Skip to content
Post Views: 550
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 35
கங்காவிற்கு,அன்று இரவு… தூக்கம் வந்தாலும் மனசுக்கு மட்டும் அமைதி இல்லை.
ஒரு பக்கம் சிவராமன் …
மற்றொரு பக்கம் சல்மான் …
இருவருமே அவளுக்கு தேவை.ஆனால் ஒருநாள் இந்த இருவரும் நேருக்கு நேர் நின்றால்…? அந்த எண்ணமே அவளது நெஞ்சை பதற வைத்தது.
Advertisement
எப்படியோ தூங்கியவளுக்கு,அந்த இரவு கனவு பயங்கரமாக வந்தது.
அவள் வீட்டு வாசல் முன் நின்று கொண்டிருந்தான் சல்மான்.அவன் முகத்தில் சோகமும் வேதனையும் கலந்திருந்தது.
அவனுக்கு எதிரே சிவராமன்.
Advertisement
“என் பொண்ணு வாழ்க்கையில இருந்து வெளியே போ”என கத்த…
Advertisement
“அப்பா… ப்ளீஸ்…”என் மேல்தான் எல்லா தப்பும் என சிவராமன் கையை பிடிக்க ஓடினாள்.
அதே நேரம் “அப்பா நான் சொல்றதே ஒரு நிமிஷம் கேளுங்க …” என சல்மான் கூறினான்.
யார் பக்கம் நிற்பது? என்று தெரியாமல், நடுவில் நின்றவளின் உடம்பே நடுங்கியது.
Advertisement
அடுத்த நொடி, சிவராமன் கோபத்தில் சல்மானின் சட்டையை பிடிக்க…
“அப்பா வேண்டாம்!” என அலறியபடி தூக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்தாள் கங்கா.
மூச்சு வாங்கவே கஷ்டமாக இருந்தது. நெற்றியெல்லாம் வியர்வை.கைகள் நடுங்கின.
என்ன ஆச்சு கங்கா?
“ஒன்னுமில்லப்பா”என மறுபடியும் தூங்க போனாள்.இல்லை இல்லை தூங்குவதை போல நடித்தாள். சிவராமன் எழுந்து இவள் நெற்றியில் திருநீறு பூசி படுக்க போனார். இவளை நினைத்து அவரும் தூக்கத்தை தொலைத்தார்.
அந்த இரவிலேயே ஒரு முடிவுக்கு வந்தாள். “இல்ல…இது சரி வராது… நான் சல்மானை விட்டு கொஞ்சம் தள்ளி நிக்கணும்…”
எப்படியும் தனக்கு எந்த முடிவையும் எடுக்க தெரியாது.எல்லாவற்றையும் சொதப்பி கடைசியில் சிவராமன் கையில்தான் கொடுக்க போகிறோம்.
என்னதான் கண்ணியம்,பெண்ணியம் எல்லாம் பேசினாலும் தன் சமூகம் என வரும்போது,அதிக பற்று உடையவர் சிவராமன். உனக்கு உன் சமூகம் பெரிசுனா எனக்கு என் சமூகம் பெரிசு என நெஞ்சை நிமிர்த்தி நிற்பவர். யாருக்காகவும் அதை விட்டுத்தர மாட்டார். சமூகத்தை விட்டுத் தாராதவர். மதத்தை விட்டுக் கொடுப்பாரா?நிச்சயமாக இல்லை.
கங்காவை பொருத்தவரை காதல் என்பது இருவரும் மகிழ்ச்சியாக ஒருவர் கையை மற்றொருவர் விடாத படி காலத்திற்கும் இணைந்து வாழ்வது இல்லையே.தனக்கு பிடித்தவர் நலமாக வாழ்வதை பார்ப்பதுதானே காதல்.
சல்மானின் ஆசைப்படி அவன் நல்ல ப்ரோபசர் ஆக வேண்டும்.அவன் அப்பாவையும், அம்மாவையும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்.பின் அவனுக்கு ஏத்தபடி அவன் மதத்தில் ஒரு நல்ல பெண் அவனுக்கு அமைய வேண்டும் என நினைத்தாள்.கொஞ்ச நாள் என்றாலும், அவனுடன் இருந்த நாட்கள் அழகானவை. அதை அப்படியே பத்திரமாக மனதில் பூட்டி வைத்தாள்.
சல்மானிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தாள்.
சிவராமனுக்கு, கங்கா “அப்பா வேண்டாம்!” என்று கத்தியதில் இருந்து மனது சரியில்லை.எங்கே இந்த வரனும் தட்டி போயிவிடுமோ என்று.. கோவிலுக்கு சென்று உருக்கமாக வேண்டிக் கொண்டார்.
