Skip to content
Post Views: 670
அத்தியாயம் 9
ரேவதிக்கு மகளை நினைத்து கவலையாகவும் இருந்தது அதே நேரம் பெருமையாகவும் இருந்தது. இந்த காலத்து இளைஞர்கள் யார் இப்படி எல்லாம் விரதம் இருந்து பிரார்த்தனை எல்லாம் செய்கிறார்கள். அதுவும் மகள் தன் அத்தைக்காக இதை செய்வது பெரிய விஷயமாகவே பட்டது அவருக்கு. அவர் கூட இதுவரை பெரிதாக விரதம் எல்லாம் இருந்தது இல்லை.
Advertisement
முதல் நாள் காலை ஐந்தரை மணிக்கு ரேவதியும் எழிலரசியும் வீட்டில் இருந்து புறப்பட்டனர்.
ஆறு மணிக்கு எல்லாம் கோவில் திறந்திருக்கும்.
Advertisement
Advertisement
எழிலரசி அடிப்ரதக்ஷணம் செய்து முடித்து தீபாராதனை பார்த்து இருவரும் மீண்டும் கிளம்பி வீட்டிற்கு வர ஏழு மணி ஆகிவிட்டது. ரேவதியும் வேலைக்கு கிளம்ப வேண்டும் என்பதால் அரக்க பறக்க உள்ளே நுழைந்தார். ஆனால் காலை உணவு மதிய உணவு என்று அனைத்தையும் சாந்தியும் மீனாவும் மகன்களிடம் கொடுத்து அனுப்பி வைத்திருந்தார்கள்
எழில் பால் மட்டுமே அருந்திவிட்டு கல்லூரிக்கு தயாராகினாள்.
Advertisement
“நாளைல இருந்து நீ வீட்ல பாரும்மா, நான் கோவிலுக்கு தமிழ் கூட போய்ட்டு வரேன்” என்றாள் அம்மாவின் வேலையை பற்றி புரிந்து கொண்டு.
அதை கேட்டுக்கொண்டிருந்த குகன், பாலமுருகன் இருவரும் “நாங்க எதுக்கு இருக்கோம், ஆளுக்கொரு நாள் நாங்க துணைக்கு கூட போறோம். ஏன் முருகன் அருள் எங்களுக்கு கிடைக்க கூடாதா?” என்றனர்.
சொன்னது போலவே ஆளுக்கொரு நாள் என்று எழிலுடன் கோவிலுக்கு சென்றனர்.
சமீபகாலமாக நாகரத்னா ரேவதிக்கு இடையில் நல்ல நட்பு புரிதலுடன் வளர்ந்தது. விழா அன்று மகள் ரத்னாவுடன் மகிழ்ச்சியாக பேசியது ரேவதிக்கு நன்றாக நினைவில் இருந்தது.
அதனால் அவர் ரத்னாவிற்கு அழைத்து, மகள் தினமும் காலையில் அவர்கள் வீட்டின் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு வருவதை தெரிவித்து சுருக்கமாக விஷயத்தையும் தெரியப்படுத்தினார்.
“என் பொண்ணுகிட்ட உனக்கு நேரம் கிடைக்கும் பொழுது பேச முடியுமா? நாங்க சொல்றதை அவ புரிஞ்சுக்கவே மாட்டேங்குறா, இதே வெளில இருந்து நீ சொன்னா, காது கொடுத்து கேட்கிறாளா பார்ப்போம்” என்று கேட்டார் ஒரு உதவியாக.
“கண்டிப்பா நான் பேசுறேன் ரேவதி. அது என்ன நேரம் இருந்தான்னு சொல்ற, நானும் இதை சாக்கா வைச்சு தினமும் முருகனை ஒரு எட்டு பார்த்துட்டு வரேன். எதுக்கு இவ்வளவு கவலை படற? அவ அத்தை மீது ரொம்ப பாசமா இருந்திருக்கா, அவங்க இழப்பில் இருந்து மீண்டு வர நாள் ஆகும் இல்லையா?”
