Post Views: 66
முடிவெடுத்தாலும் லாலாவால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. அதற்காக தேர்வின் அடுத்த நிலை எழுத அழுத்தமான ஆவலும் இல்லை.
பல வருட சலிப்பின் பதில் அது! கூடவே முடிவெடுத்து விட்டு வந்திருக்க, மீண்டும் அதனைப் பற்றிக்கொண்டு தோல்வி, தோல்வியிலிருந்து மீட்சி என்று சுழலுக்குள் சிக்க விரும்பவில்லை. யோசித்து யோசித்து அப்படியே நடுவீட்டிலே உறங்கியிருந்தான்.
காலையில் உதயா அவனைப் பார்க்கையில் அசந்து உறங்கினான். அவளுக்கு எழுப்ப மனமில்லை, ஆனாலும் வேலை இருக்கிறதே.
“லாலா” மெல்லிய குரலில் அவனருகே குனிந்து அவள் எழுப்ப, கண்விழித்தவனுக்குக் குளிராய்க் காட்சி.
Advertisement
மென்மையான குரல், புன்னகை என்று உதயா அவன் உதயத்தை இன்னும் அழகாக்கினாள். சட்டென அவளை இழுத்து தன்மேல் போட்டுக்கொண்டான் லாலா.
“சாருக்கு ஆஃபிஸ் டைம் ஆகலையா? இன்னும் ஒன்றரை மணி நேரத்துல இருக்கணுமே..” என்றதும்,
“ஒன்றரை மணி நேரம் இருக்கட்டும், நீ ஒரு நிமிஷம் இப்படியே இரு..” என்றவன் அவளை இறுக்கமாக அணைத்து வாசம் பிடித்தான்.
Advertisement
அந்த இறுக்கம் உதயாவை சிந்திக்க வைத்தது.
Advertisement
“என்னாச்சு லாலா? நல்லாயிருக்கீங்கதானே? ஏன் இங்க வந்து படுத்திருக்கீங்க?” என்று வரிசையாக வாக்கியங்கள் வந்து விழவும், லாலா கடுப்பானான்.
“ஏண்டி ஆசையா கட்டிப்பிடிச்சா இத்தனை கேள்வி கேட்கிற? நைட் இரண்டு மணிக்கு வந்தேன், சும்மா கொஞ்ச நேரம் போன் நோண்டினேன், அப்படியே சொக்கிடுச்சு” என்று சொல்ல, உதயாவுக்கு அவனின் களைப்பை எண்ணி கவலையானது. உதயாவின் முகம் வாடிட,
“உதயா எப்பவும் கிழக்குல இருக்க சூரியன் மாதிரி இருக்கணும். இப்படி உம்முனு ஆகாத, மனுஷனா இருந்தா டயர்ட் ஆவத்தான் செய்வான்.. நீ கூட சில நேரம் டயர்ட்ல வாயப் பொளந்து தூங்குவ..” என்றவன்,
Advertisement
“சரி, என் கடமைக்கு நேரமாகிடுச்சு. கொஞ்சம் என்மேல இழுந்து எந்திரிக்கிறீங்களா?” என்று கேட்டு, அவளிடம் செல்லமாக அடிகள் பெற்று, முத்தங்கள் கொடுத்து பத்து நிமிடம் கழித்தே எழுந்தான்.
அதன்பின் வேலைக்குச் சென்றவனுக்கு வீடு திரும்பும் வழியெல்லாம் தேர்வுப் பற்றிய யோசனை. ஏன் ஒரு முறை, ஒரே ஒரு முறை முயற்சி செய்யக்கூடாது என்று தோன்றியது.
இழக்க எதுவுமில்லை! இதுநாள் வரை படித்ததை வைத்து அடுத்தக் கட்டத் தேர்வை எழுதினால் என்ன?
லாலாவுக்கு இது நம்பிக்கையா இல்லை தன் முடிவுகள் மீதான நிலையற்றத் தன்மையா என்ற பொங்கெழுச்சி(overwhelming) உணர்வு அதீதமாக இருந்தது.
