Skip to content
Post Views: 381
அத்தியாயம் – 8
தலைமைச் செயலாளர் இல்லம், புது தில்லி.
Advertisement
அன்று இரவு, சித்தார்த் வீடு திரும்ப வெகு நேரம் ஆகி இருந்தது. நாள் முழுவதும் பல பேரை சரிக்கட்டி, சோர்வாக வீடு திரும்பியவரை வரவேற்றது வரவேற்பறையில் காத்திருந்த மனோகர் ஜோஷி தான்.
தந்தை இன்னும் உறங்காமல் இருப்பதைக் கண்டு ஆச்சரியத்துடன்,
Advertisement
Advertisement
“என்னப்பா? தூங்கலையா? ஏன் இவ்வளவு நேரம் முழுச்சிருக்கீங்க?” என்ற சித்தார்த், தனது கழுத்துப் பட்டையை விடுவித்தவாறே நீள்விருக்கையில் சரிந்தார்.
அவர் குரலில் கவனம் கலைந்த மனோகர், தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் பக்கக்குறியை வைத்து நிதானமாக மூடி விட்டு, மகனை நிமிர்ந்து பார்த்தார்.
Advertisement
“உனக்காகத் தான் சிட் வெயிட் பண்ணேன். ஏதாச்சும் சாப்பிடிறியா? சுசி டைனிங் டேபிள்ல எல்லாம் எடுத்து வைச்சிட்டு தான் படுத்தா”
“வேண்டாம்ப்பா. அண்டைம் ஆகிடுச்சு. ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு படுத்துடுவேன். ஐ ஹேட் அ லாங் டே” என்ற சித்தார்த், தன்னையும் மீறி தாவிக் குதித்த கொட்டாவியை புறங்கை கொண்டு வேகமாக தடுத்தார்.
“ம்ம்ம், மார்னிங்கும் பிசியா தான் இருக்க. ராத்திரியும் லேட் ஆகிடுது. இந்த வேலை அப்டி தான். ஒன்னும் பண்ண முடியாது. ஆனா உடம்ப கவனிக்காம விட்டுடாதே. பேசாம நீயும் பி.எம் மேடம் கூட ஜாகிங் போயேன்” என்றார் சிரிக்காமல்.
“ப்பா…ப்ளீஸ். நீங்களும் இந்த டாப்பிக் ஆரம்பிக்காதீங்க. மேடம் என் கிட்ட முகம் குடுத்து கூட பேசுறது இல்ல. ஸ்டிரிக்ட்டா ஆஃபிஸ் பவுண்டரில தான் நிக்கிறாங்க” என்றார் சலிப்பாக. இரண்டு நாட்கள் ஏதோ இரண்டு யுகம் போல் தான் கடந்திருந்தது சித்தார்த்திற்கு.
“எல்லாம் எதிர்பார்த்தது தானே சிட். வொய் ஆர் யூ சர்ப்ரைஸ்ட்?”
“ம்ப்ச், எதிர்பார்த்தது தான். ஆனா ரியலா ஃபேஸ் பண்றப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு! நான் எவ்ளோ வீக் அப்டின்னு ஒவ்வொரு வாட்டியும் நெத்தியடி அடிச்சு புரிய வைக்கிறாங்க.”
“யூ ஆர் நாட் வீக்! அவங்க இவ்ளோ ஸ்டாராங்கா இல்லாட்டி இந்த வயசுல இந்த போஸ்ட்ல வந்து உக்காந்திருக்க மாட்டாங்க. அண்ட் அவங்க எப்பவும் இண்டென்ஷன்ஸ் கிளியரா தான் சொல்லிருக்காங்கல்ல. சோ எதுவும் ப்ளேம் பண்ண முடியாது”
“அதெல்லாம் கரெக்ட் தான்ப்பா. என்னால ஈசியா எடுத்துக்க முடியலன்றது தான் பிரச்சனை. சட்டுன்னு எங்கேர்ந்து தான் கோவம் வருதுன்னு வேற புரியல. என் வேலைல எவ்ளோ க்ரைசிஸ் சிச்சுவேஷன் எல்லாம் ஹேண்டில் பண்ணிருக்கேன்ன்னு உங்களுக்கே தெரியும். அண்ட் இங்க ஆஃபிஸ் பிரஷர் எல்லாம் பாத்துப்பேன்.
