Skip to content
Post Views: 184
அத்தியாயம் 19
ஆசையாக ரத்னாவிடம் இருந்து வந்த கடிதத்தை படித்த கண்ணன் மிகவும் வருத்தமாகிவிட்டார். அதில் இருந்த செய்தி அவரை வேதனைக்கு உள்ளாகியது.
Advertisement
அதில் ரத்னா வீட்டின் தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு, கதிரின் நண்பன் என்று கூறி பேசுமாறு குறிப்பிட்டிருந்தார்.
அன்று மாலையே கண்ணன் படபடக்கும் இதயத்துடன் அந்த எண்ணுக்கு அழைத்தார்.
Advertisement
Advertisement
தொலைபேசி அழைப்புக்காக காத்துக்கொண்டிருந்த ரத்னாவிற்கு உடனே சென்று எடுத்து பேச வேண்டும்போல துருதுருத்தது. இருந்தாலும் நேற்றே அண்ணி, ‘முந்திரிக்கொட்டை மாதிரி போனை எடுத்து பேசி மாட்டிக்காத. எப்பவும் போல யார் எடுக்கிறாங்களோ எடுக்கட்டும். கதிர் மூலமே பேசிக்குவோம்’ என்று கூறி இருந்தார்.
இவர்கள் நல்ல நேரம், அன்று அப்பா அம்மா இருவரும் திருமண பத்திரிகை வைக்க என்று வெளிய சென்றிருந்தார்.
Advertisement
போனை எடுத்தது சின்ன அக்கா.
“நான் கதிர் பிரண்ட் பேசுறேன் அக்கா, கதிர் கிட்ட கொடுக்க முடியுமா?”
“ஒரு நிமிஷம்..”
“டேய் கதிரு, உனக்கு தான் போன், இந்தா.. ஆனா சீக்கிரமா பேசிட்டு வை. என் ஆளு பேசுறேன்னு சொல்லி இருக்காரு” என்று கன்டிஷனோடு கொடுத்தாள்.
“ஹலோ.. சொல்லு வேணு, நாளைக்கு கணக்கு பரீட்சைக்கு எத்தனை லெசன் வரும்னு தெரியுமா?” என்று பாடம் சம்பந்தமா பேசுவதை போல சிறிது நேரம் பேச்சு கொடுத்துவிட்டு,
“ஆமாடா.. எங்க ரெண்டு அக்காக்கும் கல்யாணம். ஒரே நாள்ல தான்டா.. ரொம்ப க்ராண்டா ஏற்பாடு செய்றோம். நீ கண்டிப்பா வரணும்..”
“சரி கதிர்..புரியுது”
“ஒரே நாள் தான் ஆனா ஒரே நேரத்துல இல்ல டா. ஏழரை மணிக்கு ஒரு முஹூர்த்தம், அடுத்த முஹூர்த்தம் 9 மணிக்கு.
உன்கூட நான் இருந்தாதான் வருவியா? ரெண்டு கல்யாணத்துக்கு நடுவுல ஒன்றரை மணி நேரம் தான் டா இருக்கும். அப்ப தான் நாம சந்திச்சு பேச முடியும்”
“என்ன டா, ஒரு நாள் எனக்காக ஸ்கூல் லீவ் போடா மாட்டியா?”
“பத்திரிகை தானே, அனுப்பி வைக்கிறேன். அதுலயே மண்டபம் பெயர் அட்ரஸ் எல்லாம் இருக்கும்”
என்று அழகாக விஷயத்தை தெரியப்படுத்தினான்.
“புரியுது கதிர்.. நான் எப்படியாது அங்க அந்த நேரத்துல வந்துடறேன். உங்க அக்காகிட்ட கேளு, உங்க அப்பாகிட்ட ஒரு தடவை பேசி பார்க்கவான்னு.. அவங்க சம்மதிக்கலைனா வேற முடிவு செய்யலாம்.. இல்லை ஏற்கனவே வீட்ல சொல்லி பார்த்தீங்களா?”
“சரிடா.. நாளைக்கு படத்துக்கு போலாமாவா? அது எல்லாம் எங்க அப்பா அம்மா ஒத்துக்குவே மாட்டாங்க டா.. என்னது பேசி பார்க்கவா.. அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்ல.. கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க..”
“சரி கதிர். நான் திரும்ப நாளைக்கு பேசுறேன், நீங்க என்ன யோசிச்சிருக்கீங்கன்னு சொல்லுங்க.. அப்படி செஞ்சுக்கலாம்”
“இல்ல வேணு.. வேண்டாம். நானே உனக்கு இந்த கணக்கு சொல்லி தர்றேன்“
“பாய் டா..”
