Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

79. M and V - வான் தழுவிடிலோ வெண்ணிலவே

வான் தழுவிடிலோ வெண்ணிலவே 11 (02)

விக்ரம் பார்த்தசாரதி 08

வெள்ளிக் கிழமை அந்த ஷேர்னியுடனான சந்திப்பை முடித்துக் கொண்டு, அன்றைய இரவுப் பொழுதில் ஊட்டியில்  இருந்தேன்.

அங்கே, எனது நண்பன் கெளதம் சித்தார்த்தின் விருந்தினர் மாளிகையில் அமர்ந்து இருந்தேன். அங்கே எப்போதும் இருக்கும் ஒன்றிரண்டு சமையல்காரர்களைத்  தவிர வேறே யாரும்  இல்லை.

வெளியில் கொட்டிக் கொண்டிருந்த மழை கூட என்னை எந்த வகையிலும் குளிர்விக்கவில்லை.



Advertisement

எத்தனை மறக்க முயன்றும் அந்த ஷேர்னி என்னை மனதளவில் துரத்திக் கொண்டே இருந்தாள்,

“மிஸ்டர் விக்ரம் திஸ் இஸ் நாட் ரைட். ஷ்யாம் என் ஃப்ரண்ட் என்பதால் நான் அவன் பக்கம் பேசவில்லை. யூ ஆர் ஆல்சோ மை  ஃபேமிலி ஃப்ரண்ட். ஷ்யாம் இதே போல சரியில்லாத டெர்ம்ஸ் வைத்திருந்தால் அவனுக்கும் எடுத்துச் சொல்லியிருப்பேன். உங்கள் பக்கம் நின்றிருப்பேன். யூ ஷுட் அன்டர்ஸ்டான்ட்”

ஏதோ ஒரு புது வித நியாயத்தை கற்பிக்கிறாள் எனக்கு. நானும் கூட ஒரு சில நொடிகள் அதை ஒப்புக் கொள்ளக் கூட முயன்று விட்டேனே.

Advertisement

அவளுக்கு ஷ்யாமை மட்டுமே தெரியும். எனக்கு அவன் தந்தையையே தெரியுமே. அவள் பேசுவது அவளது நியாயம். நான் பேசுவது என்னுடைய நியாயம்.

Advertisement

இப்போது ஒலித்தது எனது கைப்பேசி. அழைத்தது கெளதம்தான்.

“என்னடா டின்னர் சாப்பிட்டியா?” என்றான் கெளதம் அன்பு நிறைந்த குரலில்.

“இல்லைடா இனிமேதான்.” என்றேன் கொஞ்சம் ஆசுவாசம் நிறைந்த குரலில்.

Advertisement

“இவ்ளோ நேரம் சாப்பிடாம என்ன பண்றே? எங்கே இருக்கே நீ?”

“இங்கே பெட்ரூம் பால்கனியிலே உட்கார்ந்து இருக்கேன்” என்றேன் அங்கிருந்த மென் இருக்கையில் இன்னுமாக சாய்ந்து அமர்ந்தபடியே.

“பால்கனியிலேயா? குளிரலையா உனக்கு? சரி  அங்கேயே இரு. முருகனை டின்னர் எடுத்திட்டு வர சொல்றேன்.” என்றான்.

முருகன் அங்கே இருக்கும் சமையல்காரர்களில் ஒருவர்.

“ம்…அஞ்சு நிமிஷத்திலே வரேன்னு சொன்னார் கெளதம்” இது நான்.

“குட். அவர் கூட அவரோட குட்டி பொண்ணு ஒண்ணு இருக்குமே பேசினியா? வெரி கியூட்” என்றான் கெளதம் ரசனையாக. “அவளும் என் பொண்ணும் தோஸ்த்”

“ஆங்.. பார்த்தேன்” என்றேன். வரும்  போது அந்த சின்னக் குழந்தையை கவனித்துதான் இருந்தேன். நான்கு, ஐந்து  வயது இருக்கலாம்.

