Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viral Meerum Nagangal

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 17 ( PART 02 )

 

ஆதரவாக அவனது தோளணைக்க, “என்னை வழிநடத்த யாரும் கூட இல்லை வெற்றி. எப்பவும் உனக்கு அப்பா ஞாபகம் தான் வருமா? எங்களைப்பத்தி யோசிக்க மாட்டியா? அப்பா மிலிட்டரியில வேலையில இருந்தாலும், நீ என்னையும் அம்மாவையும் நல்லா பார்த்துப்ப. திடீர்ன்னு அப்பாவோட ஆசைக்காக, மிலிட்டரி சர்வீஸ் செய்ய போறேன்னு கிளம்பி போயிட்ட, அப்போ தவிச்சு போன அம்மாவை நான் தான் தேத்துனேன் தெரியுமா? என்னால எப்படி முடியும் சொல்லு? அப்ப நான் ஸ்கூல் தான் படிச்சிட்டு இருந்தேன். நீயும், அப்பாவும் மிலிட்டரி சர்வீஸ் போயிட்டா அம்மாவும், நானும் என்ன செய்வோம்ன்னு ரெண்டு பேரும் யோசிச்சீங்களா? அதுவரை எல்லாம் நீ பார்த்துட்டு இருந்த, அதுக்கு பிறகு எல்லாத்தையும் நான் பார்க்க வேண்டியதா போச்சு. என்னால அந்த வயசுல எப்படி முடியும்?

 



Advertisement

திடீர்ன்னு அப்பா தன் வேலையை விட்டுட்டு சேலம் வந்துட்டாரு. மறுபடியும் அப்பா ஏன் விட்டுட்டு போறாருன்னு கவலையா இருந்தது. அப்பறம் நீ வேலையை விட்டு வந்த… சரி அதுக்கு பிறகாவது நீ எங்ககூட இருப்பேன்னு பார்த்தா… அப்ப தான் அப்பாவும் இறந்து, அவருக்காக நீ இங்க வந்து… எங்கேயும் உனக்கோ, அப்பாவுக்கோ எங்க ஞாபகம் வரலை இல்லையா? நாங்க என்ன பண்ணுவோம்ன்னு தோணலை இல்லையா?” உடைந்து அழுபவனை ஆதரவாக அணைத்துக் கொண்டான்.

 

 

Advertisement

நாட்டிற்கு, ஊருக்கு என்று பார்த்து சொந்த வீட்டைக் கவனிக்கவில்லையே! என்று குற்றவுணர்வாய் போனது வெற்றிக்கு.

Advertisement

 

 

“இல்லைடா. அப்படி எல்லாம் இல்லை. நம்ம அப்பா இறப்பு? அது விபத்துன்னு சொன்னாலும், அது உண்மையில்லைன்னு எல்லாரும் நம்பறப்ப அதுக்கொரு நியாயம் செய்ய வேண்டாமா? உனக்கே தெரியும் ஐ.ஏ.எஸ் தான் என் கனவு, லட்சியம் எல்லாம்ன்னு… ஆனா, நம்ம அப்பா, ‘நான் எத்தனை பேரை நாட்டை காப்பாத்த ட்ரெயின் பண்ணி அனுப்பறேன், என் பசங்க வராட்டி எப்படி?’ன்னு வருந்துனாரு. அவருக்காக தான் சில வருஷம் மிலிட்டரி வேலை செஞ்சேன். அம்மா ஞாபகம் இல்லாம இல்லை. அதுனால தான் ‘மிலிட்டரி வேலையைக் கொஞ்ச வருஷம் தான் செய்வேன், அப்பறம் எனக்கு பிடிச்ச வேலைக்குத் தான் போவேன்’னு அப்பாகிட்ட முன்னாடியே சொல்லிட்டேன்.