“என்னமோ மனசுக்கு ஒரு பாரமாவே இருக்கு. அவ மனதளவில் பாதிக்க பட கூடாதுன்னு இருக்கு. நீ பேசி பாரு ரத்னா” என்று அழைப்பை வைத்து விட்டார்.
அடுத்த நாளில் இருந்து தினமும் காலையில் அதே நேரத்திற்கு நகரத்னாவும் கோவிலுக்கு வந்தார். கார்த்தி அன்னைக்கு துணையாக வந்தான்.
கார்த்தி அம்மாவை விட்டுவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று விடுவான். அவனுடன் பாலு குகன் யார் வந்தாலும் அவர்களும் சென்று அங்கேயே ஒரு அரை மணி நேரம் மீண்டும் ஒரு குட்டி தூக்கத்தை போட்டு விடுகிறார்கள்.
ரத்னாவும் எழிலும் பூஜையை முடித்து கொண்டு இவர்கள் வீட்டிற்கு வந்ததும், அண்ணனுடன் எழில் கிளம்பிவிடுவாள்.
நல்ல புரிதல் ஏற்பட்டது ரத்னாவிற்கும் எழிலுக்கும் இடையில். எதையும் இது தான் சரி இது தவறு என்று ரத்னா கூறாமல், எழில் கூறியதை கேட்டு அவருடைய கருத்தை நேர்மையாக பகிர்ந்து கொள்வது எழிலை கவர்ந்தது.
பத்து நிமிடம் பேசினால் குறைந்தது நான்கு முறையாது அனுராதா பற்றி பேசிவிடுவாள் எழில்.
—–
அன்று குழந்தையையும் கவியையும் அவர்கள் வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக கவியின் மாமனார் மாமியார் கணவர் என்று எல்லாரும் வந்திருந்தார்கள்.
மாலை நான்கு மணிக்கு தான் நல்ல நேரம். அப்பொழுதே புறப்படலாம் என்று கூறி இருந்தார்கள்.
“காலை உணவு முடிந்து மதிய உணவிற்கான ஏற்பாடுகளை பார்க்க எழுந்த பெண்களை ஒரு முக்கியமான விஷயம் பேசணும். எல்லாரும் இங்கவே இருங்க” என்றார் கவியரசியின் மாமியார்.
அன்று விடுமுறை தினம் வேறு என்பதால் சிறியவர்கள் பெரியவர்கள் என்று அனைவரும் அங்கு தான் இருந்தார்கள்.
“சொல்லுங்க அக்கா, என்ன விஷயம்” என்றார் சண்முகம்.
“கவி அப்பாக்கு ஒரு நல்ல இடம் வந்திருக்கு. எங்களுக்கு தூரத்து சொந்தம் தான். பொண்ணுக்கு நாற்பது வயசாகுது. கொஞ்சம் கஷ்டப்படற குடும்பம். இந்த பொண்ணு தான் இரண்டு தங்கச்சியை கரை சேர்த்துச்சு. அதான் இன்னும் கல்யாணம் ஆகாம தனியா நிற்குது. நமக்கு சரின்னா, மேலே பேசலாம். என்ன சொல்றீங்க?” என்றார் விளக்கமாக.
மகளை பற்றி தெரிந்த ரேவதி மகளின் கைகளை இறுக்கமாக பிடித்து கொண்டு அவள் பக்கத்திலே அமர்ந்து கொண்டார். கையின் அழுத்தமே கூறியது நீ எதுவும் பேசக்கூடாது என்று.
அனைவரும் அமைதியாகவே இருந்தனர் சில நிமிடங்கள்.
“எனக்கு இன்னொரு கல்யாணத்துல விருப்பம் இல்லை சம்பந்தி அம்மா. என்னை தப்பா நினைக்காதீங்க. அந்த பொண்ணுக்கு வேற நல்ல வரனா பாருங்க” என்றார் விஜயன் திடமான குரலில்.
