Skip to content
Post Views: 2,339

உனதன்பில் சரணாகிறேன் 12
ம்ருதவ் கதவில் கை வைப்பதற்கும், அழைப்பு மணி ஒலித்து அடங்கவும் சரியாக இருந்தது.
Advertisement
கதவை திறந்திட கண்களில் காதலை தேக்கி, அவனது முகம் காணும் பேராவலின் உச்சத்தில் அவனவள்.
“ம்ருது…”
மூன்று நாள் பிரிவையும் தாங்காது தன்னவளின் முகம் கண்டுவிட ஏங்கியிருந்தவனின் விழிகளுக்குள் மித்யுகா சரண்புகுந்திட, பனியாய் உருகி நின்ற ம்ருதவ் அவளின் அழைப்பில் நிலைப்பெற்றிருந்தான்.
Advertisement
“யுகா” என்றவன் கீழ் இமை நுனியில் ஒற்றைத் துளி நீர் மின்னல் துகளாய் மின்னியது.
Advertisement
வார்த்தைகளற்ற மௌனம் பிரிவின் இடைவெளியை, ஏக்கத்தை, இதயம் உள்வாங்கிட ஈடுசெய்தது.
முதல் முறையாக அவனது வீடு வந்திருக்கிறாள். விடுமுறை தினங்களிலும் அவன்தான் அவளை காண கல்லூரி செல்வான்.
ம்ருதவ் காதலை ஒப்புக்கொண்ட தினம் இருவரும் மலைக்கோட்டை வரை ஒன்றாக வெளியில் சென்றது. அவ்வளவே! அதன் பின்னர் அவனிடத்தில் வெளியில் மற்ற காதலர்கள் போன்று வகுப்புகளை விடுத்து ஊர் சுற்றுவதற்கு தடைதான்.
Advertisement
அத்தோடு வெளியில் மற்றவர்களின் பார்வைக்கு காட்சியாதலை ம்ருதவ் விரும்பவில்லை. காதல் பெரும் குற்றம் ஒன்றுமில்லை. ஆனால் இந்த வயதில் ஆண், பெண் ஒன்றாக இருந்தாலே, வெளியாட்களின் எண்ணமும் கண்ணோட்டமும் வேறல்லவா! யாரோ ஒரு மூன்றாம் மனிதர்களிடம் கூட தங்களின் காதல் சித்தரிக்கப்படுவதில் ம்ருதவ்வுக்கு உடன்பாடில்லை.
“நம்ம காதலுக்கு நாம எவ்வளவு மரியாதை கொடுக்கிறோம் என்பதில் தான் உன்மேல எனக்கும், என்மேல உனக்கும் உள்ள காதலுக்கான மதிப்பிருக்கு” என்று சொல்பவனிடத்தில், இருவருக்குமான காதல் மீது அத்தனை உயர்வு இருந்தது.
நம்ம காதல் இதுதான். நாம காதலில் இப்படித்தான் இருக்க வேண்டுமென, ஒவ்வொரு நொடியும் அவர்களின் காதலை காதல்கொள்ளச் செய்தான் ம்ருதவ்.
ம்ருதவ்வின் முகம் காட்டிய பிரதிபலிப்பிலே, தனக்காக இந்த சிறு பிரிவிலும் எத்தனை பெரும் துயர் கொண்டுள்ளான் என்பதை உணர்ந்த மித்யுகாவின் தவிப்பை தன்னகம் நிரப்பியிருந்தான் ம்ருதவ்.
இருவருக்குமே கைகள் கோர்த்து ஏக்கங்களை உள்வாங்கிட இதயம் தவித்தது,
ம்ருதவ்வுக்கு அதீத நெருக்கமெல்லாம் பிடிக்காதென அவளும், எப்படி அவளது விரல்களுடன் தன்னுடைய விரல்களை கோர்ப்பதென அவனும் தயக்கம் கொண்டு, பிரிவின் துயர் விலக்காது விலகியே நின்றனர்.
மனங்கள் இரண்டும் உணர்வுகளால் இணை கொண்டிருக்க, விழிகளால் ஸ்பரிசித்து காதலாய் உயிர் தீண்டியிருந்தனர்.
