Skip to content
Post Views: 502
இருவரும் ஒரே அறையில் கொஞ்சம் இடைவெளி விட்டு நின்றிருந்தனர். இருவர் கைகளிலும் தாள்கள் இருந்தன. வழக்கம் போலவே அவர்கள் தாங்கள் வாசிக்க வேண்டிய பகுதியை மட்டும் தனியாகப் பிரித்துக் கொண்டனர்.
அவர்கள் வாசிக்கும் கதை ஒரு குடும்ப நாவல் என்பதால், அதில் காதல் வசனங்கள், கணவன்-மனைவி சரசங்கள், சண்டைகள், சில நகைச்சுவை வார்த்தைகள், வலி நிறைந்த வரிகள் என அனைத்தும் அடங்கியிருந்தன. மொத்தம் அறுபது அத்தியாயங்கள் கொண்ட கதை. கொஞ்சம் நீண்ட பெரிய கதைதான். மதியூரன் மீது இருந்த நம்பிக்கையில் ‘சரி’ என்று சொல்லிவிட்டாள் மதுரா.
இதோ இருவரும் கதையை வாசிக்க ஆரம்பித்துவிட்டனர். ஓர் அத்தியாயத்தில் வயதான மூத்த தம்பதியரின் காதல் சரசங்கள் வசனங்களாக இருக்க, அழகாய் வெட்கத்தினூடே வாசித்திருந்தாள் மதுரா! வாசித்து முடித்ததும் அவனைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தாள். அவளது பளிச்சென்ற சிரிப்பு, அவனையறியாமலேயே அவனுக்குள் புதுவிதமாக ஊடுருவியது.
இப்போது அவன் வாசித்தான். வயது மூத்தவரின் கம்பீரக் குரலில் காதலையும் சேர்த்து அவன் அழகாக வாசித்திட, ஏனோ அவனிடமிருந்து அவளது கண்கள் அகல மறுத்தன. அவன் வாசித்து முடிக்கையில் சுதாரித்துக்கொண்டு, மீண்டும் அவள் வாசிக்கத் தொடங்கினாள். இப்படியாக ஐந்து அத்தியாயங்கள் வாசித்து முடித்தது கூடத் தெரியாமல் இருவருமே வாசிப்பில் மூழ்கிப்போயிருந்தனர்.
Advertisement
பின் இருவரும் சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர். இருவருக்குமாகத் தேநீர் கலந்து எடுத்துவந்தாள் மதுரா. அவனிடம் ஒரு கோப்பையை நீட்டிவிட்டு, தானும் ஒன்றை எடுத்துக்கொண்டு அவனுக்கு எதிரே அமர்ந்து பருகினாள். தேநீரைப் பருகியவனுக்கு அந்தச் சூடுகூட இதமாக உள்ளிறங்கியது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்தபடியே தேநீரை ரசித்தனர். அவர்களுக்குள் நிலவிய அமைதியைக் கலைத்து முதலில் பேச்சைத் தொடங்கினாள் மதுரா.
“உங்களைப் பற்றிச் சொல்லுங்க மதியூரன்!” எனக் கனிவோடு கேட்டாள்.
அவனது முகம் சட்டென மாறிப்போனது. வலியின் சாயல் அவன் முகத்தில் தென்பட, குழம்பிப்போனாள் மதுரா. அவன் அமைதியாகத் தேநீர் குடுவையைத் தன் விரலால் வருடினான்.
Advertisement
“இட்ஸ் ஓகே மதியூரன்! இப்போ இல்லைன்னாலும் எப்ப சொல்லத் தோணுதோ அப்போ சொல்லுங்க,” எனப் புன்னகையுடன் கூறினாள்.
Advertisement
அவனும் கசந்த முறுவலோடு தன் கதையைத் திக்கித் திக்கிச் சொன்னான். மிகப்பொறுமையாகக் கேட்டாள். அவனது கதையைக் கேட்டபின் அவளது மனம் கனத்துப்போனது.
‘சுயநலமில்லாத பேரன்பைக் கொண்டவள்தான் தாய். மகனென்றால் உயிரையே வைத்திருக்கும் தாய்மார்கள் மத்தியில் இவர் வித்தியாசப்படுகிறாரே! தாய் என்றே சொல்ல முடியாதளவுக்குச் சுயநலம் கொண்டவராக இருக்கிறாரே! பெற்ற பிள்ளைகளிடம் இப்படி வேற்றுமை பாராட்ட எப்படி ஒரு தாயால் முடிகிறது?’
