Skip to content
Post Views: 2,522
“முன்னாடியெல்லாம் பொண்ணு பாக்க பையனையே கூட்டிட்டு போக மாட்டோம். கல்யாணத்தன்னைக்கு தான் பாத்துப்பாங்க. இப்போ அப்படியா? அவங்க பாத்து, பேசி, பழகி, புடிச்சிருக்குன்னா தான் நம்மகிட்டேயே வராங்க. புடவை தானே புடிச்ச மாதிரி சேர்ந்தே போய் எடுத்துடலாமே அண்ணே.” என்று கவிதா எதார்த்தமாய் சொல்ல, கந்தசாமி சரி என்றுவிட்டார்.
‘நான் வேண்டாம்னு சொல்லியும் அவளுக்கு வேணுங்குறதை சாதிச்சிகிட்டாளே. அப்போ எனக்கு என்ன மரியாதை?’ என்று மாமியார் மனதினில் அவளறியாமலேயே கசப்பை வளர்த்துவிட்டாள் குழலி.
இரு குடும்பமும் பேசி தஞ்சை மண்ணின் பட்டுக்களஞ்சியமான திருபுவனத்தில் பட்டு எடுப்பது என்று முடிவாகி குழலி குடும்பத்துடன் சென்னையிலிருந்து பயணப்பட்டாள். வந்தனாவுக்கு விடுமுறை கிடைக்கவில்லை என்பதால் அவள் வரவில்லை. சந்தியா மட்டும் உடன் வந்திருந்தாள். அன்றைக்கு விடுப்பு எடுத்திருந்தான் முகிலன். காலை அந்நேரமே குளித்து நேர்த்தியாக உடையணிந்து தயாராகி இருந்தவனை பொறுமலுடன் பார்த்துக்கொண்டிருந்தார் மாரியம்மாள். சேயை அறியாத தாயா… ஆனால் அறியாதது போல் காட்டிக்கொண்டார்.
“தூங்காம நேரமே எங்க கிளம்பிட்ட முகிலு? இன்னைக்கு லீவு வேற…”
Advertisement
“மலர் வீட்லேந்து வர்றாங்கல்ல. நான் ரிஸீவ் பண்ணி ஹோட்டல்ல விட்டுட்டு கார் அரேஞ் பண்ணி கொடுத்துட்டு வரேன்.” என்ன முயன்றும் மகனிடம் அமைதி காக்க முடியவில்லை மாரியால்.
“அவ்ளோ தூரத்துலேந்து வர்றவங்களுக்கு இங்க பக்கத்துல இருக்குற இடத்துக்கு வரத்தெரியாதா? நீ என்னத்துக்கு போகணும்னு நிக்குற? ராத்திரி லேட்டா தான் வந்த இப்போவும் நேரமே எழுந்துட்ட.”
“மூணு லேடீஸ் குழந்தையோட புது இடத்துக்கு வர்றாங்க. இங்க எது எங்க கிடைக்கும்னு தெரியுமா? நாமதான் ஹெல்ப் பண்ணனும் ம்மா.” என்றான் சிகையை சரிசெய்தபடி.
Advertisement
“பாத்தியா நான் சொன்ன மாதிரியே ஆகிப்போச்சு. நீதான் அங்க தாங்கணும் இதுவே சனத்தோட இருக்குற பொண்ணை கட்டியிருந்தா இந்நேரத்துக்கு மாப்பிள்ளைன்னு உன்னை தாங்கியிருப்பாங்க.”
Advertisement
“நான் போனப்போ கூட என்னை டிரையின் வரைக்கும் வந்து வழியனுப்பி தண்ணீ மொதக்கொண்டு வாங்கிக் கொடுத்தா மலர். எப்படியோ வரட்டும்னு நான் எப்படி விடமுடியும்?” தன் செயலை நியாயப்படுத்தவென அவன் எடுத்துவிட்ட செய்தி தண்டவாளம் ஏறியது. அதிர்ந்து போன மாரியம்மாள்,
“என்ன நீ போனியா? எங்க போன? எப்போ போன? எங்களுக்கு தெரியாம அவளை நேர்ல பாக்குற அளவுக்கு ஆகிப்போச்சா?”
தாயின் அதிர்ந்த முகத்திலும் தொடர் கேள்விகளிலும் பல்லை கடித்து கண்களை இறுக மூடித்திறந்தான். தன் கேள்விகளுக்கு உடனே பதில் கிடைக்காததில் மகனை நெருக்கினார் மாரியம்மாள்.