எல்லாரும் நம் மீதான நம்பிக்கையை இழந்திடும் நேரம், தேவ தூதுவன் வருகை போல, நமக்கே நம் மீது ஒரு அலாதி நம்பிக்கை வரும். அப்படித்தான் அப்பாவின் புறக்கணிப்பு இவ்வுணர்வைக் கொடுத்தது.
உறக்கத்தை சில நாட்கள் தொலைத்தால் போகிறது, எதிர்ப்பார்ப்பில்லாமல் எழுதித் தொலைத்தால் என்ன என்று தோன்றியது.
தோற்றாலும் என்னவாகப்போகிறது. சோறு போட வேலையிருக்கிறது. இது ஒன்றும் முதல் காதல் தோல்வியாக இருக்க போவதில்லையே? அதுவும் ஒரு கட்டத்தேர்வில் தேர்ச்சிப்பெற்றதால், ஏன் ஒரு வாய்ப்பை விட்டுக்கொடுக்க வேண்டும்?
இப்படி யோசித்தவன் யாரிடமும் தன் முடிவை சொல்லவில்லை. உதயாவிடம் சொல்லி அவளுக்குச் சிறிதளவு எதிர்ப்பார்ப்பினைக் கொடுக்க விரும்பவில்லை.
இந்த முயற்சியின் முடிவு என்னவாக இருந்தாலும், அது தன்னோடு என்ற தெளிவு. அதன்படியே அடுத்து வந்த நாட்கள் எப்போதும் போல் சிரத்தையாகப் படித்தான். வேலை முடிந்தவுடன் நேரே நூலகம் சென்று அங்கு உட்கார்ந்து படித்தான்.
உண்ண, உறங்க மட்டுமே வீடு வந்தான். உதயாவிடம்,
“ஆஃபிஸ்ல கொஞ்சம் வர்க் அதிகமா இருக்கு உதயாம்மா. கூடவே ப்ரண்ட்ஸ் கொஞ்சம் கோர்ஸ் சொன்னாங்க, அதையும் படிக்கிறேன்” என்றிருந்தான்.
முன்புபோல் உட்கார்ந்தால் படிப்பு, நின்றால் படிப்பு என்ற நிலை இல்லை. இலகுவாக படித்தான். படித்தான் என்பதை விட படித்ததைத் திருப்புதல் செய்தான். கட்டாயம் தேற வேண்டும் என்று அவனை வருத்தவில்லை. எந்த வெளி அழுத்தங்களும் அவனிடமில்லை.
தேர்வையும் எழுதினான். விடைகளை எல்லாம் சரிபார்க்கவில்லை. வாய்ப்பு வந்தது, எழுதினான். அவ்வளவுதான்!
இப்படி இயல்பாக வாழ்க்கையின் போக்கில் செல்ல, உதயா அன்று பதட்டமாக இருந்தாள்.
அன்று மட்டுமில்லை, பத்து நாட்களாகவே அவள் சரியாக இல்லை. ஏதோ வேலை டென்ஷன் என்று லாலாவும் துருவவில்லை.
“என்னாச்சு உதயா?” என்று மீண்டும் கேட்க, அவள் ‘ஒன்னுமில்லை’ என்று தலையைசத்தாள்.
அரசு விடுமுறை இருக்க, அந்த வாரம் ஊருக்குச் செல்வோமா என்று அவன் அப்போது கேட்டிருக்க, வேண்டாம் என்றாள்.
அவனுக்கு ஆசையாக இருந்தாலும் அவளைத் தனியே விட்டுச் செல்ல விருப்பமில்லை.
