Skip to content
Post Views: 2,701
*14*
குழலி வீட்டினில் மதிய உணவு முடித்து ஓய்வாக இருந்தனர் முகிலன் பெற்றோர். மாலை அருகிலிருக்கும் மண்டபத்தில் வரவேற்பு. வெளியூர் சொந்தங்களுக்கு தங்கும் விடுதியில் அறை எடுத்துக் கொடுத்திருந்தனர். முகிலன் குழலி வீட்டினில் இருக்க அவன் பெற்றோரும் சம்பந்தி விருந்துக்காக மதிய உணவிற்கு வந்திருந்தனர். உணவு முடித்து அறைக்கு செல்லும் முன் மகனை தனியாக பிடித்த மாரியோ, “நீயும் எங்களோடவே ஹோட்டல்ல வந்து தங்கு.” என்று கூப்பிட்டுப் பார்த்தார்.
“நான் உங்களையே இங்க இருக்க சொல்றேன் நீங்கதான் வேண்டாம்னு கிளம்புறீங்க. இதுல என்னையும் கூப்பிட்டா?”
“பொண்ணு எடுத்த வீட்ல அப்படியெல்லாம் இளக்கமா இருந்துடக்கூடாது. சல்லிக்காசுக்கு மதிக்க மாட்டாங்க. கொஞ்சம் முறுக்குனா தான் அடங்கி இருப்பாங்க.” என்றவரை அதிருப்தியாக பார்த்தான் முகிலன்.
Advertisement
“ஏன்ம்மா இப்படி? கல்யாணம் ஆகிடுச்சு. இங்க இருக்காம எப்படி நான் அங்க வர?”
“உன் மாமான்களை பாத்தது இல்லை. மாப்பிள்ளைன்னு என்ன முறுக்கு முறுக்குவாங்க அப்படியே வேண்டாம். அதுல பாதியாவது நீ இருக்கணும்ல அதை விட்டுட்டு ஒரே பொம்பளைங்களா இருக்குற வீட்ல இருப்பேங்குற. உன் அப்பா மாதிரி கூறில்லாம போச்சா?” என்று அங்கேயே குரல் உயர்த்த, திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டான் முகிலன்.
“சும்மான்னு இரும்மா. நம்மளோட மரியாதைக்கு என்ன குறை வச்சாங்க இங்க? எல்லாம் பாத்து பாத்து செய்றாங்க.”
Advertisement
“இப்போவே மாமியார் வீட்டுக்கு வக்காலத்தா. ஆரம்பத்துல எல்லாம் அப்படித்தான் கவனிப்பாங்க. நீ கொஞ்சம் இடம் கொடுத்தா தலையில உக்காந்துடுவாங்க.” என்று மகனுக்கு தூபம் போட்டார். தான் என்ன சொன்னாலும் இவர் புரிந்துகொள்ளப் போவதில்லை என்று புரிந்துவிட்டது முகிலனுக்கு.
Advertisement
“நீ ரெஸ்ட் எடு நான் பாத்துக்குறேன். மேக்கப் போட இன்னும் கொஞ்ச நேரத்துல ஆளுங்க வந்துருவாங்க. நான் அதுக்குள்ள கொஞ்சம் தூங்கி எழனும்.”
“அதான் சொல்றேன். உனக்கு இங்க என்ன வேலை? அவ மேக்கப் போட்டு ரெடியாகட்டும். நீ அங்க வந்து தூங்கு.” என்று பிடிவாதமாக நின்றார்.
“ம்மா எனக்கும் மேக்கப்புக்கு சொல்லி இருக்கு.”
Advertisement
“உனக்கென்ன குறைச்சல்னு மேக்கப்பு? யார் உன் பொண்டாட்டி சொன்னாளாகும்?”
“உனக்கு கூட போடலாம்னு தான் கேட்டா நாந்தான் வேணாம்னு சொன்னேன்.”
“என்னது எனக்கா?” அதிர்ச்சியில் வாய் பிளந்துவிட்டார்.
“ம்ம், அவ தங்கச்சி அம்மா எல்லாருக்கும் சொல்லியிருக்காங்க.”
“அவ அம்மாக்கு எதுக்கு?” முகம் சுழித்தார் மாரி.
“இங்க எல்லாரும் போட்டுப்பாங்க ம்மா. இவங்க வீட்ல கடைசி கல்யாணம் நல்லா செய்யணும்னு செய்யுறாங்க.” என்று விளக்கம் கொடுத்தான்.
“இங்க என்ன பண்றீங்க அம்மாவும் புள்ளையும்?” இருவரும் காணும் என்றதுமே என்ன பஞ்சாயத்தோ என்று தேடிக்கொண்டு வந்துவிட்டார் கந்தசாமி.
