Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

57.கார்த்திகா கார்த்திகேயன்-தேவனுக்கேற்ற தேவியோ

அத்தியாயம் 3.2_தேவனுக்கேற்ற தேவியோ_கார்த்திகா கார்த்திகேயன்

“என்ன மிரட்டுறியா? யாருன்னு தெரியாத ஒரு பொண்ணு கிட்ட இப்படி பேசுறியே? இதுலே உன் குணம் எவ்வளவு சீப்ன்னு தெரியலை. இதுல இவனுக்கு பொறுக்கின்னு சொன்னா கோவம் வேற வருது”, என்று அவள் சொல்ல அவன் ஏதோ கோபமாக சொல்லும் முன் “ஏங்க சாரிங்க, அவளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். தப்பு எங்க மேல தான்”, என்று மன்னிப்பு கேட்ட ரதி திவ்யாவின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றாள்.

 

வண்டியில் அமர்ந்த படியே அவன் அவர்களை திரும்பிப் பார்க்க திவ்யாவும் அவனை திரும்பி திரும்பிப் பார்த்து முறைத்த படியே சென்றாள். சிறு புன்னகை கூட உதயமானது சாணக்கியன் முகத்தில்.

 



Advertisement

கூடவே அவளது அழகு மதி முகமும் அவனுக்குள் பதிந்து போனது. காலம் யாருக்கு எப்போது என்ன விதியை வைத்திருக்கும் என்று தெரியாது அல்லவா? இறைவன் ஆட்டுவிக்கும் பொம்மைகளாக மட்டுமே நாம் இங்கு.

 

அவளது தேவையில்லாத கோபமும், முதல் முறை எதிர்த்து பேசியதால் அவனுக்கு அவள் மேல் எழுந்த ஆர்வமும் இருவரின் வாழ்க்கையை மட்டும் அல்லாமல் மற்றவரின் வாழ்க்கையையும் பந்தாடப் போகிறது என்று அவர்கள் அறிய வில்லை.

Advertisement

 

Advertisement

வெகு நேரம் அதே இடத்தில் நின்றிருந்தான் சாணக்கியன். அவனால் சட்டென்று திவ்யாவை கடந்து வர முடியவில்லை. அப்போது அவனுக்கு போன் வர அதைக் எடுத்துப் பார்த்தான். அழைப்பது தந்தை என்றதும் அதை எடுத்து “சொல்லுப்பா”, என்றான் பவ்வியமாக.

 

“எங்க டா இருக்க? சீக்கிரம் ஆபீஸ் வந்து சேரு”, என்று சொன்னதும் “இதோ வந்துட்டேன் பா”, என்றவன் அவளை மறந்து வண்டியை எடுத்தான். ஆனால் அந்த மறதி அப்போது மட்டுமே. அன்றைய இரவில் அவனால் தூங்க கூட முடிய வில்லை.

Advertisement

 

“என்ன அண்ணா ஒரே டிரீம்ஸ் போல?”, என்ற அமரின் குரலில் தான் கலைந்தான்.

 

“ட்ரீம்ஸ்  இல்லை டா. ஆனா ஒரு யோசனை?”

 

“என்ன யோசனை? உன் நினைப்புல காதல் அது இதுன்னா கனவு வரப் போகுது? எவனை அடிக்கலாம்? எவனை வெட்டலாம்னு தான் யோசிப்ப?”, என்று கேட்க தம்பியிடம் சொல்லலாமா வேண்டாமா என்று எண்ணியவன் பின் வேண்டாம் என்று முடிவு எடுத்து வேறு பேசி அவன் பேச்சை மாற்றி விட்டான்.

 

ஆனால் அடுத்த நாள் சரியாக அவள் கல்லூரியை யூகித்து அங்கே வந்து நின்றான். கூடவே அது அவன் படித்த கல்லூரி, இப்போது அமர் படிக்கும் கல்லூரி. அதனால் அவனுக்கு அங்கு வருவதில் எந்த தயக்கமும் இல்லை.

 

அவனை முதலில் பார்த்தது ரதி தான். “ஏய் திவி, நான் நேத்தே சொன்னேன் கேட்டியா? அங்க பாரு அவன் நேராவே வந்துட்டான்”, என்று சொன்னவள் சாணக்கியனைக் காட்ட திவ்யாவும் திகைத்துப் போனாள்.

