Skip to content
Post Views: 966
உன்னாலே உனதாகிறேன்! 7
மழை நின்ற பின்னே மனம் ஒருவித குளுமையை எதிர்பார்க்க அந்த காலைப் பொழுதோ குமரனின் மனநிலையைப் போலவே சற்றே சூடாகவே இருந்தது.
Advertisement
வார இறுதி என்றாலும் நிச்சயம் இந்த மன நிலையில் வேறு வேலை செய்வது சாத்தியமில்லை என்பது உறைக்க குமரன் தன் அறையிலிருந்து எழுந்து வெளியில் வந்தான்.
“அப்பத்தா, அய்யா எங்க? ஆளக் காணும்?”
Advertisement
Advertisement
“உங்க அய்யேன் இன்னைக்கு வெள்ளனத்துலயே கடைக்கு போய்ட்டாரு. கணக்கு வழக்கெல்லாம் எம்புட்டு நாளைக்குத்தே செதம்பரண்ணே பாப்பாக. பேரன் போயிட்டான்னு வியாபாரத்த அவுகட்ட விட்டு இதையும் எழக்கத் தெம்பில்ல. அதேன் இவரு இன்னைக்கு போயிருக்காரு.”
“சரி அப்பத்தா. நா பெரியப்பா வீடு வர போயிட்டு வாரேன்.”
Advertisement
“அடேய், என்னத்துக்கு இந்நேரத்துல போற?”
“வேற என்னத்துக்கு உம்ம மவரோட கபடி ஆடத்தே.“
“அடேய், உனக்கெல்லாம் வாயிருக்கே தவிர வழக்கமில்ல. அங்க போயி அவங்கிட்ட என்னத்த டா பேசப் போற.”
“வேற என்ன பேசப் போறாக அப்பத்தா? எல்லாம் உம்ம பேத்தி வீட்டுக்கு பேச சொல்லத்தே. கிணத்துல போட்ட கல்லாட்டமா கெடக்காக. நாம் போனா சொத்து கேப்பனா மாட்டேனான்னு அவரு செத்த கொழம்பட்டும்.”
“ஹுக்கும், அவனுக்கு ரெம்ப அக்கறதே உம்மேல. அதெல்லாம் உங்க ஐயன் பேசுவாக. நீ என்னத்துக்கு போற?”
“சபையிலே வச்சு கல்யாணம் பேசிட்டு நம்ம ஒன்னுஞ் சொல்லாம இருந்தா மூணு மாசத்துக்கு அவுகளும் அப்படியே இருப்பாகளா? பூவினி அப்பா நேத்து பேசுனாக. பெரியவுகள பேச சொன்னாக அப்பத்தா. அதேன் ஒரு எட்டு போயி தாக்கச் சொல்லுவமுன்னு போறேன்.”
“பெருமைக்கு எரும மேக்கிற பய அவேன், அவள ஓம்பக்கம் தாட்டிவிடத்தே கலியாணம் பேசுனான். அக்கறையிலயா செஞ்சான்? அவுகளுக்கு அந்தில அய்யாவ பேசச் சொல்லுவம். நீ போயி அவுக சாரிச்சாகன்னு மட்டும் சொல்லிட்டு வா.”
“ம்ம். சரித்தே.” என்றவன் பெரியப்பா வீட்டுக்குக் கிளம்பிச் சென்றான்.
சனிக்கிழமை காலை நேரம் என்பதால் பிள்ளைகளின் சத்தமும் தொலைக்காட்சியின் சத்தமும் தோட்டம் வரையிலும் கேட்டது.
“அனு, அரவிந்தா” என பிள்ளைகளை அழைத்தபடியே குமரன் புது வீட்டினுள் நுழைந்தான்.
“வாடா குமரா, என்ன காத்து இந்தப்பக்கம் அடிக்குது?” எனக் கேட்டபடியே தொலைக்காட்சியின் சத்தத்தைக் குறைத்தான் சரவணன்.