“ஏம்ப்பா வேணாம்னு சொல்றீங்க? எனக்கு இதுல ஒன்னும் சங்கடம் இல்லை. இதோ நானும் பாப்பாவும் இன்னிக்கு எங்க வீட்டுக்கு போயிடுவோம். நீங்க தனியா தானே இருக்கணும். நீங்க கல்யாணம் செஞ்சுக்கிட்டா, உங்ககூட துணையா ஒருத்தர் இருப்பாங்க இல்ல.. எத்தனை வருஷம் தான் நீங்க தனியா இருப்பீங்க?” என்றாள் கவியரசி.
அப்பா மீது எழிலை விட தனக்கு அக்கறை இருக்கு என்று நிரூபிக்க கவியரசி முடிவு செய்து விட்டாள்.
“இதுவே இறந்தது நானா இருந்திருந்தா உங்க அம்மாக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சு வச்சிருப்பீங்களா?”
“மச்சான்.. “
“என்ன மச்சான் இப்படி சொல்றீங்க?”
“எங்க தங்கச்சி உங்களை எப்படி நேசிச்சான்னு உங்களுக்கு தெரியாதா? பேச்சுக்கு கூட இப்படி எல்லாம் பேசாதீங்க. அனுவை பறிகொடுத்துட்டே இன்னும் தவிச்சிச்சு போய் இருக்கோம். இன்னொரு இழப்பை எல்லாம் எங்களால தாங்க முடியாது. உங்களுக்கு கல்யாணம் வேணாம்னா விடுங்க.. அதுக்கு இறப்புன்னுலாம் பேசாதீங்க.”
மூன்று அண்ணன்களும் பரிதவித்ததனர்.
“இங்க பாருங்க நான் சொல்றது எதார்த்தம். கொஞ்ச காலம் புதுசா வரவங்களை ஏத்துக்க கஷ்டமா இருக்கும். ஆனா நாள் ஆக ஆக மனசு தானாவே பொருந்திப்போகும். எமோஷனலா யோசிக்காம பிராக்டிக்கலா யோசிங்க” என்றார் கவியரசியின் மாமனார்.
இப்படி பேச்சுக்கள் நீண்டுக்கொண்டே சென்றது.
“என் மனசுல ராதா மட்டும் தான் இருக்கா.. நான் என்ன ஹனுமாரா, நெஞ்சை பிளந்து காட்ட” என்றார் விஜயன் கடைசியில் கொஞ்சம் கோபமாகவே.
“ஏம்ப்பா பிடிவாதம் பிடிக்கிறீங்க.. அம்மாவும் நீங்க இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கணும் தானே ஆசை பட்டாங்க..”
“உங்க அம்மா என் உயிரோடு கலந்து இருக்கா கவி.. அவ மேல நான் வச்ச நேசத்தை ஏன் யாருமே புரிஞ்சுக்கவே மாட்டேங்குறீங்க..” என்றார் ஆதங்கமாக.
அதுவரை பொறுமையாக இருந்த எழில்,
“என்ன மாமா உங்க நேசம் பெருசா சொல்றீங்க? உண்மையிலே அத்தை மேலே நேசம் இருந்தா அவங்க கடைசி ஆசையை ஏன் நிறைவேத்த மாட்டேங்குறீங்க? இதுலயே தெரியுது உங்க நேசத்தின் அளவு” என்று சற்று ஏளனமாக பேசினாள்.
விஜயன் முகம் மிகவும் வேதனையை காட்டியது. அதை பார்த்து பொறுக்காத சரவணன், “எழில் பேசாம இரு”, என்றார் அதட்டலாக.
“ஏன் நான் பேசக்கூடாது. அத்தைக்காக நான் பேசுவேன். அத்தை மேலே அன்பு இருந்தா அவர் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருந்திருப்பார்” என்றாள் அடங்கா சினத்தோடு.