உடனே எல்லாம் என்ன பேசினான் என்று ரத்னாவிடம் கூறவில்லை. மிகவும் ஜாக்கிரதையாக காய் நகர்தினார்கள் மூவரும்.
யாருக்கும் ஒரு துளி சந்தேகம் கூட வரவில்லை.
“இன்னிக்கு மண்டபத்துக்கு போய் ஒரு எட்டு பார்த்திட்டு வந்துடலாம்” என்று சுப்பிரமணியன் தன் பெரிய மகனிடம் கூறிக்கொண்டிருந்தார்.
“நானும் வரேன் அப்பா” என்று ஆஜர் ஆனான் கதிர்.
“நீ எதுக்கு இப்ப வர, படிக்க ஒன்னும் இல்லயா?”
“எப்பவுமே வீட்ல படிச்சிட்டு தானே அப்பா இருக்கேன் சும்மா வர்றேன்னே” என்று அவர்களுடன் இணைந்து கொண்டான்.
மற்றவர்கள் அறியாத வண்ணம், எங்கே எல்லாம் ஜன்னல்கள் இருக்கிறது, பின்பக்கம் வழி இருக்கிறதா என்று எல்லாவற்றையும் குறித்துக்கொண்டான்.
அன்று அவர்கள் மொட்டை மாடி மீட்டிங்கில்,
“அண்ணி, நீங்க சொன்ன மாதிரியே குறிச்சு வச்சிருக்கேன் பாருங்க, என்று ஒரு பேப்பரை எடுத்து காட்டினான்.”
பல கோடுகளும், கட்டங்களும் போட்டு வைத்திருநான்.
“என்ன டா இது? கோடு கோடா போட்டு வச்சிருக்க.. ஒண்ணுமே விளங்கலையே” என்றார் அண்ணி கடுப்பாக.
“வருங்கால இன்ஜினீயரை இப்படி அவமான படுத்துறீங்க.. இதுக்கு எல்லாம் பின்னாடி வருத்தப்படுவீங்க.”
ரத்னா, “கதிர் உன்னை நம்பி தான் என் வாழ்க்கையே இருக்கு டா..”
“இப்ப என்ன, நான் விளக்கமா சொல்றேன்.
மணமகள் அறை ஒன்னு தான் இருக்கு. அங்க இருந்து வெளியே வர்றது கொஞ்சம் கஷ்டம். அதனால அந்த அறையை ராகவி அக்காக்கு கொடுத்திடுங்க. மணமேடைக்கு கீழே இடதுபக்கம் ஒரு சின்ன ரூம் இருக்கு. அது முன்னாடி ஸ்டோர் ரூமா இருந்துச்சு போல. அங்க இருந்து பின்பக்கம் ஒரு கதவு அடுப்படிக்கு போகுது. அந்த ரூமை எப்படியாவது அக்காவுக்குனு வாங்கிட்டோம்னா, அந்த கதவு வழிய அடுப்படிக்குள்ள போய்டலாம்”
“சூப்பர் டா.. அதை நான் பார்த்துக்கிறேன். அப்புறம்”
“அடுப்படில இருந்து பின்பக்கத்துக்கு ஒரு வழி இருக்கு. அது வழியா தான் சாமான் எல்லாம் உள்ளே வருது.
நாம அந்த பக்கம் வெளியே போய்ட்டு, கேட்டு வழியா போனா மாட்டிப்போம்.
ஓரமா கொஞ்ச தூரம் நடந்து போய், காம்பௌண்ட் சுவர் மேலே ஏறி குதிச்சு போய்டலாம், யாருக்கும் தெரியாது”
“ஏறி குதிச்சா? எப்படிடா ஏறுவது?”
“ஓர் ஏணி வேணா போட்டு வைப்போமா? உனக்கு ஈசியா இருக்கும்”
“எனக்கு ஏணில ஏறக்கூட பயம் தான் அண்ணி.”
“அப்ப, அந்த முட்டைகோஸ் மண்டையனை கல்யாணம் பண்ணி இங்கயே செட்டில் ஆகிடு”
“அண்ணி…”
“பின்ன, இன்னும் ஒரு மாசம் இருக்குல்ல, அதுக்குள்ள காம்பௌண்ட் ஏறி இறங்க பிராக்டிஸ் பண்ணு..”
