Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Intersteller Love

Vinto’s Interstellar Kaadhal Episode 1

அத்தியாயம் – 1

 

பரிணாம வளர்ச்சி



Advertisement

பிரபஞ்சம்இந்த ஒற்றைச் சொல்லுக்குள் அடங்கியிருக்கும் இரகசியங்கள் நம் அறிவுக்கு அப்பாற்பட்டவை. இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவாகியிருக்கும் என்பது குறித்து பல்வேறு கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் முக்கியமான இரண்டு கோட்பாடுகள், Steady state theory மற்றும் Big Bang theory.

முந்தையது, “இந்தப் பிரபஞ்சம் இருந்தது; இருக்கின்றது; எதிர்காலத்திலும் இருக்கும்என்று கூறியது. ஆனால், பிந்தையது, “இந்தப் பிரபஞ்சம் ஒரு பெரு வெடிப்பால் உருவாகியதுஎன்று கூறியது.

 பல ஆண்டுகள் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து Big Bang theory-யை நிரூபித்தனர். இதில் பெரும் பங்காற்றியவர்கள், Stephen Hawking மற்றும் Roger Penrose ஆவர்.

Advertisement

Advertisement

******

கிரகம் : பூமி

 

Advertisement

 ஸ்ரீநிவாசன் சிவகாமி தம்பதியரைப் பார்ப்பவர்கள் அனைவரின் மனதிலும் தோன்றுவது அவர்கள் இருவரும் ஆதர்ச தம்பதியர்என்பதே.

ஸ்ரீநிவாசன் வங்கியில் மேலாளராக வேலை பார்க்கிறார். மனிதர் தினமும் உடற்பயிற்சி, யோகாசனம் என செய்து தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். அவரது மனைவி சிவகாமி இல்லத்திற்கு மட்டும் அரசியாக இல்லாமல், தனது கணவருக்கும் உற்ற தோழியாக இருந்து வந்தார். அதாவது, ஜாடிக்கேற்ற மூடி போல.

 அவர்களது இரட்டைக் குழந்தைகளான ஸ்ரீதர் மற்றும் ஜெயஸ்ரீ அவர்களுடைய வாழ்வில் வந்த சந்தோஷ தென்றல். சிறுவயதிலிருந்தே இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மிகவும் பாசமாகவே வளர்ந்து வந்தனர்.

 ஸ்ரீநிவாசனும் அவர்களுக்கு ஒரு தந்தையாக இல்லாமல், ஓர் உற்ற தோழனாகவே விளங்கினார். காலச்சக்கரம் சுழன்றது. ஸ்ரீதர், ஜெயஸ்ரீ இருவரும் தங்கள் கல்லூரி படிப்பை முடித்தனர். ஸ்ரீதருக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பு கிட்டியது. ஜெயஸ்ரீ அருகிலிருந்த ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தாள்.

 இவ்வாறு இவர்களது வாழ்க்கை முறை தெளிந்த நீரோடையாக சென்றுக்கொண்டிருந்த வேளையில் தான், ஒருநாள் ஸ்ரீநிவாசன் தன் பிள்ளைகள் இருவருக்கும் மணம் முடிக்க ஏற்பாடு செய்தார். தனது தூரத்துச் சொந்தத்தில் பெண் கொடுத்துப் பெண் எடுக்க முடிவு செய்தவர், ஸ்ரீதர், ஜெயஸ்ரீ இருவரையும் அழைத்துத் தன் அருகில் உட்கார வைத்தார்.

அவர்களிடம் தனது யோசனையைக் கூறிவிட்டு, “உங்க ரெண்டு பேருக்கும் இந்த கல்யாணத்துல இஷ்டமாப்பா ? எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்லுங்கஎன்றார்.

 அப்போது குறுக்கிட்ட சிவகாமி, “இதுல அவங்கக்கிட்ட கேட்க என்னங்க இருக்கு?” என்று வினவ,

ஸ்ரீநிவாசன், “இது அவங்க வாழ்க்கைமா. அத அவங்கதான் வாழப் போறாங்க. எதுக்கும் ஒரு வார்த்தை அவங்கக்கிட்ட கேட்டுக்குவோம்என்றார்.

 தங்கள் தந்தையின் பேச்சில் ஸ்ரீதரும் ஜெயஸ்ரீயும் மறுமொழி பேசாமல் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டு விட்டனர்.

