Skip to content
Post Views: 1,344
அத்தியாயம் 12
மோகனனின் பள்ளிக்கு புதிதாக வந்திருந்தார் ஒரு ஆசிரியை. அவரை தன் புது வீட்டில், தன் பெற்றோரோடு பார்த்த நினைவு வந்தது அவனுக்கு. அவருக்கும் அந்த நினைவு வந்திருக்க வேண்டும்.
மோகனன் அருகே வந்து அவன் நலம் விசாரித்தவர், “அம்மா அப்பாவை கேட்டதா சொல்லு மோகனன். அதோட வீட்டில் உங்களோட நிறைய திங்க்ஸ் இருக்கு. அதை எப்ப எடுத்துக்கிறாங்கன்னு நான் கேட்டதா சொல்லு.” என்றார்.
“எந்த வீட்டைப் பத்தி பேசுறீங்க டீச்சர்.” குழப்பமாகக் கேட்ட அந்த சிறுவனின் நெஞ்சை அறுக்கும் அளவுக்கு, “கண்ணகி நகரில் இருக்கும் உங்க பழைய வீடு மோகனன்.” என்றார்.
Advertisement
கண்ணகி நகர் என்கிற பெயரைக் கேட்டதும், ஜோராக மழை பெய்யும் சத்தமும், சரஸ்வதியின் அலறலும், அந்தக் கொடூரர்களின் குரலும் மோகனன் காதுகள் வழியே வேகமாக மூளையைத் தாக்கியது. உயர்ந்து கொண்டிருந்த இரத்த அழுத்தத்தின் காரணமாக மூளை நரம்புகள் விரிவடைந்து இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரித்தது. அது தொடர்ந்தால் மூக்கில் இருந்து இரத்தம் வந்து மயங்கி விழுந்துவிடுவான் மோகனன். இதற்கு முன்னர் சில முறை இப்படி நடந்திருக்கிறது. இது தொடர்ந்தால் உயிருக்கே ஆபத்து என்றும், மோகனன் மனது வைத்து இந்தப் பிரச்சனை வரவிடாமல் தடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி இருந்தார் மனநல மருத்துவர்.
அது நினைவு வர, இத்தனை நாள் கற்றுக்கொண்ட பாடத்தின் பலனாக, ‘இல்ல, அது எல்லாம் எப்பவோ நடந்து முடிஞ்சிடுச்சு. சரஸ்வதி அக்கா இப்ப நல்லா இருக்காங்க. தப்பு பண்ணவங்க தண்டனை அனுபவிச்சுட்டாங்க. எல்லாம் நார்மல் ஆகிடுச்சு.’ என்பதை தனக்குத் தானே மந்திரம் போல் சொல்லியபடி தன் பதற்றத்தை குறைக்கப் பார்த்தான் மோகனன்.
“என்னாச்சு மோகன்?” பரிவுடன் கேட்டார் ஆசிரியர்.
Advertisement
“கண்ணகி நகர் வீட்டுக்கு என்னாச்சு டீச்சர். அங்க இருக்கிறவங்களுக்கு எதுவும் பிரச்சனையா?” சரஸ்வதி அக்காவிற்கு எதுவும் ஆகி இருக்கக் கூடாது என்று மனதோடு வேண்டியபடி அவன் கேட்க, “நாங்க அங்க குடி வந்த இந்த நாலு மாசத்தில் எந்தப் பிரச்சனையும் இல்ல. கொலை நடந்த வீடுங்கிறதால் அப்பாவும், அம்மாவும் ரொம்ப பயந்தாங்க. ஆனா வீட்டைப் பார்த்த பிறகு அவங்களுக்கு பிடிச்சுப் போச்சு. யாகம் நடத்திட்டு நாங்க குடிபோனோம். எல்லாம் நல்லபடியாவே போகுது. அதோட அந்த வீடு நல்ல ராசியாவும் இருக்குன்னு சொன்னாங்க.” என அவர் தன்போக்கில் சொல்லிக்கொண்டே போக, “கொலை” என்கிற வார்த்தையிலே நின்று போனது மோகனனின் மனம்.
