Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

84. சரோ - கோட்டையின் கொடிநிலா

கோட்டையின் கொடிநிலா – 1

அத்தியாயம் – 1 

 

குடியரசுத் தலைவர் மாளிகை, புதுதில்லி.

 



Advertisement

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான காத்திருப்பிற்குப் பின்னர், இந்தியாவின் இரண்டாவது பெண் தலைமை அமைச்சரை (பிரதமரை) வரவேற்க குடியரசுத் தலைவர் மாளிகை அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிறப்பு அது மட்டுமல்ல. இன்றைய நாள், பல விதங்களில் வரலாறு படைக்கும் நாள். தடைகள் பலவற்றை தகர்ந்தெறிந்து, வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டிய ஒரு பொன்னாள்.

 

இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமை அமைச்சராகப் பதவியேற்பது, தமிழக மக்களை உற்சாக வெள்ளத்தில் மூழ்கடித்திருந்தது. மூன்று முன்னாள் குடியரசுத்தலைவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், தலைமை அமைச்சர் பதவி தமிழர் ஒருவருக்கு இன்னும் கிட்டவில்லை என்பது, பலருக்கும் ஒரு குறையாக மனதில் இருந்தது போலும். அதனாலயே பதவியேற்பு நிகழ்ச்சி நடப்பது என்னவோ நாட்டின் தலைநகரத்தில் தான் என்றாலும், கட்சி பாகுபாடின்றி, தமிழகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.  

Advertisement

 

Advertisement

அதோடு முப்பதுகளின் நடுவில் இருக்கும், இந்தியாவின் மிக இளமையான தலைமை அமைச்சர் என்பது இன்னுமொரு தனிச்சிறப்பு. கிட்டத்தட்ட 146 கோடி மக்களுக்கு மேல் உள்ள நாட்டில், 65 சதவீதம், 35 வயதிற்கு குறைந்தவர்களே. அதுவும் கூட தெற்கு, வடக்கு பேதம் மறந்து, இனம், மொழி, மதம் எனும் வேறுபாடுகளைக் கடந்து, தங்களின் பிரதிநிதியாக தலைமை அமைச்சர் பதவியேற்க இருப்பவரை, மக்கள் கொண்டாடுவதற்கு ஒரு காரணம். 

 

எல்லா மாநிலங்களிலும் இருந்து பல்வேறு முக்கிய அரசியல் பிரமுகர்கள் விழாவிற்கு வருகை புரிந்து சிறப்பித்திருக்க, அண்டை நாடுகளிலும் இருந்து சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன், வரும் விருந்தினர்களை அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர். 

Advertisement

 

அன்று பதவியேற்கும் மந்திரி சபை உறுப்பினர்கள் அனைவரும் மேடையில் அமர்ந்திருக்க, பலத்த பாதுகாப்பு அம்சங்களுடன் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட, அந்த ‘லேன்ட் ரோவர் சென்டினல்’ வாகனம் மேகம் போல் மிதந்து, கம்பீரமாக சிவப்பு கம்பளத்தின் அருகில் வந்து நின்றது. தலைமை அமைச்சருக்கென்று நியமிக்கப்பட்டிருந்த சிறப்பு பாதுகாப்பு படை (Special Protection Force – SPG) தலைவர் ப்ரதாப்  சிங், வாகனத்தின் முன்பக்கக் கதவைத் திறந்து இறங்கி, மின்னல் வேகத்தில் கண்ணை எல்லாப்பக்கமும் ஒரு சுழற்று சுழற்றி, சுற்றி இருந்த பாதுகாப்பு அமைப்பில் திருப்தி கொண்டவராய், வாகனத்தின் பின்கதவை திறந்து விட்டார். 