 

அப்போது, ஜெயஸ்ரீயின் முகத்தில் ஏற்பட்ட மாறுதலை ஸ்ரீநிவாசன் கவனிக்காவிடினும், ஸ்ரீதர் கண்டுகொண்டான். ஆனால், “அவளுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால் தன்னிடம் கூறமாட்டாளா ?” என்று தோன்ற, அவன் அவளிடம் பெரிதாக எதுவும் கேட்கவில்லை. பின்னர் ஒருநாள் அதைக் கேட்டிருக்கலாமோ என்று எண்ணும் சூழ்நிலை ஏற்படுமோ ? யாருக்காகவும் எதற்காகவும் தன் வேலையை நிறுத்தாத விதி, தன் விளையாட்டைத் தொடங்கியது. விதியை வெல்லக்கூடிய மதி மனிதனிடம் இருந்தால், அப்புறம் விதி என்பது எதற்கு?

 அதோ இதோ என்று திருமணத்திற்கு இன்னும் இருதினங்கள் தான் உள்ளன என்ற நிலை வந்தது. கடந்த ஒரு வாரமாகவே மகளின் முகம் சரியில்லாததை சிவகாமி கவனித்தே வந்தார். மகள் திருமணத்தை நினைத்துக் கலங்குகிறாள் என்று எண்ணி அவளைச் சமாதானப்படுத்தினார்.

 ஒரே மேடையில் இரு திருமணமும் நடக்க இருப்பதால் திருமணம் பிரம்மாண்டமாகவே திட்டமிடப்பட்டிருந்தது. திருமணத்திற்கு முதல் நாளே உறவினர் கூட்டம் வீடு முழுவதும் நிறைந்திருந்தது. வாசலில் உறவினர்களுடன் ஸ்ரீநிவாசன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது, ஜெயஸ்ரீ திருமணக் கோலத்தில் கழுத்தில் திருமாங்கல்யத்துடன் ஓர் ஆடவனோடு வந்து நின்றாள். அதைக் கண்ட ஸ்ரீநிவாசன் அதிர்ச்சி அடைந்தார் என்றால், சிவகாமி அழுது புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

 இதனைப் பார்த்த மாப்பிள்ளை வீட்டினர், “என்னயா பொண்ணு வளர்த்திருக்க ? கல்யாணத்துக்கு மொத நாள் இப்படி வந்து நிக்கிறா?” என்று வாய்க்கு வந்தபடி பேச, ஸ்ரீநிவாசன் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் தன் மகளைப் பார்த்தார். அவரின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் ஜெயஸ்ரீ தலை குனிந்து கொண்டாள்.

சிவகாமி ஏதோ கேட்கப் போக, அவரைத் தடுத்த ஸ்ரீநிவாசன்,“இனிமே நான் செத்தாலும் என்ன பாக்க வராத”, என்று கூறிவிட்டு, தடுக்க வந்த மகனையும் மனைவியையும் பாராமல் வேகமாக தன்னறைக்குச் சென்று விட்டார். அவரைத் தொடர்ந்து சிவகாமியும் அழுது கொண்டே அவரின் பின்னால் சென்று விட்டார்.

 ஸ்ரீதர் மட்டும் பெற்றோருக்கும் தங்கைக்கும் இடையில் சிக்கிக் கொண்டு தவித்தான். அந்த ஆடவன், ஜெயஸ்ரீயின் கையை அழுந்தப் பற்ற, தன் சகோதரனைக் கண்களில் நிறைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினாள் ஜெயஸ்ரீ.

 அதற்குப்பின், சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ஸ்ரீநிவாசன் மாப்பிள்ளை வீட்டாரிடம், “நான் இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல,சம்பந்தி. நடந்தது நடந்துடுச்சு. நிச்சயித்த படி என் பையனுக்கும், உங்க பொண்ணுக்கும் கல்யாணம் செஞ்சு வச்சுரலாமே?” என்று கேட்டார்.

