட, அவனின் பின் உருவம் மட்டுமே காண கிடைத்தது.
அவன் பார்க்க அவள் பார்க்கவில்லை. அவள் பார்க்க அவன் பார்க்கவில்லை.
காதலின் முதல் நிலையான கண்ணாமூச்சி ஆட்டம் அக்கணத்திலே தொடங்கியிருந்ததுவோ?
“நிஜமா இவங்கதான் உங்க அந்த ஃப்ரெண்ட்டா?” மித்யுகா, உள் வந்த ம்ருதவ் அங்கேயே வகுப்பு மாணவன் ஒருவனுடன் பேசிக்கொண்டு நின்றிட, அவனிலிருந்து பார்வையை அகற்றாது கேட்டிருந்தாள்.
மின்னல் ஒன்று இதயத்தை தாக்கிட, இதயம் நழுவி அவனது பாதத்தில் சரணாவதை உள்ளம் வழி உணர்ந்தவளுக்கு, தேகம் முழுவதும் சில்லென்ற இதம்.
கண்கள் சிமிட்டாது அவனது முகத்தில் லயித்திருந்தாள்.
“அதிலென்ன டவுட் உனக்கு?” கமலேஷ் வினவ,
“செம ஹேன்ட்சம். என் கண்ணுக்கு ரொம்ப அழகா தெரியுறாங்க. பார்த்ததும் பச்சக்குன்னு இங்க ஒட்டிக்கிட்டாங்க” என்று தன்னுடைய இதயத்தில் கை வைத்தவள், “அதனாலதான் டவுட்” என்றாள்.
“ஏன் உனக்கு நினைவில்லையா? நேத்தும் அந்த முகத்தைதான் பார்த்த” என ரதி கூற,
“ம்ப்ச் மிஸ் பண்ணிட்டேன். பார்த்திருந்தாலும் நினைவில்லை. வலியில் கண்ணை மூடியிருந்தேன். திறக்கிறதுக்குள்ள போயிருந்தாங்க. சரியா பார்க்க முடியல” என்றாள் மித்யுகா.
“ஏய் இந்தாம்மா… நீயென்ன இப்படி வெளிப்படையா சைட் அடிச்சிட்டிருக்க” என்று அவளின் தோளில் தட்டி நிகழ் மீட்டான் கமலேஷ்.
“அச்சோ போச்சே…” என கமலேஷ் பக்கம் திரும்பிய மித்யுகா வராத கண்ணீரைத் துடைக்க…
“எதுக்கு இப்போ நீ ஊரை கூட்டுற” என்று அதட்டினான் கமலேஷ். அவளது சத்தத்தில் அருகிலிருந்த மாணவர்கள் சிலர் இவர்களைப் பார்க்கவே!
“இப்போ நீங்க ஃபோர்த் இயர் தான?”
“ஆமா இப்போ அதுக்கென்ன?”
கேட்ட ரதியின் பக்கம் முகம் பார்த்த மித்யுகா, “ஒன்றரை வருஷத்தை வீணாக்கிட்டேன். இந்த காலேஜ் வந்த முதல்நாளே என் ஆளை என் கண்ணுல காட்டியிருக்கக்கூடாதா? இந்நேரம் லவ்வை சொல்லி, காதல் பறவைகளா நம்ம கேம்பஸ் உள்ள சிறகடிச்சிறுப்போம்” என்று விழிகளில் கனவுகளோடு கழுத்துக்கு கீழே இரு கைகளும் வைத்துக்கொண்டு கூறிட,
“என்னாது அதுக்குள்ள லவ்வா?” என்று ரதியும், கமலேஷும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“எஸ்… லவ் அட் செக்கென்ட் சைட்” என்று கண்கள் சிமிட்டியவள், “இந்த ஃபீல் நல்லாயிருக்குக்கா” என ரதியின் தோளோடு அணைத்துக்கொண்டு சாய்ந்தாடினாள்.