“இவனையும் நம்மளோட கூப்பிட்டேன். வரமாட்டேங்குறான்.” என்று மாரி முந்திக்கொண்டு சொல்ல,
“வீட்டு மாப்பிள்ளை வீட்ல தங்காம வெளில தங்குனா நல்லாயிருக்குமா? அவன் இங்கேயே இருக்கட்டும். நாம போவும். பொறுமையா ஆறு மணிக்கு மேல வந்தா போதும்னு மருமக சொல்லுச்சு.” என்று முடித்துக்கொண்டார் கந்தசாமி.
இவர்கள் மூவரும் வெளியே நின்று பேசுவதை கவனித்த பிரபா மகளை அழைத்து பார்க்கச் சொன்னார்.
“ஏதோ சீரியஸா பேசுறாங்க. நான் என்னனு போய் மூக்கை நுழைச்சி கேக்க முடியும்?” என்று தயங்கி நின்றாள் குழலி.
“அவங்க உன் குடும்பம்டி. நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க நீதான் கவனிக்கணும். இன்னைக்கு மறுவீடுங்குறதால நானும் உன்னை எதுவும் சொல்லல. சந்தியா பாத்துக்கிட்டா எல்லாத்தையும். இனி நீதான் கவனிக்கணும். போய் ஏதாவது வேணுமான்னு கேளு.”
“இல்லை அத்தைக்கு என் மேல ஏதோ வருத்தம் இருக்கு. நான் போய் கேட்டாலும் எதுவும் சொல்ல மாட்டாங்க.”
“இருக்கட்டுமே. நீ போய் பேசு, இப்படி தள்ளி இருந்தா அவங்களுக்கும் உன்னை புரியாதுல்ல.” என்று பிரபா உந்த, தயக்கத்துடன் தான் சென்றாள்.
“உள்ள வாங்க அத்தை, வெயிலா இருக்கு.”
“காடு மேடுனு அலைஞ்ச உடம்புக்கு இதெல்லாம் ஒரு வெயிலா?” என்று நொடித்தவர் கணவரைப் பார்க்க,
“நாங்க போய் செத்த குறுக்கு சாய்ச்சிட்டு வரோம்’மா.”
“அங்க எதுவும் வசதி பத்தலைனா சொல்லுங்க மாமா. சரி பண்ணிடலாம். இங்கேயே தங்கலாம்தான் ஆனா ஆளுங்க யாராவது வந்து போயிட்டே இருப்பாங்க சத்தமா இருக்கும்.” என்று அவள் பணிந்துவிட, மாமனாருடன் சுமூகப் பேச்சுதான்.
“காலையிலேயே ரிஷி தம்பி வந்து பாத்து எல்லாம் செஞ்சு கொடுத்துச்சுமா. இப்போவும் சொல்லிட்டுதான் மண்டபத்துக்கு கிளம்புச்சு. நாங்க பாத்துக்குறோம்.”
சரியென்றவள், “கூட போய்ட்டு வாங்க.” என்றாள் கணவனைப் பார்த்து.
‘இவ என்ன என் புள்ளையை வேல வாங்குறது?’ என்று கடுப்பான மாரியம்மாள், “இந்த வெயில்ல அலைஞ்சா முகம் கருத்துப்போய் என்னமோ போல இருக்க மாட்டானா? போட்டோல நீ மட்டும் நல்லா இருந்தா போதுமா?”
“உனக்கு ஏதாவது சொல்லணும்.” என்று மனைவியை மெல்லிய குரலில் கடிந்தவர் வேண்டாமென்றுவிட்டு மனைவியை முறைக்க, வேறு வழியின்றி கிளம்பினார். நடந்து செல்லும் தூரத்தில் தான் விடுதி.
புதுமணத்தம்பதிகள் தனித்து விடப்பட கணவனைப் பார்த்தவள், “உங்களுக்கு இங்க ஓகேதான?”
அவன் பார்வை அவள் வீட்டினில் படிந்தது. தனிவீடு என்பதால் சுற்றிலும் இடமிருந்தது. முன்வாசலில் நிறைய செடிகள் வைத்திருந்தனர். அதை தவிர்த்து மூன்று இருசக்கர வாகனம் நிறுத்தலாம். இரண்டு படுக்கையறை மற்றும் பெரிய ஹால் என்று தாங்கள் இப்போது இருக்கும் வீட்டை ஒப்பிட்டால் அது இதில் பாதிதான் இருக்கும். சென்னையில் இத்தனை பெரிய வீட்டிற்கு எவ்வளவு வாடகை கொடுக்கிறாள் இவள் என்று பார்த்தான்.
அவன் எண்ணவோட்டம் புரியாதவள் புருவம் சுருக்கினாள், “என்னங்க?”
“இந்த வீட்டுக்கு எவ்வளவு வாடகை கொடுக்குற?”
“இருபத்தஞ்சிங்க. சந்தியா கல்யாணத்துக்கு அப்புறம் தான் இங்க வந்தோம். அவங்க ரெண்டு பேரும் வந்தா வசதியா இருக்கணுமே.” என்று அவள் இலகுவாய் சொல்ல, அதிர்ந்துவிட்டான் முகிலன். அவன் சம்பளத்தின் முக்கால்வாசியை தாண்டி இருக்கிறதே.
