Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

03. சிவயாழினி - மௌனமாய் ஒரு மோகனம்

மெளனம் 06

வசீகரன் சின்னபொண்ணுவை அதட்டிய இடைவெளியில் தன்னை சமாளித்திருந்த அலமேலு, “உன் அப்பா என்னவோ உளர்றாருடா. நான் உன்கிட்ட அப்புறமா தனியா பேசறேன். மஞ்சுளா தப்பா எடுத்துக்காதீங்க, திடீர்னு சொன்னதால வசியால முடிவெடுக்க முடியல. நான் பேசி புரியவச்சா புரிஞ்சுப்பான்” என்றார் அலமேலு
“சரிங்க அலமு. பேசிட்டு நல்ல செய்தியா சொல்லுங்க, நாங்க வர்றோம்” என்று மஞ்சுளா மகளை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டார். 


Advertisement

அவர்கள் கிளம்பியதும் அலமேலு மகனின் கையைப்பற்றி தன் அறைக்கு அழைத்து சென்றார்.
“வசி, நீ என்கிட்ட கொடுத்த வாக்கு நினைவிருக்கா? நான் சொல்ற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கறதா சொல்லியிருக்கே. இந்த சம்மந்தம் எல்லா விதத்துலயும் நமக்கு நல்லாயிருக்கும். உன் பிசினஸ்க்கு பணம், டென்டர் கிடைக்கும், ரஞ்சனிக்கு மெடிக்கல் காலேஜ்ல சீட் கூட லதா மூலமா இவங்க தான் வாங்கி கொடுத்தாங்க. நம்மள மாதிரி அப்பர் மிடில் கிளாஸ் இல்ல. கோடீஸ்வரங்க. இந்த சம்மந்தம் நடந்தா நான் அமைச்சரோட சம்மந்தி, நீ அமைச்சரோட மருமகன்” 

Advertisement

Advertisement

“அதுக்கு? என்னை விலை போக சொல்றீங்களா?” என்றான் சீற்றத்துடன்
“நீ ஏன்டா அப்படி நினைக்கிற, நவ்யா அழகா தானே இருக்கா. உனக்கு பொருத்தமா இருப்பாடா”

