அரங்கேற்ற வேளை – 28(3)
வேளை 28(3)
“இது மட்டும் நான் இல்லை, இதுவும் கூட நாந்தான்”
அந்த அறையில் போடப்பட்டிருந்த மேடையில் வெள்ளை சட்டை, கறுப்பு காற்சட்டை அணிந்து கண்களில் கண்ணாடியோடு மிடுக்கோடு நின்றான் லாலா லஜபதி ராய். அதே இடத்தில் ஒரு ஆசிரியராக அவன் இருந்திருக்கிறான், இன்று அரசு அதிகாரியாக இருக்கிறான்.
எதிர்காலம் குறித்த பயத்தோடு அந்த மேடையில் இருந்தவன், இன்று எதிரில் நிற்கும் மாணவர்களுக்கு ஊக்கப்பேச்சுக் கொடுக்க வந்திருந்தான்.
Advertisement
மேடையின் பின்னே இருந்த திரையில் லாலா அகாடமியில் சேர்ந்த புதிதில் எடுத்த புகைப்படம், பின் அவன் வேலைக்குச் சென்றபோது உள்ள படம். ஆவணங்கள் சரி பார்க்க சென்ற நாளின் படம், வேலைக்கு முதல் நாள் சென்ற புகைப்படம் என்று எல்லாம் காட்டப்பட்டது.
“எஸ், அக்சுவலி நான் ப்ரிலிம்ஸ் ரிசல்ட் வரதுக்கு முன்னாடி ப்ரிபேரேஷனைக் க்வுட் பண்ணிட்டேன். வேற ஜாப் சேர்ந்துட்டேன், ப்ரீலிம்ஸ் க்ளியர் பண்ணினதால மெயின்ஸ் எழுதி இந்த போஸ்ட் வந்தேன். அதனால நீங்களும் வாங்கிடலாம்னு எல்லாம் பொய் சொல்ல மாட்டேன்”
ஒரு நொடி மாணவர்கள் எல்லாம் அவனை அதிர்ச்சியாக, அதிருப்தியாக பார்த்தனர். சிலரோ ‘வாய் வைக்குறான் பாரு. இவன் மட்டும் ஆபிஸர் ஆகிட்டான், நம்ம ஆகக்கூடாதா’ என்று பொறுமினர்.
Advertisement
“என்ன சைலண்ட் ஆகிட்டீங்க? நானும் உங்களைப் போல என்னடா இப்படி நெகடிவ்வா பேசுறானுங்கனு சிலரை நினைச்சிருக்கேன். பாசிட்டிவா பேசுறதுக்கும் ப்ராக்டிகலா பேசுறதுக்கும் வித்தியாசமிருக்கு”
Advertisement
“உங்களுக்கு பணக்கஷ்டம் இல்லை, உங்களைப் பார்த்திருக்க அளவு உங்ககிட்ட வசதியிருக்குன்னா நீங்க எத்தனை வருஷம் வேணும்னாலும் படிக்கலாம். ஆனா, அது இல்லைன்னா இந்த மாதிரி எக்ஸாம், ஸ்டேட், சென்ட்ரல் எக்ஸாம்ஸ் எதுவானாலும் ஒரு மூணு வருஷம் வச்சிக்கோங்க, ப்ளான் பி வச்சிக்கிறது தப்பே இல்லை”
“நீங்க பாஸானாதான் உங்களை எல்லாரும் நம்புவாங்கன்னு மட்டும் நினைக்காதீங்க. முடிஞ்சளவு முயற்சி போடுங்க. நூறு பேர் ஒரு பஸ்ல போக முடியும்னா நூத்தியோறாவது ஆள் எவ்வளவு நினைச்சாலும் ஏற முடியாது. அப்படித்தான் இப்ப போட்டித் தேர்வுகளும். நீங்க போட்டி போடலாம், அது மாதிரி எல்லா போட்டிகள்லையும் தோல்வி, வெற்றி ரெண்டுமே இருக்கும். ரெண்டையும் ஒரே மாதிரி எடுத்துக்கணும்”
“இவ்வளவு வெளக்கெண்ணையா பேசுற எனக்குமே இப்படி பேசுற பக்குவம் வர ஏழு வருஷம் ஆகிடுச்சு. கூடவே இந்த பக்கம் வர வேண்டாம்னு நினைச்சு வேற வேலைக்குப் போய், அதுல பெஸ்ட்டா இருக்க நினைச்சேன்”
Advertisement
இப்போது மாணவர்களிடையே அவன் பேச்சைக் கேட்கிற சுவாரசியம் கூடியது.