 ஸ்ரீநிவாசன் அங்கு பேசிக்கொண்டிருக்க, “மகனுக்கு மட்டும் கல்யாணமாம்என்று உறவினர்களிடம் இந்த விஷயம் காட்டுத் தீயாகப் பரவ ஆரம்பித்தது. திருமணத்திற்கு வந்த அனைவரும் தங்களுக்கு ஏற்றபடி ஒரு கதையை இட்டுக் கட்டிக் கொண்டிருந்தனர். இதையெல்லாம் கேட்க முடியாமல் ஸ்ரீதரும், சிவகாமியும் இடிந்துபோய் அமர்ந்திருந்தனர். தன் மகள் மீது நம்பிக்கை இருப்பினும், அவள் எதுவும் சொல்லாமல் சென்றது, தவறு அவள் மீதுதான் இருக்குமோ என்று உறுதியாக எண்ண வைத்தது சிவகாமியை. அந்த எண்ணமே அவரது மனதைப் போட்டுப் பிழிந்தது.

 மறுபக்கம் மாப்பிள்ளையின் பெற்றோருக்கு கோபம் இருப்பினும், தங்களது மகள் சித்ரா ஸ்ரீதரைக் காதலிப்பதை முன்கூட்டியே அறிந்திருந்ததால், திருமணத்திற்கு அவர்கள் ஒத்துக் கொண்டு விட்டனர்.

மறுநாள் வழக்கம் போல, அனைத்து சம்பிரதாயங்களும் செய்யப்பட்டு, அவர்களது திருமணம் இனிதாக முடிவடைந்தது. அனைத்து வேலைகளும் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு, அவர்களிடையே மௌனமே ஆட்சி செய்தது. சூழ்நிலையைப் புரிந்துக் கொண்ட சித்ரா, ஜெயஸ்ரீ மீது கோபம் இருப்பினும் கணவனையும் பெரியவர்களையும் தேற்றினாள். அவர்களும் ஜெயஸ்ரீ பற்றிய எண்ணத்தை விடுத்து வாழ ஆரம்பித்தனர். இதற்கெல்லாம் அப்பாற்பட்ட காலம், அதன் போக்கில் செல்ல ஆரம்பித்தது.

 

******

 கிரகம் : கயா

 

 கயா கிரகம் பூமியிலிருந்து எண்ணற்ற ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கும் விண்மீண் பேரடையில்( GALAXY ) இருக்கும் ஒரு கிரகம். அதனைச் சுற்றி பாதுகாப்பு வளையங்கள் போன்ற தங்க நிறக் கவசங்கள் அமைந்திருந்தன.  ஆனால், அந்தக் கிரகத்தைச் சுற்றி சூரியனோ அல்லது வேறு கிரகங்களோ காணப்படவில்லை. அண்ட வெளியில் கொழுந்துவிட்டு எரியும் தீப்பந்தம் போல ஒளிர்ந்துக் கொண்டிருந்தது கயா கிரகம்.

சற்று நெருங்கிப் பார்க்கையில், கயா கிரகத்துடன் ஒப்பிடும் பொழுது மிகவும் சிறிய அளவினை உடைய ஒரு கோள் பசை போட்டு ஒட்டினாற் போல் அசையாமல் மிதந்து கொண்டிருந்தது.

 கயா கிரகம் அளவில் பூமியை விட பல மடங்கு பெரியதாக இருந்தது. அந்தக் கிரகம் முழுவதும் மாடமாளிகைகள் நிறைந்திருந்தன. ஆனால், அந்தப் பழமைக்குள் இருக்கும் பிரம்மாண்டங்கள் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கும். அந்த கட்டிடங்களுக்கு இணையாக மரங்களும் போட்டிப் போட்டு வளர்ந்திருந்தன.

அங்கு வசிக்கும் மக்களைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுவர். ஏனெனில், அவர்கள் அனைவரும் சாதாரண மனிதர்களைப் போலவே இருந்தனர். ஆனால், அவர்களது முகம் மட்டும் அதிக தேஜஸுடன் விளங்கியது. கூடவே, அனுபவத்தால் ஏற்பட்ட முதிர்ச்சியுடனும். அவர்களது கண்கள் தங்க நிறத்தில் மின்னின.

அந்தக் கிரகத்தின் தொழில்நுட்பத்தைப் பார்க்கும் பொழுது, அவர்களின் அறிவியலுடன் நமது அறிவியலை ஒப்புமைப் படுத்தினால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேற்றுமை புலப்படும். ஆனால் ஒன்று, அங்கு கயா கிரக வாசிகளைத் தவிர, வேறு ஜீவ ராசிகள் இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. அங்கு வீரர்கள் போல இருந்தவர்கள் யாவரும் பறந்தே சென்றுக் கொண்டிருந்தனர்.