Advertisement
“போன வாரம் வேலை விஷயமா சென்னை போனேன் அப்போ பாத்தேன்.” உண்மையை மறைத்து, குரலை தழைத்துப் பேச நம்பவில்லை மாரியம்மாள்.
“அன்னைக்கு ஒருநாள் ராத்திரி வீடு தங்காம கடைலேந்து கிளம்பி போய்ட்டு மறுநாள் வந்தியே அப்போவா?” என்று சரியாய் நினைவு வைத்துக் கேட்க, ஆமாம் என்பதைத் தவிர வேறு பதிலிருக்கவில்லை முகிலனிடம்.
“இப்போவே இப்படின்னா கல்யாணத்துக்கு அப்புறம் உன்னை நாங்க மறந்துட வேண்டியதுதானா முகிலு. உன்னை விட்டா யார் இருக்கா எனக்கு?”
“நான் இல்லையா?” என்று ஆபத்பாந்தவனாக வந்தார் கந்தசாமி. விழிபிதுங்கி நின்றிருந்தவன் நிம்மதியாக உணர்ந்தான்.
“நாந்தான் தெரியாத ஊருல அவங்களை தனியா விடவேண்டாம். நீ போய்ட்டு வான்னு சொன்னேன்.”
“தெரியாத ஊருதான் ஆனா தெரியாத பாஷையில்லையே. எங்க போகணும்னு கேட்டா வழி சொல்ல பத்து பேர் இருப்பாங்க.” என்று விடாது வாதிட்டார் மாரி.
“நம்ம பக்கத்துல இருக்கிறப்போ எதுக்கு அந்த பத்து பேர்கிட்ட மருமக போய் நிக்கணும்? வண்டி எடுத்தா அரைமணி நேரத்துல ஸ்டேஷன் போயிடுவான். எங்க தங்கணும்னு பாத்து பத்திரமா விட்டுட்டு வரப்போறான். வேற வீட்டு ஆளுங்கன்னு நினைச்சா தான் இதெல்லாம் வெட்டி வேலையா தோணும். நம்ம வீட்டு பொண்ணுனு நினைச்சிப் பாரு நீயே அவனை அனுப்பி வைப்ப.”
“நான் என்ன அங்கேயேவா இருக்கப்போறேன். வேலை முடிஞ்சா இங்க வரப்போறேன் நம்ம எல்லாம் சேர்ந்து போலாம்.” என்றான் முகிலனும் தணிவாய்.
மகனை நம்பாது பார்த்தவரை அப்பாவும் மகனும் சேர்ந்து கரைத்து அவரை அமைதிப்படுத்திவிட்டார்கள். வாய்க்கு வாய் என்று பதில் கொடுத்துக்கொண்டிருந்தவரின் பேச்சு குறையவும் கந்தசாமி மகனுக்கு கண் காட்ட, மலர்ந்த முகமாய் சொல்லிக்கொண்டு கிளம்பினான் முகிலன்.
“அவன் முகம் எப்படி மலர்ந்து போய் கிடக்கு பாரு. இதைவிட உன் வீம்பு முக்கியமா?” என்று கந்தசாமி கேட்க, அதானே என்று தோன்றிவிட்டது மாரிக்கு.
தினம் இரவு நேர குளுமை அனுபவித்து வீடு சேருபவன் சொற்ப எண்ணிக்கையில்தான் விடியலின் இதமான சூட்டை உணர்ந்திருக்கிறான். இன்று மனமும் தன் மலரை பார்க்கப் போகும் உற்சாகத்தில் இருக்க பார்வை படுமிடமெல்லாம் செழித்து செங்களிப்பு கொடுத்தது. மீண்டுமொருமுறை கடிகாரத்தை பார்த்துக்கொண்டான். இன்னும் சிறிது நேரத்தில் தன் மண்ணை அடைந்துவிடுவாள் என்ற எண்ணமே தித்தித்தது.
இரயில் வரும் முன்னே அங்கு சென்றுவிட்டவன் வெறிச்சோடியிருந்த தாண்டவாளங்களை வெறித்துக்கொண்டிருந்தான். நொடிப்பொழுதுக்கும் நிலையத்தினுள் இரயில் நுழைகிறதா என்று பார்த்துக்கொண்டான். சென்னையிலிருந்து வரும் இரயில் நிலையத்தின் இடப்பக்கத்திலிருந்து தான் நுழையும் என்றாலும் ஆர்வத்தில் அவன் விழிகள் வலப்புறம் கூட அடிக்கடி பார்த்துக்கொண்டது.
