Skip to content
Post Views: 301
அத்தியாயம் – 14
தேவராஜன் இல்லம், கோவை.
Advertisement
வசுந்தரா கிளம்பியதும், தேவராஜனுக்கு அழைத்தார் வருணன்.
“சொல்லு கண்ணு, அம்மணி கிளம்பிட்டாங்களா?” என்றார் தேவராஜன் அழைப்பை ஏற்றதுமே.
Advertisement
Advertisement
“ம்ம்ம், ப்ளைட் டேக் ஆஃப் ஆகி ஒரு பத்து நிமிஷம் இருக்கும்ப்பா. நீங்க அத்தை, மாமாட்ட சொல்லிட்டு, அம்மாவை கூப்பிட்டுட்டு வீட்டுக்கு கிளம்பிடுங்க. எனக்கு வெளில கொஞ்சம் வேலை இருக்கு, முடிச்சிட்டு நேரா நம்ம வீட்டுக்கு வந்துடுறேன்” என்ற வருணன், பின்பு ஏதோ ஞாபகம் வந்தவராய்,
“பா, உதய் அண்ணா சென்னை போயாச்சா?” எனக் கேட்டார்.
Advertisement
“இல்லை கண்ணு. இந்த வாரம் ஃபுல்லா இங்க தான். அந்த வெற்றி பய, வேந்தன் மக்கள் கழகம் மீட்டிங்க வீம்புக்குன்னே நாம கூட்டம் நடத்துன அன்னிக்கே நடத்துனான்ல. அதுனால நமக்கு பிரதமர் வந்தும் கூட வழக்கத்தை விட கூட்டம் கம்மி தான்.
மணிவாசகம் ஐயாவுக்கு அதுல கொஞ்சம் வருத்தம். அதுனால உதயன் தம்பிய இங்க கள நிலவரம் எல்லாம் சரியா கவனிச்சு, பிரச்சாரத்துக்கு தேவையான உதவியெல்லாம் கொஞ்சம் பார்க்க சொல்லிருக்காரு. ஏன் கண்ணு கேக்குற? எதுவும் பிரச்சனையா?”
“சேச்ச, அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா. பார்த்து ரொம்ப நாள் ஆகிடுச்சு. அன்னிக்கு கூட்டத்துலயும் பேச முடியல. அதான் ஒரெட்டு போய் தலைய காண்பிச்சிட்டு வந்துடுறேன்”
“ம்ம்ம், சரி கண்ணு. தம்பிய வேணும்னா நம்ம வீட்டுக்கு கூப்பிட்டுட்டு வாயேன்?”
“பாக்குறேன்ப்பா. எதுக்கும் நீங்க அம்மாவைக் மட்டன் கோலா உருண்டை குழம்பு பண்ண சொல்லுங்க லஞ்ச்சுக்கு. நான் அண்ணா வர்றாங்கன்னா உங்களுக்கு ஃபோன் பண்றேன்” என்று அழைப்பை துண்டித்தவர், அடுத்து உதயனுக்கு அழைத்தார்.
“வாடா நல்லவனே, உங்க மேடம் அங்க ப்ளைட் ஏறினனதும் தான் இந்த எளியவன் உங்க கண்ணுக்குத் தெரியுறேன்” என்றார் உதயன் அவரது வழமையான ஆர்ப்பாட்டத்துடன்.
“ஹா ஹா, நீங்க என் கண்ணுக்குத் தெரிஞ்சு என்னாகப் போகுது. தெரிய வேண்டியவங்க கண்ணுக்கு நான் தெரிய மாட்டேங்குறேனே” என்றார் வருணன் போலி சலிப்புடன்.
“அது சரி. உன்னையப் பார்க்கத் தானேடா மேடம் பறந்து வந்திருக்காங்க. ஜாகிங் எல்லாம் போயிருக்கீங்க. பத்தலையோ?” என்றார் உதயன் நக்கலாக.