உணவும் சரியாக இறங்கவில்லை. அன்று இரவு உறங்கும்போது,
“உதயா! உனக்கு உடம்புக்கு எதாச்சும் பண்ணுதா? ரொம்ப கம்மியா சாப்பிடுற, சரியா தூக்கம் வரதில்லையா? வர்க் ப்ரஷர் ஜாஸ்தியா?” என்று அக்கறையில் லாலாவின் வார்த்தைகள் வர, உதயாவோ ‘இல்லை’ என்றாள்.
“எதுக்கும் டாக்டர் பார்த்திடுவோம்” என்று லாலா சாதாரணமாக சொல்ல, உதயா எச்சில் விழுங்கினாள்.
“பார்க்கணும்தான்” என்றாள் அவன் என்ன சொல்வானோ என்ற அகநெருக்கடியோடு.
“ம்ம்” என்று திரும்பிப் படுத்தவன் சட்டென்று அவள் குரலின் பேதம் கண்டு,
“உதயாம்மா, என்ன செய்யுது உனக்கு?” என்று பதட்டமாகக் கேட்டான்.
உதயாவின் குரலில் கண்ணீரின் முன்னிசை. ஒரு வருட வாழ்வில் அதனைக் கண்டுகொள்ளும் அளவு முன்னேறியிருந்தான் லாலா.
லாலா கேட்ட வாஞ்சையில் உதயாவுக்குக் கண்ணீர் வந்தது. மெல்லிய விளக்கொளியில் அவள் விசும்புவது தெரிய, அவளை அணைத்தவன் பயந்து போனான். சிறுவயதில் பார்த்த படங்கள் எல்லாம் பயமுறுத்தின.
“உதயா, உனக்கு எதாச்சும் பெரிய பிரச்சனையா? என்கிட்ட சொல்லாம மறைக்கிறியா?” என்றான் கலவரமான குரலில்.
“என்ன?” என்று உதயா அவன் எக்குத்தப்பாக யோசிப்பது புரிந்து,
“பிரச்சனை எல்லாம் இல்லை, டாக்டர் பார்க்கணும்னா வேற எதுக்கும் பார்க்க மாட்டாங்களா?” என்றாள் கடுப்போடு. கண்ணீரும் கன்னம் நனைத்தது.
“வேறெதுக்கு?” என்றவன் முகம் சட்டென பிரகாசமானது.
“ஹே! உதயா! நிஜமாவா?” என்று அவன் உற்சாகக் குரலில் கத்த,
“அச்சோ கத்தாதீங்க!” என்றாள் மெல்லமாக.
“சொல்லு” என்று அவன் ஆவல் அவசரப்படுத்த,
“லாலா, நிஜமா நீங்க சந்தோஷமா கேட்கிறீங்களா?” என்று சந்தேகமாகக் கேட்டாள்.
“என்ன கேள்வி இது?” லாலா புரியாமல் கேட்க,
“பின்ன, முன்னாடி இது பத்திப் பேசினப்போ நீங்க என்ன செஞ்சீங்கன்னு மறந்தாச்சா? குழந்தை வேண்டாம்னு சொல்லி, என்னை விட்டுத்தள்ளியிருந்தீங்களே?” என்று உதயா நினைவூட்ட,
“அச்சோ! என் பொண்டாட்டிக்கு எவ்வளவு ஞாபகசக்தி, விட்டா போன ஜென்மத்துல போட்ட சண்டையெல்லாம் சொல்லுவ போல” என்று கிண்டல் செய்தவன்,
“அது அப்போ இருந்த லாலா, இப்போ நான் ஃபாதர் லாலா” என்றதும் உதயா சிரித்துவிட்டாள்.
“ஹலோ! நான் இன்னும் கன்ஃபார்ம் பண்ணல. வீட்லதான் செக் பண்ணியிருக்கேன், சொன்னா நீங்க வேண்டாம் சொல்லிடுவீங்கனு பயம்” என்றதும் லாலா சமாதானங்கள் சொல்லவில்லை.
அவன் காயப்படுத்தியதின் விளைவு என்று புரிய, அந்த நொடி அதனை நியாயப்படுத்தாமல் அவளை நேயத்தால் நிறைத்தான்.
