Skip to content
Post Views: 538
கைகளும் கால்களும் ஏன் அவளது ஐந்தே கால் அடி உயரத்தில் ஒரு அனு கூட அசையவில்லை. பால் சொம்பு நழுவி விழ இருந்த நொடி அழுந்த பிடித்து அதை டேபிளில் வைத்து விட்டு திரும்பினாள். கதவு திறந்தே இருக்க, மற்றவர் பார்க்கும் முன் ஓடிச்சென்று அடைத்துவிட்டு வந்தாள்.
இரும்பை ஈர்க்கும் காந்தமாய் மீண்டும் அவனிலே படிந்த பார்வை அப்படியே நிலைத்தது அவனில்.
ஒரு வேளை நடிக்கிறானோ! உற்று பார்த்தாள். இமைக்குள் உருளாத கண்கள், சீராக ஏறி இறங்கிய நெஞ்சம், சிறிதும் அசைவின்றி சிலையாய் படுத்திருந்த உடல் அனைத்தும் அவன் நடிக்கவில்லை என உணர்த்தியது.
“என்னாயிற்று?” என்ற எண்ணங்கள் அவளுள் ஓடிக்கொண்டே இருக்க, தள்ளாடிய உடலை சுவரோரமாய் சாய்த்து அமர்ந்து வலிக்க வலிக்க அவனை மட்டுமே பார்த்திருந்தது அவள் கண்கள்.
Advertisement
முதலில் கண்களில் வலி, இரண்டாவது இதயத்தில், மூன்றாவது மனதில் என விடாது எடுத்தது வலி.
ஒன்றும் புரியவில்லை, சாதாரணமாய் கடக்க முடியவில்லை, அசதியில் உறங்கி இருப்பான் என மனதை சரிகட்ட முடியவில்லை.
இது சிறு விசயம் தான் பெரிதாக்காதே, வேண்டுமானால் காலையில் கேட்டு தெளிவு படுத்தி கொள் என உள்ளுக்குள் சமாதானம் கூறிய மனதையும் ஏற்று கொள்ள முடியவில்லை.
Advertisement
ஆனால் செய்யாத தவறுக்கு கிடைத்த தூக்கு தண்டனை போல் ஆழமாய் வலித்தது. நெஞ்சை வருடிக்கொண்டாள்.
Advertisement
முகம் சிறுத்து சுருங்க, அப்படியே தலையை சுவற்றில் சாய்த்து, பாரம் கொண்ட கால்களை நீட்டிகொண்டாள்.
காலையில் கதவு தட்டும் சத்தத்தில் தான் விழித்தாள். “இதென்ன புது இடம்” கண்களை கசக்கி, ‘ஐய்யோ விடிஞ்சிடுச்சா? நிதர்சனம் உணர்ந்து, உள்ளங்கையால் நெற்றில் அடித்து கொண்டு கதவை பார்த்தாள். தாள்பாள் போடவில்லை. திரும்பி கட்டிலை பார்த்தவளுக்கு கிரி அங்கே இல்லை, எப்போதோ வெறுமனே கதவை சாற்றி சென்றுவிட்டான் என புரிந்தது.
நேற்றைய இரவை விட இன்னும் சிறுத்துப் போனது முகம். குனிந்து தன்னை பார்த்தாள் கலைக்கபடாத ஓவியமாய் தான் இருந்தாள்.
Advertisement
இதழ்கள் ஒரு புறமாய் வளைய, எழுந்து சென்று தாழிடப்படாத கதவை திறந்தாள். “என்ன கமலி இன்னும் குளிக்கலை, போய் குளிச்சிட்டு வா” என அவளை உள்ளே தள்ளிக்கொண்டு வந்த ராஜி, கட்டிலின் விரிப்புகளையும் கிரியின் உடைகளையும் கையோடு எடுத்துக்கொண்டு, “இதெல்லாம் நம்ப முறைப்படி நாத்தனார் தான் செய்யனும், பின் கட்டுல இருக்கேன், குளிச்சிட்டு உம் புடவையையும் கொண்டு வா, நானே துவைச்சிடுறேன்” என கூறிவிட்டு கமலி பேச நேரமே கொடுக்காமல் ராஜியும் சென்றுவிட்டாள்.