“அதானே, சிஎம் உங்கள என்ன வேலைக்கு இங்க அனுப்பி வைச்சா, நீங்க என்ன வேலை பார்த்துக்கிட்டு இருக்கீங்க? வெளங்கிடும்” என வருணனும் திருப்பிக் கொடுக்க,
“பேச்சை மாத்தாதீங்க ப்ரோ. என்ன வேலை நடக்கணுமோ அதெல்லாம் ரொம்ப சிறப்பா நடந்துட்டு இருக்கு. எங்களுக்கு எல்லாப் பக்கமும் கண்ணு இருக்கணும்ல, இல்லாட்டி எப்படி அரசியல் பண்றது! நீங்க மேடத்துக்கு பீஸ் பரோட்டா வாங்கித் தந்தது வரைக்கும் நியூஸ் வந்துடுச்சு” எனவும், யோசனையில் வருணனுக்கு புருவங்கள் உயர்ந்தன.
“ரைட், எங்க இருக்கீங்க? லஞ்ச்சுக்கு வீட்டுக்கு இன்வைட் பண்ண தான் கூப்பிட்டேன். நாம நேர்ல பாத்து நாளாச்சே” என படக்கென வேறு பேச்சுக்குத் தாவினார் வருணன்.
“லஞ்ச்சா?” என உதயன் இழுக்க,
“எஸ், உங்க ஃபேவரைட் மெனு தான் ரெடி ஆகிட்டு இருக்கு” என்றார் வருணன்.
“அப்போ ஒன்னு பண்ணு. எனக்கு மதியம் நாலு மணிக்கு மேல தான் வட்டச் செயலாளர்கள் கூட்டம் இருக்கு. நீ இப்போ ஃப்ரீன்னா, நம்ம போகலாம்” என்க, வருணன் உடனே அவரை அழைக்கச் சென்று விட்டார்.
உதயன் வருணனுடன் காரில் ஏறியதுமே,
“என்னடா கேக்கணும் என்கிட்ட? தனியா தள்ளிட்டு வர்ற?” என சீண்ட, வருணன் அவரை போலியாக முறைத்தார்.
“சோழியன் குடுமி சும்மா ஆடாது. அவுட் வித் இட் வருண்” என்ற உதயன் தீவிர பாவனைக்கு மாறியிருந்தார்.
“ணா, யூ ப்ராமிஸ்ட் மீ யூ வில் சப்போர்ட் வசு” என வருணனும் தீவிர குரலிலேயே கூற,
“நோ! நா அப்டி பிராமிஸ் பண்ணல. டி.என் எலெக்ஷன் வின் பண்றதுக்கு எனக்கு எந்த விஷயமும் காம்ப்ரமைஸ் பண்ண மாட்டேன்னு தான் சொன்னேன்”
“மாத்திப் பேசுறீங்க அண்ணா!”
“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்க, வருணன் முகமோ இறுகியது.
“அடேய், உடனே மூஞ்சிய சுருக்காத! இன் ஃபேர்னஸ் டு மீ நான் அது தான் மீன் பண்ணேன். அது எனக்கும் தெரியும். உனக்கும் தெரியும். நீ உன்னோட அந்த அடமென்ட் மேடத்துக்கு கொஞ்சம் புரிய வைச்சா நல்லா இருக்கும்” என்றார் கோபமாக.
“அண்ணா, டு பி ஃபேர் டு ஹெர், வசு இஸ் டூயிங் ஹெர் ட்யூட்டி. அண்ட் உங்களுக்கு தேவையானது எல்லாம் சி.எம் மூலமா தாரா மேம் கிட்ட பேசி திவ்யமா நடக்குது. அப்புறம் என்ன?”
“டேய் அந்த சில்வண்டு இதைப் பண்ணீட்டியா, அதைப் பண்ணீட்டியான்னு கேள்வியா கேட்டு என்னைய சாவடிக்குறா” எனவும், வருணன் திரும்பி முறைக்கவும்,
“ஷப்பா, சாவடிக்குறாங்க, சாவடிக்குறாங்க போதுமா” என ராகமாய் கூற வருணனுக்கு சிரிப்பு வந்து விட்டது.