“நீ எதுவும் விளையாடலையே?” ரதி கேட்க,
“இதுல யாராவது விளையாடுவாங்களா சீனியர். எனக்கு இப்போ எப்படி இருக்கு தெரியுமா? இந்த லவ் வந்தா எல்லாரும் ஏன் ஹாஃப் மைண்டாவே சுத்துறாங்க நினைச்சிருக்கேன். இப்போதான் புரியுது. அப்படியே மிதக்குற மாதிரி, மனசு லேசா ஃபீல் ஆகுது” என்றாள் மித்யுகா.
அவள் கண்கள் மூடி சொல்லிடவே முகத்தில் மின்னிய காதலில் ரதி மற்றும் கமலேஷ் மலைத்துப்போயினர்.
“இந்த ஃபீல் நல்லாயிருக்கு சீனியர்ஸ். இதே ஃபீலோடா இப்போவே லவ் சொல்லிடுறேன்” என்று நகர்ந்தவளின் இரு கரத்தையும் ஆளுக்கொன்றாய் பிடித்து தடுத்து நிறுத்தியிருந்தனர் ரதி, கமலேஷ்.
“அச்சோ விடுங்க. பெல் அடிச்சிட்டா சார் வந்திடுவாங்க. அப்புறம் பிரேக்ல தான் வர முடியும். அதுவரையும் லவ் சொல்லாம இந்த ஹெவி ஃபீலோட வெயிட் பண்ண முடியாது” என்ற மித்யுகா, இருவரிடமுமிருந்தும் தனது கைகளை உருவிட முயற்சித்தாள். முடியாது போனது.
“விடுங்க சீனியர்ஸ்.”
“உன் ஆர்வம் புரியுது. ஆனா உன் லவ் சொல்ல இது சரியான நேரமான்னு எங்களுக்குத் தெரியல” என்றாள் ரதி.
“ஏன் இப்போ சொன்னா என்ன?”
“அவன் என்ன நிலைமையில் இருக்கான் தெரியுமா?” என்ற கமலேஷ் ம்ருதவ்வின் வாழ்வை ஓரளவிற்கு மேலோட்டமாக அனைத்தும் கூறினான்.
என்னவோ தானே அவனது கஷ்டங்களில் வாழ்ந்துப் பார்த்தவளாக, சற்று நேரத்திற்கு முன்னர் முகம் காட்டிய ஒளி மங்கிட, அதீத சோகத்தைக் காட்டியிருந்தாள். கண்கள் கூட கலங்கியிருந்தன.
“உன்னை கஷ்டப்படுத்திடுச்சோ” என்ற ரதி, “இப்போ அவனே ஓரளவு நார்மலாகிட்டான். மீதியும் ஆகட்டும். உன் லவ்வை அவன் ஏத்துக்கிற சூழல் வரட்டும். அப்போ சொல்லு” என்றாள்.
“எனக்கு இப்போவே இந்த செக்கெண்டே சொல்லணும்தான் தோணுதுக்கா” என்ற மித்யுகா, “என் காதல் அவங்களுக்கு யாருமில்லைங்கிற வலியை இல்லாமா ஆக்கும்ல” என்றாள்.
விளையாட்டுப் பெண்ணாகத் தெரிந்தவளிடம் இப்படியொரு பதிலை இருவருமே எதிர்பார்க்கவில்லை.
“என் காதல் அவங்களுக்கு எல்லாமாவும் இருக்கும் சீனியர்ஸ். என் அன்பு மட்டும் போதும் அவங்களுக்கு. நான் பார்த்துப்பேன். நான் இருப்பேன். எல்லாமாவும்.”
இருவரும் மித்யுகாவின் வார்த்தைகளிலிருந்த காதலின் ஆழம் உணர்ந்து உறைந்திருந்தனர்.
பார்த்த கணம் பற்றிக்கொண்ட காதலின் ஆழத்தின் அதீதம் அவர்களை மட்டுமல்ல, கொண்டவளுக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.
காதலின் தடம் பதிய, ஆத்மார்த்தம் கொள்ள, ஜீவன் கலந்து ஜீவிக்க, ஜென்ம ஜென்மமாய் நெஞ்சத்தில் காதல் சுமந்து உருகியிருக்க வேண்டுமென்றில்லை.