 

சந்தன நிற சில்க் காட்டன் புடவையில், அதற்கேற்ற அடர் இளஞ்சிவப்பு நிற காலர் நெக் பிளவுசும், எளிமையான ஆனால் பொருத்தமான அணிகலன்களும் அணிந்து, உயர்த்திக் கட்டிய கொண்டையுடன் ஒரு ராணியின் கம்பீரத்துடன் இறங்கினார் வசுந்தரா வனதேவன்! தைரியமும் தன்னம்பிக்கையும் தாராளமாக இருக்கிறது தான். ஆனாலும் மனதிற்குள் ஒரு சின்னஞ்சிறு படபடப்பு. வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அவ்வளவு எளிதாக தெரிந்து விடாது.

 

எடுத்த பணியை செவ்வனே செய்ய வேண்டும் என்பதால் வந்த படபடப்பு தான் அது. நாட்டை வழிநடத்தும் தலைமைப்பதவி என்பது மிகப்பெரிய பொறுப்பு அல்லவா. அவருக்குத் தெரியும் இது ஒன்றும் மலர்ப்பாதை அல்ல, முட்களின் படுக்கை என்று. அதை நன்றாக தெரிந்து தான் அரசியலைத் தன் வாழ்க்கைப் பாதையாக தேர்ந்தெடுத்தார். அதிலும் அவரது வயதும், பாலினமும் தான், அவர் எதிர்நோக்கவிருக்கும் பெரும் சவால்கள் என்பதும் புரிந்து தான் இருந்தது.

 

ஒருமுறை மூச்சை நன்றாக இழுத்து விட்டு, ‘யூ கேன் டு திஸ் வசு’ என்று தனக்குத் தானே தைரியம் சொல்லி சமன்படுத்திக் கொண்டு, மேடையை நோக்கி நடந்தார். அவர் இறங்கியதுமே வாழ்த்து முழக்கங்களும் விண்ணைப் பிளக்க, வழியில் நின்றவர்களுக்கு இருகரம் கூப்பி வணக்கம் வைத்துக் கொண்டே மேடை அருகே வந்து விட, முதல் வரிசையில் தாரா தேவி அமர்ந்திருந்தார்.

 

தாரா தேவி. வசுந்தராவின் அரசியல் குரு. ஆட்சி அமைக்க இருக்கும் மதச்சார்பற்ற மக்கள் கட்சியின் (ம.ம.க,  Secular People Party – SPP) தேசிய தலைவி. அவரால் தான் வசுந்தராவுக்கு இந்த அரிய வாய்ப்பு கிட்டியது. அவரது அருகில் வந்த வசுந்தரா, கை கூப்பி வணங்க, எழுந்து ஆதுரமாக அணைத்துக் கொண்டார் தாரா. அவரது ஆசிகளுடனும், வாழ்த்துக்களுடனும் மேடை ஏறி, தனது அமைச்சரவையில் பொறுப்பேற்கவிருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் வணக்கம் தெரிவித்து தனது இருக்கையில் அமர்ந்தார் வசுந்தரா. 

 

சில நிமிடங்களில் குடியரசுத் தலைவர் வந்து விட, தேசிய கீதத்திற்கு அனைவரும் எழுந்து நின்று பதவியேற்பு விழா இனிதே துவங்கியது. 

 

குடியரசுத் தலைவர், 

 

“மே” என்று பதவிப் பிரமாணத்தை ஹிந்தியில் ஆரம்பித்து வைக்க, 

 

“வசுந்தரா வனதேவன் எனும் நான், சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையையும், மாறாப் பற்றும் கொண்டிருப்பேன் என்றும், இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும், தலைமை அமைச்சராக, எனது கடமைகளை உண்மையாகவும், உளச்சான்றின் படியும் நிறைவேற்றுவேன் என்றும், அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின்படி, அச்சமும் ஒருதலைச்சார்பும் இன்றி, விருப்பு வெறுப்பை விலக்கி, பலதரப்பட்ட மக்களுக்கும்  நேர்மையானதைச் செய்வேன் என்றும் உளமார உறுதிமொழிகிறேன்.” என்று தமிழில் உறுதிமொழி எடுத்தார் தலைமை அமைச்சர்.

 

அதே போல் இரகசிய காப்புப் பிரமாணத்தையும் ஆரம்பித்து வைத்தார் குடியரசுத் தலைவர்.