“உன்னைப் பார்க்கத்தான் கிளம்பினேன்” என்ற ம்ருதவ், “உள்ள வா யுகா!” என அழைத்தான்.
“ம்ம்…” என்றவள் ஒற்றை பாதம் உயர்த்தி நிலைப்படித் தாண்டி உள் வைக்க முயன்றிட…
“யுகா வெயிட்” என்றிருந்தான் ம்ருதவ்.
ஏனென்று புரியாது பாதம் உயர்ந்த நிலையில் நிலைகொள்ள முடியாது மித்யுகா தடுமாற…
“ஹேய்… பார்த்து” என்ற ம்ருதவ், சடுதியில் அவளின் முதுகில் கையிட்டு அவளை நிற்க வைத்தவனாக, அவளுக்கு இணையாக தானும் வெளியில் வந்து நின்றிருந்தான்.
“சாரி” என அவளின் முதுகில் பதித்த கரத்தை விலக்கிய ம்ருதவ், “இஃப்
யூ டோண்ட் மைண்ட்” என அவளின் இடது கரத்தின் உள்ளங்கையில் தனது வலது கரத்தின் உள்ளங்கையை அழுந்தப் பதித்து அவளது விரல்களுக்கிடையே தன்னுடைய விரல்களை அத்தனை மென்மையாய் நுழைத்து இறுக்கிக் கோர்த்திருந்தான்.
இருவரின் பார்வையும் பிணைந்திருந்த தங்களின் கைகள் மீதே!
காதலிக்கத் துவங்கிய நாள் முதல், தனக்குத் தோன்றினால் கைகள் கோர்ப்பது, தோள் சாய்வது எல்லாம் மித்யுகாவின் செயலாக மட்டுமே இருக்கும். அதிலும் சில நேரங்களில், ரதி, கிஷோர் உடனிருந்தால் கூட மித்யுகாவின் மனம் நோகாது தானாக விலகிக்கொள்வான்.
எந்தளவிற்கு அவள் மீது காதலின் உச்சம் தொட்டிருந்தானோ, அதேயளவிற்கு அவள் தன்மீது வைத்துள்ள காதலுக்கான மரியாதைக்கான பொறுப்பு தன்னுடைய செயல்கள் தானென்று இருந்தான்.
இருவருக்குமான அதிகபட்ச நெருக்கமே, மித்யுகா அவன் தோள் சாய்வது தான். அப்போதும் அவளது நெற்றி முனை மட்டுமே அவனின் தோள் பதிந்திருக்கும். இருவருக்குமான இடைவெளி இடம் விட்டிருக்கும்.
அப்படிப்பட்டவன் தானாக கரம் கோர்த்து தோள்கள் உரச இணைந்து நிற்பதில் ஆச்சரியம் கொண்டவள்,
“நம்ப முடியல ம்ருது” என்றாள்.
“ஏனாம்!” என்று அவளின் நெற்றி முட்டியவன், “நம்ம வீடு. பர்ஸ்ட் டைம் வர… ரெண்டு பேரும் சேர்ந்து உள்ளப்போவோம். அதோட இது காலேஜ் இல்லை. நம்ம வாழப்போகும் வீடு யுகா… இங்க நீ, நான்… நமக்கான வாழ்க்கை. நம்ம உலகம் இது” என்றதோடு, “போலாமா?” என்றான். அவளின் விழிகள் கலந்து.
காற்றுக்கும் நோகும் விதமாய் தலையசைத்தாள்.
அவனது காதலும், காதலாய் வெளிப்படுத்தும் வார்த்தைகளும் அவளுள் பிரம்மிப்பாய்.
“லவ் யூ ம்ருது.”
“ஹெவன்லி ஹேட் யூ யுகா” என்றவன் அவளுடன் இணைந்து, அவளின் பாதம் பார்த்து வீட்டிற்குள் அடி வைத்தான்… வைத்திருந்தனர்.
அவளின் கண் சிந்திய நீர்ப்பனி தரை விழுந்தது.