பட் இது வசு இன்வால்வ்ட் அப்டின்றது தான் என்னோட டவுன் பாயிண்ட். எக்குத்தப்பா எமோஷனல் ஆகிடுறேன். இன்னிக்கு கூட அந்த ஜாகிங் பிரஸ் இஷ்யூ பாத்து அவ்ளோ டென்ஷன்.
இவங்க கிட்ட சொன்னா வேலைக்காகதுன்னு, அந்த இடியட் வருண் கிட்ட போகாதன்னு படிச்சு படிச்சு சொன்னேன். முத ஆளா பல்லைக் காட்டிட்டு போயிருக்கான். இருக்குற பிரச்சனைல இதெல்லாம் தேவையா?”
“ஈசி சிட். இவ்ளோ இன்வால்வ்மெண்ட் இஸ் நாட் குட். நீ எதுக்காக இவ்ளோ கஷ்டப்பட்டு இந்த வேலைய வாங்கினியோ அதை மட்டும் ஃபோகஸ் பண்ணு. மித்ததெல்லாம் ஆட்டோமேட்டிக்கா ஃபிக்ஸ் ஆகிடும்.”
“எங்க? ஒரு வார்த்தை பேச முடியல. மே பி இந்த பிளானே தப்புன்னு நினைக்கிறேன்”
“ம்ப்ச், இப்பவே உன்னால பேச முடியாட்டி வேற எப்ப, எப்படி பேசி கன்வின்ஸ் பண்ணுவ சொல்லு?”
“சத்தியமா தெரியல!”
“எக்சாட்லி. நீ என்கிட்ட பிராமிஸ் பண்ணிருக்க சிட். திஸ் இஸ் யுவர் லாஸ்ட் டிரை. அதுக்காகத் தான் என்னோட நெட்வொர்க் சப்போர்ட் ஃபுல்லா கெடைக்கிற மாதிரி பாத்துக்கிட்டேன்.
ஆஃப் கோர்ஸ். இதுல எனக்கு பெர்சனல் பிரைடும் இருக்கு. நான் பண்ணின வேலைய என் பையனும் பண்றான் அப்டின்றது எவ்ளோ பெருமையான விஷயம் தெரியுமா? பட் வசுந்தராக்கு வேண்டாம்னா வேண்டாம் தான். டாட்.”
“தெரியும் பா. அதுக்கு தான் ஐ ஆம் டிரையிங் ஹார்ட். இந்த விஷயம் பொருத்தவரை நவ் ஆர் நெவர் தான்!” என்றவர், நீள்விருக்கையில் இருந்து எழுந்து கொண்டார்.
“இது பத்தி கவலைப் படாதீங்க. நான் பார்த்துக்குறேன். குட் நைட்” என்ற சித்தார்த், தனது அறைக்கு வந்து விட்டார்.
தந்தை கவனித்து கேட்குமளவு வந்து விட்ட நிலைமை சற்று தலையிறக்கமாகக் கூட இருந்தது சித்தார்த்திற்கு. அதுவும் கூட கோபமும், வருத்தமுமாக வசுந்தராவின் மீது திரும்பியது.
வசுந்தரா விழித்திருக்கிறாரா எனக் கேட்டு குறுஞ்செய்தி அனுப்ப அதைப் பார்த்ததற்கான குறியீடு வந்ததே தவிர பதில் எதுவும் வரவில்லை. அதில் பல்லைக் கடித்தவர், பொறுக்க முடியாமல் வசுந்தராவிற்கு அழைத்தே விட்டார்.
அவரோ எந்த விதமான முஸ்தீபுகளும் இல்லாமல், “சிட், ஐ ஆம் அபவுட் டு ஃபினிஷ் திஸ் ஃபைல். வில் கால் யூ இன் டென் மினிட்ஸ்” என்று விட்டு, பட்டென அழைப்பை துண்டித்து விட்டார்.