எச்சில் கூட்டி விழுங்கியவன் இவளது சம்பளத்தை முன்னரே பார்க்காமல் விட்டோமே என்று நொந்துகொண்டு அவளிடம் கேட்கலாமா வேண்டாமா என்ற யோசனைக்கு சென்றுவிட்டான். அவனை விட அதிகம் வாங்குகிறாள் என்று தெரியும், அவன் அம்மா கூட இவள் தன்னை விட மூன்று மடங்கு அதிகம் வாங்குவதாய் சொன்னது நினைவுக்கு வர வேகமாக தன் சம்பளத்தை மூன்றால் பெருகினான். விடை ஆறு இலக்கத்தை நெருங்கவும் மானசீகமா நெஞ்சில் கைவைத்துவிட்டான். முன்பே இதனை எப்படி கவனிக்காமல் விட்டோம் என்று காலதாமதமான யோசனை.
“என்னங்க?” அவன் தோள் பற்றி உலுக்க, அவன் பதில் கொடுக்கும் முன் வந்துவிட்டாள் வந்தனா.
“சன்ரைஸ் ரொமேன்ஸ் முடிச்சாச்சுன்னு இப்போ டே-டைம் ரொமேன்ஸா. அடுத்து சன்செட் தான?” குறும்பாய் கண்சிமிட்டி கேட்க, கூச்சத்துடனான புன்னகை உதிர்த்த குழலி தங்கையை செல்லமாக அடித்தாள்.
“மாமா பேஸ் பேக் போடலாம் வாங்க.” என்று அவனிடம் திரும்பியவள், “உங்க சகலை ஸ்பெஷலா உங்களுக்கு ரெடி பண்ணிட்டு இருக்காங்க.” என்று சொன்னதும் சட்டென்று யாரை சொல்கிறாள் என்று புரியவில்லை அவனுக்கு.
“அவ ஹஸ்பண்ட் அமுதனை சொல்றா.” என்று குழலி விளக்கினாள்.
“இதெல்லாம் நியாயமே இல்லை சொல்லிட்டேன். உங்க சின்ன மச்சினியோட புருஷனை உங்களுக்கு தெரியல. அவ்வளவு தான்ல அப்போ?”
“சட்டுனு சகலைங்கவும் புரியல. பேஸ் பேக் தான போடணும் போட்டுறலாம்.” மெலிதாக சிரித்து வீட்டினுள் நுழைய, பெண்கள் இருவரும் தொடர்ந்தனர்.
“செம்ம ஆளுதான் மாமா. நல்லா சமாளிக்குறாரு.” என்று சொல்லிக்கொண்டே வந்தனா நுழைய, அமுதன் ஒரு கிண்ணத்துடன் சமையலறையில் இருந்து வந்தான்.
“ஸ்பெஷல் எடிஷனா?” என்று குழலியும் அவனிடம் இலகுவாக கேட்க,
“ஆமா நீங்க கேர்ள்ஸ் எல்லாம் மேக்கப் போடுறீங்க. பக்கத்துல நாங்க சுமாராவாவது தெரிய வேணாம். அதான் இது பாய்ஸ் பேக்.” என்று கிண்ணத்தை தூக்கிக் காட்டியவன் முகிலனை அமரச் சொல்ல,
“நானே போட்டுக்குறேன்.” என்று முகிலன் சங்கடப்பட்டான்.
“அட எதுக்கு இந்த பார்மாலிட்டீஸ்? இவங்களை மேட்ச் பண்ணனும்னா நாம இப்படி ஏதாவது பண்ணாதான் உண்டு.” என்று நட்புக்கரம் நீட்டியவனை பற்றிக்கொண்டான் முகிலன்.
“ரிஷியும் சந்தியாவும் ஒரே ஸ்கூல், லவ் மேரேஜ் ஓகே. நீங்க எப்படி?”
“ஒரு கல்யாணத்துல இவளை பாத்து புடிச்சி போச்சு. லவ் சொல்லி கரெக்ட் பண்ணி அப்புறம் கல்யாணத்துக்கு ஓகே வாங்கி ம்ம் அதெல்லாம் செட் ஆகாது நமக்குன்னு ரிவர்ஸ் ஆடர்ல பண்ணிட்டேன்.” என்று சொல்லி சிரித்தான் அமுதன்.
“சரி இந்த பாய்ஸ் பேக்ல ரிஷி மாமாவுக்கு பங்கு உண்டா?” வந்தனா கேள்வியாய் புருவம் உயர்த்த,
“அவரையெல்லாம் ஒரு அஞ்சு நிமிஷம் புடிச்சி உக்கார வைக்க முடியுமா?” ஏன்மா ஏன் என்று வடிவேல் பாணியில் பார்த்து வைத்தான் அமுதன்.
“அப்போ அவர் மட்டும் தக்காளி தொக்கா, இருங்க சந்தியாகிட்ட சொல்றேன்.” என்று வந்தனா மிரட்ட,
“நானும் சொல்லுவேன்.” என்ற குட்டிக்குரல் கேட்டது. அப்போதுதான் அவர்கள் அருகில் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்த ஆத்யா கண்ணில்பட்டாள்.