மழைத்துளி மண்ணில் சேரும் நேரம் போதும். பூமியோடு நீர் உறவாடும் நொடியில் பந்தம் கொள்வதைப்போல்.
மலையோடு காற்று உரசும் காதலாய், மித்யுகாவின் இதயம் முழுக்க சூழ்ந்தது ம்ருதவ் மீதான நேசம்.
“எதுக்கும் கொஞ்சம் யோசிச்சுக்கோ மித்யு. உனக்கு அவனைப்பற்றி எதுவும் தெரியாது. நாங்க சொன்னது உண்மையா பொய்யான்னு கூட தெரியாது” என்று அவசரப்பட வேண்டாமென ரதி எடுத்துக்கூறவே முயன்றாள்.
“ஆமா எங்களை நம்பி… எங்களையே உனக்கு ரெண்டு நாளாதான் தெரியும்” என்றான் கமலேஷ்.
“நான் அவங்களுக்காக இருப்பேங்கிறதை விட, அவங்க எனக்கு எல்லாமாவும் இருப்பாங்க தோணுது ரதிக்கா. அவங்களுக்கான முதல் உறவு நான். அவங்க உலகமாகவே இருப்பேன்ல” என்றாள்.
ரதியும், கமலேஷும் “உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவில்லை இது” என சொல்லிட,
“ஓகே உங்களுக்காக… நல்லா கேட்டுக்கோங்க உங்களுக்காக மட்டும் கொஞ்சமே கொஞ்சம் டைம் எடுத்துக்கிறேன். நான் அவங்களை நம்புறேன். என் காதலை நம்புறேன். எனக்கானவங்க அவங்க தான். பிரேக் வரை நீங்க சொன்ன டைம் எடுத்துக்கிறேன்” என்று ம்ருதவ்வைப் பார்த்துக்கொண்டே வகுப்பை விட்டு வெளியேறியிருந்தாள்.
மித்யுகா சென்றதும் நண்பர்கள் அருகில் வந்தமர்ந்த ம்ருதவ்,
“என்னடா நேத்துதான் அந்தப்பொண்ணை பார்த்தீங்க. இன்னைக்கு க்ளாஸ்க்கே வரவச்சு ரொம்ப சீரியஸா பேசிட்டு இருக்கீங்க?” என இருவரையும் பொதுவாய் வினவினான்.
“அந்தப்பொண்ணு யாருன்னு உனக்கு தெரியுதா?” கமலேஷ் ஆச்சரியமாக வினவினான்.
“ஏன் எனக்கென்ன அம்னீசியாவா? உடனே உடனே எல்லாம் மறக்க” என்ற ம்ருதவ், “ஜிமிக்கிப்பொண்ணு தான?” என்றான்.
“ஆமா! அவளேதான்” என்ற ரதி, “நீயென்ன அவன்கிட்ட ரொம்ப நேரமா பேசிட்டு அங்கவே நின்னுட்ட?” என புருவத் தூக்கலோடு நண்பனை ஆராயும் விதமாகக் கேட்டாள்.
“அவன் சும்மா பேசிட்டு இருந்தான். பேசும்போது எப்படி அவாய்ட் பண்ணிட்டு வரது” என்று தனது தடுமாற்றத்தை மறைத்தவனாக சமாளித்தான் ம்ருதவ்.
“நீதான் வம்படியா அவனை பிடிச்சு நிறுத்தி வச்சி பேசின மாதிரி தெரிஞ்சுது” என்றான் கமலேஷ்.
“இப்போ என்னடா உங்க ரெண்டு பேருக்கும். நான் க்ளாஸ்ல யார்கிட்டவும் பேசக்கூடாதா?” என இல்லாத கோபத்தை இருக்கென காண்பித்தான்.
“எதுக்கு டென்ஷன் ஆகற!” என்ற ரதி, “அவள் அவளோட ஜிமிக்கியை கேட்டுப்போகத்தான் வந்தாள். நீயெதுக்கும் நேத்து போட்டிருந்த உன் சர்ட் பாக்கெட் எல்லாம் செக் பண்ணு” என்றாள்.