Advertisement

 

அப்பா ஆசைக்காகக் கொஞ்ச வருஷம் மிலிட்டரி வேலையை நல்லபடியா முடிச்சு, உங்களோட இருக்கணும்ன்னு தானே வந்தேன். நான் UPSC எக்ஸாம்க்கு பிரிபேர் பண்ணி, எக்ஸாம் எழுதலாம்ன்னு நினைக்க, அப்போ தான் அப்பா இறந்த செய்தி… அதுவும் அப்பா விபத்துல இறந்திருக்க மாட்டாருன்னு தெரிஞ்ச பிறகும் என்னால எப்படி விட முடியும்?

 

[the_ad id=”6605″]

 

 

 

எனக்கு பிடிச்ச வேலையைக் கூட ஒதுக்கி வெச்சுட்டு, அவரோட இறப்புக்கு நியாயம் செய்ய இங்க வந்துட்டேன். அப்ப என் மனசுல அப்பாவை தவிர வேற எதுவும் இல்லை டா. உங்களைப் பத்தி யோசிக்காம விட்டது தப்பு தான் மன்னிச்சிடு டா” என்றான் யாசிப்பாக. அவன் சொல்லாமல் விட்ட இன்னொரு காரணமும் உண்டு. அதைத் தம்பியிடம் கூட பகிர அவனுக்கு மனம் வரவில்லை.

 

அண்ணனின் கலங்கிய குரலில் தன்னை மீட்ட இளையவன், “சரி விடு. நீ கவலைப்படாதே, அதான் நானே வளந்துட்டேனே. இனி நானே அம்மாவை பார்த்துப்பேன். நீ சீக்கிரம் அவங்க யாருன்னு கண்டுபிடி. எதுவும் உறுதியா தெரிஞ்சதா?” என்று பேச்சை மாற்றினான். வெற்றியும் என்ன செய்வான் என அவனுக்குப் புரியாமல் இல்லை. ஆனால், சிறு வயதிலேயே அதிக பொறுப்புகள் என்றால், அது அவனை வெகுவாக துவளச் செய்தது.

 

“ஒரு யூகம் மட்டும் தான் டா. அதை வெச்சு தான் வேலை செஞ்சுட்டு இருக்கேன். நீ கவலைப்படாதே. சீக்கிரம் இதெல்லாம் சரி பண்ணிட்டு… எல்லாருக்கும் பொறுப்பை பிரிச்சு தந்துட்டு வந்துடறேன்” என்றான் தம்பியிடம். கூடவே, “ரொம்ப சாரி டா” என்று வருத்தம் தெரிவிக்கவும்,

 

“பரவாயில்லை விடு வெற்றி. சரி சரி, இங்கேயே பார்த்துட்டு உன் கெரியர், அதுல கவனத்தை விட்டுடாத… புரிஞ்சுதா?” என்றான் இளையவன் பொறுப்பாக.

 

அவனை இறுக அணைத்தவன், “படிச்சுட்டே தான் டா இருக்கேன்” என்றான் புன்னகை முகமாக.

 

இரு தினங்களுக்கு முன்பு தம்பியிடம் பேசியபோதே, நாம் வந்த வேலையைச் சீக்கிரம் முடித்துவிட்டு ஊர் திரும்ப வேண்டும் என்னும் உறுதி வெற்றிச்செல்வனுக்கு வந்திருந்தது.

 

திருமண ஆரவாரங்கள் நல்லபடியாக முடிந்து, இரவு வந்திருக்க, மணமகனாய் பொறுப்பாய் வெற்றிச்செல்வன் வேஷ்டி, சட்டையில் தயாராகிக் கொண்டிருந்தான். பெல்ட் போடாமல் வேஷ்டி கட்ட முயன்று, அது சிறிது நேரத்தில் கழன்று வர, அந்த வேலையே அவனுக்கு வெகு நேரம் இழுத்துக் கொண்டிருந்தது.

 

‘இன்னைக்கும் நம்ம பெல்ட் போட்டு நின்னோம். அவ்வளவு தான்’ என மனதிற்குள் வெகு நேரம் உருப்போட்டு போராடிக் கொண்டிருந்தான். நேரம் சென்றதே தவிர, வேலை நடக்கவில்லை.