“இங்க வர எல்லாரும் படிச்சா பாஸாகிடலாம் சொல்வாங்க, எஸ் கண்டிப்பா பாஸாகலாம். ஒருவேளை ஆகலனாலும் நீங்க படிக்கலன்னு அர்த்தமில்லை. இந்த உலகத்துல நம்மை மீறின விஷயங்கள் நிறைய இருக்கு, நீங்க எக்ஸாமுக்குப் படிக்கிற பயணமே உங்களுக்குப் பெரிய பாடமா இருக்கும்.” என்று சொல்ல,
“அப்புறம் ஏன் சார் நீங்க ஜாப் விட்டு எக்சாம் எழுதுனீங்க?” என்று மாணவன் கேட்க,
“பிகாஸ் ப்ரீலிம்ஸ் பாஸ் பண்ணிட்டேன், நான் ஜாப் போனதும் வந்த ரிசல்ட், ஒருவேளை இது எனக்கான வாய்ப்பா இருந்தா, நான் எதையும் விடக்கூடாதுனு நினைச்சேன், அதுவும் இது முன்னாடியே எழுதின எக்ஸாம்” என்றான் லாலா.
“ஒருவேளை நீங்க பாஸாகாம இருந்திருந்தா”
“இங்க நின்னுருக்க மாட்டேன். என் ஃபீல்ட்ல எதாவது பெஸ்டா பண்ணி டெட் டாக்ஸ் கொடுத்திருப்பேன்” என்றான் நம்பிக்கையாக.
“ஒரு தேர்வு உங்க வாழ்க்கையைத் தீர்மானிக்க கூடாது! Life is worth fighting for அப்படினு ஹெமிங்க்வே சொல்லியிருக்கார். சோ ஃபைட் பண்ணுங்க, தோத்தா மறுபடி செய்ங்க. வரலன்னா விட்டுடுங்க, லெட் இட் கோ! அது உங்களுக்கான க்ரவுண்ட் இல்லை, வேற இடத்துல மறுபடி ஃபைட் பண்ணுங்க. இவ்வளவு நேரம் மொக்க போட்டதுக்கு சாரி”
“நல்லா படிங்க. மோட்டிவேஷன் எல்லாம் ஜெயிச்சவங்க கொடுக்கிறதுதான், டிசிப்ளின் இருந்தா போதும். செய்றதை சிறப்பா செய்ங்க, உங்களுக்கானது உங்ககிட்ட நிச்சயம் வரும்!” என்று அவன் நம்பிக்கையோடு சொல்ல, மாணவர்கள் கைத்தட்டினர்.
“டேய் ராய்! என்னடா அநியாயத்துக்கு உண்மைப் பேசுற?” என்று அவனோடு முன்பு பணி செய்த நண்பன் கேட்க,
“பின்ன என்ன மச்சான்? நம்மளும் இப்படி நம்பிக்கையோட வந்தவங்க தானே?” என்று லாலா சொல்ல,
“உனக்கென்னடா ஜம்முனு இன்கம் டேக்ஸ்ல சேர்ந்துட்ட, அப்புறம் ஏன் சலிச்சுக்கிற” என்றான் அவன்.
அந்த நண்பன் இன்றும் அங்கேயே மென்டாராக இருக்கிறான். யூ டூப் சேனல் ஒன்றிலும் பாடம் எடுக்கிறான். அது அவன் வாழ்க்கை, அவனது வழி.
ஆனால் நண்பன் சொல்வது போல லாலா இந்த நிலைமை வர அவனோடு அவன் செய்த போராட்டங்கள் பல. அதெல்லாம் எல்லாருக்கும் புரியாது.
