Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

38. அர்ச்சனா நித்தியானந்தம் - காதலும் கடத்தப்படும்Contest Stories 2026

காதலும் கடத்தப்படும் – 13

 

காதலும் கடத்தப்படும் – 13

தாடியுடன், வெட்டாமல் விட்ட கேசமும், அழுக்கேறிய சட்டையும், வேட்டியுமாய், வாயிலில் வந்து நின்றவனை, இந்துவின் அண்ணனால் அடையாளம் காண முடியவில்லை.



Advertisement

“யாரு?”

“நான் இளமாறன்…”

“யாரு தெரியலையே?”

Advertisement

“இந்து…”

Advertisement

“இங்க எங்கடா வந்த?” என்றவன் இளமாறனின் சட்டையைப் பிடித்து ரோட்டில் தள்ளினான்.

“சார், நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க…”

“என்னடா கேட்கணும்? இங்க எதுக்கு வந்த? அதான் அவளை தலைமுழுகிட்டோம்ல? அப்புறம் எதுக்கு வந்த?”

Advertisement

“சார், ப்ளீஸ் சார்… அப்படியெல்லாம் சொல்லாதீங்க… அவ ரொம்ப முடியாம இருக்கா… இதோ இந்த டாக்டர் ரிப்போர்ட்டை பாருங்களேன்” 

அவன் நீட்டிய கோப்புகளை பிடுங்கி வீசியெறிந்தான், இந்துவின் அண்ணன்.

“காசு வேணுமா காசு? அதுக்கு எதுக்குடா ரிப்போர்ட்டை நீட்டுற? வேணும்னா அஞ்சு பத்து பிச்சை போடறேன் வாங்கிட்டு போ. பெரிய வீட்டு பொண்ணை கல்யாணம் பண்ண வேண்டியது. அப்புறம் ஏதாவது காரணத்தை சொல்லி காசுன்னு வந்து நிக்க வேண்டியது”

தரையில் சிதறிய காகிதங்களை அள்ளிக்கொண்டு அவன் முன்னே வந்து நின்ற இளமாறன்,

“சத்தியமா அப்படி இல்லீங்க… அவளுக்கு ஒரு ஆபரேஷன் பண்ணனும்… இல்லனா…”

“இல்லனா என்ன? இல்லனா என்னடா? அவளை நினைச்சு நினைச்சு நெஞ்சு வலி வந்து படுக்கையில விழுந்த என் அம்மா ஆறு மாசம் முன்னாடி தான் செத்ததுபோனா… ‘என் பொண்ணை என்கிட்டேர்ந்து பிரிச்சவன் என்னை போலவே மனசு நொந்து அழுவான்’னு புலம்பிக்கிட்டே செத்துப் போனா. அவ சாபம் உன்னை சும்மா விடாது. என் அப்பா அவமானம் தாங்க முடியாம மூணு வருஷம் முன்னாடி காசி ராமேஸ்வரம்னு போன மனுஷன். இருக்காரா செத்தாரான்னு தெரியல. என் குடும்பத்தை கெடுத்துட்டு காசு வேணும்னு வெக்கமே இல்லாம வந்து நிக்கற. வச்சு வாழ முடியலைன்னா எதுக்குடா கல்யாணம் பண்றீங்க? பெத்தவங்க எங்களுக்கு தெரியாது புள்ளைக்கு எது நல்லது கெட்டதுன்னு? பேசிப்பேசி மயக்கி அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு காசுன்னு வந்து நிக்கற. நீயெல்லாம் ஒரு ஆம்பளையா? போடா இங்கிருந்து. இல்ல நானே உன்னை கொன்னுடுவேன்” என்று அவன் கோபத்தின் உச்சியில் திமிறிக்கொண்டு வர, அவனது மனைவியும், அக்கம்பக்கத்தினரும் அவனை தடுத்து நிறுத்த, அவனது சுடு சொற்கள் தாங்கமுடியாமல் மனம் நொந்து வீடு திரும்பினான், இளமாறன்.

 

‘வச்சு வாழ முடியலன்னா எதுக்குடா கல்யாணம்? நீ ஆம்பளையா?’ என்று அவளது அண்ணன் பேசிய வார்த்தைகள் அவனது நினைவில் ஓடிக்கொண்டே இருந்தது. இந்துவின் முகத்தை அவனால் ஏறெடுத்து பார்க்க முடியவில்லை. பிள்ளைகளையும் சரிவர கவனிக்காமல், பித்து பிடித்தவனைப் போல் கிடந்தான்.

 

எங்கும் செல்லாமல் பிள்ளைகள் அருகிலேயே கிடப்பதைக் கண்டு மனம் வருந்திய இந்து, அவர்களை சிறிது நேரம் வெளியே சென்று மற்ற பிள்ளைகளோடு விளையாடும்படி பணித்தாள். வாயிலுக்கு வந்த இரு பிள்ளைகளும், சோர்ந்து அமர்ந்திருந்த தந்தையின் அருகே சென்றனர்.