“உங்க வேலைய தானே பார்க்க சொல்றாங்க. அதுக்கு உங்களுக்கு கோவம் வேற வருமா? சம்பளம் வாங்குறீங்க தானே” என வருணன் சடைக்க,
“யப்பா தருமராசா, அந்தம்மா தான் ஏதோ நட் கழண்ட கேஸ்னு பார்த்தா, நீ அதுக்கும் மேல இருக்க. எனக்கு எவ்ளோ சம்பளம்னு தெரியுமா உனக்கு?” என கேள்வி கேட்டார் உதயன்.
“அதெல்லாம் தேவையில்லாத விஷயம். இந்தப் பதவி பெருமையும், மக்கள் சேவையும் சம்பந்தப்பட்டதே தவிர பணத்தை அடிப்படையா வைக்கிற விஷயம் கிடையாது.
அதோட உங்க ப்ரொடெக்ஷன் கம்பனில நீங்க சம்பாரிக்காத பணமா, இல்லை உங்க தாத்தா,அப்பா எல்லாம் சம்பாரிக்காத பணமா? அதுக்கும் மேல மக்களோட வரிப்பணத்துல என்ன சம்பளம் எதிர்பாக்குறீங்க?” என நக்கலாகக் கேட்டார் வருணன்.
“சீ வருண், உன்னோட நக்கல் எல்லாம் எனக்குப் புரியுது. ஆனா விஷயம் அது கிடையாது. நீ ஒத்துக்கலன்னாலும் நம்ம நாட்டோட நிதர்சனம் இது தான். என்னை விடு. உங்க மேடத்துக்கே மாசம் ஒரு லட்சம் தான் சம்பளம்.
அண்ட் முழுநேர அரசியல்ல இருக்குறவங்களுக்கு எல்லாம் எம்.எல்.ஏ, எம்.பி பதவி கிடைக்கும்னு சொல்ல முடியாது. இந்த மாடல்ல எப்படி நீ நேர்மையையும், நீதியையும் எதிர்பார்க்குற. இட்ஸ் சிம்ப்ளி நாட் பிராக்டிக்கல்!
பதவி இல்லாத நேரத்துல புவாக்கு என்ன பண்றது சொல்லு? சோ இங்க எல்லா அரசியல் வாதியும் சுயநலமா மட்டும் தான் யோசிப்பாங்க. அண்ட் ஐ ஆம் நாட் என் எக்செப்ஷன்!” என்றார் உதயன் வெகு அழுத்தமான குரலில்.
ஒரு நீண்ட பெருமூச்சை விட்ட வருணன்,
“அண்ணா, இதெல்லாம் எங்களுக்குத் தெரியாம இல்ல. ஆனா இளைஞர்களா மாற்றத்தை கொண்டு வரணும்னு தானே முயற்சி பண்றோம். நீங்க அந்த மிஷன் 4யே அதுக்கான ஒரு வாய்ப்பா பயன்படுத்திக்கலாமே! தமிழ் நாட்டுல மட்டும் பண்ணா தான் பிரச்சனை.
இப்ப தேர்தல் நடக்கப் போற மாநிலங்களுக்கு முதல் கட்ட திட்டங்களை அறிவிச்சிருங்க. அதுல ஃபீட் பேக் எடுத்து மித்த மாநிலங்களுக்கு ரோல் அவுட் பண்ணுங்க.
உங்களுக்கும் நல்ல பேரு, நம்ம கூட்டணிக்கும் நல்ல பேரு கிடைக்கும். நாட்டுக்கும் நல்லது பண்ண மாதிரியும் இருக்கும். அதை விட்டுட்டு நீங்க ஏன் இப்டி முறுக்கிட்டு, வசுவையும் டென்ஷன் பண்றீங்கன்னு எனக்குப் புரியல” என்க, உதயனிடம் தீவிர யோசனை.