Advertisement
“என்ன கொலை, யார் இறந்தது?” என அவன் மெலிதாய் முனக, அது தன் காதில் விழுந்துவிட்டதில், “சரஸ்வதின்னு ஒரு பொண்ணு அவங்க புருஷனால் அந்த வீட்டில் கொல்லப்பட்டாங்களே. சம்பவம் நடந்த நேரம் நீயும், உன் தம்பியும் சொந்தக்காரங்க வீட்டில் இருந்ததா உன்னோட அம்மா சொன்னாங்க. நீ பயந்திடக் கூடாதுன்னு உன் அம்மா சொல்லாமல் விட்டு இருப்பாங்க.” என்று தன்னைப் போல் அவர் சொல்ல, “சரஸ்வதி அக்கா இறந்துட்டாங்களா, எப்ப?” உள்ளே போன குரலில் கேட்டான் மோகனன். அவன் முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளுத்துக்கொண்டே வந்தது.
“சம்பவம் நடந்த அன்னைக்கே அவங்க இறந்துட்டாங்களே தம்பி. பணம் கேட்டு அவங்க புருஷன் அடிச்சதும் பயந்து போனவங்க உங்க வீட்டுக்கு அடைக்கலம் தேடி வந்திருக்காங்க. கோபத்தில் அங்க வந்தவர் சரஸ்வதியை கொடூரமாகத் தாக்கியதில் சரஸ்வதி சம்பவ இடத்திலேயே இறந்துட்டாங்க.” என்று தனக்குத் தெரிந்ததை சொன்னார் ஆசிரியர்.
நடந்த சம்பவத்தை அப்படியே வெளியே சொன்னால் அது வாழ வேண்டிய ஒரு சிறுவனின் மனநலத்தைப் பாதிக்கும் என்பதால் மனிதாபமானமுள்ள ஒரு காவலர் இந்த யோசனை சொல்லி இருக்க, அப்படியே சொல்லி வைத்திருந்தனர் ஆனந்த், பைரவி இருவரும். அந்த நகர் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாதது என்பதால் என்ன நடந்தது என்பது சம்பந்தப்பட்டவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாமலே போய் இருந்தது.
Advertisement
“சரஸ்வதி அக்கா செத்துட்டாங்களா? அன்னைக்கே செத்துட்டாங்களா?” தனக்குள்ளே புலம்பியபடி நின்ற இடத்தில் இருந்து பின்னால் நகர, “மோகனா காப்பாத்து, தம்பி காப்பாத்து.” என்ற சரஸ்வதியின் அலறலும், கொடூரர்களின் தகாத வார்த்தைகளும் முன்பை விட சத்தமாக காதில் கேட்பது போல் தோன்ற, கைகளால் காதுகளைப் பொத்திக்கொண்ட சிறுவன் பயத்தில் அழ ஆரம்பித்துவிட்டான். அலைபாய்ந்த கரங்கள் முகத்தில் இருந்து தலைக்கு ஏறி தலை முடியை அழுத்திப் பிடிக்க, அது கண்ட மேனிக்கு கலையத் துவங்கியது.
“மோகனன் என்னாச்சுப்பா?” என ஆசிரியர் அவன் அருகே செல்லப் பார்க்க, “அம்மா” என்று கத்தி அழ ஆரம்பித்தான் மோகனன்.
“மோகனன் என்னாச்சு உனக்கு, என்னைப் பார்.” என்று ஆசிரியர் அவனை நிமிர்த்த முயற்சிக்க, மோகனன் அதற்கு அனுமதிக்கவில்லை.
விஷயம் தலைமை ஆசிரியருக்குத் தெரியவந்தது. அவர் ஒருவருக்கு தான் மோகனனின் உண்மையான மனநிலை தெரியும் என்பதால் விரைந்து வந்தார். அதற்குள் பயத்தில் வழக்கம் போல் கால்சட்டையை நனைத்திருந்த மோகனனை அனைவரும் வித்தியாசமாகப் பார்த்தனர்.