 

‘இது வேலைக்காகாது!’ எனச் சோர்வாக எண்ணி, வேறு வழியின்றி பெல்ட்டையே அணிந்து கொண்டான்.

 

[the_ad id=”6605″]

 

 

 

சிறிது நேரக் காத்திருப்பிற்குப் பின், செந்தாமரை அந்த அறையினுள் நுழைய, அவளுக்கு அந்த புடவை வெகு அழகாகப் பொருந்தியிருந்தது. அறையினுள் நுழையும் மனைவியையே ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான் காதல் கணவன்.

 

அவனிடம் சண்டையிட வேண்டும் என்று மனதிற்குள் உருப்போட்டு வந்தாலும், அவளுக்கு இந்த தனிமை சற்று மிரட்டியது. அவனிடம் பேசவும் தயக்கம் வந்தது.

 

வெற்றியோ வெகு இயல்பாக, “வாவ் இந்த காஸ்ட்யூம் உனக்கு ரொம்ப அழகா இருக்கே!” எனக் கூற,

 

 

திருதிருவென விழித்தவள், தலையை மட்டும் உருட்டினாள். நேத்திருந்து கட்டின புடவைங்க எல்லாம் இவரு கண்ணுல விழலையாக்கும் என்ற எண்ணம் தான் சட்டென்று மேலெழுந்தது. காரியம் ஆக வேண்டும் என்றால் இப்பொழுது உடுத்தியிருக்கும் புடவை மட்டும் கண்ணுக்குத் தெரிந்து விடுகிறதா என்று சினம் கூட எழுந்தது. அவள், தன்னுடைய பயத்தை, பதற்றத்தை மறைக்க அவன் மீதுள்ள கோபத்தை உடும்பு பிடியாய் பிடித்துக் கொண்டாள்.

 

 

“கையில என்ன?” என்று கேட்டபடி சாதாரணமாக நெருங்கி வந்தவனைக் கண்டு தன்னிச்சையாக இரண்டடி பின்னால் போயிருந்தாள்.

 

 

“இப்ப என்ன நமக்கு தான் கல்யாணமே முடிஞ்சுடுச்சே” என்றான் குழப்பமாக. முன்புதான் விலகி நிற்பதிலேயே குறியாக இருப்பாள். அவனாக விடாப்பிடியாகப் பிடித்தால் மட்டுமே நெருக்கம். இப்பொழுது என்ன? என்னும் எண்ணம் அவனுக்கு.

 

 

“அதுக்கு?”

 

 

“என்ன அதுக்கு? இன்னும் ஏன் நான் கிட்ட வந்தா பயப்படற” என்றான் புரியாமல். கூடவே, “ஓ கண்டுபிடிச்சுட்டேன் வெக்கமா?” என்றான் அவளை ரசனையாகப் பார்த்தபடி.

 

 

அவளுக்கிருந்த எரிச்சலில், “அச்சமும் நாணமும் நாய்கட்கு வேண்டுமாம்” என்றாள் வீராப்பாய். சட்டென்று பாரதி கூறிய வரிகள் தான் நினைவில் எழ, அதைச் சொல்லிவிட்டாள்.

 

 

அருமையான வரிகள் தான். ஆனால், என்ன சொல்ல வேண்டிய ஆள் தான் தப்பாகப் போய் விட்டது. அவனுக்குச் சுத்தமாகப் புரியவில்லை. வெற்றிக்குப் பேச்சு வழக்கு தமிழ் நன்கு பரிட்சியம் தான். ஆனால், இப்படி கவித்துவமான, வழக்கு வார்த்தைகளற்ற தமிழ் எல்லாம் அவனுக்குப் பழக்கமில்லை.

 

 

ஆனாலும், அவளது முகத்தின் பாவனையில் அரையும் குறையுமாக எதுவோ புரிய, “அப்படின்னா?” எனக் குழப்பமாகக் கேட்டான்.

 

 

‘ங்ஙே…’ என விழித்தாள் புதுப்பெண். என்ன விளக்கவுரை கேட்பான் போல! என்றிருந்தது அவளுக்கு.

