Skip to content
Post Views: 739
சின்னபொண்ணு ஹாஸ்டலில் தன் உடைமைகளை வைத்துவிட்டு வகுப்பறைக்கு சென்றபோது வசீகரன் கல்லூரி முதல்வரோடு பேசிக் கொண்டிருந்தான். அவளை கண்டதும் பேச்சை நிறுத்தி அவன் அவளை பார்க்க, அவள் தலையை குனிந்து கொண்டு அவர்களை கடந்து சென்றுவிட்டாள்.
வசீகரன் சிவில் இன்ஜினியரிங் டிபார்ட்மென்டிற்கு பாடம் எடுக்க சென்றான். அன்று வேண்டாவை புகைப்படம் எடுத்த மாணவன் வசீகரனை பார்த்தும் “சார் என்ன இந்த பக்கம், உங்க ஆளு ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ், எதிர்ல இருக்கற காம்பெளண்ட்க்கு போங்க” என்றபடி அவனருகே வந்தான்.
Advertisement
“ஷட் அப், நான் கெஸ்ட் புரபசரா வந்திருக்கேன். தேவையில்லாம பேசி நேரத்தை வீணடிக்காம சீட்ல போய் உட்கார்ந்து பாடத்தை கவனி” என்றான் அதட்டலாக
Advertisement
அந்த மாணவனின் முகம் சுருங்கி விட்டது, “சாரி சார்” என்றபடி தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான். வசீகரன் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு பாடத்தை நடத்த ஆண்கள் அனைவரும் அவன் வகுப்பெடுக்கும் அழகில் மயங்கியிருக்க, பெண்கள் அவன் ஆளுமையான தோற்றத்திலும் குரலிலும் கன்னத்தில் கைவைத்தபடி அவனை ரசித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
Advertisement
வகுப்பு முடிந்ததும் வசீகரன் சரவணனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பும் போது சின்னபொண்ணு செல்வியோடு பேசிக் கொண்டிருப்பதை கவனித்தான். அவர்களுக்கு எதிர்பக்கத்தில் சற்றுமுன் அவனோடு பேசிய மாணவன் இருக்கவும் அவனை சத்தமாக அழைத்தான்.
Advertisement
“டேய் மச்சான்”
சின்னபொண்ணு செல்வி இருவரும் நிமிர்ந்து வசீகரனை பார்த்தனர். அவனோ அவர்களை கவனிக்காதது போல அந்த மாணவனை நோக்கி சென்றான்.
அவனோ சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு யாரையோ கூப்பிடுகிறார் என்று பின்னால் திரும்பி பார்க்க, “டேய் பச்சை சட்டை போட்ட மச்சான், உன்னை தாண்டா” என்றபடி வசீகரன் அவனை நெருங்கி அவன் தோளில் கைப்போட்டுக் கொண்டான்.
“என்ன சார் நீங்க? கொஞ்ச முன்னாடி பேசினதுக்கு அதட்டனீங்க, இப்போ மச்சான்னு சொல்லி தோள்ல கைப்போடறீங்க?”
“அது கிளாஸ் ரூம்டா. அதுக்குள்ள உறவுமுறை எல்லாம் பாக்க முடியுமா?”
“எந்த வகையில நான் உங்களுக்கு மச்சான்?”
அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் வசி வேறு பேசினான் “நான் இல்லாத நேரத்துல உன் தங்கச்சிய நீதான்டா பத்திரமா பாத்துக்கணும். அவ கண்ணு கலங்காம பாத்துக்கோ சரியா?” என்றபடி சின்னபொண்ணுவை பார்த்தான்.
அவளுக்கு அவன் செயலின் காரணம் புரிந்தாலும் கவனியாதது போல செல்வியிடம் பாடம் சம்மந்தமாக பேசிக் கொண்டிருந்தாள்.
“சார், என் வீட்ல நான் தான் கடைசி பையன். எனக்கு தங்கச்சியே இல்ல? எந்த தங்கச்சிய கண்கலங்காம பாத்துக்க சொல்றீங்க?” என்று தலையை சொறிந்தான்.