 

“என்ன ரதி இது? ரோட்ல சண்டை போட்டோம் தான். அதுக்குன்னு நேரா இங்கயே வந்துட்டான்”

 

“இப்ப கேளு, நேத்து நீ கொஞ்ச பேச்சா பேசின? இதுக்கு தான் அம்மா அடிக்கடி வாயடக்கம் தேவைன்னு சொல்லும்”

 

“சரி விடு, இப்ப என்ன நடக்குதுன்னு பாப்போம்”, என்று சொல்லும் போதே அவர்களை நெருங்கி வந்தான் சாணக்கியன். அவர்களிடம் அவன் எதுவோ பேசுவதற்கு முன் “அண்ணா நீ என்ன இங்க?”, என்று அமரின் குரல் கேட்க அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

 

அப்போதும் ரதியின் மீது ஆர்வமாக படர துடிக்கும் பார்வையை அடக்கி கொண்டான் அமர். ரதி அப்போது தான் முதல் முறை அமரைப் பார்த்தாள். அதுவும் சாணக்கியனின் தம்பியாக மட்டுமே.

 

அண்ணன் தம்பி ஒன்றானதும் லேசாக அவளுக்கு பயமும் வந்தது. இப்போது திவ்யாவுக்குமே சற்று பதட்டம் தான். “உன்னை பாக்க தான் டா வந்தேன். இந்தா பீஸ் கட்ட பணம் கேட்டுருந்தியே? அதான் கொடுக்க வந்தேன்”, என்று சாணக்கியன் சமாளிக்க அப்போது தான் பெண்களுக்கு நிம்மதியே வந்தது.

 

“இதுக்கு நீ நேர்ல வரணுமா? நாளைக்கு வீட்ல கொடுத்திருந்தா வாங்கிருக்க போறேன்”, என்றான் அமர்.

 

“ஏன் நான் இங்க வரக் கூடாதா? இது நான் படிச்ச காலேஜ். இங்க இருக்குற பியூன் கிட்ட கூட கேட்டுப் பாரு. இங்க இருக்குற ஒவ்வொரு செங்கலும் மரமும் என் கதை சொல்லும். ஐயா பெருமை அப்படி”, என்று சாணக்கியன் காலரைத் தூக்கிய படியே திவ்யாவைப் பெருமையாக பார்க்க அவளோ ஒற்றை உதட்டுச் சுழிப்பில் அவனது பெருமையை தரை மட்டம் ஆக்கினாள். அந்த ஒற்றை உதட்டுச் சுழிப்பில் சாணக்கியன் கண்கள் மின்னியது.

 

“சரிப்பா, இது உன் காலேஜ் தான். நீ மாஸ் ஹீரோ தான். சரி லஞ்ச் டைம் ஆகிருச்சு. வா சாப்பிட போகலாம். இன்னைக்கு உன் லஞ்ச் என் கூட தான்”, என்றான் அமர்.

 

“இல்லை டா அமரா, நான் சாப்பிட லேட் ஆகும். நீ பிரண்ட்ஸ் கூட சாப்பிடு. நான் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு அவன் கிளம்பி விட அமரும் திவ்யா மற்றும் ரதியைப் பார்த்து ஒரு புன்னகை சிந்தி விட்டு சென்று விட்டான்.

 

அக்கா தங்கை இருவரும் நிம்மதியாக உணவு உண்ண அமர அப்போது அவர்கள் எதிரே வந்து உணவு உண்ண அமர்ந்தாள் அங்கே லைப்ரேரியில் பணிபுரியும் பெண்.

 

அவளிடம் திவ்யா நன்றாகவே பேசுவாள் என்பதால் இருவரும் பேசிய படியே உணவை அருந்த ரதி மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

அப்போது தான் திவ்யா சாணக்கியனை பற்றி அவளிடம் விசாரிக்க அந்த லைப்ரேரி பெண் அவனைப் பற்றிச் சொன்ன கதையில் இரண்டு பெண்களும் மிரண்டு தான் போனார்கள்.

 

உணவு நேரம் முடிந்து கிளம்பும் நேரம் “அவங்க கிட்ட பாத்து கவனமா இருக்கணும் திவி. அரசியல் குடும்பமாம். சரியான ரவுடி வேற. நமக்கு எதுக்கு வம்பு? சரி நான் கிளாஸ் போறேன். சாயங்காலம் பாக்கலாம்”, என்று சொல்லி விட்டுச் சென்றாள் ரதி.

