Skip to content
Post Views: 61
வேளை 28(1)
“ஏன்னா லாலா ரொம்ப நல்ல பையன், யாருக்கும் கெடுதல் நினைக்க மாட்டீங்க, யாரையும் தப்பா பேச மாட்டீங்க. மனசுல ஒன்னு வச்சிட்டு வெளியே நடிக்கத் தெரியாது. என் மேல பாசமா இருக்கீங்க, வேறென்ன வேணும் லாலா?” உதயா உருக்கமாக அவன் கண் பார்த்து கதைக்க, அவனோ,
“அப்போ காசு, டப்பு, துட்டுல்லாம் வேண்டாமா?” என்றதும் அவள் முறைத்தாள்.
இதானே அவன் பிரச்சனை. சில நேரம் எதை எப்போது பேச என்று தெரியாது. அந்த குணம் சில நேரம் எரிச்சல் கொடுத்திருந்தாலும், அவனது இயல்பெதார்த்தம் உதயாவை ஈர்க்கவே செய்யும்.
Advertisement
“முறைக்காதீங்க மேடம்! நான் பெருசா சம்பாரிக்கல” என்றவன் வாயில் அடித்தவள்,
“சம்பாரிக்கிறீங்க, பெருசா இன்னும் பெரிய பொசிஷன் போனா சம்பாதிக்கலாம். யாரையும் ஏமாத்தாம, சொந்த கால்ல நிக்குறீங்க. ஏன் லாலா உங்களை எப்பவும் அண்டர் எஸ்டிமேட் பண்றீங்க?” என்று உதயா ஆதங்கமாகக் கேட்டாள்.
பின்னே உறக்கம் விட்டு உயிரைக் கொடுத்து அவனுக்கு ஊக்கப்பேச்சுக் கொடுத்திருக்க, மீண்டும் அவன் பழையபடி பேசினால், அவளுக்கும் கோபம் வரும்தானே?
Advertisement
“மனம் ஒரு குரங்கு உதயா”
Advertisement
“அதுக்கு?”
“அதான் தாவிட்டே இருக்கு. அதுவும் என் மனசு ஒரு ஆக்டிவான்னா குரங்கு.” என்றதும் உதயா சிரித்துவிட்டாள்.
அவள் கன்னத்தை ஆசையாகக் கிள்ளியவன்,
“நீ சிரிக்கிறப்போ நிஜமாவே நிலாதான்! அவ்வளவு அழகா இருக்கடி” என்று கண்களால் களவு செய்தவன், சொற்களால் ஆராதித்தான்.
Advertisement
“அம்மா பேசினதுக்கு சாரி உதயா..” என்று மீண்டும் அவன் சொல்ல,
“அட! எத்தன சாரி, இப்படி ஃபீல் பண்ணினா பேசாம அவங்களைப் பேசிடவா?” என்று சிரிப்பை அடக்கிக் கேட்க, அவன் விழித்தான்.
“பின்ன என்ன? அவங்க பேசினா எல்லாம் ஃபீல் பண்ணக்கூடாதுனு என் குரங்குக்கு சொல்லி வச்சிட்டேன்” என்றதும்,
“ஆஹான்..” என்று சொல்லை இழுத்தவன், சொல்லியவளையும் தன் வசம் இழுத்தான். இழுத்தவனை உதயா இறுக்கிக்கொள்ள, மனத்தின் இறுக்கங்கள் எல்லாம் கட்டவிழ, தன் வசம் வந்தவளின் வசமானான் லாலா.
அவளின் அருகாமை கொடுத்த நெருக்கத்திலும் மயக்கத்திலும், முத்தமிட ஆவலாகக் காத்திருந்தன அவன் இதழ்கள்.