சில நிமிடங்கள் யோசித்தவர்,
“அதெல்லாம் சரி தான். பட் ஆன் ஒன் கண்டீஷன்! எதுனாலும் நான் என்னோட வழில தான் இம்ப்ளிமெண்ட் பண்ணுவேன். உங்க மேடம் ஒரு ப்ளூ ப்ரிண்ட் வைச்சிக்கிட்டு அதை செய்றதுக்கு என்னைய டூலா யூஸ் பண்ணக் கூடாது. எனக்கு ஃபுல் அட்டானமி இருக்கணும்” என்க,
“அது உங்க சமார்த்தியம் அண்ணா. வசு டசிண்ட் நீட் எனி ஒன்ஸ் ஹெல்ப் டு லீட் த கன்ட்ரி! அண்ட் அவங்களுக்கு ஆர்டர் போடுற எடத்துலயும் நாம யாரும் இல்ல. உங்க பிளான் பக்காவா இருந்துச்சுன்னா கண்டிப்பா அப்ரூவ் பண்ணுவாங்க, மைக்ரோ மேனேஜ் பண்ற ஆள் கிடையாது” என்று தோள்களைக் குலுக்கினார் வருணன்.
“ம்ம்ம், பார்க்கலாம். இப்ப என்ன சோத்தை கண்ல காட்டுவியா மாட்டியா? உங்கம்மா கையால சாப்பிடணும்னு ஆசைப்பட்டது என் தப்பு தான்” என உதயன் அலுத்துக் கொள்ள,
“ஹா ஹா, உங்களுக்கு இல்லாததா? தோ டூ மினிட்ஸ்… வீடு வந்துடுச்சு. டைரக்டா லஞ்ச் தான்” என உதயனை வீட்டிற்குள் அழைத்து வந்தார் வருணன்.
தேவராஜனும், ராஜியும் உதயனை வரவேற்று தடபுடலாக உபசரித்தனர். வருணனின் நண்பன் என்பதை விட, வருங்கால முதல்வராக முழுத் தகுதி பெற்றவர் ஆகிற்றே. வரவேற்பில் அது நன்றாக எதிரொலித்தது.
ராஜி வாழை இலையில் விருந்து பரிமாற,
“உங்க சாப்பாட்டுக்காக தான் ஆன்ட்டி வந்தேன். இல்லைனா உங்க பையன் படுத்துற பாட்டுக்கு இந்தப் பக்கம் தலை வைச்சிக் கூட படுக்கக் கூடாதுன்னு நினைச்சேன்” என வருணனை போட்டுக் கொடுத்தார் உதயன்.
ராஜி எதுவும் பேசாமல் புன்னகைக்க, மகனை முறைத்த தேவராஜனோ,
“அவன் சின்னப் பையன் தம்பி, உங்க மாதிரி நெளிவு சுளிவு இன்னும் தெரியல” என பதிலளித்தார்.
“நீங்களே சொல்லுங்க அங்கிள், ஆட்சியில இருக்குறப்போ ஏதோ காசு பார்த்தா தான் உண்டு. இல்லாட்டி இங்க முழு நேர அரசியல்வாதியா இருந்து ஒன்னும் கிழிக்க முடியாது.
நீங்க விவசாயம், வியாபாரம்னு குடும்பத்தொழில் வருமானம் வைச்சி சமாளிக்கிறீங்க. அதுனால தான் உங்க பையன் சேவை பண்ண பரவாயில்லைனு முடிவு பண்ணிட்டாரு போல” என்ற படி, இலையில் இருந்த வகைகளை ஒரு பிடிபிடித்தார். ராஜியும் எந்த வகை குறைகிறதோ, அதை கவனித்து மீண்டும் இலையை நிறைத்தார்.