“பேங்க் ஆபீசரே இன்னைக்கு வீட்டுல இருக்கும் போது வாத்தியாருக்கு லீவு கெடைக்காதா அண்ணே? பிள்ளையளையும் அங்குட்டு…” காணோம் என அவன் சொல்லி முடிக்கும் முன்னே “சித்தப்பா” என கத்தியபடியே அவனிடம் ஓடி வந்தனர் பிள்ளைகள் இருவரும்.
அவர்களோடு பேசியவன், “எங்கண்ணே அத்தாச்சி பெரியம்மா யாரையும் காணும்?” என்றான்.
“அவுக ரெண்டு பேரும் இன்னைக்கு வெள்ளணத்துல கெளம்பி கோயிலுக்கு போரமுன்னு போனாக, வந்துருவாக.”
குமரன் பிள்ளைகளோடு சற்று நேரம் விளையாட, அவனின் பெரியப்பா அறையிலிருந்து அப்போதுதான் வெளியில் வந்தார்.
“என்ன டா குமரா, காலையிலே இந்தப் பக்கம்?” அவனைப் பார்த்ததுமே இடக்காக அவரும் அதே கேள்வியைக் கேட்டபடி வந்தவர் அங்கிருந்த தனி இருக்கையில் அமர்ந்தார்.
“சும்மாதே பெரியப்பா. கதிரேசன் மாமா உங்கட்ட பேசணும்ன்னாக, அத சொல்லிட்டு அப்பிடியே பிள்ளயள பாக்கலாம்ன்னு வந்தேன்.”
“ஹ்ம்ம்,…” என்றவர் அதைப் பற்றியே கண்டு கொள்ளாமல் அடுத்தடுத்து ஏதேதோ பேச குமரனுக்கு கோபத்தின் அளவு கொதிநிலைக்கு வந்தது.
என்ன மனிதர்கள் இவர்கள், தங்களின் சுயநலத்திற்காக இன்னொருவர் கஷ்டப்படுவதைப் பற்றி கொஞ்சமும் நினைக்காத மக்கள். இவர்கள் இப்படித்தானே எப்போதுமே என்று தோன்றவும் மேலும் பேச்சை வளர்க்காமல் அங்கிருந்து கிளம்பி இருந்தான்.
“சரவணா, என்னத்துக்கு வந்தாங் குமரே? உங்கிட்ட என்னமுஞ் சொன்னானா?” அவன் கிளம்பவுமே சந்தேகமாகக் கேட்டார் கதிர்வேலன்.
“என்னத்துக்கு வந்தான்னே தெரியல. ஆனா அய்யா என்ன பாத்து பேசுனது பத்தி எல்லாம் அவனுக்குத் தெரியும். ஆனா எதுவும் கேக்கல அவன்.”
“இருக்கட்டும்விடு. அவுக அப்பனப் போலயே அழுத்தம் புடுச்ச பய. அவுக அப்பஞ் செத்து வந்தப்பயே ஒண்ணுங் கேக்க மாட்டான். அப்படியே நிப்பான். கலியாணத்துக்கு இனி நா என்ன பேச? அதெல்லாம் இனி எங்க ஆத்தாவும் அப்புவும் பேசுவாக.” என முடித்துக் கொண்டார் கதிர்வேலன்.
தான் தனது என சுயநலம் மட்டுமே குறிக்கோளாய் இருப்பவர்களுக்கு மற்றவர்கள் வாழ்க்கை என்ன ஆனால் என்ன?
எல்லாம் எங்கேயோ தனியாக முட்டி நிற்கும்போது புரியும். ஆண்டவன் நின்று கொல்லும் முறையெல்லாம் இப்போது நிறுத்திவிட்டார் என்று மனிதர்களுக்கு யார் சொல்வது?
புது வீட்டிலிருந்து திரும்பி வந்தவன் முகம் பார்த்தே வள்ளியம்மாளுக்கு அங்கு என்ன நடந்திருக்கும் என்று விளங்கியது.