“சரி அண்ணி”
“அடிக்கடி போன் பண்ணாலும் மாட்டிப்போம், நாகு நீ நம்ம திட்டத்தை உன் ஆளுக்கு லெட்டரா போடு. ரெண்டு முஹுர்த்தத்துக்கு இடைப்பட்ட நேரத்துல நீ இந்த சுவர் ஏறி அந்த பக்கமா குதிச்சிடு. அங்க அவரை ரெடியா இருக்க சொல்லு.. அங்க இருந்து அப்படியே ட்ரெயின் பிடிச்சு போய்டுங்க.”
“பயமா இருக்கு அண்ணி..”
“எனக்கு அப்படியே ரொம்ப ஜாலியா இருக்கு.. உனக்கு டா கதிர்?”
“எனக்கும் தான் அண்ணி.. ஜேம்ஸ் பாண்ட் மாதிரி பீல் வருதுல..”
ரத்னா பாவமாக முகத்தை வைத்துக்கொள்ளவும்,
“இந்த மூஞ்சூரு மாதிரி மூஞ்சிய வச்சே எங்க ரெண்டுபேரையும் நீ பொறியில சிக்க வைக்காம இருந்தா சரிதான்..”
“அக்காவோட அவர் வந்தா அவரை இங்க நிறைய பேருக்கு தெரியுமே அண்ணி.. மாட்டிக்க மாட்டாங்களா?” என்றான் கதிர்.
“ஏதாவது மாறு வேஷத்துல வர சொல்லுவோமா?”
“எனக்கு என்னமோ அவர் இதுக்கு எல்லாம் சரிபட்டு வருவாரோன்னு இருக்கு.. ஏற்கனவே உங்க அப்பாகிட்ட வந்து பேசுறேன்னு சொல்லிட்டே இருக்காரு”
“ஏன்டி உன் அரவிந்த்சாமியை கொஞ்சம் சமையல்காரர் மாதிரி வரச்சொல்லு.. அதையும் லெட்டர்ல எழுதிடு. சொதப்பாம செஞ்சுடுவ தானே?”
“நீங்க ரெண்டு பேரும் என் கூட இருக்கவரைக்கும் எல்லாமே கரெக்டா பண்ணிடுவேன்.”
“கல்யாணத்தன்னைக்கு உன்கூட எப்படி இருக்க முடியும். கண்டு பிடிச்சிட மாட்டாங்களா.. சொல்றதை நல்லா கேட்டுக்கோ.. அந்த சுவர் ஏறி குதிச்சதுக்கு அப்புறம் உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. நாங்க மத்தவங்களோடு சேர்ந்து உன்னை திட்டக்கூட செய்வோம்..”
“ஆங்..”
“என்ன ஆங்.. எங்களை மறந்துட்டு சந்தோசமா இருக்கிற வழியை பாரு. அந்த சைக்கோ மாப்பிள்ளைக்கிட்ட இருந்து தப்பிக்க தான் இவ்வளவு தூரம் இறங்கி வேலை செய்றோம்”
ஆம், அந்த மாபிள்ளை, தினமும் ரத்னாவிற்கு போன் செய்து,’ உன் காதலை மறந்திட்டியா? என்னை நினைக்க ஆரம்பிச்சிட்டாயா? நான் ஒரு பெரிய அறிவாளி, நான் ஒரு ஹீரோ.. எனக்கு பாடத்தெரியும் ஆடத்தெரியும், என்னை லவ் பண்ண ஆரம்பி’ன்னு டிசைன் டிசைன்னாக படுத்திக்கொண்டிருந்தான்.
இவர்கள் அவனிடம் எதற்காக உண்மையை சொன்னோம் என்று நொந்துபோய் இருந்தார்கள். அவனின் தொல்லைகள் அதிகம் ஆகவுமே தான் ரத்னாவின் அண்ணி இவர்களுக்கு முழு மனதாக உதவி செய்ய ஆரம்பித்தார்.
“ஆமா அண்ணி, இருந்தாலும் அந்த முட்டைகோஸ் மண்டையனுக்கு விஷயம் தெரிஞ்சது நினைச்சாதான் பக்குபக்குன்னே இருக்கு” என்றான் கதிர்.
அந்த மாப்பிள்ளை சின்னராசு, ரத்னாவை வேவு பார்த்துகொண்டிருந்தான். ரத்னா மெஷினில் இருக்கும் சமயங்களில் எதிர்த்த கடையில் தினமும் ஒரு ஆள் இருப்பது தெரிந்தது. அதை கதிர் கண்டுபிடித்திருந்தான்.