“அண்ணா, நான் ஒன்னும் உங்களை காசு பார்க்கக் கூடாதுன்னு சொல்லல. கொஞ்சம் பரந்த தேசிய நலனை மனசில வைச்சு செயல்படுங்கன்னு தான் சொல்றேன். அண்ட் இன்னும் பத்து தலைமுறை உட்கார்ந்து சாப்பிடுற அளவுக்கு சொத்து இருக்குண்ணா உங்களுக்கு”
“சாப்பிடுறப்பையும் கூட அரசியலுக்கு ஓய்வு இல்லையா? நிம்மதியா சாப்பிட்டு அப்புறம் இந்தப் பஞ்சாயத்தெல்லாம் பாருங்க” என ராஜி கூறி விட, அதற்குப் பின்னர், பொதுவான கலகலப்பான பேச்சுக்களோட உணவு நேரம் முடிந்தது.
சில இனிப்பு வகைகள், வெற்றிலை, பாக்கு எல்லாம் எடுத்துக் கொண்டு வருணனின் அலுவலக அறைக்கு வந்து விட்டனர் உதயனும், வருணனும்.
சிறு கொழுந்து வெற்றிலை ஒன்றை எடுத்து காம்பைக் கிள்ளி விட்டு, சுண்ணாம்பு தடவியபடி வருணனை ஆழமாகப் பார்த்துக் கொண்டே,
“வாட் இஸ் ஈட்டிங் யூ வருண்?” என்றார் உதயன்.
“நத்திங் ணா” என்றார் வருணன் உடனடியாக.
“எப்பயும் இருக்குற எனர்ஜி மிஸ்ஸிங். இன்னிக்கு இது வரைக்கும் நாம புதுசா எதுவும் பேசலை. வேற ஏதோ பேச தான் கூப்பிட்டுருக்க, அதை சொன்னா தானே தெரியும்” என்றார் உதயன், தயார் செய்த வெற்றிலை கலவையை சுருட்டி வாயில் வைத்த படி.
வருணன் மௌனம் காக்கவே,
“வசுந்தராவை மிஸ் பண்றியோ?” எனக் கேட்க, அதற்கும் பதிலில்லை வருணனிடம்.
“டேய், என்ன பிரச்சனைன்னு வாயைத் தொறந்து ஏதாச்சும் சொன்னா தானேடா தெரியும்?” எனக் குரலை சற்று உயர்த்த, இப்போது,
“ம்ப்ச்” என்ற சலிப்பு மட்டுமே பதிலாகக் கிடைத்தது.
“சரி, நீ எதுவும் சொல்ல வேண்டாம், அது உன்னோட பெர்சனல்! ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன். காதல்னு வந்தப்புறம் நீ ஜென்டில் மேனாவே இருந்தீன்னா, எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்திட்டு வர வேண்டியது தான்.
ஆல் இஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார்னு சொல்லுவாங்கல்ல. உனக்கு ஒரு விசயம் வேணும்னா நீ தான் போராடணும். தானா நடக்கும்னு இத்தனை வருசம் வெயிட் பண்ணது போதாதா? உங்க ரெண்டு பேருக்கும் வயசு ஒன்னும் திரும்பல” என அக்கறையாகக் கூறினார் உதயன்.
“உண்மையான அன்பு எப்டிணா ஃபோர்ஸ்புல்லா எதையும் செய்ய வைக்கும்?” என்று வருணன் கேள்வியெழுப்ப,
“சீ வருண், நான் ஒன்னும் உன்னைய கட்டாயப்படுத்தணும்னு சொல்லல. போராடுன்னு தான் சொல்றேன். உங்க ரெண்டு பேருக்கு நடுவில என்ன பிரச்சனை, என்ன தடையா இருக்குன்னு எனக்குத் தெரியாது.
தெரியவும் வேண்டாம். ஆனா நீ ரொம்ப ஓப்பன் எண்டெட்டா இந்த விசயத்தை ஆறப் போட்டுட்டியோன்னு தோனுது” என்றார் உதயன்.