புரியவும் வேண்டாம்.
அந்த அகாடமியின் தலைவர் லாலாவிடம் வந்து,
“குட் ஸ்பீச் லாலா, இப்படித்தான் ப்ராக்டிலா பேசணும். நிறைய இன்ஸ்ட்டியுட்ல பொய்யான மோட்டிவேஷன் கொடுத்து ஏமாத்துறாங்க” என்றார்.
“ஆமா சார்” என்ற லாலாவின் மனமோ,
‘யோவ், நீயே அப்படித்தானே பண்ணுவ. இங்க படிக்க வந்த என்னைப் பேசி கரைச்சு இங்கயே பாடம் எடுக்க வச்ச, நீ மட்டும் ரெண்டு ப்ராஞ்ச் ஆரம்பிச்சு லட்சம் லட்சமா சம்பாதிக்குற. இருய்யா ஒரு நாள் உன் வீட்ல ரெய்ட் வரேன்’ என்று மனத்தினுள் திட்டினான்.
லட்சக்கணக்கான மாணவர்களின் கனவுகள், சிலருக்கு லட்சக்கணக்கில் கல்லா கட்டும் தொழிலாக உள்ளது சோகம்.
அங்கிருந்து நேரே அவன் அலுவலகம் சென்ற லாலா வீடு போய் சேர, அவன் மனைவியும் மகனும் குடியிருப்புப் பகுதியில் உள்ள பூங்காவில் இருந்தனர்.
அப்பாவைப் பார்க்கவும்,
“அப்பா” என்று லாலாவிடம் ஓடினான் மகன்.
“டேய் தாகூர்! என்ன ஒரே ஆட்டமா?” என்று மகனைக் கொஞ்சியவன் பார்வை மனைவியை நேசமாக பார்த்தது.
உதயா அவனது கையிலிருந்த பையை வாங்கிகொள்ள, மகன் லாலாவின் வசமிருந்தான். லாலா அரசு அவனுக்கு ஒதுக்கிய குடியிருப்பில் இருந்தான்.
இருவரும் முதல் தளத்தில் உள்ள வீட்டிகுப் படியில் செல்ல,
“எப்படி இருந்துச்சு என் ஸ்பீச்?” என்று அவன் பேசிய காணொளி வெளியானதுக் குறித்துக் கேட்க,
“சூப்பரா இருந்துச்சு. நம்ம குரூப்ல போட்டேன். சரோ ஷாக் எங்கண்ணனா இதுன்னு, தாத்தா ரொம்ப சந்தோஷப்பட்டார்” என்று உதயா சொல்ல,
“எல்லாம் பேக் பண்ணியாச்சா உதயா?” என்று லாலா கேட்க, அவள் முறைத்தாள்.
“எதாவது உளறினேனா என்ன? சரியாத்தானே பேசுறேன்” என்று அவன் குழம்ப, உதயா சிரித்தவண்ணம் வீட்டைத் திறந்தாள்.
“சொல்லும்மா” என்று அவன் கேட்க, மகன் தாகூரும் அப்பாவைப் போல் ‘சொல்லும்மா’ என்று ராகமிழுத்தான்.
“அடி வாங்க போறீங்க”
“உதயா! இது தப்பு, அவனை வேணும்னா அடி, நான் என்ன செஞ்சேன்” என்று சொல்ல,
“நல்லா சமாளிங்க, உங்க பையன் என்னை எந்த வேலையும் செய்ய விடாம பால் போடுனு பார்க் இழுத்துட்டுப் போய்ட்டான், வர்க் முடிஞ்சதும் முழுக்க அவனோட இருந்தேன். எங்க இருந்து பேக் பண்ண?” என்று கேட்டவள்,
“நீங்க சாப்பிட்டு இவனைப் பாருங்க, நான் அதுக்குள்ள பேக் பண்றேன்” என்றாள்.
நாளை காலையில் நால்வரும் ஊருக்குப் புறப்படுகிறார்கள். லாலாவின் இரண்டு வயது மகனுக்கு மொட்டையடித்துக் காது குத்துகிறார்கள். உதயாவின் அம்மா உமா காலை சென்னை வந்துவிடுவார். அவரோடு எல்லாரும் ரயிலில் பயணிக்கின்றனர்.