ஒற்றைக் கையால் அவளை தூக்கிக்கொண்ட வந்தனா, “என்னடி சொல்லுவ?”
“பாய்ஸ் பேக்ல அப்பா இல்லைனு சொல்லுவேன்.” என்று தெளிவாக சொன்னது சிட்டு.
ஏம்மா ஏன்? என்று அமுதன் மீண்டும் முழிக்க, “அடியே தம்மாத்துண்டு இருந்துகிட்டு எல்லாத்தையும் காதுல வாங்கியிருக்கியா நீ.” என்று வந்தனா அவளை அழுத்திப் பிடித்து கொஞ்சினாள். மற்ற மூவரும் அதனை ரசனையுடன் பார்க்க, ரிஷி உள்ளே வந்தான்.
“என்ன இது கிண்ணத்துல?” என்றுதான் அமரும் முன்னமே அமுதன் கையில் இருந்ததை எட்டிப்பார்த்தான்.
“பேஸ் பேக். போட்டுக்கிறீங்களா?” என்று முகிலன் கேட்க,
“ஐய கையில கிடைக்குற சாப்புடுற ஐட்டம்ஸ் எல்லாத்தையும் ஒண்ணா போட்டு கலக்குவாங்களே அதுதான? இதெல்லாம் நமக்கு ஒத்துவராது.” என்று அவன் முகம் போன போக்கில் வந்தனா நமட்டு சிரிப்புடன்,
“இதை அப்படியே அடுப்புல ஏத்தி கொதிக்க வச்சு கொடுத்தா சாப்பிடுவீங்களா மாமா?”
“என்னை ஆளவிட்டுரு. இதோ இந்த ரெண்டு பேரு எல்லாத்துக்கும் சரிவருவாங்க அவங்களுக்கே கூழு காய்ச்சி ஊத்து.” என்றவன், “சந்தியா ஒரு காபி கொடு.” என்று மனைவியை தேடி சென்றுவிட்டான்.
“கோர்த்துவிட்டு போறதை பாரு.” என்று முணுமுணுத்த அமுதன் முகிலன் முகத்திற்கு பேஸ்பேக் போட்டுவிட, மனம் நிறைந்தது குழலிக்கு.
“நீ வந்து தூங்கு க்கா, வா” என்று அவளை அழைத்துச் சென்றுவிட்டாள் வந்தனா.
மாப்பிள்ளை கோர்ட் சூட் சகிதமும் மணமகள் லெஹங்காவும் அணிந்து பாந்தமான ஒப்பனையில் ஒருவருக்கு ஒருவர் பொருத்தமாய் நின்றனர். முதல் வரிசையில் அமர்ந்து மகனின் கம்பீரத்தை ரசித்த மாரியம்மாள் அங்குமிங்கும் உலாத்திக் கொண்டிருந்த குழலியின் தங்கைகளை கவனித்துக்கொண்டிருந்தார்.
‘என்னமோ இவங்களுக்கே கல்யாணம் மாதிரி மினுக்கிட்டு இருக்காளுங்க. அவங்க வீட்ல எல்லாம் ஒன்னும் சொல்லமாட்டாங்களா?’ என்று நினைத்தவர் தன் நினைப்பை தன்னுடனே வைத்துக்கொண்டார்.
‘இந்த அம்மாவுக்கும் மேக்கப் போடுறாங்கனு முகிலு சொன்னான். பாத்தா பவுடர் போட்ட மாதிரிதான் இருக்கு.’ அடுத்து விருந்தினர்களை வரவேற்றுக் கொண்டிருந்த பிரபாவிடம் சென்றது அவர் பார்வை.
அவர் நினைப்பது போல் பெரிதான ஒப்பனையின்றி பெயருக்கு டச்சப் தான் செய்திருந்திருந்தனர் பிரபாவுக்கு. மகள்கள் எவ்வளவோ சொல்லியும் எளிமையாக இருக்க வேண்டும் என்று பிடிவாதமாய் நின்றுவிட்டார்.
“என்ன அண்ணி மவன் மருமவளை பார்த்து பூரிச்சி போயிருக்குற மாதிரி இருக்கு.” என்று வந்தார் கந்தசாமியின் மூத்த தங்கை. திருமணத்தின் போது உரிமையெடுத்து வேலையில் மூழ்கியிருந்தவர் இப்போது ஓய்வு கிடைக்கவும் பேச வந்துவிட்டார்.
“என் புள்ளை என் மருமவ நான் பாக்குறேன். உனக்கு என்ன வந்துச்சு?” வெடுக்கென்று தான் வந்தது பேச்சு. பின்னே சாதாரண பேச்சுக்கும் புரணி பேச்சுக்கும் உள்ள வித்தியாசம் அறியாதவரா அவர்.
