கானலானாயோ காதலே-34
நிலா எலும்பும் தோலுமாய் நலுங்கிய தோற்றத்துடன் அமர்ந்திருந்தாள். வளர்மதி வழக்கம் போல அழுது ஊரைக் கூட்டிக் கொண்டிருக்க அமுதனும் தீபனும் கடுங்கோபத்தில் நின்றிருந்தனர்.
ஆழியன் வந்து நிற்கவுமே மீண்டும் அழத் துவங்கி விட்டார் வளர்மதி.
“மூணு அண்ணனுக இருந்து என்ன பிரயோஜனம்…எம்மகளுக்கு ஆதரவுக்கு யாரும் இல்லையே… இப்படி வந்து அநாதையா நிக்குறாளே”என்று ஒப்பாரி வைக்க
“என்ன பிரச்சினை என்னாச்சு நிலா”என்றான் அமுதன். இம்முறையும் ஆழியன் எதையும் வாய் திறந்து கேட்கவில்லை. அவன் கேட்பானா என்று தான் வளர்மதி பார்த்தார்.
Advertisement
நிலா அழுதுகொண்டே “நான் அவங்க அக்கா மகளை சேர்த்து வச்சு பேசினேன் னு தானே வீட்டை விட்டு துரத்தினாங்க. இப்போ அவங்களே அவருக்கு அவளை கட்டி வைக்க ஏற்பாடு பண்றாங்க. இத்தனை நாளும் அவங்க பேச்சை கேட்டு அமைதியா இருந்தா இப்போ இந்த முடிவை எடுத்து இருக்காங்க. இதை நான் அவர் கிட்ட பேசினா நீ இன்னும் திருந்தலையா…இது சரியா வராது டிவோர்ஸ் பண்ணிக்கலாம் னு சொல்லி என் கிட்ட பேசறதை நிறுத்திட்டாரு”என்று அழுதவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. ஆனால் இதில் உண்மைத்தன்மை இருக்கிறதா இல்லையா என்றும் குழம்பினர் வீட்டினர்.
“நான் சொல்றதை நம்பலைன்னா நீங்களே அவருக்கு ஃபோன் பண்ணி பேசுங்க”என்று விசும்ப
“ப்ப்ச் அப்படி எல்லாம் விட்டுடுவோமா நீ அழாதம்மா நான் பேசிக்கிறேன்”என்று தேசிகன் தைரியம் சொன்னவர் மகன்களை திரும்பி பார்த்தார்.
Advertisement
“விசாரிச்சுட்டு அடுத்து பேசுவோம்ப்பா”என்ற அமுதன் “நீ மறுபடியும் எதுவும் அந்த பொண்ணைப் பத்தி பேசினியா”என்று கேட்டான் நிலாவிடம்.
Advertisement
“நான் பேசினாலும் அங்கே கேட்க யார் இருக்கா ண்ணா அத்தை என் கிட்ட பேசறது கிடையாது. நான் அக்கம் பக்கம் போறதும் கிடையாது. யார் கிட்டயும் பேச்சு வச்சுக்க கூடாதுனு என் கிட்ட பேசின எல்லாரையும் கண்டிச்சு சத்தம் போட்டதில் யாரும் என் கூட பேசறதில்லை”என்றாள் விளக்கமாக.
“ப்ப்ச் நிலா உனக்கு புரியுதா இல்லையா.. சும்மா நீயா எதுவும் அந்த பொண்ணு கூட சேர்த்து வச்சு மாமாவை பேசி புலம்பலையே… அப்படி கேட்கிறாங்க அண்ணா”என்று தீபன் கேட்க
“இல்லை தீபு. சத்தியமா நான் எதுவுமே பேசலை. அவரோட அக்கா இவர் வெளிநாடு போனதில் இருந்து இங்க தான் தங்கி இருக்காங்க. மொத்த வேலையும் என் தலையில் தான். அப்போ கூட நான் எதுவும் சொல்லாம தான் எல்லா வேலையும் செய்தேன். ஆனா இப்போ கூடி கூடி பேசி கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்துட்டாங்க”என்றாள் அழுகையுடன்.