‘கடவுளே!!!’ என்று விஜயன் நொந்து போய் அமர்ந்துவிட்டார். அவர் கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது.
அதை பார்த்த சரவணன், பளார் என்று மகளை அறைந்துவிட்டார்.
“சரவணா, என்ன இது பிள்ளைய எதுக்கு அடிக்குற” என்றார் சண்முகம் இப்பொழுது அதட்டலாக.
“இவ ஏன் இப்படி செய்யுறா? எதுக்கு அத்தைக்காக பேசி அடி வாங்குறா?” என்றாள் தமிழரசி குகனிடம் வருத்தமாக.
“ஒரு வேலை அத்தையோட ஆவி இவக்குள்ளாற புகுந்து இருக்குமோ?”என்றான் குகன் கேள்வியாக.
இவர்கள் பேசுவதை கேட்டு, “என்னது? “ என்று நெஞ்சை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டார் ரேவதி. ‘அப்படியும் இருக்குமா?’ என்று.
“அய்யோ சித்தி, நீங்க வேற. அவங்க தான் லூசு மாதிரி உளர்ராங்கனா நீங்க வேற..” என்று பாலு தான் ரேவதிக்கு ஆறுதல் சொன்னான்.
“தப்பா நினைக்காதீங்க அக்கா. எங்க மச்சானுக்கு இஷ்டம் இல்லைன்னு சொல்றாரு. கொஞ்சம் நாள் போகட்டும் அப்புறம் பேசலாம்” என்றார் சண்முகம் கவியின் மாமியாரிடம்.
“ரொம்ப நாள் கடத்தவேண்டாம்னு தான் இப்ப சொன்னேன். அவருக்கும் வயசு எறிகிட்டே தானே போகும். அப்புறம் உங்க இஷ்டம்” என்று முடித்து கொண்டார் அவர்.
‘அவருக்கு நான் எல்லாம் முற்போக்கு சிந்தனை கொண்ட ஆள். மருமகளின் அப்பாவிற்கே மறுமணம் செய்ய ஏற்பாடு செய்றேன்’ என்று பெருமை பேசிக்கொள்ள வேண்டும். அவர் ஒரு ரகம்.
மறுநாள் கோவிலில் எழிலை சந்தித்தித்த ரத்னா அதிர்ந்து விட்டார்.
“என்ன தங்கம் யார் அடிச்சது உன்னை?” என்று கன்றிப்போய் இருந்த கன்னத்தை மெதுவாக வருடிக்கொடுத்தார்.
அவளுக்கு அத்தை நியாபகம் வந்துவிட்டது. இப்படி தான் யார் அவளை என்ன சொன்னாலும் அவரை அரவணைத்து கொள்வார் எப்பொழுதுமே.
அழுது கொண்டே வீட்டில் நடந்தவற்றை கூறினாள்.
“நீங்களே சொல்லுங்க ஆன்ட்டி, நான் இந்த வேண்டுதலை செய்யும் போது, இப்படி ஒரு வரன் வந்திருக்கே. அப்ப அந்த முருகன் தானே அதை அனுப்பி வைத்திருப்பார்” என்றாள் ரத்னாவிடம்.
அன்று தங்கையை விட்டு செல்ல மனமில்லாமல் பாலு கோவில்லே இருந்தான். அவனுடன் கார்த்தியும் நின்றுகொண்டான்.
ரத்னாவும் எழிலும் சுற்றுப்பிரகாரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
சற்று தள்ளி ஆண்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
கலங்கிய கண்களும் கன்றி சிவந்த கன்னங்களும் என்று பரிதவிப்புடன் ரத்னாவை பார்த்து பேசிக்கொண்டிருந்த எழிலின் முகம் கார்த்தியின் மனதை பிசைந்தது. எதற்காக இந்த பெண் இவ்வளவு வருத்தப்படுது என்று.