‘அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா…’ என்று உள்ளுக்குள் பாடல் வரிகள் ஒலிக்க திடுக்கிட்டு போனவன் தன் எண்ணப்போக்கை உணர்ந்து சிரித்துக்கொண்டான்.
‘என்னை என்ன பண்ற மலர் நீ? இதுவரைக்கும் இப்படியெல்லாம் இருந்ததே இல்லை நான்.’ என்று செல்லமாய் தன்னவளை கடிந்துகொண்டான். பெரிதான காரணமின்றி உள்ளம் இன்னும் இன்னும் அவள் நினைவுகளில் பூரித்துக் கிடந்தது. அவன் பொறுமையை பெரிதாக சோதிக்காமல் சரியான நேரத்திற்கு இரயில் வந்து சேர, ஆவலுடன் அவள் இருக்கும் பெட்டியை தேடிக்கொண்டு சென்றான்.
ஆத்யாவை கையில் வைத்தபடி குழலி முதலில் இறங்க, பின்னே சந்தியாவும் பிரபாவும் பையுடன் இறங்கினார்கள். தன் பூரிப்பை அடக்க முடியாது வெளிப்பட்ட சிரிப்புடன் அவர்களை வரவேற்றான் முகிலன். அவன் முகத்தில் இருந்த பூரிப்பு பெண்ணவளையும் தொற்றிக்கொள்ள, பயணக்களைப்பில் சோர்ந்திருந்த குழலியின் முகம் நொடியில் மலர்ந்து போனது.
“டிராவல் எல்லாம் ஓகேவா?” என்று பொதுவாக கேட்டவன் குழலியிடம் இருந்த ஆத்யாவை நோக்கி கைநீட்ட, தூக்க கலக்கத்தில் இருந்தவள் முகம் திருப்பினாள்.
“பெரியப்பா குட்டி.” குழலி அவனை நோக்கி அவளை திருப்ப, சிணுங்க ஆரம்பித்துவிட்டாள். முகிலனை காட்டி குழலி அவளை சமாதானம் செய்ய,
“இருக்கட்டும். போர்ஸ் பண்ண வேண்டாம்.” என்று அவர்களை விட்டு பிரபாவிடம் இருந்த பைக்கு கையை நீட்டினான். அவர் சங்கடமாய் மறுக்க,
“டையர்டா இருக்கீங்க. படி ஏறணும் வேற. குடுங்க அத்தை.” உரிமையாக அவரிடமிருந்து அவன் பையை வாங்கிக்கொள்ள, இப்போது குழலிக்கு அவனை நெருங்கி அவன் தோள் சாய்ந்து கட்டிக்கொள்ள வேண்டும் போலிருந்தது.
பையை தன்வசப்படுத்தியவன் அவர்களுக்கு வழி காண்பிக்க, பின்னோடு நடந்த சந்தியாவிடம், “நீங்க இவ்ளோ அமைதியா இல்லை உங்க தங்கச்சி கூட இருந்தா தான் பேச்சு வருமா?”
“அப்படியெல்லாம் இல்லை மாமா. அன்னைக்கு சும்மா போன்ல…” அலைபேசியில் கலாட்டாவாக பேசிய போது தோன்றாத சங்கடம் நேரில் பார்த்ததும் தோன்றிவிட, அமைதியாக வந்தாள் அவள்.
“மச்சினிச்சிங்க ரெண்டு பேர் இருக்கீங்க என்பாடு திண்டாட்டம்னு நினைச்சேன். பரவாயில்லை ஒன்னு சேர்ந்தா தான் டேஞ்சர் போல.” என்று லேசாக சிரித்து அவளை இலகுப்படுத்தியவன் சற்று முன்னோக்கி நடந்து குழலியுடன் சேர்ந்துகொண்டான்.
“நைட் தூங்க முடிஞ்சுதா?” என்று கேள்வியுடன் அவள் தோள் உரச நடக்க, லேசாக அவனை நிமிர்ந்து பார்த்து விழி தாழ்த்தியவள்,
“ம்ம் ஓகே தான். நீங்க ஏன் அலையுறீங்க. நான் இங்க ஆட்டோ புடிச்சிப்பேன்ல?” என்று அவள் கேட்ட தொனியே பெயருக்கு கேட்பதாய். அவன் வரவை ஆர்வமுடன் எதிர்நோக்கியதாய். அதனை தேன் சுவையாய் உள்வாங்கியதாய்.