“என்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று சொல்லி, உதயாவிடமிருந்து அடிகள் பெற்றவன் மனம் நிகழ்கணத்தின் நிறத்தால் நெகிழ்ந்திருந்தது.
“ஏன் உதயா நம்ம பையன், பொண்ணு யாரா இருந்தாலும் எங்க குடும்ப வழக்கப்படி பெயர் வைக்கணும். சொல்லு உனக்குப் பிடிச்ச ஃப்ரீடம் ஃபைட்டர் யாரு?” என்று அவன் கனவுகள் நீள, உதயாவின் புன்னகையும் பெரிதானது.
“பகத், லாலான்னு வச்சாச்சு. அய்யோ அவசரத்துக்குப் பெயர் ஒன்னும் சிக்கலையே..” என்று அவன் புலம்ப,
“நாளைக்கு செக் அப் பண்ணிட்டு நம்ம பெயர் தேடுவோம். அப்புறம் வீட்ல சொல்லுவோம்” என்று உதயா சொல்ல, லாலாவும் சம்மதிதான்.
உண்மையில் லாலா அவன்மேல் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை.
ஃபாதர் லாலா ஆகிவிட்டான்.
வீட்டினரிடம் சொல்ல எல்லாருக்கும் மகிழ்ச்சி. திலகருக்குப் பெயரன் அவரது விருப்பப்படி சர்க்கார் வேலைக்குச் செல்லவில்லை என்ற வருத்தமிருந்தாலும், லாலா அவரின் செல்லப்பேரன் அல்லவா? அதனால் அவரால் கடிய முடியவில்லை.
“டேய்! லாலா நம்ம குடும்ப பழக்கப்படி உன் மகனுக்கோ மகளுக்கோ பெயர் வைக்கணும்” என்று போனில் திலகர் பெயரனிடம் சொல்ல,
“அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே கண்டிஷனா சொல்லிட்டேன் தாத்தா” என்க,
திலகர், “படவா!” என்று சிரித்தார்.
“டேய் மகனே! அதுக்குன்னு என்னை இவ்வளவு சீக்கிரம் தாத்தா ஆக்கிட்டியேடா” என்று சித்ரஞ்சன் கிண்டல் செய்ய,
“இட்ஸ் ஓகே மாம்ஸ், எப்படியும் உங்க மகன் பகத், உங்களை மாதிரி காலேஜ் போறதுக்கு முன்னாடியே டாவு’வோட வருவான். சோ ஒன்னும் அவ்வளவு சீக்கிரம் இல்லை” என்று சக்தி சித்ரஞ்சனை வழக்கம்போல் வம்பிழுத்தான்.
உமா மகளோடு தங்கி ஒரு மாதம் அவளை கவனித்துவிட்டு ஹைதரபாத் சென்றார். இரண்டு மாதங்கள் கடந்த பின் ஒரு குளிர்மாலை வேளை.
லாலா உதயாவைக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றான்.
“எனக்கு அலைய முடியாது லாலா. இன்னொரு நாள் போகலாம்” என்று உதயா மறுக்க, லாலா பிடிவாதமாக இருந்தான்.
“வீட்லயே இருந்தா அப்படித்தான் இருக்கும், கொஞ்சம் இயற்கையை ரசிக்கணும் உதயா. வா வா” என்று அவளை ஆட்டோவில் பத்திரமாக அழைத்துப் போனான்.
விருப்பமின்றி வந்தாலும் கடற்காற்றை உதயா வெகுவாக விரும்பினாள். ஆசுவாசமாக உணர்ந்தாள். மாலை நேரம் என்பதால் மக்கள் கூட்டம் அதிகம். கடல் பக்கம் சென்றவள் நீரில் கால் நனைத்தாள், அவள் விரும்பும் வரை அவளோடு கால் நனைய நின்ற லாலா அவளோடு கரையில் சரிந்தமர்ந்தான்.