“அப்பா…”

அர்ஜுனின் குரலில் நினைவிற்கு வந்தான், இளமாறன்.

“என்ன அஜூ?”

“அம்மாவுக்கு உடம்பு எப்போ சரியாகும்?”

“சீக்கிரம் சரியாயிடும்…”

“அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியானதும் நாம பீச்சுக்கு போவோமா?” என்றான், மதன்.

“போலாம் மதனா. நான் கூட்டிட்டுப்போறேன்” என்றவனது கண்கள் குளமாகின.

“அம்மா கொஞ்ச நேரம் விளையாண்டுட்டு வர சொல்லுச்சு” என்று அர்ஜுன் கூற, ‘சரி’ என்று தலையசைத்தான்.

 

சிறிது நேரத்தில் உள்ளிருந்து இருமல் சத்தம் வர, தனது முகத்தினை துடைத்துக்கொண்டு, ஒரு குவளையில் நீர் எடுத்துக்கொண்டு அவளிடம் சென்றான். இவனைக் கண்டதும் அவள் சிரிக்க, அவனும் தனது துக்கத்தை மறைத்துக்கொண்டு அவளுக்காக சிரித்தான். மெல்ல எழுந்து அமர்ந்து அவள் நீர் பருக, அவன் அருகிலே அமர்ந்தான்.

 

“என்னங்க இது சவரம் பண்ணாம, தலைமுடி வெட்டாம?”

“இருக்கட்டும் இந்து பரவால்ல…”

“இல்லீங்க, நீங்க இப்படி இருக்கக்கூடாது. தைரியமா இருக்க வேண்டாமா? உங்கள பார்த்து பிள்ளைங்க ரெண்டும் மனசு ஒடஞ்சு போய்டும். போங்க, போய் முடிவெட்டிடு, குளிச்சுட்டு வாங்க” என்றாள்.

அவள் பேச்சை தட்டாமல், முடி திருத்தி, சவரம் செய்து, குளித்து முடித்து, சற்று பளிச்சென இருக்கும் உடையை உடுத்திக்கொண்டு அவளருகே வந்து அமர்ந்தான்.

 

அவள் மிகப்பெரிதாக சிரித்தாள். கண்கொட்டாமல் அவனையே பார்த்திருந்தாள்.

“என்ன பார்க்குற இந்து?”

“மாரிஸ் தியேட்டர்ல ஒரு ஹீரோ இருந்தாரு. அவரை பார்த்து ஊர்ல உள்ள பொண்ணுங்க எல்லாருக்கும் கிறுக்கு பிடிச்சது. எனக்கும் பிடிச்சது. ஆனா அந்த ஹீரோவுக்கு என் மேல மட்டும் தான் கிறுக்கு. நீங்க பார்க்க அந்த ஹீரோ மாதிரியே இருக்கீங்க” என்றாள். அவள் சிரிக்க, அவனும் சிரித்துக்கொண்டான்.

“கிறுக்கு பிடிக்காம? ராஜாத்தியா வளர்ந்த பிள்ளை, ‘நீ மட்டும் போதும்’னு காலைல விடிஞ்சும் விடியாமலும் வந்து நின்னா கிறுக்கு தான் பிடிக்கும்…”

“மழையில நனைஞ்சு நனையாம கைல ஸ்க்ரிப்ட்டோட ஜெராக்ஸ் போட வந்து நின்ன ஹீரோவ பக்கத்துல பார்க்கும்போது நினைச்சுக்கூட பார்க்கல ஆயுசு முழுக்க பக்கத்துலேயே இருப்பேன்னு”

“நானும் நினைச்சு பார்க்கல. என் ஸ்க்ரிப்டை திருட்டுத்தனமா எடுத்துட்டு போய் படிச்ச புள்ளை என் மனசையும் திருடிக்கும்னு.”

“உண்மைதான்… ஆனா பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்ட மாதிரி, திருட்டுத்தனமா போஸ்டரை பார்த்தே சந்தோஷப்பட்டவளை மனசுல உள்ளத காட்ட வச்சு, தண்டனை கொடுக்காம உங்களையே கொடுத்தீங்களே… திருடலாம் தப்பில்லை…”

“எடுத்துக்கோ, எல்லாமே உனக்குத்தான்… இந்த உசுரை வச்சுகிட்டு நான் என்ன பண்ண போறேன்…”

“வச்சுக்கோங்க… இன்னும் கொஞ்ச நாள் வாச்சுக்கோங்க… ரெண்டுங்கெட்டான் வயசுல ரெண்டு பிள்ளைங்க இருக்கு… அதுங்களுக்கு ஆதாரமா நீங்க இருக்கணும், அதுங்கள கரைசேர்க்கணும்”

அவன் கண்கலங்கினான். அவனது கண்ணீரை துடைத்துவிட்டாள். 

“அந்த ட்ரங்க் பெட்டியில ஒரு பை இருக்கு எடுத்துட்டு வாங்களேன்”

அவன் எடுத்து வந்தான்.

முற்றிலும் உலர்ந்து, சருகாகிப்போன மலர்களை காண்பித்தாள். 