அந்த காத்திருப்பைப் பூர்த்தி செய்யும்வண்ணம் உதயா நெருங்கிவர, முத்தங்கள் நீள,
“உதயா…கட்டிக்கவா?” என்று அவன் அனுமதி வேண்ட, உதயா கட்டிக்கொண்டதில் அவன் கட்டுப்பாடுகள் இன்னொருமுறை கட்டவிழ்ந்தன.
வெகுநாட்கள் கழித்து ஒரு மெய்த்தொட்டு பயிறல். இருவருக்கும் சுகமான பயணம். இரவோடு கதைத்து, களைத்தனர்.
அடுத்த நாள் காலை லாலா சீக்கிரமே எழுந்துவிட்டான். எழுந்தவன், சமையலறை சென்று தேநீர் வைத்தான்.
சித்ரா எப்போதும் விரைவாக எழுபவர் அன்றும் எழுந்துவிட, பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டு சமையலறைக்கு வர, மகனைக் கண்டு திகைத்தவர் பின் இயல்பாகிவிட்டார்.
ஊரிலே மனைவிக்கு டீ கலந்தவன் ஆகிற்றே. அவருக்கே யார் மீது கோபம் என்று தெரியவில்லை. தனக்கு இது போல் செய்யாத கணவன் மீதா, இல்லை பிள்ளை மீதா? நியாயப்படி அவர்கள் இருவர் மீதும் கோபம் கொள்ள வேண்டும், ஆனாலும் ஏன் உதயாவைப் பேசினார் என்று அவருக்கே தெரியவில்லை.
பெரிய விஷயமில்லை. பதில் பேச மாட்டாள் என்ற மிதப்பு.
“எந்திரிச்சிட்டியா மா, நல்லா தூங்கினியா?” லாலா இயல்பாக விசாரிக்க,
“ஏண்டா, என்ன செய்ற?” என்று அவனைத் திருப்பிக் கேள்விக் கேட்டார்.
“டீ போடுறேன்மா” என்று லாலா சொல்ல, அவரால் உள்ளக்கடுப்பை அடக்க முடியவில்லை.
“ஏன் டா ஒரு நாளாச்சும் எனக்கு நீ போட்டுக்கொடுத்திருப்பியா? உங்களுக்கு எல்லாம் அம்மான்னா இளக்காரம்தான் டா” என்று மகனை காலை வேளையில் கருணையின்றி குத்தினார்.
“தப்புதான் மா” என்று உடனே ஒத்துக்கொண்ட லாலா, லாகவமாக இஞ்சியைத் தட்டிக் கொதிக்கும் நீரில் போட்டான். ஏலக்காய்த் தூள், சர்க்கரை , தேயிலைத் தூள் எல்லாம் சேர்த்து கொதிக்க விட்டான்.
பின் அடுப்பைக் குறைத்து வைத்தவன் அம்மாவிடம்,
“உன் மருமகன் சக்தி இருக்கானே அவன் ரொம்ப வருஷமா வீட்ல சமைப்பான். இப்போ அதே பழக்கத்துல உன் பொண்ணு, அதாவது என் தங்கச்சிக்கும் சமைச்சுத் தருவான். நீ என்ன செய்வ, நான் தண்ணிக் கேட்டாலும் கூட சரோவைத் தர சொல்லுவ, ஆம்பிள புள்ளைன்னு என்னை அடுப்படி பக்கம் வர விட மாட்ட.. சித்தப்பா சித்திக்காக எதாச்சும் செஞ்சாலும் உனக்கும் ஆத்தாவுக்கும் ஒப்பாது”
“இப்போ நான் உதயாவுக்குச் செய்யாம யாருக்கு செய்யப்போறேன்? நீ சொல்லுவியே லட்சத்துல சம்பள வாங்குற கொழுப்புன்னு, அந்த கொழுப்புக்கு வர அவ அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கா, பதினாலு மணி நேரம் கூட சில நேரம் வேலை இருக்கும். கண்ணு எரியும், கால் குடையும். முதுகு உடையும், என்னமோ நான் அவளுக்கு அறுசுவை விருந்தா சமைச்சுத் தரேன், அரை டம்ளர் டீ. இதெல்லாம் நீ சொல்லிக்கொடுத்து வளர்த்திருக்கணும்”
“இல்லையா நான் பொறுப்பா இருக்கேன்னு சந்தோஷப்படணும். அதைவிட்டு இதை தப்புனு சொல்ற, உன் மருமக ஊர்ல இருக்க மருமக விட நல்லவ, பொறுப்பானவ. அதனால அவளை நீ லேசா நடத்துற. அவ கண்டுக்க மாட்டா, ஆனா நான் எதிர்ப்பார்ப்பேன். நீ அவகிட்ட நல்லா நடக்கணும்னு” என்றவன் பாலைக் கலந்து கொதித்து வரவும் வடிகட்டி அம்மாவிடம் நீட்டினான்.
