Skip to content
Post Views: 24
கண்ணாமூச்சி – 4
ஐஸ்லாந்தின் பனி படர்ந்த அந்த நீளச் சாலையில் விஸ்வநாத்தின் சொகுசு கார் சத்தமில்லாமல் நகர்ந்து கொண்டிருந்தது. ஜன்னலுக்கு வெளியே உறைந்து கிடந்த பனிப்பாறைகள் சூரிய வெளிச்சத்தில் வைரங்களைப் போலப் மின்னின. ஆனால், விஸ்வநாத்தின் முகம் காரின் இருண்ட கண்ணாடி ஜன்னலில் தெரிந்த தன் பிரதிபலிப்பைத் தாண்டி, ஏதோ ஒரு புள்ளியைத் வெறித்துக் கொண்டிருந்தது.
அவன் தன் வலது உள்ளங்கையைப் பார்த்துக்கொண்டான். நேற்று அந்தப் பனிவெளியில் அவளது சிறிய கைகளில் இருந்து அந்த கேமராவை வாங்கும்போது, எதிர்பாராமல் அவளது விரல் நுனிகள் அவனது கைகளில் உரசிச் சென்றன. அந்த மெல்லிய ஸ்பரிசம் இன்னும் அவனது கைகளில் அப்படியே தங்கியிருப்பது போல ஒரு பிரமை.
வழக்கமாகத் திரையுலகின் பிரம்மாண்ட பாராட்டுக்களுக்கு நடுவே மூச்சுத் திணறும் விஸ்வநாத், முதன்முதலில் ஒரு பெண்ணின் முன்னால் தன் தற்காப்புக் கவசங்கள் அனைத்தையும் கழற்றி வைத்திருந்தான். அவள் தன்னை ஒரு சூப்பர் ஸ்டாராகப் பார்க்காமல், கேமரா ஆங்கிளைச் சரிசெய்யத் தெரியாத ஒரு சாதாரண மனிதனாகப் பார்த்த அந்த எதார்த்தம் அவனுக்குள் ஒரு விசித்திரமான விடுதலை உணர்வைத் தந்திருந்தது.
Advertisement
“இன்னிக்கு அவளைப் பார்த்தால் என்ன சொல்வாள்? மறுபடியும் கோபமாகப் பேசுவாளா? ஃபிரண்ட்லியா பேசினா எவ்வளவு நல்லா இருக்கும்?” உலகமே காலடியில் கிடந்த அந்தப் பிரம்மாண்ட நாயகனின் இதயத்தில், ஒரு கல்லூரி மாணவனுக்குரிய தவிப்பு முதல்முறையாகக் குடியேறியிருந்தது. அந்த ஹெட்பேண்டின் பின்னால் நிலா இருப்பாள் என்று தெரியும், ஆனால் எங்கே, எப்படி, எந்த நிலையில் அவர்களது சந்திப்புகள் நிகழும் என்று அவனுக்குத் தெரியவில்லை. இன்று இரவு எப்போது வரும், எப்போது அந்த ஹெட் பேண்ட்டை மாட்டிக் கொள்ளலாம் என்கிற ஏக்கமும் எதிர்பார்ப்பும் அவனது சிந்தை முழுவதையும் நிறைத்திருந்தது.
அதே நேரத்தில், சென்னையில்…
நிலா தன் கல்லூரிப் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள். காதுகளில் ஹெட்போன் மாட்டியிருந்தாலும், அவளது கவனம், காதுகளில் ஓடிக்கொண்டிருந்த பாடலில் இல்லை. அவளது விரல்கள் லேப்டாப் பையின் ஜிப்புடன் விளையாடிக் கொண்டிருந்தன.
Advertisement
அவளது கணினி அறிவியல் மூளை, “அது வெறும் ஒரு அல்காரிதம் உருவாக்கிய பிம்பம் நிலா, உன்னோட கற்பனை!” என்று எவ்வளவுதான் சண்டை போட்டாலும், அவளது இதயம் அதை ஏற்கத் தயாராக இல்லை. நேற்று அந்த நள்ளிரவுச் சந்திப்பில், விஷ்வா அவளைப் பார்த்த அந்தப் பார்வை… அதில் இருந்த அந்த அபரிமிதமான குறும்பு, அவளைத் தூங்கவிடாமல் செய்திருந்தது.