“அவன் மாட்டி விடறதா இருந்தா இந்நேரம் வீட்ல சொல்லி இருப்பான். அவன் மூஞ்சிக்கு எல்லாம் ரத்னா மாதிரி பொண்ணு கிடைக்குமா? அதனால சொல்ல மாட்டான். சொல்லி பிரச்சனை ஆயிடுச்சுன்னா அப்படின்னு யோசிப்பான்.”
“அப்படியா சொல்றீங்க?”
“இருந்தாலும் நம்ம ஜாக்கிரதையா தான் இருக்கணும்.”
“சரி அண்ணி சரி அண்ணி.”
மறுநாளே கடிதம் மூலம் தங்களது திட்டத்தை விலாவாரியாக கண்ணனுக்கு எழுதி அனுப்பி விட்டனர்.
அதற்கு மேலே கடிதம் மூலமாகவோ போன் மூலமாகவோ எந்த தொடர்பும் வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
கண்ணனுக்கு பயம் இருந்தாலும், தன்னை நம்பி வரும் பெண்ணை நல்லபடியாக வைத்துக்கொள்ளவேண்டும் என்ற வைராக்கியம் அதிகம் இருந்ததது.
தற்போது வேலை செய்யும் வீட்டில், திடீரென்று தனக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருப்பதாக கூறி இரண்டு நாட்கள் லீவ் கேட்டான்.
அவர்கள் வீட்டு அவுட் ஹவுசில் தான் தங்கிக்கொண்டிருந்தார். அங்கேயே மனைவியை அழைத்து வரலாமா என்று கேட்டு, அவர்களும் சரி என்று ஒத்து கொண்டார்கள்.
அடுத்து தன் முதலாளிக்கு அழைத்து, தான் ஒரு பெண்ணை விரும்புவதாகவும், அந்த பெண்ணின் வீட்டு சுழல் காரணமாக உடனடியாக திருமணம் செய்ய போவதாகவும், யாரு பெண் என்பதை மட்டும் மறைத்து கூறினான்.
எதுவா இருந்தாலும் ஒன்னுக்கு நாலு தடவை யோசிச்சு நிதானமா செய் என்பதோடு அவர் முடித்துக்கொண்டார்.
இப்படியாக கண்ணன் அவர் பக்கம் எல்லாம் செய்ய, இவர்கள் அமைதியாக திருமண நாளுக்காக காத்துக்கொண்டிருந்தார்கள்.
வீட்டில், பரன் மீதிருந்து சாமான்களை இறக்குவதற்கு எல்லாம் ரத்னா நான் செய்கிறேன் என்று அவளாக செய்தாள்.
சின்ன ஸ்டூல் பெரிய ஸ்டூல் என்று எல்லாம் ஏறி பழகினார்.
படிப்படியாக சின்ன ஸ்டூலில் ஏறி, பெரிய ஸ்டூலில் கால் வைத்து, எம்பி பரன் மீது ஏறும் அளவிற்கு பழகினார்.
‘வீடு வாசல் எல்லாம் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்’ என்று தெய்வானை கூற, அதற்கு கதிரும் ரத்னாவும் வெளிப்புறம் கழுவ சென்றார்கள்.
“அக்கா நீ காம்பௌண்ட் மேலே இரு, நான் தண்ணீ கொண்டு வந்து தர்றேன், அப்படியே கழுவிடலாம்.”
“டேய், கல்யாண பொண்ணுடா.. அவ விழுந்து வைச்சா கஷ்டம்,, நீ ஏறு.. இல்லையா சும்மா கீழே இருந்து தண்ணி ஊத்துங்க போதும்..” என்றார் தெய்வானை அம்மா.
“நாங்க பார்த்துகிறோம் நீங்க கிளம்புங்க அம்மா” என்று அவரை அனுப்பிவிட்டு, அக்காவும் தம்பியும், காம்பௌண்டில் ஏறி இறங்க ப்ராக்ட்டிஸ் செய்தனர்.
திருமணத்திற்கு முந்திய நாள் இரவு,
“அண்ணி, நான் போறதுனால அக்காவுக்கு பிரச்சனை வராது இல்ல?” என்றார் ரத்னம் கவலையாக.
“உங்க அக்கா கழுத்துல தாலி ஏர்ற வரைக்கும் தான் அவங்க இஷ்டம் கண்டிஷன் எல்லாம்.. எப்ப தாலி ஏறுதோ அடுத்த நிமிஷத்துல இருந்தே அவங்க குடுமி இவ கையில இருக்கும். நீ அதை எல்லாம் நினைக்காம கிளம்பு சரியா”
திருமணத்தன்று யாருக்கும் சந்தேகம் வராத அளவிற்கு எல்லாம் சுமுகமாகவே சென்றது.
