Skip to content
Post Views: 562
அத்தியாயம் 14
விஜயனின் பெட்ரோல் பங்க் திறப்பு விழாவை சிறப்பாக நடத்தி முடித்திருந்தார்.
Advertisement
மிக நெருங்கிய சொந்தங்களையும் நட்பு வட்டாரங்களையும் மட்டுமே அழைத்திருந்தார்கள். விஜயனின் சகோதரிகள் இருவரும் குடும்பத்தோடு வந்து சென்றார்கள்.
ஊரில் இருந்த வீட்டினை சகோதரிகள் இருவர் பேருக்கும் மாற்றி கொடுத்திருந்தார் விஜயன். இது ராதாவோட விருப்பம் என்று கூறிய பிறகு இருவருக்குமே அனுராதாவுடன் இன்னும் கொஞ்சம் நன்றாக பழகி இருக்கலாமோ? என்ற எண்ணம்.
Advertisement
Advertisement
அனைவரும் இவர்கள் இருவரையும் பார்த்து பார்த்து கவனித்தது வேறு ஒரு மாதிரியாக இருந்தது. அனுராதாவின் இறப்பிற்கு வந்து தலை காட்டி சென்றதோடு சரி. அதற்கு பிறகு இவர்கள் வீட்டு பக்கம் வரவில்லை.
அனுராதாவின் சொந்தம் என்ற ஒன்றே இவர்கள் மீது அன்பு வைப்பதற்கு போதுமானதாக இருந்தது.
Advertisement
கவியின் பிரசவம் எல்லாம் தாங்கள் பார்க்க நேரிடுமோ என்ற காரணத்தாலே ஒதுங்கி நின்று கொண்டார்கள்.
இங்கானால், கவியரசியை அப்படி பார்த்துக்கொண்டார்கள் அவள் மாமன் மனைவிகள். அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினார்கள். கவிநிலா பிறந்து இன்னும் இவர்கள் யாரும் குழந்தையை பார்க்கவே இல்லை. அதை எல்லாம் பொருட்படுத்தாமல், “உங்க அத்தைங்க கிட்ட பிள்ளையை கொடு கவி”, என்று கூறினார் சாந்தி.
“நீ இரு கவி, எழுந்து எழுந்து உட்காரதே, நான் காட்டுறேன்” என்று மீனா வந்து குழந்தையை காட்டினார்.
இவர்கள் குழந்தைக்கு என ஒரு சட்டை கூட வாங்கி வரவில்லை. தங்கள் பிள்ளைகளுக்கு மட்டும் இல்லாமல் பேரப்பிள்ளைகளுக்கும் விஜயன் அனுராதா நிறைய செய்திருப்பது நினைவிற்கு வந்தது. லேசாக குறுகுறுத்தாலும் பெரிதாக எல்லாம் அவர்கள் வருந்தவில்லை. அவர்கள் குணம் அவ்வளவே!
விஜயனின் கண்ணசைவில் அனைத்தையும் செய்தனர் அனுராதாவின் அண்ணன்கள். அண்ணன்கள் மட்டுமின்றி அவர்கள் பிள்ளைகள் அனைவரும் ‘மாமா மாமா’ என்று அவ்வளவு பிரியமாக இருந்தார்கள்.
“அம்மா, அண்ணாவை மாமியார் வீட்டுக்கே கொடுத்திடுச்சுன்னு நாம புலம்புவோமே அக்கா.. அம்மா சரியா தான் செஞ்சிருக்கு இல்ல..” என்றாள் ஸ்வாதி அக்காவிடம்.
“ஒத்துக்க பிடிக்காட்டியும், நீ சொல்றது சரி தான் ஸ்வாதி” என்றார் லட்சுமி.
பெட்ரோல் பங்க் என்றால், பெரிய அளவில் இல்லை. இரு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே பயன்படும்படி சிறிய அளவில் ஆரம்பித்திருந்தார். “பெருசாவே செய்யலாமே மச்சான். நாங்களும் கொஞ்சம் காசு போடறோம். பேங்க் லோன் கூட போட்டுக்கலாம்” என்றார் சண்முகம்.