Advertisement

“எனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்லம்மா”
“சரிடா, என்னைக்கா இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்க தானே போறே? அது ஏன் அமைச்சரோட பொண்ணு நவ்யாவா இருக்க கூடாது? இப்போதைக்கு மோதிரம் மாத்தி கல்யாணத்தை நிச்சயம் பண்ணிக்குவோம். நீ என்ன சாதிக்கறீயாே மூணு வருஷத்துக்குள்ள சாதிச்சுடு, அப்புறம் கல்யாணம் பண்ணிக்கோ”
“மூணு வருஷத்துக்கு அப்புறம் நடக்க போற கல்யாணத்துக்கு எதுக்கு இப்பவே சலங்கை கட்டணும்?” என்றான் எரிச்சலுடன்
“பெரியவன் தான் என் பேச்சை கேட்காம லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டான். உன் கல்யாணத்தையாவது என் மனசுக்கு பிடிச்சமாதிரி நடத்தணும்னு நினைச்சேன். எனக்கு அந்த கொடுப்பனை இல்ல போலருக்கு” என்று அலமேலு மூக்கை சிந்தி அழ ஆரம்பிக்கவும்,
“மூணு வருஷம் தான் டைம் கேக்கறேன்மா. அதுக்கப்புறம் யார்கூட கல்யாணம் ஏற்பாடு பண்றீயாே பண்ணு, நான் எதுவும் மறுத்து பேசாம மணமேடையில வந்து உட்காருவேன். இப்போ ஆள விடு” என்று அறையைவிட்டு வெளியேறினான்.
அலமேலு அழுகையை நிறுத்தாமல் இருக்கவும், “அலமு, எதுக்கு அழுதுட்டு இருக்கே? அவன் தான் நீ சொல்ற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றானே, அது போதாதா உனக்கு?” என்று நடராஜன் அதட்டவும் கண்களை துடைத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்திருந்தார் அலமேலு.
மஞ்சுளாவுக்கு போன் செய்து, “சம்மந்தியம்மா, வசி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான், ஆனா மூணு வருஷம் டைம் கேக்கறான். அதுவரைக்கும்?” என்று அலமேலு இழுக்க
“தாராளமா காத்திட்டு இருப்போம். நவ்யாவ எதாச்சும் கோர்ஸ் சேர்ந்து படிக்க சொல்றேன், அவ படிச்சு முடிக்கறதுக்குள்ள மூணு வருஷம் ஓடிட போகுது” என்று மஞ்சுளா கூறவும் 
“ரொம்ப சந்தோசம், அப்பப்போ நவ்யா வசிய சந்திச்சு பேசட்டும். இடையில வசிக்கு மனசு மாறினா கூட கல்யாணத்தை நடத்திடலாம்”
“சரிங்க, நானும் அவர்கிட்ட பேசிடுறேன்” என்று போனை வைத்தார் மஞ்சுளா.
நடராஜன் மனைவியையே அழுத்தமாக பார்த்திருந்தார். 
“என்ன பாக்கறீங்க?”
“நீ திருந்தவே மாட்டியா அலமு? நாம செய்யறது பேசறது ஏன் நினைக்கறது கூட கர்மா, அது நம்மள திருப்பி தாக்கும். இதுக்கெல்லாம் நீ என்ன விலை கொடுக்கப் போறேனு கொஞ்சமும் கூட யோசிக்க மாட்டியா?”
“உளராம போய் வேலைய பாருங்க” என்று நொடித்தார் அலமேலு
நாட்கள் அப்படியே நகர்ந்து கொண்டிருக்க, வசீகரன் லோன் சம்மந்தமாக அலைந்து கொண்டு, தந்தையின் தொழிலையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