மூவரும் உணவு உண்டபின், லாலா மகனை உறங்க வைத்தான். மகன் பிறக்கும் முன் வேலையில் சேர்ந்திருந்தான். சில நாட்கள் லாலாவுக்கு வேலை அதிகம் இருக்கும். வீடு வரவே தாமதமாகும். உதயாவுக்கு வீடு, மகன், வேலை என்று எல்லாம் பார்க்க சிரமமாக இருந்தது. அலுவலகத்தில் விடுப்பு எடுத்திருந்தவள் மகனுக்கு ஆறு மாதம் ஆன பின்னே வேலையில் சேர்ந்தாள்.
உமாவும் பேரனுக்கு ஒரு வயது ஆகும்வரை மகளோடு வந்திருந்தார். அதன்பின் அவர் வேலைக்குச் சென்றுவிட, சித்ரா மாதத்தில் இருவாரம் வந்து போய்க்கொண்டிருக்கிறார்.
உதயாவை வேலையை விட வேண்டிதானே என்று மகனிடம் பேச்சுவாக்கில் ஒருமுறை சொல்லிவிட, லாலா கண்டித்துவிட்டான்.
‘உனக்கு என் மகனைப் பார்க்க இஷ்டமில்லன்னா விடும்மா. நீயாத்தானே அவனைப் பார்க்கணும்னு வர, இல்லைன்னா அவனை நாங்க ப்ளே ஸ்கூல்ல சேர்த்திடுவோம். எனக்கு சரியான வேலை இல்லாதப்போ அவதான் எனக்கு எல்லாம் பார்த்தா. இன்னிக்கு வேலை கிடைச்சிடுச்சுனு அவளை வேலை விட சொல்வியா?’ என்று கோபமாகப் பேசியிருந்தான்.
அதனை உதயாவிடம் கூட பகிரவில்லை. உதயாவின் வேலை அவளுக்கான கௌரவம், சந்தோஷம், உழைப்பு. ஒருவேளை வேலைக்குப் போக அவளுக்கே விருப்பமில்லையென்றால் சந்தோஷமாக மனைவியை ராணியாகப் பார்த்துக்கொள்வான். எதுவானாலும் அவளது விருப்பம்.
உதயாவின் காதலும் நம்பிக்கையும் மட்டுமில்லை என்றால், என்றோ வாழ்க்கையின் மீதான பிடிப்பை தான் இழந்திருப்போம் என்று லாலாவுக்கு அடிக்கடி தோன்றும். காதலையும் தாண்டி நன்றி என்ற உணர்வு மனைவியிடம் உண்டு. அதனை சொன்னால் அவள் ஏற்கமாட்டாள் என்பதால் சொல்லவில்லை.
மகன் உறங்கியதும் பாத்திரங்களைக் கழுவிப் போட்டவனுக்குச் சக்தியிடமிருந்து காணொளி அழைப்பு.
“அடடே! அழுக்குப் பாத்திரம் வெளக்குறாரா ஆஃபிசர்?” என்று சக்தி கலகலக்க,
“சார் அங்க என்ன செய்றாரு?” என்று திருப்பிக் கேட்க, சக்தியும் அங்குப் பாத்திரம் விளக்கினான்.
“சொல்லுடா”
“என்னடா நாளைக்குக் கிளம்பணும். எல்லாம் ரெடியா? நீ நீடாமங்கலம் வந்துட்டு சொல்லு, நான் கார் சொல்லியிருக்கேன், உன்னை அழைக்க வரேன்” என்றான் சக்தி.
“சரிடா, எங்க ஜான்சி ராணி என்ன செய்றா?” என்று தங்கை மகளைக் கேட்க,
“அடிங்க! எங்க அம்முக்குட்டியை உங்க வீட்டோட பெயர் சொல்லிலாம் கூப்பிட கூடாது” என்று செல்லமாக சடைத்தான் சக்தி. சுதந்திர விலாசத்துக்காரர்களுக்கு தன் மகளுக்கு பெயர் வைக்கின்ற உரிமையை அவன் கொடுக்கவில்லை.