 அதுபோல, அந்தக் கிரகம் முழுவதும் விவசாய நிலங்களே இல்லை. சூரியனும் இல்லாமல் விவசாய நிலங்களும் இல்லையென்றால் கயா கிரக வாசிகளுக்கு எங்கிருந்து சக்தி ( ENERGY ) கிடைக்கிறது ?

அறிவியலில் வளர்ச்சி அடைந்த கயா கிரக வாசிகளால் வெப்ப இயக்கவியலின் முதல் விதியை ( FIRST LAW OF THERMODYNAMICS ) உடைத்திருக்க முடியுமோ ?

 இவ்வளவு பிரம்மாண்டமான கிரகத்தில், அதற்கு இணையாக ஒரு கோட்டை இருந்தது. அந்தக் கோட்டையைப் பார்க்கும் போது கயா கிரகத்திற்கும் தங்க நிறத்திற்கும் ஏதோ தொடர்பு இருப்பது புரிந்தது. கோட்டையின் ஒவ்வொரு பகுதியிலும் செழுமையும் கலைநயமும் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தன. விஸ்வகர்மாவே வியக்கும் அளவிற்கு இருந்தது அந்தக் கோட்டை.

 அதன் உச்சி மேகங்களால் மறைக்கப் பட்டிருந்தன. கோட்டையைப் பாதுகாக்கும் காவலர்கள் தங்க நிறக் கவசங்களை அணிந்திருந்தனர். ஆச்சரியப்படுகின்ற விஷயம் என்னவென்றால் அவர்கள் கையில் எந்த ஆயுதமும் இல்லை. அதற்கு மாறாக அவர்கள் கையைச் சுற்றி ஏதோ ஒரு வகையான ஆபரணம் இருந்தது.

 கோட்டையின் வாசலில் பெரும் மக்கள் கூட்டம் ஒன்று திரண்டிருந்தது. அவர்களுக்கு முன்னே ஒரு கம்பீரமான ஆண்மகன் தலையில் மணிமுடியுடன் நின்றிருந்தான். அவன்தான் ப்ரொமேத்தியஸ். கயா கிரகத்தின் தற்போதைய பேரரசன்.

 

அவன் கண்கள் செக்கச் செவேல் எனச் சிவந்திருக்க, தன் முன் நின்றிருந்த மக்களிடம், “கயா கிரகத்துக் குடிகளே! உங்கள் முன்னாள் அரசனும் அரசியும் கூடிய விரைவில் என்னிடம் சிக்கிக் கொள்வார்கள். அவர்களுக்கு எப்படியும் மரண தண்டனை அளிக்கப்படும். அதனால், அவர்களுக்கு உதவாமல் அவர்களைச் சீக்கிரமே என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். இல்லையென்றால், அதன் பலனை நீங்களும் சேர்ந்து அனுபவிக்க வேண்டும்”, என்று கணீர் குரலில் கயா கிரக மொழியில் கூறினான். (இனி கதையில் பல இடங்களில் கயா கிரக மொழி வரும். அவ்விடங்களில் தமிழ் எழுத்து வழக்கில் பயன்படுத்தப் பட்டிருக்கும்.)

 ஆனால் மக்கள் யாரும் வாயைத் திறக்கவில்லை.

 அதனால் கோபமடைந்தவன், அவர்களைத் தாக்குவதற்கு ஏற்றாற்போல், தன் கைகளை அவர்கள் முன் நீட்டினான். அதிலிருந்து வெளிப்பட்ட ஒளிக்கதிர்களால் மக்கள் அலற ஆரம்பித்தனர். மன்னனைத் தொடர்ந்து, கோட்டைக் காவலர்களும் அவ்வாறே செய்யத் தொடங்கினர். இதையெல்லாம் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார், கயா கிரகத்தின் தலைமை அமைச்சர், பொசய்டன்.

