Skip to content
Post Views: 2,489
*20*
திடுமென எதிர்பாராத நேரத்தில் கிடைத்துவிட்ட பணிமாற்றலில் திகைப்பும் மகிழ்வுமாய் கலவையான மனநிலையில் இருந்தான் முகிலன். வேலை நேரம் முடிய இன்னும் ஒருமணி நேரம் இருக்கையில் அவனுக்காக பணிமாற்று ஆணை வந்திருந்தது. இருநாட்களுக்குள் சென்னையில் இருக்கும் கிளையில் சேர வேண்டும். மனைவியிடம் சென்றுவிடுவோம் என்ற களிப்பும் சொந்த ஊரை விட்டு பிரியும் வருத்தமும் ஒருங்கே இணைந்து அவனை திக்குமுக்காட வைத்தது.
“நீ எதிர்பார்த்தது கிடைச்சிடுச்சு, இன்னும் ஏன் உன் மூஞ்சு இப்படி இருக்கு?” அவன் தோள் தட்டி நின்ற மகேஷை பாவமாய் பார்த்தான் முகிலன்.
“என்னடா?”
Advertisement
“உன்னை மிஸ் பண்ணுவேண்டா…” என்று நண்பனை கட்டிக்கொண்டு விலகியவன் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து விடைபெற்றான்.
ஹெட்போன் மாட்டிக்கொண்டு வண்டியை கிளப்பியவன் குழலி அழைப்பை ஏற்க காத்திருந்தான். அழைப்பு சென்றுகொண்டே இருந்தது எடுக்கப்படவில்லை.
‘நீ ஆசைப்பட்டது நடக்கப்போகுது போன் எடுடி மலர்.’ ஆவலும் ஆசையுமாய் அவன் எதிநோக்க, மறுபுறம் எந்த பதிலும் இல்லை. வண்டியை நிறுத்திவிட்டு மீண்டும் அழைத்துப்பார்த்து தோற்றவனாய் வீட்டிற்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்.
Advertisement
வழமை போல் மாரியம்மாள் காத்திருக்க, உண்ண வந்தவன் பணிமாற்றலை பகிர்ந்துகொள்ள பெற்றவரின் முகம் கூம்பிற்று.
Advertisement
“நாளைக்கே போணுமா?” சோர்வாய் கேட்ட மாரியம்மாள், “வேந்தன்கிட்ட சொல்லிட்டியா?”
“மலர்கிட்டேயே இன்னும் சொல்லல, வேந்தன்கிட்ட அங்க போய் சொல்லிக்கலாம்.”
“முன்னாடியே சொன்னாதான தங்குறதுக்கு ஏற்பாடு செய்வான்.” என்று மாரியம்மாள் சொல்லவும்தான் இவன் கவனம் கூர்மையானது.
Advertisement
“அங்க போய் பாத்தாதான் என்ன பண்ணலாம்னு புரியும். அப்புறம் சொல்லிக்கிறேன்.” இவன் விவரமாக வார்த்தையாடுவதாக நினைத்துப் பேச, அவர் நினைத்ததை சொல்லிவிட்டுத்தான் ஓய்ந்தார் மாரியம்மாள்.
“அப்புறம் சொல்லிக்கிறியா? உன் அவசரத்துக்கு எப்படி உடனே வீடு கிடைக்கும், அதுவரைக்கும் தங்க இடம் வேண்டாமா? வேந்தன் ரூம்ல ஏற்கனவே மூணு பேருனு சொன்னான்.”
“வேந்தன் ரூம்லயா?” அதிர்ந்துதான் போனான் முகிலன்.
“வேற எங்க தங்குவ முகிலு?” அப்பாவியான பாவனை மாரியம்மாளிடம்.
வரவேற்பு அன்று சிறிது நேரம் மனைவி வீட்டினில் தங்கியதற்கே எங்களுடன் விடுதி அறைக்கு வந்துவிடு மதிக்கமாட்டார்கள் என்றவர் வீடு பார்க்கும் வரை மனைவி வீட்டில்தான் ஜாகை என்றால் ஆடிவிடுவாரே என்று அப்போதுதான் உரைத்தது. அவனுக்கும் வேறு வழி இருக்கவில்லை, பணிமாற்றம் கிடைக்க தாமதமாகும் என்று கடை தரப்பில் சொல்லப்பட்டதால் வீடு பார்ப்பது பற்றியெல்லாம் அவன் யோசிக்கவே இல்லை. மனைவியிடம் சென்றுவிட்டு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தவனுக்கு மாரியம்மாளின் எண்ணம் புரிபட்டவுடன் குழப்பமும் தவிப்பும் ஒருங்கே வந்தது.