சோர்வாக கோவில் மரத்தடியில் அமர்ந்திருந்தவரை,
“ஏன் சிவராமா இன்னைக்கு இவ்ளோ நேரம் கோவில்ல உட்கார்ந்திருக்க?எப்போ வந்தாலும் காலுலே சுடுதண்ணி கொட்டுன மாதிரி கிளம்புவே” என பூசாரி கேட்டார்.
என் புள்ளைக்கு ஒரு வரன் வந்திருக்கு, அது நல்லபடியா அமையனும்..வர வரன் எல்லா தட்டிட்டே போது என்றார் கவலையுடன்.
“சரி வா பூ கேட்டு பாக்கலாம்” என அழைத்தார்.
சிவப்பு அரளியையும், வெள்ளை அரளியையும் கட்டி போட,சிவராமன் எடுத்தார்.இந்த முறை சிவப்பு அரளி வந்தது. அவருக்கு மனதே சரியில்லை.
அந்த நேரம் மாப்பிள்ளையின் ஊரில் இருந்த குடோனில் “ரீடு நீக்கல் ” எடுக்க அழைப்பு வர சென்றார்.வேலையை முடித்து விட்டு அந்த குடோன் ஓணரிடம் மாப்பிள்ளை பற்றி விசாரிக்க,அவர் மாப்பிள்ளை சரியில்லை சிவராமா.
நைட் ஆனா.ஒரே குடி. பெத்த அம்மாவையே ரோட்டுல போட்டு அடிப்பான்.நான் சொல்றேனு முடிவு எடுக்காதே.கொஞ்சம் நல்லா விசாரிச்சு பொண்ண கொடு என்றார்.
மீண்டும் மாப்பிள்ளையை பற்றி அலசி ஆராய ஒரே பதில் சொல்லபட்டது. தாயை தெய்வமாக நினைக்கும் தனக்கு இப்படிப்பட்ட மருமகனா என திருமணத்தை நிறுத்தி விட்டார்.கங்கா விற்கு உள்ளூர மகிழ்ச்சியே. சிவராமனும் கங்காவின் வாழ்வில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.
சிவராமனுக்கு நீண்ட நாட்களாக சர்க்கரை நோய் இருந்தது. வேலை, குடும்பம், பொறுப்பு என்று ஓடிக்கொண்டே இருந்தவர்… தன் உடம்பை மட்டும் சரியாக கவனிக்க மறந்துவிட்டார்.
இடது காலின் பெருவிரலில் சிறிய புண் ஏற்பட்டது. முதலில் அது சாதாரண காயம் போலத்தான் இருந்தது.
“இது என்ன பெரிய விஷயம்” என்று அலட்சியமாக விட்டுவிட்டார்.
ஆனால் சர்க்கரை நோய் என்பது
மனிதனை ஒரே நாளில் தாக்கும் நோய் இல்லை…
கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய உடல் வலிமையையும், எதிர்ப்பு சக்தியையும், காயம் ஆறும் தன்மையையும் அமைதியாக கவர்ந்து செல்லும் கொடிய வியாதி.
முறைப்படி கவனிக்கவில்லை என்றால் ஒரு சிறிய காயமே கூட பெரிய ஆபத்தாக மாறி விடும்.
அதனால்தான் மருத்துவர்கள்
“சர்க்கரை நோய் வந்தவர்களின் கால்களை குழந்தையின் கால்களைப் போல பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறுவார்கள்.
ஏனெனில், அது சாதாரண நோய் அல்ல…
கவனக்குறைவாக இருந்தால்
மெல்ல மெல்ல மனிதனை பலவீனப்படுத்தி, இறுதியில் உயிரையே விழுங்கும் ஆட்கொல்லி நோயாக கூட மாறிவிடும். சிவராமனுக்கு தன் உடம்பை விட, மகள்களின் வாழ்வே பிரதானமாக இருந்தது. தன்னைப் பற்றி எந்த அக்கறையும் கொள்ளவில்லை.
இரண்டொரு நாட்களில் பிஎச்டிக்காக அழைப்பு வந்தது. கங்கா காலேஜ் சென்றாள்.சல்மானை பார்க்க, அவன் ரொம்ப பிஸியாக வேலை செய்து கொண்டிருந்தான்.
சொன்ன படியே உடம்பை குறைத்து விட்டான். எப்படி சொன்னதை செய்கிறான்? என ஒரு நிமிடம் எண்ணிக் கொண்டாள்.
இதற்கு முன்பும் இங்கே வந்திருக்கிறாள். சல்மான் வேலையாக இருந்தாலும்,எவ்வளவு நேரம் ஆனாலும் காத்திருந்து பார்த்து விட்டே செல்வாள். ஆனால் இன்று அவனை பார்ப்பதை தவிர்க்க எண்ணி கிளம்பி விட்டாள்.