 

“வசுந்தரா வனதேவன் எனும் நான், தலைமை அமைச்சராக எனது கடமைகளை முறையாக நிறைவேற்றுவதற்குத் தேவைப்படக்கூடியதைத் தவிர, எனது பரிசீலனையின் கீழ் கொண்டுவரப்படும் அல்லது மத்திய அரசின் தலைமை அமைச்சராக எனக்குத் தெரியவரும் எந்தவொரு விஷயத்தையும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு நபருக்கோ அல்லது நபர்களுக்கோ தெரிவிக்கவோ அல்லது வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று உளமார உறுதிமொழிகிறேன்”

 

அதற்குப் பின்னர் அமைச்சரவை உறுப்பினர்கள் பதவி ஏற்க, விழா நிறைவில் முக்கிய விருந்தினர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தலைமை அமைச்சரின் குடும்பமும் அழைக்கப்பட்டிருக்க, வசுந்தராவின் தந்தை வனதேவன், மகளுக்கு கைகுலுக்கி வாழ்த்த, மகள் சாதித்து விட்ட பெருமை அவரது முகத்தில் அப்பட்டமாக பிரதிபலித்தது. 

 

வனதேவன் ஓர் ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர். வசுந்தரா இந்தப் பாதையை தேர்ந்தெடுக்க மிகப் பெரிய தூண்டுதல் அவரது தந்தை தான்.

 

ஆனால் அன்னை அஞ்சலிக்கோ பெருமையை விட, பதட்டமே மேலோங்கி இருந்தது. அவருக்கு இந்தப் பதவி, மதிப்பு என்பதை விட மகளின் திருமண வாழ்க்கையே பெரிதாகத் தெரிந்தது. ஒரு சராசரி அன்னையாக, மகள் திருமணம் முடித்து, கணவன், குழந்தை என அவளுக்கென ஒரு குடும்பமாக வாழ்வதைத் தான் ஆசையாக எதிர்பார்த்தார். என்று வசுந்தரா பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்தாரோ, அன்றே திருமணம் எட்டாக்கனி என்ற மனநிலை தான் அவருக்கு. 

 

இப்போதும் தந்தையும், மகளும் இந்த பொன்னான தருணத்தில் மகிழ்ந்திருக்க, அதைக் கலைக்க மனமில்லாமல் அமைதியாக இருவரையும் பார்த்திருந்தார் அஞ்சலி.

 

“எப்படி ஃபீல் பண்றீங்கம்மா?” என்ற மகளின் கேள்விக்கு உடனே பதிலில்லை அன்னையிடம். 

சில நிமிடங்கள் மௌனம் சாதித்தவர்,

 

“பயமா இருக்கு வசு” என்க, வனதேவன் மனைவியை முறைத்தார்.

 

“ஏன் அஞ்சு, இது மாதிரி ஒரு பாக்கியம் யாருக்காச்சும் கிடைக்குமா? சாதனை பண்ணிருக்கா நம்ம பொண்ணு! இத்தனை வருசம் கடினமா உழைச்ச உழைப்புக்கு பலன் கிடைச்சிருக்கு. இந்த நாட்டோட தலையெழுத்த மாத்துறதுக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு இது. மாபெரும் மாற்றத்தோட ஓர் அடையாளமா தான் இந்த ஆட்சி அமையப் போகுது. கோலாகலமா கொண்டாட வேண்டிய நாள் இன்னிக்கு. அதெல்லாம் யோசிக்காம வேற என்ன பயம் உனக்கு?” 

 

பக்கத்தில் கூட யாருக்கும் கேட்கக் கூடாது என்பதால், குரலை மிகவும் தாழ்த்தி ஆனால் அழுத்தமாகவே மனைவியைக் கடிந்து கொண்டார் வனதேவன். அதற்குள் குடியரசுத் தலைவருடன் அறிமுகம் செய்து கொள்ள அழைப்பு வந்து விட, தனது குடும்பத்தினரையும், அமைச்சரவை உறுப்பினர்களையும் முறையாக அறிமுகம் செய்து வைத்தார் வசுந்தரா. 