உதயா அவன் கையைப் பற்றிக்கொண்டு புன்னகையோடு கணவனைக் கண்ணுக்குள் நிறைக்க, தன் அலைப்பேசியை அவள் கையில் கொடுத்தான் லாலா. சுயப்படம் எடுக்கப்போகிறோம் என்று அவள் புன்னகை செய்ய,
“போனை ஆன் பண்ணி பாரு” என்றான். அவளும் பார்க்க, அவனது மெயில் இருந்தது.
“என்ன மெயில்?” என்று உதயாவுக்கு சட்டென்று கிரகிக்க முடியவில்லை. CBDT’யிலிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது.
“என்ன ஏதோ டேக்ஸ், central bureau of direct taxes..டாகுமெண்ட் வெரிஃபிகேஷன்னு இருக்கு?”
“நீ எனக்கு ஒரு ப்ரோமொஷன் கொடுத்த இல்லை, அது மாதிரி இன்னிலிருந்து நீ ஆஃபிஸர் பொண்டாட்டி, இன்கம் டேக்ஸ் இன்ஸ்பெக்டர் பொண்டாட்டி” என்று சொல்ல, உதயாவின் கண்கள் விரிந்தன.
வாழ்க்கை இந்தமுறை லாலா எதிர்ப்பார்த்ததைக் கொடுத்திருந்தது. உதயா லாலாவின் முகத்தையே பார்த்தாள். எத்தனைப் போராட்டம் இந்த நாளுக்காக? இவன் அவன் கனவை விடவே இல்லையா? என்று எண்ணற்ற கேள்விகள்.
“கங்கிராட்ஸ்” என்றவளுக்குக் கண்ணீர் வந்தது.
“ஹே!” என்று லாலா அவள் கண்ணீரைத் துடைக்க,
“எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு, என்ன சொல்றதுனு தெரியல, எப்படி?” என்றவளிடம் கேள்விகள்.
தேர்வு முடிவு வந்த கதையைச் சொன்னான் லாலா.
“ஒரு எக்ஸாம்க்குனு படிக்க ஆரம்பிச்சு, வாழ்க்கை மேல இருந்த பயத்தால கிடைச்ச எக்ஸாம்லாம் எழுத ஆரம்பிச்சிட்டேன் உதயா. முதல்ல எல்லாம் எழுதுவோம் ப்ராக்டீஸ்னு தோணும். அப்புறம் இதுவாச்சும் கிடைக்காதான்னு ஒரு கட்டத்துக்கு இந்த எக்ஸாம்ஸ் தள்ளிடும்.”
“எனக்கும் அப்படித்தான், அதனால் இந்த எக்சாம் அப்ளை பண்ணினதே ஞாபகமில்லை, நான் ரொம்ப கஷ்டப்பட்டு எழுதின குரூப் எக்ஸாம்ல பாஸ் ஆகலனதும் நான் வேலைக்குப் போற ப்ளான் எடுத்துட்டேன்ல. கூடவே இந்த எக்ஸாம் சென்ட்ரல் கவர்மெண்ட் வேற, நாட்ல எல்லாரும் எழுதுவாங்க. சோ நம்பிக்கை இல்லாம எழுதினேன். அப்புறம் மொத்தமா மறந்துட்டுட்டேன்”
“ப்ரீலிம்ஸ் ரிசல்ட் பார்த்து எனக்கு ஷாக், எழுதலாமா வேண்டாமான்னு ரொம்ப குழப்பம். சரி பாஸ் ஆனதுக்கு எழுதுவோம்னு மெயின்ஸ் படிச்சு எழுதினேன். எல்லா எக்ஸாமுக்கும் போட்ட அதே எஃபர்ட் போட்டேன். மத்தது கிடைக்கல, இது அதிசயமா கிடைச்சிடுச்சு. இன்னிக்குத்தான் மெயில் வந்துச்சு டாகுமெண்ட் வெரிஃபிகேஷனுக்கு”
“மெயின்ஸ் ரிசல்ட் வந்தப்போ என்கிட்ட சொல்லியிருக்கலாமே?” உதயா கேள்வியாக இழுக்க,
“இது மாதிரி பாஸ் ஆகி கடைசிவரைக்கும் டாகுமெண்ட் வெரிஃபிகேஷன் நடக்காம, அந்த எக்ஸாம் வேகன்சியைக் கம்மி பண்ணிருக்காங்க. அதனால என் சோகம் என்னோட போகட்டும்னு சொல்லல.. இப்பவும் எனக்குப் பெரிய சந்தோஷமில்லை. ஆனா, என் மேல ரொம்ப நம்பிக்கை வச்ச என் தாத்தாவுக்காகவும், நான் எதுவுமே இல்லாம இருந்தாலும் என்னை அப்படியே ஏத்துக்கிட்ட உனக்காகவும் நான் எதாவது பெருசா செய்யணும்னு தோணிச்சு” என்றவன்,
“தேங்க்ஸ்” என்று உதயாவின் கைப்பற்றினான்.