“என்னடா தெரியாத மாதிரி கேக்கறே? அன்னைக்கு போட்டோ எடுத்துட்டு இருந்தியே, அதோ அவ தான்டா உன் தங்கச்சி” என்று வசி தன் சின்னுவை காட்ட,
“என் அப்பா என்கிட்ட இதப்பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலியே சார்” என்றான் தாடையை சொறிந்தபடி
“அடிங்க, என்ன நக்கலா?” வசி அடிக்குரலில் சீறினான்
“பின்ன என்ன சார், அந்த பொண்ணு பர்ஸ்ட் இயர் முடிக்க போவுது, நான் செகண்ட் இயர் முடிக்க போறேன். இடையில ஒரு வருஷம் தான் வித்தியாசம். என்னை போய் அண்ணன்னு சொல்லிட்டு இருக்கீங்க”
“நான் சொல்லலடா, அவ தான் சொன்னா, நீ அவளோட அண்ணனாமே”
“ஒரு வருஷம் பெரியவனா இருக்கற நானே அண்ணன்னா, நீங்க எப்படியும் அஞ்சாறுவருஷம் பெரியவரா இருப்பீங்க. நீங்க யாரு சார்”
“நான் கூட அவகிட்ட பலமுறை கேட்டு பாத்துட்டேன்டா, நான் யாருனு, சொல்லவே மாட்டேங்கிறா” என்றான் உதட்டை பிதுக்கி
“அதுசரி”
“மச்சான் உன் பேரென்னடா”
“ரியான்”
“நியான், தங்கச்சிய பத்திரமா பாத்துக்கோடா. அவளுக்கு எதாச்சும் பிரச்சனைனா எனக்கு உடனே போன் பண்ணு, இந்தா என்னாேட கார்டு வச்சுக்கோ”
“சார் ரியான்ங்கிறது எவ்வளவு அழகான பேர் தெரியுமா, குட்டி ராஜானு அர்த்தம்னு என் அம்மா சொல்லுவாங்க. அந்த பேரை நியான்னு சொல்றீங்க? நியான்ங்கிறது மந்தமான வாயு தானே”
“அதனால தான்ட நியான்னு சொன்னேன். கிளாஸ்ல உட்கார்ந்துட்டு கொட்டாவி விட்டுட்டு இருக்கே, இனிமே கிளாஸ்ல கொட்டாவி விட்டே எப்பவும் நியான்னு தான் கூப்பிடுவேன்”
“அந்த மாதிரியெல்லாம் பண்ணிடாதீங்க சார். பொண்ணுங்க மத்தியில என் இமேஜே போயிடும். உங்க ஆள அதாவது இந்த காலேஜ்ல இருக்கற என் ஒரே ஒரு தங்கச்சிய நான் பத்திரமா பாத்துக்கறேன் சார்” என்று வசீகரன் நீட்டிய கார்டை வாங்கி கொண்டான்.
அதற்கு பின் வசீகரன் தினமும் தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு வந்து பாடம் எடுத்துவிட்டு சென்றான். சின்னபொண்ணு படிப்பில் கவனம் செலுத்தட்டும் என்று அவளை தொல்லை செய்யாமல் தூர நின்று பார்த்து விட்டு தன் வேலையில் முழ்க தொடங்கியிருந்தான்.
வீட்டில் அலமேலு லதா இருவரிடமும் அவன் பேசுவதே இல்லை. காலையில் கிளம்பினால் இரவு அனைவரும் தூங்கிய பின்பு தான் வீட்டிற்கு சென்றான். அதற்கு நடந்த சம்பவம் ஒரு காரணமாக இருந்தாலும், அவனுக்கு தொழிற் கடன் வழங்க வங்கி ஒப்புக் கொண்டிருந்தது. அதற்கான வேலையில் தீவிரமாக இறங்கி விட்டிருந்தான்.
தான் இருக்கும் மனநிலையில் யாரையும் அழைக்காமல் சிறிய அளவில் அலுவலகத்தை தொடங்கி அரசாங்கத்திடம் சின்ன சின்ன டென்டர்களை பெற முயற்சித்து அதில் வெற்றியும் கண்டான். இதற்கிடையில் தினந்தோறும் கல்லூரிக்கு சென்று பாடம் எடுக்கவும் தவறவில்லை. வகுப்பு இடைவெளியின் போது அவன் கிளம்புவான், அந்த நேரம் சின்னபொண்ணு தவறாமல் அவன் கண்ணில் பட்டுவிடுவாள். அவளை நோக்கி இருபுருவங்களையும் ஏற்றி இறக்கி புன்னகையை வீசிவிட்டு சென்று விடுவான்.
வகுப்பு இடைவெளியின் போதே எப்போதும் வசீகரனை பார்ப்பதால் அவன் தினமும் அவளை பார்ப்பதற்காகவே வருகிறான் என்று சின்னபொண்ணு நினைத்துக் கொண்டாள். ‘வேணாம் சரிவராதுனு சொல்லியும் எதுக்கு இவரு காலேஜ்க்கு வந்துட்டு இருக்காரு. இதுவும் அலமேலு அம்மாவுக்கு தெரிஞ்சா இங்கேயிருந்து என்னை துரத்திட மாட்டாங்களா?’ என்று அவன் மேல் கோபமாக இருந்தது.