“உன் புள்ள போட்ட டீ, குடிச்சிட்டு சொல்லும்மா” என்று உடனே வேறு ஒரு பாவனையில் பேசியவனை விழியகற்றாது பார்த்தார் சித்ரா.
வாஞ்சி நாதன், உதயா எழுந்துவர அவர்களுக்கும் தேநீர் கொடுக்க, வாஞ்சி நாதனுக்கு அது மகன் போட்ட டீ என்று தெரியாது. லாலாவும் சொல்லவில்லை.
ஆனால் ரசித்துப் பருகினார்.
லாலா அம்மாவிடம், “மா, எனக்குக் கெண்டை மீன் குழம்பு சாப்பிடணும் போல இருக்கு. வாங்கிட்டு வந்தா நீ செய்வியா இல்லை என் பொண்டாட்டியை வேலை வாங்காம உன்னை வாங்குறேன் சொல்வியா?” என்று கேட்க, சித்ரா முறைத்தார்.
“ஏண்டா நான் உனக்குப் பிடிச்சதை செய்ய மாட்டேனா, இப்படி பேசாத” என்றார் வருத்தமாக.
“சரி சரி ஃபீல் பண்ணாத” என்றவன்,
“உதயாவுக்கு உன் அளவுக்குச் சமைக்க வராது. அதுவும் நான் வெஜ் சுத்தம், எனக்குத் தெரிஞ்சா அவளைப் பேசலாம். எனக்கே தெரியாதப்ப அவ போடுறதை சமத்தா சாப்பிடணும்தானே?” என்று கேட்டவனை இவன் நல்லவனா கெட்டவனா என்னும் விதமாக பார்த்தார் சித்ரா.
காலை உணவுக்கு உதயா பொங்கல், தேங்காய்ச் சட்னி செய்திருந்தாள். லாலா மீன் வாங்கி கொடுத்துவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டான். பத்து மணிக்கு அவளுக்கு லாகின் இருக்க, சித்ரா அவளிடம்,
“நீ குளத்து மீன் சாப்பிடுவதானே?” என்று விசாரிக்க,
“எனக்கு மீன்ல அதெல்லாம் தெரியாதுத்த, நீங்க எப்படி செஞ்சாலும் ஓகே” என்றாள்.
இந்த பேச்சைக் கேட்ட வாஞ்சி நாதன்,
“அப்படி இல்லைம்மா, லாலா அவனுக்குப் பிடிக்கும்னு வாங்கியிருக்கான். உனக்கு என்ன பிடிக்கும்னு உங்கத்த கேட்கிறா” என்றார்.
“எனக்கு சாப்பாட்டுல அப்படியெல்லாம் இல்லை மாமா. எது கொடுத்தாலும் சாப்பிடுவேன்” என்றவள் புன்னகையோடு
“மீட்டீங் இருந்தா மட்டும் வர மாட்டேன் அத்த, எதாவது வேணும்னா கூப்பிடுங்க. இப்போ லாகின் பண்ண டைமாச்சு, வரேன் மாமா” என்று அறைக்குள் புகுந்தாள்.