 இங்கு இப்படி கலவரம் நடந்து கொண்டிருக்க, அங்கு, காட்டில் இரண்டு நபர்கள் வேகமாக நடந்து கொண்டிருந்தனர். அவர்கள் வேறுயாருமில்லை. ப்ரொமேத்தியஸ் வலைவீசி தேடிக்கொண்டிருக்கும் சீரஸும் மினர்வாவும் தான். அவர்கள் தங்கள் ராஜ உடையை அணியாமல் மாறுவேடத்தில் சென்று கொண்டிருந்தார்கள். பறந்து சென்றால் காவலர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் எனத் தெரிந்திருக்க, அவர்கள் கால்நடையாகவே சென்றார்கள்.

 மினர்வா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும் தன் குழந்தையின் உயிரைக் காப்பாற்றவும், கயா கிரக மக்களின் எதிர்காலத்தைக் காக்கவும் தன் கணவனுடன் வேக நடையிட்டு சென்று கொண்டிருந்தாள்.

 செல்லும்போதே, “சீரஸ் நான் இப்படி நடக்கும் என்று துளிக்கூட எதிர்பார்க்கவில்லை. அதிலும் ப்ரொமேத்தியஸ் ! அவனை நம் சொந்த மகனைப் போல் அல்லவா வளர்த்தோம். அவனுக்கு ஏன் இப்படி ஒரு எண்ணம் தோன்றியது? அவனது இந்த எண்ணத்தால் அண்ட சராசரமே அழிந்து விடுமே !”,என்று ப்ரொமேத்தியஸை நினைத்துக் கவலையுடன் கூறினாள் மினர்வா.

இப்போதைக்கு இதைப் பற்றி எதையும் என்னால் கூறமுடியாது, மினர்வா. ஆனால், என்னால் இந்தப் பிரச்சனையை இருபத்து நான்கு ஆண்டுகள் தள்ளி வைக்க முடியும். அதற்குப் பின், நம் குழந்தையால் மட்டுமே இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியும். அதனால், நாம் எப்படியாவது நம் குழந்தையை வேறு ஒரு கிரகத்திற்கு அனுப்பி விட வேண்டும். அதுமட்டுமின்றி, சோல் பாக்ஸை திறக்கும் சாவியையும் எங்காவது மறைத்து வைக்க வேண்டும்” , என்று நடந்துக் கொண்டே கூறினான் சீரஸ்.

இந்த விஷயத்தில் செலினா நமக்கு உதவ மாட்டாரா ?”, என்று கேட்டாள் மினர்வா.

ப்ரொமேத்தியஸின் இந்தத் திட்டத்தால் செலினா கோபமடைந்து விட்டார். இப்போது அவர் என்ன செய்வார் என்று தெரியவில்லை. அதனால், இன்னும் சில ஆண்டுகள் கயா கிரகத்து மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.என்றுவிட்டு,

 மூச்சு வாங்கி நின்றவளிடம், “இன்னும் சிறிது நேரத்தில், நாம் சேர வேண்டிய இடம் வந்து விடும், மினர்வா”, என்றான் சீரஸ்.

 சிறிது நேரத்திற்குப் பின், அவர்கள் ஒரு மலையை அடைந்தனர். சீரஸ் அங்கிருந்த மேடான ஒரு இடத்தில் ஏறி நின்றுக் கொண்டு,”செலினாவின் கட்டளையால் நியமிக்கப்பட்ட, எழுவர் வழித்தோன்றலும், கயா கிரகத்தின் பேரரசனும், அண்ட சராசரத்தின் பாதுகாவலனுமான, சீரஸ் ஆகிய நான், எனக்கு வழி விடுமாறு கட்டளையிடுகின்றேன்என்று உரக்கக் கூறினான்.

 உடனே மலையின் அடிவாரத்தில் ஒரு பிளவு ஏற்பட்டது. அதன் வழியாக சீரஸும் மினர்வாவும் உள்ளே சென்றனர்.

 அது ஒரு அரசவை போலவே இருந்தது. கயா கிரகத்து மக்களின் முன்னோரான எழுவர்அங்குச் சிற்பியின் கைவண்ணத்தால் உயிரோட்டத்துடன் காணப்பட்டனர். ஆனால் மற்ற பகுதிகள் எல்லாம் சிதைந்து காணப்பட்டன. அந்த இடம் முன்னொரு காலத்தில் சிறப்புப் பெற்று விளங்கி இருக்கும் என்று தோன்றியது. சீரஸ் அங்கு சிதறிக் கிடந்தப் பொருட்களைப் பயன்படுத்தி ஒரு வாகனத்தை உருவாக்க ஆரம்பித்தான்.

