அத்தியாயம் 5.2_தேவனுக்கேற்ற தேவியோ_கார்த்திகா கார்த்திகேயன்
அப்படியே நாட்கள் கடக்க அன்று அமருக்கு ஏனோ ரதியின் நினைவு அதிகம் வந்தது. தினமும் போனில் பேசினாலும் நேரில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று அவ்வளவு ஆசைப் படுவான்.
இன்று காலையில் இருந்தே அவனால் அவளைப் பார்க்க முடியவில்லை. அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் அது வேறு தவிப்பாக இருந்தது.
Advertisement
அதனால் அவளை எங்க என்று தேடிச் செல்ல திவ்யா மட்டுமே அவன் கண்ணில் பட்டாள். அவளைக் கண்டதும் அவன் அவனை நெருங்க “என்ன மச்சான் உங்க கண்ணு உங்க கண்ணம்மாவை தேடுது போல?”, என்றாள் சிரிப்போடு.
அவளைக் கண்டு சிரித்தவன் “ஆமா கொழுந்தியா தரிசனம் கிடைச்சிருச்சு. என் தேவியோட தரிசனம் கிடைக்க தான் கஷ்டமா இருக்கு? எங்க என் ரதி?”, என்றான்.
Advertisement
Advertisement
“பார் டா. என் ரதியாமே? கல்யாணம் முடியுற வரைக்கும் அவ எங்க ரதியாக்கும் மச்சான்”
“நானே உன் மச்சான் தான். அப்ப என் ரதியும் உன் ரதி தான்”
Advertisement
“பொழைச்சிக்குவீங்க. சரி ஏதோ அசைன்மெண்ட் கொடுத்தாங்களாம். புக் எடுக்கணும்னு லைப்ரேரிக்கு தான் போனா. போய்ப் பாருங்க”
“என்ன அதிசயம்? சைன்டிசஸ்ட் மேடம் எப்பவும் லைப்ரேரில தான் இருப்பீங்க? இன்னைக்கு என்ன அவ கூட போகாம இங்க தனியா உக்காந்துருக்க?”
“அரவிந்த் மாமா வறேன்னு சொன்னான். அதான் நான் உக்காந்துருக்கேன்”
“அவனுக்கு என்னவாம்?”, என்று கேட்ட அமரின் குரலில் சிறிது எரிச்சல். ஏனென்றால் அமருக்கு சிறு சந்தேகம் உண்டு. அரவிந்த் ரதியை விரும்புகிறான் என்று. ஏனென்றால் ரதியைக் கண்டால் அரவிந்தின் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி இருக்கும். இருவரும் ஒரே வகுப்பு தான். ஆனால் அதிகம் பேசியது இல்லை. இப்போது ரதி காதல் வேறு தெரிந்த பிறகு இருவரும் எதிரியைப் போல தான் விலகிச் செல்கிறார்கள்.
“மாமா ஏதோ பேசணும்னு சொன்னான். சரி நீங்க போய் உங்க கண்ணம்மாவை பாருங்க’, என்று சொல்ல “சரி டி வாயாடி”, என்று சொல்லி விட்டு நடந்தான்.
“என்னது டி யா? அப்படி சொல்லலாமா? யாரு மச்சான் உங்களுக்கு அந்த உரிமையைக் கொடுத்தது?”, என்று சிரிப்புடன் கேட்க “கொழுந்தியாவை சொல்லலாம் டி டி டி”, என்று சொன்னவன் ஓடியே விட்டான்.
அவளும் சிரிப்புடன் அமர்ந்திருக்க “என்ன மேடம் தன்னால சிரிக்கிற? யோசிச்சு யோசிச்சு பைத்தியம் ஆகிட்டியா திவி?”, என்று கேட்ட படி அவள் அருகே அமர்ந்தான் அரவிந்த்.
“இல்லை மாமா, அமர் மச்சான் வந்தாங்க. அதான் பேசிட்டு இருந்தோம்”, என்று சொல்ல “ஓ”, என்று கேட்ட அரவிந்தின் குரலிலும் அதே எரிச்சல்.
“சரி சொல்லு என்ன விஷயமா மாமா பேசணும்?”
“ரதி பத்தி தான் திவி”
“அக்காவுக்கு என்ன மாமா?”
“அவ எதுக்கு இப்படி பண்ணுறா?”
“அவ லவ் விஷயம் சொல்லுறியா?”
“ம்ம், அந்த விஷயம் தெரிஞ்சதுல இருந்தே என் நிம்மதி போச்சு. அது எப்படி நம்ம வீட்ல சரி படும். அத்தைக்கு இந்த விஷயம் தெரிஞ்சா?”