வேகமாக அவ்விடம் வந்த தலைமை ஆசிரியர் அனைத்து மாணவர்களையும் அவ்விடம் விட்டு விலகிச் செல்வதற்காக உரத்த குரலில் ஆணையிட, அந்தக் குரல் மோகனனை மீண்டும் தூண்டி விட்டிருந்தது.
ஆ என்று அந்த வகுப்பே அதிரும் அளவிற்கு கத்தியவன், தலைக்குள் இடைவிடாது கேட்டுக்கொண்டிருக்கும் சரஸ்வதியின் அலறல் சத்தம் உடனடியான நிற்க வேண்டும் அதற்கு என்ன செய்யலாம் என யோசித்து, எது நடக்கக் கூடாது என்பதற்காக ஆனந்த், பைரவி இத்தனை போராடினார்களோ அதையே செய்தான்.
என்னவாயிற்று இவனுக்கு என்று புரியாமல் அவனைச் சூழ்ந்திருந்த அனைவரையும் தாண்டிக்கொண்டு வெளியே ஓடினான். அவன் வகுப்பு இருந்தது இரண்டாவது மாடி என்பதால் சற்றும் யோசிக்காமல் அங்கிருந்து குதித்துவிட்டிருந்தான்.
கண் இமைக்கும் நேரத்திற்குள் நடந்து முடிந்த செயலால் பள்ளி வளாகம் பரபரப்பானது. நிறைய சிறுவர்கள் பயத்தில் அழத்துவங்க அவர்களைக் கட்டுப்படுத்துவதற்குள் படாதபாடு பட்டனர் வகுப்பாசிரியர்கள். மோகனனை தலைமையாசிரியர் தன்னுடைய காரில் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்.
கண்விழித்த பின்பு அவன் செய்த ஆர்ப்பாட்டங்கள் அதிகம். “என்னை எதுக்காக காப்பாத்துனீங்க. என்னால தான் சரஸ்வதி அக்கா செத்தாங்க. அவங்களை என்னால் காப்பாத்த முடியல. என்னை ரொம்ப நம்பினாங்க. நான் அவங்க நம்பிக்கையைக் காப்பாத்தல. நான் துரோகி, பாவி, என்னை சாக விடுங்க.” என்று கண்டதையும் பிதற்றியவன், மூளைக்குள் இருந்து பிரச்சனை செய்யும் கசப்பான நினைவுகள் தரும் தொல்லைகளைத் தாங்க முடியாமல் மேலும் இரண்டு முறை தற்கொலை செய்துகொள்ளப் பார்த்தான். உறக்கத்தில் கூட விழிப்பாய் இருந்து மகனைக் காப்பாற்றியது ஆனந்த் தான்.
ஆறு மாதம் ஆனது மோகனன் நன்றாக நடப்பதற்கு. ஆனால் அவன் வாழ்வு மொத்தமும் சிதைந்து போனது. பல மாணவர்கள் முன்பு தற்கொலை முயற்சி செய்ததால், அனைவரின் மனநிலை கருதி அவனை பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்திருந்தனர். அந்த வருட படிப்பும் வீணாய் தான் போனது மோகனனுக்கு.
மழை வந்தால் அழுவான், தொலைக்காட்சியில் யாராவது பெண்கள் அழுதால் கூட அவனால் பொறுத்துக்கொள்ள முடியாது. கத்தி கதறி ஆர்ப்பாட்டம் செய்துவிடுவான். அவனுக்காக ஆனந்த் முடிந்த மட்டும் குரலின் தொணியைக் குறைத்து தான் பேசுவார்.