“பேசிப் பாரு. அவ பேரு ஆராதனா” கெளதம் சொல்ல சட்டென நிமிர்ந்து அமர்ந்தேன்.

“ஆராதனாவா?”

“ஆமாம். ஏன்? நான்தான் பேர் வெச்சேன் அவளுக்கு” எனது எண்ண ஓட்டங்கள் புரியாமல் சொன்னான் கெளதம் “சரி நீ சாப்பிடு நான் அப்புறம் கூப்பிடறேன்“ அழைப்பை துண்டித்தான் அவன்.

அடுத்த இரண்டாம் நிமிடம் கையில் உணவுகளுடன் உள்ளே வந்தார் முருகன். அவருடன் அந்த குட்டிப் பெண் ஆராதனா. இமைக்கவில்லை நான்.

அவள் அணிந்திருந்த அடர் நீல நிற உடையும், அதன் மேல் அவள் அணிந்திருந்த ஏப்ரானும், அவளது துறுதுறு கண்களும், குதிரை வால் கூந்தலும் என  முதல் பார்வையிலேயே உள்ளத்தை கொள்ளை கொண்டாள்.

எனது அருகில் வந்தார்கள் இருவரும். முருகன் அங்கே பால்கனியில் இருந்த சின்ன மேஜையில் எனக்கான உணவுகளை அடுக்கிக் கொண்டிருக்க நான் ஆராதனாவையே பார்த்திருந்தேன்.

“ஆராதனாதானே நீ?” எனது குரலில் நானே எதிர்பாராத இதம்.

“ஆமாம் நான் ஆராதனாதான். உங்க பேரு?” சட்டென கேட்டது அந்த வாண்டு.

எனது செவிகளுக்குள்  அந்த ஷேர்னி சொன்ன “ஆராதனா வாசுதேவன்” ஒலித்துக் கொண்டிருக்க, நான் சில நொடிகள் மௌனத்தை தத்தெடுக்க,

“உங்க பேர் என்ன?” என்று மறுபடியும் அதட்டியது அந்த குட்டி ஷேர்னி.

“ஹேய் பெரியவங்ககிட்டே என்ன மிரட்டுறே?” முருகன் இடையில் வர

“நான் மிரட்டல கேட்டேன். நான் பேர் சொன்னா அவங்களும் பேர் சொல்றதுதானே நியாயம்”

எனது முன்னால் சுடச் சுட காத்திருந்த பன்னீர் பட்டர் மசாலாவுடன் ஒரு விள்ளல் சப்பாத்தியை எடுத்து வாயில் போட்டுக் கொண்டவன் கொஞ்சம் சிரித்துத்தான் விட்டேன்.

ஆராதனாக்கள் எல்லாம் நியாயத்திற்கு பிறந்தவர்கள் போலும்.

“என் பேர் விக்ரம் பார்த்தசாரதி” வாயில் கரைந்து போன சப்பாத்தியின் ருசியில் கரைந்து  கொண்டே சொன்னேன் நான்.

“உங்களுக்கு ரெண்டு பேரா ?” இது அந்த சுட்டியின் சந்தேகம்.

“இல்ல இல்ல, பார்த்தசாரதி எங்க அப்பா பேரு. அதையும்  சேர்த்து சொன்னேன்” இன்னொரு விள்ளல் சப்பாத்தி எனது நாவில் கரைந்தது.

“ஓ அப்படி சொல்லணுமா? நான் அப்போ ஆராதனா முருகன் சொல்லவா அங்கிள்?”

“ஓ சொல்லலாமே” நான் சொல்ல அதற்குள்.

“அங்கிள் சொல்லாதே சர் சொல்லு” இடைப்பட்டார் முருகன்.

“ஏன் அங்கிள் சொல்லக் கூடாது? கெளதம் அங்கிளை கூட  நான் அப்படிதானே கூப்பிடுவேன்?” மறுபடியும் நியாயம்  பேசியது குட்டி ஷேர்னி.