மிருகங்கள் கூட வெவ்வேறு வண்ணத்தில் இருந்தாலும் தன் குட்டிகள் அனைத்தையும் சமமாக அரவணைத்துக் கொள்கின்றன. ஒரு தாய் தன் பிள்ளைகளிடம் வேற்றுமை பார்ப்பாளா? தன் பிள்ளை ஊனமாக இருந்தாலும் கடைசி வரை சுமக்கும் தாயைக் கண்டதுண்டு. ஆனால், பிள்ளையின் குறையைச் சுட்டிக்காட்டிப் பேசும் அவனது தாயைப் பற்றிக் கேட்கும்போது, ஏதோ வேற்றுக்கிரகவாசியைப் போல அவளுக்குத் தோன்றியது.
Advertisement
பின் அவன் பேச்சை மாற்றும் விதமாக மதுராவிடம், “உ… உங்களைப் ப… பத்தி… சொ.. சொல்லுங்க,” என்றான்.
அவளுடையதும் அவனைப் போலச் சோகம் நிறைந்த கதைதான். ஆவலாகச் சொல்வதற்கு அங்கே ஒன்றுமில்லை. தன் படிப்பில் தொடங்கி, தந்தை மறைந்தது, தாய் வேலைக்குச் சென்று தன்னைப் படிக்க வைத்தது என்று சொன்னவள், கடைசியில் அவளது நிறத்துக்காக வரன் பார்ப்பவர்கள் அதிக வரதட்சணை கேட்பது வரை சொல்லி முடித்தாள்.
“ஏதாவது ஒரு பொருள் சின்னதா டேமேஜா இருந்தாக்கூட, விக்கிறவன் அதோட விலையிலிருந்து கொஞ்சம் கம்மி பண்ணிக் கொடுப்பான். ஏன், வாங்குறவனுமே விலையைக் குறைச்சுத்தான் கேட்பான். ஆனா என் விஷயத்துல கொஞ்சம் வித்தியாசம். என் நிறத்துக்காகக் கொஞ்சம் கூடுதல் பவுன் கொடுத்தால்தான் என்னை நானே கல்யாணம் என்கிற பேர்ல விக்க முடியும்,” என நகைச்சுவையாகச் சொன்னது போல அவள் சிரித்தாலும், அதில் அடங்கியிருந்த வேதனையும் வலியும் அவனுக்குப் புரியாமல் இல்லை.
“அ… அப்படிலாம் இ… இல்லீங்க. உ… உ… உங்கச் சிரிப்புக்குக் கோ… கோ… கோடி கொடுத்தாலும் ப..ப… பத்தாதுங்க…” என்றான் மதியூரன்.
அவன் சொன்னதும் ஒரு கணம் சிரிப்பை நிறுத்தியவள், பின் மீண்டும் புன்னகைத்தாள். அவள் சிரிப்பைக் கண்டு அவள் தன் வார்த்தைகளை நம்பவில்லை என்று உணர்ந்தவன், “உ… உ…. உண்மையாதாங்க சொ… சொ… சொல்றேன். உங்க சி… சிரிப்பு வி… விலைமதிப்பு இ… இ… இல்லாதது! உ.. உங்களையும் உ… உங்க… சிரிப்பையும் வி… விரும்புற ஒருத்தர், நி… நி… நிச்சயமா உ… உ… உங்க நிறத்தை ஒ… ஒரு பொ… பொருட்டாகக் கூட நினைக்க மாட்டார். அப்படிப்பட்ட ஒருத்தரை நீ…நீ… நீங்க கண்டிப்பா ச… ச… சந்திப்பீங்க மதுரா!” என்றான் உறுதியாக.
அவன் பேசப் பேச உள்ளுக்குள் சில்லென்று ஏதோ ஊடுருவியது போலிருந்தது அவளுக்கு. தேகமெல்லாம் சிலிர்த்து அடங்கியது. முகம் நிறமாறி, அங்கங்கே கருமையுடன் சிவப்பும் கலந்து போயிருந்தது. தன் உணர்வுகளை மறைத்துக்கொண்டு, “வாசிக்கப் போலாமா மதியூரன்?” எனத் தனக்குள் நிகழும் மாற்றங்களையெல்லாம் அடக்கிக்கொண்டு கேட்டாள்.
தனது பேச்சால் எதிரே இருக்கும் பெண்ணிற்குள் உண்டான வேதியியல் மாற்றத்தை அறியாதவனாய், கதை வாசிக்க அவள் பின்னே சென்றான்.
