Skip to content
Post Views: 258
அத்தியாயம் 3
மொபைலில் படமும், காதில் ஏற்பாட்-ம் என இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக செலவழித்து கொண்டிருக்கிறான்.
பொறுத்து பொறுத்து பார்த்தவள், ஹாலுக்கு சென்றுவிட்டாள், ஏதோ சீரியல் ஓடிக்கொண்டிருக்க, சோபாவின் அந்தபுறம் வசந்தா, இந்த புறம் ராஜி, அருகில் அவளது ஒரு வயது குழந்தை என படுத்திருந்தனர்.
இடமில்லாமல் அங்கிருந்த பிளாஸ்டிக் சேரை இழுத்து போட்டு அதில் அமர்ந்தாள்.
Advertisement
“என்னம்மா.. கிரிய எங்க” என கேள்வி எழுப்பியவர் “அங்க சேரில் வேணாம் இங்க வா” என எழுந்தமர்ந்து தன் அருகில் அழைத்து அமர்த்தி கொள்ள “போனில் ஏதோ படம் பார்க்கிறாங்க அத்தை” என வசந்தாவின் கேள்விக்கு பதில் கூறினாள்.
“கூறு கெட்ட பய..” என சத்தமாகவே வசந்தா திட்ட
“ம்மா.. நான் சொன்னா கேட்கமாட்டான், நீ போய் சொல்லு.. கோவிலுக்கு, கடை தெருவுக்கு எங்கையாவது கூட்டிட்டு போக சொல்லும்மா, கமலியும் தனியாவே சுத்திட்டு இருக்கா” நக்கலா, அக்கறையா என தெரியாத ரகத்தில் பேசினாள் ராஜி.
Advertisement
“ஆமா, நான் சொல்றதையெல்லாம் இப்போ எங்க கேட்கிறான்?”” என புலம்பித்தள்ளியவர்.
Advertisement
“அவன் அப்படித்தான்ம்மா முதலில் இருந்தே, நேரங்காலம் இல்லாம ஊர் சுத்துறது, சினிமா போறதுனு எதுவும் கிடையாது. வீட்டுக்குள்ளயே தான் கிடப்பான்.
சின்ன வயசுலயே வேலைக்கு போய்ட்டான், கத்தார் போயி ஆறு வருசம் ஆச்சு, இந்த ஆறு வருசத்தில் அவன் எடுத்த லீவை கை விட்டு எண்ணிடலாம்.
அதான் இப்படி யாரோடையும் ஒட்டுதல் இல்லாம இருக்கான். நீ ஒன்னும் நினைக்காத, போக போக சரியாகிடுவான்” கமலியை சமாதானபடுத்தினார் வசந்தா.
Advertisement
எதற்கென தெரியாமல் தலையாட்டி வைத்தாள் கமலி
அவள் முகம் போன போக்கை சகிக்க முடியாதவராய் “நீ வேணா வர்றியா.. நாம கோவிலுக்கு போகலாம்” என வசந்தா அழைக்க..
முகம் ஒரு முறை சுருங்கியது ஆனால், அடுத்த நொடியே, வீட்டுக்குள்ளேயே கிடப்பதற்கு இவரோடு போகலாம் என நினைத்து சரியென்றாள். வசந்தாவும் அடுத்த பத்து நிமிடத்தில் ரெடியாகி வந்துவிட்டார்.
படம் பார்த்துக்கொண்டிருந்த கிரியிடம் வந்து நின்றாள். என்னவோ என ஏர்பாடை கழற்றிவிட்டு “என்ன? என்னாச்சு?” என்றான்.
‘ஸப்பா.. பேசியே கொல்றது ணா இது தானா’ என்ன வாய்ஸ்டா இது றெக்கையின்றி பறந்தவள், அவனின் குரலிலேயே!
“என்ன, எதுவும் வேணுமா?” என கேட்டதில் தரையிறங்கினாள்.
“அத்த கூட கோவில் போயிட்டு வரவா” என கேட்க
“ம்.. போய்ட்டு வா..” என உடனே கூற, முகம் சட்டென சுருங்கி போனது இவளுக்கு.
திரும்பி நடந்தவளை “கமலி” என அவன் அழைக்க, முகம் பூவாய் மலர, சட்டென திரும்பினாள்.
அதில் கிரியே ஜெர்க்காகித்தான்போனான்.
“ரொம்ப நேரம் படம் பார்த்ததில், தலை வலிக்கு, நைட் சாப்பாடு வேணாம்.. நீ வரும் போது ஒரு வேளை தூங்கிட்டனா எழுப்பாத” என கூற ‘அப்படியே அவனை இரண்டு வைத்தால் தான் என்ன?’ உள்ளுக்குள்ளே கடுகடுத்துப்போனாள்.
