Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

05. முகில் - ஊஞ்சலாடும் முகிலே

ஊஞ்சலாடும் முகிலே 27

அத்தியாயம் 27

 

மதியம் உணவை எடுத்துக் கொள்ள வந்த கீர்த்திஸ்வரன் அன்னையை அழைக்க, அறையில் இருந்து அவர் வெளிவர, கூடவே மாடியில் இருந்து மகேஸ்வரனும் வந்திருந்தார்.

 



Advertisement

லாவண்யா விஷயத்தில் ஆரம்பித்து வீட்டில் ஏற்கனவே அவர் பேச்சு வார்த்தை குறைந்திருக்க, கடந்த சில நாட்களாய் இன்னும் குறைந்து என்னவோ கோபம் என்ற நிலையிலேயே தான் சுற்றிக் கொண்டிருந்ததை போன்ற தோற்றம்.

 

ஈஸ்வர் தந்தையிடம் பேச நினைத்தாலும் அவர் பிடி கொடுக்காமல் இருக்க, அவனுமே விட்டுப்பிடிக்க தான் நினைத்தான் அப்பொழுது.

Advertisement

 

Advertisement

ஈஸ்வர் கேட்கும் தொழில் பற்றிய கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லி சாப்பிட்டு முடித்து மகேஸ்வரன் எழுந்து செல்ல,

 

அவர் செல்லும் வரை தான் ஈஸ்வரின் பொறுமையும் கூட.

Advertisement

 

“இன்னும் பல்லவி போன் கூட பண்ணலையா?” என ஈஸ்வர் அதனை ஆச்சர்யமாய் தான் கேட்டான் அன்னையிடம்.

 

லதாவை தேட வைக்க கூடாது என்பதற்காகவே அவர் கண்முன் வந்து நின்று,

 

“நான் தான் தேடி ஓடி வரணும். என்ன பாசம் இருக்கு உங்களுக்கு என் மேல. நான் கோவம்!” என வேண்டுமென்றே சொல்லி லதா முன் நிற்கும் பெண் இத்தனை நாட்களாய் வராமல் கூடவே ஒரு அழைப்பு கூட கொடுக்காமல் என்பதை நம்பவே முடியவில்லை.

 

ஓரிரு மாதங்களாய் தெரியும் என்ற நிலை என்றால் பரவாயில்லை. கடந்த இரண்டரை வருடங்களாக இப்படி தான் நினைக்கும் முன் வந்து நின்று மகிழ்ச்சி கொடுத்து செல்பவளிடம் இருந்து இரண்டு வாரங்களுக்கு மேலாய் எந்த தகவலும் இல்லை என்பதில் அதனை சாதாரணமாய் விடமுடியவில்லை.

 

இல்லை என்று தலையசைத்து “உடம்புக்கு எதுவும் முடியலையா இருக்குமோ!” என லதாவிற்கு பயம் பிடிக்க, அதை அவர் கூறிய நொடி ஈஸ்வரும் அப்படி தானோ என்று நினைக்க துவங்கி,

 

“பல்லவி அம்மா நம்பர் இருந்தா கால் பண்ணுங்க!” என்றான் உடனே.

 

அதன்பின் தான் அந்த நியாபகமும் தோன்றி உடனே அழைத்து அங்கேயும் முழு அழைப்பும் செல்ல, எடுக்க தான் யாரும் இல்லை. 

 

“என்னவா இருக்கும் ஈஸ்வர். என்னவோ பதட்டமா இருக்கு!” என்ற லதா சொல்லில் சுதாரித்தவன்,

 

“அதெல்லாம் எதுவும் இருக்காது ம்மா. போன் ரிப்பேர் கூட இருக்கலாம். ஈவ்னிங் போய் பார்த்துட்டு வருவோம்!” என்று அவனே சொல்லவும் தான் லதா கண்களிலும் கொஞ்சம் நிம்மதி.

 

சாப்பிட்டு முடித்து தனது கம்பெனிக்கு சென்று வேலைகளை முடித்து என ஐந்து மணிக்கெல்லாம் வீடு திரும்பி இருந்தான் கீர்த்திஸ்வரன்.