இடையிடையே சின்னபொண்ணுவை நேருக்கு நேர் பார்க்க நேர்ந்தால் அவளை முறைத்துவிட்டு செல்வான். எதற்காக முறைக்கிறான் என்று தெரியாவிட்டாலும் வம்பிழுக்காதவரையில் நல்லது என்று நினைத்து அவளும் விலகி சென்று விடுவாள்.
ஒருநாள் சின்னபொண்ணு சரவணன் அறைக்குள் லதாவிடம் பேசிக்கொண்டிருந்ததை வசீகரன் எதேச்சையாக கேட்டிருந்தான்.
“மேம், எனக்கு கொஞ்சம் பணம் வேணும்”
“புதுசா ஏன் என்கிட்ட கேக்கறே? எப்பவும் சரவணன் தானே உனக்கு பணம் கொடுப்பாரு?”
“எனக்கு டிரஸ் கொஞ்சம் வாங்கணும், அத சொல்லி சார்கிட்ட பணம் கேக்கறதுக்கு சங்கடமா இருக்கு, அதான் உங்க கிட்ட கேட்டேன். இருக்கறது ரெண்டு சுடிதார் தான், அதுவும் ரொம்ப பழசாயிடுச்சு. பாவாடை சட்டை காலேஜ்க்கு போட்டுட்டு போக முடியாது. அதான் டிரஸ் எடுக்க கேட்டேன்”
“அதுக்கு ஏன் பணத்தை வீணா செலவு பண்றே? கல்யாணத்துக்கு அப்புறம் நான் போடாத டிரஸ் என்கிட்ட நிறைய இருக்கு, என் வீட்டுக்கு போன் பண்ணி எடுத்துட்டு வரச்சொல்றேன், ரஞ்சனிகிட்டயும் இருக்கும் அவகிட்டயும் சொல்றேன்”
“மேடம் நீங்களும் ரஞ்சனி மேடமும் என்னைவிட உசரமா இருக்கீங்க, அது எனக்கு பெரிசா இருக்கும்”
“ஓ, பெரிசா இருந்தா மேடம் போட மாட்டீங்களா, பிட்டா தான் போடணுமாே?”
“அதுக்கில்ல மேடம், ஏற்கனவே காலேஜ்ல எல்லாரும் என் டிரஸ்ஸ பாத்துட்டு கிண்டல் பண்றாங்க. வேண்டாக்கு வேண்டாம்னு தூக்கி போட்ட துணிய தவிர வேற இல்ல போலருக்குனு சொல்றாங்க”
“அதுக்கு, உனக்கு புதுத்துணி எடுத்த தரச்சொல்றீயா?”
“என் சம்பளப்பணத்துல அட்வான்ஸ் கொடுத்தா நானே எடுத்துப்பேன் மேடம்”
“உன் சம்பள பணமா? நீ இங்கே என்ன வேலை செய்யறே சொல்லு? காலைலை கொஞ்ச நேரம் அடுப்படியில காளியப்பாவுக்கு உதவி செய்யறேன்னு போய் நின்னுக்கறே. சமைச்சத சாப்பிட்டுட்டு காலேஜ்க்கு டைமாயிடுச்சுனு ஒடுறே. மறுபடியும் சாயந்திரம் வந்து கொஞ்ச நேரம் குழந்தைய பாத்துக்கறே. அப்புறம் சரவணன் வந்ததும் உன்னை போய் படிக்க சொல்லிடுவாரு, நீயும் இதுதான் சாக்குனு கிளம்பி போய்டுவ.
நீ செய்யற வேலைக்கு சம்பளம்னு கொடுத்தா அது இங்கே நீ தங்கியிருக்கறதுக்கும் சாப்பிடறதுக்கும் ஆகற பணத்துல பாதி கூட பெறாது. இதுல உனக்கு அட்வான்ஸ் வேற கொடுக்கணுமா?”  
சின்னபொண்ணுவிடம் பதில் இல்லை.
“கிளம்பு, சாயந்திரம் ரஞ்சனி வீட்டுக்கு வந்ததும் அவகிட்ட இருக்கற துணிய உனக்கு கொடுக்க சொல்றேன்”
உணர்ச்சி துடைத்த முகத்துடன் வெளியே வந்தவள் வசீகரன் இருப்பதை கூட கவனித்திருக்கவில்லை. ஒரு வித இயலாமையுடன் தன் அறைக்கு சென்று தன் பெட்டியின் மீது வைத்திருந்த தந்தையின் புகைப்படத்தை எடுத்து மார்போடு அணைத்து கொண்டு 