இவ்வளவு நேரம் தனது மக்களுக்காக அந்தக் காரியத்தச் செய்ய வேண்டும் என்று மனதைச் சமாதானப்படுத்தி வைத்திருந்தாலும், இப்பொழுது ஒரு தாயாக மினர்வா வேதனை கொண்டாள். தனது குழந்தையைத் தன்னால் பார்க்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டால் எந்தத் தாய்தான் வருந்த மாட்டாள். அதற்குள், சீரஸ் அனைத்து ஏற்பாட்டையும் முடித்துவிட்டு, மினர்வா முன் வந்து நின்றான்.

 அவனும், தன் உணர்வுகளை எவ்வளவுதான் மறைக்க முயன்றாலும், அவன் கண்கள் வேதனையைப் பிரதிபலித்தன. ஆனாலும், தன்னைச் சமாளித்துக் கொண்டு, மினர்வாவை ஓர் இடத்தில் படுக்க வைத்தான்.

பின் செலினாவை மனதில் நினைத்துக் கொண்டு, அவளது வயிற்றில் கை வைத்தான். சில நொடிகளில், மினர்வா அலற ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில், சீரஸின் கையில் ஒரு பெரிய வெள்ளை முட்டை போல் ஒரு பொருள் இருந்தது. மினர்வா மயக்கத்துக்குச் சென்றாள்.

அந்தப் பொருளை எடுத்து, அங்கே இருந்த ஒரு சிறிய வாகனம் போன்றதொரு விமானத்தில் வைத்து மூடினான் சீரஸ். அதற்குள் மயக்கம் தெளிந்த மினர்வா, தடுமாற்றத்துடன் எழுந்து நின்றாள். தனக்கு அருகில் இருந்த அந்த வாகனத்தைப் பார்த்தவுடன் அழ ஆரம்பித்தாள் மினர்வா.

கவலைப்படாதே, மினர்வா ! இங்கு இந்தக் குழந்தை பிறந்தால் ப்ரொமேத்தியஸ் கண்டுபிடித்துவிடுவான். பயப்படாதே, இந்த வாகனம், நம் குழந்தையைப் பல ஒளியாண்டுகள் தள்ளியிருக்கும் ஒரு கிரகத்திற்குச் சென்று சேர்த்துவிட்டு, தன்னைத் தானே அழித்துக் கொள்ளும். செலினா, நம் குழந்தைக்குச் சரியான நேரத்தில் அனைத்து நினைவுகளையும் கொடுப்பார். அடுத்த முறை கன்வர்ஜென்ஸ் நடக்கும் பொழுது வெற்றி நம் பக்கமே வரும்”, என்றான்.

அதற்குப் பின், சீரஸ் தன் சக்தியின் மூலம் அந்த வாகனத்தை விண்ணில் செலுத்தத் தொடங்கினான். திடீரென்று மலையின் வாயிலில் ஒரு பெரிய சத்தம் கேட்க ஆரம்பித்தது. அது என்னவென்று பார்க்க மினர்வா ஒரு மறைவிடத்திற்குச் சென்றாள்.

வெளியே ப்ரொமேத்தியஸ் ஒரு படையுடன் நின்றுக்கொண்டிருந்தான். அவன் முகத்தில் கோபம் தாண்டவமாடியது.

 ப்ரொமேத்தியஸ், “சீரஸ், நீ உள்ளே தான் இருக்கின்றாய் என்று எனக்குத் தெரியும். கோட்டையைக் கைப்பற்றிய பின் நீ எங்கே செல்வாய் என்பதைக்கூட அறியாத மூடன் நான் இல்லை. சோல் பாக்ஸின் சாவியை என்னிடம் தந்துவிட்டால், மினர்வாவை மட்டுமாவது விட்டு விடுகிறேன். இல்லையென்றால், நீயும் நம் தந்தையும் புனிதமாகப் போற்றி பாதுகாக்கும் இந்த மலையை இப்பொழுதே தரைமட்டமாக்கி விடுவேன்”, என்றான்.