வேலையை மாற்றிக்கொண்டு ஒருநாளின் பாதி நேரம் மகனோடு செலவளித்தார். அவனை பல இடங்களுக்கு அழைத்துச் செல்வார். அவன் கவனத்தை மாற்றுவதற்காக சிலம்பம், கராத்தே போன்ற உடலை வருத்தும் கலைகளைக் கற்றுக்கொள்ள வைத்தார். கவனத்தை ஒருநிலைப்படுத்தி எதையும் கற்றுக்கொள்ள முடியாமல் அவன் அழும் நேரங்களில் தானே ஆசானாக நின்று மகனுக்குக் கற்றுக்கொடுத்தார் ஆனந்த்.
இருபது வயதில் தன்னுடைய பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை எழுதி முடித்தான். பார்டரில் தான் தேறி இருந்தான் என்றாலும் அவன் குடும்பத்தினர் ஏதோ மலையைப் புரட்டிப்போட்டது போல் மகிழ்ச்சி அடைந்தனர்.
முதல் டிகிரி தொலைதூரக் கல்வி மூலம் தான் படித்தான். இரண்டாவது டிகிரி கல்லூரிக்குச் சென்று படிக்க வேண்டும் போலத் தோன்றியது. ஆனால் பயமாகவும் இருந்தது. சமூகத்தோடு ஒன்றிப் பழகினால் மட்டும் தான் தன் மனநோய் பாதிப்பு முற்றிலும் தன்னை விட்டு அகன்றுவிட்டதா என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று நினைத்தவன் பதற்றத்தோடு தான் போய் வர ஆரம்பித்தான். ஆனால் அவன் நினைத்தே பார்த்திடாத அளவுக்கு அந்த வாழ்க்கை அமைதி நிறைந்ததாக இருந்தது.
இதற்குள் நன்றாக வளர்ந்திருந்த கேசிக்கு அண்ணனின் பிரச்சனை புரிந்தது. தன் அண்ணனை தான் நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தவன், தாயுமானவனாக மாறி மோகனனின் பொறுப்பை தகப்பனிடம் இருந்து தான் பெற்றுக்கொண்டான்.
அதுநாள் வரை தன் மகன் மோகனனை சிறுவனாகவே பார்த்து அப்படியே நடத்தினார் ஆனந்த். ஆனால் தன் அண்ணன் வளர்ந்த ஆண். அவனை அப்படித்தான் நடத்தவேண்டும் என்று புரிந்துகொண்டே கேசி, முதல் வேலையாக அண்ணனுக்கு வண்டி ஓட்டப் பழக்கிக் கொடுத்தான். தன் நண்பர்களோடு பழகவிட்டான். தியேட்டர், ஹோட்டல் என்று தான் எங்கு சென்றாலும் கங்காரு போல் அண்ணனையும் இழுத்துக்கொண்டு திரிந்தான். மோகனனுக்கும் இந்த ஆசைகள் எல்லாம் இருந்தது தான். ஆனால் தனியே வெளியே வருவதற்கு பயந்து அமைதியாக இருந்தான். இப்போது தம்பி உடையான்படைக்கு அஞ்சான் என்பது போல் கேசியின் தயவால் அனைத்தையும் கற்றுக்கொண்டவன் குணம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்திருந்தது.
எப்போதும் இறுக்கமாக எதையாவது யோசித்துக்கொண்டே இருப்பவன், வாய் திறந்து பேசினான், தன் தேவைகளைச் சொன்னான், சில நேரம் தைரியமாக பெண்கள் அதிகம் இருக்கும் இடங்களுக்கு சென்று வரவும் ஆரம்பித்தான்.
அடுத்த கட்டமாக வீட்டின் மூத்தவன் நீதான். உனக்கென்று பொறுப்புகள் இருக்கிறது என்று சிலவற்றை அவன் பொறுப்பில் ஆனந்த் கொடுக்க சந்தோஷமாகவே அதை நிறைவேற்றினான் மோகனன்.
மற்ற எல்லாம் பழகிக்கொண்டாலும் மழை பெய்யும் நாட்கள் மட்டும் கொஞ்சம் ஒருமாதிரி ஆகிவிடுவான் மோகனன். அப்போது எல்லாம் இரவில் அண்ணனோடு வந்து தங்கிக்கொள்வான் கேசி.