“இல்ல மச்சான், சின்ன அளவிலே ஆரம்பிப்போம். ஏற்கனவே இங்க இரண்டு பங்க் இருக்கு. அங்க நான் பார்த்தப்ப, டூ வீலர் தான் ரொம்ப நேரம் கியூவுல நிக்குற மாதிரி இருக்கு. அதனால் நாம டூ வீலெர்ஸ் மட்டுமே டார்கெட்டா வச்சா, நிறைய பேர் இங்க வருவாங்க. அவங்களுக்கும் உபயோகமா இருக்கும். நமக்கும் லாபம் தான்” என்று தன் திட்டத்தை கூறினார்.
மாமாவுக்கு இதில் நிறைய உதவி செய்தது எழிலரசி தான். பாலமுருகன் இப்பொழுது தந்தைகளுடன் தொழிலை கற்று கொள்கிறான். குகன் எம்.பி.ஏ கடைசி வருடத்தில் இருக்கிறான்.
பி.காம் முடித்து மேலே படிக்க சொன்ன அன்னையிடம் டிமிக்கி விட்டு கொண்டு இருக்கிறாள் எழில்.
“அந்த கார்த்தி பையன் எல்லாம் பாரு, எப்படி கஷ்டப்பட்டு ஐஐடில போய் சேர்ந்திருக்கான்.. நீயும் முயற்சி செஞ்சா என்ன?” என்று கேட்ட தாயிடம்,
“ஐயோ அம்மா, அவன் இன்ஜினியரிங், அதான் அங்க போனான்.. இது கூட தெரியாம?” என்று கலாய்த்தாள்.
“அது எனக்கும் தெரியும். உன் பீல்ட்டுல நல்ல காலேஜ் இருக்கும்ல.. அதுல போய் படி..”
“அறிவு கம்மியா இருந்தா தான் மேலே மேலே படிச்சு அறிவை வளர்த்துக்கணும். எனக்கு ஆல்ரெடி நிறைய இருக்கும்மா!”
“அறிவு நிறைய இருக்கோ இல்லையோ.. வாய் எட்டு ஊருக்கு நீளமா இருக்கு..”
“பின்ன, யார் பொண்ணும்மா நான்?”
“அடிங்..”
அவள் கல்லூரி கடைசி பரீட்சை முடித்ததுமே தந்தையிடம், இனி மேல படிக்க தனக்கு விருப்பமில்லை என்று கூறிவிட்டாள்.
“அப்ப என்ன செய்யலாம்னு இருக்க எழிலு?” என்றார் மகளிடம்.
“நான் நம்ம ஹோட்டல் அக்கௌண்ட்ஸ் எல்லாம் பார்க்கவா அப்பா?”
அரசி ஹோட்டல் பிரச்சனையின் போது, விஜயனின் உதவியால் தான் அதில் இருந்து மீண்டு, மேலும் புதிதாக இன்னும் இரண்டு கிளைகளை திறந்திருந்தார்கள். மூன்று ஹோட்டல்களுக்கும் அக்கௌண்ட்ஸ் ஒருவர் தான் பார்க்கிறார். அவருக்கும் அறுபது வயதுக்கு மேலே ஆகிவிட்டது. புதிதாக ஒரு ஆளை வேலைக்கு சேர்க்கும் எண்ணத்தில் தான் அப்பொழுது இருந்தார்கள். அதனால் மகளின் இந்த யோசனை அவருக்கு பிடித்திருந்தது.
“நான் உங்க பெரியப்பாங்க கிட்டயும் பேசிட்டு சொல்றேன்” என்று கூறி இருந்தார்.
அதற்குள் விஜயனின் பெட்ரோல் பங்க் ஆரம்பிக்கும் வேலை வரவே, அவருக்கு அனைத்து உதவிகளும் செய்தாள். எழிலரசி மீது அனுராதாவிற்கு எவ்வளவு பாசம் என்பது விஜயனுக்கு தெரியும். ஆனால், எழிலுடன் கடந்த சில நாட்களிலே, விஜயனுக்கு அழகான நட்பு மலர்ந்தது. சில சமயங்களில் மகளாய் நின்றாள், சில சமயங்களில் தோழியாய் துணை நின்றாள், தப்பு என்று தோன்றினாள் எதிர்த்து நின்றாள், சரி என்று தோன்றினாள் சேர்ந்து நின்றாள்.