“முத முதல்ல என் ஹீரோ எனக்கு கொடுத்தது. அப்புறம் அடிக்கடி கோவில் குளத்துல சந்திக்கும்போது கொடுத்தது…”

“இன்னுமா இதை வச்சிருக்கே?”

“எப்பவும் வச்சிருப்பேன்… எனக்கு ஒரு ஆசை… சொல்லவா?”

“சொல்லு இந்து, நான் செய்யறேன்”

பெருமூச்செடுத்தவள், “கடைசியா என்ன வழியனுப்பும்போது, என் புடவை முந்தானையில இந்த பூவெல்லாம் வச்சு கட்டிடறீங்களா?” என்றாள், விழிநீர் வழிய. நின்றிருந்தவன் அவளது பாதங்களின் மீது விழுந்து அழுதான். 

 

மூவருமே அவளை சுற்றிச்சுற்றி வந்தனர். அவளுக்காக பாடல் பாடினர். அர்ஜுனும் மதனும் அவளுக்காக நடமாடினர். அவள் சிரிப்பதற்காக இவர்களும் சிரிப்பது போல் நடித்தனர். அனைத்து சிரிப்புகளிலும் சோகம் அப்பிக் கிடந்தது.

 

“இந்து இந்து…”

காலை கண்விழித்தவன், மெத்தையின் மேல் அவள் இல்லாமல் போனதைக் கண்டு பதறி அறையை விட்டு வெளியே ஓடி வந்தான். அடுக்களையில் அவள் தேநீர் கலந்தபடி, “எழுந்துட்டீங்களா?” என்றாள்.

“ஒரு குரல் கொடுத்தா நான் செய்யமாட்டேனா? நீ எதுக்கு” என்றபடி அவளருகே வந்தவனின் முகத்தை கைகளில் ஏந்தி, அவனது நெற்றியில் முத்தமிட்டாள்.

“ரொம்ப நாள் ஆச்சுல்ல?! படுத்தே இருக்க முடியல… டீ போடலாம்னு எழுந்தேன்… பல்லு தேய்ச்சுட்டு வாங்க” என்று அவள் கூற, விலகி திரும்பியவன், பிள்ளைகள் இருவரும் நடப்பவற்றை பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.  மெல்ல நடந்து அவர்களின் அருகே வந்தவள், இருவரின் நெற்றியிலும் முத்தமிட்டாள்.

“அம்மா உடம்பு சரியா போச்சா?” என்று மதன் அப்பாவியாய் வினவ, ‘ஆம்’ என்று தலையாட்டினாள். 

 

அடுத்து வந்த நாட்களிலும் காலை பொழுது அவள் முகத்தில் விடிய, இளமாறனின் வலி கொண்ட நெஞ்சம் சற்று மட்டுப்பட்டது.

“இந்து…”

“எழுந்துட்டீங்களா?”

அவனது நெற்றியில் முத்தமிட்டாள். அவன் அவளை அணைத்துக்கொண்டான்.

“ஏன் நாலஞ்சு நாளா காலைல எழுந்து கஷ்டப்படற?” 

“என்னங்க கஷ்டம்? சந்தோஷமா இருக்கு…”

அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்த்தான். அவளது பிரியமான மஞ்சள் புடவை அணிந்திருந்தாள்.

“ரொம்ப அழகா இருக்க இந்து…”

சிரித்துக்கொண்டு அவனது மார் மீது சாய்ந்துகொண்டாள்.

 

இட்டிலி கடையிலிருந்து அர்ஜுன் அனைவருக்குமான காலை உணவை வாங்கி வர, நால்வரும் சிரித்துக்கொண்டு உண்டு முடித்தனர். அரை இட்டிலி விழுங்குவதே இந்துவுக்கு பெரும்பாடாக இருந்தது. இளமாறனின் தோள் மீது சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள். மகன்கள் ஏதேதோ பேச, அவர்களை வாஞ்சையோடு வருடினாள். மெல்ல எழுந்து இளமாறனைக் கண்டாள். அவளது கண்கள் ஈரம் கொண்டிருந்தன. அவனைக் கண்டு அவள் புன்னகைக்க, அவனும் புன்னகைத்தான். தனது கைகளை இதய வடிவில் கோர்த்து அதன் வழியே அவனைக் கண்டாள். அவன் அவளது நெற்றியில் முத்தமிட்டான். அவள் தளர்ந்து அவனது தோள் மீது மீண்டும் சாய்ந்துகொண்டு அவனது கைகளைப் பற்றிக்கொண்டாள். 

“இந்து உள்ள கட்டில்ல போய் படுத்துக்க. இனி காலைல எழுந்து வேலையெல்லாம் செய்யக்கூடாது. சரியா?” என்றான்.

அவள் அமைதியாக இருந்தாள். அவளது முகத்தினை மெல்ல உயர்த்திப் பார்த்தான். அவளது உடல் தளர்ந்திருந்தது. அவள் நித்திய நித்திரைக்கு சென்றுவிட்டாள் என்று உணர்ந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!