சங்கடங்களுக்கு மேல் அதிகமாய் சங்கடபட்டு போனாள் கமலி. திணறி நின்றிருந்தது இரண்டு நிமிடங்கள் தான். பின் தன் பேக்கில் இருந்து டவலை எடுத்து கொண்டு குளியல் அறைக்குள் சென்றுவிட்டாள்.
குளியலறை முழுதும் கமழ்ந்த சோப்பின் வாசம் அவள் மூளைக்குள் சென்று, அவனது சோப்பை கை தொட்டு எடுத்தது. பார்க் அவென்யூ சோப்.. கையில் இருந்ததை முகர்ந்து பார்த்தாள். அவனது வாசமென பிடித்து போனது.
நினையாதே மனமே நினையாதே என எத்தனையோ முறை சொல்லியும், மீண்டும் சங்கடத்திலேயே கழிந்தது.
எனக்கும் கிரிக்கும் ஒன்றுமே நடக்கவில்லை என்பதை ராஜிஅண்ணி உறுதியாய் இந்நேரத்திற்குள் கண்டு கொண்டிருப்பாள் என நினைக்கையிலேயே!
இப்பொழுது தான் கண்டு கொண்டாளா? நேற்றைய இரவில் உன்னை அழைத்து வந்ததே அவள் தான், அப்போதே கண்டு கொண்டிருப்பாள்! என மூளை அறைந்து பதில் கூற விரைத்தது அவள் உடல்.
பாத்ரூமிற்குள் எவ்வளவு நேரம் ஒளிந்து கொள்ள முடியும். வெளியே வந்தாள். பெட்டியிலிருந்து இலகுவான உடையை தேட அது கிடைக்காது போனதில் தாய்க்கு போனில் அழைக்க எத்தனிக்க, ஏற்கனவே அவரிடமிருந்து பத்து மிஸ்ட் கால்கள். சிறிதாய் புன்னகை படற தாய்க்கு அழைத்தாள். முதல் அழைப்பிலேயே ஏற்றார்..
“ம்மா..” இவள் அழைக்க “என்னடி இப்ப தான் எழுந்தியா, எத்தனை முறை கால் பண்றது. போற வீட்டில் அசிங்கபடுத்தாதுன்னு நேத்து தான் அத்தனை அட்வைஸ் பண்னேன். ஏன் தான்..” என முடிக்கும் முன்
“லேசான டிரெஸ் எதுவுமே இல்லை பெட்டிகுள்ள.. எல்லாமே வெயிட்டானதா இருக்கு!” இவளும் குரல் உயர்த்த
“ஏண்டி அறிவிருக்கா உனக்கு, நேத்து தான் கல்யாணம் ஆகி இருக்கு, உறவுகாரங்க கூட இன்னும் இடத்தை காலி பண்ணலை, அதுக்குள்ள சுரிதாரில் போய் நின்னு என் மானத்தை வாங்க போறியா? கல் வைச்ச புடவை, சாப்ட் சில்க் இருக்கும், எதையாவது எடுத்து கட்டு. இன்னைக்கு மட்டுமில்லை ஒரு பத்து நாளைக்கு புடவை தான்” எடுத்ததுமே எரிந்த விழ,
காதை விட்டு பின் ஓரடி நகர்த்தி “பேசுவது தன் தாயா என உறுதிபடுத்தினாள்.
“என்னம்மா பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு, பாசமா ஏதாவது பேசுவன்னு பார்த்தா, நீ திட்டுற.. நான் இப்போ சுரிதார் கேட்கவே இல்லையே.. எல்லாமே வெயிட்டான புடவை, கொஞ்சம் வெயிட்லஸ்ஸா எடுத்த வச்ச புடவைய காணோம்னு தானே கேட்க வந்தேன்” இவள் குரலும் சேர்ந்து உயர
“அதில் இருக்குற புடவையை கட்டு கமலி, லைட் வெயிட்லாம் அப்புறமா கட்டிக்கலாம்” இவர் குரல் குறைய
“கூடவே.. சாரிடா கமலி.. அது நீ லேட்டா எழுந்தன்னு டென்சன்ல கத்திட்டேன்.. அது நம்ப வீடு இல்லை உன் இஷ்டத்து இருக்க, எதையும் செய்ய முன்னாடி யோசிச்சு செய்.. என்ன புள்ள பெத்து வச்சிருக்கன்னு என்னை கேட்குற அளவுக்கு கொண்டு வந்து நிப்பாட்டிடாதே!” பெற்ற கடமைக்கு அவரும் இவளை பேச விடவில்லை.