எப்பொழுதுமே, உருவத்திலும் குணத்திலும் அவர் பொம்மியின் சாயலை நினைவுகூர்ந்தாள்.
பெட்ரோல் பங்க் வாயிலில் ரிப்பன் வெட்டி திறந்து வைக்க, அந்த ஏரியா கவுன்சிலரை அழைத்திருந்தார்கள்.
இது மச்சான்கள் மூவரின் ஏற்பாடு. பெரிய ஆள் வந்தால், அதில் ஒரு பாதுகாப்பு இருக்கும் என்று கூறினார்கள். பல ஆண்டுகளாக அங்கே தொழில் நடத்துபவர்களின் அனுபவப் பாடம்.
முதன் முதலில் எழிலரசியின் டூ வீலருக்கு விஜயன் தன் கைகளாலே பெட்ரோல் போட்டு, வெற்றிகரமாக தொழிலை தொடங்கினார்.
அடுத்ததாக, சரவணன் எழிலரசியின் எண்ணத்தை கூறியதும், பெரியப்பாக்களுக்குமே மகிழ்ச்சி. “நம்ம பிள்ளையே பார்த்தா நல்லது சரவணா.. நாளைக்கே ஆரம்பிக்கட்டும்” என்றார் சண்முகம் கேட்டவுடனே.
“இல்லை இல்லை.. நான் ஒரு இரண்டு மாசம் ப்ரீயா இருக்கேனே? ரிசல்ட் வந்ததும் அப்புறமா வேலைக்கு வர்றேன்” என்று அவசரமாக கூறினாள்.
“எதுக்குடீ ரெண்டு மாசம்?” என்றார் ரேவதி.
“விடு ரேவதி, எப்பவுமே ஓடிக்கிட்டே இருக்கணுமா? பிள்ளை ரெண்டு மாசம் வீட்ல இருக்கட்டுமே?” என்றார் சாந்தி எழிலுக்கு பரிந்துகொண்டு.
அன்று இரவு அவர்கள் வீட்டில்,”நாளைல இருந்து யாரும் என்னை சீக்கிரம் எழுப்ப கூடாது.. புரியுதா?” என்று அம்மாவிடமும் தங்கையிடமும் கெத்தாக கூறிக்கொண்டு தூங்க சென்றாள்.
அய்யோ பாவம், எவ்வளவு புரண்டு படுத்தாலும் ஆறு மணிக்கு மேலே அவளுக்கு தூக்கம் வரவில்லை.
“டீ அக்கா.. உன்னை எழுப்ப கூடாதுனு சொல்லிட்டு என்னை தூங்கவே விடாம இப்படி புரண்டு புரண்டு படுக்கிறியே?” என்று பக்கத்தில் படுத்திருந்தக தமிழ் கடுப்பாகி அவளை கீழே தள்ளி விட்டாள்.
பின் எழுந்து, ‘சரி நாம போய் முருகனை பார்த்துட்டு வருவோம்’ என்று குளித்து கிளம்பி கோவிலுக்கு சென்றாள்.
அப்படியே ரத்னாவையும் பார்த்துவிட்டு வருவோம் என்று அவர்கள் வீட்டிற்கு சென்றாள்.
“வாம்மா எழிலு.. என்ன ஆளே காணும்?” என்று உற்சாகமாக வரவேற்றார் ரத்னா.
“மாமா பெட்ரோல் பங்க் வேலைல கொஞ்சம் பிஸி. அப்புறம் உங்க புது ஸ்டால் வேலை எல்லாம் எப்படி போகுது?”
“ஹாய் அக்கா”, என்று இவர்கள் பேச்சு குரல் கேட்டு வெளியே வந்தான் விக்கி.
“இங்க கோவிலுக்கு பக்கத்துலயே ஒரு கடை வாடகைக்கு வருது எழிலு. இன்னிக்கு போய் அட்வான்ஸ் கொடுக்கலாம்னு இருக்கேன்”
“கோவிலுக்கு பக்கத்துலேன்னா உங்களுக்கும் ஈஸி தான் ஆன்ட்டி. சூப்பர்”
மேலும் சிறிது நேரம் பேசி இருந்துவிட்டு கிளம்பினாள். கார்த்தி சென்று சில மாதங்கள் ஆகி இருந்தது. எழில் மட்டும் இல்லாமல், சாந்தி மீனா ரேவதி என்று அவ்வப்பொழுது ஒருவர் வந்து ரத்னாவை பார்த்து பேசிவிட்டே செல்கிறார்கள்.
