காதலும் கடத்தப்படும் – 1

காதலும் கடத்தப்படும் : பகுதி – 1
பொன் கிரணங்களை படரவிட்டபடி மெல்ல மெல்ல ஆதவன் துயில் எழ, அன்றலர்ந்த மலர் போல, கண்ணாடியின் முன்னே நின்றிருந்தாள், அஞ்சலி. குங்கும நிற பட்டுடுத்தி, நகை பூட்டி, பூச்சூட்டி, தனது திருமணத்திற்கு தயாராகியிருந்தாள். கண்ணாடியில் தன்னைத் தானே பார்த்துக்கொண்டு நின்றிருந்தவளுக்கு, ஏதேதோ மனவோட்டம் வாட்டியது. கண்ணீர் முட்டிக்கொண்டு வர, குழப்பங்கள் நெஞ்சை அடைக்க, கால்கள் மெல்ல தளருவதாக உணர்ந்தாள். பெருமூச்செடுத்து, ஒரு மிடறு நீர் பருகினாள். அவளது அறையின் கதவு தட்டப்பட, கதவைத் திறந்தாள்.
“சின்னம்மா நீங்க கேட்ட பால் பாக்கெட்டு” என்று பணிப்பெண் ஒருவள் ஒரு நெகிழிப்பையை நீட்ட, அதைப் பெற்றுக்கொண்டவள், அறைக் கதவினை தாழிட்டுவிட்டு, கட்டிலின் மேல் வந்தமர்ந்தாள். இரண்டு நிமிட யோசனைக்குப் பிறகு, நெகிழிப்பையையும், தனது கைப்பையையும் எடுத்துக்கொண்டு கீழே இறங்கிச் சென்றாள். அந்த ஆடம்பர கல்யாண மண்டபம் அவளது திருமணத்திற்காக விறுவிறுவென தயாராகிக் கொண்டிருந்தது. கைபேசியை எடுத்துப்பார்த்தாள். மணி 6.15 என்றது. தனது தந்தையை தேடிச் சென்றாள்.
Advertisement
மகளை ஏறயிறங்க பார்த்தவருக்கு உள்ளுக்குள் நெகிழ்ந்து போனது. முதன்முறையாக தனது மகளை திருமண கோலத்தில் கண்டவருக்கு மனதினுள் சொல்லொனா இன்பம் பொங்கியது.
“என்ன வேணும்?” என்றார், எப்பொழுதும் போல், தனது கண்டிப்பான முகத்தோடு.
Advertisement
“நான் நாகாத்தம்மன் கோவிலுக்கு போயிட்டு வந்துடறேன், புத்துக்கு பால் ஊத்தணும்.”
Advertisement
அவளை கேள்வியாய் நோக்கியவர்,
“முஹுர்த்தத்த வச்சுக்கிட்டு இப்போ எதுக்கு கோயில்?” என்றார்.
“அம்மா கனவுல வந்து சொன்னாங்க…”
Advertisement
என்ன கூறுவது என்று புரியாமல் நின்றவர், அவளது வயதை ஒத்த மற்றொரு பெண்ணை அழைத்து அஞ்சலியோடு சென்று வருமாறு கூறினார். துணைக்கு மேலும் இரு மெய்க்காவலர்களை உடன் செல்ல பணித்தார். அவள் எதுவும் கூறாமல் கோயிலுக்கு கிளம்பிச் சென்றாள்.
“கோயில்ல இவ்வளவு கூட்டமா இருக்கு, என்ன நடக்குது?” என்றாள் உடன் வந்திருந்த பெண், அஞ்சலியிடம்.
“தெரியல” என்றுவிட்டு மௌனமாகிப் போனாள், அஞ்சலி.
