Skip to content
Post Views: 2,698
*9*
உறக்கம் கலைந்து இமைகள் நன்றாக விலகும் முன்னமே அன்னிச்சையாக கைகள் அலைபேசியை தேடிக் கண்டுபிடித்து அதை உயிர்பித்தது. திரையில் ஆத்யா மழலை சிரிப்புடன் நிற்க, சோம்பலான புன்னகையுடன் மணியைப் பார்த்தாள் குழலி. வழக்கமாக எழும் நேரத்தைவிட சற்று அதிக நேரம் கடந்திருந்தது. ஆனால் அத்தனை தாமதமில்லை என்பதால் நிதானமாக எழுந்து சோம்பல் முறித்தாள்.
மீண்டும் விழிகள் அலைபேசியில் விழவும் நைட் பார்த்திருப்பாரா? மட்டுப்பட்டிருந்த மனதின் குறுகுறுப்பு மீண்டும் வந்து ஒட்டிக்கொள்ள, அலைபேசியில் செயலியை இயக்கினாள். நட்பு அழைப்பை அவன் ஏற்கப்பட்டுவிட்டதற்கான அறிவிப்பும் அவளை தொடர அவன் விடுக்கப்பட்ட அழைப்பும் வந்து விழ, பொறுமையின்றி அவன் பக்கத்திற்கு சென்று பார்த்தாள். அவனது புதிய, பழைய என புகைப்படங்கள் சில இருந்தன. அனைத்தையும் திறந்து பார்க்கும் நேரம் கை தவறி ஒரு படத்திற்கு இதய விருப்பம் விழுந்துவிட பதறிப்போய் அதனை எடுத்துவிட்டு செயலியிலிருந்து வெளிவந்து அலைபேசியை அப்படியே மெத்தையில் வைத்தாள்.
‘இது டேஞ்சரா இருக்கே.’ முணுமுணுப்புடன் மீண்டும் அவன் பக்கத்தை திறந்து பார்த்தாள், ‘இவர் என்ன அக்சப்ட் பண்ணிட்டு அமைதியா இருக்காரு? இப்போ ஹார்ட் போட்டது வேற அவருக்கு போயிருக்குமே எப்படி நானே பேச ஆரம்பிக்கிறது? ரெக்வஸ்ட் குடுக்குறேன்ல ஒரு ஹாய் போட்டா என்னவாம்? அப்படியே புடிச்சுகிட்டு பேச ஆரம்பிச்சிடுவேனே.’ என்று தனக்குள்ளேயே உழன்றவளுக்கு பெருந்தயக்கம் வந்து ஒட்டிக்கொண்டது. அந்த இதய விருப்பம் விழாது இருந்திருந்தால் இந்த தயக்கம் வந்திருக்காதோ என்று கூட யோசித்தவள் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம் என்று தன்னைத்தானே வைதுகொண்டு அலுவலகத்திற்கு கிளம்பினாள்.
Advertisement
தேர்வு முடிவிற்கு காத்திருப்பது போல் இவளைக் கண்டதும் ஆவலுடன் வந்தாள் ராஷ்மி.
“உன் குழப்பம் தீர பேசிட்டியாடி? எல்லாம் ஓகே தான?”
“என்னை உக்கார விடுடி முதல்ல.” என்று எந்த உணர்வும் வெளிப்படுத்தாதவளை முறைத்தாள் ராஷ்மி.
Advertisement
“ப்ச்… ரெக்ஸ்ட் அக்சப்ட் பண்ணியாச்சு. ஆனா பேசல.” என்றவள் தெரியாது விழுந்த விருப்பத்தையும் தானாக பேசத் தயங்குவதையும் சொல்ல,
Advertisement
“அப்போ சக்ஸஸ் தான் இது.” என்றவளை உளறாதே என்பது போல் பார்த்தாள் குழலி.
“நீயே சொல்லு இதுக்கு முன்னாடி நீ மீட் பண்ணவங்க கூட எல்லாம் நேராவே தெளிவா பேசியிருக்க. இவர்கிட்ட மட்டும் ஏன் உனக்கு தயக்கம் வருது? அப்போ ஏதோ ஒரு வகையில உன்னை இம்ப்ரெஸ் பண்ணி இருக்காரு தான?” என்று அவளை தோண்டித்துருவினாள் ராஷ்மி.