“அந்த நேரம் நீ சின்னப்பையன். உன்னால் முடிஞ்ச அளவு பேட்டை எடுத்துட்டு போய் அடிச்சிருக்க. ஆனா நானா இருந்திருந்தா ஷாக்கில் செத்தாலும் செத்திருப்பேன்.” என்று சொல்லி அண்ணனின் மனதில் இருக்கும் குற்றவுணர்ச்சியை அழித்த கேசி, அடுத்ததாக தந்தைக்கு யோசனை கொடுத்து செய்த செயல் தான் யாரும் எதிர்பாராதது.
சரஸ்வதி மரணத்துக்கு காரணமான இருவரையும் ஜெயிலில் போய் சந்தித்து அண்ணனுக்குள் மறைந்து இருக்கும் கோபத்தை எல்லாம் வெளியே கொண்டு வரச்சொன்னான். இது பிரச்சனையில் முடிந்துவிடுமோ என்று பயந்த ஆனந்த் மனநல மருத்துவரிடம் கேட்க, இதுவும் ஒரு வகையில் நல்லது தான் என்று அவர் சொன்னபிறகு தான் மோகனனை ஜெயிலுக்கு அழைத்து வந்தார்.
பயத்தோடு தான் மோகனன் தந்தையோடு கிளம்பினான் என்றாலும், அவ்விருவரையும் நேருக்கு நேர் பார்த்ததும் அதுநாள் வரை அடக்கி வைத்த கோபங்கள் எல்லாம் கரையை உடைத்துக்கொண்டு வெளிவரும் வெள்ளமாய் பாய்ந்தது.
பாய்ந்து அவர்கள் இருவரின் சட்டையைப் பிடித்த மோகனன் தாக்கத் துவங்க, அவர்களும் திரும்பித் தாக்கினார்கள். சிலம்பம், கராத்தே கற்ற இளைஞன் என்பதால் சுலபத்தில் அவர்களைத் தாக்கி தன் கோபத்தை தீர்த்துக்கொண்டான். மரணகாயம் படும் அளவிற்கு எல்லாம் அடிக்கவில்லை. தன் கோபம் தீரும் வரை அடித்துவிட்டு காறி உமிழ்ந்துவிட்டு வந்தான். கோபமும், குற்றவுணர்வும் முழுவதுமாக குறைந்துவிட்டதா என்று தெரியாமல் போனாலும் பெருமளவு குறைந்திருந்தது.
தனக்கு உதவி செய்த சிறை அதிகாரிக்கு தேவையான பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்த ஆனந்திற்கு மகன் சரியாகிவிடுவான் என்கிற நம்பிக்கை வந்தது. அவர் நம்பிக்கையைக் காப்பாற்றும் பொருட்டு மோகனனும் நன்றாகவே தேறினான்.
பல மாதங்களுக்கு எந்த விதத்திலும் பழைய பிரச்சனைகள் அவனைத் தாக்கவில்லை. மனநல மருத்துவரும் அதை உறுதி செய்தார். வேலைக்கும் செல்லத் துவங்கினான். மோகனனுக்கு மனநல பாதிப்பு இருந்தது என்பதை அவன் குடும்பத்தினரே மறக்கும் அளவிற்கு காலங்கள் நன்றாக சென்றது.
அதைத் தொடர்ந்து அவனுக்கு திருமணம் செய்யலாம் என முடிவு செய்து பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்த போது தான் பிரச்சனையே ஆரம்பித்தது. உண்மையை மறைத்து ஒரு பெண்ணின் மனதை நோகடிக்கக் கூடாது என்று மோகனன் தெளிவாக சொல்லிவிட்டிருந்ததால் உண்மையைச் சொல்லி பெண் கேட்டவர்களுக்கு கிடைத்த தொடர் நிராகரிப்பு சற்றே கவலையைக் கொடுத்தது.