கேட்டதை நம்ப முடியாமல், சில நொடிகள் அலைபேசியை வெறித்த சித்தார்த், ஒரு நீண்ட பெருமூச்சுடன் உடை மாற்றி விட்டு, சமையலறை சென்றார். அவரது அன்னை சுசித்ரா இரவு உணவு எடுத்து வைத்திருக்க, அதை குளிர்சாதனப் பெட்டியில் பத்திரப்படுத்தி விட்டு, பாலை எடுத்து சூடு செய்தார்.
சித்தார்த் தனது அறைக்குள் நுழையவும், அவரது அலைபேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது.
அவர் அழைப்பை ஏற்றதுமே,
“இது அஃபிசியலா பெர்சனலா சித்தார்த்?” என்றார் வசுந்தரா.
“அதெல்லாம் தெளிவுபடுத்தி விளக்கம் கொடுத்துத் தான், நான் உங்ககிட்ட பேசணுமா மேடம்?” என்றார் சித்தார்த் சற்று காட்டமாகவே.
“கண்டிப்பா! ரெண்டு பேருக்குமே இன்னிக்கு லாங் டே. ஆஃபிஸ்லயே உங்ககிட்ட கேட்டேன், எதுவும் சொல்லனுமான்னு. நீங்க தான் ஒன்னும் இல்லைன்னு சொன்னீங்களே?” என்றார் கேள்வியாக.
“வசு ப்ளீஸ்” என்ற சித்தார்த்தின் குரலில் ‘என்னைக் கொஞ்சம் பேச விடேன்’ என்ற மன்றாடல் கலந்திருந்தது.
“ரைட்! ஐ டேக் இட் அஸ் பெர்சனல் தென். சொல்லுங்க, என்ன சொல்லனும்? யூ ஹேவ் காட் டென் மினிட்ஸ்” என்று சிறிதும் தடுமாற்றம் இல்லாமல் தெளிவாக வந்தது வசுந்தராவின் குரல்.
“ம்ப்ச், இப்படி கொண்டு வந்து நிறுத்தினா நான் எப்படி பேச முடியும் வசு? என்னைய ரொம்ப ஈசியா எடுத்துக்குற” என்றவரின் குரலில் இப்போது வலியும், வருத்தமுமே எஞ்சியிருந்தது.
வசுந்தரா ஆள மூச்செடுத்து தன்னை சமன் செய்ய முனைவது சித்தார்த்திற்கு தெளிவாகக் கேட்டது. அதற்கு அவருக்குத் தேவையான நேரத்தைத் தரும் பொருட்டு அமைதியாக இருந்தார் சித்தார்த்.
“என்னைய என்ன பண்ண சொல்றீங்க சிட்? கண்டிப்பா காதல் பண்றதுக்கு எனக்கு நேரம் கிடையாது. என்னைய விட, கூட இருந்து எல்லா வேலையும் பாக்ககுற உங்களுக்கு அது நல்லாவே தெரியும். முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டுமே. அதைக் கிளறினா இரண்டு பேருமே ஹர்ட் ஆவோம்”
“சில விசயங்களுக்கு அறுவை சிகிச்சை பண்ணாம சரி பண்ண முடியாது வசு. அது மாதிரி நினைச்சிக்கோ. கைக்கெட்டுற தூரத்துல உன்னைய வைச்சிக்கிட்டு, மனசு விட்டு ஒரு வார்த்தை பேச முடியாம எல்லாத்தையும் எனக்குள்ளயே புதைச்சு வைக்கிறது எவ்ளோ பெரிய வேதனைன்னு உனக்கு தெரியாதா?”
அதே வேதனையை தினம் தினம் அனுபவிக்கும் அவருக்கா தெரியாது. ஆனாலும் மனம் திறக்காமல் மௌனம் காத்தார் வசுந்தரா.
“ப்ளீஸ் இப்படி பேசமா இருந்தே என்னைய சாகடிக்காத வசு. என்ன யோசிக்கிறன்னு சொன்னா தானே தெரியும்?”