ஒரு வாரமாக இதே நிலை தொடர, கதை முடியும் தருவாயில் மதுராவின் தாய்க்குக் கீமோ ஊசி போட வேண்டிய நாளும் வந்தது. அதை அவள் மதியூரனிடம் சொல்ல மறந்துவிட்டாள். அவனும் வழக்கமான நேரத்திற்கு அவளது வீட்டிற்கு வந்துவிட்டான். மருத்துவமனை செல்லத் தேவையானவற்றை எடுத்து வைத்தவள், அங்கே வந்து நின்ற மதியூரனைக் கண்டபோதுதான் அவனிடம் சொல்ல மறந்தது நினைவுக்கு வந்தது.
“ஐயோ!” எனத் தலையில் அடித்துக்கொண்டவள், அவனருகே வந்து, “வெரி சாரி யூரன்! அம்மாவுக்கு இன்னைக்கு ஐந்தாவது கீமோ ஊசி போடப் போகணும். ஒரு நாள் தங்கிட்டு நாளைக்குத்தான் வருவோம். உங்ககிட்ட எப்படிச் சொல்ல மறந்தேன்னு தெரியல! ஐ ஆம் சாரி யூரன், உங்களை வீணா அலைய வச்சுட்டேன்… சாரி,” எனக் கைகளைப் பிசைந்துகொண்டு, தவறு செய்த குழந்தையைப் போல அவன் முன்னே நின்றாள்.
அவள் நின்ற கோலத்தைக் கண்டு அவனுக்குச் சிரிப்புதான் வந்தது.
“துரா! நா… நா… நான் த… தப்பா நி… நினைக்கல. ம… மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம். நீ… நீ… நீங்க அம்மாவைப் ப… பத்தி… பத்திரமா ஹா… ஹாஸ்பிட்டலுக்குக் கூ… கூ… கூட்டிட்டுப் போயிட்டு வாங்க. நீ… நீ… நீங்க வ… வந்ததும் சொ… சொ… சொல்லுங்க, நா… நான் வர்றேன்,” என்றவன், சாதாரணமாக உள்ளே சென்று அவளது தாயைப் பார்க்கச் சென்றான்.
அவன் உரிமையோடு தன் தாயைப் பார்க்கச் செல்வதைக் கண்டதும், மதுராவுக்குள் பெயரிடாத ஓர் உணர்வு தோன்றியது.
தினமும் வீட்டிற்குப் பதிவு செய்ய வரும்போதெல்லாம் அவரோடு பத்து நிமிடம் அமர்ந்து பேசுவான். இருவரும் பேசும்போது இவள் உடனிருக்க மாட்டாள். வந்த வேலை மட்டும் பார்க்காமல், அன்பாக ஆறுதலாகத் தாயிடம் நான்கு வார்த்தைகள் பேசிவிட்டு வரும் அவனை, கொஞ்சம் கொஞ்சமாக இவளுக்குப் பிடிக்க ஆரம்பித்திருந்தது. அவனது குரல் வேறு அவ்வப்போது அவளை இம்சை செய்ய ஆரம்பித்திருந்தது. இப்போதெல்லாம் பாட்டு கேட்பதை மறந்துவிட்டு, அவனது குரலைத்தான் அடிக்கடி மனதிற்குள் கேட்டுக்கொண்டிருக்கிறாள் என்பதை அவளாலேயே நம்ப முடியவில்லை. ஏனோ அவன் மீதும் அவனது குரல் மீதும் ஒரு தனி ஈர்ப்பு உண்டானது அவளுக்கு.
அறையில் தயாராகி அமர்ந்திருந்தார் மரகதம். உள்ளே வந்தவனோ நாற்காலியை இழுத்துப் போட்டு அவர் அருகே அமர்ந்தான்.
“என்னப்பா… பாப்பா ஹாஸ்பிட்டல் போறதை உன்கிட்ட சொல்லலையா? கதை வாசிக்க வந்துட்டியா?” என அக்கறையாக வினவினார்.
“ஏ… ஏன் மா?! க… க… கதை வாசிக்க ம… ம… மட்டும் தா… தான் இ… இங்க வரணுமா? உ… உங்களைப்பார்க்க வ… வரக் கூடாதா? இங்க வர எனக்கு உ… உ… உரிமையே இ… இல்லையா?” எனக் கேட்க, பதறிப்போனார் மரகதம்.