“எப்படி தெரியும்? நீயும் நானுமா சொல்லப் போறோம்?”
“இல்லை.. ஆனா.. அது”
“மாமா காதல் யார் மேல எப்ப வரும்னு யாருக்கும் தெரியாது. அதுல இருந்து தப்பிக்கிறது எல்லாம் கஷ்டம். ரதிக்கு பிடிச்சிருக்கு மாமா. அவ சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்”
“ஆமா. ஆனா அவன்.. அந்த அமர்.. அவன் எப்படின்னு தெரியாம?”
“நல்லவங்க தான் மாமா”
“அவங்க குடும்பம் அப்படி இல்லை திவி. ரதி அங்க போனா நல்லா இருக்க மாட்டா”
“மச்சான் அவளை பாத்துக்குவாங்க. அவங்க காதல் அவங்களை வாழ வைக்கும்”
“நான் சொல்றது உனக்கு புரியாது திவி. இதை விடச் சொல்லி ரதி கிட்ட உன்னைச் சொல்லச் சொல்லணும்னு நினைச்சு தான் வந்தேன். ஆனா விட்டா நீயே அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைப்ப போல?”
“நான் இல்லை. அப்படி ஒரு சூழ்நிலை வந்தா நீயும் என் கூட இருந்து அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைப்ப”, என்று சிரிப்புடன் சொல்ல அவளை வேதனையாக பார்த்தவன் அந்த வேதனையை உள்ளுக்குள் விழுங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றான்.
லைப்ரேரியில் ரதியைக் கண்டு கொண்ட அமர் அவள் எதிரே சென்று நிற்க அவள் கண்கள் விரிந்தது. “நீங்களா?”, என்று அவள் வியக்க “தினமும் பாத்தாலும் இதே ரியாக்ஷன் கொடு டி. அப்புறம் நான் படுற கஷ்டம் எனக்கு தான் தெரியும். தூக்கிட்டு போயிறணும் போல இருக்கு தெரியுமா?”, என்று சொல்லி அவளை சிவக்க வைத்தான்.
ஏற்கனவே எடுத்த புத்தகத்தை அங்கே கொடுத்து அவள் பெயருக்கு மாற்றிக் கொண்டவள் கையெழுத்தைப் போட்டு விட்டு நடக்க அவள் அருகே நடந்த அமர் ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தான். அவளும் பதில் சொல்லிக் கொண்டே இருந்தாள்.
இருவரும் மெதுவாக நடந்து வர “பாப்பா”, என்றான்.
“ம்ம்”
“ரெண்டு நாள் லீவ் டி. கடுப்பா இருக்கு. சனி ஞாயிறு எதுக்கு டா வருதுன்னு இருக்கு”, என்று சொல்ல அவளுக்கும் அந்த கவலை தான் என்றாலும் அதை சொல்ல தயக்கமாக இருந்தது.
எதுவும் சொல்லாமல் அவள் நடக்க அவனும் அவளுடன் அமைதியாக நடந்தான். ஏனோ எதுவும் பேசாத போதும் அந்த அமைதியும் அருகாமையும் அழகாக தான் இருந்தது.
ஒலிகள் மட்டும் தான் அழகா என்ன? ஒலி இல்லாவிட்டாலும் சில நேரம் அந்த அமைதி கூட அழகு தான். இருவரும் நடக்கும் போது அவர்கள் கரங்கள் வேறு லேசாக உரசிக் கொண்டது. அவளும் விலக வில்லை. அவனுக்கும் விலக தோன்ற வில்லை. அவர்கள் இருவரும் காதலித்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆன போதும் அவளை அவன் தீண்டியது கூட இல்லை.
அதனால் முதல் தீண்டல் கொஞ்சம் ஆர்வத்தையும் தடுமாற்றத்தையும் தான் இருவருக்கும் கொடுத்தது.
மீண்டும் ஒரு முறை இருவரின் கரமும் உரச பட்டென்று அவள் கரம் பற்றிக் கொண்டவன் அதை விடாமலே நடக்க அவளுக்குள் பெரும் தவிப்பு.
ஏனோ அவன் மார்பில் தஞ்சம் கொள்ளச் சொல்லி உள்ளுணர்வு சொல்ல தவிப்பாய் தயக்கமாய் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
அவள் பார்வையை கண்டவன் “பிடிக்கலையா ரதி மா? கையை விட்டுறவா?”, என்றான்.
ஏனோ அவன் கேள்வியும் அவன் தொடுகையும் அவளை பாதிக்க அவன் பிடித்த கையை இன்னும் இறுக்கிப் பிடித்தாள். அவள் செய்கையில் அவன் முகம் மலர்ந்து தான் போனது.