“இதுதான் நமக்கான குட்டி வேர்ல்ட் யுகா… பிடிச்சிருக்கா?” ம்ருதவ் கேட்டிட,
“ஒரு ஹக் கிடைக்குமா?” எனக் கேட்டிருந்தாள் மித்யுகா. வெண்படலம் உருளும் கருவிழிகள் பந்தாட.
“யுகா!”
“ப்ளீஸ் ம்ருது” என்று கண்கள் சுருக்கியவள், அவனின் மௌனமே சம்மதமாக…
அவனது கைகள் இடைவெளியில் தன்னுடைய கரங்கள் நுழைத்து, தன்னுடைய பாத விரல்கள் அவனது பாத விரல்கள் நுனி தீண்ட நெருங்கி அணைத்தவளின் கன்னம், சட்டையின் முதல் பொத்தான் திறந்திருக்க, அவனது வெற்று மார்பில் அழுந்த பதிந்தது.
அவளின் கன்னத்தின் குளுமை, நெருக்க நிலை சில்லிப்பாய் தேகம் பரவ தானாக கண்கள் மூடியவன் கால் விரல்கள் நிலம் தாழ்ந்து புதைந்தன.
“ரொம்ப ஹெவியா இருக்கு ம்ருது உங்க காதல். உங்ககிட்ட தான் இறக்கி வைக்கணும்” என்றவள், “லவ் பண்ண வச்சே மூச்சு முட்ட வைக்கிறீங்க” என்றாள்.
ம்ருதவ்விடமிருந்து பதிலின்றிப்போக, விழிகள் உயர்த்தி அவன் முகம் பார்த்தாள்.
கண்கள் மூடி அவனிருந்த தோற்றம்…
“கிஸ் பண்ணிக்கவா ம்ருது” என்று கேட்டிருந்தாள்.
அவளின் கேள்வியில் பட்டென்று கண்கள் திறந்த ம்ருதவ், தன்னிரு கன்னங்களிலும் தப்பு போட்டவன்,
“இப்போ இல்லை” எனும் விதமாக தலையை அசைத்தவாறு அவளிலிருந்து பிரிந்து பின் நகர்ந்திருந்தான்.
“போடா… ரொம்பத்தான்” என்றவள், “த்ரீ டேஸ் கேப் உங்களையும் கொஞ்சம் மாத்தியிருக்கு ம்ருதவ்” என்றாள்.
“அப்படியா?” என்றவன், “அதான் இப்போ என் கண் பார்க்க முன்னாடி இருக்கியே! இனி நார்மலாகிடலாம்” என்றான்.
“வேணாம்… வேணாம்…” என்ற மித்யுகா, “இந்த ம்ருதவ் ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள்.
“ஆஹான்” என்றவன், “நீ உட்கார். இதோ வர்றேன்” என தள்ளிச்சென்று ரதிக்கு அழைத்தான்.
அவளோ உறங்கிக்கொண்டிருந்தவள், அழைப்பு முடியும் தருவாயில் ஏற்றிருந்தாள்.
“என்னடா உன் ஆளை பார்க்கப்போகலையா? எனக்கு கால் பண்ணியிருக்க?” என்றாள்.
“நான் போகலான்னுதான் கிளம்பினேன் ரதி. யுகா வீட்டுக்கு வந்திருக்காள்” என்ற ம்ருதவ், “நீ வா இங்க” என்றான்.
“நான் எதுக்குடா உங்களுக்குள்ள நந்தி மாதிரி…”
“ஹேய்.. ப்ளிஸ் வா! யுகா பக்கத்தில் கண்ட்ரோல் மிஸ் ஆகுது ரதி” என்ற ம்ருதவ்வின் குரலில் தளர்ந்திருந்தது.
“ரொம்ப நல்லவன் தான் போ” என்ற ரதி, “அரைமணி நேரத்தில் வர்றேன்” என வைத்தாள்.
ம்ருதவ் மித்யுகாவின் அருகில் வர, அவள் வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ரதி அக்காவை வர சொன்னீங்களா?” அவனை அறிந்தவளாக மித்யுகா கேட்டிட, ஆமென்று சிரித்திருந்தான்.