Advertisement
விஷ்வாவின் அந்த சாக்லேட் நிறக் கண்கள், ஒட்டுமொத்த உலகத்தின் ரகசியங்களையும் தனக்குள் ஒளித்து வைத்திருப்பது போல அவளுக்குத் தோன்றியது. அவன் பேசும்போது அவனது குரலில் இருந்த அந்த மெல்லிய வசீகரமும் தவிர்க்க முடியாத கம்பீரமும், ஒரு இயந்திரத்தின் கணக்கீடாக இருக்கவே முடியாது என்று அவளது உள்ளுணர்வு சொல்லியது.
“விஷ்வா நிஜ உலகில் எங்கே இருக்கிறார்? இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்?” என்ற கேள்விகள் அவள் மனதில் எழாமல் இல்லை. “நிலான்னு ஒருத்தி இருக்கான்னு கூட அவருக்குத் தெரியாதுல்ல” என்று துக்கம் கொண்டது அதே மனது. விஸ்வநாத் என்னும் நடிகன் தனக்கு என்றுமே கைக்கெட்டாத உயரத்தில்தான் இருப்பான் என்ற நிதர்சனமும் அவளுக்குப் புரிந்தது. ஆனாலும் “மீண்டும் இன்று அவருடைய குரலைக் கேட்க முடியுமா? அவரைப் பார்க்க முடியமா?” என்ற ஏக்கமும் தோன்றியது.
அவளது எதார்த்தமான கொள்கைகளையும், பிடிவாதங்களையும் தாண்டி, அந்த உண்மையற்ற பிம்பத்தைப் பற்றிய ஏக்கம் அவளுக்குள் ஒரு அழகான வலியை உருவாக்கத் தொடங்கியிருந்தது. இந்தப் பயணம் எங்கு சென்று முடியும் என்ற அறியாநிலை நிலாவின் மனதைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது.
Advertisement
புத்தி ‘இதெல்லாம் வேண்டாம்’ என்று இந்த பீட்டா சோதனையில் இருந்து விலகிவிடலாம் என்று அறிவுறுத்தியது, ஆனால் விஸ்வநாத்தின் திரையுலக வசீகரத்தில் மயங்கியிருந்த ரசிகையின் மனமோ பொய்யாகவே இருந்தாலும், இந்தச் சின்னஞ்சிறு அருகாமைகளுக்குப் பேராசை கொண்டது.
விஸ்வநாத்தும் நிலாவும் இதுபோன்ற குழப்பங்களில் உழன்று கொண்டிருக்க, இந்த நிகழ்விற்குக் காரணமான இருவரும் வேறொரு விதமான குழப்பத்தில் சிக்கியிருந்தனர்.
சென்னையின் மையப்பகுதியில் இருந்த ‘LimeAI’(லைம்ஏஐ) நிறுவனக் கிளையின் பிரதான ஆய்வகத்தில், பிரவீன் தன் லேப்டாப் திரையில் ஓடிக்கொண்டிருந்த தரவுப் பதிவு விவரங்களைப் பார்த்து உறைந்து போய் அமர்ந்திருந்தான். ஏசி குளிரிலும் அவனது நெற்றியில் வேர்வைத் துளிகள் அரும்பியிருந்தன.
“ஓ மை காட்…இது என்ன புது டெவலப்மென்ட்? யாரு செஞ்ச வேலை இது?” என்று தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டான்.