“ஆங்…” என்ற ம்ருதவ், “வராத நாள் நோட்ஸ் எல்லாம் காப்பி பண்ணனும்” என டெஸ்க் கீழே வைத்திருந்த கமலேஷின் குறிப்பேடு ஒன்றை எடுத்துப் புரட்டியவனாக தன்மீதான அவர்களின் ஆராயும் பார்வையை அகற்றினான்.
சரியாக அந்நேரம் வகுப்பாசிரியர் வரவே ம்ருதவ்வுக்கு மூச்சு சீரானது.
ம்ருதவ்வுக்கு பார்த்ததும் அவள் மீது சலனமா, ஈர்ப்பா என்று தெரியவில்லை. ஆனால் அவளின் முகம் பார்த்த கணமன்றி, ஜிமிக்கியை தனது கரத்தில் பார்த்திட்ட தருணம் அவனுள் தோன்றிய முகம் இதத்தை பரப்பியிருந்தது.
அவனிடம் சேர்ந்திட்ட ஜிமிக்கி ஓர் இரவிற்குள் அவளாக உடனிருக்கும் இருப்பைக் கொடுக்கிறது.
அதற்காகவே, வகுப்பினுள் நுழைந்ததும் தன்னைப்போல் பார்வை நண்பர்களிடம் செல்ல, நின்றிருந்த மித்யுகாவை கண்டுவிட்டே, அவள் நேராகத் தன்னிடமே ஜிமிக்கியை கேட்க வந்திருக்கிறாளென நினைத்து, அவளிடம் பேசுவதை தவிர்க்கவே நண்பனிடம் பேசுவதைப்போன்று அங்கேயே நின்றிருந்தான்.
நண்பர்களிடம் இதுதான் காரணமெனக் கூறினால், அடுத்து அவர்களின் பேச்சு என்னவாக இருக்குமெனத் தெரிந்தே சொல்லாது மறைத்தான்.
அவனுக்கே அவனின் மனதிடம் தெளிவு வேண்டுமாய் இருக்க, சில நாட்கள் அந்த ஜிமிக்கியோடு எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றி பயணிக்க நினைத்திருந்தான்.
‘எனக்கு அவதான்னா… இந்த ஜிமிக்கி மாதிரியே தானா என்கிட்ட வந்து சேருவா’ என தனக்குத்தானே சொல்லிக்கொண்டவனாக மனதில் நம்பிக்கை கொண்டான்.
வகுப்பில் அமர்ந்திருந்த மித்யுகா சன்னல் வழி மைதானத்தின் நடுவில் உயர்ந்து நிற்கும் மணிக்கூண்டை நொடிக்கு ஒரு தரம் பார்த்து வைத்தாள்.
மணிக்கூண்டு ஊசி நகர்ந்த ஒவ்வொரு விநாடியும், மித்யுகாவுக்கு சுமையாகத் தோன்றியது.
ரதி, கமலேஷிடம் சொல்லி வந்த “பிரேக் வரை வெயிட் பண்றேன்” என்ற வார்த்தை, இப்போது அவளுக்கு ஒரு யுகமாய் நீண்டது.
எப்போதடா வகுப்பு முடியும் இடைவேளை வருமென வெந்து நொந்தாள்.
காதலின் அவஸ்தை… விரும்பியே ஏற்றாள்.
நேரத்திற்கு மணி அடித்ததும், வகுப்பறை முழுக்க சத்தம் எழுந்தது.
ஆனால் அவளுக்குள் மட்டும் ஒரு அமைதி. அந்த அமைதியில் அதுவரை தன்னிடம் தோன்றிடாத நடுக்கத்தை, படபடப்பை மறைக்க முயற்சித்தாள்.
“அவங்ககிட்ட லவ் சொல்லணும் சீனியர்ஸ்” என அடமாக சொன்னபோது தோன்றிடாத பதற்றம் தற்போது அவளிடத்தில்.
நினைத்த வேகத்தில் சொல்லியிருந்தால் ஒன்றும் தெரிந்திருக்காதோ? ஆனால் இப்போது, “நான் லவ் சொல்லி அவங்க நோ சொல்லிட்டா” என முதல்முறை யோசித்தாள்.