‘அப்பா, நான் பொறந்ததுல இருந்தே அக்காங்க போட்டு வேணாம்னு வீசியெறிஞ்ச துணிய தான் போட்டு வளர்ந்திருக்கேன். அவங்க கல்யாணமாகி போன பொறவும் நீங்க எப்பவாச்சும் எடுக்கற துணிய கூட காவேரி அக்கா எடுத்துப்பா, இல்லனா போட்டு பழசாக்கிட்டு தான் கொடுப்பா. நீங்க காலேஜ் சேர்க்கும் போது புது டிரஸ் எடுத்து தரேன்னு சொன்னீங்க, ஆனா அதுக்குள்ள என்னய அநாதையாக்கிட்டு போயிட்டீங்க. இந்த வேண்டாவுக்கு வேண்டாம்னு விசிறியெறஞ்ச துணி தான் போடணும்னு விதிச்சிருக்கு போல. நீங்க நான் பொறக்கறதுக்கு முன்னாடியே வேண்டாம்னு யோசிச்சிருக்கலாம்பா. அப்படி யோசிச்சிருந்தா இப்படி ஒரு நிலைமை எனக்கு வந்திருக்காது’ என்று தந்தையுடன் மனதுக்குள் சண்டையிட்டு கொண்டிருந்தவளின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. 
மனக்கலக்கத்தில் இருந்தவளுக்கு வசீகரன் அவளின் அறைவாசலில் நின்றபடி அவளையே பார்த்துக் கொண்டிருப்பது தெரியவில்லை. திறந்திருந்த கதவின் மீது ஒற்றை ஆட்காட்டி விரலை மடக்கி தட்டினான். அதில் சட்டென நிமிர்ந்தவள் அங்கே வசீகரனை கண்டதும் அவசரமாக கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைத்து படத்தை பெட்டியின் மீது வைத்து விட்டு அவனெதிரே வந்து கேள்வியாக அவனை பார்த்தாள்.
“அந்த போட்டோல இருக்கறது யாரு? உன் அப்பாவா?”
“ம்” குரல் வெளிவராமல் போகவே தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.
“சரி, இந்தா இந்த பணத்தை வச்சுக்கோ. உனக்கு தேவையான டிரஸ்ஸ எடுத்துக்கோ” என்று தன் பாக்கெட்டிலிருந்து கத்தை பணத்தை எடுத்து அவளிடம் நீட்டினான்.
சின்னபொண்ணு ஒருவித இறுக்கத்துடன் தலையை குனிந்து மெளனமாக நின்றாள். அவள் நின்ற தோரணையே அவள் பணத்தை வாங்க போவதில்லை என்று அவனுக்கு புரிந்தது. அவளோ லதாவிடம் பணம் கேட்டு அவமானப்பட்டதை கேட்டுவிட்டானே என்று கூனிகுறுகி போயிருந்தாள். 
“அன்னைக்கு என் அண்ணன் சரவணன் பணம் கொடுத்தத மட்டும் வாங்கிக்கிட்டே? நான் கொடுத்தா வாங்க மாட்டியா?” என்றான் அழுத்தமான குரலில்
அப்போதும் அவள் தலை நிமிராமல் மெளனமாகவே நின்றிருந்தாள்.
ஆடைக்கான பணத்தை அவள் சரவணனிடம் கேட்காமல் லதாவிடம் கேட்டது அவன் நினைவிற்கு வந்தது. எந்த சூழ்நிலையிலும் அவள் தன்மானத்தோடு வாழ நினைக்கிறாள் என்ற பிரமிப்பு வசீகரனின் மனதை வெகுவாக கவர்ந்தது. ஆனாலும் பணம் வேண்டாம் என்று மறுப்பதற்காக கூட அவள் அவனை நிமிர்ந்து பார்க்காமல் இருப்பது கடுப்பை வரவழைக்க, அவளை சீண்டிப்பார்த்து தலையை நிமிர்த்த தோன்றியது.
“ஆமா, இன்னைக்கு ஏன் கதவ சாத்தாம நின்னுட்டு இருக்கே. பட்டபகல்ல நான் எதுவும் செஞ்சிட மாட்டேன்னு தைரியமா? இல்ல உள்ளே வந்தா பரவால்லயா?” என்று அவள் காதருகே குனிந்து ரகசியம் போல கேட்கவும், திடுக்கிட்டு நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