வண்டி நின்றதும் சிறிதும் யோசிக்காமல் கோயிலினுள் அஞ்சலி செல்ல, உடன் வந்தவள் தனது நடையின் வேகத்தைக் கூட்டி அவளோடு சென்றாள். யாகசாலைகள் அமைக்கப்பட்டு பூசைகள் நடந்துகொண்டிருந்தன. அது சற்று சிறிய கோயில் என்பதால், கூட்டம் நிரம்பியிருந்தது. மெய்க்காவலர்களின் கண் பார்வைக்குள் இருவரும் இருந்தனர். சன்னதிகளில் சென்று வணங்கிய அஞ்சலி, கோயிலின் பின்புறம் இருந்த பிரம்மாண்ட அரச மரத்தை சுற்றி வந்தாள். அந்தக் கோயிலின் பின்புறம் அரணாக சுவர் எதுவும் இல்லை. மரத்திலிருந்து பத்தடி தொலைவில், ஒரு கார் செல்லும் அளவிற்கு சாலையும், அதைத் தாண்டி முற்புதர்களும், கழிவு நீர் தேக்கமும், அதைத் தாண்டி ரயில்வே தண்டவாளமும் மட்டுமே கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருந்தது. மூன்றாவது சுற்று சுற்றியவள், மரத்திற்கு பின்புறம் இருந்த புற்றில் பாலினை ஊற்றி வணங்கிவிட்டு, ஆள் அரவமற்ற அந்த வெளியை ஒரு நிமிடம் பார்த்தபடி நின்றிருந்தாள்.
“அஞ்சலி நேரமாச்சு”
“இங்க, இருபதடி தூரத்துல இருக்கற வேப்பமரத்தில இந்த பழத்தை வச்சு வேண்டிக்கிட்டு வந்துடறேன்” என்று, இரு எலுமிச்சை பழங்களை நீட்டினாள்.
அவளும் எட்டிப்பார்த்தாள். தொலைவில் சிறு மேடை அமைக்கப்பட்டு, அதன் நடுவே வேப்பமரம் இருந்தது. சாலை ஆள் அரவமற்று இருந்தது. அரச மரத்தின் பக்கவாட்டில் சுவர் எழுப்பப்பட்டு சற்று இடுக்கமாக இருந்ததால், பெண்களின் கூட்டத்திற்கு நடுவே வரமுடியாமல் மெய்க்காவலர்கள் சற்று தள்ளி நின்றிருந்தனர். அப்பெண் சுதாரிப்பதற்குள் அஞ்சலி நடக்கத் தொடங்கியிருந்தாள். அவசர அவசரமாக அவளும் சாலையில் இறங்கி அஞ்சலியை நோக்கி ஓடினாள். நடையின் வேகத்தைக் கூட்டிய அஞ்சலி, சாலையில் இடப்புறம் திரும்பினாள். உடன் வந்த பெண் பதறிப்போய் ஓட்டமெடுத்தாள். முகத்தில் கைகுட்டையைக் கட்டிக்கொண்டு முகத்தினை மறைத்தபடி இருவர், அஞ்சலியை அங்கிருந்த ஒரு ஆம்னி வண்டிக்குள் தள்ளினர். அடுத்த நொடி அங்கு வந்து சேர்ந்த அப்பெண்,
“விடுங்கடா அவளை” என்று மெலிந்த தேகம் கொண்ட ஒருவனின் சட்டையை பின்புறத்தில் இருந்து இழுத்தாள். அவன் தடுமாற, அப்பெண் வண்டிக்குள் ஏறி அஞ்சலியின் கைகளைப் பற்ற, சற்று திடமாக இருந்த மற்றொருவன் அப்பெண்ணின் கையை பிடித்து வெளியே இழுக்க முயற்சிக்க, மெலிந்தவன் சுதாரித்து எழுந்து, கூப்பாடு போட்டுக்கொண்டிருந்த அப்பெண்ணின் வாயில் ஏதோவொரு துணியை திணிக்க முயல, அவள் திமிறிக்கொண்டு தடுமாறி அஞ்சலியின் மேல் விழ, இந்த அமளியில் அப்பெண் மீது மயக்க மருந்து அடிக்கப்பட, நால்வருமே ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றனர். உடனே சுதாரித்துக்கொண்ட அந்த திடகாத்திரமானவன், அப்பெண்ணை அள்ளி, தரையில் கிடத்தி, ஓடிச்சென்று வண்டியை எடுக்க, அதற்குள்ளாக மற்றொருவன், மயக்கமாகியிருந்த அஞ்சலியின் கால்களை வண்டியினுள் அடக்கி, அவளை கீழே தள்ளி படுக்கவைத்து, மேலே சில கம்பளிகளை போட்டு மூடிவிட்டு, தாவிச் சென்று பயணியர் இருக்கையில் அமர்ந்தான். வண்டி பறக்கத் தொடங்கியது.