அவன் உருவாக்கிய அல்காரிதத்தின்படி, ஒரு தனிப்பட்ட, பாதுகாக்கப்பட்ட சர்வருக்குள் விஸ்வநாத்தின் ‘SoulMate’ பீட்டா பதிப்பு மட்டுமே இயங்க வேண்டும். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக அந்த சர்வரில் விஸ்வநாத்தின் சுயவிவரத்துக்கு இணையாக மற்றொரு பயனர் ஐடி உள்ளே நுழைந்து, அதே அலைவரிசையில் இயங்கிக் கொண்டிருப்பதை சர்வரின் பதிவுகள் காட்டின.
பிரவீன் அவசரமாகத் தன் இன்டர்காம் போனை எடுத்து, தன் அசிஸ்டென்ட் அனன்யாவை அழைத்தான். “அனன்யா… உடனே என் கேபினுக்கு வா!” அவனது குரலில் இருந்த பதற்றம் அந்த ஆய்வகத்தின் அமைதியிலும் பதற்ற அலைகளைப் பரப்பியது.
அடுத்த சில நிமிடங்களில் அனன்யா கையில் ஒரு டேப்லெட்டுடன் பதற்றமாக உள்ளே நுழைந்தாள். “என்ன பிரவீன்? ஏதும் பிரச்சனையா? ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கீங்க” என்றாள்.
பிரவீன் லேப்டாப்பை அவளை நோக்கித் திருப்பி, “அனன்யா, இந்த ஐடியைப் பாரு. ‘User_Beta_02’. இது யாருடைய ஐடி? இந்த பீட்டா டெஸ்டிங்ல ஒரு ஐடிக்குதானே டெஸ்டிங் பண்ண முடிவு பண்ணியிருந்தோம், வேற யாருக்கும் லாகின் பண்ண நான் அனுமதி கொடுக்கலையே! இது எப்படி சர்வருக்குள்ள வந்தது?” என்று குரலை உயர்த்திப் பேசினான்.
அனன்யா ஒரு கணம் பயந்து போனாள். தன் கைகளைத் பிசைந்து கொண்டே, “பிரவீன்… அது… வந்து… அது என் ஃப்ரெண்ட் ஐடி,” என்றாள் மெல்லிய குரலில்.
“வாட்?!” பிரவீன் நாற்காலியை விட்டு எழுந்து நின்றான். “உன் ஃப்ரெண்டா? உனக்கு அறிவு இருக்கா அனன்யா? இது எவ்வளவு பெரிய ப்ராஜெக்ட் தெரியுமா? கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு, அதுமட்டும் இல்லாம ஒரு முக்கியமான விஐபியோட பர்சனல் டேட்டா இதுல இருக்கு. நீ எப்படி ஒரு அவுட்சைடருக்கு இந்த ஆப்போட லிங்க்கைக் கொடுக்கலாம்?”
“வெரி சாரி பிரவீன்! அவ என்னோட கிளாஸ்மேட் தான். ரொம்ப திறமையான பொண்ணு. அவளும் ஏஐ டெக்னாலஜி தான் படிக்கிறா. நம்ம ஆப்ல இருக்குற நியூரல் ஃபீட்பேக் எப்படி வேலை செய்யுதுன்னு பார்க்குறதுக்காக, ஒரு டெஸ்டிங்குக்காகத்தான் அவகிட்ட கொடுத்தேன். அவளுக்கு இதுல வேற யூசர் இருக்காருன்னு எதுவுமே தெரியாது,” என்று அனன்யா படபடப்பாக விளக்கினாள்.
பிரவீன் தன் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தான். அவனது கண்கள் திரையில் இருந்த குறியீடுகளைத் துளைத்தன. “நீ பண்ணுன வேலை எவ்வளவு பெரிய குளறுபடியை உண்டாக்கப் போகுதுன்னு தெரியுமா?” சீறினான் பிரவீன்.
“இந்த ஆப் இன்னும் ஆரம்பக் கட்டத்துலதான் இருக்கு. ஒரு யூசர்தான் இதை இப்போ யூஸ் பண்ண முடியும், ரெண்டு பேர் லாகின் பண்ணினா இது எப்படி ரியாக்ட் பண்ணும்னு தெரியலை” அவன் குரலில் படபடப்பு இருந்தது.