“அடிக்கனும்னு தோணுதா.. அடிச்சிடு..” என இவன் அசால்ட்டாய் கூறிய நொடி
அதிர்ந்து வாயில் கை வைத்தபடி நின்றுவிட்டாள்.
“அது உனக்கு எக்ஸ்பிரஷிவ் பேஸ்.. என்ன நினைக்கிறன்னு முகமே சொல்லிடுது”
“ஓ.. கோபத்தை மட்டும் தான் இந்த முகம் சொல்லுதா? வேறெதுவும் சொல்லலையா?” அவனுக்கே விபூதி அடித்தாள் இவள்.
“ம்.. என்ன?” இவன் கண்கள் கூர்மை பெற,
அவள் பார்வை இவனை கொன்று கூறு போட, அவன் பார்வை சிறிதும் நகராது அவள் பார்வையை தாங்கி நின்றது. ஒரு நிலைக்கு மேல தொடரமுடியாது இவள் தான் பார்வையை திருப்பும் படி ஆனது.
அதற்காகவே காத்திருந்தவனாய் கண்களை போனுக்கு திரும்பி, காதுகளில் ஏர்பாடை மாட்டி கவனத்தை படத்தில் திருப்பினான்.
அவனது கோபம் கலந்த பார்வையிலும், எரிச்சல் கலந்த முக தோற்றத்திலும் இத்தனை நாளாக இருந்த சந்தேகம் வலுப்பெற்றது, நிச்சயமாய் இவன் யார் மீதோ கொலை காண்டில் இருக்கிறான் என உறுதியே செய்தாள்.
சிறிது நேரத்தில் கிளம்பி வந்த கமலி, ராஜியின் மடியில் கிடந்த குழந்தையை பார்த்து “அண்ணி நான் வேணா பாப்பாவை கோவிலுக்கு தூக்கிட்டு போகவா?” என கேட்க
“ம்ஹூம் காணும் கமலி, நான் இல்லைன்னா சமாளிக்குறது கஷ்டம், நீங்க போயிட்டு வாங்க”அனுப்பி வைக்க, அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்றனர் மாமியும், மருமகளும்.
பெரிய கோவிலாகத்தான் இருந்தது. கோவில் சுற்றுபாதையை கடக்கும் போதே அந்த அமைதியான சூழ்நிலையும் விர் விர்ரென வீசிய காற்றும், கோவிலுக்கே உரித்தான பாசிட்டிவ் வைப்பிரேசனும் இவள் மனதை குளிர வைத்தது.
சுற்று முடிந்து சன்னிதானத்திற்கு வந்தனர், வசந்தா ஏதோ முனு முனுவென கும்பிட்டு கொண்டிருக்க, அவள் கற்பகிரகத்தை பார்த்தவண்ணமே நின்றிருந்தாள். பிரச்சனை என்னவென தெரிந்தால் கடவுளிடம் கோரிக்கை வைக்கலாம்.. இவளுக்கு தெரியாத போது கடவுளிடம் என்ன வேண்டுவது என தெரியாமல் முருகனை பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தாள்.
பின் தீபாராதனை எடுத்து கொண்டு, திருநீரையும் வாங்கி கொண்டு பிரகாரத்திலேயே அமர்ந்தனர். அங்கே வசந்தாவிற்கு தெரிந்தவர் வர சுவாரஸ்யமாக அவர்கள் பேச்சில் மூழ்கிவிட, இவளோ தூணில் சாய்ந்து அமரந்தபடி, அமைதியில் நேரத்தை கடத்தினாள்.
அதன் பின் இருவரும் கிளம்பி வரும் வழியில் “கமலி நாளைக்கு சமையலுக்கு காய் வாங்கனும், நீ முன்னாடி போறியா, நான் வாங்கிட்டு வாரேன்” என வசந்தா தயங்க,
“நீங்க காய் வாங்குங்க அத்த.. நான் கொஞ்சம் டிரஸ் வாங்க வேண்டிருக்கு வந்துடறேன்” என அருகில் இருந்த துணிகடையை இவள் காட்டினாள்.
இருவரும் அவரவர் வேலையை முடித்து கொண்டு வர, சேர்ந்தே கிளம்பினர்.
வரும் வழியில் தெரிந்தவர் தெரியாதவர் என ஊர்கதை உலக கதையெல்லாம் வசந்தா நின்று நின்று பேசிவர, தெருவில் ஒரு ஆளை விடாமல் இப்படியா எல்லாரோடையும் பேசுவது என சற்று சலித்து தான் போனாள்.