“அடியே நீ பேசாம சீரியலுக்கு கதை எழுத போயிடலாம். இப்படி கட்டிக்க போற பொண்ணு ரெக்வஸ்ட் கொடுத்தா எந்த பையனாவது பேச முயற்சி பண்ணாம இருப்பானா. இந்த மனுஷன் இருக்காரு பாரு. சம்மதம்னு அவங்க வீட்ல சொன்னதோட சரி, அவர் போன் நம்பர் கொடுக்கவும் இல்லை என்னோடதை வாங்கவும் இல்லை. நானா தேடி ரெக்வஸ்ட் கொடுத்தும் எந்த ரியாக்ஷனும் இல்லை. தெரியாம ஹார்ட் போட்டுட்டேன் வேற, இதுல என்னனு போய் பேச நானு?”
Advertisement
“அவர் ஸ்டெப் எடுக்கலைனு கோவம் வருது பாரு உனக்கு.” என்று இவள் இன்னும் கேலி பேச கடுப்பாகிவிட்டது குழலிக்கு.
“என் வாழ்க்கையில என்ன நடக்குதுன்னு எனக்கே புரியல இதுல நீ வேற இம்சை பண்ணாத. நிறைய வேலை கிடக்கு எனக்கு.” என்று எரிச்சலாக சொன்ன குழலி கணினியில் புதைந்துகொள்ள,
“ஒருநாள் நீயே வந்து இவர் இல்லாம இருக்க முடியலடினு சொல்லுவ. அப்போ வச்சிக்குறேன் உன்னை.” தோள் குலுக்கிக்கொண்டாள் ராஷ்மி. அதனை அசட்டையாய் கடந்துவிட்டவளுக்கு அன்று மாலை அலுவலகத்திலிருந்து கிளம்பும் சமயம் அவனிடமிருந்து குறுஞ்செய்தி வந்ததற்கான அறிவிப்பு வந்தது. தனக்கு முன் சென்று கொண்டிருந்த ராஷ்மியை பார்த்துவிட்டு அதனை திறந்தாள்.
ஹாய் என்று மட்டும் அனுப்பியிருந்தான். அப்பாடா ஒரு வழியா வந்துடுச்சு என்று நினைத்தவள் உடனே பதிலுக்கு வணக்கம் அனுப்பினாள்.
வேலை முடிந்துவிட்டதா என்று அடுத்த செய்தி. இவள் கிளம்பிவிட்டதை சொல்ல பிறகு பேசலாம் என்றான்.
திரும்ப எல்லாம் காத்திருக்க முடியாது என்று நினைத்துவிட்டாளோ என்னவோ ராஷ்மியை போக சொல்லிவிட்டு அப்போதே பேச வேண்டும் என்று தன் அலைபேசி எண்ணை அனுப்பி வைத்தாள். தான் அனுப்பிய செய்தி பார்க்கப்பட்டதாக காண்பித்தாலும் அவனிடமிருந்து பதில் இல்லை. அப்பப்போ ஆப் ஆகிடுறாரு என்று முணுமுணுத்துக்கொண்டே அலைபேசியை முறைக்க, தனக்கு வேலை இருக்கிறது என்று அனுப்பிவைத்தான். சலித்துக்கொண்டவள் ஓய்வு நேரத்தில் பேசலாம் என்று மனமே இன்றி டைப் செய்ய, புது எண்ணிலிருந்து அழைப்பு. ஒரு மெசேஜ் அனுப்ப விடுறாங்களா என்ற நொடிப்புடன் அலட்சியமாய் அழைப்பை ஏற்க,
“மலர்.” என்ற அழைப்பில் பரபரப்பானாள் ‘மலரா?’
“லைன்ல இருக்கியா நான் முகிலன் பேசுறேன்.” என்ற பதிலில் அவள் செல்கள் அனைத்தும் உயிர் பெற்றது போல் இரத்தவோட்டத்தை நரம்புகளில் துரிதப்படுத்தி சிலிர்ப்பூட்டின.
“ஹான் ஹான் இருக்கேன்… வேலை இருக்குனு சொன்னீங்க.” அவன் அழைப்பை எதிர்பாராத படபடப்பு அவள் குரலில் தெரிந்தது.
“இருக்கு தான். நைட்டு ரொம்ப லேட்டா தான் போன் பாத்தேன். காலைலேயும் லேட்டா எழுந்து கிளம்புனதுல உன்கிட்ட பேச நேரம் கிடைக்கல. என் நம்பர் சேவ் பண்ணிக்கோ நைட் பேசலாம். பேசலாம் தானே?”
“ஹான் பேசலாம் பேசலாம்.” என்றாள் அவசரமாய்.
“ஓகே பை. கஸ்டமர் வராங்க இப்போ பேச முடியாது.” என்று அவனும் அவசரமாய் வைத்துவிட்டான்.