 

“அப்பா இன்னும் வரலையா?” என்று வந்ததும் அவன் கேட்க,

 

“இல்லை டா. அஞ்சலி ரூம்ல தான் இருக்கா. அவகிட்ட சொல்லிட்டேன். கோவிலுக்கு போறதா சொல்ல சொல்லி இருக்கேன். சீக்கிரமே வந்திடனும்!” என்று சொல்லவும் ஈஸ்வர் உடனே சென்று உடைமாற்றி வந்து காரை இயக்க, வழியில் மீண்டும் ஒருமுறை என முயற்சித்துப் பார்த்தார் லதா பல்லவி எண்ணுக்கு.

 

“இவ இப்படி எல்லாம் இருக்கவே மாட்டா டா. என்ன ஆச்சோ. நான் தேடுவேன்னு நல்லாவே தெரியும்!” என லதா வெளிப்படையாய் புலம்பிக் கொண்டார் என்றால் ஈஸ்வர் மனதுக்குள் எண்ணிக் கொண்டான் என்பது தான் வித்தியாசம்.

 

ஈஸ்வர் தன்னிடம் இருந்த முகவரிக் கொண்டு வீட்டு வாசலில் வந்து நிறுத்தியவன் அதன் எண்ணையும் ஒருமுறை சரிபார்த்துக் கொண்டு,

 

“இது தான் ம்மா!” என அன்னையிடம் சொல்லிக் கொண்டு இருவருமாய் இறங்கி இறந்தனர்.

 

முன்பக்கமாய் சிறிய அளவில் செடிகள் வளர இடம் விட்டு ஒரு சிறு கேட் இருக்க, கார் தன் வீட்டின் முன் நிற்பதைக் கண்டு முன்வாசலில் அமர்ந்திருந்த சித்ரா கேட்டுக்கு அருகே வந்தார்.

 

கேட்டை திறந்தவர் அங்கிருந்த லதாவை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை என்பதாய் அதிர்ந்து பார்க்க, ஈஸ்வர் கண்டுவிட்டான் அவரை.

 

“ம்மா!” என்று அவன் காண்பிக்கவும் தான் சித்ராவை லதா பார்த்தது.

 

“சித்ரா!” என்று புன்னகைத்து அவர் அருகில் வர, சுத்தமாய் எதுவும் ஓடவில்லை சித்ராவிற்கு. உள்ளே அழைக்கவும் கூட இல்லாமல் அவர் அதிர்ந்து நிற்க, லதா தான் அவரின் முக பாவத்தை கவனிக்காமல் சென்றாரே தவிர்த்து ஈஸ்வர் கண்டு கொண்டிருந்தான்.

 

“எப்படி இருக்க லதா? நல்லா இருக்க தானே?” என்றவர்,

 

“பல்லவி எப்படி இருக்கா? உடம்பு எதுவும் சரி இல்லையா?” என அங்கே நின்றே கேட்க, பதில் சொல்ல கூட முடியாத திகைத்த நிலை சித்ராவிடம்.

 

எப்படி இப்படி வந்தார்கள்? எப்படி வர முடிந்தது என அதிர்ச்சி மீளாமல் நின்றிருக்க, 

 

“எதுவும் ப்ரோப்லேமா த்தை?” என அவர் முகத்தை வைத்து கேட்டு ஈஸ்வர் அருகில் வந்த பின் தான் அதற்குமேல் தான் அங்கேயே அப்படியே நிற்பதிலும் நிற்க வைப்பதிலும் சரியே இல்லை என்று புரிந்தவர்,

 

“உள்ள வாங்க!” என அழைத்து சென்றார்.

 

ஈஸ்வருக்கு அவர் முகமே என்னவோ பெரிதாய் இருப்பதாய் தான் கதை சொல்லியது. கொஞ்சம் பதட்டமும் சேர்ந்த போதும் அமைதியாய் அவன் அதை உள்வாங்க முயல, லதாவிற்கு இதெதுவும் தெரியவே இல்லை. பல்லவியை பார்த்தால் போதும் என்ற நிலை.

 

“கேட்குறேனே சித்ரா. உனக்கு ஒண்ணுமில்ல தானே? பல்லவி? பல்லவி நல்லாருக்கா தானே? காலேஜ் போய்ட்டாளா?” என்று தொடர்ந்து கேட்க,

 

“நீங்க எப்படி இங்க?“ என்று தான் கேட்டார் சித்ரா.