“அச்சச்சோ… அப்படிலாம் இல்லப்பா! நீ தாராளமா இங்க வரலாம், உனக்கு எல்லா உரிமையும் இருக்குப்பா. நான் தப்பா கேட்டிருந்தா மன்னிச்சுக்கப்பா,” என்றார்.
“ம்மா! நீ… நீங்க த… தப்பா எதுவும் கேட்கல மா. ப… ப… பத்திரமா ஹாஸ்பிட்டல் போ… போ… போயிட்டு வாங்க! இ… இ… இன்னும் ஒ… ஒரு ஊசிதான். அ… அப்புறம் நீ… நீ… நீங்க மு… முழுமையா குணமாகிடுவீங்க! அப்புறம் எப்பவும் போல உ… உங்க வேலையை நீ… நீ… நீங்க பார்க்க ஆ… ஆரம்பிச்சிடுவீங்க. உங்க பொ… பொண்ணுகூட ஊ… ஊர் சுற்றுவீங்க! அ… அதுக்கும் மே… மேலே உங்க பொ… பொண்ணுக்கு மா… மா… மாப்பிள்ளை தே… தே… தேட ஆரம்பிச்சிடுவீங்க. ந… ந… நம்பிக்கையோட போயிட்டு வாங்க மா! நா… நா… நாளைக்கு உ… உங்களைப் பார்க்கிறேன்,” எனத் திக்கித் திணறினாலும் அவன் வார்த்தைகளால் நம்பிக்கை அளிக்க, அவளது தாய் அவனது கையை அழுத்திக்கொண்டார். கண்கள் பனிக்க, கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.
அவன் பேசுவதைக் கதவோரம் நின்று கேட்டுக் கொண்டிருந்தவளுக்கும் கண்கள் கலங்கின. இது போன்ற ஓர் ஆறுதலான துணையைத்தானே அவளும் எதிர்பார்த்தாள்! ஆனால், அவளைப் பெண் பார்க்க வந்தவர்கள் அனைவரும் நோயாளியாக இருக்கும் தாயைக் காரணமாகக் காட்டி அவளை நிராகரித்தனர். அவரை முதியோர் இல்லத்தில் விடச் சொன்னார்கள். அவர்களை எல்லாம் அவளே நிராகரித்துவிட்டாள். இவ்வாறு அவளது தாயின் நிலைமையைக் காட்டி வந்த வரன்களெல்லாம் தட்டிக்கழிந்தன. ஆனால், அவளையும் அவளது தாயையும் சேர்த்து அரவணைக்கும் ஒரு துணையை அவள் எதிர்பார்க்க, அவளது எதிர்பார்ப்பிற்கு மிகப்பொருத்தமாக மதியூரன் இருப்பானோ என்று எண்ணிக் கொண்டு அவன் மேல் காதலில் விழுந்தாள். ஆனால், பின்னாளில் அவனால் தன் மனம் உடையப்போவதை அறியாமல் போனாள்.
வெளியே அவர்களை அழைத்துச் செல்ல கார் வந்து நின்றது. எழுந்து நின்ற மரகதம் சட்டெனத் தடுமாற, “அம்மா” என்று மதுரா ஓடி வருவதற்குள் மதியூரன் அவரைத் தாங்கிக் கொண்டான். இருவரும் எதிர்பாராதபடி அவனே அவரைத் தூக்கி நடக்க, அவர் சங்கடமாக நெளிய, “ச… ச… சங்கடப்படாதீங்க மா! எ… எ… என்னை உங்க புள்ளையா பா… பா… பாருங்க,” என்றவன், அவரைப் பூ போலச் சுமந்து காரில் அமர்த்தினான்.
அவளோ வீட்டைப் பூட்டிக்கொண்டு கையில் இரண்டு மூன்று பைகளுடன் வந்தாள். அதனை அவளிடமிருந்து வாங்கிப் பின்னே வைத்தவன், “நா… நா… நானும் உ… உங்களோடு வர்றேன்,” என்றான்.
அவளோ தடுமாறி, “உங்களுக்கு எதுக்கு சிரமம்? நான் பார்த்துக்கிறேன்,” என்றாள்.