“பாருங்க பாருங்க. நாளைக்கு நம்ம முகிலு மொத்தமா அங்க போறதையும் பாருங்க.”
“உனக்கென்ன வேணும் இப்போ?” என்று மாரி முகம் காட்ட,
“சாப்பிட போறேன். தனியா இருக்கீங்களே கூட்டிட்டு போலாம்னு வந்தேன்.”
“அதை வந்தவுடனேயே சொன்னா ஆவாதா?” என்று கேட்டவர் கண்கள் கணவரைத் தேடி அலைந்தது. ஆனால் கண்டுகொண்டு வந்தது என்னவோ ரிஷிதான்.
“சாப்பிடலாம் வாங்க அத்தை. அம்மாவும் சாப்பிடத்தான் போறாங்க.” என்று தன் அன்னையை அவருடன் சேர்த்துவிட்டவன் மனைவியை தேட, அவள் கண்ணில் படவில்லை. வந்தனா தான் தென்பட்டாள்.
கைகாட்டி அவளை அருகில் அழைத்தவன், “போட்டோ அப்புறம் எடுக்க வேண்டியதுதான… உன் அக்கா மாமியார் தனியா உக்காந்திருக்காங்க, கவனிக்க மாட்டியா நீ?”
“வந்ததும் வெல்கம் ட்ரிங்க்ஸ் கொடுத்து என்ன வேணும்னு எல்லாம் பாத்துட்டேன்.” அவன் கடிந்ததில் முகம் தூக்கினாள் வந்தனா.
“கவனிக்குறதுனா வயிறை பாத்தா மட்டும் போதுமா? தனியா உக்காந்திருக்குறவங்களை கலைக்கவே கிளம்பி வர்றாங்க அவங்க சொந்தக்காரங்க. அதை தடுக்கலாம்ல.”
“ப்ச் எனக்கென்ன தெரியும். அவங்க பேசிட்டுதான் இருந்தாங்க.”
“முகிலன் அப்பாவை தவிர எல்லாம் ஒரு டைப். சும்மான்னு இருக்க மாட்டாங்க. அப்புறம் உன் அக்காவுக்குதான் மண்டை குடைச்சல் பாத்துக்கோ.”
“அப்படி இருக்குற குடும்பத்துல எதுக்கு அக்காவை கோர்த்து விட்டீங்க?” என சற்று காட்டமாகவே கேட்டாள் வந்தனா.
“எதுக்குன்னு மேடையை பாரு புரியும்.” என்றவன் நகர்ந்துவிட்டான்.
வந்தனா மேடையைப் பார்க்க, கூட்டம் குறைந்து இருவர் மட்டும் அமர்ந்து தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். குழலி முகத்தில் அத்தனை மலர்ச்சி. அது ஒப்பனையினால் வந்தது அல்ல என்று உடன்வளர்ந்தவளுக்கு புரிந்தது. படித்து முடித்த கையோடு குடும்ப பாரத்தை தாங்கி தங்களை படிக்க வைத்து, திருமணம் முடித்து, பேறுகாலம் பார்த்து, தேவையில்லா பேச்சுக்கள் வாங்கி ஒருவனிடம் ஏமாறப்போய் கடைசியில் தப்பித்து என்று மேடுபள்ளமான வாழ்க்கையில் தனக்கென்று அவள் செய்துகொண்டது வெகுசிலதே. திருமணத்தில் கூட பெரிதாக நாட்டமின்றி குடும்பத்தை தாங்க தோள் கொடுக்கும் ஒருவனை தேடிக்கொண்டிருந்தவளுக்கு அகமுகிலன் வெளிச்சம் கொடுப்பவனாய் தெரிந்தான். தன் அக்காவிற்குள் இருக்கும் உணர்வுகளை தட்டியெழுப்பி அவள் அறிந்திரா உலகத்திற்கு இழுத்துச் செல்ல அவனால் மட்டும்தான் முடிகிறது என்பதில் பரமதிருப்தி.
“இத்தனை நாள் எங்க சார் இருந்தீங்க? உங்களை கண்டுபிடிக்குறதுக்குள்ள நான் பட்ட பாடு இருக்கே…” என்று ராஷ்மி மேடை ஏறிய கையோடு முகிலனிடம் சரளமாக பேசினாள்.
அவன் நெற்றி சுருக்க, “உங்க ஆளை காவந்து பண்ணியே என் வாழ்க்கை முடிஞ்சிருக்கும், நல்ல வேலை காப்பாத்திட்டீங்க. வாழ்த்துக்கள்.” என்று பரிசை நீட்டினாள்.
குழலி செல்லமாய் தோழியை முறைக்க, சின்ன சிரிப்போடு பரிசை பெற்றுக்கொண்டு புகைப்படத்திற்கு நின்றான்.
“உன் பிரெண்ட் சொல்றதா பாத்தா ஆபீஸ்ல உனக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்குமோ?” ராஷ்மி நகர்ந்ததும் மனைவியின் புறம் சரிந்தான்.