இது வரை பேச்சிலும் நேரிலும் எந்த தொல்லையும் செய்யாதவனுக்கு இந்த சந்தோஷத்தைக் கூட அவள் எப்படி கொடுக்காமல் இருப்பாள்?
இருவரும் கரம் பற்றியே நடந்தார்கள். “ரெண்டு நாள் எப்படி தான் உன்னைப் பாக்காம இருக்க போறேன்னு தெரியலை டி. உங்க வீட்டுக்கே வந்துறவா?”, என்று புலம்பிக் கொண்டே வந்தான் அமர்.,
அவன் பேச்சை மாற்றுவதற்காக “அந்த பிரியா ஓகே வா? உங்க கிட்ட பேசினாங்களா? எனக்கு உங்க பிரண்ட்ஷிப்பை பிரிச்ச மாதிரி இருக்கு?”, என்றாள்.
“உண்மையான பிரண்ட்ஷிப் எப்பவும் பிரியாது கண்ணம்மா. எனக்கான பிரண்ட்ஸ் என் கூட தான் இருக்காங்க. பிரிஞ்சு போனவங்க என் பிரண்ட்ஸ் கிடையாது”
“ஆனா மத்தவங்க உங்க கூட பேசுறது இல்லை தானே? அதுவும் என்னால”
“இப்ப என்ன டி? அவ கிட்ட மறுபடி பேச சொல்லுறியா? பேசினா லவ் பண்ணுறேன்னு சாகடிப்பா. பிரண்டா பேசினா கூட அட்வான்டேஜ் எடுத்துக்குவா. அவ கிட்ட பேச சொல்லுறியா? நான் பேசவா?”, என்று எரிச்சலுடன் கேட்டான். அவனே அவளிடம் ஆசையாக பேச வேண்டும் என்று வந்திருக்க அவள் தேவையில்லாதது பேசினால் அவனுக்கு எப்படி இருக்குமாம்?
“கொன்னுருவேன். நான் மத்த பிரண்ட்ஸ் பேசலைன்னு தான் சொன்னேன். அவ கிட்ட எப்பவும் நீங்க பேசவே கூடாது. போதுமா?”, என்று சொல்ல அவள் அவசரமான பதில் அவள் முகத்தில் இருந்த காரம் அவளின் பொறாமையை அப்பட்டமாக சொல்ல சட்டென்று அவன் கோபம் மறைந்து மனம் லேசானது.
அவன் அவளையே காதலாக பார்க்க அவளுக்கோ அவன் பார்வையில் திடீரென இதயம் தாறுமாறாக துடிப்பது போல இருந்தது. யாரும் இல்லாத தனிமை, ஒளிப் பதிவு கருவி கூட இல்லாத இடம், மனதுக்கு மிகவும் நெருக்கமானவளின் அருகாமை, இருவரின் கைகளும் பின்னி பிணைந்திருக்கும் அந்த தொடுகை அனைத்தும் சோதித்தது.
எங்கே அவனை நிமிர்ந்து பார்த்தால் கூட அவன் அடுத்த கட்டத்துக்கு சென்று விடுவானோ என்ற பயம் கொடுத்தது அவளுக்கு.
ஏற்கனவே அடிக்கடி அவன் கண்ட்ரோலை இழந்து ஏதாவது சொல்லிக் கொண்டு தான் இருப்பான். அவன் சொல்லும் போதே அவளது உணர்வுகள் அனைத்தும் கட்டவிழ்ந்து விடும், அப்படி இருக்க இந்த தனிமை அவனை தூண்டி விடுமோ என்று பயமாக தான் இருந்தது.
அவனுக்குமே இது வரை காத்த கண்ணியம் எல்லாம் காணாமல் போய் விடுமோ என்று பயம். ஆனாலும் அவளை ஒரு முறையாவது முத்தமிட மாட்டோமா என்று அவன் காதல் மனம் ஏங்க சந்தர்ப்பத்தை பயன்படுத்த சொல்லி இதயம் அவனைத் தூண்டியது.
அவளது அந்த சின்ன குண்டு கண்கள் அவனை அவ்வளவு தொல்லை செய்தது. சிறு பெண் தான். பதினெட்டு வயது ஆரம்பிக்க இன்னும் மூன்று மாதம் இருக்கிறது என்று அவனுக்குமே தெரியும்.