 

இத்தனைக்கு பின்னும் எப்படி இவர்கள் இங்கே வரலாம் எனும் ஆதங்கமும் அவரிடம் இருக்க, அதை லதா புரிந்து கொள்ளவே இல்லை.

 

ஈஸ்வருக்கும் புரியவில்லை தான் தவிர்த்து என்னவோ என்ற எண்ணமும் அழைக்களிக்க,

 

“என்ன பிரச்சனை த்தை?” என்றான் மீண்டுமாய்.

 

சித்ராவிடம் இப்பொழுது குழப்பமும் சூழ்ந்தது. தான் இப்படி இவர்களை உள்ளே அழைத்து வந்தது சரியா என்ற யோசனையில் அவர் இருக்க, லதாவின் பேச்சினைக் கேட்கயில் எப்படி இப்படி எதுவுமே நடவாதது போல இவரால் பேச முடிகிறது என்று யோசிக்கும் பொழுதே, என்ன பிரச்சனை என்று கேட்ட கீர்த்திஸ்வரனை கேள்வியாய் தான் பார்த்தார் சித்ரா.

 

சிறிய வீடு தான். அத்தனை அழகாய் நேர்த்தியாய் இருந்தது. அதை எல்லாம் கவனிக்கும் எண்ணம் இல்லை அங்கிருந்த சூழ்நிலைக்கு.

 

ஒரு அறையில் இருந்து வந்த இருமல் சத்தத்தில் மூவருமே தங்கள் எண்ணங்களில் இருந்து வெளிவந்து சத்தம் வந்த அறைப்பக்கம் திரும்ப,

 

“பல்லவி வீட்டுல தான் இருக்காளா?” என லதா கேட்கும் பொழுதே, “ம்மா!” என்ற அழைப்பு பல்லவியிடம் இருந்து.

 

சட்டென்று லதா எழுந்துவிட, “ஒரு நிமிஷம்!” என்று அவரை நிறுத்து, 

 

“நான் கூட்டிட்டு வர்றேன்!” என்று உள்ளே சென்றார் சித்ரா.

 

இப்பொழுது தான் சித்ராவிடம் வித்தியாசத்தைக் கண்டார் லதாவும்.

 

எப்பொழுதும் பார்த்ததும் அண்ணி என்று அழைப்பவரின் இந்த வெறுமையான சொல் சட்டென்று ஊசியாய் குத்த, மகனைத் திரும்பிப் பார்க்க, ஈஸ்வரும் அன்னையை தான் கண்டான்.

 

தான் இப்படி அன்னையை அழைத்து வந்தது சரியா என்று அவன் யோசிக்க ஆரம்பித்து இருந்தான் அவன் இப்பொழுது.

 

கூடவே அவளுக்கு என்னவோ என்றொரு எண்ணமும் சேர, இதென்ன இத்தனை மனது சமன்பட மறுத்து துடிக்கிறது என அதை உணர்ந்தான்.

 

சலித்த முகத்தோடு சோர்வாய் சித்ராவின் பின்னே வந்து நின்ற பல்லவி அங்கே லதா ஈஸ்வரை சுத்தமாய் எதிர்பாராமல் விழிக்க,

 

“பல்லவி!” என தானே எழுந்து மற்றதை மறந்து அவளருகில் வந்துவிட்டார் லதா.

 

“ஒரு போன் பண்ண மாட்டியா நீ? எத்தனை நாள் ஆச்சு? என்னவோ ஏதோனு பயந்தே போய்ட்டேன். என்னாச்சு உனக்கு? உடம்பு சரி இல்லையா?” என வரிசையாய் கேள்விகள் அவரிடம் இருந்து எழ, சில நொடிகள் பேச்சச்சு நின்றுவிட்டாள் பல்லவி.

 

கீர்த்திஸ்வரனும் அவளையும் அவள் பார்வையையும் தான் கவனித்துக் கொண்டிருந்தான். எதற்கு இத்தனை திகைப்பு என அவள் விழிகளின் மொழியை அவன் கேள்வியாய் பார்க்க,

 

“பல்லவி!” என அவள் கையைத் தட்டி சித்ரா சத்தமாய் அழைக்கவும் தான் கொஞ்சமாய் தன்னுணர்வு வந்தாள்.