“இந்த வீட்டுக்கு வந்து ஒரு நாள் தான் ஆகுது.. அதுக்குள்ளையும் நிம்மதியே இல்லாத மாதிரி இருக்கே!” கண்களை மூடி அப்படியே அமர்ந்துவிட்டாள்.
“கமலி கமலி.” அடுத்த வீட்டிற்கே கேட்கும் படி ராஜியின் அழைப்பு, கூடவே கதவு இடிபட்டு தட்டபடும் சத்தமும் கேட்டது.
“நல்ல வேளை கதவை பூட்டிட்டு குளிக்க வந்தோம், இல்லை இப்போவும் நந்தி மாதிரி நடு ரூமில் வந்து நின்னிருப்பா” நறநறவென பல்லை கடித்தபடி,
“ஒரு அஞ்சு நிமிஷம் வரேன் அண்ணி” உள்ளிருந்தே குரல் கொடுத்துவிட்டு, வேகமாய் புடவையை மாற்றி கொண்டு வெளியே வந்தாள், கூடவே நேற்று உடுத்தியிருந்த ஆடைகளை பாத்ரூமிலேய துவைத்து வாளியில் எடுத்து வந்தாள்.
“என்ன கமலி, நான் தான் துவைக்குறேன்னு சொன்னேன்ல.. கொடு நானாவது காய போடுறேன்” பிடுங்கா குறையாக வாங்கி கொண்டு போனாள்.
“வாம்மா.. இந்தா காபி குடி” என வசந்தாவும் இவள் கையில் தம்ளரை திணித்து சென்றுவிட்டார்.
கையில் தம்ளரோடு சுற்றும் முற்றும் கிரியை தேடியது இவள் விழிகள். ஆனால் கண்ணில் பட்டதோ சொந்தங்கள். ‘ஏன் இப்படி பார்க்கிறார்கள்’ என கூச வைக்கும் பார்வைகள். சமையலறையை ஒட்டி இருந்த ஜன்னலின் அருகே இருந்த பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து கொண்டாள்.
காபி குடித்து தம்ளரை கழுவிவைத்து விட்டு இவள் வர, “போய் தலையை காய வைம்மா, அதுக்குள்ள கிரியும் வந்திருவான். சேர்ந்து சாப்பிடலாம் அப்புறம் மறுவீட்டு சம்பிரதாயம் வேற இருக்கு” என வசந்தா கூறி அவளை அனுப்பி வைத்துவிட்டார்.
மீண்டும் அறைவாசம், பெட்டியில் இருந்த உடைகளை அடுக்கலாம் என நினைக்கையில் ராஜியின் குரல் அறைக்குள் வந்து விழுந்தது, “ஸப்பா..” என்ற சலிப்பு “கமலி, கிரி வந்துட்டான், சாப்பிட வாம்மா” என்ற செய்தியில் எரிச்சல் கொண்ட முகம் பிரகாசமானது.
உடை அடுக்கும் வேலையை விடுத்து, வகுடெடுத்து நீள கூந்தலில் நுனி முடிச்சிட்டு, கண்ணாடியில் தன்னை ஒரு முறை நிதானமாய் பார்த்துவிட்டு சிறிய புன்னகையை பெரிதாக்கியபடி வெளியே வந்தாள்.
அடுப்படி சிங்கிலேயே கை கழுவிவிட்டு இவன் ஹாலில் அமர, “வா கமலி, வந்து கிரி பக்கத்துல உக்காரு” எனவும், வேகமாய் வந்தாள்.
அவனை நோக்கி சத்தமெழுப்பிய கொலுசொலியோடு ஆசையாய் நகன்ற பாதங்கள் அவன் மீதான அன்பை அப்படியே பறைசாற்றுவது போல் இருந்தது.
நேற்றைய இரவு கனவோ எனும் வகையில் இன்று புதிதாய் புது எண்ணங்களோடு அவனருகில் அமர்ந்தாள்.
சுட சுட இட்லியும், சாம்பாரும், சட்னிகளும் பரிமாறபட, உணவின் வாசமோ, இல்லை தன்னவனின் வாசமோ அவளை அளவிற்கு அதிகமாகவே உண்ண வைத்தது.
தொடரும்…
error: Content is protected !!