Skip to content
Post Views: 524
அத்தியாயம் 12
அடுத்த ஒரு மாதமும் ரெக்கை கட்டிக்கொண்டு தான் பறந்தது இருவருக்கும்.
Advertisement
அவர்கள் பக்க வழக்கம் படி, திருமணம் முடிந்து மூன்றாம் நாள் தான் மணமக்கள் விஜயன் வீட்டிற்கு வந்தனர்.
விஜயன் வெளிநாடு புறப்பட்டு செல்லும்வரை தாய் வீட்டிலே தங்கும் ஏற்பாட்டுடன் அக்காவும், தங்கையும் கிளம்பி வந்திருந்தார்கள். உள்ளூர் என்பதால் அது சுலபமாகவும் போயிற்று.
Advertisement
Advertisement
“தம்பி திரும்ப அனுவை துப்பாய்கு அழைத்து செல்லும்வரை, அனு நம்ம வீட்ல தான் இருக்கணும்” என்று வேறு ஆரம்பித்தனர் லக்ஷ்மியும் ஸ்வாதியும்.
“அதெல்லாம் ஒன்னும் அவசியமில்லை. இப்ப வந்து நம்மளை பார்த்தவரை போதும். விஜி ஊருக்கு போற வரைக்கும் அவனையே அவங்க வீட்ல இருக்கட்டும்னு நான் சொல்றேன். அங்க தான் அவங்க ரெண்டு பேரும் ஃபிரீயா பழக முடியும். அதுக்கப்புறமும் அனு, அங்க அவங்க அம்மா வீட்லயே இருக்கட்டும். செல்லமா வளர்ந்த பிள்ளை, வெளிநாட்டுக்கு போற வரைக்கும் அவங்க கூட இருக்க ஆசை படுமில்ல?” என்று பத்மா அம்மா இம்முறை மிகவும் தெளிவாகவும் பிடிவாதமாகவும் நின்றுவிட்டார்.
Advertisement
விஜயனுக்கே ஆச்சர்யம் தான் இந்த முடிவில். அம்மாவின் எண்ணமும் அதற்கான காரணமும் அவருக்கு புரிந்தது. மனைவியை அங்கே தனியே விட்டு செல்ல அவருக்கே விருப்பம் இல்லை.
அதனால் அம்மா சொன்னவுடன் மனைவியுடன் இவர்கள் வீட்டிற்கே வந்துவிட்டார்.
நாள் ஒரு வண்ணமும் பொழுதொரு மேனியுமென அவர்களுக்குள் காதலும் நேசமும் அழகாகவும் ஆழமாகவும் வளர்ந்தது.
செல்லும் நாள் நெருங்கவே இருவருக்கும் மனதிற்குள் சற்றே வருத்தம் இருந்தாலும், மனதளவில் நெருங்கியவர்களை தூரம் எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது என்று தெளிந்து தேறி கொண்டார்கள்.
விஜயன் சென்று ஒரே வாரத்தில், அங்கே இவர்கள் இருவரும் தங்குவதற்கான வீடு பார்த்து அங்கே இடம் மாறினார். மனைவியை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளையும் உற்சாகமாக செய்ய தொடங்கினார். தினமும் அவரது காலை அனுராதாவின் தொலைபேசி அழைப்பில் தான் ஆரம்பமாகும். இப்பொழுது எல்லாம் தனிமை என்பதை விஜயன் உணர்வதே இல்லை.
இங்கே அனுராதாவின் விசா ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க,
ஒரு நாள் காலை, “ஜெய்.. ஜெய்..” என்று பதட்டமாக ஒலித்த மனைவியின் குரலில் “என்ன பொம்மி, என்னாச்சு?” என்று விஜயனும் பதற்றமானார்.
ஜெய், பொம்மி என்பது இருவருக்குமே ஆன தனிப்பட்ட நேரங்களின் அழைப்பு. பொதுவில் ராதா என்று விஜயனும், ஏங்க என்று ராதாவும் அழைப்பார்கள்.
“ஜெய், நம்ம.. நம்ம.. அப்பா அம்மா ஆகப்போறோம்”
“என்ன சொல்ற பொம்மி.. நிஜமாலுமே வா?”
“நானும் அம்மாவும் ஹாஸ்ப்பிட்டல் போயிட்டு வந்தோம் ஜெய். டாக்டர் கர்ப்பம்ன்னு உறுதி செஞ்சுட்டாங்க..”