“என்ன முகிலு யோசனை? நாளைக்கு வந்துடுவேன்னு வேந்தன்கிட்ட சொல்லிடு. வீடு கிடைக்குற வரை அங்க தங்கிக்க.” என்று மெல்ல ஊசி ஏற்றினார்.
“நான் பாத்துக்குறேன்மா. தூக்கம் வருது, நான் ரூமுக்கு போறேன்.” என்று மெல்ல நழுவியவன் மீண்டும் மனைவிக்கு அழைக்க,
“போன் சைலன்ட்ல விழுந்துடுச்சு கவனிக்கவே இல்லை.” என்று ஒரே அழைப்பில் ஏற்றவள் அவன் வீடு வந்துவிட்டானா, உணவு ஆகிற்றா என்று பொதுவாக விசாரித்தாள். இவன் வேலை மாற்றல் கிடைத்துவிட்டதை சொல்லவும் துள்ளிக்குதிக்காத குறைதான்.
“இவ்ளோ சீக்கிரம் கிடைக்கும்னு நினைக்கவே இல்லை. உங்களுக்காக வெய்ட் பண்ணிட்டு இருப்பேன் நான்.” ஆவலாக அவள் பேச, இங்கு இவனுக்குத் தயக்கம். மனைவி மனம் கோணாது தாயின் எண்ணத்தை பகிர்ந்து சுமூகமாக தீர்வு காண வேண்டும் என்ற யோசனைதான் அவனிடத்தில்.
“என்ன அமைதியா இருக்கீங்க. அங்க விட்டுட்டு வர்றதுக்கு கஷ்டமா இருக்கா? லீவ் கிடைக்குறப்போ எல்லாம் நாம ஊருக்கு போய் அத்தை, மாமாவை பாத்துக்கலாம். இங்க கூட்டிட்டு வந்து கொஞ்ச நாள் வச்சிக்கலாம். இல்லையா இங்கேயே நம்மகூடவே இருக்கட்டும்.” என அவனை சமாதானம் செய்யும் குறிக்கோளுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
“மலர்…”
“ம்ம்?”
“நாளைக்கு நைட் வந்துடுவேன். உன் ஆபிஸ் பக்கத்துல இருக்குற பிரான்ச்சுக்குதான் ட்ரான்ஸ்பர் கிடைச்சிருக்கு. அந்த சைட் வீடெல்லாம் எப்படி? சீக்கிரம் கிடைக்குமா? பட்ஜெட்ல வருமா?”
“நம்ம வீடே ஆபிஸ் பக்கம்தான். இங்கிருந்தே வசதியா இருக்கும்.” பளிச்சென்று அவள் சொல்ல, அவன் முகம் சுருங்கிவிட்டது. மலர் சொல்வது போல் அங்கேயே தங்கினால் கண்டிப்பாக தன் தாயை சமாளிக்க முடியாது, அதுமட்டுமின்றி அவர்கள் வந்து போக விருப்பப்பட்டால் சிரமமாக இருக்குமே என்று யோசனை.
“அது சரியா வரும்னு தோணல மலர்.” என்று சொல்லிவிட்டான்.
“ஏன்? அம்மா மட்டும்தான் இருக்காங்க, நாம ரெண்டு பேருமே வேலைக்கு போயிடுவோமே, வீட்ல இருக்குற நேரமும் கம்மிதான?” அவன் ஒத்துவந்துவிட்டால் அம்மாவுடன் இருக்கலாம். தங்களுக்கு அவர் துணை, அவருக்கு தாங்கள் துணை. முன்னர் எதிர்பார்த்தது போல் வீட்டோடு இருந்துகொள்ளலாம் என்று எளிதாக எண்ணிவிட்டாள்.