Advertisement
“எல்லா வேலையும் நீயே செஞ்சியா இதை ஏன் டி என் கிட்ட நீ சொல்லலை அந்த பொம்பளையை நாலு சவட்டுனா தான் என் ஆத்திரம் அடங்கும். ஆப்ரேஷன் பண்ணி பிள்ளை பெத்தவளை இப்படி வேலை வாங்கி இருக்காளே அதான் எலும்பும் தோலுமா இருக்கியா நீ…சோறாவது திங்க விட்டாளா அவ”என்று வளர்மதி பொங்கி எழ நீரதி ஆழியனை நக்கலாகப் பார்த்தாள்.
‘அச்சோ இவ வேற பாக்கிறாளே’என்று எண்ணிக் கொண்டவன் பார்வையால் கெஞ்சினான்.
தன் உணர்வுகளை காட்டாது நின்றவளின் எண்ணங்கள் புரிய செய்தாலும் அதை பேசும் சூழல் இதுவல்லவே…
“போய் சாப்பாடு குடுங்க நாங்க போய் என்னன்னு பேசறோம்”என்ற ஆழியன் தங்கையிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.
“என்னத்த பேசறது. நான் போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுக்க போறேன் என்னங்க கிளம்புங்க அவங்களை சும்மா விட மாட்டேன்”என்று வளர்மதி கொந்தளிக்க
“அப்போ உங்க இஷ்டம் என்னை இதுல தலையிட சொல்லாதீங்க”என்று ஆழியன் தன் இடம் நோக்கி நகர
“இப்படி சொன்னா எப்படி டா நீயெல்லாம் கூடப் பிறந்தவனா… எப்போ இருந்து இப்படி பொண்டாட்டி தாசனா ஆன நீ… ஏற்கனவே”என்று வளர்மதி பேச சீற்றமாய் பொங்கி விட்டான் ஆழியன்.
“மிஞ்சி மிஞ்சிப் போனா என்ன சொல்வீங்க…அவ என்னை மயக்கிட்டான்னு சொல்வீங்க ஏற்கனவே பேசினவங்க தானே நீங்க. இல்லை தெரியாம தான் கேட்கிறேன் அவ இதுல எங்க வந்தா… ஹான் எதுக்கு எடுத்தாலும் அவளை அவளை நொட்ட சொல்ல வேண்டியது. உங்க வழிக்கே வராதவளை எத்தனை நாளைக்கு பேசுவீங்க… ஏற்கனவே பேசித்தானே இதோ உங்க மக உறவை கெடுத்துக்கிட்டா… இப்பவும் அதையே பேசறீங்க… இல்லை உங்களுக்கு என்ன தான் பிரச்சினை. அவ்வளவு பேசியும் நான் வந்து கேட்கிறேன் தானே… இதுக்கு மேல ஒருத்தன் இறங்கி வருவானா உங்களுக்கு. நியாயமா பார்த்தா உங்க மக நெலைமைக்கு நானெல்லாம் சந்தோஷப்படணும். என் பொண்டாட்டி பிள்ளையை பேசினதுக்கு அனுபவினு விட்டு போகணும். ஆனா மனசு கேட்காம தானே போறேன் னு சொல்றேன் அப்படி இருந்தும் எதுவும் பேசாத என் பொண்டாட்டி தான் உங்களுக்கு பிரச்சினையா தெரிவாளா”என்று நாகமாய் சீறி கொத்தி எறிந்து விட்டான் ஆழியன்.