உள்ளே மினர்வா சீரஸிடம் ப்ரொமேத்தியஸ் வந்துவிட்டதைப் பதட்டத்துடன் தெரிவித்தாள். உடனே, சீரஸ் தனது முழு சக்தியையும் திரட்டி அந்த வாகனத்தை அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டு மினர்வாவோடு வெளியே வந்தான். அவனைப் பார்த்த ப்ரொமேத்தியஸ் ஆணவத்துடன் சிரிக்க ஆரம்பித்தான்.

பின், இதற்குத் தான் நான் அப்போதே சொன்னேன்,சீரஸ். என்னுடைய திட்டத்தை நான் நடத்தியே தீருவேன். இன்னும் கன்வர்ஜென்ஸ் முடிய சில மணி நேரங்கள் இருக்கின்றன. அதற்குள் நான் செய்ய நினைத்தக் காரியத்தில் வெற்றி பெற்றுவிடுவேன்என்றான்.

வேண்டாம் ப்ரொமேத்தியஸ்! இந்த முடிவு மிகவும் ஆபத்தானது. நமது முன்னோர்களான எழுவர் செலினாவுக்கு வாக்கு கொடுத்துள்ளனர். நாம் அதை மீறக்கூடாது”, என்றான் சீரஸ்.

எனக்கு அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை. என் திட்டத்தை நிறைவேற்றி அந்த செலினாவையே என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன்”, என்றான் ப்ரொமேத்தியஸ்.

இதற்கிடையே அந்த வாகனம் வானத்தில் ஒளி வேகத்தில் செலுத்தப்பட்டது. அதனைக் கண்ட பிறகுதான் ப்ரொமேத்தியஸ் மினர்வாவை கவனித்தான். பின் கோபத்துடன்,

என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா, சீரஸ்? வீரர்களே நீங்கள் இவர்களைச் சிறை பிடியுங்கள்!! நான் அந்த வாகனத்தைத் தடுக்கின்றேன்!!”, என்று கூறிவிட்டு, அவன் வேகமாக தன் முழு சக்தியையும் பயன்படுத்திப் பறக்க ஆரம்பித்தான்.

சீரஸ், “மினர்வா என்ன நடந்தாலும் சரி, அவனிடம் குழந்தை கிடைக்கக் கூடாது. அதேபோல், நம் ஆன்மாவும் அவனிடம் சிக்கக் கூடாது. அதனால், நாம் இப்பொழுதே உயிர் துறக்க வேண்டும்” என்றான்.

பின்னர், இருவரும் காவலர்கள் தங்களை நோக்கி ஓடிவந்து கொண்டிருப்பதைப் பொருட்படுத்தாமல் செலினாவை வேண்டிக்கொண்டு உயிர் துறந்தனர்.

 அதற்குள் ப்ரொமேத்தியஸ், அந்த வாகனத்தை நெருங்கி இருந்தான். வாகனமும் இப்பொழுது இன்டர்ஸ்டெல்லர் பகுதிக்கு வந்திருந்தது. தன் சக்தியை ஒன்று திரட்டி குறிபார்த்து அந்த வாகனத்தைத் தாக்கினான் ப்ரொமேத்தியஸ். அவனது உடலிலிருந்து வந்த சிவப்பு நிற கதிர்கள் வாகனத்தை நெருங்குகையில் ஒரு தங்க நிற வஸ்து அதை இடைமறித்தது. பின் அந்த இடமே ஒளியால் நிரம்பிப் பார்ப்போர் கண்களைக் குருடாக்கும் அளவிற்கு மாறியது.

இது நடந்த அதிர்ச்சியிலிருந்து ப்ரொமேத்தியஸ் மீள்வதற்குள் அந்த வாகனம் பல்லாயிரக்கணக்கான மைல்கள் கடந்திருந்தது. தோல்வியுடன் கயா கிரகத்துக்குத் திரும்பிய ப்ரொமேத்தியஸ், பொசய்டனிடம், “முட்டாள்கள்! தங்கள் உயிரைப் பலி கொடுத்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றி விட்டனர். இப்போது அந்த சோல் பாக்ஸின் சாவி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. மறுபடியும், கன்வர்ஜென்ஸ் நடப்பதற்கு இன்னும் இருபத்தி நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆனால், இந்த ப்ரொமேத்தியஸ் பின் வாங்க மாட்டான். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி நான் எனது திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன். பொசய்டன்! உடனே அந்த வாகனம் எந்த கிரகத்துக்கு அனுப்பப்பட்டது என்று தேட தொடங்குங்கள்!! அதுமட்டுமின்றி நாளை மறுதினமே என்னுடைய முடிசூடும் விழாவிற்கு ஏற்பாடு செய்யுங்கள்!!என்று கட்டளையிட்டான்.