 

ஆனால் அவர்கள் ஒதுங்கிப் போனாலும் அவன் விட வேண்டுமே. அடுத்த ஒரு மாதம் சாணக்கியன் வாழ்வில் பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு திவ்யாவை வட்டம் இட்டான். இந்த உண்மை அறிந்தது ரதி மட்டுமே. சாணக்கியன் திவ்யாவை சுற்றுவது ரதிக்கு பயமாக இருந்தாலும் திவ்யாவோ ஒரு புரியாத மனநிலையில் தான் சுற்றிக் கொண்டிருந்தாள்.

 

சாணக்கியன் தன்னை பின் தொடர்வது அவளுக்கு தெரியும் தான். அது கோபமும் வருகிறது தான். அதே நேரம் அந்த வயதுக்குறிய சில எதிர்பார்ப்புகளை அவளுக்குள் அவன் உருவாக்குகிறான் என்று உணர்ந்தே இருந்தாள். அது தனக்கு பெரிய ஆபத்து என்று அவளுக்கே புரியவும் செய்தது.

 

உண்மையிலே சாணக்கியன் திவ்யாவை ஆபத்தில் தான் சிக்க வைத்தான். சாணக்கியன் அவள் பின்னே சுற்றுவது இரண்டு பெண்களைத் தவிர மற்ற யாரும் அறியாமல் இருக்கலாம். ஆனால் தன்னுடன் நிழலாக இருக்கும் மகனின் நடவடிக்கையை தந்தை கவனிக்காமல் இருப்பாரா என்ன?

 

சாணக்கியன் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தை உடனேயே கண்டு கொண்டார் தருமர். ஆனால் அவனை மிரட்டி பணிய வைக்க எல்லாம் முடியாது என்று அவருக்கு தெரியும். ஏனென்றால் அவன் ஒரு முரடன். அதனால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற முடிவில் அவர் தெளிவாக இருக்க இவனோ அவளுக்கு முன்னே சென்று நின்று “திவ்யா நான் உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்”, என்றான்.

 

“என்ன தனியா பேசணும்? ஒரு பொறுக்கி கிட்ட தனியா பேசுற அளவுக்கு என் கிட்ட பேச ஒண்ணும் இல்லை”, என்றாள் பட்டென்று.

 

அவனை அப்போதைக்கு தள்ளி வைக்க சொன்னாளா? பதட்டத்தில் சொன்னாளா தெரியாது. ஆனால் அவளை மீறி வார்த்தை வெளியே வந்து விட்டது.

 

“ஏய் திருப்பி திருப்பி பொறுக்கின்னு சொன்ன அடிச்சு பல்லை பேத்துருவேன் பாத்துக்கோ”, என்றவன் அவளை அடிக்க வர அப்போது அங்கே வந்த போலீஸ் “என்ன மா பிரச்சனை?”, என்று கேட்டார்.

 

சாணக்கியன் சற்று அமைதியாக “ஒண்ணும் இல்லை சார்”, என்றாள் திவ்யா.

 

“ரொம்ப நேரமா பாக்குறேன். இவன் ஏதோ உன் கிட்ட வம்பு பண்ணுற மாதிரி இருக்கு”, என்று அவர் கேட்க “சார் அதான் அவங்க ஒண்ணும் இல்லைனு சொல்றாங்கல்ல? கிளம்புங்க”, என்றான் சாணக்கியன்.

 

“அதை சொல்ல நீ யாரு டா? எம்.பி பையன்னா என்ன வேணாலும் பண்ணுவியா?”, என்று அவர் கேட்க அடுத்த நொடி வாக்குவாதம் முற்றியதில் போலீசின் கன்னத்தில் சப்பென்று அறைந்திருந்தான் சாணக்கியன். போலீசும் அதை தானே எதிர் பார்த்தது.

 

சாணக்கியனை போலீஸ் ஜீப்பில் அமர வைக்க இரண்டு பெண்களுக்குமே பதட்டம் கூடியது. “சார் அவங்க ஒண்ணும் பண்ணலை, பிளீஸ் விடுங்க”, என்றாள் திவ்யா.

 

“உங்களை ஒண்ணும் பண்ணலை. ஆனா என்னை அடிச்சிருக்கான் மா. அதெப்படி விட முடியும்? சரி நீங்க உங்க தகவல் எல்லாம் கொடுத்துட்டு கிளம்புங்க”, என்று சொல்ல இருவருக்கும் என்ன சொல்ல என்று தெரிய வில்லை.

 

இருவரும் வேறு வழி இல்லாமல் வீட்டுக்குச் செல்ல சாணக்கியனோ கடுப்புடன் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றான்.

 

அவனின் தந்தை மீது இருந்த காழ்புணர்ச்சியால் போலீஸ் சாணக்கியனை அடித்து உரித்து எடுக்க அவனால் அதில் இருந்து மீள முடியவில்லை.