மனைவி கூறிய விஷயத்தை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
“ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்குடா பொம்மி.. உன்னை அப்படியே கட்டி பிடிச்சு தூக்கி தட்டாமாலை சுத்தணும் போல ஆசையா இருக்கு..”
“ஹ்ம்ம்.. அப்புறம்..”
“அப்படியே உன்னை..”
அதுக்குப்பிறகு கணவன் மனைவிக்குள்ளான அழகிய தருணங்கள்.
மகளும் மாப்பிள்ளையும் சங்கோஜமின்றி பேசுவதற்காக, தொலைபேசியை மகளின் அறையிலே செட் செய்து கொடுத்திருந்தார் தண்ணீர்மலை.
பிறகு அனுவின் அப்பா, அம்மா, அண்ணாக்கள் அனைவருமே விஜயனுக்கு வாழ்த்து கூறினார்கள்.
பின் முறையே பூ பழம் எல்லாம் எடுத்து கொண்டு சென்று விஜயனின் அப்பா அம்மாவிடம் விஷயத்தை கூறினார்கள்.
மருமகளை உச்சி மோர்ந்து அவள் நெற்றியில் முத்தம் வைத்தார் பத்மா அம்மா.
“விஜி கிட்ட சொல்லிட்டீங்களா?” என்றார் அவர் ஆசையாக.
“சொல்லிட்டோம் தங்கச்சி.. நீங்களும் பேசுங்களேன்” என்றார் தண்ணீர்மலை.
“சின்ன பொண்ணு வீட்ல இருந்து தான் போன் பண்ணனும், நான் அப்புறம் சாயங்காலமா பேசிக்கிறேன்”
இதை எப்படி கவனிக்காமல் விட்டோம் என்று வருந்தினார் தண்ணீர்மலை. அடுத்த நான்கு நாட்களிலே அவர்கள் வீட்டிற்கு போன் கனெக்ஷன் கொடுத்துவிட்டார்.
மாப்பிள்ளை ஊரில் இல்லாத சமயத்தில் இவர்களை பார்த்துக்கொள்வது மகளின் பொறுப்பு அல்லவா? மகள் சிரம பட கூடாது என்று எண்ணி இவர்கள் வீட்டில் இருக்குமாறு கூறிய சம்மந்தி அம்மா மீது கலையரசி தண்ணீர்மலை இருவருக்கும் மிகுந்த அன்பு.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மகன்களில் ஒருவரை விஜயன் வீட்டிற்கு அனுப்பி விடுவார் கலையரசி. அவர்கள் மறுக்க முடியாத வண்ணம், காய்கறிகள், பழங்கள், ஸ்வீட், அரிசி என்று அனுப்பி வைத்துக்கொண்டே இருப்பார்.
விஜயனின் திருமணத்திற்கு பிறகு சகோதரிகள் இருவருமே ஒதுங்கிக்கொண்டனர். எங்கே வயதான காலத்தில் அப்பா அம்மா பொறுப்பு நம் மீது விழுந்துவிடுமோ என்று.
விஜயனுக்கு அதில் மிகுந்த வருத்தம். ஆனால் அவர் வருத்தப்பட அவசியமே இல்லை எனும் அளவிற்கு அனுராதாவின் குடும்பம் அவர் அப்பா அம்மாவை பார்த்து கொண்டது.
என்ன ஒன்று, அனுராதவின் உடல்நிலை அவரது பயணத்திற்கு ஒத்துழைக்கவில்லை. குழந்தை பிறந்ததும் விஜயன் வருவதாக முடிவானது.
“என் ஒருத்தனுக்கு வீடு எல்லாம் தேவை இல்லை, நான் மறுபடியும் ரூமிற்கே போறேன்” என்று கூறிய விஜயனை விடவே இல்லை அனுராதா.
அவர் செலவுகளை குறைக்கவும் அனுமதிக்கவில்லை. நீங்க நல்லா இல்லாம காசு பணம் தேவையே இல்லை, என்று மல்லுக்கு நின்று அவரை சொகுசாக வாழ பழக்கினார் அனு.