ஏழரை மணிக்கு சின்ன அக்கா தங்கராசு திருமணம் நல்லபடியாக முடிந்தது.
திருமணத்திற்கு பிறகான சடங்குகள் நடக்கையில், ரத்னாவிற்கு கூரை புடவை கட்டிக்கொண்டு தயாராக வருமாறு கூறினார்கள்.
துணைக்கு அண்ணி தான் சென்றார்.
குழந்தையை சினுங்கவே, சற்று நேரம் வெளியே வைத்திருப்பதாக கூறி அண்ணி ரத்னாவின் அறை விட்டு வெளியே வந்தார்.
“பாப்பா அழுகுது, இதோ வந்துடறேன்” என்று மாமியாரிடம் கூறி சென்றார்.
அந்த நேரம் சரியாக ரத்னா அடுப்படிக்குள் புகுந்து, அங்கே இருந்து பின்புறமும் வந்துவிட்டார்.
இவர்கள் எதிர் பார்க்காதது அங்கே சின்னராசு தன் ஆள் ஒருவரை நிப்பாட்டி வைத்திருந்தது.
ரத்னாவிற்கு என்ன செய்வது என்று குழப்பமாக போய் விட்டது.
அந்த முரட்டு ஆசாமி, ரத்னாவை நெருங்குகையில், பக்கத்தில் இருந்த விறகு கட்டை ஒன்றை எடுத்து, அவன் மண்டையில் ஓங்கி ஒன்று போட்டுவிட்டார்.
தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த கதிர், சூப்பர் அக்கா என்றுகை காட்டி அவரை செல்லுமாறு செய்கை காட்டினான்.
படப்படக்கும் இதயத்தோடு, ரத்னா சுவர் ஏறி குதித்துவிட்டார்.
அங்கே ரிக்ஷயாவில் காத்துக்ண்டிருந்தார் கண்ணன்.
அடுத்து அரைமணி நேரத்தில் இருவரும் சென்னிமலை முருகன் கோவிலுக்கு சென்று அங்கே எளிமையாக திருமணத்தை முடித்துக்கொண்டனர்.
இதை ரத்னாவே எதிர்பார்க்கவில்லை. நேற்றே வந்து கோவிலில் பேசி ஏற்பாடுகளை செய்திருந்தார் கண்ணன். அந்த முருகன் சாட்சியாக இருவரும் கரம் சேர்த்து, கணவன் மனைவியாகதான் அங்கே இருந்து புறப்பட்டனர்.
அங்கே இருந்து வேறு வேறு பஸ்கள் மாறி, மைசூர் போய் சேர்ந்தார்கள்.
இவர்களை யாராலும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
ஆறு மாதங்கள் மைசூரில் புது குடித்தனம். சொர்க்க வாழ்க்கை தான் இருவருக்கும்.
பின் மாசமாக இருந்த போது, அப்பா அம்மாவை பார்க்கவேண்டும் என்று ரத்னா ஆசைப்படவே, கண்ணன் ஒரு முறை மனைவியை அழைத்துக்கொண்டு ஊருக்கு வந்தார்.
இவர்களை பார்த்ததுமே,
“எங்க குடும்பத்து மானத்தை கூண்டோடு அழிச்சிட்டு, இப்ப வெட்கமே இல்லாம வயறை தள்ளிட்டு வந்திருக்கியா?” என்று அம்மா மண்ணை அள்ளி வீசி துரத்தி விட்டார்.
அப்பா ஒரு படி மேலே போய், “என் மூனாவது பொண்ணு செத்து போய் ரொம்ப நாள் ஆச்சு” என்று இவர்களை கடந்து போய்விட்டார்.
அண்ணி, தம்பி கூட எப்படி இருக்கிறாய் என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை. அனைவரும் தூற்றி வெளியே அனுப்பி விடவே அதற்கு பிறகு இன்று வரை ரத்னா திரும்பி செல்லவே இல்லை.
ஆனால், தாய்க்கும் மேலாக தங்கமாய் பார்த்து கொண்டார் கண்ணன்.
இரண்டு பிரசவத்தையும் அவரே பார்த்தார். பத்திய சாப்பாடு முதல், குழந்தையை குளிக்க வைப்பது, பால்குடி மறக்கவைப்பது என்று அனைத்தையும் அத்தனை அன்பாக செய்தார்.
ராணிம்மா.. ராணிம்மா.. என்று அவர் இருக்கும் வரையிலும் ராணியாகத்தான் பார்த்துக்கொண்டார்.
error: Content is protected !!