பெண்கள் இருவரும் மரத்தின் பின்னே நின்று பூசை செய்வதால் கண்ணுக்கு புலப்படவில்லை என்று எண்ணிக்கொண்டிருந்த மெய்க்காவலர்கள், சில நிமிடங்கள் ஆகியும் கண்ணில் புலப்படாததால், மரத்தின் பின்னே சென்று பார்த்தனர். அங்கே இருவருமே இல்லை. சாலையில் இறங்கி இருவரும் எதிர் எதிர் புறமாக ஓடிச்சென்று பார்க்க, ஒருவன் சாலையில் மயங்கிக்கிடந்த துணைப்பெண்ணை கண்டுகொண்டு, மற்றவனுக்கு தகவல் கூற, அஞ்சலி எங்கும் கிடைக்காததால், அப்பெண்ணை தங்களது வண்டியில் ஏற்றி, திருமண மண்டபத்திற்கு விரைந்தனர்.
வெகு தூரம் சென்றபின், அஞ்சலி கடத்திச் செல்லப்பட்ட வண்டியின் வேகம் குறைக்கப்பட்டது. அஞ்சலி மயக்கத்தில் கிடக்க, மற்ற இருவரும் தங்களது முகத்தில் கட்டியிருந்த கைக்குட்டையைக் கழற்றினர்.
“இன்னும் அரை மணி நேரம் தான்… வேலை முடிஞ்சுடும்” என்றான் ஒருவன். அஞ்சலிக்கு லேசாக நினைவு திரும்பியிருந்தது. மூச்சுவிட முடியாமல் திணறியவள், தன் மீது போர்த்தப்பட்டிருந்த கம்பளிகளை சிறிது விலக்கிக்கொண்டு பார்த்தாள். ஓட்டுநர், அருகிலிருந்தவனிடம் பேசிக்கொண்டு வருவதைக் கண்டாள்.
“வாட்சப் வந்திருக்கா?”
“இன்னும் இல்லை…”
“தூக்குற வரைக்கும் மெசேஜ் வந்தது…”
“சொன்ன இடத்துக்கு போயிடுவோம்”
“ஒரு பொண்ண தான தூக்க வேண்டியது? அந்த இன்னொன்னு வரும்னு அலெர்ட் பண்ணியிருக்கலாம்”
“ஆமா, பக்கத்துல இருந்து பார்க்கற மாதிரியே மெசேஜ் கொடுக்கறான். ஆனா இதை மட்டும் சொல்லவே இல்லை.”
“நீ எதுக்குடா அதை வண்டிக்குள்ள விட்ட?”
“நான் எங்க விட்டேன், அதுவே வாலண்ட்ரியா வந்து ஏறிடுச்சு. என்னா சைஸு”
“டேய்”
“அவ கைய சொன்னேன் அஜூ. என்னை ஒரே தள்ளுல கீழ தள்ளிவிட்டுடுச்சு. ரொம்ப அசிங்கமா போச்சு. கடத்தல்காரனை டீல் பண்றோமேன்னு பயம் இருக்கா இவளுகளுக்கு?”