அதனைக் கேட்ட சித்ராவுக்கு என்னமோ போலாகிவிட்டது. வாஞ்சி நாதன் இயல்பாக டீவி பார்த்தார். சித்ராவுக்கோ, லாலா சொன்ன வார்த்தைகள் ரீங்காரமிட்டன.
இந்த பெண்ணுக்குப் பிடித்த உணவென்று ஒன்றுமில்லையா? யோசித்துப் பார்த்தால் அவர் திருமணமாகி சரோஜினி பத்தாம் வகுப்பு படிக்கும்வரை அவரின் அப்பா உயிரோடு இருந்தார், அம்மா இன்றும் இருக்கிறார். அப்படி இருக்க, உதயாவின் நிலை மோசம்தானே? என்று யோசித்தவர் பெரிதாக ஒன்றும் பாசத்தைக் கொட்டவில்லை. ஆனாலும், பதினொரு மணி போல அவளுக்கு அவர்கள் வாங்கி வந்த பழங்களில் இருந்து பழச்சாறு தயாரித்துக் கொடுத்தார்.
அறைக் கதவைத் தட்டியபடி வாசலில் நிற்க, கதவு ஒருக்களித்திருந்தது. உதயாவுக்கு ஆள் வந்து நிற்கும் அரவம் கேட்க, எழுந்து வந்தாள்.
“இந்த ஜூஸைக் குடிச்சிடு” என்று சித்ரா நீட்ட, உதயாவுக்கு அதிர்ச்சி இல்லை. ஊரில் சித்ரா உணவுக்கெல்லாம் குறை வைத்தது இல்லை. அதனால் இயல்பாக வாங்கியவள்,
“உங்களுக்கு, மாமாவுக்கு?” என்று கேட்க,
“உங்க மாமா இப்போ டீதான் குடிப்பார். எனக்கும் ஜூஸெல்லாம் இறங்காது. நீ குடி, நான் டீ போட்டுக்கிறேன்” என்றவர்,
“மீன் வறுக்க எண்ணெய் வேணும், எங்க வச்சிருக்க?” என்று கேட்க, சித்ரா கொடுத்த பழச்சாறை மேஜை மேல் வைத்துவிட்டு அவரோடு சமையலறை சென்றாள். சித்ரா கேட்ட பொருட்களையெல்லாம் எடுத்துக் கொடுத்துவிட்டு மீண்டும் வேலையில் ஆழ்ந்தாள்.
மாலை லாலா வந்தவன் அம்மாவுக்குப் பிடிக்கும் என்று தேங்காய்ப் போலி, கார பணியாரம், பின் அவர் இதுவரை சுவைத்திடாத மோமோ, அத்தோ எல்லாம் வாங்கி வந்திருந்தான்.
சித்ராவுக்கு உள்ளம் நிறைந்தது. அவர் கணவர் கூட இப்படி அவருக்குப் பிடிக்கும் என்று எதுவும் வாங்கி கொடுத்ததில்லை. திண்பண்டம் வாங்கினாலும் பிள்ளைகளுக்கு என்று இருக்குமே தவிர மனைவியின் விருப்பம் அறிந்ததில்லை.
ஆனாலும் வழக்கமான வசனமாக, “ஏண்டா இவ்வளவு வாங்கிட்டு வந்திருக்க?” என்று பேச்சுக்கு சொன்னார்.
“ஏன்மா நம்ம ஊர்ல இதெல்லாம் வாங்க டவுனுக்குப் போகணும், அங்கேயும் எல்லாம் கிடைக்காது! அதான் வாங்கிட்டு வந்தேன்” என்றான் லாலா.
அவனது வேலைக் குறித்து வாஞ்சி நாதனும் ஒன்றும் கேட்கவில்லை. அவரின் கனவு நிறைவேறாத வருத்தமா இல்லை மகனின் விருப்பம் என்ற புரிதலா என்பது புதிராக இருந்தாலும், லாலா அதனைக் கேட்கவில்லை.
