Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

05. முகில் - ஊஞ்சலாடும் முகிலே

ஊஞ்சலாடும் முகிலே 33

அத்தியாயம் 33

 

“நீ பண்றதுல எனக்கு இஷ்டம் இல்லைனு சொன்னா என்ன பண்ணுவ ஈஸ்வர்?” நேராய் மகேஸ்வரன் கேட்க,

 



Advertisement

“ரொம்ப சிம்பிள் ப்பா. நிச்சயம் உங்களை கட்டாயப்படுத்த மாட்டேன். இப்படியே இருந்துக்குறேன். ஆனா அதே மாதிரி எனக்கு இஷ்டம் இல்லைன்ற இடத்துல நீங்களும் அப்படியே அமைதியா இருந்துக்கணும்!” என சொல்லி வாயடைக்க வைத்துவிட்டான்.

 

“நிஜமா உங்களை கம்பல் பண்ண மாட்டேன். உங்களுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்குற ஐடியாவும் இல்லை. நீங்க சம்மதம் சொன்னா மட்டும் தான் பல்லவியோட என்னோட கல்யாணம். இல்லைனா நீங்க அம்மா அஞ்சலியோட லைஃப்னு நான் பார்க்க இப்படியே இருந்துப்பேன்!” என்று முடிவாய் சொல்வதாய் அவன் உறுதியாய் சொல்ல, எதுவும் பேச முடியவில்லை மகேஸ்வரனுக்கு.

Advertisement

 

Advertisement

“ஆனா ஒண்ணு ப்பா. இதுக்கும் எங்களுக்கு தெரியாம பல்லவி வீட்டுல போய் நீங்க நின்னிங்கன்னா… நிக்கணும்னு நினைச்சா கூட உங்களுக்கு தான் ஆபத்து. நான் எதுவும் பண்ணுவேன் நினைக்காதீங்க. பல்லவியே எல்லாம் பண்ணிடுவா. என்னையும் அம்மாவையும் கூட அவ நினைக்க மாட்டா” என்றவன்,

 

“ஏன்னா இந்த நிமிஷம் வரை அவ மனசுல நான் இல்ல!” என்ற போதும் அவனிடம் அத்தனை உறுதி என்பதில் உள்ளுக்குள் தான் அதிர்வும் கொஞ்சம் பயமும் மகேஸ்வரனிடம். வெளியில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

Advertisement

 

“நீ தான் இப்படி சொல்லிட்டு முட்டாளா இருக்க. அன்னைக்கு என்கிட்டயே சொன்னா உங்க பையனை நான் ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு. அப்படி கேட்டவ செய்யவும் தயங்க மாட்டா தானே?” தன் பக்கம் ஒரு புள்ளி கிடைத்து விட்டதாய் அத்தனை வேகமாய் மகேஸ்வரன் சொல்ல,

 

“இதை தான் நான் சொல்றேன். இன்னொரு முறை என் பேரை சொல்லி அவளை ட்ரிக்கர் பண்ணி அவ முன்னாடி போய் நின்னிங்கன்னா அவ சொன்னதை செய்யவும் தயங்க மாட்டா. அவளோட கேரக்டர் ப்பா அது. அவ இல்லைனு உண்மையை சொல்லும் போது அப்படி தான்ன்னு நீங்க போய் நின்னா உக்காந்து அழுற பொண்ணில்ல அவ. அவளை ஏன் சம்மந்தமில்லாம சீண்டுறிங்க?”

 

“உங்க பையனா நான் தான் அவ வேணும்னு நிக்குறேன். அவ படிப்புல மட்டும் தான் இப்ப கான்ஸன்ட்ரேட் வச்சிருக்கா. அவளை என்னவும் சொல்லி என்கிட்டயும் கூடவே அவகிட்டயும் எதுவும் பேச்சு வாங்கிக்காதீங்க. அண்ட் லாஸ்ட் ஒன் திங்! எனக்கு வேற பொண்ணு பாக்குறதையும் இத்தோட நிறுத்திக்கோங்க. மத்தவங்க பார்வைக்கு நான் உங்களை பேசுற மாதிரி வச்சுக்காதீங்க!” என்று சொல்லி மாடிப்பக்கம் செல்ல தொடங்கிவிட்டான்.