ஆக மொத்தம் கிரி சொன்னது போல வீட்டுற்குள் வருகையில் எட்டு மணியாகிவிட்டது.
“அம்மாடி கமலி அப்படியே படுத்துடாத, மதியம் வச்ச சாதமே போதுமானதா இருக்கு.. நீயும் கிரியும் சாப்பிட்டு போய் படுங்க” எனவும், தலையசைத்துவிட்டு தங்கள் அறைக்குள் சென்றாள். லைட் கூட போடாமல் சொன்னது போலவே தூங்கியிருந்தான் கிரி.
விடிபல்பை போட்டுவிட்டு, துணி கடையிலிருந்து வாங்கி வந்தவகளை, அவனுடைய ரேக்கில் அடுக்கி, ‘இனியாவது இதை யூஸ் பண்ணுங்க’ என மனதிற்குள் நினைத்தபடி கமலி மட்டுமே சாப்பிட வந்தாள், வந்தவள், வசந்தாவிடம் ஏற்கனவே கிரி சொன்னதை கிளிப்பிள்ளையாய் ஒப்பவித்தாள்.
அவரோ “அப்படியா சொன்னான். சரிம்மா சாப்பாடு வேணாம்னா விட்டுடு. தலைவலினா அவன் சாப்பிட மாட்டான்” என சொல்லி சமையலறைக்குள் சென்றுவிட்டார். வரும் போது சாப்பாடு எடுத்து வந்தார் இருவருக்கும்
“நீ சாப்பிடு கமலி” அவளுக்கு தட்டில் உணவை போட்டு கொண்டுவந்தவர் “ராஜி, பாப்பா தூங்குறா தானே, வா நீயும் சாப்பிட வா” என சொல்ல, சோபாவில் குழந்தையை அப்படியே படுக்க வைத்துவிட்டு, எழுந்து வந்தாள் பிறகு மூவரும் உண்டு உறங்க சென்றனர்.
அறைக்குள் சென்றவள், இரவு உடையை எடுத்து கொண்டு பாத்ரூம் சென்றவள் வரும் போது இரவு உடையில் இருந்தாள்.. ஹேண்ட் பேக்கில் இருந்து திருநீரை எடுத்து வந்தாள்.
விழிகள் எப்போதும் போல கிரியை தேடி பசை போட்டு ஒட்டிக்கொண்டது இவள் கண்கள்.
நெற்றி முடி காற்றில் அசைந்தாட, டிராக்கும், டீசர்ட்டும் அணிந்து உறங்கி இருந்தவனை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள் கமலி.
எப்போதும் டிராக் சூட் தானா? ‘பனியனும் கைலியும் என இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்’ மனம் நினைக்க “ஆமாமாம் இன்னும் சைட் அடிக்கலாம்” என மூளை பதிலுரைத்தது.
“சைட்டா… அவ்வா?” என மனம் வாயில் அடிக்க
“ஆமாம் சைட் அடிக்க தான்.. இப்போ என்ன? என் புருஷன் நான் சைட் அடிப்பேன்” என மனதோடு மல்லுக்கு நின்றவளின் பார்வை முழுதும் அவனிடம் தான்.
கோவிலுக்கு கிளம்பும் முன் அவன் பார்த்த பார்வை இப்போதும் அவளுடலை ஜில்லிட செய்தது.
ஆளும் மயக்கிறான், குரலும் மயங்க வைக்கு, பார்வை அப்படியே பறக்க வைக்கு. பிரம்மனோட ஸ்பெஷல் படைப்புடா நீ.. உலகம் மறந்து தன்உலகில் சஞ்சரித்து இஷ்டத்திற்கு அவனை ஒருமையில் பேசிக்கொண்டிருந்தாள்.
காந்தமாய் ஈர்த்தவனை நோக்கி தானாகவே நகர்ந்தது அவளது பாதங்கள்.
எத்தனை மெதுவாய் நடந்து வந்தாலும், புதுப்பெண்ணிற்குரிய, வளையலும், கொலுசும் அவன் காதுகளை எட்டி, தூக்கத்தில் இருந்தவனை ‘அவள் வந்துவிட்டாள்’ என தட்டி எழுப்பிவிட்டது.
‘இன்னைக்கு எப்படி இவளை சமாளிக்க போறேனே? இன்னைக்கு என்னென்ன கேள்விகளோ? மூளை சூடாகியது இவனுக்கு.
இன்னும் அழுத்தமாய் கண் மூடிக்கொண்டான் இவள் வருகையை அறிந்து.