இருபுருவங்களையும் ஏற்றி இறக்கி வசீகரமான புன்னகையை வீசினான். அதில் அவள் மருண்ட பார்வையுடன் அறைக்கதவின் பிடியை அழுத்தமாக பிடித்தபடி எச்சரிக்கையுடன் நிற்கவும், அவள் செய்கையை கண்டவன், “ம், அந்தபயம் இருக்கட்டும்” என்று கண்சிமிட்டி விட்டு சென்றான்.
அவன் சென்றபின்பும் அவளுக்கு படபடப்பு குறைய வில்லை. கல்லூரிக்கு தாமதமாவதால் அவன் செயலின் காரணத்தை ஆராய அவளுக்கு நேரமிருக்கவில்லை. அவசரமாக புத்தகப்பையை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு கிளம்பினாள்.
அன்று மாலை அலமேலுவும் லதாவும் குழந்தையுடன் டிவி பார்த்துக் கொண்டிருக்க நடராஜனும் ரஞ்சனியும் வந்து இணைந்து கொண்டார்கள்.
“சரவணன், வசி ரெண்டு பேரும் இன்னும் வரலயாம்மா?” என்று மருமகளிடம் விசாரித்தார் நடராஜன்
“சரவணன் வர லேட்டாகும்னு சொன்னாரு மாமா. வசி என்கிட்ட எதுவும் சொல்லல” என்றாள் லதா
அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே இரண்டு நபர்கள் துணிகள் அடங்கிய பெட்டிகளையும் துணிப்பைகளையும் கொண்டு வந்தனர். அவர்கள் பின்னால் வந்த வசீகரன் அவற்றை வாங்கி ஹாலில் கடைப்பரப்பி விட்டு அவர்களிடம் பணம் கொடுத்து அனுப்பினான்.
“வசி, என்னடா இதெல்லாம்? யாருக்கு இவ்வளவு வாரிட்டு வந்திருக்கே?” என்றார் அலமேலு.
“யுஎஸ் போயிட்டு வந்தப்போ நிறைய கேட்ஜஸ்ட் வாங்கிட்டு வந்தேன். அப்பவும் டிரஸ் எதுவும் எடுத்துட்டு வரலியானு ரஞ்சு புலம்பிட்டே இருந்தா. அதான் எல்லாருக்கும் சேர்த்து இன்னைக்கு எடுத்துட்டு வந்துட்டேன்” என்றான்
“வாவ், சூப்பர்டா அண்ணா” என்ற ரஞ்சனி சிறுபெண்ணாய் குதித்துக் கொண்டு வசீகரன் கடைபரப்பி இருந்த ஆடைகளை வகைப்படுத்தி பிரித்து வைத்தாள். பட்டுப்புடவைகளை அலுமேலுவிடம் கொடுத்தாள். நவீன சேலைகளை லதாவிடமும், வேட்டி சட்டையை தந்தையிடமும் கொடுத்தாள். பின்பு சரவணனுக்கும் குழந்தைக்கும் ஆடைகளை எடுத்து வைத்தபின்பும் நிறைய ஆடைகள் இருக்கவும் கண்களை அகல விரித்தாள்.
“டேய் அண்ணா, இதெல்லாம் எனக்கா? எப்பவும் டிரஸ் எடுத்துக் கொடுத்தா ரெண்டு, மூணுக்கு மேல தேறாது. இன்னைக்கு இருபதுக்கு மேலே இருக்கேடா? திடீர்னு தங்கச்சி பாசம் எங்கேயிருந்து பொங்குச்சுடா? ஒரே தடவையில இம்புட்டு பாசம் காட்டினா பிஞ்சு நெஞ்சு தாங்காதுடா” என்று அவள் நெஞ்சுவலிப்பது போல பாவனை செய்தாள்.
“நடிக்காதடி, எல்லாம் அளவு சரியா இருக்கானு பாரு முதல்ல” என்றான் வசீகரன்
ரஞ்சனி ஒவ்வொன்றாக பிரித்து பார்த்தாள். சிலது அவள் உயரத்திற்கு சரியாக இருந்தது. பலது அவளின் உயரத்தை விட சின்னதாக இருப்பதை போல தோன்றியது.
“டேய், டிரஸ் எடுத்தா ஒரே அளவு எடுக்க மாட்டியா? சின்னதும் பெரிசுமா எடுத்திருக்கே?” என்றாள்