“இதை ரோல்பேக் பண்ண முடியாதா? எல்லா டேட்டாவையும் டிலீட் பண்ணிட்டு மறுபடியும் ஆரம்பிக்க முடியாதா?“ என்றாள் அனன்யா, குற்ற உணர்ச்சியுடன்.
“இப்போதைக்கு ரெண்டு பேரோட நியூரல் டேட்டாவும் தனித்தனி பேரலல் லைன்ல ஓடிட்டு இருக்கு. இப்படியே தொடர்ந்துச்சுன்னா ஒரு பிரச்சினையும் இல்லை, ஆனா, இந்த மாடல் இந்த சூழ்நிலைல எப்படி பிஹேவ் பண்ணும்னு தெரியாது” என்றான் பிரவீன். அவன் மனம் என்ன நடந்தால் என்ன செய்யலாம் என்ற கணக்கீட்டு மனப்பான்மைக்குள் நுழைந்திருந்தது.
“எந்த நிமிஷத்துல வேணாலும் இந்த ரெண்டு பேரோட டேட்டாவும் ஒண்ணோட ஒண்ணு மோதி, மெர்ஜ் ஆக வாய்ப்பிருக்கு! அதுக்கப்பறம் என்ன நடக்கும்னு நமக்குத் தெரியாது… இப்படி ஒரு சூழ்நிலையை நான் எதிர்பார்க்கவே இல்லை!” ஆற்றாமையாய் இருந்தது அவனுக்கு.
ரோல்பேக் என்பது பிரவீனைப் பொறுத்தவரையில் ஒரு மிகப்பெரிய தோல்வி. விஞ்ஞானி என்ற அவனது மதிப்பிற்கு ஏற்படக்கூடிய இழுக்கு. தீராது என்றால்தான் அதைக் ஹ செய்ய வேண்டும் என்ற முடிவிற்கு வந்திருந்தான்.
அனன்யாவிற்கும் அது தெரியும். ஆறு மாதமாக அவனிடம் இன்டர்னாகப் பணியாற்றுகிறாளே, “இப்போ என்ன பிரவீன் பண்றது? என் ஃபிரண்டோட அக்கவுண்ட்டை பிளாக் பண்ணிடட்டுமா?” என்றாள் நடுக்கத்துடன்.
பிரவீன் சில நொடிகள் ஆழமாக யோசித்தான். அவனது விரல்கள் கீபோர்டில் வேகமாக விளையாடின. தரவுகளை உன்னிப்பாக கவனித்தான்.
அதன் பிறகு நீண்ட பெருமூச்சுடன் “வேண்டாம் அனன்யா… இப்போதைக்கு அவசரப்பட்டு எதையும் நிறுத்தாதே. ஏன்னா, இந்த ரெண்டு பேரலல் டேட்டாவும் இப்போதைக்கு எந்த சிதைவும் இல்லாம சீரா ஓடுது. ஒருவேளை நடுவுல பிளாக் பண்ணுனா சிஸ்டம் கிராஷ் ஆகலாம். இதுவரைக்கும் பண்ணின எல்லாமே வேஸ்ட்டா போயிடலாம். நாம இப்போதைக்குக் காத்திருந்து கவனிக்கிறது மட்டும்தான் ஒரே வழி. இதை ரொம்ப உன்னிப்பா கண்காணிக்கணும், அதுக்குள்ள இதுல ஏதாவது பக் (bug) வந்தா அதை எப்படி சரி பண்றதுன்னும் யோசிக்கணும்,” என்று பிரவீன் எச்சரித்தான்.
அவன் திரையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, விஸ்வநாத் மற்றும் நிலா ஆகிய இருவரின் ஐடிகளும் ஒரே நேரத்தில் ‘செயல்பாட்டு’ நிலைக்கு மாறுவதைக் காட்டியது. இரண்டு வெவ்வேறு நியூரல் உலகங்கள் தனித்தனியாகத் தங்களுக்குள் இயங்கத் தொடங்கின.