இப்போழுது போய் எப்படி கணேஷ் பற்றி சொல்வது என்று யோசித்தவளோ, “அவ சும்மா கிண்டல் பண்றா.” என்று சமாளித்து வைத்தாள்.
கூட்டம் குறைந்து சொந்தங்கள் மட்டும் ஆங்காங்கே அமர்ந்து அரட்டையில் இறங்க, மேடையில் மணமக்களை படுத்தி எடுத்துக்கொண்டிருந்தாள் புகைப்படக்காரர்கள்.
“ப்ரோ போதுமே…” என்று முகிலன் முழி பிதுங்கி நின்றான்.
“ஆல்பம்ல நல்லா இருக்கும் ப்ரோ. மேடம் நெத்தியோட நெத்தி முட்டி அவங்கள லைட்டா ஹக் பண்ணுங்க.” என்று அவனை விதவிதமாக காதல் செய்ய வைத்துக்கொண்டிருந்தார்கள்.
நெஞ்சு முட்ட கூச்சமிருந்தாலும் அவன் தோள் சாய்ந்து இடை சுற்றி கைபோட்டு அவனை நிமிர்ந்து பார்க்கையில் எத்தனை எத்தனை நட்சத்திரங்கள் அவள் விழிகளில். வெற்று வானில் மினுக்கும் விண்மீன்கள் தான் இரவின் இருளை அழகாக்குகின்றன. இங்கும் வெண்மைக் கடலைச் சந்தித்த வானமாய் அவள் கருமணிகள் வெள்ளை படலத்தை ஆட்கொள்ள நட்சத்திரமாய் அவன் பிம்பங்கள் அதனை நிறைத்தது.
புகைப்படத்திற்காக விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு ஒரு போகஸ் விளக்கை மட்டும் ஒளிரவிட்டனர். அலங்கரிப்பட்ட பூக்களுடன் சேர்க்கப்பட்ட செயற்கை நறுமணம் இதம் கொடுத்தது. புகைப்படத்தை மெருகேற்ற போடப்பட்ட செயற்கை புகை மேலெழும்பி மேகம் போல் அவர்களை சூழுந்துகொள்ள அந்த சூழலே அத்தனை இரம்மியமானது.
“மினுமினுக்குற மலர்.” அகத்தின் நிறைவு கொடுத்த மகிழ்வு முகத்தில் பிரதிபலிக்க, விழிமணிகளில் கட்டுண்டவன் சுற்றம் மறந்து அழுத்தமாக அவள் நெற்றியில் இதழொற்ற, கண்களை மூடி அவனது தித்திப்பை உள்ளார்ந்து ஏற்றுக்கொண்டாள் குழலி.
“இவ்ளோ அழகாடி நீ?” இத்தனை நாள் தெரியாத ஒன்றை இன்று கண்டுபிடித்தது போல் அவளிடம் முணுமுணுத்து கிறங்கிப் போயிருந்தான் முகிலன்.
“பதில் பேசுடி.”
“என்ன கேட்டீங்க?” அவளும் சளைத்தவள் இல்லையென மையலுடன் தழைந்தாள்.
“என்னமோ கேட்டேன். நீ பேசு நான் கேக்கணும்.” ஏனோ காரணமில்லாத பிதற்றல்கள் அவனிடம்.
சூழல் ஏற்படுத்திய தாக்கமோ, அன்றைய நாயகன் நாயகியாக அவர்களை பாவித்து முக்கியத்துவம் கொடுத்ததின் பலனோ, அன்றாடங்களில் இருந்து விலகி புதிதாக சேர்ந்துகொண்ட உறவு கொடுத்த கிளர்வோ என்று ஏதோவொன்று அவர்களின் நெருக்கத்தை அதிகப்படுத்தி இன்னுமின்னும் மற்றவரின்பால் ஈர்ப்பையும் அன்பையும் அதிகரித்தது.
“பர்பெக்ட் சார்.” என்ற குரலில் தான் திடுக்கிட்டு சுற்றம் உணர்ந்தனர்.
லேசாக நகர்ந்து வெட்கச் சிரிப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, அனைத்தும் புகைப்படமானது.
“இப்போ மேடமை தூக்குங்க சார்.” என்று அடுத்தது வர, இம்முறை யோசிக்கவே இல்லை புகைப்படக்காரர்கள் தயாராகும் முன் தூக்கிவிட்டான்.
சார் என்று அவர்கள் சிரிக்க, சற்று தள்ளி நின்ற அவளது தங்கைகள் கூச்சல் எழுப்பினர். வெட்கத்தில் இளஞ்சிவப்பாய் மாறிய முகத்தை எங்கு கொண்டு வைப்பது என்று தெரியாது அவன் கழுத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு அவன் தலையோடு முட்டி தன்னை மறைத்துக்கொண்டாள் குழலி.
‘இத்தனை பேர் முன்னாடி இதென்ன கூத்தடிக்குறாங்க.’ என்று வாய் பிளந்து அமர்ந்திருந்தார் மாரியம்மாள்.