 

உணவு மேஜைக்கு வந்த பின்னர் எல்லாம் சம்பிரதாயப் பேச்சுக்கள் ஆகி விட்டது. வசுந்தராவுக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தவர் சமர்ஜித் ஷர்மா. நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர். முற்போக்கு இந்திய கட்சியின் (மு.இ.க.) தேசிய தலைவர், முன்னாள் தலைமை அமைச்சர்!

 

இந்த தேர்தலிலும் அவரது கட்சி அதிக இடங்களை கைப்பற்றி இருந்தாலும், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை இடங்களைப் பெற முடியவில்லை. கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை இழுபறி நிலைமையிலிருக்க, மதச்சார்பற்ற மக்கள் கட்சி மற்ற மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரி விட, இதோ பதவியேற்பு விழாவும் நடந்து முடிந்திருந்தது.

 

சமர்ஜித் ஷர்மா சூழ்ச்சிகளின் வல்லுநர். ஆட்சியைப் பிடிக்க எந்த எல்லைக்கும் போகத் துணிந்தவர். அரசியல் சதுரங்கத்தில் ஜாம்பவான். தாரா தேவியையே பெரிய போட்டியாக எண்ணாதவர். காலம் முழுவதும் வாரிசு அரசியல் என்ற ஒன்றை வைத்தே தாரா தேவியைத் தடுத்து விடலாம் என்று மனப்பால் குடித்தவருக்கு, கடைசி நேரத்தில் தாரா தேவி, வசுந்தராவை தலைமை அமைச்சர் வேட்பாளராக அறிவிப்பார் என்று கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. 

 

அப்போதும் இந்த சிறு பெண் பெரிதாக என்ன செய்து விடப் போகிறாள் என்று சற்று அலட்சியமும் இருந்தது போலும். அவரது முந்தைய ஆட்சிகளில், பெரிய பெரிய பண முதலைகளுக்கு சாதகமாக எத்தனை அரசாங்க முடிவுகள் எடுத்திருப்பார். அவர்கள் எல்லாம் சும்மா இருந்து விடுவார்களா என்ன? பணத்தை தண்ணீர் போல வாரி இறைத்து, ஓட்டுப்பெட்டிகளில் முறை கேடு செய்தாவது ஜெயிக்க வைத்து விடுவார்கள் அல்லவா என்ற அசையாத நம்பிக்கை. 

 

அதற்கும் மேல் சமூக வலைத்தளங்களில் மற்ற கட்சியினர் மேல் சேற்றை வாரி இறைத்து, சூழ்ச்சித்திறத்துடன் மக்களின் மனதை குழப்ப ஒரு பெருங்கூட்டம். அதற்கும் தானே கோடிகளில் பரிவர்த்தனை நடந்திருக்கிறது! இது எல்லாம் பொய்த்துப்போனாலும், இருக்கவே இருக்கிறது பெரும்பான்மை மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடும் போலி மதப்பற்றும் நாட்டுப்பற்றும். மக்கள் எல்லாம் மடையர்கள் என்று நினைப்பு போலும் இந்த வஞ்சக நரிக்கு. எல்லாம் சேர்ந்து முயல் லேசாக கண்ணசந்த நேரம், ஆமை ஓட்டத்தில் முந்தி விட்டது!

 

‘எத்தனை நாள் இந்த ஆட்சி என்று பார்த்து விடுகிறேன்’ என்று மனதில் வன்மம் இருந்தாலும், வெளியில் பெரிதாக புன்னகை சிந்தி,

 

“வாழ்த்துக்கள் வசுந்தரா ஜி” என்று ஆர்ப்பட்டமாகச் சொன்னவர், குரலைத் தழைத்து,

 

“இனிமே தான் நாடாளுமன்றம் நல்ல கலரா இருக்கப் போகுது போல” என்று  நக்கலாக சிரித்து வேறு வைக்க, வசுந்தராவுக்கு பற்றிக் கொண்டு வந்தது. 