 பொசய்டனுக்கு மகிழ்ச்சியும் துக்கமும் ஒருசேர எழுந்தாலும், அதனை மறைத்துக் கொண்டு, ப்ரொமேத்தியஸின் உத்தரவை ஏற்பது போல வணங்கி விட்டு அங்கிருந்துச் சென்றார்.

 

கிரகம் : பூமி

 

 கண்ணனும் துர்காவும் அந்த இயற்கை எழில் மிகுந்த ரிவர்வ்யூ ரிசார்ட்டில் தங்கியிருந்தனர். துர்கா வழக்கம்போல, தனது மனதிற்குள்ளேயே யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். கண்ணனுக்கும் துர்காவுக்கும் திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. இருவரும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்கள்.

 ஆனால், மூன்று வருடமாகியும் அவர்களுக்கு குழந்தை இல்லாத வருத்தம் துர்காவைத் துளைத்து எடுத்தது. அவள் தனக்குள்ளேயே ஒரு மன அழுத்தத்தை உருவாக்கிக் கொண்டாள். அதனால் மருத்துவரின் பரிந்துரைப்படி, அவளை இங்கு அழைத்து வந்திருந்தான் கண்ணன். ஆனால், அவள் இங்கு வந்தும் அப்படியே அமர்ந்து இருப்பது ஆயாசமாக இருந்தது அவனுக்கு.

துர்கா, கடவுள் நமக்குக் கொடுக்க வேண்டிய நேரத்தில் எல்லாத்தையும் கொடுப்பார். அதனால, மனச வருத்திக்காத! உன்னோட மன அழுத்தத்தக் குறைக்கிறதுக்குத் தான் நாம இங்க வந்துருக்கோம். எல்லாத்தையும் மனசுக்குள்ளேயே வச்சுக் கிட்டு உன்ன நீயே கஷ்டப்படுத்திக்காத. எதுவா இருந்தாலும் வாய் விட்டுப் பேசு”, என்றான்.

அவள் கண்களிலிருந்து கண்ணீர் வந்ததே தவிர, அவள் வாய் திறந்து பேசவில்லை. அப்பொழுது அந்த இடத்தில் திடீரென்று பூமி அதிர்ந்தது போலிருந்தது. கண்ணனும் துர்காவும் சத்தம் வந்த இடத்தை நோக்கிச் சென்றனர். அந்த இடத்தில் புகை மூட்டமாக இருந்தது.

அருகே சென்று பார்த்தபோது, அங்கிருந்த ஒரு வாகனத்தில் பெட்டி போல ஒரு பொருள் இருந்தது. அதனுள்ளே வெள்ளை நிறத்தில் பெரிய முட்டை ஒன்று இருந்தது. திடீரென்று, ஒரு கிளி பறந்து வந்து அதன் மேலே அமர, அந்த வெள்ளை முட்டை ஒளிவெள்ளத்தைச் சிதறடித்தது. பின்பு, முன்னர் இருந்தது போலவே மாறிவிட்டது.

துர்கா அதன் அருகில் செல்ல நகர்ந்தபோது,“துர்கா, ஜாக்கிரத ! அதுக்கப் பக்கத்துல போகாத”, என்றான் கண்ணன் .

இல்லங்க, எனக்கு ஏதோ ஒரு குழந்தையோட சத்தம் கேட்குற மாதிரி இருக்கு”, என்று கூறிக்கொண்டே கண்ணன் தடுக்கும் முன் அவள் அந்த வெள்ளை முட்டையைத் தொட்டிருந்தாள்.

 

மீண்டும் ஒளிவெள்ளம் பரவியது. பின்னர் அங்கே ஒரு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. கண்ணனும் துர்காவும் கண்ணைத் திறந்து பார்த்த போது அங்கே ஒரு குழந்தையும் அதன் அருகே ஒரு கிளியும் இருந்தன. துர்கா வேகமாகச் சென்று குழந்தையைத் தூக்கிச் சமாதானப்படுத்தத் தொடங்கினாள். நடந்த அனைத்தையும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!