“அண்ணி இன்னைக்கு நம்ம வீட்ல தான் தங்கணும் நீங்க.” என்று உரிமையாக வந்து அழைத்தார் கவிதா.
மகனிலிருந்து கண்ணைப் பிரித்தவர், “நாளைக்கு நேரமே ட்ரையின் போட்டிருக்கே.”
“இப்போதான் அண்ணன் சொன்னாங்க ட்ரையின் நாளைக்கு லேட்டா எடுப்பாங்களாம். அண்ணனையும் கூப்பிட்டிருக்கேன்.” என்று கவிதா பேச, முகத்தில் எதையும் காண்பிக்கவில்லை மாரியம்மாள்.
“ரிஷி காருக்கு சொல்லியிருக்கான். நாம கிளம்பலாம் இவங்க எல்லாத்தையும் முடிச்சிட்டு வர லேட்டாகிடும்.” என்று கவிதாவே சொல்ல, மாரி கணவரைத் தேடினார்.
“அண்ணன் வாசல்ல நிக்குறாங்க.”
“பெட்டி எல்லாம் ரூமுல இருக்கு. முகிலை கேக்கணும். இதோ வரேன்.” எழுந்து கணவரை தேடிக்கொண்டு சென்றார்.
ஆரவாரமெல்லாம் முடிந்து கடைசியில் ஒரு ஆட்டம் போட்டுவிட்டுதான் வீட்டிற்கு கிளம்பினர். காரில் இருந்து மணமக்கள் இறங்க, ஆர்த்தி எடுத்து திருஷ்டி கழித்து உள்ளே அனுப்பினர்.
“அப்போ நாங்க ரூமுக்கு கிளம்புறோம். கார் வர சொல்லிடு.” என்று அவள் மாமா வீட்டினர் நிற்க, அவர்களுக்கு ஏற்பாடு செய்துக்கொடுத்து அனுப்பிவிட்டு வந்தான் அமுதன்.
சிறிது நேரம் பேசிவிட்டு நாங்களும் கிளம்புகிறோம் என்று மாப்பிள்ளைகள் கிளம்பிவிட்டார்கள்.
சந்தியா தன் மகளை உறங்க வைத்துக்கொண்டிருக்க, சின்னவளை துணைக்கு அழைத்தாள் குழலி, “மேக்கப் ரிமூவ் பண்ணனும். இந்த லெஹங்காலேந்து முதல்ல வெளிய வரணும்.”
“அதுக்குதான் மாமாவை கட்டி வச்சிருக்கோம்ல, அங்க போ நீ. நான் புல் டயர்ட்.” என்றவளுக்கு குரலே எழும்பவில்லை. ஆட்டம் பாட்டம் என கத்தி தொண்டை கம்மிவிட்டிருந்தது.
“உன் கிண்டல நாளைக்கு வச்சிக்கலாம். இப்போ வாடி.” என்று கூப்பிட்டும் காணாதது போல் அறைக்கு சென்றுவிட்டாள். பிரபா கதவெல்லாம் பூட்டி அவளை உறங்க சொல்லிவிட்டு சென்றார். அவர்கள் மூவரும் ஒரு அறை எடுத்துக்கொள்ள மீதமிருந்த அறை இவளுக்கு ஒதுக்கப்பட்டது.
ஹாலில் நின்று காலை தரையில் உதைத்தவள் வேறு வழியின்றி அறைக்குச் சென்றாள். முகிலன் ஏற்கனவே முகம் கழுவி உடை மாற்றி இலகுவாக அமர்ந்திருந்தான்.
“அதுக்குள்ள எல்லாம் மாத்தியாச்சா.” மெத்தையில் அமர்ந்து மூச்சு வாங்கினாள்.
“டயர்டா?”
“லெஹங்கா செம்ம வெயிட். போட்டதும் நல்லா இருந்துச்சு, இப்போ எப்போடா கழட்டுவோம்னு இருக்கு.”
“யார் இப்போ கழட்ட வேணாம்னு சொன்னா?” என்றவனை சந்தேகமாக பார்த்தாள் அவள்.
“நல்ல பையன்மா நானு. வொய்ப் கஷ்டப்படுறாளே ஹெல்ப் பண்ணலாமேன்னு கேட்டேன்.” மென்சிரிப்புடன் அவளிடம் வந்தவன் விரிந்திருந்த முடியை எடுத்து முன்னால் போட்டு அவள் உடையில் கைவைக்க நெளித்தாள் குழலி.
“நானே பண்ணிப்பேன்.” வார்த்தைக்கு வலிக்குமோ என்றளவில் வந்தது அவள் குரல்.
“உன் தங்கச்சியை கூப்பிட்டதுலேயே தெரிஞ்சுச்சு.” தடுக்க முனைந்த அவள் கையை தட்டிவிட்டு முதுகுப்புறம் இருந்த கொக்கிகளை விடுவித்தான்.
“வேற எதுவும் ஹெல்ப் வேணுமா?” என்று கேட்டவனை பாவமாக பார்த்தாள் குழலி.