 

ஆனாலும் வெளிக்காட்ட முடியாதே. சபை நாகரீகம் என்பது ஒருபக்கம் இருந்தாலும், ஏற்றுக் கொண்ட பதவிக்கான மதிப்பை கட்டிக்காக்க வேண்டுமே. அவரது குணத்துக்கு இது நிரம்ப கடினமான விசயமாகத்தான் இருக்கப் போகிறது. முகத்திற்கு நேரே வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என பேசும் ரகம் அவர். அசட்டுத்தனங்கள் அறவே சகிக்க முடியாது அவரால். 

 

சமரைப் போலவே குரலைத் தழைத்தவர்,

 

“நன்றி ஷர்மாஜி. என்ன பண்றது? டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்துருச்சு பாருங்க. அப்டியும் ஒரே கருப்பு வெள்ளையா பார்த்தா மக்களுக்கும் போர் அடிக்கும்ல, அதுக்கு தான் ஒரு மாற்றம் வேணும்னு பாக்குறோம். உங்களுக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையே?” என்க,

 

“ஹா ஹா, எனக்கு என்ன ஆட்சேபனை இருக்கப் போகுது? உன் வயசு என்னோட அனுபவம் பேட்டி! தலைமை அமைச்சர் பதவின்னா என்ன சொப்பு சாமான் வைச்சி விளையாடுற மாதிரி, சும்மா ஃபைல்ல கையெழுத்து போடுற வேலைன்னு நினைச்சிட்டியா? போர்க்களம்! எதிரி யாருன்னே கண்ணுக்குத் தெரியாட்டியும் அடிச்சு ஆட வேண்டிய போர்க்களம்!

இங்க ஜெயிக்க ராஜ தந்திரம் வேணும். அது உன்கிட்ட சுத்தமா இருக்குற மாதிரி தெரியல. பால் வடியுற பச்சை குழந்தை மாதிரி இருக்க. பார்த்து…. பதவியை பந்தோபஸ்து பண்ணிக்கோ. சீக்கிரமே கவுத்தி விட்ருவேன். கிடைக்கிற வரைக்கும் நல்லா அனுபவிச்சுக்கோ” என்றவர், ஒன்றும் நடவாதது போல் மறுபக்கம் திரும்பி இன்னொரு மூத்த அமைச்சருடன் பேச ஆரம்பித்து விட்டார்.

 

சில நொடிகளில் வசுந்தராவின் முகம் ரத்தமென சிவந்து, அதை யாரும் கவனிக்கும் முன்னரே, இயல்பு நிலைக்குத் திரும்பியது. மகள் என்ற அழைப்புக்குப் பின்னர் வரும் இது போன்ற பண்பற்ற, கீழ்த்தரமான பேச்சுக்கள் அவரைக் கொதித்தெழ வைத்தாலும், யதார்த்தமும் புரிய தான் செய்தது. அது மட்டுமல்லாமல் இது ஓர் ஆரம்பம் மட்டும் தானே. இது போன்ற சூழ்நிலைகள் போகப் போக இன்னும் மோசமாகப் போவது நிச்சயம். 

அரசியல் ஒரு சாக்கடை என்று எண்ணத்தில் தான் பலரும் தூர தள்ளி நிற்கின்றனர். பொது வெளியில் பெண்களை கீழிறக்குவதற்கு, சமூகத்திற்குக் கிடைத்த எளிதான ஆயுதம் அவர்களது தன்னம்பிக்கையை உடைப்பது தானே. 

அதையே சமர்ஜித்தும் தனது முதற்கட்ட தாக்குதலுக்கு ஆயுதமாகத் தேர்ந்தெடுத்ததில் வியப்பொன்றும் இல்லை. நாட்டின் உயர்ந்த பதவியில் இருந்த ஒரு அனுபவமிக்க அரசியல் தலைவரின் நடத்தை, தலைமை அமைச்சரிடமே இந்த அளவு தரம் இறங்கி இருக்குமானால், அடிமட்ட நிலையில் நடப்பவற்றை யோசித்துப் பார்க்கவே அச்சமாக இருந்தது.