யோசனையெல்லாம் நொடி நேரம் தான்…
“அன்பு கொடுக்க வேண்டியது மித்யு. உன் அன்பை அவங்களுக்கு கொடு. உனக்கான அன்பு தானா அவங்ககிட்ட இருந்து உனக்கு வரும்” என அடுத்த கணமே நினைத்தவளாக ம்ருதவ்வின் வகுப்பிருக்கும் கட்டிடம் வந்தாள்.
அவள் வருவதற்கு முன்பு…
“வாடா கேன்டீன் போயிட்டு வருவோம்” என்று ம்ருதவ்வை, ரதி மற்றும் கமலேஷ் அழைத்தனர்.
“நீங்க போயிட்டு வாங்க. எனக்கு மூட் இல்லை” என்ற ம்ருதவ் டெஸ்கில் தலை கவிழ்ந்தான்.
“சரி விடு ரதி. அவனுக்கு நாமளே எதாவது வாங்கி வருவோம்” என முன் நகர்ந்த கமலேஷின் பின்னால் சட்டையைப் பிடித்திழுத்து நிறுத்திய ரதி,
“மித்யு வருவாள் டா! க்ளாஸ்ல எல்லார் முன்னுக்கவும் வச்சு சொல்லிட்டா, காலேஜ் முழுக்க ஸ்ப்ரெட் ஆகிடும்” என்று மெல்ல கிசுகிசுத்தாள்.
“ஏதோ ஆர்வக்கோளாறு சொல்லிட்டுப் போயிட்டாள். வரமாட்டாள். நீயேன் அதுக்குள்ள அவ்ளோ யோசிக்கிற” என்றான் கமலேஷ்.
“எனக்கு அவள் விளையாட்டுக்கு சொன்ன மாதிரி தெரியல. நீ அவளோட கண்ணுல அவன் மேலான காதலை பார்க்கலையா?” எனக் கேட்டாள்.
“அதெல்லாம் ஓகேதான்… ஆனா..”
“உனக்கு ஓகேதான. அப்போ வாய் மூடிட்டு இரு. எனக்கு அவளோட லவ் அவனுக்கு மொத்த சந்தோஷத்தையும் கொடுக்கும் தோணுது” என்றாள்.
“நீ சொன்னா சரிதான்” என்று கமலேஷ் சொல்ல… அடுத்த நிமிடம் வரவே முடியாதென்ற ம்ருதவ்வை இழுத்துக்கொண்டு கேன்டீன் வந்திருந்தனர்.
வகுப்பிலிருந்து செல்வதற்கு முன்பு,
“க்ளாஸ் ஸ்டார்ட் ஆகும் முன்ன ஒரு பொண்ணு என்கிட்ட பேசிட்டு இருந்தாலே! அவள் வருவாள். நாங்க கேன்டீன் போயிட்டோம் சொல்லு” என வகுப்பிலிருக்கும் தோழி ஒருவளிடம் ம்ருதவ் அறியாது சொல்லிச் சென்றாள்.
எவ்வளவு தயக்கமும், படபடப்பும் இருந்த போதிலும் இன்றே காதலை சொல்லியாக வேண்டுமென்பதில் உறுதியாக ம்ருதவ்வின் வகுப்பிற்கு வந்த மித்யுகா, அவர்கள் கேன்டீன் சென்றிருக்கிறார்கள் எனத் தெரிந்து அங்கு சென்றாள்.
கேன்டீன் முன்னிருக்கும் மரத்திற்கு கீழே போடப்பட்டிருந்த கல்மேடையில் ம்ருதவ் மட்டும் அமர்ந்திருந்தான்.
சில அடி தொலைவிலே பார்த்திருந்தாள்.
அடிகள் வைத்து முன்னேறியவளுக்கு, அவனிடம் சேரும் பாதை முடிவுறாது நீளும் தோற்றம்.
‘விழிகள் ஸ்பரிசித்த கணத்தில்,
காதலென முற்றுப்பெறாத,
பிரபஞ்சத்தின் முடிவுறா ஆசை,
உன்மீது எனக்கு!’
error: Content is protected !!