ஐஸ்லாந்தின் உறைந்த எரிமலைப் பாறைகளுக்கு நடுவே அமைந்திருந்த ‘தி ரிட்ரீட் அட் புளூ லகூன்’ ஓட்டலின் பிரத்யேகமான ‘புளூ லகூன் சூட்’ அறையில் விஸ்வநாத் தங்கியிருந்தான். எரிமலைக் கருங்கற்களாலும் நேர்த்தியான மர வேலைப்பாடுகளுடனும் வடிவமைக்கப்பட்ட அந்த அறையின் பால்கனிக்கு வெளியே, பனி மூடிய கம்பீரமான மலைத்தொடர்களும், ஆங்காங்கே நீராவியைக் கக்கும் பால்-நீல நிற வெந்நீர் ஊற்றுகளும் தெரிந்தன.
நள்ளிரவு வானில் பச்சை மற்றும் ஊதா நிறத்தில் நடனமாடும் விசித்திரமான அரோரா வெளிச்சத்தைப் பார்த்தபடி, அங்கிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தான் விஸ்வநாத். அறையின் உள்ளிருந்து கேட்ட பீப் ஒலி நியூரல் ஹெட்பேண்ட் சார்ஜ் ஆகி முடித்துவிட்டதை அறிவித்தது. வேகவேகமாகச் சென்று அதை எடுத்தவன் மீண்டும் பால்கனிக்கு வந்து அங்கிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து அதை அணிந்துகொண்டான். இயந்திரம் புனைந்த மாய உலகிற்கும் மீண்டும் ஒருமுறை பயணிக்கத் தொடங்கினான் அந்த மாயத்திரை மன்னவன்.
மூடிய கண்களின் பின்னிருந்த இருள் மெல்ல விலகியபோது, விஸ்வநாத் தன்னை ஒரு பிரம்மாண்டமான, பழமையான திரையரங்கத்தின் நடுவே கண்டான். 1980களின் பாணியில் வடிவமைக்கப்பட்ட பட்டுத் துணி இருக்கைகள், சுவர்களில் மெல்லிய விளக்குகள் எறிந்தன. அவனது ஆழ்மனதின் கலைத் தாகமும், திரையுலகத் தனிமையும் சேர்ந்து இந்தத் திரையரங்கத்தை உருவாக்கியிருந்தது.
அங்கு ஒரு ஓரமாக அமர்ந்திருந்த அவன், எதேச்சையாகத் தன் பக்கத்து வரிசையைப் பார்த்தான். அங்கே அவனது மனதைக் கவர்ந்த அந்தப் பாவை நிலா அமர்ந்திருந்தாள்! அவளது கையில் ஒரு பெரிய பாப்கார்ன் டப்பா இருந்தது.
“ஹேய்… நீங்களா? இங்கேயும் வந்துட்டீங்களா?” என்று விஷ்வா வியப்பும் மகிழ்ச்சியும் கலந்த குரலில் கேட்டான்.
நிலா அவனைப் பார்த்துத் தன் மை தீட்டிய கண்களை உருட்டி, “நான்தான் கேக்கணும்! நான் பாட்டுக்கு நிம்மதியா படம் பார்க்கலாம்னு வந்தா, நீங்க என்னடான்னா பாப்கார்ன் டப்பாவோட வந்து நிக்கிறீங்க. என்னைத் துரத்திக்கிட்டே வர்றதுதான் உங்க வேலையா மிஸ்டர் விஷ்வா?” என்று குறும்போடு கேட்டாள்.
“நானா துரத்துறேன்? இந்தத் தியேட்டரே என்னோடது மாதிரிதான். சரி… என்ன படம் ஓடுது?” என்று விஷ்வா சிரித்துக் கொண்டே அவளருகில் அமர்ந்து பாப்கார்னைப் பகிர்ந்துகொண்டான்.