“அதான் கரெக்ட்டா ஸ்ப்ரே அடிச்சு ஆஃப் பண்ணிட்டியே. எப்படா அதை வாங்குன?”
“நான் எங்க அடிச்சேன், நீ தான அடிச்ச?”
“நானா? இல்லையே…”
பதறியவன் வண்டியை உடனே நிறுத்திவிட்டு நண்பனைக் காண, அவனும் கவலையாய் இவனைக் காண, இருவரும் குழப்பமாய் திரும்பி பார்க்க, பின் சீட்டில் கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தாள், அஞ்சலி. தனது கையிலிருந்த மயக்க மருந்து தெளிப்பானை வீச, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த அர்ஜுனின் கையில் வந்து விழுந்தது.
“வண்டி எடுங்க” என்றாள்.
இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். அர்ஜுன் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தான்.
“வாட்சப் வந்தாத்தான் வண்டி நகருமா?” என்றாள்.
அர்ஜுன் அவளை ஊடுருவி நோக்க,
“சொன்ன இடத்துக்கு வண்டியை ஓட்டிட்டு போ, உனக்கு செட்டில்மென்ட் கிடைச்சுடும். இன்னும் அரை மணி நேரம் தான்” என்றாள் அஞ்சலி, தீர்மானமாக.
நண்பனை கவலை மிகுந்த கண்களோடு பார்த்த அர்ஜுன், ‘நாம் பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டோம்’ என்பதைக் கூறாமல் கூறினான்.
வண்டி புறப்பட்டது. அரை மணி நேரம் கழித்து, புனித தாமஸ் மலையின் மேல் வண்டி சென்று நின்றது. மலையின் உச்சியில் பாழடைந்த ஒரு கட்டிடம் மட்டுமே இருந்தது. அனைத்து வித சமூக குற்றங்களும் நடந்தேறும் இடத்திற்கான அடையாளங்கள் அத்தனையும் அங்கு தென்பட்டன. வண்டியினுள் அவள் அமர்ந்திருக்க, அர்ஜுனும், அவனது நண்பனும் கீழே இறங்கி, மலை உச்சியிலிருந்து நகரத்தை நோக்கினர்.
“மதனா, வாட்சப் வந்திருக்கா?” என்றான் அர்ஜுன் கவலையாக.
“இல்ல… நாம பெரிய பிரச்சனைல மாட்டிக்கிட்டோமோ?”
“ஆமா…” என்றவன், தனது பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டினை எடுத்து பற்ற வைத்து வாயில் வைத்தவன், சுற்றும் முற்றும் பார்த்தபடி சிந்தனையில் தொலைந்திருந்தான்.
“என்ன யோசிக்கற அஜூ?”
“இந்த பொண்ண நான் வண்டிக்குள்ள தள்ளும்போது, கத்தல, முனகல, தடுக்கல. பதுவிசா உட்கார்ந்துக்குச்சு, ஏன்? கூட வந்தவ போட்ட கூச்சல்ல தெளிவா அதோட முகத்துல இந்த பொண்ணு ஸ்ப்ரே அடிச்சிருக்கு, எப்படி? இப்ப கூட பயமே இல்லாம யாருக்காக காத்துட்டு இருக்கு? உனக்கு குழப்பமா இல்லை மதனா?”
“பயமா இருக்கு அஜூ. யாரு என்னான்னு விசாரிக்காம காசுக்காக இந்த வேலைய ஒத்துக்கிட்டேன். தப்பு பண்ணிட்டேன் அஜூ”
“டேய், நமக்கு என்ன ஆனாலும் வருத்தப்பட ஒரு நாதியும் இல்லை. இழக்க எதுவும் இல்லை… பயப்பட எதுவும் இல்லை… ஆனா இந்த பொண்ணு யாரு? எதுக்கு இப்படி நடந்துக்கறா? குழப்பமா இருக்கு…”