பாலுவும் சுருக்கமாக விஷயத்தை கூறினான் கார்த்தியிடம்.
“எங்க அம்மாவுக்கு கூட இன்னொரு கல்யாணம் செய்ய சொல்லி எங்க மேம் ஒருத்தவங்க சொன்னாங்க.. அப்ப எனக்கு ஒருகோபம் வந்துச்சு பாருங்க அண்ணா.. அப்படி ஒரு கோபம்..”
“என்னது ஆன்ட்டிக்கா?” என்றான் பாலு ஆ என்று வாய் பிளந்து.
“ஆமாம், உங்க அம்மாக்கு சின்ன வயசுதான், வாழ்க்கை இன்னும் நீண்டு இருக்கு. ஒரு துணை அவசியம்னு” எங்க மேம் சொன்னாங்க.
பாலு அதிர்ச்சி விலகாமல் பார்த்திருந்தான்.
“உங்க மாமாக்கு கல்யாணம்ன்னு பேசுறப்ப உங்களுக்கு இவ்வளவு அதிர்ச்சி ஏற்பட்டுச்சா?” என்றான் கார்த்தி சிரித்து கொண்டே.
இல்லைதானே என்று யோசித்தான் பாலு.
மன்னிப்பு பார்வை பார்த்தான் கார்த்தியை.
“எனக்கும் இந்த பக்குவம் வர இவ்வளவு நாள் ஆச்சு அண்ணா. மறுமணம் தப்பு-சரி, தேவை-தேவை இல்லை, அவசியம்-அவசியமில்லை இது எல்லாமே விவாதத்துக்குரியது. ஆனா அது தனி நபர் விருப்பம். தனிநபர் சுதந்திரம். அதை உங்க தங்கச்சி புரிஞ்சுக்கிட்டா இவ்வளவு கஷ்டம் தேவை இல்லை. உங்க மாமா அத்தை வாழ்கை, அவங்க அன்பு, அவர் விருப்பம் இது தானே இங்கே முக்கியம்?“ என்றான் கார்த்தி.
“நீ சொல்ற மாதிரி, ஒரு வேலை உங்க அம்மாக்கு விருப்பம் இருந்தா? “
“ஏத்துக்க கஷ்டம் தான். முன்ன அதை யோசிக்க கூட எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் இப்ப அம்மாக்கு விருப்பம் இருந்தா நான் மனதார ஏத்துப்பேன்”
பாலுக்கு கார்த்தியின் பேச்சு மிகவும் வியப்பாக இருந்தது. “நீ ரொம்ப தெளிவா பேசுற கார்த்தி” என்றான் உணர்ந்து.
“இந்த தெளிவு எங்க அம்மாவும் நந்திதா மேமும் கொடுத்தது. நானும் முதலில் குழம்பி கோபப்பட்டேனு சொன்னேன் இல்ல..” என்றான் மெல்லிய சிரிப்புடன்.
“அப்ப ஆன்ட்டியே எழில் கிட்ட பேசட்டும். அவளும் குழம்பி போய் தான் இருக்கா” என்றான் பாலு.
“சரி அப்ப வாங்க நாம வீட்டுக்கு போலாம். நான் உங்களுக்கு காஃபி போட்டு தர்றேன்”
இவர்கள் இருவரும் முன்னே வீட்டிற்கு நடந்து சென்றார்கள்.
“நீங்களே சொல்லுங்க ஆன்ட்டி, எங்க அத்தை எங்க மாமாவை எவ்வளவு காதலிச்சிருந்தா, அவருக்கு இன்னொரு கல்யாணம் செய்ய சொல்லி இருப்பாங்க. அவங்க காதலை எங்க மாமா புரிஞ்சுக்கலை தானே” என்றாள் எழில் ஆதங்கமாக.