“ரொம்ப அட்வான்டேஜ் எடுத்து ஸ்பீடா போறனோ?” உதடுகள் குவித்து இறுதி வார்த்தையை அவள் இழுத்திட…
“உனக்கு நான் நேர்மையா இருக்கணும் யுகா. நீ இங்க தனியா வந்தது என் மேலிருக்க நம்பிக்கையால் தான. அதை நான் கடைசிவரை காப்பாத்தனும்ல” என்றான்.
“காப்பாத்துங்க… காப்பாத்துங்க…” என்றவள், “யூ ஆர் இன்க்ரிடிபிள் இன் லவ் ம்ருது” என்றாள்.
“லவ் பண்ண கத்துக்கொடுக்கிறதே நீதான” என்றான் கண்கள் சிமிட்டி. அவனின் அந்த பாவனையில் தொலைந்தவள், அவனது செருமலில் நிகழ் மீண்டாள்.
“வீடு ரொம்ப அழகா இருக்கு ம்ருது” என்றவள், “இங்க தோட்டத்தில் மரமெல்லாம் இருக்குல… சாப்பாடு வைக்க ஆரம்பிச்சா பேர்ட்ஸ் நிறைய வரும். எப்பவும் அதுங்களோட சத்தம் ஒருமாதிரி கூட யாரோ இருக்க ஃபீல் கொடுக்கும். எனக்கு பேர்ட்ஸ் ரொம்ப பிடிக்கும்” என்றாள், சன்னல் வழி தோட்டத்தைப் பார்த்து.
“ஹ்ம்ம் இனி வைக்கலாம்” என்ற ம்ருதவ், “வா உனக்கு சித்தப்பாவை இன்ட்ரோ கொடுக்கிறேன்” என பூஜையறை அழைத்துச் சென்றான்.
அத்தனை பெரிதான புகைப்படம். கண்களில் கனிவும் முகத்தில் சாந்தமும் தழுவ அவர்களைப் பார்த்தார்.
“சித்தப்பா உங்க மருமகள்” என்று அவளை படத்தின் முன் நிறுத்தினான். அவரின் படத்தில் வைக்கப்பட்டிருந்த சாமந்தி கீழ் விழ…
“சித்தப்பா உன்னை வெல்கம் பண்றார் யுகா” என்றான்.
“உங்க பையன் நீங்கயில்லாம எப்படி இருப்பாங்கன்னு ஃபீல் பண்ணாதீங்க. நான் பார்த்துக்கிறேன். உங்களவுக்கு இல்லைன்னாலும், ஓரளவுக்கு” என்றவள், அவரின் படத்தை தொட்டு வணங்கினாள்.
“சித்தப்பாகிட்ட சொன்னங்கிறதுக்காக நான்தான் உங்களை பார்த்துக்கணும் அப்படின்னுலாம் ரூல் இல்லை. நீங்களும் என்னை பார்த்துக்கலாம்.”
“பார்த்துக்கலாமே” என்றவன், தான் வாங்கி வந்த ஜிமிக்கியை அவளிடம் கொடுத்தான்.
“என்னடா இன்னும் இல்லையே நினைச்சேன்” என்று வாங்கி அணிந்தவள், “வரவர என்னைவிட ஜிமிக்கியைத்தான் ரொம்ப பிடிக்குது போல” என்றாள்.
“ஆமா, நான் வாங்கிக்கொடுத்து நீ போட்டுக்கிறதலா இருக்கும்” என்றான்.
“என்ன சொன்னாலும் ஃப்ரீஸ் பண்ணிடுங்க” என்றவள், “இப்படியே உங்க லவ் ஓவர் லோட் ஆச்சுன்னா, நான் தாங்கமாட்டேன்” என்றாள்.
“பரவாயில்லை… உனக்கும் சேர்த்து நான் தாங்கிக்கிறேன்” என்றவன், அவளின் காதில் தொங்கிய ஜிமிக்கியை, சுட்டுவிரல் மற்றும் பெருவிரல் இணைத்து சுண்டி, அவளின் கன்னம் தொட்டு அசைந்தாடுவதை ரசித்துப் பார்த்தான்.