“அங்கன்னா அம்மா, அப்பா வர்றதுக்கு சங்கடப்படுவாங்க மலர். வேற எங்கேயும் பாக்கலாம். பக்கத்துல கூட ஓகே.” முடிவு எடுத்துவிட்டவன் போல் இவன் பேச,
“எப்போவாச்சும் தானங்க வருவாங்க. அங்கேயும் தோட்டம் வயல் பாக்கணுமே. அத்தைக்கு இங்க செட் ஆகுமானு தெரியல. இங்க இருந்தா அம்மாக்கும் துணையா இருந்த மாதிரி இருக்கும்னு யோசிச்சேன்.” என்று அவள் எதார்த்தமாய் சொல்ல,
“கொஞ்சம் முன்னாடி அம்மா அப்பாவை கூடவே வச்சிக்கலாம்னு சொன்ன இப்போ அவங்க வரமாட்டாகங்குற மாதிரி பேசுற. அவங்க வரலைன்னு சொன்னாலும் நீ கூப்பிடனும், ஆனா உனக்கு உன் அம்மாவோட இருக்கணும். அதேதான் எனக்கும் மலர். என் அப்பா அம்மாக்கும் ஒன்னும் வயசு திரும்பல.” இருவருக்கும் பூசலாகியது.
“இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படி பேசுறீங்க? அத்தை என்ன பேசுனாலும் பொறுமையாதான போறேன். எல்லாத்தையும் சமாளிக்குறேன்ல ஏன் நீங்க இங்க வந்து இருந்தா என்ன குறைஞ்சிடும்? மனசாட்சி தொட்டு சொல்லுங்க உங்க அம்மாக்கு இங்க செட் ஆகும்னு? அங்கனாச்சு தோட்டம், வயல்ன்னு போயிடுறாங்க. இங்க வந்தா உள்ளேயே அடைஞ்சி இருக்கனும். அவங்க குணத்துக்கு அது செட் ஆகாதுன்னு தான் அப்படி சொன்னேன். அதோட ஊர்ல வீடு கட்டி இருக்கணும்னு அவங்களுக்கும் ஆசை இருக்கு, எல்லாத்தையும் யோசிச்சு சொன்னா என் பக்கம் எல்லாத்தையும் திருப்பியாச்சு.” அவளும் அதிருப்தியாய் பதில் கொடுத்தாள்.
“எதையும் நான் சமாளிக்கலைனு நினைக்குறியா? ஆரம்பத்துலேந்து ஒன்னு ஒன்னுத்துக்கும் உன்னை முன்ன நிறுத்தி யோசிச்சு செய்றேன். நிறைய விஷயத்துல அம்மாவையும் எதிர்த்து நின்னிருக்கேன். அங்க வர விருப்பமே இல்லைனாலும் உனக்காக உன்னோட வார்த்தைக்காக மட்டும்தான் இங்க விட்டுட்டு வரேன். அதுக்கு ஏத்த மாதிரி யோசிக்குறியா நீ? நீதான் உன் அம்மாவை குடும்பத்தை பாக்கணும்னு சொன்ன சரினு இன்னைக்கு வரைக்கும் நான் எதுவுமே எதிர்த்து சொன்னதில்லை. நீ எவ்ளோ சம்பளம் வாங்குற, எப்படி செலவு பண்ற எதுவும் நான் கேட்டுக்கிட்டது இல்லை. வேற வீடு பாக்கலாம்னு சொல்றது அவ்ளோ பெரிய குத்தமா? உன் அம்மாவை பாத்துக்கணும்னு அங்க ஒண்ணா இருந்தா இங்க என் அம்மாவை தினம் தவிக்க விடுறமாதிரி ஆகிடும் மலர்.”
“என்ன தவிக்க விடுறாங்க? இங்க இருந்தா என்ன பண்ணிடுவோம் நாங்க? நானும் உங்க சம்பளத்தை எப்படி செலவு பண்றீங்கன்னு இன்னைக்கு வரைக்கும் கேட்டுக்கிட்டது இல்லை.” என்று இவளும் பேசினாள்.
“நீ நினைச்சது நடந்துடுச்சுல. நான் அங்க வரணும்னு சொன்ன, வர்றதுக்கு எல்லாம் பண்ணிட்டேன். இனி எல்லாமே ரெண்டு குடும்பத்துக்கும் ஏத்த மாதிரிதான் பண்ண முடியும். சும்மா ஒருசைட் மட்டும் பாக்க முடியாது.” முகிலனும் எரிச்சலாக பேசி அழைப்பை துண்டித்துவிட்டான்.