சிறிது நிமிடத்திலேயே நெற்றியில் ஏதோ பூசப்படுவது தெரிய.. அதன் வாசமே கூறியது, திருநீரு என.
‘இப்ப யாரு இதெல்லாம் இவ கிட்ட கேட்டா?’ என எரிச்சலுறும் போதே.. குளிர்ந்த ரோஜா இதழ்கள் நெற்றியில் ஒத்தடமிட்டது போல் இருக்க, பட்டென கண் திறந்தான் கிரி.
கண் திறந்தவனுக்கு தெரிந்ததோ கமலியின் கழுத்து பகுதி தான் இல்லையில்லை அதற்கும் கீழ்பகுதி.. ‘ஸப்பா’ மூச்சே ஓர் நொடி நின்றிட சிலீரென உள்ளுக்குள் ஏதோ உடைந்தது போன்ற ஒரு உணர்வு.
அவன் அதிர்ச்சியிலிருந்து விலகும் முன் நெற்றியிலிருந்து மலர் இதழ்கள் விலகிட, கமலி கவனித்து விடும் முன் பட்டென மீண்டும் இறுக கண் மூடிக்கொண்டான். நெற்றியில் இருந்து விலகி, இவன் பக்கமாய் சரிந்து படுத்துக்கொண்டாள் கமலி.
ஹப்ப்ப்பாடா விலகிட்டா! ஆசுவாச பெருமூச்சு விடும் முன், இவன் நெஞ்சினில் விழுந்தது வளையல் அணிந்த கரம்.
ஸ்தம்பித்து போனான். முதல் முறையாய் ஒரு பெண்ணின் ஸ்பரிசம், நெருக்கம், அணைப்பு என திண்டாடிப்போனான். சிறிதும் அசையாது அப்படியே இருந்தான்.
கடக்கும் ஒவ்வொரு நிமிடமும் தடக் தடக் என மணி நேரங்களாய் கடந்து கொண்டிருந்தது.
சில நிமிடங்களிலேயே அசைய துடித்த உடலை அடக்கி அமைதியாய் அசையாமல் படுத்திருப்பதே இன்ப அவஸ்தையாய் இருந்தது.
அவஸ்தைகளாய் கடத்திய நேரங்கள் முடிவுக்கு வர, சீரான மூச்சுவிடும் சப்தத்தில் ஒற்றை கண்ணை மட்டும் திறந்து திரும்பி அவளை பார்த்தான், ஆழ்ந்த அவளின் உறக்கத்தில் தன் நெஞ்சில் இருந்த அவளது கையை நாசுக்காய் நகற்றிவிட்டு, வேகமாய் கட்டிலை விட்டு எழுந்தவன், அவளையே பார்த்திருந்தான்.
அவளை பார்க்க பார்க்க மனம் நிம்மதியின்றி தவித்தது. அழுத்தமாய் பிடறியை வருடியவனுக்கு கோபமும் எரிச்சலும் எகிறி கொண்டு வந்தது.
ஹாலில் அவன் அம்மாவும், அக்காவும் இல்லையென்றால் வீட்டை விட்டு இந்நேரம் எங்காவது சென்று விட்டிருப்பான்.
அப்படி செய்ய முடியா இயலாமை அவனை அங்கேயே தேக்கியது. எந்த விரிப்பும் இல்லாமல் தரையில் அப்படியே படுத்து விட்டான்.
இப்படியே அவள் ஒட்ட, இவன் விலக என, இதோ ஓடிவிட்டது பத்து நாட்கள். இதற்குள் மாமியாருக்கு ஏற்ற மருமகளாய் மாற்றி கொண்டிருந்தார் வசந்தா.
இவ்ளோ காரம் தான் கிரி சாப்பிடுவான். ரொம்ப இனிப்பு எடுத்துப்பா ராஜி.. பால் கொழுக்கட்டைனா ராஜி குடும்பத்துக்கே ரொம்ப பிரியம்., வெள்ளி செவ்வாய் சாம்பார் தாண்டா.. புதன், வியாழன், ஞாயறு கறி எடுத்துக்கலாம்டா. வார சமையலை பழக்கிவிட்டார்.
அதற்கடுத்து கொஞ்சம் சீக்கிரம் எழுந்து கோலம் மட்டும் போட்டுடும்மா.. பக்கத்து வீட்டுகாரி “என்ன இன்னும் உன் மருமவளுக்கும் விடியலையான்னு பேசுறா..” வெட்கங்கெட்டவ.. என திட்டும் சாக்கில் கமலியை தனக்கு சாதகமாய் வளைத்து கொண்டார்.
error: Content is protected !!