‘மலர்.’ அவன் அழைப்பை சொல்லிப்பார்த்தவளின் இதழ்கள் தன்னால் விரிந்தது, ‘இதுவும் நல்லாத்தான் இருக்கு.’ என்று அதனை ரசித்த நொடிகள் வேறெந்த குழப்பமும் அவள் மனதை அண்டவில்லை. வெகு நாட்கள் கழித்து புதிதாக புத்துணர்ச்சியாக உணர்ந்தது மனது. அந்த இதத்துடன் வீட்டிற்கு வந்து உடைமாற்றி இலகுவாக, தை மாதம் திருமணம் என்ற செய்தியை சொன்னார் பிரபா. அதுவரை இருந்த இலகுத்தன்மை மொத்தமாய் மாறிப்போனது.
“இன்னும் ஒரு மாசத்துலையா? என்ன விளையாடுறீங்களா?”
“தள்ளி போட வேண்டாம்னு நினைக்குறாங்க.” மகளின் அதிருப்தி கண்டு இழுத்தார் பிரபா.
“யார் நினைக்குறா?” கூர்மையாக வந்து விழுந்த கேள்வியில் பிரபாவிற்கு அடுத்து என்ன என்று புரிந்துபோனது.
“சந்தியா மாமியார் மாப்பிள்ளை வீட்ல சொல்லி இருப்பாங்க போல. அவங்களும் சரின்னுட்டாங்க.”
“அவங்க கொண்டு வந்ததால எல்லா முடிவும் அவங்க எடுக்கலாம்னு நினைச்சிட்டாங்களா. என்னம்மா நீ? ஒரு மாசத்துல எப்படி? சரி வராதுன்னு சொன்னியா நீ?”
“இப்படி எடுத்தெறிஞ்சி பேசாத குழலி. அவங்களுக்கு இத்தனையும் இழுத்துப் போட்டு செய்யணும்னு என்ன இருக்கு? உனக்கு நல்லது நடத்திடணும்னு சந்தியா மாப்பிள்ளையும் ஆறேழு மாசமா அல்லாடுறாரு. அவங்க முடிவெடுக்குறதுல என்ன தப்பு? இதுவரைக்கும் எப்படியோ இனி ரிஷி மாப்பிள்ளை உள்ள வந்து உரிமை எடுக்குறப்போ நம்ம அதுக்கான மரியாதையை கொடுத்துதான் ஆகணும். மறுத்து பேச முடியாது. தப்பா இருந்தா சொல்லலாம். சரியா இருக்கும்போது எதுக்கு எதிர்க்கணும்?” பிரபா மகளை கண்டிக்க அதிருப்தியாக பார்த்தாள் குழலி.
“ம்மா…”
“இதுக்கு மேலையும் உன் கல்யாணத்தை தள்ளி போடுறது புத்திசாலித்தனம் இல்லை.”
“எல்லாமே கைமீறி போற மாதிரி இருக்கு.”
“முடிவெடுக்குற இடத்துல இருந்தே நீ பழகிட்ட. இப்போ அதை கேட்டுக்குற இடத்துல இருக்குறதால உனக்கு அப்படி தோணுது. எல்லாமே எல்லா நேரமும் நம்ம கையில நிக்காது குழலி. அதது நடக்கும் போது ஏத்துக்கணும்.” என்ற பிரபாவின் பக்குவமான பேச்சு அவளை கொஞ்சம் அமைதிப்படுத்தினாலும் அறிவு முரண்டி நின்றது. இரண்டு தங்கையின் திருமணத்தையும் முன்னின்று நடத்தியதால் என்னென்ன வேலைகள் இருக்கும் என்பது அத்துப்படி. அது அனைத்தையும் ஒரே மாதத்தில் முடிக்க வேண்டுமென்றால் நினைக்கவே மலைப்பாக இருந்தது.
மகளின் எண்ணப்போக்கை அறிந்தாரோ என்னவோ, “சந்தியா கல்யாணத்தை ஒரே மாசத்துல நடத்திட்டோம். இப்போ ஒன்னுக்கு ரெண்டு மாப்பிள்ளை இருக்காங்க. ஒரு குறையும் வராது.” என்றார் பிரபா.
“என்னவோ எல்லாம் சொல்றீங்க நான் மண்டையை ஆட்டுறேன்.” என்று ஒருமாதிரியாக சொல்லிவிட்டு சென்ற மகளை கவலையுடன் பார்த்தவர் சின்னவளுக்கு அழைத்துவிட்டார், “உன் அக்கா எல்லாத்துக்கும் குதிக்குறாடி.”