பெற்றோர் மேட்ரிமோனியில் பெண் தேட, சாருகேசியோ படிக்கும் கல்லூரியில் தேட ஆரம்பித்தான். அனைத்து பெண்களையும் அண்ணனுக்காக பார்த்தவனுக்கு அமிர்தாவை மட்டும் தனக்காக பார்க்கத் தோன்றியது. விளைவு இவ்வளவு தூரம் வந்திருந்தான்.
நடந்த அனைத்தையும் கேட்டு முடித்த அமிர்தாவுக்கு மூச்சடைப்பது போல் தோன்றியது. தொண்டையை அழுத்தும் துக்கத்தை தண்ணீர் குடித்து சமாளித்தவள் கலங்கிய கண்களோடு கேசியைப் பார்த்தாள். அவனும் அவளையே தான் பார்த்துக்கொண்டிருந்தான். “அவர் ரொம்ப பாவம் இல்ல கேசி.” கரகரத்த குரலில் கேட்டாள்.
அதற்குப் பதில் சொல்லாமல், “என் அண்ணனை வேண்டாம் னு சொல்லுவியா அமிர்தா?” ஏக்கமாகக் கேட்டான் கேசி. “மாட்டேன்னு சொல்ல தான் எனக்கும் ஆசை. ஆனா இதை சொல்ல வேண்டியது அக்கா தானே கேசி.” என்றாள்.
சரேலென திரும்பிப் பார்த்தான் கேசி. “உனக்கு என் அண்ணன் உன் அக்காவைக் கல்யாணம் பண்ணிக்கிறதில் பிரச்சனை இல்லையா?” ஆச்சர்யமாகக் கேட்டான்.
மோகனனுக்குள் இருந்த பிரச்சனையை விடுத்து, அவனை முதன்மையாக பார்த்தது தங்கள் குடும்பத்திற்குப் பிறகு அமிர்தா தான் என்பதால் கேசிக்கு அமிர்தாவை கூடுதலாக கொஞ்சம் பிடித்தது.
“முழுசா குணமாகிட்டார் என்னும் போது எனக்குப் பிரச்சனை இல்லை. ஆனா அக்கா என்ன முடிவு எடுத்தாலும் நான் அக்கா பக்கம் தான் இருப்பேன்.” தயக்கத்துடன் அமிர்தா சொல்ல, சந்தோஷமாக அவள் கரத்தைப் பிடித்தவன், “நானே அண்ணிகிட்ட பேசுறேன். அவங்க சம்மதிச்சாலும் சம்மதிக்காமப் போனாலும் அவங்க என்னைக்கும் என் அண்ணி தான். அவங்க மேல எனக்கு மரியாதை எப்பவும் குறையாது.” உள்ளார்ந்த மனதோடு சொன்னவனை அதிகம் பிடித்தது அமிர்தாவுக்கு.
விஷயம் கேள்விப்பட்ட நீலா சில நொடிகள் அமைதியாக இருந்தாள். ஏராளமான எதிர்பார்ப்போடு வந்த கேசிக்கு அவள் அமைதி வருத்தத்தை தந்தது. ஆனாலும் சமாளித்தான். “பரவாயில்லை அண்ணி.” என்றுவிட்டு நகரப்பார்க்க, “சாரங்கனுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தான் யோசனையா இருக்கு. அவரும் பாவம் தானே. ஆசை காட்டி மோசம் பண்ண மாதிரி ஆகிடக்கூடாதுன்னு பார்க்கிறேன்.” என்று மறைமுகமாக தன் பதிலைச் சொன்னாள்.
துள்ளி குதிக்கவேண்டும் போல் இருந்தது கேசிக்கு. சந்தோஷ மிகுதியில் தன் அருகே நின்றுகொண்டிருந்த அமிர்தாவை கட்டி அணைத்துக்கொண்டிருந்தான். முதல்முறையாக நிகழ்ந்த அணைப்பை அனுபவிக்கும் நிலையில் கூட இல்லை அவன். உணர்ச்சிப்பிழம்பாய் இருந்தவன், அண்ணனுக்கு அழைத்து விஷயத்தை சொல்ல நினைத்தான். அதன்பிறகே இந்த விஷயத்தை நீலாவே சொன்னால் நன்றாக இருக்கும் என்று தோன்ற அவள் பக்கம் வந்தான். அவள் பலத்த யோசனையிலே இருக்க, “சாரங்கன் சார் கிட்ட நான் பேசுறேன். அவருக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு.” என்றான்.