“நான் எல்லா ரீசனும் உங்க கிட்ட தெளிவா சொல்லி தான் நாம பிரேக் அப் பண்ணதா எனக்கு ஞாபகம்”
“நாம இல்ல வசு. நீ! நீ தான் பிரேக் அப் பண்ண. எதையும் பிராப்பரா யோசிச்சு டைஜஸ்ட் பண்ணக் கூட நீ எனக்கு டைம் கொடுக்கல” என்ற சித்தார்த்திடம் அப்பட்டமாக குற்றம் சாட்டும் தொனி.
“ம்ப்ச், அந்த பழைய கதை இப்போ எதுக்கு?”
“சரி வேண்டாம். புதுசா, ஃபிரெஷ்ஷா ஆரம்பிச்சா ஓகே வா?” என்றார் சித்தார்த் விடாக்கண்டனாக.
“சிட்!” என்று பல்லைக் கடித்த வசுந்தரா,
“இந்த நேரத்துல பேசுற விஷயம் இல்ல இது. போய் தூங்குங்க. நாளைக்குப் பார்க்கலாம்” என கத்தரிக்கப் பார்க்க, சித்தார்த்தோ அவர் பிடியிலேயே நின்றார்.
“இந்த மாதிரி ஒவ்வொரு தடவையும் என்னைய தள்ளி வைச்சுத் தான் ரொம்ப காம்ப்ளிக்கேட் பண்ற” என்று நீண்ட பெருமூச்செடுத்தவர்,
“அதை விடு…ஏன் இன்னிக்கு வருண் கூட ஜாகிங் போன?” என தப்பான நேரத்தில் தப்பான கேள்வியைக் கேட்டு விட, அதுவும் பற்றிக் கொண்டது.
“எக்ஸ்க்யூஸ் மீ? யாருகிட்ட நான் கேட்கணும். என்ன, என்னைய சந்தேகப்படுறீங்களா?”
“நான் உன்னை சந்தேகப்படுவேன்னு நீ நினைச்சாக் கூட தப்பு வசு. இது தேவையில்லாத பிரச்சனை உனக்குன்னு உன் மேல இருக்குற அக்கறைல தான் சொல்றேன்” என்றார் சித்தார்த் இழுத்துப் பிடித்த பொறுமையுடன்.
“அவ்ளோ அக்கறை இருக்குறவங்க எங்கிட்ட தான் சொல்லிருக்கணும். ஏன் வருணைத் திட்டுனீங்க?”
“ம்ப்ச், வருண் ஒன்னும் யாரோ கிடையாது. அவனும் எனக்கு ஃபிரெண்ட் தான். அண்ட் வீ போத் ஆர் யுவர் வெல் விஷர்ஸ் அப்டின்றதால தான் வருண்கிட்ட சொன்னேன். எல்லாத்துக்கும் மேல நீ என்னைய யாரோ எதிரிய பார்க்குற மாதிரி பாக்குற வசு. நான் உன்கிட்ட வந்து என்ன சொல்றது? சொன்னா வீம்புக்குன்னு அதையே பண்ணுவ” என்றார் சலிப்பாக.
எத்தனை தரம் தன்னை நீருபிக்க போராடுவது என்ற அலுப்பு சித்தார்த்திற்கு.
“இதை பேசனும்னு தான் கூப்பிட்டீங்களா?”
வசுந்தராவின் ஒவ்வொரு வார்த்தையும், அதன் அழுத்தமும், தொனியும் சித்தார்த்தின் இரத்த அழுத்தத்தை எகிறச் செய்தது. ஆழ்ந்த மூச்சுகள் எடுத்து தன்னை சமன்படுத்தியவர்,
“இல்லை வசு. ஐ நோ யூ கேன் ஹேண்டில் யுவர்செல்ஃப்! நாட்டை ஆளறவங்களுக்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. பட் எனக்கு மனசு கேட்கல, அதுனால சொல்லிட்டேன். லெட்ஸ் மூவ் ஆன். நான் நம்ம ரிலேஷன்ஷிப் பத்தி தான் பேச கூப்பிட்டேன்” என்றார்.