“இதெல்லாம் ஸ்வீட் மெமரிஸ். மிஸ் பண்ண மாட்டேன்.” அவளுடன் இலகுவாக பேசிக்கொண்டே நடந்தவன் மொத்த கூட்டமும் படியேற வசதியாய் குறுகும் சமயம் இயல்பாய் அவள் தோள் அணைத்து அரணாகி விடுவித்து அவள் இடிபடாத வண்ணம் பார்த்துக்கொண்டான். அவனது இந்த செயல்களை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்தவள் அவனருகில் நெகிழ்ந்து போயிருந்தாள். தன்னாலே அவனை நெருங்கி நடந்தாள். ஒரு சிரிப்புடன் அவனும் பக்கமாய் நடந்தான்.
இரயில் நிலையம் விட்டு வெளியே வந்தவர்களை ஒரு ஆட்டோ பிடித்து ஏற்றினான். குழலி ஏற்கனவே ஒரு தங்கும் விடுதியில் அறை முன்பதிவு செய்திருந்தாள். அதன் விலாசம் சொல்லி பேரம் பேச,
“க்கா நீ வேணுமா மாமா கூட வர்றியா?” சந்தியா அக்காளை சீண்டினாள்.
“ச்சும்மான்னு இருடி.”
“ஏற்கனவே ரூம் புக் பண்ணியாச்சு. இதோ இப்படி டிரெயின் விட்டு வெளில வந்து ஆட்டோ புடிச்சா லாட்ஜ் போகப்போறோம். இதுக்கு எதுக்கு மெனெக்கெட்டு மாமா கிளம்பி வந்தாங்களாம்?”
“அதை நீயே அவர்கிட்ட கேளேன்.”
“ரூமுக்கு போய் பேசுங்க. இப்போ ஏறுங்க.” ஏதோ கிண்டலாக பேசுகிறார்கள் என்று புரிந்தாலும் அவர்களை துரிதப்படுத்தினான் முகிலன்.
கூட்டத்தில் அதற்கு மேல் முடியாது அவர்களும் ஏறிவிட, சற்று நேரத்தில் தங்குமிடம் வந்தார்கள். முகிலன் முன் சென்று விசாரித்து குழலியின் விவரம் கொடுத்து அறை சாவி வாங்கிக்கொடுத்தான்.
“கடைக்கு வர நான் கார் அரேஞ் பண்றேன். நீங்க கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடுங்க.”
“இல்லை நான் பாத்துக்குறேன்.” என்றவளை செல்லமாக முறைத்தவன், “பாப்பாவுக்கு ஏதாவது வேணுமா?”
“இல்லை மாமா இப்போ தூங்கிடுவா. பக்கத்துல தான் ஹோட்டல் இருக்கே பாத்துக்குறோம்.” என்ற சந்தியாவிடம் தலையசைத்தவன் மனமே இன்றி சொல்லிக்கொண்டு கிளம்ப, மற்ற இருவரையும் அனுப்பிவிட்டு வெளியே ஓடிவந்தாள் குழலி.
வண்டி எடுத்துக்கொண்டு வந்தவன் இவளைக் கண்டு வண்டியை நிறுத்த, “எதுவும் வேணுமா மலர்?”
“இதுதான் வரலையேன்னு பாத்தேன்.” என்று அவள் சொல்லவும் இவனுக்கு புரியவில்லை.
“…”
“மலர்னு கூப்பிடவே இல்லை நீங்க.” என்றவளும் செல்லமாய் அவனை முறைத்தாள்.
“மைம்மலர்க்குழலி.” லேசாக அவள் மூக்கை நிமிண்டி விடுவிக்க, மூக்கை தேய்த்துக்கொண்டாள் குழலி.
“எதுவும் வேணும்னா உடனே கூப்பிடு. நான் நேரா கடைக்கு வந்துருவேன். இன்னும் கொஞ்ச நேரத்துல டிரைவர் நம்பர் அனுப்புறேன்.” என்று தகவல் சொல்லிவிட்டு கிளம்பியவன் சொன்னது போல் கார் பிடித்து அவள் தங்கியிருக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்து அவளுக்கும் விவரம் சொன்னான்.