முன்பே இந்த வெற்றி வந்திருந்தாலும் லாலாவிற்கு இப்படியொரு பக்குவம் வந்திருக்குமா என்று தெரியாது. நிச்சயம் இருக்காது என்று அவனுக்கு நிச்சயம். இப்போது ஒரு தேர்வு வாழ்க்கையின் முடிவை மாற்றாது என்ற மிகப்பெரிய பாடத்தைக் கற்றியிருந்தான்.
“எல்லாம் உங்க முயற்சி, நான் என்ன செஞ்சேன் லாலா. உங்களுக்கு இது முன்னாடியே கிடைக்க வேண்டியது, இப்ப கிடைச்சிருக்கு. ஆனா, பாவம் வேலைக்கும் போய் படிச்சு, செம லாலா நீங்க” என்று உதயாவுக்கு அத்தனை மகிழ்ச்சி.
அதுவும் தேர்வின் முடிவு வரும் முன்னே குழந்தை விஷயம் தெரிந்தாலும் கூட நம்பிக்கையாகவும் முதிர்ச்சியாகவும் அவன் நடந்திருக்க, உதயாவிற்கு அத்தனை சந்தோஷம். லாலா மிகுதியாக பக்குவப்பட்டிருந்தான்.
“வீட்ல சொல்லணுமே” என்று உதயா உற்சாகமாக சொல்ல,
“வீட்ல சொல்லுவோம், வெரிஃபிகேஷன் முடிஞ்சு போஸ்டிங் வந்ததும் சொல்வோம் உதயா.” என்றான்.
அதன்படியே அவனுக்குச் சென்னையில் பணி கிடைத்திருக்க, மூன்று மாதங்கள் அவனுக்குப் பயிற்சி இருந்தது. அதுவும் NADT இன் தென்னிந்திய பிரிவு சென்னையிலும் இருக்க, வெளியூர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
எல்லாம் உறுதியான பின், முதலில் சக்திக்கு அழைத்தான் லாலா. அவனிடம் விஷயத்தை சொல்ல,
“டேய் மச்சான்! எவ்வளவு பெரிய விஷயம்டா?” என்றவனுக்குக் குரல் கரகரத்தது. பல நாள் சக்தி வருந்தியிருக்கிறான், தான் நண்பனை அப்போதே தன்னோடு படிக்க அழைத்திருக்க வேண்டுமோ, இப்படி கஷ்டப்படுகிறானே என்று மனத்தினுள் மறுகி, சரோஜினியிடம் புலம்பியிருக்கிறான்.
“ஃபீல் பண்றியாடா மாப்ள?” லாலா நம்பாமல் கேட்க,
“அதெல்லாமில்லை, இனிமே நீயே என் செலவையெல்லாம் பார்த்துப்ப தானே? எப்போ ட்ரீட் தர?” என்று தன்னுணர்வை மறைத்துப் பேச,
“நடிக்காத நாயே! நீ ஃபீல் பண்றனு தெரியுது.” என்றான் லாலா.