“அப்டி ஒன்னு இல்லைன்னு போன வாட்டியே சொல்லிட்டதா தான் எனக்கு ஞாபகம்” என்றார் வசுந்தரா பிடி கொடுக்காமல்.
“சரி அப்டின்னே வச்சிப்போம். டெல் மீ ஒன் திங். வருணுக்கும், நீ என்னைய தள்ளி வைக்கிறதுக்கும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்கா?”
“சிட்! வருண் இஸ் மை ஃபிரெண்ட்! அண்ட் யூ நோ தேட்”
“உனக்கு வருண் ஃபிரெண்ட். வருணுக்கு நீ யாரு வசு?”
இந்தக் கேள்விக்கு என்னவென்று பதில் சொல்லுவார். அவரின் குழப்பத்தில் இதுவும் ஒரு பெரும் காரணி அல்லவா. ஆனால் அதை வெளிக்காட்ட விரும்பாதவராய்,
“அதை நீங்க வருண் கிட்ட தான் கேட்கணும்” என்றார் சுருதி சற்று இறங்கி விட்ட குரலில்.
“ம்ம்ம், தேர் யூ கோ! வருண் என்ன சொல்லுவான்னு எனக்கும் தெரியும். எங்க ரெண்டு பேர் வாழ்க்கையிலயும் இப்படி விளையாடுற உரிமைய உனக்கு யாரு கொடுத்தது வசு?” என்றார் சித்தார்த் கடுமையாக.
அதில் வசுந்தராவிற்கும் கோபம் வந்து விட்டது.
“நான் யார் வாழ்க்கைலயும் விளையாடல சிட். எனக்கு எது சரின்னு படுதோ அந்த பாதைல மட்டும் தான் நடக்குறேன். எப்படி உங்களால இந்த மாதிரி ஒரு வார்த்தைய சொல்ல முடிஞ்சுது? இந்த மைண்ட் செட்ல இருக்க உங்ககிட்ட பேச எனக்கு எதுவும் இல்லை” என்று கொந்தளித்தவர், அழைப்பை துண்டித்து விட்டார்.
சித்தார்த் எத்தனை முறை அழைத்தும், அவரின் அழைப்பு ஏற்கப்படவில்லை!
மறுபடியும் குளறுபடி செய்து விட்டது புரிய தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார் சித்தார்த்.
வசுந்தராவிடமோ அலைபேசியை விட்டெறிந்து தூள் தூளாக்கும் வேகம். கத்தி மேல் நடப்பது போல் ஒவ்வொரு நாளையும் கடத்தும் அவரிடம் சித்தார்த்தின் வார்த்தைகள், ஈட்டியால் நெஞ்சைக் குத்தி கிழித்து விட்டது.
ஏதோ இருவரது வாழ்க்கையிலும் வேண்டுமென்றே வசுந்தரா விளையாடிக்கொண்டிருப்பதைப் போன்ற வார்த்தைப் பிரயோகம். அதையும் அவர் மிக மகிழ்ச்சியாக செய்வது போல ஒரு பிம்பம் வேறு!
எவ்வளவு முயன்றும் மனம் ஆறவில்லை வசுந்தராவிற்கு.
நேரத்தைப் பற்றிக் கூட யோசிக்க முடியாமல், வனதேவனுக்கு அழைத்து விட்டார்.
அழைப்பை ஏற்றவர் குரலில் லேசான பதட்டம்.
“சொல்லுடாம்மா, எதுவும் பிரச்சனையில்லையே?” என்றார் வனதேவன் மெல்லிய குரலில். இரவு வெகு நேரம் மகளைப் பற்றிய கவலையில் அஞ்சலி புலம்பித் தள்ளிவிட்டு, சற்று நேரம் முன்பு தான் உறங்கியிருந்தார்.
மனைவி புலம்பியதில் வனதேவனுக்கும் மகளைப் பற்றிய சிந்தனை தான். கண்ணசர ஆரம்பித்து சில நொடிகளிலேயே மகள் அழைத்து விட, உறங்கும் மனைவியை ஒரு பார்வை பார்த்து விட்டு அறைக்கு வெளியில் வந்து விட்டார்.