சில நேரம் சில பதில்களைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பது நல்லதுதானே?
மாலை சிற்றுண்டியை லாலா பெரிதாக உண்ணவில்லை. கொஞ்சம் ருசி பார்த்தான். இவர்கள் தேநீர் பருகியபடி சிற்றுண்டு உண்ண, உதயாவின் அம்மா உமா அழைத்திருந்தார். மகளிடம் பேசியவர் சம்மந்தியிடம் மரியாதை நிமித்தம் பேச கேட்க, உதயா மாமியாரிடம் கொடுத்தாள்.
சித்ரா உதயாவிடம் எப்படி நடந்தாலும் உமாவிடம் பண்பாகவே பேசினார். அதில் உதயாவுக்கு நிம்மதி. லாலாவும் புன்னகைக்க,
மகனுக்காக சித்ரா இரவு மீண்டும் சூடாக சோறு வைத்திருந்தார்.
லாலா வெகு நாட்களுக்குப் பிறகு அம்மாவின் கையால், அவனுக்குப் பிடித்த மீன் குழம்பை ரசித்து உண்டான். அந்த நாள் இனிதே நிறைந்தது.
அடுத்த நாள் மதியம் அவர்களுக்கு ரயில் இருக்க, பெரிதாக சுற்றிப்பார்க்க நேரமில்லை.
“அம்மா, அடுத்தத் தடவ ஒருவாரம் தங்கற மாதிரி வாம்மா” என்று லாலா சொல்ல,
“எங்கடா ஊர்ல, உங்காத்தா, தாத்தாவை எல்லாம் பார்க்கணுமே. கூடவே ஆடு கிடக்கு, மாடு கிடக்கு” என்று சித்ரா புலம்ப,
“நான் சித்தியைப் பார்த்துக்க சொல்றேன் மா” என்று பேசி, அவர்களை ரயில் ஏற்றிவிட்டே அன்று வேலைக்குச் சென்றான் லாலா. மதியம் சென்றதால் நள்ளிரவு வரை அவனுக்கு ஷிஃப்ட் இருந்தது.
நள்ளிரவு வேலை முடிந்து அவன் வீடு வந்து சேர, உதயா உறங்கியிருந்தாள். அவனிடமிருந்து சாவி கொண்டு வீட்டைத் திறந்தவன் அலுப்புத் தீர குளித்து வந்தான். உடனே அவனுக்கு உறக்கம் வரவில்லை. அடுத்த நாள் ஒன்பது மணிக்கு வேலை, ஆகையால் உறங்கியாக வேண்டும்.
இருந்தாலும் உறக்கத்திற்கு செல்லாமல் பொழுதுபோக்க வேண்டி அலைப்பேசியை எடுத்தான். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்த்தவன் கவனத்தை ‘ முதல் நிலைத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின’ என்ற பதிவு எதையோ யோசிக்க வைத்தது.
அவன் நான்கு மாதம் முன் எழுதிய தேர்வு. அதன் முதல் நிலை முடிவுகள் வந்திருக்க, சரி பார்ப்போமே என்ற எண்ணத்தோடு மெயிலில் அவனது பதிவெண்ணைத் தேடி, முடிவுகளைப் பார்த்தான்.
முடிவினைப் பார்த்தவனுக்கு வந்த உறக்கம் அப்படியே காணாமல் போனது. முதல் நிலைத் தேர்வில் லாலா தேறியிருந்தான், ஆனாலும் சந்தோஷமில்லை. ஏற்கெனவே இப்படி தேர்வாகி அடுத்தக் கட்டத்தில் தோற்று சலித்துப் போயிருந்தான்.
அதனால் அதை உதயாவிடம் கூட பகிரவில்லை. மீண்டும் அந்த கனவில் கை வைக்க அவனுக்கு எண்ணமில்லை.
error: Content is protected !!