“எனக்கென்னடி தெரியும்? எதுலாம் நல்லா இருக்கோ எல்லாத்தையும் செலக்ட் பண்ணி எடுத்துட்டு வந்துட்டேன்” என்றான் விட்டேற்றியாக
ரஞ்சனி அவளின் உயரத்திற்கு சரியாக இருக்கும் ஐந்து ஆடைகளை தனியாக வைத்தாள். மீதி பத்து சுடிதார் மற்றும் ஐந்து சல்வார்கமீஸ் என பதினைந்து ஆடைகளை சின்னதாக இருக்கவும் அவற்றை தனியாக அடுக்கி வைத்தாள்.
“கவர்ல கடை பேரே காணோமே, எந்த கடையில எடுத்தே? வா உடனே போய் மாத்திட்டு வந்துடலாம்” என்று எழுந்து கொண்டாள்.
“ப்ச், பில் போடும் போதே எக்ஸ்சேஞ்ச் கிடையாதுனு சொல்லிட்டான்டி” என்றபடி நீள் இருக்கையில் தொய்வாக அமர்ந்தான்.
“என்னடா வசி இப்படி பொறுப்பில்லாம இருக்கே? ஒன்னு ரெண்டுனா கூட பரவால்ல. பதினைஞ்சு டிரஸ்ஸ சின்னதா வாங்கிட்டு வந்திருக்க. திருப்பியும் வாங்க மாட்டான்னு சொல்றே. துணி எடுக்கப்போறவன் என்னையாவது கூட்டிட்டு போயிருக்கலாம் இல்ல? எவ்வளவு பணம் வேஸ்ட் பாரு”
“உன்னை கூட்டிட்டு போய் எடுத்தா அது சர்ப்ரைஸா இருக்குமாம்மா?”
“போடா நீயும் உன் சர்ப்ரைஸும். இப்போ இந்த டிரஸ் எல்லாம் என்னடா பண்றது?” என்றார் அலுப்புடன்
“நம்ம வீட்ல சின்னதா ஒரு பொண்ணு இருக்கே, அவ பேர் கூட சின்னபொண்ணு இல்ல? அவளுக்கு கொடுத்துடுங்க” என்றான்
அலமேலுவும் லதாவும் ஒரே நேரத்தில் வசீகரனை ஒரு மாதிரியாக பார்க்கவும் தொண்டையை செருமி, “தெரியாம டிரஸ்ஸ சின்னதா வாங்கிட்டோம் அதனால கொடுக்கறோம்னு சொல்லாம, நீங்களே புதுசா வாங்கி கொடுத்த மாதிரி கொடுத்துடுங்க. உங்கள உசரத்துல வச்சு பார்ப்பா. என்ன அண்ணி? நான் சொல்றது கரெக்ட் தானே?” என்றான் லதாவை பார்த்து
யோசனையுடன் அமர்ந்திருந்த லதா குழப்பத்துடன் தலையை எல்லா பக்கமும் ஆட்டினாள். அவள் சின்னபொண்ணுவிடம் பேசியதை கேட்டிருக்கிறான் என்பது மட்டும் நன்கு புரிந்தது.
“இந்த டிரஸ்ஸையெல்லாம் நானே கூப்பிட்டு கொடுத்துடறேன் வசி” என்றாள்
“அதுதான் சரியா இருக்கும் அண்ணி. அப்படியே செஞ்சுடுங்க” என்றவன் படியேறி மாடியில் இருந்த தன்னறைக்கு சென்றான்.
அலமேலு குழப்பத்துடன் கணவனுக்கு கண்ஜாடை காட்டிவிட்டு அறைக்குள் சென்றார். நடராஜனும் உள்ளே செல்ல, “என்னங்க நடக்குது? எனக்கெதுவும் சரியாப்படல” என்று புலம்பினார்
“அவன் தான் அளவு தெரியாம எடுத்துட்டு வந்ததா தெளிவா சொல்றானே அலமு. வீணா மனச போட்டு குழப்பிக்காத” என்று மனைவியை சமாதானம் செய்து கொண்டிருந்தார்.
“எனக்கு அஞ்சு டிரஸ், வேலை செய்ய வந்தவளுக்கு பதினைஞ்சு டிரஸ்” என்று முனகி கொண்டே ரஞ்சனி தன்னுடைய ஆடைகளை தூக்கி கொண்டு மாடியேறினாள்.