“செல்வம் என்னப்பா இது ஏதோ ஆதங்கத்துல பேசிட்டா”என்று தேசிகன் வர
“ஏன் எனக்கு வரக் கூடாதா அந்த ஆதங்கம். இல்லை என்னை மண்ணுனு நினைச்சிங்களா…பேசிப் பேசியே வாழ்க்கையை கெடுத்துக்கிட்டது அவ…பழி என் பொண்டாட்டிக்கா… இதுக்கு மட்டும் வர்றீங்களேப்பா சொல்ல வேண்டியது தானே மருமகள் பேத்தியை அப்படி பேச வேண்டாம் னு. அதை எல்லாம் சொல்ல மாட்டீங்க ஆனா உங்க பொண்ணு பொண்டாட்டி யை ஒரு வார்த்தை நான் சொன்னதும் உங்களுக்கு பொங்கிக்கும் இல்லையா உங்க ரத்தம் தானே நானு அப்போ எனக்கு அந்த உணர்வு இருக்காதா… இல்லை ஏழு வருஷம் ஜடமா தானேடா இருந்த இப்ப உனக்கு ஏன் டா இந்த சூடு சொரணைனு கேட்குறீங்களா”என்று தந்தையிடம் பாய்ந்தவன் “எதுவா இருந்தாலும் விசாரிச்சு தான் முடிவு பண்ண முடியும். அதுல உங்களுக்கு விருப்பம் இல்லைனா நீங்களே பிரச்சினையை பார்த்துக்கோங்க என் கிட்ட வராதீங்க.”என்றான் கறாராக.
“அப்போ அவளுக்கு ஒண்ணுன்னா நீ கேட்க மாட்டீயா…”என்று மற்றதை எல்லாம் விட்டு விட்டு வளர்மதி அதிலேயே நிற்க
“கேட்க மாட்டேன் னு நான் சொல்லலையே... மொதல்ல நடந்தது தெரியாம எதையும் செய்ய முடியாது. நீங்க போலீஸ் ல கம்ப்ளைண்ட் தந்து ஹரிஹரன் கல்யாணம் எல்லாம் இல்லை னு மறுத்தா மறுபடியும் அங்கே போய் எப்படி உங்க பொண்ணு வாழ்வா…இதை சாக்கு வச்சு வேண்டாம் னா என்ன செய்வீங்க. விசாரிக்காம எல்லாம் செஞ்சா எப்படி ஆகும்”என்று கேட்க
“அவன் சொல்றது சரி தானேம்மா. போய் விசாரிக்கறதில் என்ன வந்திடப் போகுது எடுத்தோம் கவுத்தோம்னு செய்ற காரியமா இது”என்று அமுதனுமே கேட்க
“அவ இருக்கிற நிலைமையை பார்த்தா விசாரணை போடவாடா தோணும்.பெத்த வயிறு பத்திட்டு எரியுதுடா உங்களுக்கு எல்லாம் அவ்வளவு லேசுபாசா ஆகிட்டோம்ல நானும் என் மகளும். மறுபடியும் கொண்டு போய் விட்டாலும் இதே வேலையை தானே செய்ய சொல்வாங்க எம்பொண்ணு இன்னுமில்ல வத்திப் போவா… அதுக்கு தானே சொல்றேன் புகார் குடுத்து மிரட்டி வைப்போம்னு”என்று ஆதங்கமாய் பேசினார் வளர்மதி.
“அப்படி பார்த்தால் முதல்ல நம்ம மேல கம்ப்ளைண்ட் தர வேண்டியது நீரதி தான். ஏன் நீங்க வாங்காத வேலையா அங்கே உங்க மகளை வாங்கிட்டாங்க. ஏன் அவங்க அம்மா வயிறு எரிஞ்சு இருக்காது. ஏன் செய்யவில்லை. மக வாழ்க்கை கெட்டுப் போகும் னு தானே…”என்று குத்தலாக பேசி விட்டான் ஆழியன்.
“இதை எல்லாம் மனசுல வச்சுக்கிட்டு தான்”
“நான் எதையும் நினைக்கலை. அதே நேரத்தில் பேசாமலும் இருக்க முடியாதே… ஏன்னா இதை எல்லாம் நாங்களும் அனுபவிச்சு தானே இருக்கோம்”என்றவன் “அமுதா எதுவா இருந்தாலும் சொல்லு நான் வர்றேன். மத்தபடி கம்ப்ளைண்ட் தான் தரப் போறீங்கன்னா நான் தலையிட மாட்டேன்”என்று தீர்க்கமாக உரைத்து விட்டு மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே சென்று விட்டான்.