 

அவளது பார்வையை உணர்ந்து, “இல்லை ரொம்ப தமிழா இருந்தா எனக்குப் புரியாது” என்றான் பாவமாக.

 

 

“இதுல என்ன ரொம்ப தமிழ்? நாலு வார்த்தை தானே?” என்று குழப்பத்தை வாய் வார்த்தையாகக் கேட்டு அவனை ஏறிட்டாள்.

 

இது கூடவா புரியாது. கேலி செய்கிறானோ என்று தான் முதலில் நினைத்தாள். ஆனால், அவனுக்கு உண்மையிலேயே புரியவில்லை என்று அவனது முகமே தெளிவாக காட்டிக் கொடுத்தது.

 

 

[the_ad id=”6605″]

 

 

 

“கேள்வியா கேட்காம விளக்கம் சொல்லேன் மாஹி…” என்றான் பாவமாக.

 

 

“அச்சம்ன்னா பயம். நாணம்ன்னா வெக்கம்… நாய்கட்கு அப்படின்னா நாய்’க்கு… வேணுமாம்” என்றாள் ஒவ்வொரு வார்த்தைக்கும் விளக்கம் தந்து.

 

 

“ஓ… ‘பயமும், வெக்கமும் நாய்களுக்கு வேணுமாம்’ இதைத்தான் அப்படி சொன்னியா? ஏன் புரியிற மாதிரி சொல்ல மாட்டியா?” என்று அவளிடம் மேலும் கேட்க, அவளுக்கு ஐயோ என்றானது.

 

 

“ஏன் நேரா புரியிற மாதிரி சொன்னா என்ன?” என்று மீண்டுமொருமுறை அவன் கேட்க,

 

 

அவளுக்கு இன்னும் அதே ‘ங்ஙே…’ பார்வை தான்.

 

 

“என்ன ரியாக்ஷன் இது?” என்றான் புரியாமல்.

 

 

“இது நான் சொல்லலை. பாரதியார் பாட்டு” என்றாள் கடுப்பாக. பின்னே ஞானசூனியனாக அல்லவா இருக்கிறான் என்பது அவளது எண்ணம். அவன் பிறந்து, வளர்ந்தது வேறு இடம் ஆயிற்றே! அது இவளுக்குச் சட்டென்று நினைவில் வரவில்லை.

 

 

“ஓஹோ… உனக்குக் கூட அவரோட ரைட்டிங்ஸ் ரொம்ப பிடிக்குமே! சரி நாய் எதுக்கு பயப்படணும்? வெக்கப்படணும்?” என்று தன் அதிதீவிர சந்தேகத்தைக் கணவன் கேட்க, அவன் கேட்ட தொனியில் சிரிப்பு வந்தாலும், கோபமாக இருப்பதால் சிரிப்பை மில்லி மீட்டர் அளவு கூட வெளிப்படுத்தாமல் அவனை முறைத்துப் பார்த்தாள்.

 

“என்ன மாஹி? என்ன கோபம் உனக்கு? ஏன் ஒரு மாதிரி இருக்க?” அவளது பாவனை தாங்க மாட்டாமல் கெஞ்சுதலாகக் கேட்டான்.

 

“எதுவும் இல்லை. தூக்கம் வருது. தூங்குவோமா?” என்றாள் சுவற்றை வெறித்தபடி.

 

அவன் எந்த பதிலும் கூறவில்லை. படுக்கையை கை காட்டியவன், சரியாக மூடாமல் இருந்த கதவை நன்கு மூடி தாளிட்டு விட்டு, விடி விளக்கைப் போட்டு, பெரிய விளக்கை அணைத்து அவள் தூங்க ஏதுவாக அந்த அறையைத் தயார் செய்து விட்டு பால்கனி நோக்கி சென்று விட்டான்.

 

Sugamathi

தமிழில் எழுதுவதில் எல்லையற்ற ஈடுபாடு தோன்றுகிறது. காரணங்கள் இதுவரை பிடிபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!