“இத்தனை வருஷம் தனிக்காட்டு ராணியா சுத்திட்டு இன்னும் ஒரே மாசத்துல கூண்டுக்குள்ள அடைச்சிடுவோம்னா பதட்டம் வரும்ல.” என்று இலகுவாய் பேசி இவர் பீபியை ஏற்றினாள்.
“உன்கிட்ட சொன்னேன் பாரு.” என்று தலையில் அடித்துக்கொண்டவரை சமாதானம் செய்தவள், “நானும் பேசுனா அக்கா கடுப்பாகிடும் ம்மா. மாமா கூட பேச ஆரம்பிச்சா சரியாகிடுவா.” என்னவோ சொல்ற என்று பிரபா அமைதியாகிவிட, இரவு உணவு முடித்து உறங்க வராமல் இருக்கும் குழலியை யோசனையுடன் பார்த்தார். எனக்கு வேலையிருக்கிறது என்று அவரை அனுப்பி வைத்தவள் அவன் அழைப்புக்கு காத்திருக்க, நேரம் கூட கூட பதட்டம் கூடியது. ஒருகட்டத்தில் பொறுமையின்றி அவனுக்கு அழைத்துவிட்டாள்.
“தூக்கம் வருதா?” என்றுதான் அவன் துவங்கியதே. அவன் குரல் கேட்டதும் பெருமூச்சு விட்டவள், “இல்லை. சும்மா…”
“ரெஸ்ட்லெஸா இருக்கோ?”
“என்ன?”
“இல்லை எனக்கும் அப்படித்தான் இருந்துச்சு நேத்தி.” என்று அவன் இலகுவாய் பேச, இவள் கொஞ்சம் இயல்புக்கு வந்தாள்.
“ஆமா சடனா ஒரு மாசத்துல கல்யாணம்னு சொல்றாங்க… நீங்களும் ஒத்து வருமான்னு தெரியல, நிறைய வித்தியாசம் இருக்குனு மொதோ நாளே சொன்னீங்க.” என்று கோர்வையாக அவன் பேசியதை சொல்ல,
“சரியாகிடும்.” என்றான் மீண்டும் இலகுவாய்.
“அன்னைக்கு பாத்தப்போ அப்படி பேசிட்டு இன்னைக்கு எப்படி உங்களால இப்படி ஈஸியா பேச முடியுது?”
“அன்னைக்கு நீதான்னு முடிவு பண்ணல அதனால அப்படி பேசுனேன். இன்னைக்கு நீதான்னு முடிவாயிடுச்சு அதான் இப்படி பேசுறேன்.” என்று இராகம் இழுத்தான் முகிலன்.
“நல்லா பேசுறீங்க.” என்று இவள் வஞ்சப்புகழ்ச்சி செய்ய, அவனோ ஆர்ப்பாட்டமாய் சிரித்தான்.
“அதான்மா என் பொழப்பு.”
“ப்ச்… நான் சீரியஸா பேசுறேன்.”
“ஹே நானும் சீரியஸா தான் பேசுறேன் மலர். முடிவெடுக்குற வரை எவ்ளோ வேணாலும் யோசிச்சி குழப்பமா இருக்கலாம், எடுத்துட்டா ஸ்ட்ராங்கா இருக்கணும். இல்லைனா சாத்தான் புகுந்த கணக்கா மனசு அலைபாயும். அனுபவப்பட்டு சொல்றேன் மண்டையில ஏத்திக்கோ.”
“…”
“இன்ஸ்ட்டால மட்டுமில்லை நேர்லையும் ஹார்ட் குடுக்கலாம், பத்திரமா வச்சிப்பேன்.” என்று சிறு சிரிப்புடன் சொல்லவும், அவன் பார்த்துவிட்டான் என்றதில் கூச்சமாய் உணர்ந்தவள் தூங்கப்போகிறேன் என்று அழைப்பை துண்டித்துவிட்டாள்.
‘ஐயோ.’ என்று முகத்தை மூடியிருக்கையில் அலைபேசியில் செய்தி வந்ததற்கான ஓசை வர, அதனை எடுத்துப்பார்த்தாள்.
காலை தவறுதலாக அவன் புகைப்படத்திற்கு கொடுத்த இதய விருப்பத்திற்கான அறிவிப்பு அவனது செயலியில் இருந்ததை ஸ்கீர்ன்ஷாட் எடுத்து அனுப்பியிருந்தான். அதை பார்த்தவள் அவள் முகத்தையும் கண்ணாடியில் பார்த்திருக்கலாம். வெட்கத்தில் முகம் விகசித்து இதழ்கள் லேசாக பிரிந்து பற்கள் வைரமாய் வெளிப்பட பொலிந்து கிடந்தது அவள் வதனம்.
error: Content is protected !!