இருவருமே தங்களுக்கு ஏத்தது போல் மற்றவரது வேலையை மாற்றிக்கொண்டு வரவைத்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டு காய் நகர்த்த, நான் ஒன்றில் இறங்கி வந்தால் நீயும் சிலதை விட்டுக்கொடுப்பதில் தவறில்லை என்ற எண்ணம் இப்போது. திரையென இருபக்கமும் அதிருப்தி எழுந்து நிற்க, இருவருமே அலைபேசி அழைப்போ குறுஞ்செய்திகளோ பரிமாறிக்கொள்ளவில்லை.
மறுநாள் இவன் எழவும் மகனுக்கு பிடித்தது எல்லாம் செய்துகொடுத்தார் மாரியம்மாள். அவன் கிளம்பும் சமயம் குழலி வீட்டினில் சில நாட்கள் தங்கப்போவது தெரிந்துவிட,
“வீட்டோட போனா மதிக்கமாட்டாங்க முகிலு. ஆரம்பத்துல தாங்குற மாதிரி தாங்கி அப்புறம் மிதிச்சுடுவாங்க. ஏற்கனவே சம்பாரிக்குறதை விட்டுட்டு நகரமாட்டா நீயும் அங்க போய் அவளுக்கு கீழ உக்காந்துட்டா சல்லிக்காசுக்கு உன் பேச்சு எடுபடாது.” என்று முகத்தை தூக்கி வைத்தார்.
“உனக்கு துணைக்கு அப்பா இருக்கு, அப்பாக்கு நீ இருக்க. அங்க அவ அம்மா தனியா இருக்காங்க. அவங்களோட இருந்தா துணைக்கு துணையும் ஆச்சு வாடகை மிச்சம்னு அங்கேயே இருக்கத் தெரியாதா எனக்கு? உனக்காக, நீ வந்து போவணும்னு தான் வேற வீடு பாக்க சொல்லியிருக்கேன். இப்படியே நீ பேசிட்டு அவளை முறைச்சிட்டு இருந்தா அப்புறம் நாங்க இங்க வர்றப்போ மட்டும்தான் என்னை நீ பாக்க முடியும் சொல்லிட்டேன்.” என்று அவருக்கும் டோஸ் விட்டுத்தான் கிளம்பினான்.
கந்தசாமிக்கு மகன் தனித்து வீடு எடுத்து தங்குவதுதான் சரி என்ற எண்ணம். அத்தனை எளிதில் மகனை மருமகள் வீட்டினில் தங்கச்சொல்ல மனம் வரவில்லை. தள்ளி நின்று பார்த்துக்கொள்ளட்டும் என்ற எண்ணம் அவருக்கும்.
ஒருமாதிரி இறுக்கத்துடன் சென்னை வந்து சேர்ந்தான். அங்கு குழலியும் இறுக்கத்துடன்தான் இருந்தாள். இருவரும் தங்கள் துணையை பார்வையால் தொடர்ந்து அவசியத்திற்கு பிரபாவின் முன் மட்டும் பேசினார்கள். மறுநாள் அவளே கடைக்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொல்ல, இவன் முறுக்கிக்கொண்டு ரேப்பிடோ போட்டு சென்றுவிட்டான். பிரபா இருவருக்குமே மதிய உணவு கொடுத்துவிட்டார்.
அம்மாவுடன் இருக்கும் ஆர்வத்தில் அவனை சமாளித்துவிடலாம் என்ற அசட்டு தைரியத்தில் அவள் கொஞ்சம் வார்த்தை விட்டுவிட்ட எண்ணம்தான் இருந்தும் அதற்கு அவன் இப்படி பேசுவானா என்று முறுக்கினாள் குழலி.
இரவு பிரபா முன்னரே சென்று படுத்துவிட அவன் வரும்வரை விழித்திருந்தவள் அவனுக்கு உணவு பரிமாறிவிட்டு அமைதியாக நிற்க, கடைக்கண்ணால் அவளை பார்த்துக்கொண்டே உண்டு முடித்தவன் வழமை போல் தட்டும் கிண்ணத்தையும் எடுத்துச் சென்று சிங்க்கில் போட்டு விலக்கினாள். பின்னோடு வந்துவிட்டவள் அவன் செய்வதை பார்த்து எதுவும் சொல்லாது சென்று படுத்துவிட்டாள். அவளை தொடர்ந்து வந்தவனும் அவளுக்கு முதுகு காட்டி படுத்துவிட, யார் முதலில் இறங்கி வருவது என்ற போட்டி இருவருக்குள்ளும்.