 

“நான் பேசிட்டு இருக்கேன். நீ என்ன அப்படி பாக்குற? உடம்புக்கு என்ன? ஏன் வரல?” என மீண்டும் லதா கேட்க,

 

“லதாம்மா! நீங்க ஏன் இங்க?” என்றவள் வாசலைப் பார்த்தாள். கூடவே அடுத்து அவள் பார்வை ஈஸ்வரிடம் வந்து முறைத்து பின் மீண்டும் லதாவிடம் வர, அவர் முகம் பார்த்து கோபப்படவும் முடியவில்லை அவளால்.

 

இந்த பக்கம் சித்ரா கைகளைப் பிசைந்து கொண்டு கோபப்படவும் முடியாமல் பேசவும் முடியாமல் நிற்கப் பார்த்தவளுக்கு சட்டென்று அன்றைய தினம் நியாபகம் வந்து முகம் முழுதும் கனல் பூச செய்தது.

 

“நீங்க ரெண்டு பேர் தான் வந்திங்களா? அந்த பெரிய மனுஷன் வரல?” என பல்லவி கோபத்தை தாங்கி கேட்க,

 

“யாரை சொல்ற?” என்றார் லதா.

 

“உங்க வீட்டுக்காரர் தான்” என்ற பல்லவி,

 

“நானே என் அம்மா சொன்னதுக்காக தான் அமைதியா இருக்கேன். இல்லைனா நடக்குறதே வேற. இப்ப நீங்க தேடி வந்திருக்கிங்க. அடுத்து என்ன பிரச்சனையோன்னு இங்க பாருங்க எப்படி பயந்து போய் நிக்கிறாங்கனு” என சித்ராவை கை காட்டினாள் பல்லவி.

 

“ப்ச்! என்ன பேசுறீங்க நீங்க ரெண்டு பேரும்?” என சித்ராவோடு பல்லவியையும் கேட்டு எழுந்து அவர்கள் அருகில் வந்த கீர்த்திஸ்வரன்,

 

“என்ன தான் நடந்துச்சு. அம்மா நீ வீட்டுக்கு ரொம்ப நாளா வரலைன்னு ஒரே புலம்பல். உனக்கு என்னவோனு தான் இப்பவும் பார்க்க வந்தாங்க.” என்றான்.

 

“நீங்க பேசாதீங்க சார். நீங்க பேசவே பேசாதீங்க. உங்ககிட்ட பேசவே எனக்கு இஷ்டம் இல்ல!” என சட்டென்று கை நீட்டி அவனை நிறுத்தி வார்த்தைகளாளும் அவள் நெருப்பை வீச, லதாவும் அதில் திடுக்கிட்டார்.

 

“பல்லவி! என்ன பேசுற நீ?” என லதா கேட்க, பல்லவி சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டாள் அங்கே நடப்பதை புரிந்து கொள்ள.

 

“எதுக்கு அத்தனை போன் கால்? அதான் எடுக்கலைனு தெரியுது தானே? உங்களுக்காக மட்டும் தான் இப்பவும் அமைதியா நிக்குறேன் லதாம்மா” என்றவள் பேச்சில் கீர்த்திஸ்வரன் புருவங்கள் சுருங்க இன்னும் குழம்பி என்னவென்றே புரியாத கோபத்தில் பார்த்து நின்றவனுக்கு அவள் தன்மேலும் தான் கோபத்தில் இருக்கிறாள் என புரிந்தது.

 

“எதுக்கு வீட்டுக்கெல்லாம் வர்றிங்க? அன்னைக்கு அவங்க வந்து அசிங்கப்படுத்திட்டு போனது போதாதா? இப்ப உங்களுக்கு பின்னாடியே யாராவது எதாவது பேசிட்டு வரட்டும்… யார்னு எல்லாம் பார்க்க மாட்டேன் போலீஸ்ல தான் ஸ்ட்ராயிட்டா கம்பளைண்ட் குடுப்பேன். உங்களுக்காக கூட பார்க்க மாட்டேன்!” என லதாவிடம் கூற, எதுவும் புரியாமல் அவள் கோபத்தையும் தாங்கிட முடியாமல் வாயடைத்து நின்றார் லதா.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!