இங்கே இருந்து துபாய்க்கு யார் சென்றாலும் அவர்கள் மூலம் புது துணிமணிகள், அவருக்கு தேவையான உள்ளாடைகள் முதல் அனைத்தையும் வாங்கி அனுப்பி வைத்து விடுவார். கலையரசியும் அவர் பங்கிற்கு பருப்பு பொடி, ஊறுகாய், என்று அனுப்பி வைப்பார்.
அவர் அங்கே தனிமையை உணராத படி பார்த்துக்கொண்டனர்.
துபாயில் கூட பணிபுரிபவர்கள் எல்லாரும் பொறாமை படும் வண்ணம் ஜோராக இருந்தார் விஜயன் என்றே கூறலாம்.
“துபாய்ல இருந்து எங்களுக்கு இது வேணும் அது வேணும் என்று தான் எங்க சொந்தம் எல்லாம் கேட்குறாங்க. உனக்கு மட்டும் தான்யா இந்தியால இருந்து வந்து இறங்குது.. யோகக்காரன்” என்று நண்பர்கள் வெளிப்படையாகவே புகைந்தார்கள்.
அனுராதாவின் உடல்வாகிற்கு ஆப்பரேஷன் செய்துதான் குழந்தையை வெளியே எடுக்கும்படி ஆயிற்று.
குழந்தை பிறக்கும் போது விஜயன் சரியாக வந்து விட்டார். அனுராதாவின் நிறத்தில், விஜயனின் சாயலில் பிறந்தாள் அவர்களது செல்ல மகள் கவியரசி.
“மாப்பிள்ளை, உங்க கிட்ட கேட்கவே எனக்கு சங்கடமா இருக்கு. அனுவுக்கு கொஞ்சம் உடம்பு நல்லா தேறினதுக்கு அப்புறமா நீங்க கூட்டிட்டு போனா பரவாயில்லை” என்றார் கலையரசி விஜயனிடம் தயங்கிக்கொண்டே.
“இதுல சங்கடப்பட என்ன இருக்கு அத்தை. நீங்க தான் ராதாவையும் பாப்பாவையும் பார்த்துக்கணும். அதுக்கு நான் தான் உங்ககிட்ட நன்றி சொல்லணும். இப்ப என்ன, இன்னும் கொஞ்ச மாசம் கழிச்சு கூட்டிட்டு போறேன்.”
கணவனின் புரிதலில் அனுராதாவிற்கு அவர் மீதான காதல் பல் மடங்காக பெருகியது.
ஒரு மாதம் மகளுடனும் மனைவியுடனும் இருந்துவிட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டார்.
திருமணமான புதிதில் கணவருடன் சென்றிருந்தால் அது வேறு மாதிரி அமைந்திருக்கும். இப்பொழுது அனுராதாவிற்கு இங்கே இருக்கவே ஆசையாக இருந்தது.
ஓரு நாள் கணவரிடம்,
“ஜெய், பேசாம நீங்க இந்தியா வந்துடுங்களேன். இங்க எங்க அப்பா கூடவே நாமளும் தொழிலில் சேர்ந்துக்கலாம்” என்று தன் விருப்பத்தை கூறினார்.
“என்னாச்சு பொம்மிக்கு, அப்பா அம்மாவை விட்டுட்டு வர மனசுக்கு கஷ்டமா இருக்கா?”
“அதுவும் ஒரு காரணம்.. கவியை தனியா பார்த்துக்குவேனான்னு பயமா இருக்கு. அதுவுமில்லாமல், அத்தை மாமா கூட நீங்களும் இருக்கலாம் தானே.”
“நான் பார்க்கிற வேலை வேற.. இங்க ஆயில் கம்பெனியில இருக்கேன். அதே மாதிரி வேலை அங்கே கிடைக்காது டா.. கிடைச்சாலும் சம்பளம் குறைவா தான் இருக்கும்”
“நம்ம எதுக்கு வேலைக்கு போகணும். அப்பா கூடவே சேர்ந்துக்கலாம்”
“உனக்கு புரியலை பொம்மி.. இப்ப ஒரு தொழில் இருக்கு. ஒரு குடும்பம் இருக்கு. ஆனா நாளைக்கு உங்க அண்ணாக்கு எல்லாம் கல்யாணம் ஆனா, மூனு குடும்பமா ஆகும். அப்ப, வருமானமும் பிரியும். என் கணக்கு படி, உங்க அப்பா தொழில் மூனு குடும்பத்துக்கு பிரியும் போது கொஞ்சம் சிரமம். அதில நாமும் போட்டிக்கு போகலாமா?”