அன்று பொங்கல் பண்டிகையின் கடைசி நாள்.கங்காவும் கெளசியும் சண்டை பிடித்துக் கொண்டே… முறுக்கு பிழிய,லட்சுமி அடுப்பில் போட்டு எடுத்தார்.
சல்மான் கங்காவிற்கு ஃபோன் செய்தான். எடுக்கலாமா? வேண்டாமா? என ஒரு பட்டிமன்றமே நடந்தது அவளுள்.இறுதியாக ஃபோனை எடுத்து வெளியே வந்து விட்டாள்.
சொல்லு சல்மான்.
ஏன் கங்கா என் மேலே உனக்கு ஏதாச்சு கோபமா?
இல்லையே .ஏன்?
அப்பறோம் ஏன் என்கிட்ட சரியா பேச மாட்டீங்கற.நியூ இயர் விஷ் பண்ணுனே, ரிப்ளை பண்ணுல. காலேஜ் வந்தே.ஆனா என்னை பாக்காமலே கிளம்பிட்டே. என்ன ஆச்சு?
நா காலேஜ் வந்தப்போ, நீ ரொம்ப பிஸியா இருந்தே… சரி ஏன் டிஸ்டர்ப் பண்ணனும்னு வந்துட்டேன்.
இதுதான் உண்மையா?
ஆமா சல்மான்.
சரி விடு.நீ எதையோ மறைக்கறே. உனக்கு எப்போ சொல்ல விருப்பமோ. அப்போ சொல்லு.
ம்ம்…. சரி.
என்ன பண்ணிட்டு இருக்கே?
முறுக்கு சுட்டுட்டு இருக்கோம்.
முறுக்கா? எனக்கு வேணும் கங்கா.
இப்போ எப்படி சல்மான்.
நீ நாளைக்கு எடுத்துட்டு வா.
சரி காலேஜ் கொண்டு வந்து தரேன்.
இல்ல இல்ல நீ ஏன் இவ்ளோ தூரம் வரேன்?நான் உன் ஸ்கூல் பஸ் ஸ்டாப்ல வந்து வாங்கிக்கறேன் என்றான்.
அடுத்த நாள் காலை ஏழு மணிக்கெல்லாம் முறுக்கை எடுத்து கொண்டு கிளம்பி விட்டாள்.இதுவே முதல் முறை அவனை தனியாக சந்திப்பது. இதுநாள் வரை நித்யாவோ மாலதியோ உடன் இருப்பர்.உள்ளூர நடுக்கம்தான். ஒரு பக்கம் வேண்டாம் மனமே இவனிடம் போகாதே எனவும்… மறுபக்கம் அவனை பார்க்க வேண்டும் போலவும் இருந்தது.
முக்கால் மணி நேரம் கழித்தே பஸ் வந்தது. இடத்தை அடைய, பஸ்ஸில் இருந்தே சல்மானை பார்த்து விட்டாள். ஒரு கடையின் வாசலில் அமர்ந்திருந்தான்.
இவள் பஸ்ஸை விட்டு இறங்கி,அவனை நோக்கி நடந்தாள். அவனும் இவளை பார்த்து எழுந்து வந்தான்.
சாரி சல்மான் லேட் ஆயிடுச்சு.
ஒரு நாலு முறுக்குகாக என்னை இவ்ளோ நேரம் காக்க வெச்சிட்டையே கங்கா.
“சாரி இந்தா” என சம்படத்தை நீட்டினாள்.
உன்னை யாரு சம்படத்துல கொண்டு வர சொன்னது.இனி எங்க அம்மா உனக்கு எதாச்சு செஞ்சு கொடுக்கனும்னு அடம் பிடிப்பாங்க பாரு என வாங்கி பையில் வைத்தான்.
அவ்ளோ டைம் எல்லா எடுத்துக்காதே சல்மான்.இது என் புருஷன் வீட்டுக்கு கொண்டு போறது. நாளைக்கே கல்யாணம்னா கூட எங்க அப்பா பாத்திரம் எல்லா கணக்கு எடுக்க ஆரம்பிச்சிருவாரு என தன் மண்டையில் ஏற ஒரு முறை சொல்லிக் கொண்டாள்.
சரி சரி வழி விடு. எனக்கு டைம் ஆச்சு என பைக்கை திருப்பி சென்றான். அவன் தலை மறையும் வரை பார்த்தாள்.அவ்வளவுதான் சென்று விட்டான். இவளும் பள்ளியை நோக்கி நடந்தாள்.
இதுதான் அவர்களின் மகிழ்ச்சியான சந்திப்பு. வழிநிறைந்த நிலையில் அடுத்த சந்திப்பு நிகழ இருந்தது.
சிவராமன் தற்போது கடை வைத்துள்ள உரிமையாளர்,அதை விரிவு படுத்துவதாகவும், கடையை காலி செய்து தரும்படியும் கேட்டுக் கொண்டார்.