குகனும் பாலமுருகனும் விக்கியை தினமும் மாலையில் பார்த்து பேசிவிடுவார்கள்.
இது எல்லாம் கார்த்திக்கு அம்மாவும் தம்பியும் சமாளித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையை தந்தது.
——————-
ஒரு நாள் திடீரென்று, கார்த்தியின் நண்பன் ஒருவன் ரத்னாவிற்கு அழைத்து, கார்த்திக்கு உடம்புக்கு முடியவில்லை. யாராவது வந்து பாருங்கள் என்று கூறினான்.
ரத்னாவிற்கு கையும் ஓடவில்லை, காலும் ஒடவில்லை. அந்த பையனுக்கு தமிழ் தெரியவில்லை. ரத்னாவிற்கு ஆங்கிலம் அவ்வளவு சரளமாக புரியாது. விக்கியும் கல்லூரிக்கு சென்றிருந்தான்.
யாரிடம் உதவி கேட்கலாம் என்று யோசித்து, எழிலுக்கு அழைத்தார்.
அவள் வீட்டில் இருந்ததால், “இருங்க ஆன்ட்டி, பத்து நிமிஷத்துல நான் வர்றேன். பதட்ட படாதீங்க” என்று கூறி அடுத்த பத்து நிமிடத்தில் அங்கே வந்து விட்டாள்.
பின், அந்த நம்பருக்கு அழைத்து பேசினாள்.
அந்த பையன், “கார்த்திக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்ததாகவும், அதுவே சரி ஆகிவிடும் என்று நினைத்து மருத்துவரை பார்க்காமல் விட்டு, நேற்று இரவில் இருந்து வாந்தி பேதி ஆகி மயக்கமாகி, பின் நண்பர்கள் அவனை மருத்துவமனை அழைத்து சென்று அட்மிட் செய்திருப்பதாகவும் கூறினான்.
“இப்ப எப்படி இருக்காங்க? “
“இப்ப ட்ரிப்ஸ் போட்டு இருக்காங்க. பிளட் டெஸ்ட் கொடுத்திருக்கோம்” என்றான்.
“ரொம்ப தேங்க்ஸ் ப்ரோ. கொஞ்சம் நாங்க வர வரைக்கும் பார்த்துக்கோங்க. டெஸ்ட் ரிப்போர்ட் வந்ததும் எங்களுக்கு போன் பண்ணுங்க. நாங்க டிக்கெட் இருக்கான்னு பார்க்கிறோம்” என்றாள் எழில்.
“என்னன்னு தெரியலையே, என்கிட்டே நேத்து பேசறப்ப கூட ஒன்னும் சொல்லலியே” என்று பதற்றமானார் ரத்னா.
“ஏன் ஆன்ட்டி, மனுஷனுக்கு காய்ச்சல் எல்லாம் வராதா? ஒன்னும் இருக்காது. இருங்க இப்ப டெஸ்ட் ரிசல்ட் வந்திடும், அப்புறம் என்ன செய்யன்னு பார்க்கலாம்..” என்று அவரை அமைதி படுத்தினாள்.
ஒரு மணி நேரத்தில், மீண்டும் அந்த பையன் அழைத்து டைபாய்டு காய்ச்சல்ன்னு சொல்றாங்க. பயப்பட ஒன்னும் இல்லை. இன்னிக்கு ஈவினிங் டிஸ்சார்ஜ் பண்ணிக்க சொல்லிட்டாங்க. சாப்பாடு தான் கட்டுப்பாடா இருக்கணுமாம் என்றான்.
“இங்கன கூட்டிட்டு வந்துடலாம்” என்றார் ரத்னா.
மதியம் போல கார்த்தியே அழைத்து பேசினான். குரல் சோர்வாக ஒலித்தது.
“கார்த்தி..” என்று அழ தொடங்கினார் ரத்னா.
அவரிடம் இருந்து போனை வாங்கி பின் எழில் தான் பேசினாள்.