மெதுவாக உறங்கி எழுந்து கிளம்பியவர்கள் நல்ல நேரத்தில் கடைக்குச் சென்றனர். அங்கு ஏற்கனவே முகிலன் குடும்பத்துடன் இருந்தான். உடன் அத்தை என்று வள்ளியின் பெற்றோரும் இருந்தனர்.
“அவங்க எதுக்குப்பா?” பழைய நினைவில் அதிருப்தியுடன் அவர்களை அழைத்த தந்தையிடம் கேட்டான்.
“எனக்கும் வருத்தம் இருக்குதான் முகிலு அதுக்குனு சொந்தத்தை விடமுடியுமா? வீட்ல பொறந்த பொண்ணுங்க நம்ம வீட்டு விசேஷத்துக்கு எப்படி கூப்பிடாம இருக்க முடியும். உன் பெரியத்தையும் கூப்பிட்டிருக்கேன் வந்துடுவா அவளும்.” என்றார்.
திருமணத்திற்கு அழைப்பு உண்டு என்று தெரியும் ஆனால் புடவை எடுப்பதற்கே அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை முகிலன். கந்தசாமி மிகுந்த யோசனைக்கு பின் கடைசி நேரத்தில்தான் அவர்களை அழைத்ததால் இவனிடம் சொல்ல மறந்திருந்தார். முதலில் இவர்கள் மூவரும் கடைக்கு வர, சிறிது நேரத்தில் பின்னோடு வள்ளி குடும்பம் கடைக்கு வரவும்தான் கண்டுகொண்டு கேட்டான். கொஞ்சம் சுணங்கித்தான் போனது மனது. அழையாமல் வள்ளி நினைவும் அதன் தொட்டு நடந்த நிகழ்வுகளும் அணிவகுக்க, முகம் விழுந்துவிட்டது. அதை கவனித்துக்கொண்டே உள் வந்த குழலியும் யோசனையுடன் கந்தசாமியிடம் பேசினாள். பின் மாரியம்மாளிடம் விசாரிக்க, அவர் ஒருபுறம் முகம் விழுந்து கிடந்தார். ஆனாலும் கந்தசாமியின் போதனையில் கையில் இருந்த பூவை கொடுத்தார்.
“நம்ம தோட்டத்தில பூத்தது.” மகிழ்வுடன் வைத்துக்கொண்டாள் குழலி.
பிரபா, சந்தியா இருவரும் வரவேற்பாய் புன்னகைத்து ஓரிரு வார்த்தை பேசினர். நல்ல நேரத்தில் முகூர்த்தப்புடவை எடுத்துவிடலாம் என்று அனைவரும் புடவை தெரிவில் ஈடுபட,
“மார்னிங் கூட நல்லாயிருந்தீங்க. இப்போ டல்லா இருக்கீங்க. என்னாச்சு?” பிறர் அறியாமல் தன்னருகில் நிற்கும் முகிலனிடம் கேட்டாள் குழலி.
அவள் கேள்வியில் தெளிந்தவன் சட்டென புன்னகைத்து, ஒன்றுமில்லை என்று தலையாட்டினான்.
“ஆர் யூ ஸ்யூர்?” சந்தேகம் இருந்தது அவள் குரலில்.
“உனக்கு பிடிச்ச மாதிரி எடுக்கணும்னு சொல்லிட்டு என் முகத்தை ஆராய்ஞ்சிட்டு இருக்க? அங்க பாருங்க மலரம்மா…”
“என் மலருக்கு நான் எடுப்பேன்னு யாரோ சொன்னாங்க?”
“உனக்கு பிடிச்ச மாதிரி பாரு.” என்று அவன் மென்மையாய் சொன்னாலும் அவள் மனது உறுத்தியது. காலையில் இருந்த இலகுத்தன்மை மறைந்திருந்தது.
“எல்லாம் ஓகே தான?”
“நீ ஓகே சொன்னா எல்லாம் ஓகே தான் மலர்.” என்று அவன் சொன்னாலும் அவனிடம் தொனித்த சிறு மாறுதலையும் கண்டுகொண்டாள் குழலி.
ஆனால் அதற்கு மேல் ஒன்றும் கேட்கவில்லை. ஒரு புடவை தேர்வு செய்து அவனைப் பார்க்க, அவன் நன்றாக இருப்பதாய் செய்கை செய்தான். பின் பிரபாவை பார்க்க அவர் மாரியம்மாளை கண்காட்டினார்.
“இது நல்லாயிருக்கா அத்தை?”
“சிவப்பு கலர்ல தான் நாங்க முகூர்த்த பட்டு எடுப்போம்.” என்றார் அவர்.