“அப்படியா சொல்றீங்க? அப்பா கிட்ட காசு நிறைய இருக்கும்”
“நீ இன்னும் சின்ன பொண்ணு இல்ல பொம்மி.. கவிக்கு அம்மா.. கொஞ்சம் பக்குவமா யோசி.. “
கணவன் கூறியதை யோசித்தார்.. அப்பாவிடமும் அதை பற்றி பேசினார்.
மாமனாருக்கு மருமகனின் இந்த குணம் மிகவும் ஆக்ஷரித்தது.
மகளுக்கும் தங்கள் வரவு செலவுகளை பற்றி எடுத்து கூறினார். பின் நீயும் விஜயனின் வீட்டை கவனிக்கணும். அவங்க அப்பா அம்மாக்கு என்ன செய்யணும்னு பார்க்கணும்டா. அதன் பிறகு அனுராதாவும் அடிக்கடி சென்று மாமனார் மாமியாரை சந்தித்து அவர்களுக்கு தேவையானதை பார்த்து கவனிக்க ஆரம்பித்தார்.
அம்மாவின் மூலம் அதை அறிந்துகொண்ட விஜயன் மனைவியை கொண்டாடினார்.
கவிக்கு ஆறுமாதம் ஆன நிலையில் பெரிய அண்ணன் சண்முகம் சாந்தியின் திருமணம் நிச்சயிக்க பட்டது.
விஜயன் விடுமுறைக்கு வரும் சமயமே திருமணம் என்று தண்ணீர்மலை கூறிவிட்டார்.
விஜயன் அனுராதா தம்பதியினர் தங்கத்தில் சங்கிலி மோதிரம் என்று அசத்தலாக சீர் செய்தனர்.
பத்மா அம்மா இங்கே வந்து இவர்கள் வீட்டில் தங்குவதற்கு தயங்குவதை புரிந்து கொண்ட அனுராதா, கணவனிடம் கூறி அப்பா அம்மா வீட்டின் அருகிலே தங்களுக்காக ஒரு வீடு கட்டுவோம் என்று கேட்டார்.
இன்னொரு வீடு எதுக்கு அனு, அப்பா அம்மா இருக்கிற வீடே நல்லா தானே இருக்கு.
என்னிக்கு இருந்தாலும் உங்க அக்காவுக்கும் தங்கைக்கும் நாம செய்யணும். பின்னாடி அந்த வீடு அவங்களுக்காக இருக்கட்டும். இந்த வீடு நம்ம பசங்களுக்கு இருக்கட்டுமே என்றார்.
விஜயனுக்கும் அது சரியாக படவே, வீடு கட்ட முடிவு செய்தனர். அடுத்தடுத்து ஆண்டுகளில் சிங்காரம் சரவணன் திருமணங்கள் முடிந்தது. அதற்கும் குறைவின்றி சீர் செய்தனர்.
வருடத்திற்கு ஒரு மாதம் வந்து குடும்பத்துடன் இருந்து செல்லும் வாழ்க்கை பழகிவிட்டது . ஒரு மாதமும் அத்தனை அன்யோன்யமாக இருப்பார்கள் இருவரும். பிரிந்து இருக்கும் சமயங்களிலும், மனதளவில் இணைந்தே இருந்தார்கள். காலங்கள் செல்ல செல்ல தொழில்நுட்பம் வளர வளர,கை பேசி, இன்டர்நெட் என வந்து, தூரம் என்பது ஒரு குறையாக படவே இல்லை கணவன் மனைவிக்கு.
கவிக்கு ஆறு வயது இருக்கும் போது , கலையரசி காலமானர். அவரது மறைவு தண்ணீர்மலையை மிகவும் பாதித்து விட்டது. அவர் தொழிலில் இருந்து விலகி மகன்களிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி கொண்டார்.
அனுராதா தான் அப்பாவை கவனித்து கொண்டார். அடுத்ததாக விஜயனின் அப்பாவின் மறைவு. மாமியாரையும் பொறுப்பாக பார்த்துக்கொண்டார் அனுராதா. விஜயனின் சம்பாத்தியம் அவசியமாகி போனது. இங்கே அனுராதா இருப்பதற்கான தேவையும் அவசியமாகி போனது.