“சரி நான் ஒன்னு கேட்கிறேன். காதல்னு சொல்றியே? யாரோட காதல்? “
“அத்தையோட..”
“யார் மீதான காதல்.”
“மாமா மேலே..”
“உங்க அத்தையோடது ஒரு தலை காதலா?”
எழில் சற்று தயங்கி.. “இல்லை.. “ என்றாள்
“உங்க அத்தையோட காதலுக்காக இவ்வளவு போராடுறியே, உங்க அத்தை மேலே உங்க மாமா வச்சிருக்க காதல் ஏன் உன் கண்ணனுக்கு தெரியலை?
“——————”
“உங்க அத்தையோடு கடைசி நாட்கள், வலி வேதனை இப்படி போச்சு.. திடீர்னு வந்த நோய் எல்லாம் அவங்களை பலவீனப் படுத்தியிருக்கு.
உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் அவங்க சோர்ந்து போன சமயம். நோயோட தன்மை மருந்துகளோட வீரியம்.. இப்படி ஒரு சூழ்நிலையில அவங்க கண்டதையும் போட்டு மனசை குழப்பி உன்னையும் குழப்பி விட்டிருக்காங்க.
அவங்க ஆரோக்கியமா இருந்த நாட்களில் இப்படி கணவருக்கு மறுமணம்ன்னு நினைச்சாவது பார்த்திருப்பாங்களா?”
“———————-”
“உங்க அத்தையோட இழப்புல இவ்வளவு நீயே பாதிச்சிருக்கப்ப, உங்க மாமாவை பத்தி யோசிச்சியா?
“———————-”
“நீ சொல்ற மாதிரியே இன்னொரு கல்யாணம் நடந்தா வர்ற பொண்ணை முழு மனசா உன்னால அத்தையா ஏத்துக்க முடியுமா?”
“————————-”
“நீயே தெளிவா யோசி.. உங்க அத்தையோட கடைசி நாட்களை விட்டுட்டு, உங்க அத்தையோட மகிழ்ச்சியான நாட்களை எல்லாம் யோசி.. அவங்க சந்தோசம் எங்க இருந்தது.. அவங்க காதல் எப்படி இருந்தது.. நீயும் உங்க அத்தையும் தோழிகள் மாதிரி தானே இருந்திருக்கீங்க.. அப்ப அவங்க காதலை பத்தி உனக்கு தெரியாதா?”
“———————-”
எழிலுக்கு இப்பொழுது தான் பார்வை மாறியது. மாமாவின் பிறந்தநாளைக்கு அத்தை எவ்வளவு ஆசையாக இந்த முருகனிடம் வருவார். அவர்கூட போன் பேசும்பொழுது மட்டும் அத்தையின் முகம் பூவாய் மலர்ந்திருக்குமே!
“ஒரு வகையில உங்க அத்தை உனக்கு அம்மா மாதிரி சரிதானே?”
ஆமென்று தலை ஆட்டினாள்.
“அப்ப உங்க மாமாவும் உனக்கு அப்பா மாதிரி தானே எழிலு. அவரும் பாவம் இல்லையா?”
“உங்க அத்தை காதலை.. நேசத்தை கொண்டாடுற எல்லாருமே அவர் நேசத்தை ஏன் கேள்வி குறி ஆக்குறீங்க?”
“——————–”
“நீ அவர்கிட்ட பேசிப்பாரு. அவர் நேசத்தை புரிஞ்சுக்க பாரு.. அப்புறம் அவரை கட்டாய படுத்தலாம். கடைசி நேரத்துல உங்க அத்தை சொன்னதை மட்டுமே பிடிச்சுக்கிட்டு, இருபத்தி அஞ்சு வருஷம் அவங்க வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாம செய்ய முடியாது இல்லையா?”
எழிலரசியின் முகம் சற்றே தெளிந்தது. அவளை சுற்றி இருந்த மாயை விலகியது போல இருந்தது.