“அப்புறம் விக்ரம், அங்கிள் நல்லா இருக்காங்களா” காலையில் கேட்டாளே அந்த பெரிய ஷேர்னி.

“அங்கிள்?”

“பார்த்தசாரதி அங்கிள்”

அவளுக்கு எனது தந்தையை தெரிந்து இருக்கிறது என்பதற்கு கூட நான் சரியான பதிலை கொடுக்கவில்லையே. இன்று முழுவதும் ஒரு வித இறுக்கத்திலேயே இருந்திருக்கிறேன் போலும்.

“நீங்க  சொல்லுங்க. நான் ஏன் அங்கிள் சொல்லக் கூடாது? பதில் சொல்லுங்க. உங்க வாயிலே என்ன கொழுக்கட்டையா?” கேட்டு விட்டது அந்த குட்டி ஆராதனா.

“ஹேய் நீ வாயை மூடிட்டு உள்ளே போ” முருகன் அந்த குழந்தையை அதட்ட

“இல்ல இருக்கட்டும். குழந்தைதானே” என்றேன் அந்த பிஞ்சின் கன்னம் தட்டி “வாயிலே கொழுக்கட்டை இல்லை சப்பாத்தி” என்றவன் “நீ என்னை எப்படி வேணும்னாலும் கூப்பிடு” என்றேன்.

“இல்ல சர். இந்த வயசிலே ரொம்ப வாய் பேசுது. ரெண்டு போட்டாதான் சரி வரும்” என முருகன் குழந்தையை வேகமாக தனது பக்கம் இழுக்க,

“முருகன்” என்றேன் அதட்டலாக “பாவம் குழந்தை. விடுங்க. நீங்க போங்க. நான் சாப்பிட்டுட்டு கூப்பிடறேன். அதுவரை ஆராதனா இங்கே இருக்கட்டும். நான் பேசிட்டு இருக்கேன்”

முருகன் குழந்தையை முறைத்து விட்டு நகர்ந்து விட ஆராதனாவை எனது அருகில் அமர்த்திக் கொண்டேன்.

‘ஆனாலும் அந்த  பெரிய ஷேர்னி எந்த படபடப்பும் இல்லாமல் அன்பும் நேர்த்தியும் கலந்து ஒரு கம்பீரத்துடன் நிற்கிறாளோ?’ திடீரென அவள் எனது மனதிற்குள் வந்து நின்றாள்.

எனது எண்ண ஓட்டங்களுக்கு உடனே அணை போட்டுக் கொண்டேன்.

‘இருக்கட்டும் அவள் எப்படியும் இருக்கட்டும்’

“நீ ஷேர்னியாக இருக்கலாம். ஆனால் புலியின் முன் சிங்கமும் அடிபணிந்து தான் போக வேண்டும்” மறுபடியும் மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.

இதோ இரண்டு நாட்கள் நேரம் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். அவள் எனக்கு சாதகமான முடிவை எடுத்துதான் ஆக வேண்டும்.

அதற்குள்ளாக எனக்கு வந்தது ஒரு அழைப்பு. எனது குழுவினர்களில் ஒருவன்தான் அழைத்திருந்தான். அவனது கவனக்குறைவால் செய்து  விட்ட ஒரு தவறை எனக்கு விளக்கி மன்னிப்புக் கேட்டுக்  கொண்டிருக்க

“ரிடிகுலஸ். எக்ஸ்ட்ரீம் ஸ்டுப்பிடிட்டி” என எனக்கு எதிரில் இருந்த மேஜையில் ஓங்கி அடித்தேன்  நான். சற்றே மிரண்டு போனது குழந்தை.

நான் பேசி முடிக்கும் வரை என்னையே மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தது  அது. நான் அழைப்பை துண்டித்தவுடன்

“கோவமா இருக்கீங்களா? என்றது மெலிதான குரலில்.