சக்தி, சரோஜினியின் ஒரு வயது மகளின் பெயர் அமுதினி. அவளுக்கும் நாளை மொட்டை அடித்துக் காது குத்துகின்றனர்.
“போடா போடா, சரி சித்தப்பா வந்தாச்சா?” என்று சித்ரஞ்சனை விசாரிக்க,
“ஆஹ்ன் வந்துட்டுதான் டிஎஸ்பி மறுவேலை பார்ப்பார். எங்கத்தையும், பகத்தும் வந்தாச்சு. சாருக்கு ஸ்பெஷல் டியுட்டி, நாளைன்னைக்குக் காலையிலதான் வருவார். உங்க சித்தப்பனை விசாரிக்காம முதல் தாய் மாமனா வந்து சீக்கிரம் சேரு” என்ற சக்தி பாத்திரங்களை விளக்கி முடித்திருந்தான். லாலாவும் முக்கால்வாசி முடித்திருக்க, சக்தி சென்றதும் பாடல்களை ஒலிக்கவிட்டபடி அவன் வேலையில் கவனமாக இருந்தான்.
‘இரு பறவைகள்
மலை முழுவதும்
இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில்
இரு கனிகளும்
அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்
லலலலலலா லாலாலலலலா
லலலலலலா லாலாலலலலா’
ஜென்சியின் குரல் உயிரோடு பேசியது. லாலாலாஅலா என்று இன்னொரு இனிதான குரல் வர, திரும்ப நினைக்க முடியவில்லை. உதயா கணவனைப் பின்னிருந்து அணைத்திருந்தாள்.
“என்ன லாலா லாலாஅ பாட்டு பாடுறார்” என்று கேட்க,
“சக்தி பேசினான், அவன் போனதும் பாட்டுப் போட்டேன்” என்றவன், “பேக் பண்ணிட்டியா உதயா, இல்லை வரணுமா?” என்று கேட்க,
“எல்லாம் செஞ்சிட்டேன். காலையில குட்டிக்குப் பால், நமக்கு மதியம் சாப்பாடு டிரெயின்ல சாப்பிட எடுத்துக்கணும், எப்படியும் அவனுக்கு செய்யணும்ல.” என்றவள்,
“நாளைக்கு ஹால்ஃப் டே சொல்லிட்டீங்கதானே, நீங்க டிரைக்டா ஸ்டேஷன் வர மாதிரி இருக்கும் லாலா. லேட் பண்ணாதீங்க” என்றாள்.
லாலாவும் அதற்குள் பாத்திரங்கள் கழுவி முடித்தவன், “அதெல்லாம் வந்துடுவேன். நீ நகையை எடுத்து வச்சிட்டதானே?” என்று கேட்டான்.
சம்பளம் வந்ததும் முதன்முதலில் அம்மாவிற்கு வைரத்தில் மூக்குத்தி வாங்கிக் கொடுத்திருந்தான். சித்ராவுக்கு ஏக ஆனந்தம். அடுத்து தங்கைக்கும் மனைவிக்கும் சிறிய தோடு வாங்கித் தந்திருந்தான்.
இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்க, தங்கை மகளுக்குத் தங்க தோடும், சங்கிலியும் வாங்கியிருந்தான். உதயாவும் அவள் பங்கிற்கு சிறிய வைரத்தோடு வாங்கி இருந்தாள்.
உடை அவள் விருப்பம். தங்கை மகளுக்கு முழுவதும் தன் பணத்தில் செய்ய விரும்பியதால் அவன் ஆசையை உதயாவும் தடுக்கவில்லை.
“சரி, வாங்க. எனக்குத் தூக்கம் வருது. நான் தூங்குறேன்” என்று உதயா செல்ல, அவளின் களைப்பை உணர்ந்தவன்,
“நீ போ, நான் எல்லாம் செக் பண்ணிட்டு வரேன்” என்றான். அவள் செல்ல, பாடல் இன்னும் சமையலறையை நிறைத்தது.
‘இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்’