“பின்ன, என் லாலா இத்தனை வருஷம் கழிச்சு, இவ்வளவு பெரிய போஸ்ட், அதுவும் சுதந்திர விலாசத்து வரலாற்றுல, சென்ட்ரல் கவர்மெண்ட் ஜாப். எனக்கு எவ்வளவு பெருமையா இருக்குத் தெரியுமா?” என்றவன்,
“நம்ம ராஜாண்ணன்ட்ட சொல்லி பெரிய ப்ளக்ஸ் அடிக்கணும். எவ்வளவு பேசியிருப்பானுங்க” என்று சொல்ல,
“டேய், டேய் அதெல்லாம் பண்ணிடாதடா” என்ற லாலா, அடுத்து தாத்தாவிற்கு அழைத்தான். திலகர் பட்டன் செல்பேசி வைத்திருக்கிறார்.
“அதென்ன ஃப்ர்ஸ்ட் வீட்ல கூட சொல்லாம சக்திண்ணா கிட்ட?” உதயா கணவனை குறுகுறுவென பார்க்க,
“பொறாமை பேட் ஹேபிட் உதயா” என்றான் சிரிப்பை அடக்கி.
“அய்யோடா!” என்று அவள் உதட்டினை சுழிக்க,
“பின்ன இல்லையா? சக்தியும் உன்னை மாதிரி என்னை எனக்காக ஏத்துக்கிட்டவன். என்னோட நிறைய ப்ரண்ட்ஸ் என்னோட முன்னாடி மாதிரி பழகுறதில்லை. சிலரை விட்டு நான் விலகிட்டேன், சிலர் என்னை விலக்கிட்டாங்க. ஆனா என்னை எப்போவும் ஒரு ஃபெயிலியரா சக்தி நினைக்க விட மாட்டான். அதான் அவன் கிட்ட சொன்னேன்.” என்றவர் திலகரிடம் விஷயத்தை சொல்ல,
“எனக்கு அப்பவே தெரியும்டா லாலா. உங்கப்பந்தான் என்னை நம்பாம புலம்பிட்டு இருந்தான், என் பேரன் எப்படி கஷ்டப்பட்டான்னு எனக்குத் தெரியாதா? தாத்தாவுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா ராசா? அதுவும் மத்திய அரசு வேலை… அந்த லட்சுமணன் வீட்ல கூட யாருமில்லை” என்று பக்கத்து வீட்டை இழுக்காமல் இல்லை.
அடுத்து அப்பா, அம்மா, சித்தி, தங்கை சரோஜினி என்று எல்லாரிடமும் பேசியவன், சித்தப்பாவிடம் சொல்ல, சித்ரஞ்சன் நேரிலே வந்து வாழ்த்திவிட்டு சென்றான்.
சித்ரா வேறு, “எல்லாம் என் பேரப்புள்ள வரப்போற ராசி” என்று பெருமைப்பட்டார். மனம் அவரின் கனவு நிஜமானதில் கண்ணீர் வந்தது.
அந்த ஒரு மகிழ்ச்சியே மகன் இனி மருமகளை விட குறைவில்லை என்ற எண்ணத்தைத் தர, உதயாவை நல்லவிதமாக நடத்தினார். உதயா அப்படி நினைக்க மாட்டாள் என்ற எண்ணமெல்லாம் வரவில்லை.
லாலாவின் வாழ்க்கை அவன் எதிர்ப்பார்த்தது போல இல்லை என்றாலும், அவன் முயற்சிகளும், தவறான முடிவுகள், சரியான மாற்றங்கள் என்று எல்லாம் சேர்ந்து அவனுக்கானதை அவனுக்குக் கொடுத்திருந்தது.
நமக்கானது நம்மைச் சேரும். பிரபஞ்சத்தின் உன்னதம் அது!