லதா யோசனையுடன் குழந்தையை வைத்தபடி அமர்ந்திருந்தாள். நடந்தது எதுவும் தெரியாத சின்னபொண்ணு வழக்கம் போல கல்லூரி முடிந்து புத்தகப்பையுடன் வீட்டிற்குள் நுழைந்தாள். லதா ஹாலில் இருப்பதை கண்டதும், “காபி போட்டு எடுத்துட்டு வரட்டுமா மேடம்?” என்றாள்.
“ஆமா, அதுக்கு முன்னாடி உன் பேக்கை வச்சிட்டு இங்கே வா” என்றாள் லதா
அவளும் புத்தக்பையை தன்அறையில் வைத்துவிட்டு லதாவிடம் வந்து நின்றாள். “காலைல டிரஸ் எடுக்க பணம் கேட்டே இல்ல? வேற யார்கிட்டயும் கேட்டியா?”
“இல்ல மேடம், நீங்க தான் பழைய டிரஸ் இருக்கறதா சொன்னீங்களே, அதுவே போதும்னு நான் சரவணன் சார்கிட்ட கூட கேக்கல”
“ம், இங்கே இருக்கறது எல்லாம் உனக்கு தான் எடுத்துக்க, சரியா இருக்கானு பாரு” என்றாள் அங்கிருந்த துணிப்பெட்டிகளை காட்டி
“மேடம், இதெல்லாம் புதுசு மாதிரி இருக்கே”
“ஆமா, எல்லாமே புதுசு தான், எடுத்துக்க, சைஸ் சரியா இருக்கானு பாரு”
சின்னபொண்ணு பேராவலுடன் அந்த பெட்டிகளை திறந்து பார்த்தாள், அதன் நிறத்திலும் வேலைப்பாட்டிலும் கண்கள் அகலவிரிந்து கொண்டது. ஒவ்வொன்றாக எடுத்து தன் மேல் வைத்து பார்த்தாள்.
“மேடம், எல்லாமே எனக்காகவே தைச்சது போல கரெக்ட்டா இருக்கு. என்னால நம்பவே முடியல. நிஜமாவே இதெல்லாம் எனக்கா?”
“ம், உனக்கு தான். சர்ப்ரைஸ் பண்ணலாம்னு சொல்லாம வாங்கி வச்சேன்” என்றாள் லதா முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு. அதை உணராத சின்னபொண்ணு உணர்ச்சி மிகுதியில் லதாவின் கரத்தை பிடித்துக் கொண்டாள்.
“மேடம், உங்களுக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுனு தெரியல மேடம். சரவணன் சாரோட நல்ல குணம் உங்ககிட்டயும் அப்படியே இருக்கு. நீங்க ரெண்டு பேரும் தான் எனக்கு படிப்பும், தங்க இடமும், போட்டுக்க துணியும், சாப்பாடும் கொடுத்திருக்கீங்க. இந்த நன்றிய நான் எப்பவும் மறக்க மாட்டேன் மேடம்” என்று லதாவின் கரத்தை இருகண்களிலும் ஒற்றிக் கொண்டாள்.
அவளின் செய்கையில் லதாவுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. “சரிசரி, எமோஷனல் ஆகாத. எல்லாத்தையும் உன் ரூம்ல வச்சுட்டு, காபி போட்டு எடுத்துட்டு வா”
“மேடம் எனக்கு இன்னும் எதாச்சும் நிறைய வேலை இருந்தா குடுங்க, நான் செய்யறேன். இந்த டிரஸ்க்கெல்லாம் ரொம்ப செலவாகி இருக்குமே” என்றாள் கவலையான குரலில்
“அதப்பத்தி நீ கவலப்படாத. நான் சொல்ற வேலைய மட்டும் செஞ்சா போதும்”
“சரிங்க மேடம்” என்றவள் ஆடைகளை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள்.
வசீகரன் மாடியில் அவன் அறைக்கு எதிரே இருந்த வளைவான மரக்கைப்பிடியில் இருகைகளையும் ஊன்றியவாறு இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான்.
சின்னபொண்ணு காபி கொண்டு வர சமையலறைக்கு சென்ற பின், படியிறங்கி ஹாலுக்கு வந்தான்.