 

சாணக்கியன் ஸ்டேஷனில் இருப்பது முதலில் தெரிந்தது அமருக்கு தான். அடித்து பிடித்து ஸ்டேஷன் வந்தவன் என்னவென்று விசாரிக்க ரதி மற்றும் திவ்யா பற்றி தெரிய வந்தது. ஆனால் என்ன என்று தெளிவாக சாணக்கியனால் பேச முடிய வில்லை. போலீசும் வேண்டிய தகவலை அவனுக்கு சொல்லாமல் விட வேறு வழி இல்லாமல் தந்தைக்கு தகவல் சொன்னவன் முதல் முறையாக ரதியை போனில் அழைத்தான்.

 

ஆனால் அவளோ தாய் தந்தையுடன் பேசிக் கொண்டிருக்க அவனது அழைப்பை எடுக்க வில்லை. சாணக்கியனுக்கு நடந்ததைக் கண்டு கொதித்து போன தருமர் அவனை ஜாமீனில் வெளியே எடுத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றார். கூடவே திவ்யாவைக் கொல்லவும் ஆள் ஏற்பாடு செய்து விட்டார்.

 

எப்போது மகன் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் செல்ல வேண்டியது வந்ததோ அப்போதே சாணக்கியன் மனது புரிய உடனே கட்சி தலைவரிடம் மகன் திருமண விஷயம் பேசி அவரது மூத்த மகன் ஸ்னேகாவுக்கும் சாணக்கியனுக்கும் திருமணத்தை முடிவு செய்தார்.

 

இதை வீட்டிலோ சாணக்கியனிடமோ சொல்வதற்கு முன் தன்னுடைய மகனின் மனதில் இருக்கும் பெண் இந்த உலகத்திலே இருக்க கூடாது என்று முடிவு எடுத்தவர் அவளை கொல்லச் சொல்லி விட்டார்.

 

அடுத்த நாள் அவர்கள் இருவரும் கல்லூரிக்கு வரும் போது அவர்களை கொல்ல தயாராக இருந்தவர்கள் தருமருக்கு அழைத்து “ஐயா ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. அக்கா தங்கச்சி போல? இதுல நீங்க சொல்ற பொண்ணு யாருன்னு தெரியலையே?”, என்று கேட்டான்.

 

“ரெண்டு பேரையும் கொன்னுரு டா. இங்க பாரு என் பேர் மட்டும் எப்பவும் வெளிய வரக் கூடாது”, என்று சொல்லி போனை வைக்க அடுத்த நொடி அவர்களை ரவுடிகள் துரத்த அக்கா தங்கை இருவரும் அதிர்ந்து தான் போனார்கள்.

 

ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து ஓட திவ்யா ஒரு வீட்டுக்குள் பதுங்கிக் கொண்டாள் என்றால் ரதி ஒரு வண்டியில் மோதி கீழே விழுந்தாள்.

 

கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த அமர் தன் முன் ஒரு பெண் அடி பட்டு விழவும் அதிர்ந்து போய் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கினான். அதுவும் அது ரதி என்று தெரிந்து அதிர்ச்சி தான். அவன் அவளை வேகமாக நெருங்க தட்டு தடுமாறி எழுந்து நின்ற ரதி திகைத்து அவனைப் பார்த்தாள். ஏற்கனவே பயத்தில் இருந்தவளுக்கு அமர் வரவும் அண்ணனுக்காக பிரச்சனை செய்ய போகிறான் என்று எண்ணி அவ்வளவு பயமாக இருந்தது.

 

அவள் அவனைப் பார்த்த படி இருக்க அவளை இன்னும் நெருங்கி நின்றவன் அவளுக்கு அடி பட்டிருக்கிறதா என்று பதட்டமாக ஆராய்ந்தான். அப்போது தன்னை பின் தொடர்ந்தவர்கள் அங்கே இல்லை என்று உணர்ந்தவளுக்கு நிம்மதி வந்தாலும் அவனது அருகாமையில் அவளுக்கு மூச்சடைத்தது. அந்நிய ஆண் ஒருவன் இடிப்பது போல வந்து நின்றால் அவளுக்கு எப்படி இருக்கும்? ஆனால் அவனோ எதுவும் பேசாமல் அவளை அளந்தான். அடி பட்ட பெண்ணை பார்க்க தான் வந்தான். ஆனால் அது ரதி என்று அவனுக்கு தெரியாதே.