“என்ன பாஸ், இப்படி பயம் காட்டிட்டீங்களே? இப்ப எப்படி இருக்கு? இங்க வர முடியுமா?” என்று இலகுவாக பேசினாள்.
“நான் சாமாளிச்சுப்பேன். அம்மாகிட்ட சொன்னா பயப்படுவாங்கன்னு தான் சொல்லல. அதுக்குள்ள என் பிரண்ட் சொல்லி டென்ஷன் பண்ணிட்டான்”
“உங்களை அறிவாளின்னு எங்க அம்மா சொல்லிட்டே இருப்பாங்க.. ஆனா நீங்க பெரிய அறிவு வாளியா இருப்பீங்க போலயே.. அம்மா பயப்படுவாங்க தான். அதுக்குன்னு சொல்லாம இருப்பீங்களா? எல்லா நேரமும் தனியா ஸ்டேண்ட் பண்ண முடியாது பாஸ்.. சொல்லுங்க.. உங்களால இங்க வர முடியுமா? இல்லை ஆன்ட்டி அங்க வரட்டுமா?”
“எனக்கு இரண்டு வாரத்துல எக்ஸாம் இருக்கு. அங்க வந்துட்டு போக முடியாது எழிலு..”
“சரி அப்ப ஆன்ட்டி அங்க வர ஏற்பாடு பண்றேன். அங்க தங்க முடியுமா?”
“அது ஹாஸ்டெல்ல தங்க முடியாது, ஆனா, இங்க கெஸ்ட் ஹவுஸ் இருக்கும். கேட்டுட்டு சொல்றேன்” என்றான் சோர்வாக.
“நான் இனி பார்த்துக்கிறேன் பாஸ்.. நீங்க பேசாம ரெஸ்ட் எடுங்க..” என்று அவனை மேலே பேச விடாமல், அவன் ப்ரெண்டுக்கு மீண்டும் அழைத்து பேசினாள்.
அவன் கெஸ்ட் ஹவுஸ் கிடைக்கும், வெளியே பக்கத்துல ஒரு வாரம் தங்குற மாதிரி வீடும் கிடைக்கும், கேட்டு பார்த்து சொல்வதாக கூறினான்.
“கெஸ்ட் ஹவுஸ்ன்னா ரெண்டு மூனு நாளைக்கு தான் தங்க முடியும். இங்க பக்கத்துல ஒரு வீடு இருக்கு. அவங்க ரெண்டு வாரத்துக்கு கூட வாடகைக்கு தர்றேன்னு சொல்றாங்க. அங்க கிட்சேன் லாம் செட் பண்ணி இருக்கு, நீங்க திங்ஸ் மட்டும் வாங்கிக்கிட்டா போதும்” என்றான்.
ரத்னாவிடம் கூறிவிட்டு அதையை புக் செய்யும்படியும், இவர்கள் வரும் வரை கார்த்தி உடன் இருந்து பார்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டாள்.
அடுத்தது ரத்னா எப்படி போவது என்ற கேள்வி வரவே, எழில் ரேவதிக்கு அழைத்து விஷயதை கூறினாள். ரத்னா காமாட்சி அம்மாவிற்கு அழைத்து கூறினார்.
சற்று நேரத்தில் காமாட்சி அம்மா, ரேவதி, சாந்தி, மீனா, சரவணன் என்று அனைவரும் வந்து விட்டனர்.
“விக்கிக்கு அடுத்த வாரம் பரீட்சை இருக்கே, அவனை கூட்டிட்டு போக முடியாது” என்றார் ரத்னா. அவரது குரலே கலக்கமாக ஒலித்தது.
“விக்கியை நான் பார்த்துகிறேன்” என்று அதற்கு தீர்வை கூறினார் காமாட்சி அம்மா.
சுந்தரேசன், “நான் உன் கூட துணைக்கு வரேன் ம்மா” என்றார்.
அவருக்கு சமீபத்தில் தான் ஸ்டென்ட் வைத்து ஆப்பரேஷன் செய்திருந்தார்கள். “நானே போய்ப்பேன் அண்ணா, நீங்க அலையை வேண்டாம்” என்றார் ரத்னா.