பொறுத்து பார்த்தவள் முடியாமல் ஒருநாள் மதிய உணவிற்கு பிறகான முதல் வகுப்புக்கு நடுவில் வெளியே வந்தாள். எதிர் கட்டிடத்தில் வசீகரன் போன் பேசிக் கொண்டிருந்தவன் அவளை கண்டதும் ‘ஏன் வெளிய வந்துட்டே?’ என்பதாய் புருவம் உயர்த்தினான்.
அவளோ விடுவிடுவென்று அவனை நோக்கி வேகமாக வந்தாள். அவளை தொல்லை செய்ய வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தவன் அவளே தன்னை தேடி வரவும் முகம் மலர்ந்து, “சின்னு” என்று ஆசையாக அழைத்தான்.
“எதுக்கு தினம் காலேஜ்க்கு வந்து போயிட்டு இருக்கீங்க? நீங்க டிரஸ் எடுத்துக் கொடுத்ததுக்கே உங்க வீட்ல எவ்வளவு பிரச்சனையாச்சு? ஏதோ பிரின்சிபால் தயவால ஹாஸ்டல்ல இடம் கிடைச்சிருக்கு. அதுகூட உங்களுக்கு பொறுக்கலயா? இங்கேயும் வந்து பிரச்சனை பண்ணா நான் எங்கே தான் போறது? வீட்ல வம்பிழுத்தது பத்தாதுனு காலேஜ்க்கும் வந்துட்டே இருக்கீங்க. நான் தான் சொல்றேனே, நமக்குள்ள எதுவும் சரிவராது. என்னை விட்டுடுங்க”
மூச்சிறைக்க பேசியவளை கைகளை கட்டிக் கொண்டு புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
“சின்னு, நீ வளர்ந்துட்டே. கொஞ்ச நாள் முன்னாடி என்கிட்ட பேசவே பயந்து நடுங்குவே. என்னை பாத்தாலே ஓடி ஒளிஞ்சுப்பே. இப்போ என்னடான்னா என்னை பதில் கூட சொல்ல விடாம கேள்வியா கேக்கறே. ஐ லைக் இட். இப்படித்தான் ப்ரேவ்வா இருக்கணும்”
“நான் என்ன சொல்றேன், நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க? நான் எந்த விதத்துலயும் உங்களுக்கு செட் ஆக மாட்டேன், தேவையில்லாம உங்க நேரத்த வேஸ்ட் பண்ணாம உங்களோட பிசினஸ்ல கவனம் செலுத்துங்க”
அவன் அவள் வார்த்தைகளில் கவனம் செலுத்தாமல் அவள் அணிந்திருந்த ஆடையை யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான். “நானும் பாத்துட்டு இருக்கேன், பழைய சுடிதாரையே மாத்தி போட்டுட்டு இருக்கே. நான் எடுத்து கொடுத்த டிரஸ்ஸ போடறதில்லயா சின்னு”
“அதனால தானே இவ்வளவு பிரச்சனை, அதான், அதையெல்லாம் உங்க வீட்ல நான் இருந்த ரூம்லயே போட்டுட்டு வந்துட்டேன்”
“சரி நல்லதா போச்சு, உனக்கு பதிலா நீ போட்டு கழட்டின டிரஸ்ஸ கட்டிபிடிச்சு தூங்கினாலாவது தூக்கம் வருதானு பாக்கறேன்” என்று கண்சிமிட்டினான்.
“நீங்க இப்படியே பேசிட்டு இருந்தா சரவணன் சார்கிட்ட சொல்லிடுவேன்”
“என்னனு சொல்லுவே? சார் சார், உங்க தம்பி என் டிரஸ்ஸை நான்னு நினைச்சு கட்டிபிடிச்சு தூங்கறேன்னு சொல்றாருனு சொல்லுவியா?” சிரிப்பை அடக்கி கொண்டு கேட்டான்.