“கொஞ்சம்” என்று பார்வையை தட்டில் வைத்துக் கொண்டேன்.

“என் மேலேயா?” குழந்தையின் குரலிலும், முகத்திலும் மிரட்சி.

“அய்யோ இல்லைடா” என முகத்தில் புன்னகையை கொண்டு வந்து கொண்டேன்.“ அங்கே ஒரு அங்கிள். வேலையை தப்பு தப்பா செய்யறார்”

“அதுக்கு ஏன் நீங்க டேபிள் மேலே அடிச்சீங்க. உங்க கை வலிக்காதா?” சரேலென திரும்பி குழந்தையின் முகம் பார்த்தேன் நான்.

 “ஆமாம் வலிக்கும்தான்” என்றேன் மெதுவாக.

“இனிமே இப்படி எல்லாம் செய்யாதீங்க சரியா?”

ஐந்து  வயது இருக்குமா? அதற்குள் எத்தனை அழகான புரிதல்கள் இந்த பெண் குழந்தைகளுக்கு.

“சரி” தலை அசைத்தேன் நான்.

காலையில் நான் கோபப்பட்ட போது கூட அந்த ஷேர்னி இப்படிதான் உணர்ந்து இருப்பாளோ?

‘எனக்கு கோபம் உன் மேல் இல்லை ஆராதனா. அந்த ஷ்யாமின் தந்தை மீது என்று அவளிடம் விளக்கி இருக்க வேண்டுமோ?’

“உங்களுக்கு இன்னொரு சப்பாத்தி வைக்கவா?” கலைத்தது குட்டி ஆராதனா.

“சரி வை” என்றேன் புன்னகையுடன். பிஞ்சு கரங்களால் எனக்கு பரிமாறியது குழந்தை. ருசித்து சுவைத்தேன் நான்.

சாப்பிட்டு முடித்து விட்டு குழந்தையை எனது அருகில் அமர்த்திக் கொண்டேன்.

“உனக்கு குட்டி ஷேர்னின்னு பேர் வைக்கலாமா?” என்றேன் அதன் தலையை கோதியபடியே.

“அப்படின்னா?”

“அப்படின்னா….. ம்… சிங்கம்”

“அதெல்லாம் வேண்டாம். எனக்கு ஆராதனாவே போதும். ஆராதனா முருகன்” சொல்லும் போதே அதன் முகத்தில் பெருமிதம்.

அழகான சிரிப்புடன் மெலிதாக அணைத்துக் கொண்டேன் குழந்தையின் தோள்களை. அதன் பின் எனது டி ஷர்ட்டின் பேக்கட்டில் இருந்த ஒரு சாக்லேட்டை எடுத்து அதனிடம் கொடுத்தேன்.

“சாப்பிடு”

“எதுக்கு?” விழிகளை உருட்டியது ஆராதனா முருகன்.

“ம்? எனக்கு நீ ஹெல்ப் பண்ணியே அதுக்கு” என்றேன்

“இருங்க” என அந்த பெரிய சாக்லேட்டை இரண்டாக உடைத்தது அந்தப் பிஞ்சு. அதில் பெரிய பகுதியை என்னிடம் கொடுத்து விட்டு சின்னப் பகுதியை தான் எடுத்துக் கொண்டது.

“எனக்கு வேண்டாம் நீ சாப்பிடு” என்று அதையும் குழந்தையிடமே கொடுத்தேன்.

“இல்ல எனக்கு இது போதும்”

“சாப்பிடு. உங்க அப்பா வேறே எனக்காக உன்னை திட்டினார் தானே. அதனாலே முழுசும் நீயே எடுத்துக்கோ” என்றேன் புன்னகையுடன்.

“இல்ல இல்ல. அப்பா திட்டினது வேறே விஷயம். இது உங்க சாக்லேட்தானே. அதனாலே உங்களுக்கு பெரிய பங்கு. ஹெல்ப் பண்ண எனக்கு சின்ன பங்கு. தேங்க் யூ அங்கிள். பை” என ஓடி விட்டாள் ஆராதனா முருகன்.