ஆனாலும் இது போன்ற உப்புப் பெறாத சமாச்சரங்களுக்கு தனது மனோதிடத்தை சோதிக்கக்கூட அனுமதிக்கக் கூடாது என சட்டென்று முடிவெடுத்தவர், மீட்டுக் கொண்ட புன்னகையுடன் மற்ற அமைச்சர்களுடன் பேசிக் கொண்டே விருந்தை முடித்து விட்டு எழுந்து கொண்டார். 

 

முறையாக குடியரசுத் தலைவரிடமும், மற்ற முக்கியப் பிரமுகர்களிடமும் விடைபெற்றுக் கொண்டவர், சமர்ஜித் ஷர்மாவிடம் ஒரு சிறு தலையசைப்புடன் நகர்ந்து விட்டார். 

 

புது தில்லி ‘ரேஸ் கோர்ஸ்’ ரோட்டில் இருக்கும் தலைமை அமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வாகனம் விரைய, பதவியேற்ற முதல் நாளே அவ்வளவு மலைப்பாக இருந்தது வசுந்தராவிற்கு. 

 

எவ்வளவு அழைத்தும் வனதேவனும், அஞ்சலியும் அவருடன் கூட வரவில்லை. தங்கும் விடுதியில் முன்பதிவு செய்து பதவியேற்பு விழாவுக்கு வந்தவர்கள், அங்கிருந்தே விடை பெற்றுக் கொண்டு அவர்கள் தற்போது வசிக்கும் கோவைக்குத் திரும்புவதாகக் கூறி விட்டனர்.

 

வசு கூட,

 

“பா, எனக்கு கல்யாணம் ஆகியிருந்தா என்னோட ஹஸ்பெண்ட், பிள்ளைங்க எல்லாம் என் கூட இருந்திருப்பாங்க தானே. நீங்க தான் இப்போ ரிட்டையர் ஆகிட்டீங்கல்ல. அங்க போய் தனியா தானே இருக்கப் போறீங்க ரெண்டு பேரும். அதுக்கு என் கூட இருங்கப்பா, எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவ்வா இருக்கும்” என்க,

 

“இல்லை வசு. அது சரியா வராது. இது உன்னோட அஃபீஷியல் ரெசிடென்ஸ். நாங்க உன் கூட இருந்தா எங்க மூலமா உன்னை ரீச் பண்ண டிரை பண்ணுவாங்க. இல்லை நான் உன்னைய இன்ஃபுலயன்ஸ் பண்றேன்னு எல்லாம் கூட நியூஸ் வரும். எதுக்கு அந்த மாதிரி தேவையில்லாத விசயத்துக்கு எல்லாம் இடம் கொடுக்கணும்.

 

அப்பா எங்க இருந்தாலும் உன்னைய பத்தி தான் யோசிச்சிட்டு இருப்பேன். ஐ ஆம் ஜஸ்ட் அ ஃபோன் கால் அவே. கீப் தேட் இன் மைண்ட். நான் உனக்கு தேவையே இல்லடா கண்ணா. யூ ஆர் ப்ரேவ் அண்ட் ஸ்ட்ராங்க். யூ வில் பி ஃபைன். 

 

அதோட இங்க இருந்தா, உன்னைய வேலை பாக்க விடாம உங்க அம்மா டெய்லி உனக்கு ஏதாச்சும் அலையன்ஸ் வந்துச்சுன்னு பசங்க ஃபோட்டோ காட்டுவா…அது பரவாயில்லையா உனக்கு?” என்று கண்சிமிட்ட, அதற்கு மேல் என்ன பதில் சொல்ல முடியும்.