திரையில் ஒரு பழைய கறுப்பு வெள்ளை நகைச்சுவைப் படம் ஓடத் தொடங்கியது. அந்த வெளிச்சம் நிலாவின் முகத்தில் பட்டுப் பிரதிபலித்தது. அவளது எதார்த்தமான அழகைக் கண்ட விஷ்வாவின் கண்கள் திரையைப் பார்ப்பதை விட்டு அவளைப் பார்க்கத் தொடங்கின.
திரைப்படத்தில் வந்த நகைச்சுவைக் காட்சிகளுக்கு மனம் விட்டுச் சிரித்துக் கொண்டிருந்த நிலாவின் மலர்ந்த முகம் அவனை வெகுவாக வசீகரித்தது. அவளின் சிரிப்பை பார்த்து அவன் உதட்டிலும் மெல்லிய புன்னகை பூத்தது. தலை சாய்த்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வா.
அவனது குறுகுறு பார்வை நிலாவை ஏதோ செய்ய, சட்டென்று திரும்பி அவன் விழிகளை ஊடுருவியவள், “என் முகத்துலையா படம் தெரியுது? திரும்பி ஸ்கிரீனைப் பாருங்க மிஸ்டர், என்னையே என்ன பாக்குறீங்க?” என்றாள் நிலா.
அந்த விழிச் சந்திப்பு விஷ்வாவை ஒரு கணம் நிலைகுலையச் செய்தது என்றால், நிலாவையும் நாணி முகம் சிவக்க வைத்தது. நாணத்துடன் முகம் திருப்பி படத்தைப் பார்க்க முயன்றவளின் கவனம் படத்தில் லயிக்கவில்லை, ஆனாலும் பிடிவாதமாக அவனைப் பார்க்க மறுத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
நிலாவின் பாராமுகம் விஷ்வாவிற்குப் பிடிக்கவில்லை. “என்னைவிடப் படம் முக்கியமா?” என்று முரண்டு பிடித்தது அவன் மனது. அவளது கவனம் முழுவதும் தன மீது மட்டும்தான் இருக்க வேண்டும் என்று பேராசை கொண்டது.
“நிலா…” என்று மெல்லிய குரலில் அழைத்தவன், தயக்கத்துடன் அவள் கையைப் பிடித்தான் விஷ்வா…
ஸ்பரிசம் ஏற்பட்ட அந்தக் கணத்தில் திடீரென்று காரிருள் சூழ்ந்தது இருவரையும்…
வில்லங்கமோ வித்தகமோ தெரியவில்லை… பூஜை வேளை கரடி போல் ஒரு மணிநேரம் முடிந்துவிட்டது என்று நியூரல்பேண்ட் அறிவித்து, ‘என் வேலை முடிந்தது, இனி உன் பாடு’ என்பது போல் இயக்கத்தை நிறுத்தியது.
இந்த அனுபவம் இன்னும் வேண்டுமென்று மனம் கெஞ்சினாலும், நிலா இனி நாளைதான் வருவாள் என்று மனதிற்கு ஆறுதல் சொன்னவன், வேறெதுவும் சய்யத் தோன்றாமல் படுக்கையில் விழுந்து உறங்கியே போனான். பல ஆண்டுகளில் முதல் முறையாக தூக்க மாத்திரை இல்லாமல்…
அதே நேரத்தில், நிலாவின் நியூரல் அலைகள் அவளுக்கு முற்றிலும் மாறுபட்டதொரு அமைதியான சூழலை உருவாக்கியிருந்தது. அது பழங்காலக் கட்டிடக் கலையோடு, வளைந்து செல்லும் மாடிப் படிக்கட்டுகளும் பிரம்மாண்டமான மர அலமாரிகளும் நிறைந்த ஒரு பழமையான விக்டோரியா காலத்து நூலகம். ஜன்னல் வழியே அந்திப் பொழுதின் தங்க நிற வெளிச்சம் உள்ளே கசிந்து கொண்டிருந்தது. பழம்பத்தகங்களின் நேர்த்தியான வாசனையும், அமைதியும் அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தன.
நிலா ஒரு பெரிய மேஜையின் ஓரமாக அமர்ந்து, ஒரு தடிமனான புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தாள்.