நான் சரியாதாகத்தானே பேசினேன் எப்போதும் ஒருபுறம் மட்டுமே பார்க்க முடியுமா என்னையும் என் சார்ந்தவர்களையும் பார்க்க வேண்டியதும் அவள் கடமைதானே என்று அவன் முறுக்கி நிற்க, என்ன பேசிவிட்டேன் நடப்பை தானே சொன்னேன் அதற்கு முகம் தூக்கி எரிச்சல்படுவானா என்று முகம் தூக்கினாள் குழலி.
இதுவரை ஆளுக்கு ஒரு இடத்தில் இருந்ததால் துணையை வருத்தத்தில் வாடவிட மனமின்றி பிணக்கு வந்தாலும் உடனே சரிசெய்ய முயன்றனர். இம்முறை அருகருகே இருப்பது அலட்சியம் கொடுக்க, இறங்கிவர முயலவில்லை.
அந்த வார இறுதியில் தங்கைகள் இருவரும் வந்துவிட்டனர்.
“அடுத்த வார லீவ்ல எங்க வீட்டுக்குதான் வர்றீங்க நீங்க.” வந்தனா உரிமையாய் முகிலனிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
“ஹேய் போடி அடுத்த வாரம் நான் கூப்பிடலாம்னு இருக்கேன். அதுக்கு அடுத்த வாரம் உன் வீட்டுக்கு வருவாங்க.” என்று சந்தியா குறுக்கே வந்து விழுந்தாள்.
“நாந்தான் முதல்ல கூப்பிட்டேன். அப்போ என் வீட்டுக்குத்தான் முதல்ல வருவாங்க.”
“நாந்தான் முத தங்கச்சி என் வீட்டுக்குதான் முதல்ல வருவாங்க.” என்று இருவரும் மல்லுக்கு நிற்க, கன்னத்தில் கைவைத்து இருவரையும் மாறி மாறி பார்த்தான் முகிலன்.
“ரெபிரீ வேலை பாக்குற மாதிரி இதென்ன லுக்கு மாமா? சொல்லுங்க என் வீட்டுக்குதான் முதல்ல வருவேன்னு.” வந்தனா அவனை துணைக்கு அழைக்க,
“ரெண்டு பேர் வீட்டுக்கும் ஒரே நாள்ல வரேன்மா. போதும் உங்க சண்டையை முடிச்சிக்கோங்க.”
“ஹான் இது நல்லாயிருக்கே… வந்தா உடனே கிளம்ப விடுவோமா. அன்னைக்கு புல்லா அங்கதான் இருக்கனும்.” சந்தியா கட்டளை போல் சொன்னாள்.
“அதுசரி அப்போ உங்க அக்கா வேலையை யார் பாக்குறது?” ஓரக்கண்ணால் மனைவியை பார்த்துக்கொண்டே வந்தனாவிடம் கேட்டான். இவனுக்கு விடுமுறை என்றால் அவளுக்கு அலுவல் தானே…
“அவளுக்கு ஒரு ரூம் கொடுத்துடுறோம். அங்க உக்காந்து என்னவும் பண்ணட்டும் இல்லையா காலையில சாப்பிட்டு ஆபீஸ் போகட்டும் நாம ஃபன் பண்ணலாம் மாமா.”
“நல்லா ஃபன் பண்ணலாமே. நேரமாச்சு எனக்கு நைட் பாக்கலாம்.” என்று காலை சிற்றுண்டி முடித்துக்கொண்டு வேலைக்கு கிளம்பிவிட்டான்.
“இன்னைக்கு உனக்கு லீவ்தானே மாமாக்கு உன் வண்டியை கொடுக்கலாம்ல. ரேப்பிடோ போட்டு போறாங்க. ஊர்ல இருக்குற வண்டியை எப்போ இங்க கொண்டு வராங்களாம்? இப்படி டெய்லி போறது கடுப்பா இருக்குமே.” என்று குழலியை பிடித்துக்கொண்டனர் இருவரும்.
“இவ்ளோ நேரம் அங்கதான பேசிட்டு இருந்தீங்க. கேட்க வேண்டியதுதானே இந்த கேள்வியெல்லாம்.” நொடிப்பாக சொன்னாள் குழலி. இன்னும் கணவன் மனைவிக்குள் சீரான பேச்சுவார்த்தையில்லை.
“சண்டையா?” என்று சகோதரிகள் மாறி மாறி பார்த்துக்கொண்டனர்.