இந்த சின்னப் பெண்ணின் மூலமே ஏதோ ஒரு கீதோ உபதேசத்தை கண்டு விட்ட உணர்வு எனக்கு. அது சென்ற திசையையே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தேன்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

என எனக்குள்ளே சிரித்தான்   எனது வள்ளுவன்.

மறுநாள் காலை உணவிற்கு பிறகு, வழக்கமான எங்களது அலுவலக அழைப்புகள் முடிந்த பிறகு, வந்தது ஷர்மாவின் அழைப்பு.

திங்கட்கிழமை எனது அலுவலகத்தில் நடக்கவிருக்கும் அந்த மீட்டிங் பற்றிய சில விவரங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டிருந்தார் அவர்.

மொத்தமாக அங்கே நடக்கப் போவது எல்லாவற்றையும் சொல்லி விட முடியாது என்றாலும் ஓரளவுக்கு நிகழ்வுகளின் ஓட்டம் எப்படி இருக்கும் என்பதை என்னால் கணிக்க முடிந்தது.

எப்படியும் அந்த பேச்சு வார்த்தை மற்றும் அந்த டீல் எனக்கு சாதகமாகத்தான் முடியும் என்பது புரிய ஆரம்பித்து இருந்தது எனக்கு.

“குட் மிஸ்டர் ஷர்மா. எவ்ரிதிங் சவுண்ட்ஸ் குட்” (எல்லாமே சரியாக இருக்கிறது) என்று நான் சொன்ன நேரத்தில்,

“எஸ் மிஸ்டர் விக்ரம். எவ்ரிதிங் இஸ் குட் பட் ஆரா..” என்று துவங்கியவர் சட்டென நிறுத்திக் கொண்டார்.

“க்யூன்? க்யா ஹுவா ஷேர்னி கோ?” (ஏன் ஷேர்னிக்கு  என்னவாயிற்று) என்றேன் நான் சாதாரண குரலில்.

“நத்திங் நத்திங் விக்ரம். லெட்ஸ் மீட் ஆன்  மன்டே”  என முடித்துக் கொண்டார் ஷர்மா.

பேசி முடித்து விட்டு நான் அமர்ந்து இருந்த இருக்கையை விட்டு எழுந்து, அந்தப் பெரிய கண்ணாடி ஜன்னலின்   அருகில் சென்று, திரை  சீலைகளை மெல்ல விலக்கினேன்.

அந்தக் காலை நேரத்திலும் அப்படி ஒன்றும் வெயிலின் தாக்கம் இல்லை அங்கே.

கண்ணுக்கெட்டும் தூரத்தில் தோட்டத்தை ஒட்டி இருந்த ஒரு சின்ன மைதானத்தில், ஒரு சின்ன இரு சக்கர சைக்கிளை வைத்துக் கொண்டு அதை ஓட்ட முயற்சி செய்து கொண்டிருந்தாள் குட்டி ஆராதனா.

அவள் வயதிற்கு துணை சக்கரங்கள் இல்லாத சைக்கிளை ஓட்டுவது சற்றே கடினம் என்று எனக்குத் தோன்றியது.

அவளைப் பார்த்துக் கொண்டே திங்கட்கிழமை திட்டங்களை யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் இரண்டு வருடங்களில் ஷ்யாம் தனது தொழிலில் ஜெயித்து விடுவான் என்பது ஷேர்னியின் நம்பிக்கை அவன் தோற்று விடுவான் என்பது எனது கணக்கு.

இரண்டு வருடங்களில்  அவன்  ஜெயித்து விட்டால் அவனது  கை ஓங்கும், அவன் தோற்றுவிட்டால் அவனது பங்குகள் எனது வசம் வரும்.