“என்ன மலர்?”
“ச்சு. ஹெவி ஒர்க் என்னால தனியா முடியாது…” என்றவள் தயங்க, அவள் கண்ணசைவு கொண்டு கணமாய் இருந்த உடையிலிருந்து அவள் விடுதலை பெற்று இலகு உடைக்கு மாற உதவினான். கூச்சத்தில் நெளிந்து, தன்னை மறைத்து, அவன் சீண்டல் பேச்சுக்களில் குழைந்து அவள் ஒரு ஆட்டமே ஆடிவிட்டாள்.
“எவ்ளோ வெக்கம்? இதுகூட நல்லாதான் இருக்கு.” மனைவியின் சிகை அலங்காரத்தை கலைக்க உதவியபடி அவன் சீண்ட, செல்லமாய் அவன் கையில் அடித்தாள்.
“என்ன அடிக்கவெல்லாம் செய்யுற?” மனைவியின் செல்ல அடிக்கு பதிலாய் இவனிடம் செல்லக் கோபம்.
“கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு இருங்களேன். முடியல என்னால.”
“இதென்ன வம்பா இருக்கு. நீங்கதான் எங்களை ரசிக்க மாட்டேங்குறீங்க சரி நாங்களாவது பண்ணலாம்னா திட்டுறது.”
“உங்களை ரசிக்கணுமா?” கேலியாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“ஏன் ரசிச்சா என்னவாம்?”
“ரசிக்குற மாதிரி அங்க ஒண்ணுமில்லை பாஸ்.” குறும்பாய் அவள் சிரிக்க, சட்டென அவளை தூக்கி வந்து மெத்தையில் விட்டவன் அவள் மீது படர்ந்து மூக்கு நுனியை உரசியபடி,
“எட்ட நின்னு பாத்தா எங்களை ரசிக்க தோணாது. இப்படி கிட்ட பாரு.”
“பாத்துட்டேன். ஒன்னும் தோணல.” என்றாள் வேண்டுமென்றே.
“இன்னும் முயற்சி வேணுமோ?” என்று யோசிப்பது போல் செய்தவன் பட்டென எழுந்து தன் சட்டையை கலைந்துவிட, மின்னலென கண்களை மூடிக்கொண்டது பெண்.
“ரொம்ப வெக்கையா இருக்கு?” என்று நமட்டு சிரிப்பு வேறு.
“ச்சோ சும்மா இருங்க.”
“சும்மா தான்மா இருக்கேன் இத்தனை நாளா?”
“உங்களை யார் இருக்க சொன்னா?”
“வாய் அதிகமா இருக்கே.” பெண்ணின் இதழ்கள் அவன் வசம். அவள் கரங்கள் பிடிமானத்திற்காய் அவனில் அலைந்தது. நீண்ட பரிமாற்றத்திற்கு பின் விலகியவன் குட்டி முத்தமொன்றை அவள் மூக்கினில் பதிப்பித்து பக்கவாட்டில் சரிந்தான்.
“தூங்கலாம் மலர். செம்ம டையர்ட்.”
வெட்டவா குத்தவா என்று அவள் அதிர்ந்து பார்க்க, அவள் கன்னத்தில் தட்டியவன், “இப்போ வேணாம் மலர். தூங்கு.” ஏன் என்ற கேள்வி அவள் பார்வையில் தொக்கி நின்றது.
“உன் சிஸ்டர்ஸ் எல்லாம் பக்கத்து ரூம்ல தான் தூங்குறாங்க. இதுவும் பொதுவான ரூம்தான. வேண்டாமே.” தன் பக்க சங்கடத்தை எப்படி விளக்குவது என்று வார்த்தைகள் தேடிக்கொண்டிருந்தான் முகிலன்.
சுணங்கியவள், “இதுவும் நம்ம வீடுதான்.”
“ம்ம்ம் ஆனா… எனக்கு ஃப்ரியா இல்லை.” என்றுவிட பெண்ணவளுக்கு வலித்தது. இப்படி இருப்பவன் நாளை எப்படி தன் குடும்பத்திற்கு செய்ய முன்வருவான் என்ற யோசனைக்கு சென்றுவிட்டாள்.
“இங்க சேர்ந்து வந்தாகூட உன் சிஸ்டர்ஸ் மட்டும்தான் தங்குறாங்க சகலைங்க இல்லைன்னு சொன்னியே. இதெல்லாம் பாய்ஸ் திங்ஸ் போல… ஒருமாதிரி சங்கடமா இருக்கு.” அவள் தவறாக எண்ணிவிடக்கூடாது என்று அவன் மேலும் விளக்க முயல, ரிஷி கூட அதனால் தான் இங்கு வந்தால் தங்குவதில்லையோ என்று எண்ணிக்கொண்டவளுக்கு முகிலன் தன் வீட்டில் இயல்பாக வலம்வர காட்டும் தயக்கம் தடுமாற்றத்துடனான தவிப்பை கொடுத்தது.
error: Content is protected !!