“என்னக்கா? அதான் மாமா இங்க வந்துட்டாங்கல்ல இப்போ என்ன?”
“ப்ச் போங்கடி… இந்த கல்யாண வாழ்க்கையே சரியான இம்சை. சரிபண்ணிட்டோம்னு மூச்சு விடுறதுக்குள்ள இன்னொன்னு வந்து நிக்குது.” சலிப்பாக சொன்னவளை பார்த்து சத்தமாக சிரித்துவிட்டனர் இருவரும்.
“என்னடி கொழுப்பா?”
“சண்டையில கிழியாத சட்டை எது? இப்போதான ஸ்டார்ட் ஆகியிருக்கு இன்னும் நிறைய இருக்கு. அனுபவசாலி சொல்றோம் கேட்டுக்கோ.” அவர்கள் சண்டையை பற்றி கேட்காது கலாட்டாவில் இறங்கிவிட்டனர்.
கவலையுடன் நின்ற பிரபா சின்னவர்களை அடக்கி குழலியை தனியே அழைத்துச் சென்றார்.
“விவரமானவ எல்லாத்தையும் சமாளிப்பேன்னு பாத்தா நீயே இப்படி இருக்க? மாப்பிள்ளை வந்து அஞ்சு நாள் ஆகுது இன்னும் என்ன முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்க? சரியாகிடும்னு நானும் பாத்தா இப்போ அவளுங்க முன்னாடி சலிச்சிக்குற?” எத்தனை முதிர்வு புத்திசாலித்தனம் இருந்தாலும் கணவன் மனைவி உறவுக்குள் வரும் புரிதலின்மையும் பூசலும் தவிர்க்க முடியாத ஒன்று. அதன்பொருட்டே அவர் அமைதியாக இத்தனை நாள் இருக்க, இன்று அது பொதுவில் பேசப்படவும் மகளை தனியே பிடித்துவிட்டார்.
“ம்மா, வேற வீடு பாக்கணும்னு சொல்றாரு. இங்க இவ்ளோ பெரிய வீட்டுக்கு வாடகை குடுத்துட்டு இருக்குறப்போ எதுக்கு வேஸ்ட்டா வெளில போகணும்னு கேட்டா கோவம் வந்துடுச்சு.”
“ஆரம்பத்துல என்ன பேசுனோம்? அவர் இங்க வந்தா போதும்னு தான நினைச்சோம். இப்போ வந்துட்டாரு, சந்தோஷப்படாம இன்னும் இன்னும் நமக்கு சாதகமா எதிர்பாக்ககூடாது. மாப்பிள்ளைக்கும் அவர் அம்மா அப்பாவை கூட வச்சிக்கணும்னு இருக்கோ என்னவோ.”
“அப்போ நான் உன்னை கூட வச்சிக்கணும்னு நினைக்ககூடாதா? அவ்ளோ பெரிய தப்பா அது? அவர் அப்பா அம்மா ஒன்னும் இங்க வந்து தங்குற ஆள் எல்லாம் இல்லை.”
“அவங்க தங்குறாங்க இல்லை, அவங்க மகன் வீடுன்னு தனியா இருக்குனு இருப்பாங்க. அவரும் அவங்களை விட்டு தள்ளி வந்துட்டாரு, நீயும் கொஞ்சம் இறங்கி போ. பின்னாடி என்னால முடியாதப்போ பாத்துக்கலாம்.” என்று ஒருவாறு மகளை சமாதானம் செய்துவைத்தார்.
பிரபாவிடம் சமாதானம் போல் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் விரிசல் இருக்கவே செய்தது. அவன் உண்டு அவன் வேலை உண்டு என்று இருக்க, என்னை அருகில் வைத்துக்கொண்டு என்னை விட்டு உன்னால் தள்ளியும் இருக்க முடியுமா என்று வீம்பு வந்துவிட்டது குழலிக்கு. வேண்டுமென்றே அவன் எதிரே சென்று ஏதாவது வேலை செய்வது, உறக்கத்தில் தெரியாமல் கை போடுவது போல் போட்டு எடுப்பது, எதிர்ப்படும் சமயங்களில் இடிப்பது போல் சென்று நகர்வது என்று அவனை இம்சித்துக்கொண்டிருந்தாள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன் அன்று இரவு அவளை அப்படியே தனக்குள் அமுக்கி பிடித்துக்கொண்டான்.
error: Content is protected !!