 

கொஞ்சமும் அவன் சொல்வது எல்லாம் மகேஸ்வரனுக்கு புரியவே இல்லை. எதுவுமே இல்லாத ஒரு பெண் தன் வீட்டு மருமகள் என்ற இடத்தில். இதை எப்படி என்னவென்று தன் தொழில்வட்டாரதில் சொல்லிக் கொள்ள முடியும்?

 

வராதராஜனுக்கு தெரிந்தால் சிரித்துவிட மாட்டானா அவன்? அவன் பெண்ணை கேட்ட இடத்தில் இருந்து யோசித்துப் பார்க்கையில் இது நடக்கவே கூடாது என்று தான் மூர்க்கத்தனமாய் தோன்றியது மகேஸ்வரனுக்கு.

 

என்ன செய்து மகன் மனதை மாற்றலாம் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார். 

 

நாட்கள் நகர பல்லவியிடம் இருந்து ஒரு அழைப்பு தகவல் எதுவும் இல்லை. அஞ்சலி அலைபேசியில் மட்டும் அவ்வபோது வாரத்திற்கு ஒருமுறை என பல்லவி எண்ணில் இருந்து ஒரு ஸ்டேட்டஸ் எட்டிப் பார்க்கும். ஒரு நாள் விளையாட்டாய் ஒரு நாள் கோபமாய் என மாற்றி மாற்றி வரும். அஞ்சலியும் பதிலுக்கு எதாவது வைத்துவிட்டு அன்னையிடமும் கூறுவாள்.

 

இப்படி தான் இருந்தது இவர்களுக்குள்ளான சொந்தமும். மீண்டும் மகேஸ்வரன் முறுக்கிக் கொண்டு வீட்டில் பேசாமல் வரவும் செல்லவுமாய் இருக்க, இம்முறை கீர்த்திஸ்வரனுமே தந்தையிடம் பேசவில்லை.

 

“நீங்களாவது அப்பாகிட்ட பேசுங்களேன் ம்மா. வீட்டுக்குள்ள பேசி சிரிச்சு சந்தோஷமா இருக்கனும்னு ஆசையே இருக்காதா அப்பாக்கு? இப்படி இருக்குறதுக்கு எந்த பொண்ணு மருமகளா வந்தா என்ன? அதுவும் நான் பாக்குற பொண்ணா தான் இருக்கனும்னு ஒரு அகம்பாவம் வேற!” என அஞ்சலி சொல்ல,

 

“அதானே! நீங்க பேசிப் பார்க்கலாம்ல அப்பாகிட்ட? பாய்ண்ட் வரட்டும்னு வெயிட் பண்றீங்களா?” என்றான் சிரித்த ஈஸ்வரும்.

 

“அவ்வளவு நக்கலா போச்சா உங்களுக்கு? நான் போய் என்னங்கனு சிரிச்சதும் சொல்லும்மா லதானு சிரிச்சிடுவாரா உங்கப்பாவும்?” என்று கேட்ட விதமே ஈஸ்வருக்கு சிரிப்பை தந்தது.

 

“என் கலயாணத்துல இருந்தே என்னை இப்படி தான் அமைதியாக்கி வச்சிருக்காங்க. இப்ப திடிர்னு பேச சொன்னா?” என்ற லதா,

 

“அன்னைக்கு கூட காபி போடுற கேப்ல லட்டு லட்டா பாயிண்ட் எடுத்து வச்சிருந்தேன் ஈஸ்வர். ஆனா நீ தான் ஒரே வார்த்தைல தரகரை வீட்டைவிட்டு அனுப்பிட்ட. அப்புறம் எங்க நான் பேச?” என்று சொல்லும் போது சிரிப்பும் கவலையும் சேர்ந்தே வந்தது ஈஸ்வருக்கு.

 

இனி பல்லவி வீட்டுப் பக்கம் நிச்சயம் செல்லமாட்டார் தான். ஆனாலும் தந்தைக்கு புரியும்படி எடுத்து சொல்லவேண்டுமே எனும் கவலை. புரிந்து கொள்ள மாட்டேன் என அடம் செய்பவரை என்ன சொல்லி புரிய வைக்க என்றுmம் தெரியவில்லை.