சில நிமிடங்களில் ரதியும் வந்து சேர்ந்தாள். உடன் கமலேஷ்.
“என்னம்மா என் ஃப்ரெண்ட்டை காக்கா தூக்கிட்டுப் போயிடும்னு பாதுகாக்க வீடுவரைக்கும் வந்துட்ட” என்று கமலேஷ் கேட்க,
“உங்களை தூக்கிட்டுப்போகாம இருக்க ரதி அக்கா கூடவே சுத்திட்டு இருக்கீங்களே அந்த மாதிரிதான்” என்று பதில் கொடுத்தாள் மித்யுகா.
கமலேஷின் முகம் போனப்போக்கில் ரதி மற்றும் ம்ருதவ்விடம் அப்படியொரு சிரிப்பு.
“என்னை கலாய்ச்சிட்டா போதுமே… உடனே எங்கிருந்துதான் இவ்ளோ சிரிப்பு வருமோ” என்ற கமலேஷ், “ரதி போன் பண்ணதும் அப்படியே வந்துட்டேன் டா. புட் ஆர்டர் போடுவோம். பசிக்குது” என்றான்.
“ஆர்டர் போட வேணாம். நான் குக் பண்றேன்” என்று மித்யுகா சொல்ல,
“நீயா? உனக்கு குக் பண்ணத் தெரியுமா?” என்றான் கமலேஷ்.
“இப்போ ரீசன்டா வீட்டுக்குப் போகும் போதெல்லாம் அம்மாகிட்ட குட்டி குட்டி சமையல் கத்துக்கிட்டேன்” என்றாள் மித்யுகா.
“எதுக்காக இந்த விபரீத கற்றல்?” கமலேஷ் கேட்க, இடுப்பில் கை வைத்து அவனை முறைத்த மித்யுகா,
“அப்பா மேல அம்மா லவ் காட்டுற ஒரே விஷயம் சமையல் தான். அப்பா கோவமா இருந்தாலும், சந்தோஷமா இருந்தாலும் அம்மா அவங்களுக்காக பார்த்து பார்த்து சமைப்பாங்க. அவர் உன்மேல கோவமா இருக்காரும்மா, நீயேன் அவருக்கு பிடிச்சதை செய்துக்கொடுக்கிற கேட்டதுக்கு, நமக்கு பிடிச்சவங்களுக்கு நம்ம கையால சமைச்சு கொடுக்கிறதே வேற விதமான அன்பு மித்யு. அந்த நிறைவு பொண்ணுங்களுக்கு எதிலும் கிடைக்காதுன்னு சொல்லுவாங்க. நானும் அதை ஃபீல் பண்ணனுமே! அதான் ம்ருதவ்க்கு நான் குக் பண்ணிக்கொடுக்கணும்னு சமையல் கத்துக்கிட்டேன்” என்றாள்.
ம்ருதவ் காதல் கரையுடைக்க, இதழ் உடைந்த சிரிப்போடு தன்னவளை பார்த்தான்.
“எப்பா சாமி… என்னால முடியலடா! அவனுக்காக நீயும், உனக்காக அவனும்… ஒவ்வொண்ணும் பார்த்து பார்த்து செய்யுறது” என்ற கமலேஷ், “நல்லாயிருந்தா சரி” என்றதோடு, “லைட்டா பொறாமையாவுது” என்றான்.
மித்யுகா புன்னகைக்க,
“அப்போ உன்னோட பிராக்டிகல் எக்ஸ்பரிமெண்ட்க்கு நாங்கதான் ரிசர்ச் ரேட்டா?” என்று ரதி கேட்டாள்.
“அப்போ நீங்க குக் பண்ணுங்க” என்றாள் மித்யுகா.
“எனக்கு ஸ்டவ் ஆன் பண்ணவே தெரியாது” என்ற ரதி, “உனக்கு தெரிஞ்சதை செய். எனக்கு தூக்கமா வருது” என்று அங்கிருந்த அறை ஒன்றில் சென்று மறைந்தாள்.