குகனுக்கும் பரீட்சை நேரம், பாலமுருகன் இப்பொழுது தான் தொழிலில் காலூன்ற ஆரம்பிக்கிறான், இருந்தாலும் அவனை போக சொல்வோமா என்று இவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“நான் வேணா ஆன்ட்டிகூட போகவா அம்மா” என்றாள் எழில்.
உடனே ‘சரி’ என்று விட்டார் ரேவதி. மகளை பற்றி அவருக்கு தெரியும், பத்திரமாக ரத்னாவை அழைத்து கொண்டு சென்றுவிடுவாள் என்று.
ரத்னாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. எப்படி அவர்கள் பெண்ணை இப்படி உடனே அனுப்ப சம்மதிக்கிறாள் என்று. ஒருவகையில் இத்தனை பேர் என்னுடன் துணைக்கு நிற்கிறார்கள் என்று நிம்மதியாகவும் இருந்தது.
“எதுக்கு ம்மா நீ அலையனும், நானே பார்த்து போய்டுவேன்” என்று ரத்னா சொன்ன மறுப்பை யாரும் செவிகொடுத்து கேட்கவே இல்லை.
அன்று இரவே ரத்னாவிற்கும் எழிலுக்கும் ட்ரெயினில் டிக்கெட் புக் செய்து அவர்களை ட்ரெயின் ஏற்றிவிட்டே அனைவரும் ஓய்ந்தனர்.
ரத்னா புறப்புடுகையில், “விக்கியை நாங்க பார்த்துக்கிறோம்” என்று அனைவரும் மாறி மாறி கூறினார்கள்.
“விக்கி பாய்.. உனக்கு மவுஸ் ரொம்ப ஜாஸ்தியா இருக்கே.. போட்டி போட்டு பார்த்துக்க வர்றாங்களே” என்றான் குகன் விக்கியின் தோளில் கை போட்டுகொண்டு.
“அதை நினைச்சா தான் குகன் கொஞ்சம் பயமா இருக்கு..”
காமாட்சி அம்மாவும் சுந்தரேசனும் விக்கியுடன் இவர்கள் வீட்டிலே தங்கிக்கொண்டார்கள். கண்ணன் பணியார ஸ்டாலையும் காமாட்சி அம்மா மூடவில்லை. வேலைக்கு வரும் பெண்களை வைத்து பார்த்துக்கொண்டார்.
மறு நாள், ரத்னா இல்லையென்று அலட்சியமாக வேலை செய்தனர் பெண்கள்.
கார சட்னியை அரைப்பதற்கு வாணலில் இருந்து மிக்ஸியிக்கு மாற்றி கொண்டிருக்கையில் விக்கி வந்தான்.
“என்ன அக்கா, தக்காளில தோல் சுருங்கவே இல்லை, அதுக்குள்ள அரைக்க போறீங்க.. அம்மா இல்லைன்னாலும் அதே ருசி இருந்தா தான் கஸ்டமர்ஸ் வருவாங்க” என்றான் கறார் குரலில்.
அந்த பெண்மணி, “விளையாட்டு பையன்னு நினைச்சா, இவனுக்கு இது எல்லாம் தெரியுமா?” என்று மனதிற்குள் புகைந்து கொண்டே, மீண்டும் வாணலில் போட்டு வதக்கினார்.
காமாட்சி அம்மாவிற்கு பெருமை பிடிபடவில்லை.
“எப்படி விக்கி, சூப்பர்” என்று அவனை பாராட்டினார்.
பாலமுருகனையும் குகனையும் போர்ட்டர் சர்விஸ்க்காக மாற்றி இருந்தார்கள் அவர்கள் அன்னையர்கள். விக்கி காமாட்சி அம்மா சுந்தரேசன் மூவருக்கும் மூன்று வேலை உணவும், அவர்கள் மூலம் அனுப்பி கொண்டிருந்தார்கள்.
கரக்பூர் செல்ல முழுதாக ஒரு நாளுக்கு மேலே ஆனது. ரத்னா களைத்து போய் விட்டார். மகனை நேரில் காணும்வரை அவரால் தூங்கவும் முடியவில்லை எழில் தான் வற்புறுத்தி கொஞ்சமேனும் உண்ண வைத்தாள். பேச்சுக்கொடுத்து கொண்டே வந்தாள். அவளில்லாமல் தனியே இந்த பயணம் மிகவும் சிரமமாக போயிருக்கும் என்று ரத்னாவிற்கு புரிந்தது.
ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, கார்த்தியின் நண்பன் கொடுத்த விலாசத்திற்கு இருவரும் ஒரு ஆட்டோ பிடித்து சென்று இறங்கினார்கள்.
ஹாலிலே கார்த்தி மிகவும் சோர்வாக படுத்திருந்தான்.
“கார்த்தி” என்று ரத்னா மகனிடம் விரைந்து சென்றார்.
எழில் கார்த்தி நண்பனுக்கு மிகவும் நன்றி என்று கூறி அவனுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
அந்த பையன் ஹரியானவை சேர்ந்தவனாம். இந்த வீடு இவர்கள் கூட படிக்கும் பெண்ணின் உடையது என்றும், வேண்டும் வரை இங்கே தங்கிக்கொள்ளலாம் என்றும், என்ன தேவை என்றாலும் அழைக்குமாறும் கூறி விடை பெற்று சென்றான்.
கார்த்திக்கு அம்மாவை பார்த்ததே புது தேம்பு வந்தது போல இருந்தது. மெல்ல எழுந்து அமர்ந்தான்.
ஒற்றை படுக்கை அறை கொண்ட சின்ன வீடு. சுத்தமாக பராமரிக்க பட்டிருந்தது
ஊருக்கு அழைத்து இவர்கள் பத்திரமாக வந்ததை தெரிவித்தாள்.
ரத்னாவும் இவளும் விரைவாக சென்று குளித்து உடைமாற்றி வந்தனர்.
ரத்னா மிகவும் களைத்து காணப்படவே, “நீங்க இருங்க ஆன்ட்டி நான் பார்க்கிறேன்” என்று அடுப்படிக்கு சென்று பார்த்தாள் எழில்.
சாந்தி, இவர்கள் புறப்படுகையில், புலங்கரிசி கஞ்சி செய்ய ஏதுவாக, அரிசி, பாசி பருப்பு, கொஞ்சம் சீரகம், இரண்டு மிளகு அனைத்தையும் வறுத்து பொடித்து, ஒரு டப்பாவில் கொடுத்து அனுப்பி இருந்தார். உடனே சமையல் செய்வதற்கான சில அத்யாவசிய பொருட்கள் எல்லாம் கொடுத்து விட்டிருந்தார்.
பெரியம்மாவற்கு மனதிற்குள் நன்றி கூறிக்கொண்டே, அங்கே இருந்த ஒரு பாத்திரத்தில் நான்கு ஐந்து டம்பளர் நீரை கொதிக்க விட்டு, பின் கஞ்சி பொடியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி விட்டாள்.
நன்றாக பூத்து வெந்து வரவும், கொஞ்சம் உப்பு சேர்த்து இறக்கி வைத்தாள்.
சற்று ஆறவும், மூன்று டம்பளர்களில் ஊற்றி அம்மா மகன் இருவருக்கும் கொடுத்துவிட்டு அவளுக்கும் ஒன்றை எடுத்து கொண்டாள்.
கஞ்சி மிகவும் சுவையாக இருந்தது.
கார்த்திக்கு இரண்டு நாட்களாக வறண்டு போயிருந்த நாக்குக்கு உயிர் வந்தது போல இருந்தது.
குடித்து, மாத்திரைகளையும் போட்டுவிட்டு தூங்கிவிட்டான்.
“எழிலு, நீ அந்த ரூம்ல படுத்துக்கோடா.. நான் தம்பி கூட இங்க கீழே படுத்துக்கிறேன்” என்று ரத்னா கூறி படுத்துவிட்டார்.
எழிலரசிக்கு இது புதுவித அனுபவமாக இருந்தது. அவள் வீட்டை விட்டு தனியே வெளிய வருவது இது தான் முதல் முறை.
புது ஊர், புது சூழல் என்று தூக்கம் வரவில்லை.
தங்கைக்கு அழைத்து சிறிது நேரம் பேசினாள்.
குகனும் பாலுவும் சிறிது நேரம் பேசினார்கள். பின் மெல்ல கண்ணயர்ந்தாள்.
புது விடியல் புத்துணர்ச்சியாக விடியட்டும்…
error: Content is protected !!