“என்னடா குமரா, வேலு சம்மந்தி வீட்டுக்கு பேசுனானா?”
“என்ன அப்பத்தா? நக்கல் பண்றியா என்ன? உனக்குத்தே நல்லா தெரியுதே? அப்பறமும் என்னத்துக்கு கேக்குற?”
“இல்லடா குமரா, சம்மந்தி வீடுதே அவுக மக வாழ்க்கைக்காக கல்யாணம் பேசுனான்னு பெருமையா நெனச்சு கேக்குறாக. ஒனக்கு வெளங்க வேணாம். அவுக தெரியாமப் பேசுறாகன்னா இவென் என்னவோ விடியயிலே குதுச்சுக்கிட்டுப் போறான், அவென் வெட்டி முறிப்பான்னு. கழுத, கெடக்கான் விடு.”
“அதான் நானும் ஒன்னுஞ் சொல்லாம வந்தேன். இப்பவே நா ஏன் வந்தேன்னுதே பேசிருப்பாக.”
வள்ளியம்மாளுக்கு பதில் சொல்லிக் கொண்டே வண்டிச்சாவியை எடுத்துக் கொண்டு வந்தவன் வெளியில் கிளம்பத் தயாரானான்.
“சரி அப்பத்தா. நானுஞ் செத்த கட நாடி போய்ட்டு வாறேன்.” என்றவன் செருப்பைமாட்ட, “அடேய், நில்லுடா. வயித்துக்கு ஒன்னும் போடாம போற. இட்லி சூடா இருக்கு. சாப்பிட்டு போ.”
பேசியபடியே அவர் பின்னால் வர “அதுக்குத்தான் நான் அய்யாவ பாக்கப் போறேன். அவரு எனக்கு மணக்க மணக்க பொங்கல் வாங்கித் தருவாரு.” என்றான்.
“அடேய் இட்டிலி வேணாமுன்னா, வா தோச ஊத்தித் தாரேன். தக்காளி சட்டினியோட நல்லா இருக்கும்.”
“அப்பத்தா, நீ ஊத்துற தோசைக்கு அந்த இட்டிலியே தேவலாம். எனக்கு முறுகலா ரெண்டு நெய் ரோஸ்ட் வேணும்.” என்றவன் நொடியில் அங்கிருந்து வண்டியில் பறந்திருந்தான்.
நேற்று பெய்த மழையின் குளிர்ச்சி இல்லாமல் ஊரே சற்று வெப்பமாக இருப்பது போல உணர்ந்தான் குமரன். பூமி மட்டுமே நனைந்து நாறிக் கொண்டிருந்தது. வானம் என்றும் போல தெளிந்திருந்தது.
ஆதவன் ஒன்பது மணிக்கெல்லாம் உக்கிரத்துடன் மேலேறிக் கொண்டிருந்தான். அதன் வெப்பம் கூட ‘வேண்டும்’ போலவே இருக்க அந்த பத்து நிமிட பயணத்தையும் ரசிக்கவே செய்தான் குமரன்.
கோட்டையூரின் முக்கிய வீதியில் இருந்தது வள்ளி நகை அடகுக்கடை மற்றும் வெள்ளி வியாபாரம். முருகய்யா, குமரனின் சிறு வயதில் அவனுக்காக ஆரம்பித்தது. இன்றும் அவரேதான் பார்க்கிறார் என்றாலும் குமரனும் அவ்வப்போது வருவதுண்டு.
வந்தவன் வண்டியை கடையின் அருகே இருந்த புங்கை மர நிழலில் நிறுத்திவிட்டு உள்ளே நுழையவும் சந்தன ஊதுபத்தியின் நறுமணத்தைத் தாண்டி நெய்மிதக்கும் வெண்பொங்கலின் மணம் நாசியை நிறைத்தது. முருகைய்யாவும் கடையில் வேலை பார்க்கும் சோலை அக்காவும் நின்றிருந்தார்கள்.