 

“நீ என்ன முடிவெடுத்தாலும் நான் உன் பக்கம் தான் ஈஸ்வர்!” லதா சொல்ல,

 

“என்ன முடிவெடுக்க முடியும்?” என்ற அஞ்சலியை லதாவோடு ஈஸ்வரும் கேள்வியாய் பார்க்க,

 

“அதான் அப்பாகிட்ட அண்ணா அவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிடுச்சே! அப்பாக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்காதாம். வற்புறுத்தியும் சம்மதம் வாங்காதாம். அப்பா சம்மதம் சொன்னா தான் கல்யாணமாம்!” என அஞ்சலி அவன் பேசியதை நினைவுபடுத்த,

 

“என்ன டா இப்படி சொல்லி வச்சிருக்க?” என்றார் லதாவும். வட்டமேஜை மாநாடு ஹாலில் தான் நடந்து கொண்டிருந்தது.

 

மகேஸ்வரன் வரும்வரை இப்படி தான் தினமும் அமர்ந்து மகேஸ்வரனைப் பற்றி புலம்பி அவர் வந்ததும் அமைதியாகி என நாட்கள் செல்ல, மகேஸ்வரன் பிடிவாதமும் தளர்வது போலவே இல்லை.

 

“இன்னும் ரெண்டு மாசம் தான் இருக்கு ஈஸ்வர். இவரையே நமக்கு சமாளிக்க முடியலை. இதுல அவ வேற ரெண்டு மாசத்துல வேலைக்கு போவேன்னு நிப்பா” என அதற்கும் தனி புலம்பல் லதாவிடம்.

 

“அப்பாவை எப்படி சம்மதிக்க வைக்கலாம்ன்னு பாருங்க ம்மா. பல்லவியை நான் கண்வின்ஸ் பண்ணிக்குவேன்!” என அத்தனை இலகுவாய் கீர்த்திஸ்வரன் சொல்ல,

 

“அப்படியா?” என்ற லதா குரலில்,

 

“ஹ்ம் ஆமா!” தீவிரமாய் சொல்லி திரும்பிய ஈஸ்வர் அன்னையின் குறும்பான புன்னகையில்,

 

“ம்மா!” என நெற்றியை நீவிக் கொண்டு நெளிந்தான் புன்னகையும் கொண்டு.

 

“இதெல்லாம் நல்லா தான் இருக்கு. மனசு விம்மி வருது. உங்க அப்பாவை நினைச்சா தான் அப்படியே புஸ்ஸுனு போயிடுது!” என்றும் சொல்ல, அவ்வபோது இப்படி தான் ஆதங்கத்தை கொட்டுவதும் அதையே நினைத்து சிரிப்பதும் என்றானது.

 

எங்கே பேச்செடுத்தாலும் இதில் தான் வந்து நின்றது முடியும் போது.

 

அன்று காலை ஏழு மணிக்கெல்லாம் மகேஸ்வரன் வீட்டில் இருந்து கிளம்பி இருந்தார். ஒன்பது மணிக்கு தான் தங்களது அலுவலகம் செல்ல என கிளம்பி கீழே வந்தான் ஈஸ்வர்.

 

“என்னவும் மீட்டிங் இருக்கா ஈஸ்வர் இன்னைக்கு? அப்பா ஏழு மணிக்கெல்லாம் கிளம்பிட்டாங்க?” என லதா கேட்க,

 

“அப்படி எதுவும் இல்லையே!” என்றவன் அலுவலகம் அழைத்து கேட்டு,

 

“சைட்டுக்கு தான் போயிருக்காங்க ம்மா. நைட்டு கான்க்ரீட் நடந்துச்சு. அதான் பார்க்க போயிருப்பாங்க!” என்றான்.

 

மாதக் கடைசி என்பதில் ஈஸ்வருக்கு அலுவலகத்திலேயே நேரம் சென்றிருந்தது. மதியம் உணவுக்கும் வீடு செல்லவில்லை. அதன்பின் தான் கிளம்பி தந்தை இருக்கும் வேலை நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.

 

மூன்று மணி அளவில் லதாவிற்கு அழைப்பு வரவும், “சொல்லு ஈஸ்வர்!” என லதா எடுக்க,

 

“ம்மா! கொஞ்சம் ஹாஸ்பிடல் வாங்களேன்!” என்று மருத்துவமனை பெயர் சொல்லவுமே,

 

“என்ன ஈஸ்வர் என்னாச்சு?” என்று பதட்டம் சூழ்ந்தது லதாவிற்கு.