“ம்ம்ம், இருக்கலாம்” என்றார் வருணன் நீண்ட பெருமூச்சுடன்.
“ஒன்னு புரிஞ்சுக்கோ. நம்ம மக்களுக்கு எந்த ஒரு விசயத்துலயும் நெருக்கடி கொடுத்தாத்தான் வருண் முடிவு எடுப்பாங்க. இப்ப பி.எம் மேடம் வேற, வெயிட் பண்ணி இன்னுமே காம்ப்ளிக்கேட் பண்ணிக்கிட்ட!” என்று நிதர்சனத்தை எடுத்துரைத்தார் உதயன்.
“வேற என்ன பண்ண சொல்றீங்க?” என்றார் உதயன் சற்று சலிப்புடன்.
“அதான் விட்டுக்கொடுக்காதே, போராடுன்னு சொல்றேனே. எதுவும் யூஸ் இல்லைன்னா, யூ ஸுட் மூவ் ஆன். காலுக்குப் பத்தாத செருப்புன்னா கழட்டிப் போட்டுட்டு போய் கிட்டே இருக்கணுமே தவிர, கைல பிடிச்சுட்டு சுத்திட்டு இருக்கக் கூடாது!”
“ணா” என வருணன் அதற்கு மட்டும் குரலை உயர்த்தி விட,
“ஐயோ ராசா, நான் ஒரு உதாரணம் தான் சொன்னேன். உடனே நீ பொங்கிடாத” என நிறுத்தியவர்,
“தாரா மேம் நீட்ஸ் யூ வருண். யுவர் பார்ட்டி நீட்ஸ் யூ. உங்க அப்பா உனக்கு நெளிவு, சுளிவு தெரியாதுண்ணு சொன்னாரு. உனக்குத் தெரியாத நெளிவு, சுளிவு இங்க யாருக்குமே தெரியாது!
எந்த அளவுக்கு வில்லங்கம் பிடிச்சவன் நீன்னு எனக்கும் தெரியும், உனக்கும் தெரியும். இல்லாட்டி இப்டி ஸ்கெட்ச் போட்டு செண்டர்ல ஆட்சியப் பிடிச்சிருக்க முடியாது” என்றார்.
வருணன் எதைக் கூறுகிறார் என்பது போல் பார்க்க,
“என்ன பாக்குற? விக்ரம் தேசாய் எப்படி கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்க வைச்சன்னு வசுந்தராவுக்கு தெரியுமா?” என சவாலாகக் கேட்க,
‘இல்லை’ என்பது போல் தலையசைத்த வருணன்,
“தெரிஞ்சா நான் தொலைஞ்சேன். அது ஃபுல்லா தாரா மேமும், நானும் பண்ண டீலிங் தான். வசு இன்வால்வ் ஆகல” என்று நிறுத்தியவர்,
“உங்களுக்கு எப்படி தெரியும்?” எனக் கேட்டார்.
“நீங்க மட்டும் தான் ஸ்ட்ரேடஜி எக்ஸ்பேர்ட்டா ப்ரோ? நாங்களும் ஆள் வைச்சிருக்கோம்ல. இப்ப அது இல்ல விஷயம். திஸ் இஸ் அவர் டைம். வாழ்நாள் முழுமைக்குமான ரொம்ப பெரிய வாய்ப்பு!
அதோட இம்பார்ண்டன்ஸ் நான் சொல்லித் தெரியணும்னு அவசியம் இல்லை. எல்லாத்தையும் வசுந்தரா அப்டின்ற ஒரு பாயின்ட்ல நின்னுட்டு டோண்ட் லெட் இட் க்ளவுட் யுவர் ஜட்ஜ்மெண்ட்” என்றார்.