மிக அழகாக எல்லாவற்றையும் கையாண்டு விட்டாள் ஆராதனா. என்னுடைய ஷரத்துக்களையும் மீறாமல், அவளுக்கு தேவையானதையும் அழகாக சேர்த்துக் கொண்டு அவளைக் கைகுலுக்கி பாராட்ட வேண்டும் போலக் கூடத் தோன்றியது எனக்கு.

 அதே நேரத்தில் “பட் ஆரா..” ஷர்மாவின் அந்த  வார்த்தைகள் என்னை அலைகழித்துக் கொண்டே இருந்தன.

என்னவாயிற்று ஆராவுக்கு யோசித்துக் கொண்டே ஜன்னலின் வழி பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஜன்னலின் வெளியே அந்த சைக்கிளை ஓட்ட முடியாமல் தடுமாறி தடுமாறி விழுந்து கொண்டிருந்தாள் குட்டி ஆராதனா.

அப்படி சட்டென்று புன்னகைத்து விடாத என்னையே புன்னகைக்க வைக்கிறாள் இந்த குட்டி ஆராதனா. அவளை நோக்கி நடந்தேன் நான்.

“ஆராதனா முருகன். என்ன பண்றீங்க?” தனது அருகே ஒலித்த  எனது கணீர் குரலில் திடுக்கிட்டு நின்று, எனது பக்கம் திரும்பி. பின்னர் புன்னகைத்தது  குழந்தை.

“அங்கிள், சைக்கிள்  ஓட்டறேன்” இன்னும் கற்றுக் கொள்ளவே துவங்கவில்லை எனும் போதிலும் அந்தக் குழந்தையின் குரலில் அத்தனை பெருமிதமும் தன்னம்பிக்கையும்.

“நீ கீழே விழுந்திட்டே இருக்கியே. நான் ஹெல்ப் பண்ணட்டுமா?” என்றேன் அதன் முகத்தை ரசித்தபடியே.

என்னதான் சைக்கிளின் பின்னால் என்னால் ஓட முடியாது என்றாலும், குழந்தையின் வேகத்திற்கு சமாளித்து விடலாம் என்று தோன்றியது.

“நானே ட்ரை பண்றேன் அங்கிள். அப்பா அப்படிதான் சொன்னாங்க. நீயேதான்  ட்ரை பண்ணி கத்துக்கணும்னு” தெளிவாக சொன்னாள் ஆராதனா.

“ஏன் உங்க டீச்சர் சொல்லிக் கொடுத்தா நீ கத்துக்க மாட்டியா?” கேள்வியாக பார்த்தேன் குழந்தையை.

“கத்துப்பேன்தான். இருந்தாலும்…”

“என்ன இருந்தாலும்?”

“நான் கொஞ்சம் ட்ரை பண்றேனே” அந்த சின்னஞ்சிறு குழந்தையின் ஆர்வத்தை கலைக்க விரும்பாமல் சரி என தலையசைத்து விட்டு, அங்கே இருந்த ஒரு சின்ன பெஞ்சின் மீது அமர்ந்தேன்.

நிமிடங்கள் கடக்க கீழே விழுந்து எழுந்து எப்படியோ போராடி கடைசியில் அந்த சைக்கிளை ஒட்டியும் விட்டாள் ஆராதனா.

படபடவென கைத்தட்டி விட்டேன் நான். வாழ்கையில் இதுவரை யாரையுமே வியந்து பார்க்காத நான் முதல் முறையாக அந்த குட்டி தேவதையை வியந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒரு பெரிய சாதனையை அழகாக முடித்து விட்டு என்னோடு  கைத்தட்டி சிரித்தது அந்த இளம் பிஞ்சு.

‘ஆராதனாக்கள் பிரமிக்க வைக்கவே பிறக்கிறார்களோ?’ சிறிதாக ஒரு எண்ணக் கோடு எனக்குள் ஓடாமல் இல்லை.

“தழல் வீரத்தில்

குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?”

எங்கிருந்தோ சொல்லிக் கொண்டிருந்தான் என் பாரதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!