“அய்யா, என்ன நா வாரதுக்குள்ள அப்பத்தா பேசிட்டாக போல.”
“ஏன்டா வள்ளிதே இட்டிலி சுட்டாலே வீட்டுலே சாப்புட வேண்டியதுதானே. இட்டுலின்னா கடுக்குமே உனக்கு. அதென்னமோ இந்தக்காலம் போல வெதவெதமா வள்ளிக்கும் சமைக்க வரல.“
“அதெல்லாம் ஒண்ணுமில்லய்யா. நம்ம ராசண்ணே கடயில சாப்புடலாமுன்னு வந்தேன்.“
“ஹ்ம்ம், உம் பெரியப்பே வீட்டுக்கு போயிட்டு வந்து சாப்புடலன்னு போன போட்டு வள்ளி சொன்னா. அதே உனக்கு பிடிக்கும்ன்னு நம்ம சோலைய ராசு கடையில பொங்கல் வாங்கியார சொன்னேன்.” என்றவர் பொங்கல் இருந்த பையைக் கொடுத்து அங்கிருந்த சிறு அறைக்குள் சாப்பிட அனுப்பினார்.
“தம்பி, நெய் ரோஸ்ட் சொல்லவா?” என்று மீண்டும் வந்து கேட்க, “இதே போதும் ய்யா” என்று முடித்துக்கொண்டான்.
குமரன் சாப்பிட்டு வரும் வரை அமைதியாக இருந்த முருகைய்யா அவன் வரவுமே, “தம்பி இந்த கணக்கெல்லாம் கொஞ்சம் பாரு. செதம்பரம் எழுதுனதுதே, நீ சரி பாத்தா போதும். சோலை கடைய பாத்துக்குரும், நா செத்த வெளிய போய்ட்டு வாரேன்.” என்றவர் அவனிடம் கணக்குகளை ஒப்படைத்துவிட்டு வெளியேறினார்.
அடுத்த ஒருமணி நேரமும் அவன் நகைக்கடைக் கணக்கில் மூழ்கியிருக்க முருகய்யா திரும்பி வந்தார். வந்தவர் முகத்தில் இருந்த சந்தோஷ உணர்வு குமரனுக்கு குழப்பத்தைக் கொடுத்தது.
“என்ன அய்யா வெளிய போயிட்டு ஒரே சந்தோஷமா வாரிய?”
“வேற என்ன எல்லா எம் பேராண்டி கல்யாணந்தே. என்னதே நீ படிச்சு பட்டம் வாங்கி வேலைக்கு போனாலும் அப்ப வராத சந்தோசம் அய்யாவுக்கு இன்னைக்கு வருதுய்யா.”
“ஏன் வராது உமக்கு. என்னயத்தானே மாட்டிவிடுறீரு. உமக்கு கொண்டாட்டமாத்தே இருக்கும். நீரு வள்ளியாத்தாளுக்கிட்ட வாங்குறாப்புள்ள நானும் வாங்கணும்ன்னு கங்கணம் கட்டிட்டு அலையிறீரு போல.”
“அடேய் கூறுகெட்ட பயலே, கலியாணம் பண்ணவே எல்லாம் நீ பண்ணாதன்னுதே பேசுவான். ஆனா அவங்க பொண்டாட்டி நாலு நாளைக்கு வெளிய போனா காஞ்சு போயிருவாங்க.”
“ஆக, நானும் உம்மப்போல இருக்கத்தே நீர் எனக்கு கல்யாணம் பண்ணுறீரு?”
“நீ என்ன வேணாச் சொல்லு. நீயும் என்னப் போலவே எம் பேத்தியக்கட்டி நல்லா இருக்கனும்ய்யா. அதேன் உன் அய்யனோட ஆசை.” என்று சொன்னவரின் குரலில் வந்துபோன கலக்கம் எல்லாம் அவன் மீதான அன்பு மட்டுமே என்பதை முழுவதுமாக உணர்ந்தான் குமரன்.
error: Content is protected !!