கணவன் மனைவி இருவரும் புரிதலுடன் அழகாக தங்கள் வாழ்வை நகர்த்தி சென்றனர். ஒட்டிக்கொண்டும் கட்டிக்கொண்டும் இருந்தால் தான் நெருக்கம் என்பது எவ்வளவு அபத்தமானது என்பது இவர்களின் காதலை பார்ப்பவர்களுக்கு புரியும்.
கவிக்கு பத்து வயது இருக்கும்பொழுது அவளிற்காக என முடிவு செய்து மனைவி மகளை அழைத்துக்கொண்டு துபாய் சென்றார் விஜயன். அங்கே அனுராதாவிற்கு ஒத்துக்கொள்ளாததால் மீண்டும் இந்தியா திரும்பிவிட்டனர் அனுராதாவும் கவியும்.
——-
பல வருடங்களுக்கு பிறகு நிரந்திரமாக இந்தியா திரும்பிய விஜயனுக்கு காத்திருந்தது மனைவியின் உடல்நிலை சீர்கேடு தான்.
தனது இறுதி நாட்களில் விஜயனின் மறுமணம் பற்றி அனுராதா பேசியது அனைத்துமே விஜயனுக்கே அதிர்ச்சி தான்.
ஏனென்றால், ஒருமுறை கூட இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்ததாக நினைத்து இல்லை.
அனுராதா இறப்பதற்கு முன்பு, கணவன் மடியில் படுத்து கடைசியாக பேசியது,
“என்ன பொம்மி பண்ணுது, டாக்டர் கிட்ட போவோமா?”
“இல்ல, ஜெய். கொஞ்ச நேரம் படுத்துகிறேன். என் மேலே கோபமா?”
“என் பொம்மி மேலே எனக்கு எப்ப கோபம் வந்திருக்கு?” என்று கூறிக்கொண்டே அவர் தலையை கோதிவிட்டார்.
“ஜெய், உங்க கூட இன்னும் பல வருஷம் சேர்ந்து இருக்க எனக்கு ஆசை.. என்ன செய்ய, என் முடிவை கடவுள் இப்படி இழுத்தி வச்சிருக்காரு..”
“இப்படி பேசக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல பொம்மி, சீக்கிரம் நல்லா வந்து என் கூட சேர்ந்து பல வருஷம் சந்தோசமா இருக்க போற பாரு”
“நான் போயிட்டா நீங்க தனியா நின்னுடுவீங்க.. எனக்காக இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோங்க ஜெய்”
“உன் ஜெய்யால அது முடியுமா பொம்மி?”
”நீங்க இப்ப இங்க வந்தது, உங்க மடியில என் உயிர் போகத்தானோ என்னவோ.. எனக்கு தெரியும் நான் சொல்றது கஷ்டம் தான்.. உங்க காதல்.. நம்ம காதல்..அது உங்களை கட்டிப்போடும்.. நான் இருக்கிற வரைக்கும் நீங்க எங்க இருந்தாலும் உங்களுக்கு தனிமை இல்லை.. ஆனா எனக்கப்புறம்? ஒரு துணை உங்களுக்கு நல்லது.. அதான் இந்த முடிவு.. என் முடிவு உங்களுக்கு கோபமா?”
“இல்லடா.. “ தாயின் பரிவோடு மனைவியின் தலையை வருடிக்கொடுத்தார்.
“ஜெய்.. “ கடைசியாக எல்லையிலா காதலோடு ஏக்கத்தோடு அவரது கண்களை விஜயனின் கண்களோடு கலக்கவிட்டார்.
“பொம்மி..”
அந்த கண்களில் அசைவில்லை..
“பொம்மி…”
————————–
விஜயன் கூறி முடிக்கையில் எழிலரசி “அத்தை…..” என்று முகத்தை மூடிக்கொண்டு தேம்பி தேம்பி அழத்தொடங்கினாள். மற்றவர்கள் கண்களும் கலங்கித்தான் போயிற்று..
என்ன மாதிரி காதல் இது? ஆத்மார்தமானதா? அழகானதா? பரிசுத்தமானதா? பவித்ரமானதா? இல்லை தெய்வீகமானதா?
விஜயனின் மறுமணத்திற்கான மறுப்பு சரி தானே? எப்படி அவரால் இன்னொரு பெண்ணை நேசிக்கமுடியும்? அது சாத்தியமா?
————
error: Content is protected !!