அரைமனதாக தலையாட்டினாள் நீலா. அவள் சாரங்கனைத் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதும் அமிர்தாவுக்காக தான், இப்போது மோகனனைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததற்குப் பின்னால் இருக்கும் காரணமும் அமிர்தா தான். அது புரிந்ததில் அக்காவைக் கட்டிக்கொண்டு கொண்டாடித்தீர்த்தாள் அமிர்தா.
சாரங்கனை நேரில் சந்தித்து விஷயத்தை மெதுவாகச் சொன்னான் கேசி. கண்களை அழுந்த மூடித்திறந்த சாரங்கன், “என்னால் எந்தப் பிரச்சனையும் வராது. நீலாம்பரிக்கு நான் வாழ்த்து சொன்னதா சொல்லிடுங்க.” என்றுவிட்டு கிளம்பிச் சென்றான்.
அவனுடைய கைப்பொருளைக் களவெடுத்து அண்ணனிடம் ஒப்படைக்கிறேமோ என ஒரு கணம் தோன்றினாலும், தலையை உலுக்கி தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டு, நீலாம்பரியிடம் நடந்ததைப் பகிர்ந்துகொண்டான்.
மனதுக்குள் சின்ன நிம்மதி வந்தது நீலாவுக்கு. கல்யாணிக்கு அப்போது வரை விஷயம் தெரியவில்லை. அமிர்தா விஷயத்தை சொல்லும் போது, “அம்மான்னு ஒருத்தி இருக்கிறதை மறந்து உங்களுக்கு நீங்களே மாப்பிள்ளை பார்த்துக்கிட்டீங்களா?” என கோபம் கொண்டாலும், சிறிது நேர பேச்சுவார்த்தை மற்றும் விசாரணைக்குப் பிறகு ஒப்புக்கொண்டார்.
கேசியின் வீடு திருவிழாக்கோலம் தான் பூண்டது. “உங்களைக் கல்யாணம் பண்ண எனக்கு முழு சம்மதம். என்னோட போட்டோ கேசி தம்பிகிட்ட இருக்கு. பார்த்துட்டு பிடிச்சிருந்தா சொல்லுங்க.” என்ற நீலாம்பரியின் குரல் இன்பத்தேனை காதிற்குள் ஊற்றியது போல் இருந்தது மோகனனுக்கு.
நீலாவின் புகைப்படத்தைப் பார்த்த பைரவியின் கண்ணில் ஆனந்தக் கண்ணீரே வந்தது. மோகனனால் நம்பவே முடியவில்லை. தன்னைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்ட பின்னாலும் ஒரு பெண் தன்னைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறாளா என்று ஆச்சர்யப்பட்டவன் அதே ஆச்சர்யத்தோடு தான் மணமேடை வரை வந்திருந்தான். சாருகேசி தந்தையோடு சேர்த்து அண்ணனின் திருமணத்தை அத்தனை ஆர்ப்பாட்டமாய் ஏற்பாடு செய்திருந்தான்.
உலகில் விடை சொல்ல முடியாத பல கேள்விகள் உண்டு. அதில் முதன்மையானது, வாழ்நாள் முழுக்க சேர்ந்து வாழ முடியாது என்றால் கடவுள் எதற்காக சிலரின் சந்திப்பை உருவாக்கவேண்டும் என்பது தான். விடை தெரியாத அந்தக் கேள்வியோடு விடை தெரியாத எதிர்காலம் என்று தெரியாமல் கோலாகலமாக நடந்து முடிந்தது மோகனன், நீலாம்பரி திருமணம்.
error: Content is protected !!