“நீங்களும் அவன் பக்கம் தானா”என்று அமுதனிடம் திரும்ப
“எங்களால போலீஸ் கோர்ட்டுனு அலைய முடியாது த்தை. வேணும்னா ஹரி வீட்டில் பேசறோம். பிரச்சினைக்கு ஒரு வழி பண்றோம். இதான் முடியும். நாங்களும் எங்க குடும்பத்தை பார்க்கணும் அதை விட்டு கோர்ட் கேஸ்னு அலைய முடியாது.”என்றாள் தரங்கினி.
வளர்மதி அதிர்ந்து அவளைப் பார்க்க அமுதனோ மனைவி கூறுவதை ஏற்கிறேன் என்ற ரீதியில் நின்றிருந்தான்.
“நீ என்ன சொல்ற தீபு”என்று தீபனிடம் திரும்ப
“எங்க முடிவும் அதுதான் த்தை”என்ற பவ்யா “வீட்டு வேலை செய்ய சொன்னதுக்கு எல்லாம் புகார் தரணும்னா மொதல்ல நீரு அக்கா உங்க மேல தான் புகார் தரணும். அவர் இவ்வளவு தூரம் வந்து செய்றேன் சொல்றதே பெருசு” என்றாள்.
“எவனும் என் மகளுக்காக நிற்க வேண்டாம் நான் போராடுவேன் என் பிள்ளைக்காக”என்று வீம்புக்கு பேச
“இவ்வளவு பேசறீங்களே தவிர… உங்க பொண்ணு அங்கே என்ன பேசினா அடிப்படை கோபம் எது னு கேட்டு சரி செய்ய மாட்டேங்கிறீங்க. எங்க நீங்க பேசினதோ உங்க பொண்ணு பேசினதையோ தப்புன்னே நினைக்கலை நீங்க.”என்றாள் எள்ளலாக
“சும்மா என்ன என் மேல தப்பு சொல்றீங்க… இப்போ நான் சொன்னதை தான் செஞ்சு இருக்காங்க அந்த குடும்பம். இப்போ நடக்கறதிலே இருந்தே தெரியலை ஆரம்பத்தில் இருந்தே அதே எண்ணம் தான்னு”என்று நிலா அழுகையோடு பேச
“அம்மா தாயே உனக்கு விளக்கம் சொல்ல என்னால முடியாது. முதல்ல தப்பு எது சரி எதுன்னே உனக்கு தெரியலை”என்றவள் “நீங்க வாங்க அதான் அவங்களே முடிவு செய்றாங்களாமே செய்யட்டும்”என்று சொல்லி விட்டு போய் விட்டாள் பவ்யா.
“யாரும் வேணாம் டா நானே என் மவளுக்கு தொணையா நிக்குறேன் எவனும் வந்து நிற்க வேணாம். நீ வாடி அவனுகளை ஒரு வழி பண்ணாம விடுறது இல்லை நானு”என்று சூளுரைத்து செல்ல தேசிகன் தலையில் கை வைத்தபடி அமர்ந்து விட்டார்.
ஆணவத்தில் முடிவெடுப்பவரை யார் தடுக்க.
தேசிகனுக்கு வயோதிகமும் மகன்கள் தங்கள் குடும்பத்தை தானே நிர்வாகம் செய்வதிலும் தன் முடிவுகள் அங்கே மறுக்கப்படுவதிலும் ஏற்கனவே மனது விட்டுப் போயிருந்தது. வளர்மதியும் தன் இஷ்டப்படி இருக்க தனது ஆளுமையை இழந்ததாகவே உணர்ந்தார் அவர். உண்மையில் தன் முடிவுகளை தனது கருத்துக்களை சொல்லி இருந்தால் மூன்று மகன்களுமே ஏற்று தான் நடந்திருப்பர். வளர்மதியின் பேச்சைக் கேட்டு அதனை அப்படியே ஒலிபரப்பு செய்ததில் தான் மறுப்பு வந்தது மூன்று மகன்களிடத்தும். வளர்மதி அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சினையிலும் தீர்வை சொல்லி இருந்தால் பரவாயில்லை… குறையை மட்டுமே கூறினால் எப்படி ஆவது.
…… தொடரும்.