குழலி தன் கையில் இருந்ததை பார்த்தாள். அடர் ஊதா நிறத்தில் ஆரஞ்சு வர்ண பாடர் வைத்த புடவை அது. அத்தனை பிடித்தது அந்த நிறம். முன்னமே சிவப்பு நிறம் என்று சொல்லியிருந்தால் அதற்கு ஏற்றது போல் பார்த்திருக்கலாமோ என்று அவள் வீட்டினரும் நினைத்தனர்.
“இருக்கிற பழக்கத்தை சொன்னேன். உனக்கு புடிச்சதை எடுத்துக்கோ.” என்ற விதத்திலேயே கையில் இருந்த புடவையை கீழே வைத்தாள் குழலி.
“அதையே எடுத்துக்கோ.” என்று முகிலன் சொல்லியும் கேட்கவில்லை அவள்.
அலசி ஆராய்ந்து சிவப்பு நிறத்தில் வேறு ஒன்றை அவள் எடுக்க, “முதல்ல எடுத்ததை நிச்சயத்துக்கு வச்சிக்கோ இது கல்யாணத்துக்கு.” என்று சட்டென்று தீர்வு சொன்னான் முகிலன். மலர்ந்து போனது அவள் முகம்.
‘நிச்சயத்துக்கு இவ்ளோ விலையில எடுக்கணுமா?’ என்ற மாரியின் முணுமுணுப்பு யார் காதையும் சென்றடையாமல் பார்த்துக்கொண்டார் கந்தசாமி.
புடவை முடிந்ததும் நகை எடுத்து விடலாமென்று அடுத்து அங்கு சென்றனர். மாரியின் பேச்சை மீறி ஐந்து பவுன் தாலிச்சங்கிலி பார்க்க,
“இன்னும் கம்மியா பாக்கலாமே?” விலையை கருத்தில் கொண்டு குழலி சொல்ல,
“எங்க வழக்கம் இதுதான்.” என்று அப்படியே மாற்றிக்கொண்டார் மாரியம்மாள்.
எப்படியோ இரண்டும் எடுத்து வரவேற்புக்கும் அவனுக்கான உடை எடுத்துக்கொண்டு அவர்கள் ஊருக்கு புறப்பட்டு இரண்டு நாள் கழித்து முகிலனுக்கு பெண் வீட்டு சார்பில் செயின் எடுத்துவிட்டதாய் கந்தசாமி மூலம் தகவல் வந்தது.
“ஊருல இல்லாத மருமகனு ஆடுனீங்க. பொண்ணு வந்துதான் புடவை எடுக்கணும், தினம் தாலிச்செயின் போடுக்கப்போறது அவதான். புடிச்ச மாதிரி எடுத்துக்கட்டும்னு சொல்லி அவளை முன்ன நிறுத்தி வாங்குனீங்களே. இப்போ பாருங்க நம்ம புள்ளைக்கு புடிச்ச மாதிரி தோதா அவனை கூட்டிட்டு போய் எடுக்காம அவங்க பழக்கத்துக்கு அங்க வாங்கியிருக்காங்க.” என்று மல்லுக்கு நின்றார்.
“ஆம்பளைங்களுக்கு என்னத்தை பெருசா இருக்கப்போவுது? அதுவுமில்லாம கல்யாணத்துக்கு நாள் குறைவா இருக்கு. அவங்க கூப்பிட்டாலும் இந்த ஒத்த செயின் வாங்க இங்கிருந்து நாம அவ்ளோ தூரம் போக முடியுமா?”
“நம்ம ஏன் போகணும்? ரெண்டு நாள் முன்னாடி இங்க வந்தாங்கல்ல, எல்லாரும் தான இருந்தோம், மனசு இருந்தா அப்போவே ஒண்ணா வாங்கி இருக்கலாம்.”
“எவடி இவ… அவ்ளோ தூரத்துலேந்து காசு எடுத்துட்டு வந்து இங்க வாங்கிட்டு போவாங்களா? பாதுகாப்பா இருக்குமா?” என்ற கந்தசாமியின் அதன்பின்னான பொழுதுகள் புதுப்புது சச்சரவுகளுடன் துவங்கியது. இடையில் முகிலனும் மாட்டிக்கொண்டு முழிக்க, ஆர்ப்பாட்டமும் ஆர்வமுமாய் நடந்தது அவர்களின் திருமணம்.
error: Content is protected !!