“என்னவாம் அண்ணி? சைஸ் எல்லாம் சரியா இருக்காமா?”
வசீகரனை சந்தேகமாக பார்த்தபடி “அவளுக்குனே எடுத்தமாதிரி கரெக்ட்டா இருக்குனு சொன்னா” என்றாள் லதா 
“வேறேன்ன சொன்னா?”
“நான் தான் வாங்கி கொடுத்தேனு ரொம்ப எமோஷனலாகி நன்றி சொன்னா, எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு, அது என்ன பீலீங்னே தெரியல”
“நம்ம கிட்ட வச்சிக்கிட்டே இல்லனு சொல்றதவிட இல்லாதவங்களுக்கு முடிஞ்சத செஞ்சா அதுல வர்ற சந்தோசமே தனி தான் இல்ல அண்ணி?”
“வசி, நீங்க பேசறது என்னை கார்னர் பண்றமாதிரியே இருக்கே, ஏன்?”
“ஐயோ அப்படியெல்லாம் இல்ல அண்ணி. நான் பொதுவா தான் சொன்னேன்” என்றான்
சின்னபொண்ணு கையில் காபி கப்புடன் லதாவை நோக்கி வந்தாள். ஏனோ அவளை கண்டதும் சீண்டிப்பார்க்க உள்ளம் துள்ளியது.
“அண்ணி, கொஞ்ச முன்னாடி இங்கே ஒருத்தங்க சந்திரமுகியா மாறினத பாத்தீங்களா?” என்றான் சின்னபொண்ணை அழுத்தமாக பார்த்தபடி
“நான் பாக்கல. நீங்க சொல்றத பாத்தா, நீங்க தான் பாத்திருக்க போல தெரியுது. அதனால நீங்களே சொல்லிடுங்க”
“சந்திரமுகி படத்துல நகைபொட்டிய தொறக்கும் போது கங்கா சந்திரமுகியா மாறிடுவாங்க, அவங்க கண்ணுல ஒளிவட்டம் தெரியும், அதே மாதிரி இந்தம்மா நீங்க வாங்கி கொடுத்த துணிப்பெட்டிய தொறந்து டிரஸ்ஸை எல்லாம் பாத்து இது எனக்கா, இது எனக்கானு சொன்னப்போ நீங்க வேற ஆங்கிள்ல இருந்து பாத்திருக்கணும், சந்திரமுகியே நேர்ல வந்தமாதிரி இருந்துச்சு. எனக்கே பக்குனு ஆயிடுச்சுனா பாத்துக்கோங்களேன்” என்றான் குறும்பு சிரிப்புடன்
“அதுசரி” லதா வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.
சின்னபொண்ணுவுக்கோ கூச்சத்தில் முகம் சிவந்து விட்டது. தலையை குனிந்தபடி லதாவிடம் காபி கப்பை நீட்டினாள்.
“வேண்டா எனக்கு வேணும்” என்ற வசீகரனின் குரலில் லதா சின்னபொண்ணு இருவரும் திரும்பி அவனை அதிர்ச்சியுடன் பார்க்க, “வேண்டா எனக்கு காபி வேணும்னு சொல்ல வந்தேன், காபி மிஸ் ஆயிடுச்சு” என்று புன்னகைத்தான்.
இவன் பேச்சு, பார்வை, நடவடிக்கை எதுவும் சரியில்லயே என்ற யோசனையுடன் லதா வசீகரனையே பார்த்திருக்க, அவன் பார்வையோ வேண்டாவின் மீது படிந்திருந்தது.
(தொடரும்)

2 thoughts on “மெளனம் 06

  • Buvana Buvana

    Appidipodu vasi

    Reply
  • Sadam Rajees

    அப்படி போடு🤩🤩… அலமேலு கர்மா சுத்தி சுத்தி அடிக்க போகுது😏…இவங்களுக்கு தேவைன்னா பொண்ணு பேசுவாங்கலாம்,தேவை தீர்ந்ததும் வேணாம்னு சொல்லுவாங்கலாம்…இவங்க சுயநலத்தினால் அநியாயமா ஒரு உசுரு போச்சு😡….லதா அடுத்தவங்களுக்கு கொடுத்து வாழப்பாரு😏….வசீ செம போ😻…

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!