கேட்டதற்குப் பதிலில்லாமல் போக, அலைபேசியை காதில் இருந்து எடுத்து பார்க்க இணைப்பில் தான் இருந்தது.
“வசும்மா? லைன்ல இருக்கியா?” என்க, இப்போது லேசான விசும்பல் சத்தம். வனதேவனுக்கு மனம் பதறி விட்டது. அவரறிந்த வகையில் வசுந்தரா தைரியமான, திடமான பெண். கடைசியாக அவர் எப்போது அழுதார் என்று கூட வனதேவனுக்கு ஞாபகமில்லை.
காலையில் செய்தியைப் பார்த்தபின் நடந்த குறுஞ்செய்தி உரையாடலில் கூட விளையாட்டாகவே பேசியிருந்தார். அதற்குள்ளாக என்னவாகி விட்டது என்ற பதட்டம் தந்தைக்கு.
மூக்கை உறுஞ்சும் சத்தம், அழுகையை அடக்கும் முயற்சியில் மகள் இருப்பதை புரிய வைக்க, வனதேவன் தன் பதட்டத்தைக் காண்பிக்காமல் அமைதியாக காத்திருந்தார்.
சில நிமிடங்களில் தன்னை சமன்படுத்திக் கொண்ட வசுந்தரா,
“என்னால முடியலப்பா” என்றார் மொட்டையாக.
“என்ன முடியலை?” இப்போது லேசான விறைப்பு தந்தையின் குரலில். வேலையில் இருந்து பின்வாங்கி விடுவாரோ என்ற சிறு பயம் வந்து ஒட்டிக்கொண்டது வனதேவனுக்கு. வசுந்தரா அப்படிப்பட்டவர் இல்லை என்றாலும், வனதேவன் பதவியின் சுமையை அறிந்தவர் ஆயிற்றே. ஒரு சதவீத வாய்ப்பாக அப்படி இருந்து விட்டால்? அந்தக் கவலை தந்தைக்கு.
“ஒரே நேரத்துல ரெண்டு பேரை ஏமாத்தற ஆளா நான்? என்னையப் பாத்து எப்படிப்பா அந்த மாதிரி ஒரு வார்த்தை சொல்ல முடிஞ்சுது?”
வனதேவனுக்கு தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை.
“வசு, ஈசி. என்ன பிரச்சனைன்னு தெளிவா சொல்லு” என்றார் வனதேவன் சற்று கண்டிப்பான குரலில்.
“நான் மொதல்லயே இந்த ரோலுக்கு சித்தார்த் வேண்டாம்னு சொல்லிருக்கணும்பா. ஒவ்வொரு நிமிஷமும் நெருப்புல நிக்கிற மாதிரி இருக்கு”
“சிட் என்ன பண்ணார் வசு?”
“என்னைய ரொம்ப கன்ட்ரோல் பண்ற மாதிரி தோனுதுப்பா. என்கிட்ட பேச டிரை பண்ணப்போ நான் பிடி கொடுக்கல. ஆனா அவர், நான் அவர் வாழ்க்கைலயும், வருண் வாழ்க்கைலயும் விளையாடுறேன்ணு என்னைய அக்யூஸ் பண்றாருப்பா.
உங்களுக்கே தெரியும்ல. வருணை நான் அப்டி நினைச்சுப் பழகல. இவங்க ரெண்டு பேரையும் என்னால ஹர்ட் பண்ண முடியாதுப்பா. சர்வீசிங்ல லைஃப் ஸ்பெண்ட் பண்ணிட்டு காலத்தை ஓட்டிடலாம்னு தானே நினைச்சிருந்தேன். இப்ப வந்து என்னைய குழப்பி விடுறார்” என்று சிறு பிள்ளை போல் தந்தையிடம் புகார் பத்திரம் வாசித்தார்.
“நீ கல்யாணம் பண்ணாம இருக்குறதுக்கு இதெல்லாம் சரியான ரீசன் அப்டின்னு நினைக்கிறியா வசு?” என்றார் வனதேவன் நிதானமாக. பிரச்சனையின் வேர் தெரிந்த பின், தான் நினைத்த விஷயம் இல்லை என்ற ஆசுவாசம் தந்தைக்கு.