அவளுக்குமே அப்படி ஒரு தடுமாற்றம். அவன் பார்வை தவறாக இருந்தால் இல்லை அந்த இடத்தில் வேறு யாராவது இருந்தால் நிலையே வேறு. ஆனால் அருகில் இருப்பது அவளுடையவன் ஆகிற்றே. அதுவும் அவன் கண்களில் வழியும் நேசம். அதை எப்படி உதறித் தள்ளவாம்? ஆனால் இருப்பது பொது இடம் என்பதால் எதுவும் செய்ய மாட்டான் என்று எண்ணி கொஞ்சம் தைரியமாக இருந்தாள்.
ஆனால் அவனது ஆசைகள் கொஞ்சம் அதிகரிக்க சட்டென்று அவளை இறுக அணைத்துக் கொண்டான். அவள் அதிர்ந்து விழிக்கும் போதே அவள் கன்னத்தில் மெதுவாக உதடு பதித்தவன் லேசாக அவளுக்கு வலிக்காதவாறு கடித்து வைக்க அவள் தேகம் சிலிர்த்துக் கொண்டது.
அவளது கரமும் அவன் முதுகை வளைத்துக் கொள்ள அடுத்த நொடி அவள் இதழ்களில் தன்னுடைய இதழை வைத்தவன் சட்டென்று விலகி அவளிடம் இருந்தும் விலகி நின்றான்.
அப்போது ஒரு பேராசிரியர் அவர்களை கடந்து சென்றார். அவர் வருவதை உணர்ந்து தான் விலகினான். ஆனால் அவளோ பேய் அறைந்தது போல நின்றாள்.
அவள் முகத்தைக் கண்டவன் தன்னுடைய வேலையால் சிவந்திருந்த அவள் கன்னத்தைப் பற்றி லேசாக துடைத்தவன் அவளிடம் எதுவும் பேசாமல் அவள் கை பற்றி திவ்யாவிடம் அழைத்துச் சென்றான்.
ரதி ஒரு மாதிரி திகைத்த படியே இருக்க “ரதிக்கு என்ன ஆச்சு மச்சான்?”, என்று கேட்டாள் திவ்யா.
“ஒண்ணும் இல்லை திவி. சும்மா பேசிட்டு வந்தோம். ஏதோ அப்செட் போல? நீ வீட்டுக்கு கூட்டிட்டு போ. ரெஸ்ட் எடுத்தா சரியாகும்”, என்றவன் அவர்களை ஒரு ஆட்டோவில் அனுப்பி வைத்தான்.
போகும் போது திவ்யா எதுவும் கேட்க வில்லை. கேட்டாலும் பதில் சொல்லும் நிலையில் ரதியும் இல்லை. உள்ளுக்குள் ஒரு மாதிரி தள்ளாட்டமாக இருந்தது. அவன் என்ன செய்தான் என்பதிலே அவள் மனம் நின்று விட சத்தியமாக அடுத்து என்ன என்று அவளுக்கு புரியவே இல்லை. ஒற்றை இதழ் ஒற்றுதலில் அவளது உயிரையே குடித்த உணர்வு.
அவனோடு மொத்த தேகமும் உரச நேர்ந்த அந்த அணைப்பும் நடந்ததா நடக்கவில்லையா என்று அறிய முடியாத படி இருந்த அந்த இதழ் ஒற்றலும் அவளுக்குள் பெரும் தடுமாற்றத்தை கொடுத்துக் கொண்டே இருந்தது.
அவர்கள் வீட்டுக்குச் சென்ற போது அவள் உடல் லேசாக கொதிக்க துவங்கி இருந்தது. “என்ன டி ஆச்சு இவளுக்கு ஒரு மாதிரி இருக்கா?”, என்று கேட்டாள் மஞ்சு.
“தலை வலிக்குதுன்னு சொன்னா மா. லேசா பீவரும் அடிக்குது. கொஞ்ச நேரம் தூங்கட்டும்”, என்று சொல்லி அவளை அறைக்கு அழைத்துச் செல்ல அப்படியே படுத்தவள் தான் உண்மையிலே காச்சலில் விழுந்தாள்.
வீட்டுக்கு வந்த அமருக்கோ இருப்பு கொள்ள வில்லை. ரதியின் திகைத்த தோற்றமே அவன் கண்ணுக்குள் வந்தது. தான் அவசரப் பட்டுவிட்டோம் என்ற குற்ற உணர்வு அவனைத் தாக்க அவனால் நிம்மதியாக இருக்கவே முடிய வில்லை.
கண்ணுக்குள் வைத்து தாங்க வேண்டும் என்று நினைத்தவன் அவளை காயப் படுத்தி விட்டோமோ அவளுக்கு பிடிக்காததை செய்து விட்டோமோ என்று எண்ணி துவண்டு போனான்.