“அவர் அன்னைக்கு என்கிட்ட கேட்டாரு, என் தம்பினு பாக்க மாட்டேன், வம்பு பண்ணா என்கிட்ட சொல்லு, வெளிநாட்டுக்கு அனுப்பி வச்சிடறேன்னு சொன்னாரு. நான் தான் பாவம் பாத்து அதெல்லாம் வேணாம் சார், இங்கேயே இருக்கட்டும்னு சொன்னேன்”
“சின்னபொண்ணுக்கு ரொம்ப பெரிய மனசு தான்” என்றான் அவளை அழுத்தமாக பார்த்து
அவன் பார்வையில் தன்னிச்சையாக ஷாலை நன்றாக போட்டுக் கொண்டு “இனி பாவம் பாத்தா முடியாது, சரவணன் சார்கிட்ட சொல்ல போறேன்”
“அவனே வரான் பாரு, சொல்லு” என்றான்
அவள் திரும்பி பார்க்கும் போது சரவணன் அவர்களை நெருங்கி இருந்தான். “வேண்டா, கிளாஸ் நேரத்துல இன்ஜினியரிங் டிபார்ட்மெண்ட்ல உனக்கென்ன வேலை” என்று ஆசிரியனாக அதட்ட
“சார், இவர் தினம் இங்கே வர்றாரு”
“ஆமா, இன்ஜினியரிங் ஸ்டுடென்ட்டுக்கு கிளாஸ் எடுக்க வர்றான். உனக்கென்ன பிரச்சனை? எதாச்சும் உன்கிட்ட வம்பு பண்ணானா?” என்று தம்பியை முறைத்தான்.
“டேய் சரவணா, நான் போன் வந்துச்சேனு கிளாஸ்க்கு வெளியே வந்து சிவனேனு பேசிட்டு இருந்தா, இவ தான் வந்து என்கிட்ட வம்பு பண்றா” என்று குற்றபத்திரிக்கை வாசித்தான் வசீகரன்.
சரவணன் இப்போது வேண்டாவை பார்க்க, “என்ன சரவணா? உன் ஸ்டுடென்ட் கிளாஸ்ஸ கட் அடிச்சுட்டு வெளியே சுத்திட்டு இருக்கா, இதெல்லாம் கேட்க மாட்டியா?” என்று வேறு போட்டு கொடுத்தான்.
“வேண்டா, முதல்ல கிளாஸ்க்கு போ. இனிமே கிளாஸ் நேரத்துல வெளிய பார்த்தேன் கிரவுண்ட்ல ஓட விட்டுருவேன்” என்று சரவணன் அதட்ட சின்னபொண்ணு தலையை கவிழ்ந்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றான். வசீகரனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை, இருந்தாலும் சரவணனுக்கு தெரியாமல் இருக்க, தன் வகுப்பிற்குள் நுழைந்துக் கொண்டான்.
இன்ஜினியரிங் மற்றும் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் டிபார்ட்மென்ட் என இரு கட்டிடங்கள் எதிரெதிரே இருந்தது. அதில் வசீகரன் எடுக்கும் வகுப்பும் சின்னபொண்ணு படிக்கும் வகுப்பும் நேரெதிரே இருக்கவும், நாள் தவறாமல் இருவரின் கண்களும் மற்றவருக்கு தெரியாமல் ரகசியமாக பார்த்துக் கொண்டன. எதிர்பாராதவிதமாக இருவரின் பார்வையும் சந்தித்து விட்டால் வசீகரன் இருபுருவங்களையும் ஏற்றி இறக்கி சின்னதாக புன்னகைப்பான். அந்த நாட்களில் மட்டும் ஏனோ சின்னபொண்ணுவிற்கு சிறகில்லாமல் பறப்பது போல தோன்றும், இரவில் தூக்கமில்லாமல் புரளுவாள்.
வசீகரனின் வசிய புன்னகையில் அவள் எப்போதோ தன்னை தொலைத்திருந்தாள். அவன் பார்வையின் பொருள் தெரியா விட்டாலும் உள்ளும் புறமும் வெட்கத்தால் சிவந்து உடல் தணலாக கொதித்தது. அவள் உடலின் வெப்பத்தை அவன் ஒருத்தனால் மட்டுமே தணிக்க முடியும். ஆனால் அது நீண்ட நேர போர்களத்தில் கொஞ்சமாக கிடைக்கும் தண்ணீரை போன்றது. தாகத்தை தீர்த்துக் கொள்ள நேரமோ மனமோ இருக்காது, தொடர்ந்து வாழ்க்கை போராட்டத்தில் போராடிக் கொண்டே இருக்க வேண்டும். அவள் முன்னால் அலமேலுவும் லதாவும் வாளுடன் சண்டையிடுவது போல கனவும் சேர்ந்தே வந்து அவளின் ஆசையையும் காதலையும் கலைத்தது.
மதில்மேல் பூனையாக அவள் மனது போராடிக்கொண்டிருக்க, நாட்கள் வாரங்களாகி, மாதங்களாக ஓடிக் கொண்டிருந்தது.
(தொடரும்)
error: Content is protected !!