உதயன் சொன்ன விஷயங்கள் எல்லாம் வருணனுக்குப் புரிந்தாலும், வசுந்தரா சென்ற பிறகு ஒரு அழுத்தம் வந்து அமர்ந்து கொண்டது. எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்பது போல் அவரிடம் கூறியிருந்தாலும், முயன்று இலகுவாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் வருணனின் பலம், பலவீனம் இரண்டுமே வசுந்தரா தான்.
எதையும் வெளிப்படையாகப் பகிர முடியாமல்,
“புரியுதுணா, நம்ம எலெக்ஷன் வொர்க் பார்க்கலாம். ஐ வோண்ட் லெட் யூ டவுன்” என்க,
“ம்ம்ம்…பாத்துக்கோ வருண்…நீ இருக்குற தைரியத்துல தான் SPPக்கு இவ்ளோ சீட் கொடுத்துருக்கோம். நேத்துக் கூட்டம் பார்த்து சிஎம் அப்செட் தான். வெற்றி வேந்தனையும் ஈசியா எடுத்துக்க முடியாது. சோ நீ கொஞ்சம் எக்ஸ்ட்ரா அலெர்ட் மோட்ல தான் இருக்கணும்” என்ற உதயன் விடைபெற எழுந்து கொண்டார்.
“தேங்கஸ்ணா” என வருணன் அவரை லேசாக அணைக்க வர,
“டேய் ச்சீ, இதெல்லாம் நமக்கு செட்டாகுது” என விளையாட்டாக ஒதுங்கினார் உதயன்.
“பரவாயில்ல இருக்கட்டும், ஐ நீட் இட்” என அணைத்துக் கொள்ள,
“போடா ஃபூல், எனக்குப் போய் தேங்க்ஸ் சொல்லுவியா?” என வருணன் புஜத்தில் லேசாகக் குத்தினார்.
“பாரு, இஃப் யூ நீட் அ சேஞ் உன் மித்த பிளான் ஒத்து வரும்னா ஒரு வாரம் சென்னை வந்துடு. நாம பிரச்சாரத்துக்கு என்ன ஸ்ட்ரேடஜின்னு எல்லாம் டிஸ்கஸ் பண்ணலாம். நெக்ஸ்ட் வீக் தாரா மேம், சிஎம்ம மீட் பண்ற பிளான் இருக்கு. அந்த டைம் கூட ஓகே தான்” என்ற உதயன் தேவராஜனிடமும், ராஜியிடமும் முறையாக விடைபெற்று கிளம்பி விட, வருணன் சற்று இலகுவாக உணர்ந்தார்.
வசுந்தராவிற்கு உதயனால் எந்த தொந்தரவும் இருக்கக் கூடாதென்பதற்காகத் தான் பேச நினைத்திருந்தார். ஆனால் அவராக எதுவும் சொல்லாமல், உதயன் தானாகவே அவர் மனமறிந்து இதமாகப் பேசியது வருணனை நெகிழ்ச்சியடையச் செய்தது.
உதயன் கிளம்பியதும், மீண்டும் அலுவலக அறைக்கு வந்தவர், முழுமூச்சாக தமிழ்நாட்டின் சட்டசபை தேர்தலுக்கான வியூகம் அமைப்பதற்கான வேலைகளில் இறங்கி விட்டார். கூடவே மற்ற தென் மாநிலங்கள், சில வட கிழக்கு மாநிலங்களுக்குமான தேர்தல் வியூகத்திற்கு தாரா தேவிக்குத் தேவையான திட்டப்பணிகளையும் கவனித்தார்.
பல மணி நேரங்கள் வேலையில் ஆழ்ந்து இருந்தவரது கவனத்தை, வசுந்தராவிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி கலைத்தது. திரையில் தெரிந்த பெயரை சில நொடிகள் பார்த்துக்கொண்டே இருந்தார் வருணன். அந்த நாள் முழுக்க இருந்த அழுத்தம் முழுவதும் குறைந்து சிறு புன்னகை எட்டிப் பார்த்தது.
error: Content is protected !!