 

மகன் தானே பேசுகிறான் என்று நினைத்து அவனுக்கு எதுவுமில்லை என மகிழவும் முடியாமல் கைகள் நடுக்கம் வந்துவிட்டது நொடியில்.

 

“பெருசா ஒண்ணுமில்ல ம்மா. அப்பாக்கு கொஞ்சம் அடி. பயப்படாதீங்க. ஒண்ணுமில்ல கொஞ்சம் சீக்கிரம் வாங்க!” என அவன் சொல்லி வைத்துவிட, அவன் சொல்லிவிட்டாலும் இதயத்துடிப்பு இரட்டிப்பாகி இருந்தது லதாவிடம்.

 

அஞ்சலியும் வீட்டில் இருக்க, அவளையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டார் மருத்துவமனைக்கு.

 

“என்ன ஈஸ்வர்! அப்பா எங்க? என்னாச்சு” என முகமெல்லாம் வெளிரிப் போய் வந்தார் லதா. மகன் கைகளைப் பிடித்துக் கொண்டவர் உடல் நடுக்கம் வெளிப்படையாய் உணரமுடிந்தது.

 

“அதான் சொன்னேனே! பெருசா ஒண்ணுமில்ல ம்மா. பயப்படாதீங்க!” என இன்னும் அன்னையை அணைத்து நின்றவன் அஞ்சலியும் கலங்கி நிற்கக் கண்டு, “உஃப்!” என காற்றை இழுத்து நிதானமானான் முதலில்.

 

“சைட்ல சின்ன இன்சிடேன்ட் ம்மா. வேற யாருக்கும் எதுவும் இல்ல. அப்பாக்கு தான் கால்ல அடி” என்றவன் அவர் பயந்து பார்க்கும் பொழுதே,

 

“சைட்ல வேலை நடந்துட்டு இருந்துச்சு. அப்பா ரவுண்ஸ் போய் செக் பண்ணும் போது தண்ணி இறங்கி இருந்த குழில கால் ஸ்லிப் ஆகிடுச்சு போல. மனேஜரும் அப்பாக்கு ஹெல்ப் பண்ண போய் அவர்க்கு கைல அடி. பயப்படுற அளவுக்கு எதுவும் இல்ல புரியுதா?” என்று அவன் சொல்ல,

 

என்ன சொல்கிறான் என்பதாய் பார்த்தார் லதா. அவன் முகமும் சரி இல்லை. கூடவே அத்தனை சிரத்தையாய் இவர்கள் பயத்தை கலையவும் அவன் முயல்வது தெரிந்தது.

 

“உனக்கு என்னாச்சு?” என்றார் இன்னும் குரல் தெளிவில்லாமல். ஈஸ்வர் மேலுமே நனைந்து ஈரமும் சகதியும் என பார்த்தவர் முகமே அரண்டு நிற்க,

 

“அதான் சொன்னேனே குழில தண்ணி தேங்கி இருந்துச்சு. அப்பாவை தூக்கும் முன்ன இப்படி ஆகிடுச்சு” என்றவன் அப்பொழுது தான் அவனை கவனித்ததே.

 

அவனே அந்த நிமிடம் தடுமாறி தான் போயிருந்தான். அதை சொல்லி பயமுறுத்த முடியாதே!. எதிர்பார்க்கவே இல்லை. 

 

அவன் வந்த போது தான் அந்த கட்டப்பட்டுக் கொண்டிருந்த பில்டிங் பின்னே சத்தமும் கூச்சலும் என கேட்க, என்னவோ என்று தான் வேகமாய் உள்ளே சென்று பார்த்தபோது மேனேஜர் தடுக்க முயன்று கையில் அடியுடன் அமர்ந்திருக்க, அங்கே தோண்டி இருந்த குழிக்குள் தந்தை அமர்ந்திருந்த நிலையில் காலை பிடித்தபடி இருந்ததைக் கண்டதும் அவனுக்குமே உயிர் நின்று தான் துடித்தது.

 

அதன்பின் மற்றவர்கள் உதவியுடன் தந்தையை மீட்டு இங்கே கொண்டு வந்து சேர்த்து அவர் நிலையை தெரிந்து கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டபின் தான் அன்னைக்கு அவன் அழைத்ததே.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!