“நானும் நைட்டெல்லாம் தூங்காம செம டயர்ட்” என்று கமலேஷ் ம்ருதவ்வின் அறைக்குள் சென்றிட,
“நீங்களும் ரெஸ்ட் எடுங்க ம்ருது… நான் முடிச்சிட்டு வந்து கூப்பிடுறேன்” என சமையலறைக்குள் நுழைந்தாள்.
குளிர்சாதனப் பெட்டியை திறந்து,
“என்னென்ன இருக்கு” என்றவாறு பார்வையிட்டாள்.
அவளின் பின்னே வந்து நின்ற ம்ருதவ்,
“நான் ஹெல்ப் பண்றேன்” என்றான்.
“தூங்கலையா?”
“ம்ப்ச்.” தோள்களை உயர்த்தி இறக்கினான்.
“நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம். இப்படி உட்காருங்க. நான் செய்றேன்” என்றவள், “சாம்பாருக்கு என்ன பருப்பு போடுவோம்” என்று நெற்றியைத் தட்டி அவள் யோசித்த விதத்தில் பொங்கி வந்த சிரிப்பை வெளியே சிதறவிட்டு அவளின் முறைப்பிற்கு ஆளாகினான்.
“ஓகே ஓகே… சிரிக்கல. ஜிப்” என்றவன், “துவரம் பருப்பு” என்றான்.
“கரெக்ட்” என்றவள், “இந்த பருப்பு தான் கொஞ்சம் கன்ஃபியூஸ் பண்ணும். மத்தபடி நல்லாவே குக் பண்ணுவேன்” என்றாள்.
“ம்ம்… ம்ம்…” குவிந்த உதட்டில் சிரிப்பினை மறைத்து தலையசைத்திருந்தான்.
“நிஜமா ம்ருது. நம்புங்க!”
“நீ எப்படி சமைச்சாலும் நான் சாப்பிடுவேன். அம்மா கையால் சாப்பிட்டதே இல்லை” என்றான். அவன் சொல்லாதுவிட்ட பொருளை விளங்கிக்கொண்டவளுக்கு, இதயத்தில் கேவல். கண்கள் காட்டியது.
மித்யுகா வலியோடு அவனை பார்த்திருக்க, அவளின் தோள் இரண்டிலும் கைகள் பதித்து நெற்றி முட்டியவன்,
“குக் பண்ணுடி… பசிக்குது” என்றான்.
“ஹான்… இதோ பண்ணிடுறேன் ம்ருது” என்றவள், காய்களை கையிலெடுக்க…
“நான் கட் பண்றேன்” என வாங்கிக்கொண்டான்.
ஒரு மணி நேரமாக அவளின் வேகமும் ஓட்டமாய், அவனிடம் பேசி சிரித்தபடி சமையலறையை ஒரு வழி செய்து சமையலை முடித்திருந்தாள்.
“சமையல் ரெடி” என்றவள் சமையலறையை சுற்றிப்பார்க்க… அவ்வளவு அலங்கோலமாகக் காட்சியளித்தது.
“என்ன இப்படியிருக்கு?” என்றவள், “இதை சுத்தம் பண்றது பெரிய வேலையா இருக்கும் போலவே. நான் கமல் அண்ணாவை எழுப்பிக் கூட்டிட்டுவர்றேன். அவரை வேலை வாங்குவோம்” என்று நகர, அவளின் பின்னலை பிடித்திழுத்து நிறுத்தினான் ம்ருதவ்.
“நீ சாப்பாட்டை எடுத்துட்டுப்போய் டேபிள்ல வை” என்று சொல்லியவன், அவ்விடமிருக்கும் நிலையை சிறு புன்னகையோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு, சுத்தம் செய்யத் துவங்கினான்.
ம்ருதவ்… தரை மற்றும் அடுப்பு மேடையை சுத்தம் செய்ய, உணவினை எடுத்து வைத்துவிட்டு வந்த மித்யுகா,
“உங்களுக்குத்தான் அதிக வேலை வச்சுட்டேன்” என்றவளாக சமையல் செய்த பாத்திரங்களை கழுவி வைத்தாள்.