இருவரும் சென்று முருகனை மீண்டும் ஒரு முறை வணங்கிவிட்டு, ரத்னா வீட்டை நோக்கி நடந்தனர்.
“நம்மை சுத்தி நிறைய நடக்கும். நமக்கு சாதகமானதை முருகன் காட்டினதா எடுத்துக்க கூடாது. நிதானமா யோசிச்சா முருகன் காட்டுற வழி புலப்படும் சரியா..”
“தேங்க்ஸ் ஆன்ட்டி”, என்று அவரை கட்டி அணைத்துக்கொண்டாள் எழிலரசி.
ரத்னா சொன்ன கோணத்தில் யோசிக்க தொடங்கினாள்.
அன்று மாலை கல்லூரி முடிந்து வந்ததும், விஜயனிடம் தான் பேசியதற்காக மன்னிப்பை வேண்டினாள்.
“நானும் ராதாவும் பேசும்போது எல்லாம் கவியை பத்தி சொன்னதை விட உன்னை பத்தி தான் அதிகம் சொல்லுவா ராதா.. எனக்கு நீயும் பொண்ணு தான் டா.. எங்களுக்காக பேசி நீ தான் அடி வாங்கிட்ட” என்றார் வருத்தமாக.
ரத்னா சொன்னது தான் நினைவிற்கு வந்தது. எங்களுக்காக பேசி என்று இந்த மனிதர் அத்தையையும் இவரையும் இணைத்து தானே சொல்றாரு என்று.
“நீங்க உங்க காதல் கதையை எனக்கு செல்லுங்க.. எனக்கு பிடிச்சா திரும்ப உங்க கல்யாணத்தை பத்தி பேசவே மாட்டேன்” என்றாள் எழில் தலையை லேசாக சாய்த்து கொண்டு.
“எங்களுக்கும் சேர்த்து சொல்லுங்க” என்று வந்து குதித்தனர் தமிழ், குகன், பாலு மூவரும்.
‘நீங்க எங்கடா இருந்தீங்க’ என்று பார்த்தார் விஜயன்.
“மாமா நீங்க நால்லா யோசிச்சு அழகா உங்க காதல் கதையை சொல்றீங்க. அதை கேட்டு மணிரத்னம் சாரே ஒரு படம் எடுக்கணும் சரியா” என்றாள் தமிழ்.
“போ தமிழு, மணி ரத்னம் படம் காதே கேட்காது.. மெதுவா வாய்குள்ளவே பேசுவாங்க.. ஸ்லொவ் மோஷன் வேற..” என்றான் குகன்.
“அதுவும் சரிதான்..”
“மாமா நீங்க சொல்ற கதையிலதான் உங்க நிம்மதியே இருக்கு.. எல்லாரும் இன்னொரு கல்யாணத்தை பத்தி பேசுறதை நிப்பாட்ட இது ஒன்னு தான் ஒரே வழி..” என்றான் பாலு டிடெக்ட்டிவ் போல.
“ஆமாம்.. நல்ல லவ் ஃபீலோட அங்கங்கே லைட் ரொமான்ஸ் சேர்த்து சொல்லுங்க” என்றான் குகன்.
“போங்கடா எல்லாரும்” என்று அழகாக வெட்கப்பட்டார் விஜயன்.
“அய்யோ மாமா எவ்வளவு அழகா வெட்கப் படுறாரு” என்றாள் தமிழ்.
“அவங்க காதல் கதையை நினைச்சாலே வெட்கமா? அய்யோ, மாமா வெக்கப்படறதை பார்த்தா எனக்கே வெட்கமா இருக்கே” என்றான் குகன்.
ஆளை விடுங்க டா சாமி என்று விஜயன் ஓடியே போய் விட்டார்.
அதன் பிறகு விடாமல் அவரை உட்காரவைத்து அவர்கள் காதல் கதையை கூற வைத்தனர் பிள்ளைகள்…
—————————
error: Content is protected !!