இதற்கு என்ன பதில் சொல்லுவார் வசுந்தரா. அவரைத் துரத்தும் கேள்வியும் அது தானே. சித்தார்த்தைப் பிரிந்த நேரம் இருந்த வசுந்தரா இப்போது இல்லை தான். ஆனால் ஒருவரது வாழ்க்கையில் பத்து வருடங்களை வீணடித்து விட்டு இப்போது எதுவும் நடவாதது போல், சரியென்பது எந்த விதத்தில் நியாயம்?
ஒருவேளை அப்போதே வருணனுக்குத் தெளிவாகப் புரிய வைத்திருந்தால், மூவரின் வாழ்க்கையும் வேறு திசையில் சென்றிருக்குமோ என்று அவரால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
“சத்தியமா தெரியலப்பா! என்னால எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இல்லாம ஒரு வாழ்க்கை வாழவே முடியாது. நான் ஒதுங்கிட்டேன்னா, அவங்களோட வாழ்க்கையாவது சரியா இருக்கும்னு நினைச்சேன்.
கல்யாணம் எல்லாருக்கும் விதிக்கப்பட்டது இல்லை தானே. நான் தேர்ந்தெடுத்த அரசியல் வாழ்க்கைக்கு இந்த வழி ரொம்ப சூட் ஆச்சு. அதையே அப்டியே ஏத்துக்கிட்டேன்ப்பா. சத்தியமா சிட் என்னைய மறந்துட்டு வேற ஒரு வாழ்க்கை அமைச்சிப்பார்னு தான் நினைச்சேன்”
“ம்ம்ம், எல்லாத்துக்கும் நேரமும் காலமும் இருக்கு வசு. நான் ஒன்னு மட்டும் சொல்றேன். இந்த பிரச்சனைய உன் தலைல ஏத்தி உன் ஜட்ஜ்மெண்ட் அஃபெக்ட் ஆக விடாதே. உனக்கு அந்த டைம் அண்ட் ஸ்பேஸ் கிடைக்காது.
அதுக்காக சிட் கிட்ட கோபப்படனும்னு சொல்லல. எனக்கு தெரிஞ்சு நீ எடுத்துக்கிட்ட மீனிங்ல அவர் கண்டிப்பா அப்படி சொல்லிருக்க மாட்டார். அவருக்கும் வருத்தம், கோபம் எல்லாம் இருக்கும் தானே. இப்ப தான் உன்கிட்ட அதையெல்லாம் காட்டுறதுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. சோ கொஞ்சம் கொஞ்சமா பொறுமையா பேசி தான் சரி பண்ணனும்”
“அதுக்கு, அவர் அப்படி ஒரு வோர்ட் யூஸ் பண்ணலாமா?” என்று அதிலேயே உழன்றார் வசுந்தரா.
இந்த உரையாடல் நிகழும் போதே வசுந்தராவின் அலுவலக அலைபேசி பலமுறை அடித்து ஓய்ந்தது. சித்தார்த்திடம் வந்திருந்ததை அலட்சியமாக, புறக்கணிக்க அதன் பின்னர் லலிதாவிடம் இருந்தும் சில தவற விட்ட அழைப்புகள்.
“பா, ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன். பி.எம்.ஓ என்னைய ரீச் பண்ண டிரை பண்றாங்க. நான் அப்புறம் பேசுறேன்” என்று பதில் பெறக்கூட காத்திருக்காமல், அழைப்பை துண்டித்து விட்டார் வசுந்தரா.
சித்தார்த்திடம் இருந்து வந்த அழைப்புகளை ஏற்காததால்,
‘எமர்ஜென்சி மேம். யு.எஸ் பிரெசிடெண்ட் டிரேட் பாலிசி நீட்ஸ் இமிடியட் ரெஸ்பான்ஸ் டு ஸ்டெபிளைஸ் இண்டியன் ருப்பி அண்ட் ஏசியன் மார்க்கெட். லலிதா அண்ட் ஐ ஆர் ஆன் அவர் வே!’
என குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
error: Content is protected !!