 

“ஆனாலும் இதெல்லாம் ரொம்ப டூ மச்சா இருக்குங்கப்பா.  நாட்டுக்கே பொறுப்பேத்துக்கிட்டாலும் அம்மாக்கு தான் இன்னும் பயப்பட வேண்டியதா இருக்கு. பிரதமராவே இருந்தாலும், பொண்ணு கல்யாணம் பண்ணலைன்னா அம்மாவோட புக்ல பத்து பைசாக்கு பிரயோஜனம் இல்லை போல” என்று போலியாக வருத்தப்பட, வனதேவன் சிரித்துக் கொண்டே மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டார். 

பெற்றோரோடு பேசியதை யோசித்துக் கொண்டிருக்கும் போதே சில நிமிடங்களில் வாகனம், தலைமை அமைச்சரின் இல்ல வளாகத்தில்  நுழைந்தது. சுமார் பனிரெண்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த வளாகத்தை வாகனம் மெதுவாக கடக்க, அதற்கு நேரேதிராக வசுவின் மனம் படபடக்க ஆரம்பித்தது.

எதிர்பார்த்தது தான். ஆனாலும் ஒரு விசயத்தை எதிர்பார்த்து மனதளவில் தயாராக இருப்பதும், அதை உண்மையில் எதிர்கொள்ளும் போது வெளிப்படும் உணர்வுகளும் வேறு வேறு தானே. 

சில நாட்களுக்கு முன்பாக, அமைச்சரவை நியமனக் குழு செயலகம், தலைமை அமைச்சரின் முதன்மைச் செயலாளருக்காக பரிந்துரைத்த பெயரைப் பார்த்த  வசுந்தராவுக்கு பெரும்  அதிர்ச்சி! 

இவர எங்க இருந்து புடிச்சாங்க? சைனால இந்தியன் அம்பாசிடர இருந்தவர ஏன் திரும்பி வர வைச்சாங்க?  ரிட்டயர் ஆன ஐ.ஏ.எஸ், இல்லாட்டி எப்பவாச்சும் ஐ.எஃப்.எஸ், அந்த மாதிரி தானே இந்த போஸ்டுக்கு இது வரை எடுத்திருக்காங்க. இதுல ஏதாவது உள்குத்து இருக்கா?’ என யோசித்தவர்,  பரிந்துரைக்கான காரணத்தைப் பார்க்க அது தெளிவாக இருந்தது.

புதிதாக பொறுப்பேற்று இருக்கும் இந்திய அரசு உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய பெரும் சவால், சர்வதேச அரங்கில் இந்தியாவின் நிலையை பலப்படுத்துவது. நண்பர்களை அருகில் வைத்து, எதிரிகளை மிக நெருக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கிணங்க, அண்டை நாட்டு எதிரிகளை நெருக்கத்தில் வைக்கும் ஒரு முயற்சியாக, சீனாவில் இந்திய தூதராக இருந்து அந்நாட்டுடன் இந்திய உறவை பெருமளவில் மேம்படுத்திய ஒருவரைத் தான், வசுந்திராவின் முதன்மைச் செயலாளராக நியமிக்க குழு பரிந்துரை செய்திருந்தது. 

அந்தப் பெயருடன் தொடர்புடைய அவரது கடந்த காலம் தான் வசுந்தராவுக்கு நெருடலாக இருந்ததேயன்றி, ஒரு சிறு துளி சந்தேகம் கூட அந்த நபரின் திறமையின் மீது அல்ல. பணிக்கு பொருத்தமான நபரை தேர்வு செய்ய வேண்டுமே தவிர, சுய விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் தரக் கூடாது அல்லவா. எனவே அவரது கடந்த கால வாழ்வின் நிழல்களைப் புறந்தள்ளி, தேசிய நலனை மட்டுமே முன்னிறுத்தி, குழுவின் பரிந்துரைக்கு ஒப்புதலும் அளித்திருந்தார். 

அந்த நினைவுகளின் தாக்கத்தில், படபடத்த மனதை முயன்று சமன்படுத்திய வசுந்தரா வாகனத்தில் இருந்து இறங்கியதுமே, அவரை விரிந்த புன்னைகையும், அழகான பூங்கொத்துமாய் வாழ்த்தி வரவேற்றார் சித்தார்த் ஜோஷி!



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!