 

அவனையே அறியாமல் அவன் கண்கள் நேசத்தை பொழிய அவளும் அவனை பார்வையால் அளவிட்டுக் கொண்டு தான் இருந்தாள். அளவாக வெட்டப் பட்ட கேசம், குறும்பு இழையோடும் பார்வை, கூரான மூக்கு, அளவான மீசை, அழுத்தமான உதடுகள், வளமான தோள்கள் என ஆணழகனாக இருக்க அவளை அவனது அழகு பாதித்தை விட அவனிடம் இருந்து வந்த வியர்வையுடன் கூடிய சென்ட் வாசனை தான் அதிகம் தாக்கியது. அது ஒரு பிடிக்காத உணர்வை எல்லாம் தர வில்லை. அதே நேரம் பிடிக்கவும் இல்லை. ஒரு மாதிரி சங்கடமாக உணர்ந்தாள்.

 

அவன் மீது பயம் வந்தாலும் அவனிடம் இருந்து விலகி நிற்க முயல அவள் கையை பற்றி விட்டான் அமர். ஹான் என்ற குரல் எழுப்பிய படி அவள் அதிர்ந்து பார்க்க “நீ ஓகே வா ரதி மா? எதுக்கு டா இப்படி ஓடி வந்த? அடி ஏதும் பட்டிருக்கா? நீன்னு தெரியாம இடிச்சிட்டேன் கண்ணம்மா. சாரி டி. சரி வா, ஹாஸ்பிட்டல் போகலாம்”, என்று அவன் பேசிக் கொண்டே செல்ல அவள் கண்கள் இரண்டும் தெறித்து விடுவது போல அவனைப் பார்த்தாள்.

 

அமர் அவளது கல்லூரியில் படிக்கிறான் என்று தெரியும். சாணக்கியனின் தம்பி என்றும் தெரியும். ஆனால் அவன் பேச்சு அவளை குழப்பியது. “இவன் வேற யாரோன்னு நினைச்சு என் கிட்ட பேசுறானோ? கண்ணம்மாவாமே? இவ்வளவு உரிமையா பேசுறான்? எங்களை கொல்ல ஆள் வேற அனுப்பிருக்கான்? அடுத்து என்ன ஆகுமோ?”, என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க “இன்னைக்கு நாள் ரொம்ப இனிமையான நாள் டி”, என்றான் உரிமையாக.

 

அவள் திகைத்து அவனைப் பார்க்க “உன்னை இவ்வளவு கிட்ட பாப்பேன்னு நானே நினைச்சு பாக்கலை டி. என்னை அறியாம என் மனசும் வெளிய வந்துருச்சு. நீ எவ்வளவு அழகு தெரியுமா டி? அதுவும் இந்த கிரீன் கலர் டிரஸ்ல செமையா இருக்க. இதுல மட்டுமா? உனக்கு எது போட்டாலும் அழகு தான். அதுவும் இந்த கண்ணு இருக்கே கண்ணு. அப்பப்பா. இதுல தான் டி விழுந்துட்டேன். புருவம் கூட வில் மாதிரி இருக்கு பாரேன்”, என்றவன் தன்னுடைய ஆட்காட்டி விரலால் அவளுடைய இரு புருவங்களையும் வருடி விட உறை நிலைக்கே சென்றிருந்தாள் ரதி.

 

அப்போது அவர்கள் அருகே ஒரு ஆட்டோ வந்து நிற்க அதில் இருந்து இறங்கிய திவ்யா “ஏய் அவளை என்ன பண்ணுற?”, என்று பதட்டத்துடன் கேட்க அதற்கு பிறகு தான் நடப்புக்கு வந்தார்கள் இருவரும்.

 

திவ்யாவை எதிர்பாராதவன் திகைத்து ரதியை விட்டு தள்ளி நிற்க “அந்த பொறுக்கியோட தம்பி தானே நீ? எங்களுக்கும் உங்களுக்கும் என்ன டா பிரச்சனை? அவன் தான் வந்து பிரச்சனை பண்ணினான்? போலீஸ் கேட்டப்ப கூட அவன் எதுவும் பண்ணலைன்னு தானே சொன்னோம்? அதுக்கு ஆளை வச்சு கொல்ல வருவீங்களா? இன்னொரு தடவை அந்த பொறுக்கி என் கண்ணுல பட்டா நானே கம்பலைண்ட் கொடுப்பேன்”, என்று திட்டியவள் அவனை முறைத்து விட்டு “நீ வா கா”, என்று சொல்லி ரதியை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.

 

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!