எனவே வேறு ஒருவருக்கு சொந்தமான நிலத்தில்,
நிலவாடகைக்கு தானே சொந்தமாக கடையை கட்டினார். நிழலுக்காக கடையின் இருபுறமும் இரண்டு வேப்பமரங்களை வளர்த்தார்.
அடைமழை காலம் இரவு நல்ல மழை. கடையின் முன்பு மழை தண்ணீர் தேங்கி நிற்க, சிவராமன் ஒரு மண்வெட்டியை எடுத்து மழை நீர் போக வழி செய்து விட்டார்.
எவ்வளவு பெரிய வீடு என்றாலும், நால்வரும் ஒன்றாகவே ஹாலில் தூங்குவது வழக்கம். என்னதான் மனஸ்தாபங்கள் இருந்தாலும், ஒன்றாகவே இரவு உணவு உண்பர்.சில சமயம் கங்காவிற்கு மட்டும் சலுகை. அதுவும் சிவராமனே ஃபோன் அடித்து விடுவார்.”நான் வரே லேட் ஆகும்.கங்கா பசி தாங்காது சாப்பிட வெச்சிரு” என..ஆனால் கெளசி எவ்வளவு நேரம் ஆனாலும் அப்பா வந்த பின்தான் சாப்பிடுவாள்.
இடியுடன் கன மழை அடித்து வாங்கியது. சிவராமன் இன்னமும் வீடு வந்த பாடில்லை. மூவரும் சாப்பிடாமல் அமர்ந்திருக்க…காலிங் பெல் சத்தம். லட்சுமி கதவை திறந்தார். சிவராமன்தான் தொப்பரை தொப்பரையாக நனைந்து வந்திருந்தார்.
இப்படி நனைச்சுட்டு வராட்டி என்ன?கடையிலேயே நின்னுட்டு மழை நின்னதுக்கு அப்பறோம் வர வேண்டியது தானே என லட்சுமி தன் புராணத்தை ஆரம்பித்து விட்டார்.
“அப்பா இந்தா துண்டு தலையே துவட்டு” என கெளசி ஓடி வந்தாள். கங்காவிற்கு தற்போது எல்லாம் அப்பாவின் சோர்ந்த முகத்தை பார்த்து கவலை தன்னால் தானே எல்லாம் என ,எதுவும் பேசாது அவரையே பார்த்திருந்தாள்.
உடையை மாற்றி வந்தவர் கங்கா சாப்பிட்டுருச்சா? என்றார்.
இல்ல.
சரி எடுத்து வை சாப்பிடலாம்.
நால்வரும் சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றனர்.
மூவரும் உறங்க.. சிவராமனுக்கு உறக்கம் வரவில்லை. ஒரே நடுக்கம் குளிர், ஜூரம்.இவர்களிடம் சொல்லாமல் விடிந்ததும் ஹாஸ்பிடல் சென்று பரிசோதிக்க சுகர் பீபீ எல்லாம் தாறுமாறாக ஏறி இருப்பதாக சொல்லப்பட்டது.”ஒரு ஊசி போடுங்க சரியாயிடும்” என ஊசியை போட்டுக் கொண்டு கடைக்கு சென்றுவிட்டார்.
ஒரு ஊசியில் அனைத்தும் சரியாகிவிடும் என இருந்தவருக்கு, அவரது உடல் தன் வேலையை காட்ட ஆரம்பித்தது.
கங்கா விடுமுறை என்பதால்,துணியை துவைக்க வீட்டை பூட்டி விட்டு,தோட்டத்தினுள் சென்று விட்டாள். கார்மேகங்கள் சூழ்ந்து, இதமான காற்றை தந்தது.ஒரு பெரிய இடி இடித்து,”மழை வருவதற்குள் துணியை காய வைத்து எடு” என எச்சரிக்கை செய்ய வேகமாக வேலையை முடித்து வீட்டிற்கு வந்தாள்.
குளிர் ஜுரம் மேலும் அதிகமாக, முடியாமல் வீட்டிற்கு வந்துள்ளார். கதவு பூட்டியிருக்க தலை சுற்றி கீழே அமர்ந்து விட்டார் சிவராமன்.
பக்கெட்டோடு உள்ளே வந்த கங்காவிற்கு சிவராமனை பார்த்து அதிர்ச்சி.அவ்வளவு சீக்கிரமாக எங்கேயும் தண்ணீர் கூட வாங்கி குடிக்க மாட்டார்.இப்படி கீழே அமர்ந்திருப்பதை பார்க்க ஒரே பதற்றம்.
அருகே வந்து என்ன ஆச்சுப்பா?என்றாள்.
தலை சுத்துது கங்கா என்றார்.
–தலைவன் வருவான்…
error: Content is protected !!