“இதுக்கெல்லாம் பழகணும் தான யுகா!” என்ற ம்ருதவ், “இந்த மொமெண்ட் ஒரு மாதிரி சில்லுன்னு இருக்கு. இன் பியூச்சர், இது தினமும் நடக்குமில்ல” என்றான்.
“ம்ருது…” கண்கள் கலங்க அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
“உன்னை லவ் பண்ண ஆரம்பச்சதிலிருந்து… உன்னோட நான் வாழ ஆசைப்படும் விஷயங்களில் இதுவும் ஒண்ணு யுகா. உன்னால தான் எனக்குள்ள உயிர் அடங்கியிருக்கு” என்றவன், “இங்க சின்ன சின்ன விஷயமும் உன்னோட சேர்த்துதான்” என்றான்.
“ம்ருது” என்று அவன் உணர்த்தும் காதலில் முற்றாக உடைந்தவள், அவனை இறுக அணைத்திருந்தாள். வந்தபோது அவள் கொடுத்த அணைப்பில் கட்டுண்டு நின்றவனாக தற்போது இல்லாமல், இக்கணம் தானும் அவளை அணைத்திருந்தான்.
உறக்கம் கலைந்து வந்து, சமையலறை வாயிலில் நின்று ம்ருதவ்வின் பேச்சினைக் கேட்டிருந்த ரதி மற்றும் கமலேஷுக்கும் கண்கள் கலங்கியது.
“குடும்ப சூழலுக்கு ரொம்பவே ஏங்கியிருக்கான்” என்ற ரதி கூடத்திற்கு வர, அவளுடன் கமலேஷ்.
“யாருமே இல்லங்கிறது எவ்வளவு பெரிய வலின்னு புரியுது. அப்பவும், இப்பவும்” என்றான் கமலேஷ்.
“அப்போ அவனோட வலியால் காட்டுன ஏக்கத்தை, இப்போ சிரிப்பால் காட்டுறான். ரெண்டுக்குமே அவள் தான் காரணம்” என்ற ரதி, “எதுக்கு கால் பண்றாள்?” என்றாள்.
“தெரியல… நைட்டும் பண்ணா! ராங் நெம்பர் சொல்லி கட் பண்ணிட்டாள்” என்ற கமலேஷ், “அவளுக்கு கல்யாணம் அப்படின்னதும் சிவா நினைவு வந்திருக்குமோ?” என்றான்.
“இப்போதான் அவளுக்கு சிவா ஞாபகம் வரணுமில்ல… ஒருத்தர் நினைவு ஒருத்தருக்கு வர இவங்களுக்குள்ள காரணமே தேவையில்லை” என்ற ரதி, “நீயா கால் பண்ணாத… அதான் நேர்ல போறோமே. பேசிப்போம். இப்போ பேசி எதையும் உளறிடாத” என்றாள்.
“உனக்கு இன்னும் கோபமிருக்கா?”
“இல்லாம எப்படி?” என்ற ரதி, “சிவா அன்னைக்கு அழுத அழுகை இன்னும் எனக்கு கேட்குது. எப்படியெல்லாமோ இருந்திருக்க வேண்டிய காதல். பாவி, மொத்தமா உருக்குலைய வச்சிட்டாள். என்ன காரணம் சொல்லியிருந்தா, அவளுக்காக என்னவும் செய்திருப்பான். முட்டாள் அவள்” என்று அன்றைய மித்யுகாவின் மீதான கோபம் இன்றும் குறையாது அவளைத் திட்டினாள் ரதி.
“அவனுக்கு கேட்கப்போகுது” என்று கமலேஷ் சொல்ல…
“கேட்கட்டுமே… ஒண்ணு சொல்லிடக்கூடாது! இன்னும் அவள் மேல அப்படியென்ன காதலோ!” என்றாள்.
“காதல் தான் ரதி” என்று அறைக்குள்ளிருந்து வந்திருந்த ம்ருதவ், “காதல் மொத்தமும் அவள் தான்” என்றிருந்தான்.
‘அணைக்காத தூரத்திலும்,
உயிர் சுற்றும் நெருக்கம் நீ!
ஆத்மம் நிறையும் ஜீவன் நீ!’
error: Content is protected !!