அப்போது, அலமாரிகளுக்கு நடுவே இருந்து கையில் ஒரு சில புத்தகங்களுடன் விஷ்வா மெல்ல நடந்து வந்தான். அவனது அதே கறுப்பு ஹூடி ஷர்ட் அந்தத் தங்க நிற வெளிச்சத்தில் அவனுக்கு ஒரு தனி கம்பீரத்தைக் கொடுத்தது. அவளைக் கண்டதும் அவனது முகம் மலர்ந்தது.
“ஹாய் நிலா… நைஸ் டு மீட் யூ” என்றான் உற்சாகமாக.
“ஹலோ விஷ்வா, இங்க என்ன பண்றீங்க? ஊர் சுத்த மட்டும்தான் பிடிக்கும்னு நினைச்சேன், உங்களுக்கு படிக்கவும் பிடிக்குமா? ஆச்சரியமா இருக்கே?” என்று நிலா புத்தகத்தில் இருந்து கண்களை எடுத்து அவனைக் கிண்டலாக ஏறிட்டாள்.
“ஏதோ ஒரு நல்ல புத்தகத்தைத் தேடி வந்தேன் நிலா… ஆனா, இங்க அதைவிட சுவாரஸ்யமான புத்தகம் இங்கே இருக்குன்னு இப்போதான் தெரிஞ்சுக்கிட்டேன்,” என்றான் விஷ்வா அவளுக்கு எதிரே இருந்த மர நாற்காலியில் அமர்ந்து, அவளது பார்வையை ரசித்தபடி.
“பேச்செல்லாம் நல்லா இனிக்க இனிக்கத்தான் பேசுறீங்க, ஆனா இது லைப்ரரி, பேச்சைக் குறைச்சு, மூளைக்கு வேலை குடுங்க…” என்று அவனது கையில் இருந்த புத்தகங்களை ஜாடையில் காட்டினாள் நிலா.
“அதுவும் சரிதான்…” என்று விஷ்வா புன்னகைக்க, திடீரென்று அந்த நூலகத்தின் பிரம்மாண்டமான கண்ணாடி ஜன்னல்களுக்கு வெளியே லேசான தூறல் போடத் தொடங்கியது. மழையின் சத்தம் அந்த நூலகத்தின் அமைதியோடு இணைந்து ஒரு மெல்லிய ராகத்தை உருவாக்கியது.
விஷ்வா எழுந்து நின்று நிலாவின் கையைப் பற்றினான். அந்தத் தொடுதல் இருவரின் நரம்புகளிலும் ஒரு மின்சாரத்தைப் பாய்ச்சியது. “மழை பிடிக்குமா நிலா?” என்று அவன் அவளது கண்களை நேராகப் பார்த்துக் கேட்டான்.
அவனது தொடுகை பாய்ச்சிய அதிர்வுகளில் இருந்து மீள முடியாமல் விஷ்வாவின் கண்களைச் சந்தித்த நிலா, “ஆம்” என்பதுபோல் தலையசைத்தாள். அதை அவளது அனுமதியாக எடுத்துக்கொண்ட்ட விஷ்வா, அவளை இழுத்துக்கொண்டு லைப்ரரியில் இருந்து வெளியேறினான். பொன்வானம் தூவிய பன்னீர் மழையில் இரு உள்ளங்களும் சொட்டச் சொட்ட நனையத் தொடங்கின…
இருவேறு உலகங்களில், தனித்தனி சூழல்களில் சந்தித்துக் கொண்ட இந்த இரண்டு இதயங்களும் தங்களுக்குள் ஒரே மாதிரியான உணர்வுகளின் ஆழத்தை உணரத் தொடங்கியிருந்தன. இரண்டு இணை கோடுகளும் எப்போது வேண்டுமானாலும் ஒன்றாக இணையலாம் என்கிற தொழில்நுட்ப ஆபத்தை அறியாமலேயே, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கித் தங்களது காதலின் முதல் அடியை எடுத்து வைத்திருந்தனர்!
error: Content is protected !!