அவள் முகத்தில் வெட்கத்தையோ பூரிப்பையோ பார்த்திருந்தால் எப்படியோ? இப்போது அவள் என்ன நினைக்கிறாள் என்று கூட அவனால் அறிய முடிய வில்லை.
இரண்டு நாட்கள் விடுமுறை வேறு என்பதால் அவளை எப்போது பார்ப்போம் என்று இருந்தது. இரவு தன்னிடம் போனில் உரையாடுவாள் என்று காத்திருந்தான்.
ரதி திவ்யா இருவருக்கும் ஒரே கை பேசி தான் இருந்தது. தாமோதரன் வேறு ஒரு சொத்து விசயமாக திருநெல்வேலிக்கு சென்றிருந்தார்.
“திவி அப்பாவுக்கு கால் பண்ணி டிரைன் பிடிச்சிட்டாரான்னு கேளு. நான் அவளுக்கு வெண்ணி எடுத்துட்டு வரேன். கொஞ்சம் ஆவி பிடிச்சா தலை பாரம் போகும்”, என்றாள் மஞ்சு.
போனை எடுத்த திவ்யா தந்தையிடம் பேசிக் கொண்டிருக்க மஞ்சுவும் ரதிக்கு ஆவி பிடிக்க எல்லாம் எடுத்துக் கொண்டு வந்தாள்.
“ரதிக்கு காச்சலா? அவ கிட்ட போனைக் கொடு திவி”, என்று தாமோதரன் சொல்ல அவளும் போனை நீட்ட ரதி அதை வாங்கும் முன் அந்த போன் அப்படியே அந்த வெண்ணீருக்குள் சென்று விழுந்தது.
மூவருமே அதிர்ந்து தான் போனார்கள். அதை ஒரு பெரிய ஸ்கேல் வைத்து எடுப்பதற்குள் உள்ளுக்குள் தண்ணீர் நிறைந்தது.
மஞ்சு திவ்யாவை நாலு திட்ட ரதியும் திவ்யாவும் பாவமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். கடைசியில் அந்த ஃபோன் தன்னுடைய உயிரை இழக்க அமர் இரவு அழைப்பானே என்று தவிப்பாக இருந்தது ரதிக்கு.
ரதியின் முகத்தில் இருந்த கவலையைப் பார்த்து “அம்மா, நான் போய் ஃபோன் கடைல கொடுத்துட்டு வரட்டா?”, என்று கேட்டாள் திவ்யா.
“மணி என்ன ஆகுது? இந்நேரம் கடைக்கு போறியா? பிச்சிருவேன்”
“ஏழு மணி தான் மா ஆகுது”
“அப்பா நாளைக்கு வந்திருவாங்க. வந்ததும் பாக்கலாம். அவ நல்லா இருந்தாலாவது ரெண்டு பேரும் போங்கன்னு சொல்லிருப்பேன். இப்ப உன்னை தனியா அனுப்ப முடியாது. இப்ப ரெண்டு நாள் போன் இல்லைன்னா என்ன குடியா மூழ்கி போகுது? அப்பா என் போனுக்கு அடிப்பாங்க”, என்றாள் மஞ்சு.
அன்னையின் அந்த பட்டன் போனைக் கேட்டால் நிச்சயம் அன்னைக்கு சந்தேகம் வந்து விடும் என்று தெரியும். ஏனென்றால் அவர்கள் படிப்பதற்கு என்று தான் ஃபோன் வாங்கிக் கொடுத்திருந்தார்கள். பிரண்ட்ஸ் கிட்ட பேசணும் என்று சொல்லிக் கேட்டால் கூட மஞ்சு போனை தர மாட்டாள் என்று அவளுக்கு தெரியுமே?
அடுத்த இரண்டு நாட்கள் மட்டும் அல்ல. அதற்கு அடுத்தும் ரதியால் அமரிடம் பேச முடிய வில்லை. தாமோதரன் போனை சர்வீஸ் சென்டரில் கொடுத்திருந்தார். ரதியோ காச்சலில் இருந்தாள். அதை அமரிடம் தெரிவிக்க கூட முடியவில்லை. அவனோ அவள் தன் மீது கோபத்தில் தான் ஃபோன் பேச வில்லை என்று எண்ணி இரண்டு நாள் கஷ்டப் பட்டவன் திங்கள் கல்லூரிக்குச் செல்ல அன்றும் ரதி வரவில்லை. மஞ்சு திவ்யாவையும் அனுப்ப வில்லை என்பதால் என்ன விவரம் என்று தெரியாமல் அவ்வளவு பரிதவிப்பு அமரிடம்.
தொடரும்…