“எ… எனக்கு ஒ… ஒரு சி… சிரமமும் இல்லை! நீ… நீ… நீங்க அம்மாவை வச்சுக்கிட்டு ரொ… ரொ… ரொம்பச் சிரமப்படுறீங்க. இ… இ… இத்தனையும் தூ… தூ… தூக்கிக்கிட்டு அம்மாவைக் கூ… கூ… கூட்டிட்டுப் போறது எ… எவ்வளவு கஷ்டம்? நா… நா… நான் கூட வர்றேன்! அப்படி ஒ… ஒண்ணும் வெ… வெட்டி மு… முறிக்கிற வேலை இல்லை எ… எனக்கு. நீ… நீ… நீங்க முன்னாடி போ… போ… போங்க, நா… நான் பைக்ல வர்றேன்,” என்றான். அவளும் தலையசைத்துவிட்டுக் காரில் ஏறிக்கொண்டாள். கார் புறப்பட, இவன் பின்னே தன் வண்டியில் வந்தான். அவ்வப்போது அவன் பின்னால் வருகிறானா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தாள். அதை மரகதம் கவனித்து உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டார்.
மருத்துவமனை வந்ததும் வண்டியை ஓரமாக நிறுத்தியவன், மரகதம் காரிலிருந்து இறங்க உதவி செய்தான். இவளோ கொண்டு வந்த பைகளைக் காரிலிருந்து எடுத்துக்கொண்டாள்.
புற்றுநோய்க்கான சிறப்பு மருத்துவமனை அது! தினமும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். உள்ளே அனுமதி (Admission) கிடைப்பதே பெரிய பாடாக இருக்கும். மருத்துவரைச் சந்திப்பதற்கு ஒரு நாளே ஆகிவிடும் அளவிற்கு அங்கே கூட்டம் அலைமோதும். வழக்கமாக இங்கே வந்து ஊசி போடுவதால் எளிதாக அவர்களுக்கு இடம் கிடைத்துவிட்டது. அறைக்குள் சென்று தன் பொருட்களை வைத்துவிட்டு, அன்னையை மெத்தையில் படுக்கச் சொல்வதற்குள், அவனே அவரைத் தூக்கிப் படுக்க வைத்திருந்தான். செவிலியர்கள் வந்ததும் கடகடவென வேலைகள் நடந்தேறின.
இவர்கள் இருவரும் வெளியே நிற்க, உள்ளே கீமோ ஊசி செலுத்தப்பட்டுக்கொண்டிருந்தது.
“மதுரா! வந்துட்டியா?” என்றார் உறவுக்காரப் பெண்மணி போல ஒருவர்.
“வந்துட்டேன் ஆண்ட்டி. அம்மாவுக்கு உள்ளே ஊசி போடுறாங்க. அங்கிள் என்ன பண்றார்?”
“இப்போதான் ஊசி போட்டுட்டுப் போயிருக்காங்க, தூங்குறார் மா,” என்றவர், சட்டென அவளோடு நெடுநெடுவென வளர்ந்து நின்றிருந்த மதியூரனைக் கவனித்தார்.
“ஹேய் மதுரா! மேரேஜ் பண்ணிக்கிட்டியா? உன் புருஷனா?? போன முறை வந்தப்பவே உங்க அம்மா சொல்லிட்டு இருந்தாங்க. கல்யாணத்துக்கு ஒரு வார்த்தை கூப்பிடவே இல்லையே நீ! பரவாயில்லை, மாப்பிள்ளை நல்லா இருக்கார்… என்ன பண்றார் மாப்பிள்ளை?” என உரிமையோடு பேசினார் அந்தப் பெண்மணி.
வழக்கமாக ஊசி போட வரும் நாட்களில் அவரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் கணவரை அழைத்து வருவார். அப்படி உண்டான பழக்கம்தான் அது.
“ஐயோ ஆண்ட்டி, நீங்க…” என மதுரா சொல்ல வருவதற்குள், அவரது கணவர் அழைக்கவே அவர் உள்ளே சென்றுவிட்டார். அவனோ திகைத்து நின்றான்.
இவளோ அவனிடம் கண்களைச் சுருக்கி, “சாரி! இதுவரை எங்களோடு யாரும் வந்தது இல்லை. புதுசா ஒருத்தர் வந்ததும் உங்களை அப்படி நினைச்சுட்டாங்க… சாரி யூரன்!” என்றாள் கெஞ்சலாக.
“இ… இட்ஸ் ஓ… ஓகே துரா! ஒ… ஒண்ணும் பி… பி… பிரச்சினை இல்லை,” எனச் சிரித்துக்கொண்டே வேறு புறம் திரும்பினான்.
அவனைத் தன் கணவன் என்று அந்தப் பெண்மணி சொன்னதுமே, அவளுக்குள் ஒரு காதல் தூறல் வீசியது போலிருந்தது!
error: Content is protected !!